ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பண்டைத் தமிழர்களின் நெசவுத் தொழில்நுட்பமும் ஆடைகளும் – ஓர் ஆய்வு  | Weaving Technology and Clothing of Ancient Tamils – A Study

முனைவர் பிரியாகிருஷ்ணன், முதன்மை ஆசிரியர், அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ், Orcid ID: https://orcid.org/0009-0005-1909-0522 07 May 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்: ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆடையின்றி விலங்குகளைப் போலச் சுற்றித் திரியும்போது அவர்களுக்கு ஆடையின் அவசியத்தை எடுத்துரைத்தது இயற்கை. அதன் காரணமாக மரப்பட்டைகளையும் இலைதழைகளையும் ஆடையாக அணிய ஆரம்பித்ததுதான் இன்று ஆடை  நாகரிகத்தின் உச்சியில் நவீனமயமாக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். மனிதன் தன்னுடைய ஆடையை இயற்கைக்காக அணிய ஆரம்பித்து அதுவே மானம் காக்கும் ஒரு நாகரிகத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. எளிமையாக இலைதழைகளை அணிந்தவன் அதனை விதவிதமாக வடிவமைக்க ஆரம்பித்தவுடன் இலைதழைகள் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு எட்டியது. பருத்தியிலிருந்து ஆடை நெய்வது வரை அவன் எடுத்துக் கொண்ட அத்துணை முயற்சியும் அவனுக்கு வேகத்தையும் ரசனையையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணியது. அவ்வாறு உருவான ஆடைகளும் ஆடை வகைகளும் குறித்தானைப் பழந்தமிழர்களின் தொழில்நுட்பங்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச்சொற்கள்:

சங்ககாலம், ஆடைகள், நெசவுத் தொழில், பருத்தி, தறி

Abstract:

Nature taught them the necessity of clothing when in primitive times men roamed about like beasts without clothing. Because of that, it can be said that the reason for modernizing today's clothing culture is the beginning of wearing tree barks and leaves as clothes. Man has begun to wear his clothes for nature, which has also taught him the dignity of civility. Clothing reached its next evolution when the wearer began to style the simple clothes differently. His foray from cotton to cloth weaving gave him speed, taste and passion. The purpose of this paper is to examine the techniques of Palanthamijar in terms of clothing and clothing types thus developed.

Keywords:

Sangam era, cloths, weaving, cotton, loom

முன்னுரை:

மனிதர்கள் தன் மான உணர்வைக் காத்தல், அழகினை மிகைப்படுத்திக் காட்டல், காலநிலைக்கு ஏற்றவாறு உடல் நிலைகளைப் பாதுகாத்தல், கலை உணர்வை வெளிப்படுத்துதல், தன் மேம்பாட்டினை உயர்த்திக் காட்டுதல் ஆகியவை ஆடை அணிவதற்கான காரணிகளாக அமைகின்றன. அதன் விளைவாக எத்தனை எத்தனை ஆடை வகைகள், விதவிதமான வடிவமைப்புகள் என வளரத் தொடங்கி ஒரு தொழிலாக உருவாகி நெசவுத் தொழிலுக்கு அடிகோலியது. உழவுத் தொழில் போல் நெசவுத் தொழிலும் மனிதனின் முக்கியத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. இத்தகைய நெசவுத் தொழில் புதிய கற்காலத்திலிருந்தே ஆரம்பமாயிற்று என்று தொல்பொருள் வரலாற்றறிஞர் எச்.டி ஸங்காலியா கூறுகின்றார்.(pre and proto History- India and Pakistan by H.D.Shankalia.) உலகின் பழமையான ஆடைகளில் ஒன்றான, ஒரு பெண்ணின் வைக்கோல் நெய்த பாவாடை, ஆர்மீனியாவின் அரேனி பகுதியில் உள்ள குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 5,900 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

( https://www.unido.org/news/breathing-new-life-armenias-garment-industry)

பழந்தமிழரின் நெசவுத் தொழிலின் தொன்மை:

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள்,உரோமர்கள் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் ,கட்டிடங்களையும் ,முத்திரைகளையும், அணிகளையும் ,ஆடைகளையும் செய்து நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப் படித்த மக்களாய் வாழ்ந்தனர் என்று சர் ஜான் மார்ஷல்,அறிஞர் ஹிராஸ் அடிகள், வில்சன் போன்ற மேனாட்டறிஞர்கள் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டியுள்ளனர்.

