ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் -தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் முன்வைத்து மீள்பதிவு 

முனைவர் பிரியா கிருஷ்ணன் கெளரவ விரிவுரையாளர் அரசு கவின் கலைக் கல்லூரி சென்னை 27 Jul 2021 Read Full PDF

முனைவர் பிரியா கிருஷ்ணன்

கெளரவ விரிவுரையாளர்

அரசு கவின் கலைக் கல்லூரி

சென்னை

ஆய்வுச்சுருக்கம்;

தாமரைப்பாக்கம் கல்வெட்டுகளில் உள்ள செய்தி சதியேறுதலை  குறிப்பனவல்ல என்று ஆய்வு செய்யப்பட்டு மீள்பதிவாக  இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொற்கள்: 

சதியேறுதல், சதிகற்கள், தாமரைப்பாக்கம், பிரிதிகங்கரையன் ,உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் .

மீளாய்விற்கான காரணமும் ஆய்வின் நோக்கமும்:

இவ்வாய்வுத் தாமரைபாக்கம் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளபடி உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் குறித்தான கல்வெட்டு செய்தியின் அடிப்படையில் ஆராயப்படுகிறது.  தொல்லியல் ஆய்வாளர் ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நடுகற்கள் என்னும் நூல் நடுகல் ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாகும். அந்நூல் வாயிலாக நடுகல் குறித்து பல அரியத் தகவல்களை பெற முடியும். அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் பாராட்டுப் பெற்ற நூல். சிலசமயம், சில கருத்துகள் பிற்காலங்களில் கிடைக்கும் தரவுகளால் மாறுபடலாம் அல்லது சில புரிதல்களில் மாற்றுக் கருத்து ஏற்படலாம். அந்த வகையில் இந்த மீளாய்வு முன் வைக்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் தெரிவித்தப் பின்னரே அவரது அனுமதியுடன் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய நடுகற்கள் என்னும் நூலின் பக்கம் :303 இல் ஒரு செய்தி தரப்பட்டுள்ளது. அதை அப்படியே இங்கு பதிவு செய்கின்றேன்.

உடன் பள்ளி கொண்டாள்

தாமரைப்பாக்கத்தில் மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சியின் போது நிகழ்ந்த உடன்கட்டையை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோமன் பிரதிகங்கன் தந்தை கூத்தாடும் தேவர் இறந்துபட அவனுடைய தேவியான பாடினியும் இறந்துபட்டாள். இதனை உடன் பள்ளி கொண்டாள் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒரு வேலி நிலம் உடன்கட்டை ஏறிய பெண்ணின் வீட்டாருக்கு வழங்கப்பட்டது.

மேற்கூறிய கருத்துப்படி, அக்கல்வெட்டில் தேவர் மனைவி உடன்பள்ளி கொண்டாள் என்ற செய்தியை நாம் அறிகின்றோம். ஆனால் தாமரைப்பாக்கம் கல்வெட்டுச் செய்தியின் படி மேற்கூறிய கருத்து மாறுபடுகிறது. தேவருடன் புதைக்கப்பட்ட பெண்கள் அவரது நடனத்துக்கு பாடும் பெண்களாக இருந்தவர்கள். அது சதியேறியது அல்ல என்ற கருத்தை தாமரைப்பாக்கம் கல்வெட்டு கொண்டு  ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை:

தமிழகத்தில் நினைவுச் சின்னங்களாகப் போற்றப்படும் நடுகற்களில் சதிகற்களும் ஒருவகை. வட மாநிலங்களில் சதியேறும் பெண்களுக்கு எனத் தனி சதிகற்கள் இருக்க தமிழகத்தில் கணவனுடன் மனைவியின் உருவத்தைப் பொறித்த நடுகற்களைத்தான் அதிகம் காணமுடிகின்றது. தமிழகத்தைப் பொருத்தவரை அத்தகைய  சதிகற்கள் பரவலாக கிடைக்கின்றது. எனது கள ஆய்வில் நான்கு சதிகற்களை அடையாளப்படுத்தியிருக்கின்றேன். அவை யாவும் கணவன் மனைவியாக இருப்பவையே. இக்கட்டுரைக்குள் நுழையும்முன் சதிகற்களைப் பற்றி ஒருவாறு அறிந்து கொள்வது அவசியமாகும்.

