ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை - வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு

கலாநிதி. விக்னேஸ்வரி பவநேசன், தலைவர்-முதுநிலைவிரிவுரையாளர் தரம்-01, சைவசித்தாந்தத்துறை, இணைப்பாளர், சைவசித்தாந்த முதுகலைமாணி, உயர்பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் 27 Jul 2021 Read Full PDF

கலாநிதி. விக்னேஸ்வரி பவநேசன், தலைவர்-முதுநிலைவிரிவுரையாளர் தரம்-01, சைவசித்தாந்தத்துறை, இணைப்பாளர், சைவசித்தாந்த முதுகலைமாணி, உயர்பட்டப்படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

ஆய்வுச்சுருக்கம் 

இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை பற்றியும் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்து பல முடிவுகளை இவ்வாய்வுக்கட்டுரை முன்வைத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று வரை விரிவான ஆய்வுகள் இடம்பெறாத காரணத்தினால் இவ்வாய்வுக்கட்டுரை அத்தகைய தேவையை நிறைவு செய்கின்றது என்று கூறலாம். பெண்களின் நிலை நலிவுற்றதற்கு சமூகத்திலே ஆண்வர்க்க ஆதிக்கம், பெண்கள் தமது நிலையை வளர்த்தெடுத்துக் கொள்வதில் அக்கறையின்மை போன்ற காரணங்களால் பெண்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க வேண்டி இருந்த நிலைபற்றி இவ்வாய்வில் இயன்றவரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 

இந்துப்பெண்கள் புராதனகாலத்தில் பலதுறைகளிலும் முன்னின்று உழைத்தனர். அதனால் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். இவ்வாறு நீண்டகாலமாகப் போற்றப்பட்டுவந்த இந்துப்பெண்கள் சமூக, பொருளாதாரக் காரணிகளின் மாறுதல்கள் காரணமாகப் பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவராயினர். இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தோற்றம் பெற்ற நவீன இந்து சீர்திருத்த இயக்கங்களின் அளப்பரிய செயற்பாடுகளின் காரணமாகப் பெண்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. இதன் பெறுபேறாகவே இந்துப் பெண்கள் பல்வேறு முன்னேற்றப்படிகளையும் அடையலாயினர். 

ஆய்வின் நோக்கம்  

இந்து சமூகத்திலே பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ஊற்றுக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கண்டறிவதற்கு ஏதுவாகவே இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை- வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு எனும் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகிறது. பெண்ணியல் ஆய்வு கற்கைநெறியாகப் பரிணமித்திருக்கும் இக்காலகட்டத்திலே இந்துப்பெண்களின் வாழ்வியல் அம்சங்களைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வதும் இவ்வாய்வின் பிறிதொரு நோக்கமாகும். 

இன்று பல்வேறுபட்ட நிலையில் பெண்கள் ஆண்களை விட உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர். குறிப்பாக கல்வி, அரசியல், தலைமைத்துவம், தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றில் அவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றுள்ளது. இந்நிலையில் புராதனகால பெண்களுக்கு இருந்த தாழ்வான நிலைக்கான காரணத்தைக் கண்டறிவதும் இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். 

ஆய்வின் கருதுகோள் 

பெண்களுக்கான வாழ்வியல் சிக்கல்களை குடும்பஉறவு, சமூகஉறவு என்பற்றின் துணைகொண்டு வடமொழி நூல்களின் வழி புலப்படுத்துதல். 

கல்வி, பொருளாதாரம் என்பன இல்லாத நிலையில் பெண்களின் சிக்கல்கள் பற்றி இலக்கியங்கள் வழி நோக்குதல். 

பெண்ணினத்தின் இன்றியமையாத கருதுகோளான பெண்சுதந்திரத்தை பெறுவதற்கான வழிமுறைகள் ஆண், பெண் சமத்துவம் என்ற கொள்கையை நிலை நிறுத்துதல். 

மேற்குறித்த இக்கருதுகோள்களை மையமாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஆய்வின் எல்லை

இந்துப்பெண்களின் வளர்ச்சிப் பரிமாணங்களை வரன்முறையாகக் காணக்கூடிய சான்றுகளாக இலக்கியங்களே அமைகின்றன. இவ்வகையில் இவ்வாய்வு வடமொழி இலக்கியங்களை எல்லையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ஆய்வின் மூலங்கள் 

இவ்வாய்வில் முதன்மை மூலங்கள் என்ற வகையில் வடமொழி நூல்களான வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் தர்மசாஸ்திரங்கள் என்பனவும் துணை மூலங்களாக பெண்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், கட்டுரைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