பழந்தமிழரின் நெசவுத் தொழில் குறித்து, ’இது வீட்டுத் தொழில்களில் முக்கியமானது. பண்டைத் தொழில்களுள் ஒன்று. விவசாயத்திற்கு அடுத்தது. மக்கள் நாகரிகம் அடையத் துவங்கியதும் கையாண்ட முதல் கைத் தொழில் ’ என்று கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது. (கலைக்களஞ்சியம்-தொகுதி - 4, ப.215)

கூறை,நல்லாடை,பட்டாடை என மூன்று வகையான ஆடைகளைப் பற்றி திவாகரம் பதிவு செய்துள்ளது.

கூழை விரித்தல் காதொன்று களைத

லூழணி தைவர லுடைபெயர்த்துடுத்தலோ

டூழி நான்கே யிரண்டென மொழிப (262-2,பொருள்:தொல்காப்பியம்)

என்று தொல்காப்பிய நூற்பாவால் பழந்தமிழரின் நெசவுத் தொழிலின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழகத்தில் பருத்தி மிகுதியாக இருந்தது என்பதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் பல உண்டு. குறிப்பாக ‘பருத்தி வேலிச்சிறூர்” (புறம்:299-1) என்ற புறநானூற்றுப் பாடலால் பருத்தி மிகுந்திருந்தது என்பதை உணரலாம். பருத்தி மட்டுமின்றி இலவமரம் ,கோங்கு மரம் (பருவமில் கோங்கம் பகைமல ரிலவ - பரிபாடல் 19:79) முதலிய மரங்களிலிருந்து பஞ்சு சேகரிக்கப்பட்டு நெசவுத் தொழில் நடந்திருப்பதையும் இலக்கியங்கள் பதிவு செய்யத் தவறவில்லை. இது தவிர மரப்பட்டையிலுள்ள நாரினைப் பயன்படுத்தி அதனைப் பின்னி அவற்றை மலைவாழ் குறவர்கள் ஆடையாக அணிந்துள்ளனர் என்பதை ’மரனாருடுக்கை மலையுறை குறவர் ’என்று நற்றிணை பதிவு செய்துள்ளது.

நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்

பால்வகைத் தெரியாப் பன்னூற் டுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலம்பு: 14:205-7)

என்ற அடிகளால் சிலப்பதிகாரத்தில் பட்டு நூலைப் பயன்படுத்தி பட்டாடையும், எலியினுடைய மயிரைப் பயன்படுத்தி ஆடை நெய்துள்ளனர் என்று அறியலாம்.இதனை சீவக சிந்தாமணியும் பின்வருமாறு

புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன

பவளமே யனையன பன்மயிர்ப் பேரெலி

என்றும், செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி

ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்

என்று உறுதிப்படுத்துகின்றது.

பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் உரித்த மெல்லிய தோல் போலவும் பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால் நுரை போலவும் தெளிந்து வெண்ணிறமான அருவி நீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் பண்டைய தமிழர்கள் நுண்ணிய எண்ணிலா மெல்லிய ஆடைகளை நெய்தனர். மசூலிப்பட்டினத்திலும், கலிங்கத்திலும் மெல்லிய ஆடைகள் நெய்யப் பெற்றன.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மெர்லாஞ்ச் என்ற அறிஞர் ”இந்தியப் பட்டின் சாயல்” என்னும் பொருள் பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1983இல் ஒரு சொற்பொழிவாற்றினார். அதில், ”பண்டு தொட்டு பாரத நாட்டில் பட்டு நெசவு ஒரு தனிச் சிறப்புடையதாய் விளங்கி வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆல். பில்ட்டர் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், இந்தியத் துணிகள் என்ற நூலில் இந்திய நெசவுத் தொழிலின் செய்முறைகளையும் வண்ணச் சிறப்பையும் அதில் ஒளிரும் தாமரை, முல்லை, அரும்பு, மாம்பிஞ்சு போன்ற உருவங்களையும் வியந்து பாராட்டியுள்ளார் என்று விக்கிப்பீடியா தகவல் தெரிவிக்கின்றது.

16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் 280 வகையான ஜவுளிகள் இருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை கோரமண்டல் கடற்கரை துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆவணச் சான்றுகள் கூறுகின்றன,” என்கிறார் பிரான்சின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தோ ஐரோப்பிய ஆய்வுகளின் இயக்குநர் ஜெயசீலா ஸ்டீபன்.