சதிகல் விளக்கம்:

சதி என்றால் உண்மையுள்ள மனைவி என்று பொருள். இத்தகைய கற்புடைய  பெண்டிருக்காக எடுக்கப்படுவதே சதிகல். போரில் இறந்த வீரனின் மனைவி கணவனின் சிதையில் தீப்பாய்ந்து உயிர் துறக்கும் நிகழ்வே சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என அழைக்கப்பட்டது. இது மனைவியின் சுயவிருப்பத்தின் பேரிலும், சில சமயம் உடன் இருப்பவர்களின் வற்புறுத்தல் மற்றும் தற்காப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காவும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்ந்ததாக அறிகிறோம். சதி, சஹகமணனம் (sahagamananam), அக்னிபிரவேசம், உடன்கட்டை ஏறுதல், சிதைத்தீ, அக்கினி ஸ்நானம், தீப்பாய்தல் என பல பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த நிகழ்வின் நினைவாக நினைவு கற்கள் ஏற்படுத்தப்பட்டன. காலப்போக்கில் கணவன் போருக்கு சென்று மடிவது மட்டுமின்றி வேறு பல காரணங்களாலும் சதி ஏறுதல் நிகழ்த்தப்பட்டதையும்  காண்கிறோம். ”இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் மிகுதியாக சதிவழக்கம் இருந்ததைப் பற்றி (கி.பி.300-600), மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். பார்போசா (கி.பி.1514), நூனிஸ் (கி.பி.1536), சாசர்பிரடடிக் (கி.பி.1567), லிந்சாடன் (கி.பி.1583), பரதாஸ் (கி.பி. 1614) ஆகியோர் சதிவழக்கம் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது என்பதை விவரித்துள்ளனர்.” (ப:298,ச.கிருஷ்ண மூர்த்தி,நடுகற்கள்)

சதிகற்களின் அமைப்பு :

வட மாநிலங்களில் காணப்படும் சதிகற்களில் கைச்சின்னம் மட்டுமே காணப்படுகிறது. சில சதிகற்களில் பல கைச் சின்னங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவை கூட்டாக சதியேறுதலை காண்பிக்கிறது. வட மாநிலங்களில் சதி ஏறுவதற்கு முன்பாகவே போருக்கு செல்லும் கணவனிடம் அனுமதி கோரப்படுவதும் உண்டு. சதி ஏறும் பெண்கள் தமக்காக வைக்கும் சதிகற்களில் சிவப்பு சாயம் பூசிய கரங்களால் பதிய வைப்பர். ஆடை அலங்காரம் எல்லாம் செய்து மிக்க மகிழ்ச்சியுடன் சதி ஏறுவர். அண்மையில் வெளிவந்த ’பத்மாவதி’ இந்தி திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில், அரண்மனையில் இருக்கும் அரசி முதற்கொண்டு அத்துனைப் பெண்களும் சதியேறும் நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது, முகலாயர்களின் படையடுப்பின்போது பல ஆயிரம் இராஜபுத்திரப் பெண்கள் சதியேறினர் எனும் வரலாற்று நிகழ்வை பிரபலிப்பதாக உள்ளது.  ஆந்திரா, கர்நாடகா வரை காணப்படும் சதிகற்களில் கம்பம் போன்ற அமைப்பும், அக்கம்பத்தின் உச்சியில் தோளுடன் கூடிய வலது கரம் ஆசி வழங்கும் அபய முத்திரையோடும், சிலவற்றில் சந்திரன் சூரியன் சின்னங்களுடனும் காணப்படுகின்றன. சதிகற்களில் கை வளையல்கள் பிரதானமாகக் காட்டப்பட்டிருக்கும். மங்கல சின்னமான இவற்றுடன் மறுமையிலும் அதே கணவனுடன் வாழும் வாழ்க்கை வாய்க்கப் பெறும் என்பதாக இது அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் போன்ற பகுதிகளில் கணவன் மனைவியருடன் இருப்பது போலவும், போர் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் தேவர் உலகம் செல்லும் வரை காட்சி அமைப்புகளுடன் ஒரே கல்லில் மூன்று, ஐந்து, மற்றும் ஏழு நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. சில சதிகற்களில் எழுத்துகள் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. தம் கணவரிடமுள்ள அன்பின் காரணமாக உயிர்த் தியாகம் செய்த பெண்களுக்கும் அவர்களது உருவம் பொறிக்கப்பட்டும் அமைக்கப்படுவதுண்டு.