திறவுச்சொற்கள் 

பெண்கள், இந்து, மரபு, இலக்கியங்கள், காலம், பாடல்கள், சமூகம், கல்வி, நிறுவனம்

அறிமுகம் 

பெண்மை என்பது அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, தொண்டு முதலியன அமைந்த ஒன்றாகும். மண், நீர், ஒளி, காற்று முதலியன சேர்ந்து மரமாதல் போல அடக்கம், பொறுமை முதலிய குணங்கள் சேர்ந்து பெண்மையாகின்றன. சிறு சிறு நீர்த்துளிகள் சேர்ந்து பரந்த நீர்நிலை என பெயர் பெறுதல் போலவும் சிறு சிறு பரல்கள் சேர்ந்து மலை என்னும் பெயர் பெறுதல் போலவும் அடக்கம் முதலிய குணங்கள் ஒன்றி அவை பெண்மை என்னும் பெயர் பெற்றன. மேலும் அடக்கம் முதலியவற்றின் திரட்சி பெண்மையாய்ப் பொழிவதையும் அடக்கம் முதலியவற்றால் இன்பம் விளைவதையும் நோக்கின் பெண்மை இன்பமாக விளங்காமல் இருக்க மாட்டாது. ஆகவே பெண்மையை இன்ப நிலை எனக்கொள்ளல் எவ்வகையானும் பொருந்தும். பெண்மைக்கு இறைவன் தந்த பரிசு தாய்மை ஆகும். அருள்உள்ளம் தாய்மைக்கே உண்டு எனவே தான் இறையவரும் ஆணாகவும், பெண்ணாகவும் வடிவமைத்தார் போலும். பெண்ணுக்கே இல்லாள் என்னும் சிறப்புப் பெயர் எமது சமூகத்தில் வழங்கப்படுகின்றது. 

குடும்பநலம், சமூக சேவை, மன்னிக்கும்இயல்பு ஆகியவற்றிற்க்கு இலக்கணமாகப் பெண்மையே திகழ்கின்றது. எனவே தான் பூமாதேவி, ஆகாயவாணி, கங்காதேவி என்று நிலத்தையும், வானையும் நீரையும் போற்றி வழிபடுகின்றோம். மேலும் விவசாய சமுதாயத்தில் உணவை உற்பத்தி செய்வதில் அவள் வகித்த பங்கு மிகவும் பிரதானமானது. நிலமடந்தை உணவை விருத்தி செய்வது போன்று பெண்ணும் இனவிருத்தியில் தனது பிரதான பங்களிப்பைச் செய்கின்றாள். இதனால் தான் தாய்மையும் நிலமும் ஒன்றாக உருவகப்படுத்தப்பட்டன. நிலம் தாயாகவே கருதப்பட்டது. இனவிருத்தியின் பங்களிப்புக்கு ஆண், பெண் எனும் இரு சக்திகளின் இணைப்பு அவசியம் எனக் கருதப்பட்டது. 

இவ்வகையிலே தான் எமது இந்து சமயத்திலும் இச்சக்திகளின் அருவுருவ நிலையையே லிங்கதத்துவம் எடுத்துக்காட்டுகின்றது. இந்து சமய மரபிலே பெண்மைக்குச் சரிபாதி நிலை வழங்கப்பட்டுள்ளமையும் தெளிவாகின்றது. பெண்மைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் எமது சமய மரபிலே இறைவனது அர்த்தநாரீஸ்வரர் வடிவமும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சிவம் சக்திக்கு கொடுக்கும் உயர்வு தனது உடலிலே அம்மையைச் சரிபாதியாகக் கொண்டுள்ள சிறப்பாகும். இதனால் தான் இறைவன் இடப்பாகத்திலே அம்மையை இருத்தி அம்மையப்பனாய்த் திகழ்கின்றார். 

அத்தகைய இறைவனை உமாபதி, உமாமகேஸ்வரன், மாதொருபாகன் என்ற பரமனின் பெயர்களில் மட்டுமன்றி அவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் கூட வடிவாம்பிகை சமேத முன்னேஸ்வரராகவும் கௌரிஅம்மை சமேத கேதீஸ்வரநாதனாகவும் மாதுமை அம்மை சமேத கோணேஸ்வரநாதனாகவும் நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வர நாதனாகவும் பார்வதி சமேத பரமேஸ்வரனாகவும் அழைக்கப்படுகின்ற சிறப்பினைக் கொண்டு எமது சமய மரபிலே பெண்மைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. 

