ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தென்கிழக்காசிய நாடான மியான்மரில் வைணவத் தாக்கம் - ஓர் ஆய்வு

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை -08 11 May 2022 Read Full PDF

தென்கிழக்காசிய நாடான மியான்மரில் வைணவத் தாக்கம் - ஓர் ஆய்வு

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை -08

ஆய்வுச்சுருக்கம்:

இந்திய நாட்டிற்கு உரியதாகக்  காணப்படும் இந்து கலாச்சாச்சாரமும் பண்பாடும் காலப்போக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. இவ்வாறு பரவலடைந்த இந்துப் பண்பாடும் கலாச்சாரமும் தென்கிழக்காசியாவில் ஒரு மாபெரும் வரலாற்றை உருவாக்கியது என்றால் மிகையல்ல. தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவியிருந்த தன்மையினை புராதன இந்திய இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம், புராணங்கள், ஜாதகக் கதைகள் போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குக் கிடைத்த கல்வெட்டுகள், சிதைந்த கட்டிடங்கள், கோயில்கள், சிற்பங்கள், நூல்கள், ஓவியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், தொல்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆராயும் போது தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடும் கலாச்சாரமும் பரவியிருந்த நிலையையும் அதன் வளர்ச்சியையும் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பர்மாவில் (இன்று மியான்மார் என்று அழைக்கப்படும் நாடு) வைணவத்தாக்கம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்: வைணவம், திருமால், பர்மா, ஸ்வரண்பூமி, மியான்மர்

Abstract ;

Hindu culture, which is unique to India, spread to many countries over time. It is no exaggeration to say that the Hindu culture thus spread made a history in Southeast Asia as well. Ancient Indian literature, such as the Mahabharata, the Ramayana, the Puranas, and the Jataka stories, allude to the existence of Hindu culture in Southeast Asia. An examination of the inscriptions, ruined buildings, temples, sculptures, texts, paintings, historical references and archeological sites here reveals evidence of the spread of Hindu culture in the Southeast and its evolution. The purpose of this article is to examine how the Vaishnavism was recorded in Burma (now Myanmar), one of the southeastern countries.

Keywords: Vaishnavism, Thirumal, Burma, Swaranbhoomi, Myanmar

முன்னுரை:

பர்மா நாடானது ஒரு காலத்தில் சுவர்ணபூமி, பிரம்மதேசம்,  ராமண்ணாதேசம் ,  அருமணதேசம்,  சோனபிரபந்தம்  என்னும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.  இந்நாளில்  மியான்மார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இந்நாட்டில் திருக்கோயில்கள் சார்ந்த மரபை அறிவதற்குப்  பல சான்றாதாரங்கள்  கிடைத்திருக்கின்றன. இந்நாட்டில் உள்ள பகான் என்னும்இடத்திலுள்ள  பூபாய கோயில்,  நாட்,  அலவங்கு,  கயவுங்கு முதலிய கோயில்கள்,  இரங்கூனில்  உள்ள மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில்,  பசுமந்தானில்  உள்ள தண்டாயுதபாணி கோயில்,  தட்டோனில் உள்ள தண்டாயுதபாணி கோயில் , மோல்மோன் சிவன் கோயில் என வெவ்வேறு  காலகட்டத்தில் கட்டிய இந்துக் கோயில்களைப் பட்டியிடலாம். இங்கு வைணவத்தின் தாக்கமும் பரவலும் எவ்வாறு இருந்தது என்பதைக் காண்போம்.

தென்கிழக்காசியாவில் இந்தியத் தாக்கம்:  

இந்தியாவிற்கும் பர்மாவிற்கும் இடையே கி மு 2 ஆம் 3 ஆம் நூற்றாண்டுகளிலே மிகவும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து   புரூணை, மியான்மார், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தென் கிழக்காசிய நாடுகளாக அறியப்படுகின்றன. பண்டைய உலக வரலாற்றில் தமிழர்கள் தலைசிறந்த கடலோடிகளாக இருந்தனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற கொள்கையைக் கடைப்பிடித்தும் வந்தனர். அதனால்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்துபட்ட மனப்பான்மையுடன் விளங்கினர்.  கடல்வழி வர்த்தகம் பண்டைக்காலம் தொட்டே இருந்ததால் தமிழகத்துக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தொடர்ந்து உறவு இருந்து வந்தது.