தமிழகத்தில் கிடைக்கப்பெறும் பெரும்பாலான சதிகற்களில், கணவனோடு வீற்றிருக்கும் ஒரு மனைவி மற்றும் கணவனோடு வீற்றிருக்கும் இரு மனைவியர்  காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர். சதிகற்களில் பொதுவாக வீரன் போருக்கு போவது போன்றும் அவன் அருகில் மனைவி நிற்பது போன்றும் அல்லது பெண் கையில் குழந்தையுடன் இருப்பது போன்றும் காட்டப்பட்டிருக்கும். இது வீரன் போரில் அல்லது சண்டையில் இறந்தபின் அவனது மனைவியும் இறந்ததன் நினைவாக வைக்கப்பட்ட சதிக்கல் என்றழைக்கப்படுகிறது. எனினும், கணவன் மனைவியாக காட்சி தரும் அத்துனை கற்களும் சதிகல் என பொருள் கொள்ள இயலாது. காரணம் சில நடுகற்கள், கோயிலுக்கோ அல்லது ஊருக்கோ தானம் அளித்தவர்களுக்காக எடுக்கப்பட்டவையாக இருக்கும். இவ்வகை நடுகற்கள் கணவன் மனைவியாக கைக்கூப்பி வணங்கும் நிலையிலும் காணப்படுவதுண்டு. தமிழகத்தில் இன்றும் சதிகற்களை வீரமாத்திக்கல் என்றும், சதிகற்கள் உள்ள கோயில்களை மாலைக் கோயில் என்றும் வணங்கி வருகின்றனர். எனது கள ஆய்வில் தூத்துகுடியில் ஒரு மாலைக்கோயில் கண்டறியப்பட்டது. அதில்  ஒரு பெண் மட்டும் அமர்ந்து இருப்பது போல் அந்த சிற்பம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் அமர்ந்தநிலையில், காதணியும், கழுத்தணியும், கையில் வளையணிந்தும், , அரையில் இடையணி அணிந்தும்  நேர்த்தியான உடை அலங்காரத்துடன் இறைவிப் போல் அமர்ந்த நிலையில் கரங்களில் அல்லி மலரை வைத்துள்ளபடி இருக்கிறது. இந்த கற்சிற்பத்தில் உள்ள  பெண் மல்லம்மாள் என்று அழைக்கபடுகிறாள் . இந்த கன்னிப் பெண்  ஊரின் நன்மைக்காக தீப்பாய்ந்து இறந்ததால் தெய்வமாக வணங்கப்படுகிறாள். இந்த கற்சிற்பத்திற்கு மட்டும் சிறிய அளவிலான  செங்கற்களாலான ஒரு  கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனை மாலைக்கோவில் என்றழைக்கின்றனர் . மாலை என்பதற்கு பெண் என்று  பொருளுண்டு. மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் மாலைக்கோயில் என்பதே வழக்கத்தில் உள்ளது. மாலைக் கோயில் என்பது ஊருக்காக உயிர் தியாகம் செய்த பெண்ணுக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு. மாலைக் கோயில் ஊரின் நன்மைக்காக தீப்பாய்ந்து தன்னுயிரை தியாகம் செய்யும் பெண்ணுக்காக எடுக்கபடுவது என்பதை இதன் மூலம் தெளிவாகின்றது. மாலைக்கோயில் என்பது சதிகல்லுக்காக எடுக்கக்கூடியவை அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவது அவசியமாகின்றது. நடுகல்லுக்கோ சதிகல்லுக்கோ இவ்வாறான மாலைக்கோயில் எழுப்பாமல் இருப்பதும் இதை உறுதி செய்கின்றது. நடுகற்களை ஆய்வு செய்பவர்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது இந்த கோவில் எவ்வித பாரமரிப்பும் இன்றி சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது .பொதுவாக ஒரு பெண் சிற்பம் மட்டும் உள்ள கற்சிற்பங்களை தீப்பாஞ்சம்மன் என்று அழைப்பது வழக்கம். பெண்ணுக்கு மட்டும் தனியாக நடுகல் வைத்து வணங்க ஏதேனும் முக்கிய காரணம் இருந்திருக்கலாம். வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு  வேறு எந்த தகவலும்  தெரியவில்லை என்றும்,  மூதாதையர் வழி பரம்பரை பரம்பரையாக தாங்களும் வணங்குவதாகவே கூறுனர். அடுத்து ஆய்வுத் தலைப்புக்குள்  நுழைவோம்.