 இவ்வாய்வுக்கு ஆதாரமாக வடமொழி நூல்களான வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என்பன விளங்குகின்றன. பெண்கள் இந்து சமூகத்தில் காலத்திற்குக்காலம் எத்தகைய சிறப்போடு இருந்து வந்துள்ளனர். என்பதை வடமொழி இலக்கியங்களின் துணைகொண்டு எடுத்துக்கூறுவதும் பெண்களின்நிலை பற்றிய ஓர் தொடர்ச்சியான சிந்தனையோட்டத்திற்கு இன்றியமையாததாகும். நவீனசீர்திருத்தகாலத்தில் சமூகத்தில் பெண்களிடையே காணப்பட்ட பாலியல் விவாகம், விதவாவிவாகம்மறுப்பு, பெண்கல்விமறுப்பு, சதி போன்றவற்றில் சில நடைமுறைகள் தொன்மைக்காலத்திலும் இருந்து வந்துள்ளன என்பதை மேற்குறித்த இலக்கிய ஆதாரங்கள் காட்டிநிற்கின்றன.

இந்துப்பண்பாட்டுமரபில் பெண்கள்நிலை பற்றி ஆராய்வதற்கு வடமொழி நூல்கள் பெருமளவில் உதவுகின்றன. இவ்விடயம் பற்றிய ஆய்வில் வேதங்கள் முதன்மை பெறுகின்றன. மேலும் இவற்றை அடுத்து எழுந்த பிராமணங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் ஆகிய இலக்கியங்களிலும் இத்துறைசார்ந்த கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை. இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக விளங்கும் காரணத்தால் அவை தரும் கருத்துக்களில் பெண்கள் நிலை பற்றிய ஒருபரிமாணம் பிரதிபலிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்துசமூகஅமைப்பில் பெண்கள் பற்றிய எந்த ஒரு அணுகுமுறையும் இந்துப்பண்பாட்டில் நிலைபெற்றுள்ள குடும்பநிறுவனம் தொடர்பான ஆழமான பார்வையை வேண்டிநிற்பன. குடும்ப நிறுவனத்தில் பெண்ணுக்கான இடம் யாது என்பது  அதன் உருவாக்கம், நிலைபேறு என்பவற்றில் அவளுக்குரிய  அந்தஸ்த்தின்வழி நிர்ணயமாவது. இந்தவகையில் இந்துப்பண்பாட்டு மரபில் காலந்தோறும் பெண்கள் எதிர்கொண்ட பால்நிலை சார்ந்த முனைப்பான பிரச்சினை மையங்களை இவ் அத்தியாயம் வரலாற்று நோக்கில் கவனத்தில் கொள்கின்றது.

1. வேதகாலத்தில் பெண்கள் நிலை

வேதநூல்களின் காலத்தை நிர்ணயிப்பதில் பல முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இதுவரை உலகில் தோன்றிக்காணப்படும் நூல்கள்  எல்லாவற்றிலும் வேதங்கள் காலத்தால் முற்பட்டது என்பர் பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள்.1 ஏனைய நூல்களைப்போல வேதங்களுக்குக் கால எல்லை கற்பிப்பது பொருந்தாது என்பது மரபு வழிவந்தோர் உள்ளக்கிடக்கையாகும். ஆயினும் வேதங்களின் காலத்தை மேலைநாட்டாருள் மக்ஸ்மூலர் என்பார் கி.மு 1200-1000 என்றும்2 குறிப்பிட்டுள்ளார் எனவும், இருந்தாலும் இலக்கியவரலாற்று ஆதாரங்களைக் கொண்டு நோக்குமிடத்து பார்ஸ்வநாதர், மகாவீரர், புத்தர் காலத்திற்கு முற்பட்டவை எனக்கருத்திற் கொண்டு மக்ஸ்மூலர் கூறியவாறு கி.மு 1500-1200 ற்கு முன் வேதகாலம் தொடங்கிற்று என முடிவுக்கு வருகின்றார்.3

இங்கு ஆய்வுக்குரிய மூலங்களாக இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களும் கருத்திற்கொள்ளப்படுகின்றன. இந்துக்களது சமய சமூக வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் வேதங்களில் பெண்களின் நிலை பற்றிய சிந்தனைகள்  குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.

1.1 பெண் பற்றிய எண்ணக்கரு

இருக்குவேதத்தில் பெண்கள் தெய்வீகநிலையில் போற்றப்பட்டதை அறிய முடிகின்றது. இவ்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஆண்தெய்வங்களும் பெண்தெய்வங்களும் இயற்கையின் தோற்றப்பாடுகளைப் பிரதிநிதிப்படுத்துவனவாயும் அத்தெய்வங்களை  வழிபடும் பாங்கிலும் சுலோகங்கள் காணப்படுகின்றன.4 இருக்குவேதகால சமூகத்திலே பெண்கள் நன்னிலையிலே வாழ்ந்தனர். அவர்கள் வீட்டுப்பொறுப்பாளராக விளங்கியதுடன் விழாக்களுக்குச் செல்லும்போது அலங்காரம் செய்தே சென்றனர். பெண்களின் அழகுச்சிறப்பு பற்றிய பாடல்களிலே நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்களகரமான புன்னகை தவளும் இளநங்கையர் பற்றிய குறிப்புகள் வருகின்றன.5

