ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

எங்களை பற்றி

ஆய்வுத் தேடலுடன் கூடிய அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

தொல்குடி தமிழ் மக்கள் வாழும் தமிழக மண்ணிலிருந்து வெளிவரும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் உலக மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் காலாண்டுக்கு ஒருமுறை ஜனவரி, ஏப்ரல், ஜுலை, அக்டோபர் ஆகிய திங்களில் வெளிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் இனம் உலகில் தொன்மை வரலாறு பெற்ற இனங்களுள் ஒன்று. இதற்கு தெளிவான சான்றுகள் பல உண்டு. தமிழக வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்மொழி வரலாறு என இன்றுவரை பல அறிஞர் பெருமக்களால் பலவாறு ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளுக்குத் தமிழக வரலாற்று மூலங்களான இலக்கியங்கள், இலக்கணங்கள், உரைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், நாணயங்கள், கலைகள், வெளி நாட்டார்க் குறிப்புகள், ஆவணக்குறிப்புகள், மொழி ஆகியன சான்றாக அமைகின்றன. இவற்றுள் பல மூலங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையிலும் ,கிடைத்த மூலங்கள் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையிலும் உள்ளன. கிடைத்த மூலங்கள் முழுமையானவை என்று சொல்ல இயலாத நிலையிலும், கிடைத்த மூலங்கள் இன்னும் பலக் கோணப்பார்வையில் ஆராயப்பட வேண்டியதும் இன்றியமையாததாகும்.

இதற்கு முதலில் நமக்குக் கிடைத்த வரலாற்று மூல ஆதாரங்களை இனம் கண்டு, அவற்றையெல்லாம் ஒன்று திரட்டிப் பாதுகாக்க முற்படுதல் வேண்டும். அடுத்ததாக இந்த மூல ஆதாரங்களோடு புதியதாகக் கிடைக்கும் மூலங்களையும் அந்தந்தத் துறை சார்ந்த அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஆராயப்படுதல் இன்றியமையாததாகும். இதனால் புதிய ஆய்வுக் கருத்துகள் உருவாகும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஆய்வுக் கருத்துகளில் ஏற்புடையவை, ஏற்பில்லாதவை என வகைப் படுத்திப் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டும். இந்த முடிவுகளையெல்லாம் வரலாற்றில் இணைத்துக் கொண்டு வருவதால் இன்னும் தெளிவான வரலாறு வெளிப்படும்

தற்போது தமிழ் மொழியைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் பல ஆய்வுகள் வெவ்வேறு ஆய்வுக் கோணங்களில் நடந்தவண்ணம் உள்ளன. எனினும் உலக அளவில் நமது மொழியினை கொண்டு செல்ல இன்னும் நாம் சிரத்தை எடுத்து செயல்பட வேண்டி உள்ளது. அதனால் முறையான, நடுநிலையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இன்று தோன்றியுள்ள பலவகையானத் துறைகளோடு இணைந்து ஆராயப்பட வேண்டியதும் கட்டாயமாகிறது. அதற்கான சிறு முயற்சியில் உங்களையும் பங்கெடுத்துக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். உங்கள் தமிழ் ஆய்வோடு பிற துறைகளையும் ஒப்பீட்டு பார்த்து தொடர்புபடுத்தி எழுதும் அனைத்து ஆய்வுகளையும் அரண் என்னும் பாதுகாப்பு களஞ்சியத்தில் சேமித்து வைக்க அன்புடன் இரு கை குவித்து அழைக்கிறோம். உங்களது ஆய்வுக்கட்டுரைகளால் தமிழின் உண்மைநிலையினைத் தக்க சான்றுகளோடு உலகறிய முன்னெடுப்போம். நமது தமிழ் மொழியின் உயர்வை உலகிற்கு உரக்கச் சொல்ல நமக்கான களம் இது. அன்புடன் இணையுங்கள். அனைவருக்கும் தெரிவியுங்கள். உங்கள் உதவியோடும் ஒத்துழைப்போடும் எங்கள் பயணம் (15/01/2019) இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.

உலகின் எந்நாட்டினரும் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னதழில் கட்டுரை எழுதலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையோடு…. அன்று முதல் இன்று வரை திரைகடல் தாண்டியும் தமிழரின் புகழ் உலகமெங்கும் பரவி இருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் தமிழை தொடர்புபடுத்தி நீங்கள் காணும் அத்தனையும் இங்கு தக்க சான்றுகளுடன் பதிவு செய்ய வேண்டும் என்பதே அது .