இதனைத்தான் பாரதியார்,

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய

    தீவு பலவினுஞ் சென்றேறி - அங்குத்

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் -நின்று

    சால்புறக் கண்டவர் தாய்நாடு

என்று பாடி மகிழ்ந்தார்.

பண்டைய காலத்திலேயே தமிழர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அதிலும் தென்கிழக்காசியப் பகுதிகளில் தமிழர்களது குடியேற்றம் பரவலாக இருந்தது.  கடலோடிகளாக இருந்த தமிழர்களுக்குக் கடல் வணிகப் போக்குவரத்து தென்கிழக்காசிய நாடுகளில்தான் அதிகம் இருந்து வந்தது. இதனைப் பழம்பாடல் ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளூக்குடகம்

கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலிங்கலிங்கம்- வங்கம்

கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம்

தங்கம் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலந் தாமிவையே

என்று அன்றைய தமிழகத்தைச் சூழ்ந்த பதினேழு நிலங்களைக் குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகம் பல நாடுகளுடன் கொண்ட தொடர்பினை அறியமுடிகின்றது.

தென்கிழக்காசிய நாடுகளில் பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை நான்கு வகையான பண்பட்டுப்பரவல்களின் தாக்கத்தை காணமுடிகின்றது.

1. பண்டைய வணிகத் தொடர்பு

2. பல்லவர்கால ஆட்சியும் குடியேற்றம்

3. சோழர் காலம் ஆட்சியும் குடியேற்றமும்

4. தோட்டத் தொழிலாளிகளாகத் தமிழர்களின் குடியேற்றம்.

தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாட்டுப் பரவல்:

அக்காலத்தில் தென்கிழக்காசியப் பகுதியிலிருந்த  நாடுகளை சுவர்ணபூமி என்று அழைத்தார்கள். வாரணாசியிலிருந்து சுவர்ணபூமிக்குச் சென்ற அரச குமாரன் பர்மாத்  துறைமுக நகரைக் கைப்பற்றி அங்கு வைசாலி என்ற அரசினை நிறுவினான் எனக் கூறப்படுகின்றது. இங்கு  முத்து, பவளம், இரத்தினம், சந்தனம், அகில், கர்ப்பூரம் மற்றும் நறுமணப் பொருட்கள் ஆகிய  மதிப்பு மிக்க பொருட்கள் மிகுந்த அளவில் காணப்பட்டதால் வணிகம் பொருட்டு இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல்வழியாகவும் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு பயணம் மேற்கொண்ட சிலர் அங்குத் தனது குடியேற்றங்களையும் அங்கு அமைத்துக் கொண்டனர். தாம் குடியேறிய பகுதிகளில் தமது சமயம், பண்பாடு, கலை ஆகியவற்றை அங்கு வளர்த்தனர். அடுத்ததாக அந்நாட்டு மக்களுடன் திருமண உறவையும் ஏற்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் அரசியலிலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்திய மன்னர்களின் படை எடுப்புகள் பெற்ற வெற்றிகள் ஆகியவை இந்துப் பண்பாட்டை மேலும் பரப்பி  வலு சேர்த்தது. இங்குக் குடியேறிய தைலாங்கு போன்ற இனத்தவர்கள் கலிங்கம், தெலுங்கு தேசப்பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்நாடுகளில் சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம் போன்ற மதப்பிரிவுகள் செல்வாக்கு  பெற்றிருந்தன.  திருக்கோவையார், திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்றன அரச சபைகளிலே செல்வாக்கு பெற்றிருந்தமையும் இந்நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவியிருந்த தன்மையினையே காட்டுகின்றன.