இருக்குவேதப்பாடல்களில் உண்மையான மாறும் வடிவில் பெண்மையின் பல்வேறு இயல்புகளும் தாய்மைக்கு இலக்கணமாகத்திகழும் பண்புகளும் கவினுற வருணிக்கப்படுகின்றன.  இவ்வகையில் சில தெய்வீகவடிவங்கள் பற்றிய சிந்தனைகள் தொடர்புபடுகின்றன. உதாரணமாக அதிதி என்ற தெய்வத்தைக் குறிப்பிடலாம். பெண்மையின் நல்லியல்புகள் மகள், சகோதரி, அன்னை என்ற உறவு நிலைகளில் பொருந்துவதையே இங்கு பாடல்களில் காட்டப்படுகிறது. மனிதப்பிறவியின் துன்பங்கள், பாவங்களில் இருந்து விடுபட இந்த அதிதி ஆகிய தாயே துதிக்கப்படுகிறாள். இவள் மாந்தரின் உடல் பாரமான துன்பங்களை மட்டுமன்றி உள்ளக்கசடுகளையும் நீக்கவல்லவள். இயற்கையின் இனிய காட்சிகளும் வண்மை வரிசைகளும் இந்தத்தெய்வீகம் செறிந்த அன்னையின் பிரதிவிம்பங்களே. இவளே சுவர்க்கம், இவளே ஆகாயம், இவளே ஆகாயம், இவளே ஒளி, இவளே காமதேனு, இவளே எசமானி என்றெல்லாம் வேதகாலக்கவிஞர் அதிதியைப் பாடிப்பரவியுள்ளனர்.6 இவ்வகையில் பெண்ணுக்கிருந்த உயர்நிலையினை அறிய முடிகின்றது.

இருக்கு வேதத்தில் வாழ்க்கையின் வேறுபட்ட மட்டங்களிலும் குடும்பத்தில் வேறுபட்ட நிலைகளிலும் ஒரு பெண்பிள்ளைக்கு வேறுபட்ட நாமங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு இருக்கு வேதத்தில் காணப்பட்ட பெயர்கள் பிற்பட்ட கால இலக்கியங்களில் வழக்கிழந்து போய்விட்டதையும் அறியமுடிகின்றது. இத்தகைய பல்வேறு வகையான நாமங்களில் “கன்னியா” “டுகிற்றா” ஆகிய நாமங்கள் வழக்கிலுள்ளன.இருக்கு வேதத்தில் இடம்பெறும் செய்யுள்களில் ஒன்று உசயை வணக்கம் செய்யும் பொழுது “கன்னியா” என்ற பெயரினை உடைய கருத்துத் தெளிவாகச் சுட்டப்படுகிறது.

“ஓ தெய்வமே கன்னியாக வளர்ச்சி உற்றமை போல எதை நீ நாடுகின்றனையோ

அதை   அடைவதற்காக நீ தெய்வத்திடம் சேர்க்கின்றாய்”7

இவ்வகையில் உச என்ற தெய்வத்தின் பண்புகள் பற்றிய விபரத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிய ஒருசிலகுறிப்புகள் பிரதிபலிக்கக் காணலாம். இத்தெய்வம் விடியலுக்குரியது. இதன் விபரிப்பில் மனிதஉணர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வேதகால சமுதாயத்தில் கன்னிப்பெண் ஒருத்தியின் வாழ்க்கையை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இத்தெய்வம் உருவகிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் குறிக்க வரும் சொற்கள் பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து உள்ளனர். சாயனர் கருத்துப்படி “கன்னியா” என்பது வயதுடன் தொடர்புடைய சொல் மட்டுமன்றி அதற்கு “ அழகிய மங்கை” என்ற பொருளும் அமையும் எனக்கூறுகின்றார். யாஸ்கர் என்னும் ஆரம்பகால நூலாசிரியர் “கன்னியா” என்பதற்கு “அழகிய மங்கை” என்று குறிப்பிடுகின்றார். றொத் என்பவர் ‘இல்லத்தலைவி| என்று குறிப்பிடுகின்றார். யாஸ்கரின் கருத்துப்படி சகோதரனற்ற ஒரேஒருபெண் அவளது திருமணத்தின் பின்னரும் கூடத் தந்தையின் மரணச்சடங்குகளில் பங்குபற்றுவதற்கு உரித்துடையவள் ஆகின்றாள். சொத்துரிமை மட்டுமன்றி அவள் புத்திரனுக்கு இணையாகவும் அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு உள்ளாகின்றாள்.