இறந்த கணவனுடன் பெண்களைப் புதைத்தல்:

இறந்துப்பட்ட கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்நீத்த கற்புடையப் பெண்டிரைப் பற்றி தமிழ் இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் கூறுகின்றன. இணையதளத்தில் சில கல்லறைகள் அகழாய்வுகளில் கணவன் மனைவியாகவோ அல்லது காதலர்களகவோ புதைக்கப்பட்டதுள்ளதைக் கண்டுபிடித்துள்ள செய்தி பதிவாகியிருக்கிறது. நமது தமிழகத்தில் அகழாய்வுகளில் தம்பதியாராக எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதா என்றால் கிடைத்திருக்கின்றது. கொடுமணல், தாண்டிக்குடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஒரு கல்லறையில் இரு எழும்புக்கூடுகள் ,ஒரே கல்லறையில் இருவரைப் புதைப்பதற்கான அமைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன. அவர்கள் இருவரும் ஆணும் பெண்ணா என்ற தகவல் விளக்கப்படவில்லை . ஆண் பெண்ணாக இருக்கலாம் என்று யூகிக்கப் படுகின்றது. அதுவும் ஆய்வுக்குரியது. ஆனால் ,இறந்தவருடன் பெண்களையும் புதைத்தற்கான சான்று ஒன்று  தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள் மூலமாக  கிடைத்திருக்கின்றன. 

தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் - போளூர்ச் சாலையிலிருந்து 2 கி மீ தொலைவில் ஓடும் செய்யாற்றின் தென்கரையில் அமைந்த சிற்றூர் தாமைரப்பாக்கம். இச்சிறு கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு சிவன் கோயில் அமைந்து ,கோயில் சார்புடையதாக ஒரு சமுதாயமும் அமைந்திருக்கிறது. இத்திருத்தலத்தின் பெயர் அக்னீசுவரர் கோயில் . இக்கோயிலில் 29 கல்வெட்டுகள் தமிழகத் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு  பதிவும் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 24 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. ஒன்று காடவராயம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தது. நான்கில் அரசர் பெயர்  இல்லை. இக்கல்வெட்டுகள் கி பி 10 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 14 ஆம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகளுக்குட்பபட்டவையாக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையரும் ஆடல் மகளிரும்:

மூன்றாம் குலோத்துங்கனின் 10 வது ஆட்சியாண்டைச் சேர்ந்த எண் 24,27,28  ஆகிய மூன்று கல்வெட்டுகளில் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசன் கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் இறந்த போது அவருடன் உயிரோடு மூன்று பெண்களும் புதைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்களுக்கு வாரிசுகள் ஏற்படாது போகும் மன வருத்தத்தை நீக்கும் வகையில் நிலம் கொடுக்கப்பட்ட செய்தியையும் சொல்பவையாகும்.

கல்வெட்டு எண் :24/1998

மாவட்டம் ; திருவண்ணாமலை

வட்டம்:செங்கம்

ஊர்: தாமரைப் பாக்கம்

ஆட்சி ஆண்டு: 10

வரலாற்று ஆண்டு : கி பி 1188

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை: 189/1973-74

மொழி : தமிழ்

எழுத்து: தமிழ் 

அரசு : சோழர்

மன்னன்: மூன்றாம் குலோத்துங்கன்

ஊர்க் கல்வெட்டு எண் : 24

இடம்: அக்னீசுவரர் கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவர்

குறிப்புரை: 

ஆடும் ஆழ்வார். சதுரப் பெருமாள், நிறைதவம் செய்தார் ஆகிய பாடும் பெண்கள் மூவரின் வம்சவழி தடைப்பட்டதற்காக (சந்தானசாமம் அல்லது சாபம்) சோமநாததேவன் என்பவர் தாமரைப் பாக்கம் கோயிலில் 5 தேவரடியார்களுக்கு 1000 குழி நிலம் கொடுத்ததைக் குறிக்கிறது. இம்மூவரும் குருநிலத் தலைவன் கூத்தாடும்தேவர் பிரிதிகங்கர் என்பவர் இறந்த போது அவருடன் உயிர் நீத்தவர்கள் என்பது கல்வெட்டு எண்கள் 27,28 ஆகியவற்றால் தெரிய வருகிறது.இடையிடையே சிமெண்ட் பூசப்பட்டு எழுத்துகள் மறைந்துள்ளன.