மியான்மாரில் இராமாயணத்தின் தாக்கம்:

கிழக்கிலிருந்து தரை மார்க்கமாக வங்காளத்திலிருந்து பர்மா, தாய்லாந்து மற்றும்  லாவோஸூக்கு  இராமாயணம் பரவியதாக அறியப்படுகின்றது.  மியான்மார் இந்தியாவுக்கு  அருகில் உள்ள நாடாகும். இந்தியாவின்  வடகிழக்கு எல்லையுடன் இணைந்துள்ளதாகும்.  இந்த பகுதியில் பல பழங்குடி மக்கள் உள்ளனர். அவர்களுள் ஒவ்வொரு குடியினருக்கும் அவர்களுக்கென இராமாயணக் கதைகள் உண்டு. அவை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள இராமாயணங்களிலிருந்து மாறுபட்டவையாகும்.  மியான்மாரில்  யாமாசட்டெள (yamazataw) என்று வழங்கப்படுவது இராம கதையாகும்.  மியான்மார்  சாம்ராஜ்யத்தை பதினாறாம் நூற்றாண்டில் நிறுவிய அரசன் அநிருத்தன் (Anawhrata) காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதே  காலத்தைச் சேர்ந்த பழைய நகரான பகன் நாகரிலுள்ள நத்யவுங் விஷ்ணு ஆலயத்தில் கல்லினால் ஆன இராமர் சிலையொன்று காணப்படுகிறது. அதே காலத்திய தான   கல்வெட்டொன்றில்  மோன் மொழியில்  ஓர் அரசன்  தான் இராமனின் நெருங்கிய உறவினன் என்று குறிப்பிட்டுள்ளான்.  பேரரசர் அலவுங்கபய என்பவர்  கி பி 1702ல் புதியதோர் அரசமரபைச்  சுவேபோ என்னும் நகரில் நிறுவினார். இக்காலத்தில் இராமகாதை பர்மிய மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. பர்மியக் கவிஞர்கள் இராமன் சீதை வரலாற்றைச் சிறப்புமிகு கவிதைகளில் பாடத் தொடங்கினர். தாய்லாந்து நாட்டின் பண்பாட்டுத் தாக்கத்தாலேயே இராமகாதை பர்மாவில்  செல்வாக்கு பெற்றது  என்பர்.  மாங்தோ (Mangtoe) என்பவர் இராமனைப் பற்றிப் பெருங்காப்பியம் ஒன்றை இயற்றினார். இராமர் ஏழை, எளிய மக்களிடத்துப்  பேரன்பு பூண்ட  ஏழைப்  பங்காளனாக அக்காப்பியத்தில்  சித்திரிக்கப் பெற்றுள்ளமை  நம் கருத்தைக் கவருகிறது.  மாங்ஜா  என்பவரும்  சையாமிய மொழியில் உள்ள இராம நாடகத்தை அதிலுள்ள இனிய கீர்த்தனைகளோடு பர்மிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்றும் அறிகின்றோம். பர்மிய மொழியில் ஒன்பது இராமாயணத் தழுவல்கள் இயற்றப்பட்டுள்ளது. பர்மிய நாடகக் கலைகளில் இராமாயணம் நாடகமாக நடிக்கப்பட்டது. பண்டிகைகளின் போது அரசர் முன்பு இராமாயண நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்ததாக அறியமுடிகின்றது. 