இருக்கு வேதத்திற்குச் சாயனார் தரும் சில விளக்கங்களில் இருந்து அக்கால சமூகத்தில் பெண்களதுநிலை பற்றியும் அவர்களுக்கிருந்த சில கடமைகள், உரிமைகள், என்பன பற்றியும் நாம் அறியலாம். சாயனார் தரும் விளக்கத்தில் “ சகோதரர்கள் இல்லாத ஒரு பெண் தனது தந்தையின் வழிவந்த உறவினர்களிடம் இருந்து ஆடை ஆபரணங்களை எதிர்பார்க்கின்றாள். அவளுக்குச் சகோதரன் ஒருவன் இருப்பான் ஆயின் அவன், அவளைப் பராமரிப்பான். அவ்வாறு சகோதரன் இல்லாத சந்தர்ப்பத்தில் மட்டுமே  அவள் தன் மாமன்மாரின் உதவியை நாடுகின்றாள்”என்று கூறுகின்றார். மேலும் அவளின் சொந்தச் சகோதரன் உயிர்வாழும்பொழுது தந்தையின் மரணச்சடங்குகளை அவளே நடத்துவாள். ஆனால் அவன் இல்லாத சந்தர்ப்பத்தில் அவள் தனது தந்தையாரின் உறவினரிடம் சென்று அக்கிரியைகளை நடாத்துகின்றாள்  என்று கூறுகின்றார். இக்கருத்தின்படி வேதகாலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமை பற்றி அறிய முடிகின்றது.

1.2 பெண்களின் சமூகமயமாக்கம்

கல்வி

வேதகாலசமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கல்வி பெறும் வாய்ப்பும் சுதந்திரமும் இருந்தன. பிரமச்சரியம் என்ற கல்விக்காலம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இருந்தது. உயர்கல்வி  கற்றுத் தேறி ஆண்களுடன் ஆன்மதத்துவ விசாரணை மற்றும் கருத்தரங்குகள், விவாதங்கள் என்பவற்றில் ஈடுபாடு கொண்ட பெண்களும் இருந்திருக்கின்றனர். வேதப்பாடல்கள் ஒருசிலவற்றையாயினும் இயற்றிய பெருமையும் பெண்களைச் சார்ந்துள்ளது. 

இருக்குவேதத்தில் இருபத்தேழு பெண் இருடிகள் இயற்றிய பாடல்கள் உள்ளன. இவை யாவும் இந்து மரபுக் கல்வியிலும் கலைகலாச்சாரங்களிலும் வேதகாலப்பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக்காட்டும் சான்றுகளாக விளங்குகின்றன. எனவே பெண்களுக்கு எத்தகைய மதிப்பும் மாண்பும் அளிக்கப்பட்டிருந்தன என்பது தெரிய வருவதோடு இவற்றினால் இந்துமரபும் பண்பாடும் உன்னத நிலையில் இருந்ததென்பதும் தெரியவருகின்றது. இந்துப்பண்பாட்டு மரபு பெண்களைப் புறக்கணிக்கவில்லை என்பதற்கு இருக்குவேதத்திலும் யசுர்வேதத்திலும் சான்றுகள் காணப்படுகின்றன. 

“கல்வியும் இளமையும் நிறைந்த மணமாகாத தனது மகளைக் கல்வியறிவு நிரம்பப் பெற்ற  ஒருவனுக்கு  மணம் முடித்து வைக்கவேண்டியது தந்தையின் கடமை”7

“பிரமச்சரியம் என்னும் மாணவப்பருவம் நிறைவு பெற்றபின்னரேதான் தனது மகளைமணம் முடித்துக்கொடுத்தல் தந்தையின் கடமை”9

எல்லாவகையிலும் நிறைவும் பொருத்தமும் உள்ள ஆண்மகனைத் தெரிந்து மணப்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இருந்தது. புனிதமந்திரங்களை ஓதுவதற்கும் யாகங்களில் கணவனுடன் பங்கு கொள்வதற்கும் உரிமை இருந்தது.10 இலக்கியம், மொழி, நுண்கலைகள் என்பவற்றுடன் பெண்கள் வீட்டுக்கலைகளையும் கற்றனர். போர்க்கலையைக் கற்பதற்கும் தடை ஏதும் இருக்கவில்லை. சமய தத்துவ விவாதங்கள், பொதுவான போட்டிகள், விழாக்கள், விளையாட்டுக்கள் என்பவற்றில் ஆண்களோடு சரிசமமாகக் கலந்துகொள்ளும் உரிமைகளும் பெண்களுக்கு இருந்தன. அபாலா, கோசா, உலோபாமுத்திரா, மமதா, யாமி, வி~;வவாரா போன்ற வேதகால மகளிர் கல்வி கேள்;வி அறிவுகளிற் சிறந்த இருடிகளாக விளங்கினர் என இருக்குவேதம் கூறுகிறது. மேலும் போர்ப்பயிற்சி பெற்ற பெண்களும் இருந்துள்ளனர். முட்கலாணி என்ற பெண் போர் முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விழாக்களிலும் போட்டிகளிலும் ஆண்களும் பெண்களும் உற்சாகமாகப் பங்குபற்றியதாக இருக்குவேதம் கூறுகின்றது.11