(https://www.thehindu.com/society/history-and-culture/real-madras-handkerchief-and-the-textiles-of-tamil-nadu/article23311188.ece)

ஹெரடோடஸ் என்னும் யவன ஆசிரியர் நம் நாட்டுப் பஞ்சைப் பற்றிப் பேசும்போது மரங்களில் வளரும் பஞ்சு என்றும், அஃது ஆட்டு ரோமங்களால் உண்டாக்கும் கம்பளிகளிலும் மேலானது என்று கூறுகிறார். (மு.இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதி, ப.152)

இந்தியாவில்தான் முதன்முதலில்  பருத்தி நெசவு செய்யப்பட்டதென்றும், இங்கிருந்தே மேலை நாடுகளுக்கு இக்கலைப் பரவியதென்றும் 'வயவர் சாண் மார்சல்' என்ற ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

ஆடைகளின் வகைகள்:

அக்காலத்தில் ஆடவர்கள் அணியும் உடைகள் இரண்டு.

இதனை,

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி

வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்

உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே

பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே (புறம்:189)

என்ற அடிகளால் அறியலாம்.

மன்னர்கள் அணிந்த ஆடை விலை உயர்ந்ததாகவும் பட்டாலும் இருந்தது என்பதை,

போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன

அகன்றும்மடி கலிங்கம்(புறம்:393)

என்று கூறப்படுகின்றது.

வீரர்கள் தங்கள் மார்பில் கவசம் அணிந்தனர் என்று

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழ்த்த பகட்டெழில் மார்பின்

மறலி யன்ன களிற்று மிசை யோனே (புறம்:13)

என்ற புறநானூற்று அடியால் அறியலாம்.

யவனர்கள் சட்டை அணிந்திருந்தனர். அதனை மெய்ப்பை என்று அழைத்தனர். பிற்காலத்தார் இதனை குப்பாயம் என்று அழைத்தனர். இன்றும் கேரளாவில் சட்டை என்னும் பொருளில் குப்பாயம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெயப்பை புக்க வெருவருந் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்(முல்லை:60)

தொழிலாளர்கள் அவர்கள் செய்துவந்த வேலைக்கு ஏற்றவாறு ஒற்றையாடை அணிந்தனர். இதனைத் தற்றுடுத்தல் என்று பிற்காலத்தவர் அழைத்தனர்.

தெய்வம் மடித்தற்றுத் தான் முந்நூறும் (குறள் 1023)

பெண்கள் அணியும் ஆடை அவர்களது செல்வ நிலைக்குத் தக்கவாறு அமைந்தன எனக் கொள்ளலாம். சங்க கால மகளிர்  பட்டிலும், பஞ்சிலும் நெய்த ஆடைகளையும் மென்மையான பூந்துகில்களையும் அணிந்து வந்துள்ளனர். அக்காலத்தில் பட்டு கிடைத்தற்கரிய, பொருளாகவும், மிகவும் விலை உயர்ந்த பொருளாகவும் விளங்கியது. அதனால்   தெய்வ வழிபாட்டிற்கும், அரச குடும்பத்தினரின் பயன்பாட்டிற்கும், ஏற்றுமதிக்கு மட்டுமே பட்டுப் பயன்படுத்தப்பட்டது என்றும் அறியமுடிகின்றது. அதேபோல் மிக உயர்ந்த மெல்லிதான துணிகளும் நெய்யப்பட்டன. அவற்றிற்குத் துகில் என்று பெயர். பகற்பொழுதில் பட்டாடைகளையும் இரவுப் பொழுதில் துகில்களையும் அணிந்தனர் என்ற கருத்தும் ஆய்வாளர்களிடையே உள்ளது. இங்குத் துகில் என்பது மெல்லிய வெள்ளைநிற பருத்தி ஆடைகளைக் குறிப்பதாகக் கொள்வர்.

புகை விரிந்தன்ன பொங்கு துகில் (புறம்:398:20)

துகில் , துயின் என்றும் ஒரு சில இடங்களில் வழங்கப்படுவதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவற்றுள் துயில் என்பதன் பகுதி ’துய்’ என்பது. பஞ்சின் மெல்லிய பகுதியும் ‘துய்’ என்று வழங்கப்படும். பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடையே முதலில் துகில் என்றழைக்கப்பட்டது.

இதனை.