 மியான்மாரில் வைணவ தொல்பொருட்கள் :

மியான்மாரில்  விஷ்ணு வழிபாடு பரவலாகக் காணப்பட்டது. பல கல்வெட்டுகளில் அதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. பர்மாவின் பழைய தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மயமாகத் திகழ்ந்திருக்கிறது. . புரோம் நகருக்கு  புகநாம்யோம்  என்ற பர்மியப் பெயரும் உண்டு,  இதற்குப் பொருள் விஷ்ணு புரம் என்பதாகும்.  புரோம் நகரிருந்த இடத்திலும் பகனிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டபோது  வைணவ சமயத்துக்குரிய தெய்வத் திருவுருவங்களும் கோயில்களும் கிடைத்துள்ளமை இதை வலியுறுத்துகின்றது.  அப்பொருள்களில் திருமாலின் பத்து அவதாரங்களைக் கொண்ட அரைகுறையான புடைப்புச் சிற்பம் (Bas Relief) கிடைத்திருக்கின்றது..  பிற கிழக்காசிய நாடுகளில் காணப்படுவதைப் போன்று பர்மாவில் இந்து  சமயத்துக்குரிய பழங்கால சிறப்புமிக்க கோயில்களோ மடங்களோ இன்று காணப்படவில்லை. எனினும் , பிராமணர்கள் இருந்தனர் என்றும் அவர்கள் அக்காலத்தில் மிகுந்த  செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்றும் பர்மாவின் வரலாற்றுக் குறிப்பேடுகளால் தெரிய வருகின்றது. இவ்வாறு  பர்மாவில் குடியேறிய தமிழர்களால் வைணவம் பரப்பப்பட்டதாக அறிய முடிகின்றது. ஸ்ரீ  க்ஷேத்திர  அரசர்கள்  வைணவ சமயச் சார்பு  உடைவார்களாக    இருந்தனர்.       இங்குக் கிடைத்த சில நாணயங்களில் ஒரு புறம் சூலமும் மறுபுறம் வைணவச் சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இவற்றால் மியான்மாரில் வைணவம் தழைத்தோங்கி இருந்தது என்பதை உணரலாம்.

மியான்மார் தமிழ்க் கல்வெட்டில் வைணவக்குறிப்பு:

பர்மாவில் உள்ள பாகாங்கு என்னும் இடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. அக்கல்வெட்டு கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது. (சேரமான்) குலசேகர ஆழ்வாரின் முகுந்த மாலா என்ற வடமொழி நூலில் உள்ள ஆறாம் சுலோகத்தோடு தொடங்கி , கீழ்க்காணும் தமிழ்ப் பகுதியோடு முடிகிறது.

சுவஸ்தி ஸ்ரீ புக்கம் ஆன அரிவர்த்தனப்

புரத்து நானாதேசி விண்ணகர்

ஆழ்வார் கோயில் திருமண்டபமும்

திருக்கதவும் இட்டேன்,மலைமண்டலம்

தூய மகோதஒயர் பட்டினத்து

ஈராயிரான சிறியனான சீகுலசேகர

நம்பியேன் (Epigraphia Indica,Vo 1,7;P.197)

என்பது கல்வெட்டு வரிகள்.  புக்கம் ஆகிய  அரிமர்த்தனபுரம் என்னும் அந்த ஊரில்     நானா தேசிகளாகிய  தமிழகத்து வாணிகர்கள் கட்டியுள்ள விண்ணகர் ஆழ்வார் என்ற திருமால் கோயிலில் சேர நாட்டிலுள்ள மகோதைப் பட்டினத்தைச் சேர்ந்த குலசேகர நம்பி என்ற வாணிகன் செய்த திருப்பணிகளை அறிகிறோம். அவ்வணிகன் திருமால் வழி பாட்டினை உடையவன் என்றும் குலசேகர ஆழ்வாரிடத்து ஈடுபாடுடையவன் என்றும்  புலனாகின்றன.