வேதகாலத்தில் பெண்களுள் தமது திருமணகாலம்வரை கல்வி பயின்று திருமணத்தின் பின்னர் தமது கல்வியை முடித்துக் கொண்டவர்களை “ஸத்யோத்வாகாக்கள்” என்று குறிப்பிட்டனர்.12 மேலும் திருமணம்  செய்து கொள்ளாமல் உயர்வாழ்க்கைக்கென்று தங்களை அர்ப்பணித்துக் கல்வி கேள்விகளில் ஈடுபட்டவர்கள் “பிரம்மவாதினிகள்” என்று அழைக்கப்பட்டனர். வேதகாலத்தில் பிரம்மவாதினியரே லட்சியப் பெண்களாகத் திகழ்கின்றனர். மரணமிலாப்பெருநிலையை இந்தச் செல்வத்தால் அளிக்க முடியாதென்றால் அது எனக்கு எதற்கு? மரணமிலாப் பெருநிலையை அளிக்கக்கூடிய செல்வத்தை எனக்குத் தாருங்கள் என்று கணவரிடம் கூறுகின்ற மைத்திரேயியைப் போன்ற ஆன்மீகசாதகியரும் ரிசிகள் வீற்றிருந்த அரசசபையில் பலரும் தயங்கி நின்ற வேளையில் யாஜ்ஞவல்கியரிடம் துணிந்து கேள்விகள் கேட்கின்ற கார்கியைப் போன்ற பிரம்மவாதினியருமே அன்றைய லட்சியப்பெண்களாக விளங்குவதைக் காணலாம்.13 

பொதுவாக ஸத்தியோத்வாகாக்களின் கல்வி பதினைந்து அல்லது பதினாறு வயது வரை தொடரும். அதன் பின்னர் திருமணம் நடைபெறும். வாழ்கைக்காலத்தில்; தினந்தோறும் நிகழும் பிராத்தனைகளின் போதும் உச்சாடனம் செய்வதற்குரிய வேதப்பாடல்கள், மந்திரங்கள்  என்பவற்றையும், யாகம், சடங்கு, கிரியைகள் என்பவற்றின் போது கணவன்மார்களுடன் சேர்ந்து பங்குகொள்வதற்கு வேண்டிய கல்விப்பயிற்சிகளையும் பெண்கள் இக்காலத்தில் பெறுவர். வேதம், தத்துவம் போன்ற துறைகளில்  உச்சநிலைக் கல்வியைப் பெறும் பொருட்டு  உயர்கல்வியைத் தொடர்ந்த பெண்களும் இருந்தனர். அவர்களே பிரம்மவாதினிகள் எனப்பட்டனர்.

“பிரம்மவாதினி” என்ற சொல் “பிரம்மத்தைப் பற்றி விவாதிப்பவள்” என்று பொருள்படுகிறது. பிரம்மநிலையில் ஒன்றிய பெண்மணி ஒருவர் வானத்தை நானே ஈன்றேன், வானுக்கு மேலும் கீழும் என் ஆதிக்கமே உள்ளது. என் உடல் பிரபஞ்சத்தையே வியாபித்து நிற்கிறது, காற்றாய் வீசி உலகைப்படைத்தவள் நானே, எனது மகிமையால் விண்ணையும் மண்ணையும் கடந்து நிற்கிறேன்.14 என்று கூறப்படுவதை வேதத்தில் காணமுடிகின்றது. இத்தகைய நிலையை அடைவதற்கான துடிப்பை வேதகால மகளிரிடம் அவதானிக்கமுடியும். மேலும் பெண்புலமையாளர்கள் கடினமான பாடங்களிலும் நிபுணத்துவக் கல்வி பெறுவதில் ஆர்வமுடையோராக இருந்தனர். இதனை அறியும் போது கல்வி பெற்ற பெண்களின் தொகை அதிகமாக இருந்திருக்கலாம்  என்று எண்ணத்தோன்றுகின்றது.15 வேதக்கல்வியோடு பெண்கள் இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளையும் கற்றனர். சாமவேதப்பாடல்களை வேள்வியின் போது இசையுடன் பாடும்பணி அக்காலத்தில் பெண்களாலேயே நிகழ்த்தப்பட்டது என்பதையும் அறியமுடிகின்றது.16