1.கல்வெட்டுப்படி: 

1. ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு 

யாண்டு   வது

2.ஆடும் ஆழ்வாரும் சதுரநடைப் பெருமாளும் நிறைதவஞ்செய்தாரும் 

சந்தாந சாமத்தில் உ

3.டையார் திருவ[ங்[கிசுர முடையநாயநா]ர்]*க்கு..[பாடிசையா]க

ஐஞ்சு தேவரடியாற்கு பதிநறு

4.சாண் கோலால் ஆயிரங்குழி விட்டேன் சோமநாத தேவனேன் இது 

விலக்குவாந் கெங்கை இ

5.டைக் குமரி இடைப் பாவங் கொள்வான்.

என்றும்,

2.கல்வெட்டு எண் :27/1998

மாவட்டம் ; திருவண்ணாமலை

வட்டம்:செங்கம்

ஊர்: தாமரைப் பாக்கம்

ஆட்சி ஆண்டு: 10

வரலாற்று ஆண்டு : கி பி 1188

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை: 185/1973-74

மொழி : தமிழ்

எழுத்து: தமிழ் 

அரசு : சோழர்

மன்னன்: மூன்றாம் குலோத்துங்கன்

ஊர்க் கல்வெட்டு எண் : 27

இடம்: அக்னீசுவரர் கோயில் முன்மண்டபத் கிழக்குச் சுவர் மற்றும் அரைத்தூண்

குறிப்புரை:

கூத்தாடும் தேவரான பிருதிகங்கர் இறந்த போது அவரைப் பள்ளிப் படுத்தினர் .அதாவது புதைத்தனர் .அவருடன் பாடும் பெண்கள் சிலரும் உயிருடன் உடன் பள்ளி கொண்டனர். .  (மனக்கேதம் -உயிரோடு புதைக்கப்படுவதால் ஏற்படும் துன்பம்:சந்தர்மம்- நல்லறம்) இவர்களது மனவருத்தம் (மனக்கேதம்)  தீர்வதற்காகவும் இவர்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைப்பேறு   நின்று போனமைக்காகவும் (சந்தான சாமம்) கூத்தாடும் தேவரது மகன் சோமனான பிருதிகங்கர் இவர்களது வம்சத்தார்க்கு ஒருவேலி நிலம் கொடுத்துள்ளார்.இந்த நிலம் பலதுண்டுகளாக இருந்தது.அத்துண்டு நிலங்கள் பள்ளமுன்னோங்கி ,குமிலி,புலையக்கன் கிணற்றின் கீழ்பட்டி, உட்கழனிதடி,சிங்கன் தடி ,சேரியான்பட்டி , பொன்ன்ராயன் தண்டில் ,சஈத்தி,நடுவில் கழுவல் வடதலை என்ற வெவேறு வழக்குப் பெயர்களில் 406,148 என்ற பல்வேறு குழி எண்ணிக்கையில் பரப்புள்ளவையாக இருந்தன. இக்கல்வெட்டில் ஓம்படைகிழவி கடுமையான இழிவுச் சொற்களைக் கொண்டுள்ளது.இந்த தர்மத்திற்குக் கேடு செய்தவர்கள் மதுராந்தக வேளாண் கால் கழுவிய நீரும் உடல் அல்லது இடுப்புச் (கலை)சேறு (மலம்) உண்டவர்கள் என்று இழிவுபடுவர் என்பது அதன் பொருளாகும் எங்கே தன்னுடைய பின் வந்தோர் இதற்குத் தவறிழைப்பார்களோ என்று எண்ணி நிலம் கொடுத்தவன் சில பழபாடிகளைக் குறிக்கிறான்.மதுரந்தக வேளான் என்பவன் இவர்களுடைய பரமஎதிரி போலும்.தம் வம்சத்தார் இதற்குத் தவறிழைத்தால் தன்மாற்றான் காலைக் கழவின நீரைக் குடித்தல்,அவன் உண்டு எஞ்சிய கலச்சோற்றை உண்ணுதல் ஆகிய பழிகளில் படுவான் எனக் குறிக்கிறான்.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு 