பட்டு நீக்கித் துகிலுடுத்தும் (பட்டினப்பாலை:107)

பட்டும் துகிலும் உடுத்து (நாலடி:264)

ஆடையின் தன்மைக்கேற்ப ”துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை” என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடை வகைகளும் இருந்தன எனத் தெரிகின்றது. துகில், வெண்மை நிறம் உடையதாயும் சிவப்பு நிறம் உடையதாயும் இருக்கும். பூந்துகில், தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் இருக்கும். சுமார்  நாற்பதிற்கு மேற்பட்ட வண்ணங்களைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. சித்தன்ன வாசல், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது, பொலிவு குன்றாது, புத்தம்

புதிய வண்ணம் போல ஒளிர் விட்டுக் கொண்டிருப்பதே அதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும். கோவில்களில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் வடிவமைப்பில்தான் ஆடைகளின் வடிவத்தை அமைத்து கொண்டனர் என்று தெரிகிறது. கலிங்கம் என்ற சொல் கலிங்க நாட்டில் உருவான ஆடை என்பதைக் குறிப்பதாகவே கருதப்படுகிறது. மன்னன் தன்னை நாடிவந்த புலவனுக்குக் கொடையாக அளித்து மகிழ்ந்ததும் கலிங்கமே. மணமகளின் ஆடையாகச் சுட்டப்படுவது அனைத்து இடங்களிலும் கலிங்கமே. பிற்காலத்தில் இதன் சிறப்பு குறைந்ததையும் அறியமுடிகிறது.

முற்காலத்தில் நமது நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அதன் உடலும், விளிம்பும் முன்றானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் பிறவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் நெய்யப்பட்ட ஆடைகள் 36 வகைகள் என்றும் அவை கோசிகம் ,பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி,  கரியல்,பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நீல்யாப்பு, திருக்கு, தேவாங்கு பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொருத்தி என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (பண்டையத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்.திரு.ஞா.தேவநேயன்,1966)

தறி நெய்து அறுக்கப்பட்டதால் அறுவை என்றும், நெய்த உடையினைச் சுருக்கமின்றி மடித்து மடித்து விற்று வந்த காரணத்தால் மடி என்றும் அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

தஞ்சையிலும் குடந்தையிலும் பீதாம்பரமும் பொன்னாடைகளும் பட்டு நூல்காரரால் நெய்யப்படுகின்றன. கூறைநாடு புடவைகளும் திருநாகேசுவரம் துகிலி மானம்புச் சாவடி வேட்டிகளும் புகழ் பெற்றவை. நாகப் பட்டினத்திலும் மஞ்சுக் கொல்லையிலும் சாயத்தொழில் சிறந்து விளங்குகிறது. சிக்கலிலும் நாகூரிலும் உற்பத்தி செய்யப்படும் சிலவகைத் துணிகள் (printed table cloth and bandana kerchieves)அமெரிக்காவிலும் விற்பனை ஆயின. அவைபற்றி uncle toms cabin என்ற புகழ்பெற்ற நூலும் உரைக்கிறது.(ப:89,சோமலெ,தஞ்சாவூர் மாவட்டம்,பாரி நிலையம்,நவம்பர் 1961)

அக்காலத்தில் ஆடைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஆடைகளைப் பாதுகாப்பாக வைக்கப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவை ”கலிங்கக் கடகம்” (மதுரைக்காஞ்சி 554-506)  எனவும், ”கலிங்க வட்டி” எனவும் அழைக்கப்பட்டன என்று அறியமுடிகிறது.

நெசவுக்கான கருவிகள்;

வில்லெறி பஞ்சியின் வென்மழை தவமும் – (அகம்:133-5)

வழிதுளி பொழிந்த இன்குரம் எழிலி

எஃறு பஞ்சிற் றாகி வைகறை  - (நற்:247:4)

என வரும் அடிகளால் பருத்திப் பஞ்சினை அதனுடைய கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தினர் என்று அறிய முடிகிறது. இவ்வாறு பிரித்தெடுத்த பஞ்சை மகளிர் இராட்டையால் நூற்றதையும், இராட்டையால் நூற்ற நூல் மிகவும் நுண்மையாக இருந்தது என்பதையும்

பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து (புறம்:326-5)

ஆளில் பெண்டிர் தாளிற் செய்த

நுணங்கு நுண் பனுவல் (நற்:358)

புறநானுறும், நற்றிணையும் குறிப்பிடுகின்றது.