புராதன இந்தியாவில் கல்வி பெறப்படும் போது நான்கு வேதங்களையும் ஏனைய இலக்கியங்களையும் கற்பது வழமையாக இருந்தது. பெண்கள் சமயநூலறிவினை ஆண்களுக்கு நிகராகப் பெற்றிருந்தமை அறியப்படுகிறது. இதற்குச்சான்றாக இடத்திற்கிடம் நகர்ந்து வேதக்கருத்துக்களைப் போதித்த பெண் இருடிகள் பலரின் பெயர்கள் இடம் பெறுகின்றன.17 அவர்கள் பாடல்களைக் கற்றுப் பரப்பியது மட்டுமன்றி யாகங்களைச் செய்து சிறந்த புலவர்களாகவும் திகழ்ந்தனர். 

அவர்களுள் கோ~h என்ற பெண்மணி அநேக இருக்கு வேதப்பாடல்களைக் கற்று தேறியவளாவாள். இவள் போல உலோபாமுத்ரா, மம்ரா, உபாலா, சூர்யா, இந்திராணி, சசி, சர்ப்பராஜ்னி, விசவவாரா ஆகியோரையும் குறிப்பிடலாம். இவர்களுள் விசவவாரா என்பவர் அக்கினியைக் குறித்துப் பாடல்களைப் பாடியதுடன் “றிற்விகா” எனப்படும் ஒரு மதகுரு ஸ்தானத்தையும் வகித்தார். இவர் யாகத்தினை அல்லது சடங்கு ஒன்றினை நிகழ்த்துபவராக விளங்கினார்.18  பெண் இருடிகள் பற்றிக் காணப்படும் பாடல்கள் மூலம் பெண்கள் மத்தியில் நிலவிய கலாசாரம் பற்றி அறியமுடிகின்றது.19

1.3 குடும்ப நிறுவனத்தில் பெண்

i.திருமணத்தெரிவு  

மங்களகரமான புன்னகை தவளும் இளநங்கையர் பற்றிய குறிப்புக்கள் வேதப் பாடல்களில் வருகின்றன. “திருமணம்செய்த தம்பதிகள் பொன் ஆபரணங்களினாலே தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆண், பெண் பிள்ளைகளைப் பெற்று நூறாண்டு வாழ்வார்களாக”20 என இருக்குவேதத்தில் குறிப்பு வருகின்றது. இருக்குவேதத்தின் பல்வேறு பாடல்களில் காணப்படுகின்ற ‘சமண’ பற்றிய குறிப்புக்களின் மூலம் ஒரு சமூகத்தில் பெண் பிள்ளையின் இடம், அவள் பெற்ற சுதந்திரம் ஆகியன பற்றி அறியமுடிகின்றது. ‘சமண’ என்பது ஒரு சடங்காகக் கூறப்படுகின்றது. இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.21 இளம்பெண்கள் வாழ்க்கைத்துணைகளைத் தேர்வதற்காக வருகின்றனர். இது கிரேக்க விழாக்களை ஞாபகமூட்டுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இக்காலத்தில் பருவமடைந்த பின்னரே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்  எனலாம். விவாகமாகாத பெண்கள் பருவமடைந்தோராய் தாய் தந்தையருடன் வசித்து வந்ததாக அறியமுடிகின்றது.   காதலித்த ஆடவரை அடையவேண்டிப் பெண்களால்; அணியப்பட்ட அணிகலன்களைப் பற்றிய குறிப்பும் இடம்பெறுகின்றது. இருக்குவேதம் மணவிழாக் குறித்த செய்திகளை அறிவிக்கின்றது. மணமகனும் அவனைச் சார்ந்தவர்களும் மணமகள் இல்லம் சேருவர். அங்கு மணமகள் அழகுற அலங்கரிக்கப்பட்டுத் தோற்றமளிப்பாள். அவ்வேளை  கிரியைகள் பல இடம்பெறும். இந்நிகழ்வின் போது பெண்ணின் கையைப்பிடித்துக் கொண்டு மணமகன் அக்கினியை வலம் வருவான். கைப்பிடித்தல், வலம்வருதல் எனும் இரண்டும் மணவினையின் போது இடம்பெறும் நிகழ்வுகளாகும்.22