யாண்டு [க] வது சோமனான பிருதி

2.கங்கனேன் எங்களைய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன்

 பள்ளி கொண்ட பாடும் பெண்

3.டிருக்கும் மனக்கேதம் தீர்த்தமைக்கும் சந்தா[நசா]*மமாக பதினறு

 சாண் கோலால் விட்டநிலம் ஒரு வேலியும்  இ

4. வர்கள் வங்கிசமுள்ள தனையும்  செல்வதாக விட்ட நிலத்துக்கு நம் வங்கி

 சத்து இதுக்கு இலக்கணம் சொல்லுவா

5.ர் மதுராந்தக வேளான் கால் கழுவின் நீருங் குடிச்சு ,கலச்சோறும்

தின்பாந்  கெங்கயிடைக் குமரியிடைச் செய்

6.தார் செய்த பாவங்கள் கொள்வார் பள்ளமுனோங்கி கு  குமிலி

    புலையங்கள்      கிணற்றின் கீழ்பட்டி

7.நூறு உட்கலனியில் தடி  சிங்கன் த[டி]*      சேரியான் பட்டி

    பொன்

8.னரா ய ந் த

9.ண்டில் அ

10.  சஈத்தி

11.அ அ நடு

12.வில் கழுவ

13.ல்வட தலை

14.ரு ரு 

என்றும்,

3.கல்வெட்டு எண் :28/1998

மாவட்டம் ; திருவண்ணாமலை

வட்டம்:செங்கம்

ஊர்: தாமரைப் பாக்கம்

ஆட்சி ஆண்டு: 10

வரலாற்று ஆண்டு : கி பி 1188

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை: 189/1973-74

மொழி : தமிழ்

எழுத்து: தமிழ் 

அரசு : சோழர்

மன்னன்: மூன்றாம் குலோத்துங்கன்

ஊர்க் கல்வெட்டு எண் : 28

இடம்: அக்னீசுவரர் கோயில் முன்மண்டபத் கிழக்குச் சுவர்

குறிப்புரை:சோமனான பிருதிகங்கர் தன் தந்தை கூத்தாடும் தேவரோடு உயிருடன் பள்ளிக் கொண்ட (புதைக்கப்பட்ட) ஆடும் ஆழ்வார், சதிரநடைப் பெருமாள், நிறை தவம் செய்தார் ஆகியோருக்கு சந்தான சாமமாகக் கொடுத்த நிலம் 16 சாண் கோலால் அளக்கப்பட்டது என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.(கல்வெட்டு எண் 27 பார்க்க) முன் கல்வெட்டில் இப்பெண்களின் பெயர்கள் சொல்லப்படாத்தால் இக்கல்வெட்டில் சொல்லப்படுகிறதா? அல்லது முற்று பெறாத வேறொரு கல்வெட்டா? என்பது தெரிய வில்லை.

  • ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ 

  தேவர்க்கு யாண்டு [க] வது சோமனான பிருதிகங்க[நேந்]

   2 . எங்களைய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட

      ஆடும் ஆழ்வார்க்கும் ,சதுர ந

3.டப் பெருமாள்க்கும் நிறைதவந் சேதாளுக்கும் சந்தானச் சா[ம]*மாக

விட்ட நிலம் பதினறு சாண் கோல

  4.  லே 

என்றும் தொல்லியல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ள தாமரைப் பாக்கம் கல்வெட்டுக்கள் நூல்வழி அறியமுடிகின்றது.

ஆய்வும் - மீள்பதிவும் : 