       வைதிக சமயத்திற்குரிய தெய்வங்களான திருமால், கருடன், அனுமான்  மூதாதையரின் சிலைகள் பர்மாவின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பண்டையக் காலப் புரோம்  நகரில் காணப்படும்  திருமால், இலக்குமி  ஆகியோரின்  புடைப்புச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் தலைகள் சிதைந்துள்ளன. மற்றொரு சிலையான கருடன் மீது  அமர்ந்துள்ள  திருமாலின் சிலை மிக அழகான படைப்பாகக் கருதப்படுகின்றது.  அலவுங்கு ,   கயவுங்கு பெரிய விமானங்கள் உடையவனவாகும். அவை திருமாலின் கோயில்களாகும்.  அங்குத்  திருமாலின் பத்து  அவதாரங்களையும் விளக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமாலின் பத்து அவதாரங்களில்  ஒன்பதாவதாகப்  புத்தர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பர்மாவில் புத்தமதம் வேரூன்றி இருந்ததால் அதன் தாக்கமாக புத்தரின் சிற்பமும்  இடம்பெற்றிருப்பதினையே  இது குறிக்கின்றது. இதனை அறியாத பலர்  இப்போதுகூட  திருமாலின் அவதாரங்களில் புத்தர் அவதாரமும் ஒன்று என்று தவறான கருத்தை முன்மொழிகின்றனர்.  இராமநாதன் செட்டியார் என்பவர் அங்குத் திருமால்  கோயிலைக்  கட்டியுள்ளார்,  இக்கோயில் காஞ்சி  வரதராஜ பெருமாள் கோயிலின் பாணியில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.கோயில்வழிபாட்டுமுறை  பாங்சாரத்திரிக  ஆகமத்தை  அடிப்படையாகக்  கொண்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழருடைய கலைத்திறனிருக்கும்  பண்பாட்டிற்கும் இக்கோயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறது.

பியூணானில் திருமாலைக் குறிப்பிடும் சமஸ்கிருத கல்வெட்டு:

பியூணானில் மூன்று சமஸ்கிருத கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் முதல் கல்வெட்டு திருமாலை போற்றி வழிபடும் பாடலுடன் தொடங்குகிறது. இரண்டாவது கல்வெட்டு , குணவர்மன் என்ற அரசன் , சக்கரவர்த்தசாமி  எனப்படும் திருமாலிற்கு அளித்த அறக்கட்டளை பற்றிக் குறிப்பிடுகின்றது. இத்தெய்வத்தைக் கோயிலில் எழுந்தருளச் செய்வதற்கு வேதங்களிலும் உபவேதங்களிலும்  வேத்ஜத்தின்  அங்ககளிலும் வல்ல பிராமணர்களும் சுருதிகளில் வல்ல முனிவர்களும் முறையாகச்  சடங்குகளை  செய்தனர் என்பதையும் இக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

முடிவுரை:

மியான்மாரில்   இந்து மதத்தின் தாக்கம் குறிப்பாக வைணவத்தின் தாக்கம் இன்றளவும் தொடர்கின்றது என்பதை மேற்கூறிய சான்றுகள் சான்று பகிர்கின்றன. இருப்பினும்  மியான்மாரில் இன்னும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பல அரிய தகவல்கள்  கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தமிழர் செல்லும் இடமெல்லாம் தமிழரின் பண்பாடும் கலாச்சாரம் சென்று புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

துணை நின்ற நூல்கள்:

1.தென் கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு ,ப.ஜோதீஸ்வரன்,மொடேன் கல்வி நிலையம்,நெல்லியடி,இலங்கை.

2.தென் கிழக்காசிய நாடுகளில் தமிழர் பண்பாடு,டாக்டர்.க.த.திருநாவுக்கரசு, உலக தமிழாராச்சி நிறுவனம், சென்னை.

3.தென் கிழக்காசியாவில் இந்துப் பண்பாடு , பேரா. செ. கிருஷ்ணராஜா, பேரா. ப.கணேசலிங்கம்

4. இணையத் தரவுகள்.

1.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

2.https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

3.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

4.https://books.google.co.in/books?id=CSTuWZ0BMmMC&printsec=frontcover&redir_esc=y#v=onepage&q&f=false

 

                    Picture: (curttasy : Internet)

Four armed Vishnu carving in Nathlaung Kyaung Temple, Bagan, Myanmar (Burma)