மகளிர் பருத்திப் பஞ்சினைச் செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்பதில் கைத்திறம் பெற்று விளங்கினர். இப்பெண்கள் பருத்திப் பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். கணவரை இழந்த மகளிர் இத்தொழில் பெரிது ஈடுபட்டு இரவு நேரத்திலும் உறங்காது நூல் நூற்றனர் .இதனைப் பருத்திப் பெண்டிர் சிறுதீ விளக்கத்து என்ற அடியால் உணரலாம். இவ்வாறு பெண்கள் தந்த நூலை பாவாகத் விரித்து தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் பணியினை ஆண்கள் செய்தனர். இத் தொழிலை ஆணும் பெண்ணும் சேர்ந்தே செய்து வருவது இன்றும் நடைமுறையில் உள்ள விடயம். தொன்றுதொட்டு இவ்வழக்கம் இருந்துள்ளதை ,

வையகத்தில்

சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்

காரிகையார் தாரால் கலைசெய்யும்

என்று செங்குந்தர் துகில் விடு தூது பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆண்களும் பெண்களும் இரவு பகல் பாராது நெசவுத் தொழிலைச் செய்து வந்தனர். அதனால் அவர்களின் குடிசை முற்றமெங்கும் பஞ்சுத்துய் பரவிக்கிடந்ததாக ‘பஞ்சி முன்றிற் சிற்றில்’ (பஞ்சு பரந்த முற்றத்தையுடைய சிற்றில்) என்று புறநானூறு (116) பதிவு செய்கிறது.

பண்டையத் தையற்கலை:

துணி தைக்கும் தொழிலாளியைப் பற்றி 18 ஆம் நூற்றாண்டு வரை எந்தக் குறிப்பும் தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இருப்பினும் துணிகளின் மீது இரத்தினங்களை வைத்து ஊசியால் தைய்ப்பவனை மட்டும் தையான் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கிழிந்த ஆடையினை ஊசியும் நூலும் கொண்டு தைக்கும் பழக்கம் இருந்திருப்பதைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. இதனைத் துன்னுதல் அல்லது துன்னம் செய்தல் என்று பெயர். இதேபோல் தோல் பொருட்களைத் தைக்கும் பயன்படுத்த கொழுத்துன்னூசி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

கி பி 9 ஆம் நூற்றாண்டு அளவிலேயே பெண் சிற்பங்களில் மார்புக் கச்சை சித்தரிக்கும் வழக்கம் தொடங்கியுள்ளது என்று அறியமுடிகிறது.பாண்டி மாதேவி தன்மார்பில் முத்துக் கச்சினைக் கட்டியிருந்தாள் எனக் கூறுகிறது நெடுநல்வாடை(136). எனவே முத்துகளை மார்பில் அணிவது அந்தக்கால வழக்கமாகும். பெருந்தொடை வரை இறுக்கிக் கட்டிய அரையாடையே கச்சில் எனப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கச்சை எனப்பட்டது.

உடைக்கும், ஆடைக்கும் வேறுபாடு உண்டு என்பது பல அறிஞர்களிடையே உள்ளக் கருத்து வேறுபாடு. மரனாருடுக்கை, தழை என்ற தமிழர் உடைகளை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வுடைகள் உடையாக மட்டுமே கருதப்பட்டன. பருத்தி, பட்டு, மயிர் போன்ற பிறவற்றால் உருவானவை உடுத்துவதற்கு மட்டுமின்றி போர்வை, அணை, எழினி  போன்ற பிற பயன்பாடுகளையும் நல்கிய காரணத்தால் ஆடை என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று முனைவர் கு.பகவதி குறிப்பிடுகிறார்.

அதேபோல் உடுப்பு என்ற சொல் உடையினைக் குறிப்பதாக மணிமேகலை  ,

தொடுத்த மணிக்கோவை உடுப்போடு துயல்வர (மணி:3:140)

என்று குறிப்பிடுகிறது. இருப்பினும் பெரும்பான்மையாகச் சட்டையைக் குறிக்க உடுப்பு என்ற சொல் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும், சிந்தாமணியில் மூசிய ஆடை(2929) என்பது இழிந்த ஆடையைக்.(இரவலரின் உடை)குறிப்பிடுகிறது.