மேற்குறிப்பிட்ட மூன்று கல்வெட்டுகள் வாயிலாக அறிய வருவன,

  • கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் என்ற கங்கச் சிற்றரசன் சிறந்த ஆடல்வல்லன்.
  • இவன் இறந்தபோது அவனுடன் நடனத்துக்கு பாடும் மூன்று பெண்களான ஆடும் ஆழ்வார். சதுரப் பெருமாள், நிறைதவம் செய்தார்  ஆகியோர் இறந்த கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் புதைத்தக்குழியில் சேர்த்து உயிருடன் புதைக்கப்படுகின்றனர். இதற்கு உடன் பள்ளி கொள்ளல் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
  • இறந்த மூன்று பெண்களின் மனவருத்தம் (மனக்கேதம்)  தீர்வதற்காகவும், இவர்களுக்குப் பிறக்கக்கூடிய  குழந்தைப்பேறு   நின்று போனமைக்காகவும் (சந்தான சாமம்) கூத்தாடும் தேவரது மகனான  சோமனான பிருதிகங்கர் இவர்களது வம்சத்தார்க்கு ஒருவேலி நிலம் கொடுத்துள்ளார்.
  • ஆடும் ஆழ்வார். சதுரப் பெருமாள், நிறைதவம் செய்தார் ஆகிய பாடும் பெண்கள் மூவரின் வம்சவழி தடைப்பட்டதற்காக (சந்தானசாமம் அல்லது சாபம்) சோமநாததேவன் என்பவரும் தாமரைப் பாக்கம் கோயிலில் 5 தேவரடியார்களுக்கு 1000 குழி நிலம் கொடுத்திருக்கிறார்.

மேற்கண்ட நான்கு செய்திகளை நோக்கும்போது ,

    • கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் இறந்தபோது அந்த துன்பத்தைத்  தாளாமல் மூவரும் உயிர் நீக்க சம்மதித்திருக்கலாம். இது ஒரு தற்பலியாகவே கருதலாம்.
    • கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் சிற்றரசர்  என்பதாலும் மூன்று பெண்களும் நடனத்துக்கு எப்போதும் உடன் பாட்டுப்பாடி சேவை செய்துவந்த காரணத்தினாலும் விசுவாசமும் அன்பும்  கொண்டு மூவரும் உயிர் துறக்க சம்மதித்திருக்கலாம்.
    • இங்கு உயிருடன் புதைத்தலை வற்புறுத்தவில்லை  என்பதும் , மூன்று பெண்களும் தானாக விரும்பி எடுத்த முடிவாகத்தான்  எடுத்துக்கொள்ள முடிகின்றது.
    • சுய விருப்பத்தின்பேரில் உயிரோடு புதைந்து போக சம்மதத்தப் பெண்களின் வம்சவழிகளான 5 தேவரடியார்களுக்கு 1000 குழி நிலங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இறந்த மூன்று பெண்களும்  தேவரடியார்களாகத்தானே இருக்க வேண்டும். ஏனெனில் அக்காலங்களில் தேவரடியார்களுக்கு பல்வேறு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதில் பாடுவோரும் உண்டு.
    • இதிலிருந்து இவர்கள் மூவரும் கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையரின் மனைவிமார்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் கல்வெட்டில் மனைவிமார்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை இவர்கள் கூத்தாடு தேவரின் அதிகாரம் இல்லாத மனைவிமார்களாக இருந்திருந்தால் வாரிசு குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இந்த தியாகத்திற்காக ஊரில் உள்ள மற்றவர்களும் தன்மம் வழங்க வேண்டிய அவசியம் இருக்காதே.
    • கணவன் இறந்ததும் மனைவி சதியேறுகிறாள் என்றால் அவளுக்கு மனவருத்தமோ (வற்புறுத்தி சதியேற வைத்தல் ஒழிய) குழந்தைப்பேறு இல்லையே என்ற வருத்தமோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையரின் மகனான சோமனான பிருதிகங்கர் தானம் வழங்குகிறான் என்பதையும் இக்கல்வெட்டு செப்புகிறது.
    • கூத்தாடுந்தேவரான பிரிதிகங்கரையர் மகனான மகன் சோமனான பிருதிகங்கர்  இறந்த மூன்று பெண்களின் மனவருத்தம் (மனக்கேதம்)  தீர்ப்பதற்காகவும், இவர்களுக்குப் பிறக்கக்கூடிய  குழந்தைப்பேறு   நின்று போனமைக்காகவும் (சந்தான சாமம்) ஒரு வேலி நிலத்தைத் தானமாகக் கொடுகின்றான்.
    • பாவத்தைப் போக்கவே தன்மம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகின்றது.  அதேபோல் இன்னொருவர் இதே செயலுக்காக  5 தேவரடியார்களுக்கு 1000 குழி நிலங்கள் வழங்கியுள்ளார்.
    • கூத்தாடும் தேவரது மகனான  சோமனான பிருதிகங்கர், சோமநாததேவன் ஆகிய இருவரும் தன்மம் கொடுக்க காரணமென்ன? சோமனான பிருதிகங்கர் தன் தந்தைக்காகவும் தனது வம்சாவழிக்காகவும் தன்மம் செய்திருக்கலாம். அப்படியானால் சோமநாத தேவன் யார்? மற்றொரு மகனாக இருப்பின் கல்வெட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டுமே. ஊரின் பொது நன்மை கருதி இந்நிகழ்வுக்காக பலர் தன்மம் செய்துள்ளனர் என்று புரிந்து கொள்ளவே வாய்ப்பு இருக்கின்றது.
    • எனவே, மூன்று பெண்களின் உயிர்த் தியாகத்திற்காக தானாக முன் வந்து தன்மம் கொடுக்கப்பட்டதாகவே இதை கருத வேண்டியுள்ளது. அதேபோல் மற்றொரு கல்வெட்டு முற்றுப்பெறாத நிலையில் உள்ளதால் அதுவும் இதே செயலுக்காக தன்மம் கொடுக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
    • இவ்வாய்வின் முடிவாக மூன்று பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது அவர்களது விருப்பத்தின்பேரில் நடந்தேறியுள்ளதால் இதனை சதியேறுதல் என்று எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?
    • சதி என்றாலே மனைவி என்ற பொருள். அப்படியெனில் மனைவியர் அல்லாதப் பெண்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட இந்நிகழ்வு சதியேறுதல் என்று எப்படி பொருள் கொள்ள இயலும். மனைவி தவிர மற்றவர்களும் உடன்கட்டை ஏறுதலுக்கான நிகழ்வுக்கு வேறு பெயர் என்ன?
    • உடன்கட்டை ஏறுதலுக்கும், உடன்பள்ளி கொண்டமைக்கும் உள்ள வேறுபாடு அறிவது இங்கு அவசியமாகின்றது. வேறு காரணம் கருதியே இந்த தற்பலி நிகழ்ந்திருக்கின்றது.
    • சதியேறிய பெண் ஒருவர் என்று ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருக்க இங்கு உடன் பள்ளி கொண்டவர்களோ மூவர்.