நெசவுத் தொழில் உற்பத்தியும் விற்பனையும்:

மசூலிப்பட்டினத்திலும், கலிங்கத்திலும் மெல்லிய ஆடைகள் நெய்யப் பெற்றன. அதைவிட மெல்லிய ஆடைகள் மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் நெய்யப்பெற்று வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பெற்றன. கெளடல்யரின் அர்த்த சாஸ்திரம் மாதுரம் என்னும் ஆடையினைக் குறிப்பிடுகின்றது. பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சென்றபடியால் அதற்கு மாதுரம் என்று பெயர் என்று மயிலை சீனிவாசன் குறிப்பிடுகின்றார். அர்த்த சாஸ்திரம் சந்திரகுபத மெளரியன் காலத்தில் கி மு நூற்றாண்டில் எழுதப்பட்டதால் அக்காலத்திலேயே தமிழ்நாட்டு ஆடைகள் வடநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார். மேலும்  உரோமர்களும், எகிப்தியர்களும் தமிழக ஆடைகளைக் கண்டு வியப்பெய்தினர். அரசர்களும், அரசிகளும் ஆடைகளின் எடைக்குப் பொன் கொடுத்து விலைக்கு வாங்கினர். ஆடைகளின் விளிம்பு பல்வேறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாய் விளங்கின. விளிம்பில் கொற்கை முத்துகள் இணைக்கப்பட்ட ஆடைகளும், விளிம்பில் தமிழ்நாட்டுப் பொன் வண்டுகளின் மஞ்சள், நீலம், பச்சை வண்ண இறக்கைகள் இணைக்கப் பெற்றுள்ள ஆடைகளும் வெளி நாட்டார் விரும்பி வாங்கினர். எகிப்திய அரசிகளும், உரோமர் நாட்டு அரசிகளும், உரோமர் நாட்டுப் பிரபுக்களின் மனைவிகளும் பொற்காசுகளைக் கொடுத்து வாங்கினர். எகிப்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அரசர்களின் உடல்கள் பலவிதப் பொருள்களால் பதமிடப்பட்டு அழியாது கல்லறைகளில் வைத்துப் பாதுகாக்கப் பெற்றுள்ளது. அந்தப் பிரதேசங்கள் இந்திய மசிலின் துணிகளால் பொதியப் பெற்றுள்ளது என்று கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. பருத்தி வணிகத்திற்காகத் தமிழ்நாட்டின் முக்கிய மையமான உறையூருக்குக் கிரேக்க வணிகர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. உறையூரில் நெய்யப்பட்ட மிகவுயர்ந்த மெல்லிய ஆடை வகைகளும் ரோம் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. பிளைநி(கி பி 24-79) என்ற மேனாட்டுப் பயணி, தமிழகத்திலிருந்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதியான முத்துகள், மெல்லிய ஆடைகள், இன்பப் பொருள்கள் இவற்றுக்காக ரோம் நாட்டு செல்வம் மிகுதியாகச் செலவழிக்கப் பட்டது என்று வருந்திக் கூறியுள்ளார்.(இபிட்.ப்ப்.305-309)

முற்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற பங்கய மலர்கள் பொறித்த பட்டுத்துணிகள் உரோம், கிரீஸ், எகிப்து, அரேபியா, இலங்கை, கடாரம், சாவகம், சமபாகம், போசகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து – 19 நூற்றாண்டில் இங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது. இன்று இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்களின் பள்ளியரையில் இந்திய நாட்டுப் பங்கயப்பட்டு இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

இவ்வாறாக, பழந்தமிழர்கள் பட்டும் பருத்தியும் நெய்து உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து வந்தனர் என்பதும் ,ஆடைகளில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த ஆடைவகைகளை உருவாக்கி உலகமெங்கும் பெயர் பெற்றனர் என்றும் அறியமுடிகின்றது.

துணைநின்ற நூல்கள்:

1.     தொல்காப்பியம்

2.     மணிமேகலை

3.     நற்றிணை

4.     புறநானூறு

5.     நெடுநல்வாடை

6.     அகநானுறு

7.     சிலப்பதிகாரம்

8.     முல்லைப்பாட்டு

9.     பட்டினப்பாலை

10.    திருக்குறள்

11.    நாலடியார்

12.    பரிபாடல்

13.    மு.இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதி

14.    பண்டையத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்.திரு.ஞா.தேவநேயன்,1966)

15.    அ.அப்துல் மஜித் ஆய்வில் பூத்த மலர்கள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சென்னை,பதிப்பு 2001.

16.    பழங்காலத் தமிழர் வாணிகம்(சங்க காலம்), மயிலை சீனி.வேங்கட சாமி.

17.    கலைக்களஞ்சியம்-தொகுதி - 4,

18.    சோமலெ,தஞ்சாவூர் மாவட்டம்,பாரி நிலையம்.1961

19.    தமிழர் ஆடைகள் , முனைவர் ச. பகவதி

இணையத் தரவுகள்:

1.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88

2.https://www.youtube.com/watch?v=5WIwyq4MtOg

3.https://www.unido.org/news/breathing-new-life-armenias-garment-industry

4.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88