முடிவுரை:

எனது மீள் பதிவின்படி தாமரைப்பாக்கம் கல்வெட்டில் குறிப்பிடும் இந்நிகழ்ச்சி சதியேறுதலைக் குறிக்காது என்பது எனது ஆய்வின் முடிபாக இங்கு முன்வைத்திருக்கின்றேன். ஒருவேளை இனி வரும் ஆய்வாளர்கள் இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும் அல்லது மாற்றுக் கருத்தை கொண்டு வந்தாலும் அதுவும் வரவேற்புக்குரியதே. பண்டையக் காலத்தின் வழக்கப்படி இதுவும் ஒரு நிகழ்வு என்று நகர்ந்து போய்விட முடியாது. ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சி வேறு எங்கும் நடைபெற்றதா என்ற வினாவிற்கு ஏதேனும் தரவுகள், சான்றுகள் கிடைத்தால் ஒருவேளை  இதை ஒரு நிகழ்வாக கடந்துவிட வாய்ப்புண்டு. ஆனால் இது மூன்று இளம் பெண்களின் (சிறுமிகளின்) வாழ்வைத் தியாகம் செய்திருக்கும் ஒரு தற்பலி. இந்த  வீர மண்ணில் பிறந்த, வீர மங்கையரின் இந்த வீரமரணம்  உலகம் உள்ளவரை பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

துணை நின்ற நூல்கள்:

  • தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ,சென்னை
  • ஆவணம் , இதழ்-30,2019, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
  • ச . கிருஷ்ணமூர்த்தி, நடுகற்கள்,மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்.
  • புகைப்படம் : திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் , முகநூல் பக்கம். 
  • தென்னிந்திய நடுகற்கள்- முனைவர்.வெ.கேசவராஜ்
  • நடுகற்கள்-ச.கிருஷ்ணமூர்த்தி
  • தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்
  • புறநானூறு
  • பரிபாடல்
  • தொல்காப்பியம்
  • மணிமேகலை
  • சமூக வாழ்க்கை  நூல் கோட்பாடு- ஹெர்பட் ஸ்பென்சர்.
  • வாழ்வியலும் வழிபாடும் - முனைவர்.க வீ.வேதநாயகம்

மற்றும் இணையச் செய்திகள்.