பிற்பட்ட வேதகாலத்தில் பெண்கள் பருமடைந்த பின்னரே மணம் செய்தனர். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பலதாரமணமும் வழக்கில் இருந்தது. எனினும் முதல் மனைவிக்கே சமுதாயவாழ்க்கையில் சிறப்பிடம் அளிக்கப்பட்டது.23 மணஒழுக்கம் பெரிதும் பேணப்பட்டது. இருக்குவேதத்தில் பின்பற்றப்பட்ட மணமுறையே இங்கும் பின்பற்றப்பட்டது.24 எனினும் அதில் ஒரேஒரு மாறுதலை மட்டும் எடுத்துக்காட்டுகிறது. பெண்ணின் கையைப்பற்றுவதற்கு முன்னர் மணமகன் அவளின் காலைக் கல்லிலே மிதிக்கச் செய்வான். இச்செயன்முறையானது கணவன் மனைவி உறவு கல்லைப் போன்று உறுதியாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுவதாக இருக்கின்றது என்ற கருத்து குறிப்பிடத்தக்கது.25

ii.கணவன் மனைவி உறவு

இருக்குவேதகாலத்தில் மனைவி கணவனுடன் சரிநிகர்சமனாக வாழ்ந்தாள். இது பற்றியே இருக்குவேதம் “வீட்டில் ஆட்சி புரிவதற்காக வரும் வீட்டுதலைவியே உமது வீட்டிற்குள் செல்வீராக” எனக்குறிப்பிடுகின்றது.26 மணமகன் சுமங்கலியான மணப்பெண்ணின் கையைப்படித்துக்கொண்டு “நல்ல அதிஸ்டத்திற்காக உனது கையினைப் பிடிக்கின்றேன், உன்னுடைய கணவனான என்னுடன் மூப்புப்பருவம்வரை இருப்பீராக, பக, அர்யமன், சவிதிர், புரந்தி ஆகிய தெய்வங்கள் உன்னை எனக்கு அளித்திருக்கிறார்கள்” எனக்கூறுவது குறிப்பிடத்தக்கது.

கணவனையும் மனைவியையும் குறிக்கும் “தம்பதி” என்னும் பதம் முதலிலே வீட்டுத்தலைவனைக் குறித்தது.27 எனவே இருவரையும் குறிப்பதற்கு ஒரேசொல் பயன்படுத்தப்பட்டதிலிருந்து சமூகத்திலே கணவன் மனைவி சமநிலை தெளிவாகத் தெரிகிறது. “இல்லாளே இல்லம்”28 “கணவனை நேசிக்கும் களங்கமற்ற மனைவி”29 “வீடு பூமியில் சுவர்க்கம்”30 முதலிய இருக்கு வேதக்குறிப்புக்கள் பெண்ணின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன. காதலி காதலனின் காதில் பேசுதல் வில்லின் நாண் ஒலிக்கு உவமிக்கப்படுகிறது. இது பற்றிய  கருத்தினை இருக்குவேதம் கூறுகிறது.31 

இதிலே வீரரின் வீரமும் காதலரின் காதலும் ஒருங்கே இணைத்துக் கூறப்படுகின்றன. ஓரிடத்திலே வீட்டில் யாவருக்கும் அணியாகவுள்ள மனைவி போலத் தெய்வத்தை விபரிக்கின்றனர்.32 பெண்ணை குறிக்கும் சுபகா, கல்யாணி முதலிய   சொற்களும் இருக்குவேதத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மனைவி கணவனுடன் வேள்வி செய்தாள். மனைவியின்றி இல்வாழ்வான் வேள்வி இயற்ற முடியாது என்ற நிலை இருக்குவேதகாலத்தில் நிலவியது.33

அதர்வவேதத்தில் திருமணப்பாடல்கள் சில உள்ளன. ஆண், பெண் இருபாலாரையும் ஒன்று சேர்க்கவும் பிரிக்கவும் ஓதப்படும் மந்திரங்களும் இவ்வேதத்தில் இடம் பெற்றுள்ளன. தன்கணவன் தன்னுடன் நூறாண்டு வாழவேண்டுமென மனைவி விரும்புகிறாள் என்பதை அதர்வவேதம் கூறுகிறது.34 பிறிதோரிடத்தில் மனைவியை  நோக்கிக் கணவன் “நான் சாமன்: நீ இருக்கு: நான் வானம்: நீ பூமி”35 எனக்கூறுகிறான். மேலும் தம்பதிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டார்கள் என்பதற்கு அதர்வவேதத்தில் வருகின்ற “நமது இருவர் கண்களும் தேன்தோற்றமுடனாகுக : நமதுமுகம் அஞ்சனமாகுக : உனது இதயத்தினுள்ளே என்னைவை : நம்முடைய மனம் ஒன்றாகுக”36 என்ற குறிப்புச் சான்றாகின்றது. 

இத்தகைய குறிப்புக்களின் மூலம் கணவன் மனைவியின் பரஸ்பர அன்பும் பற்றும் தெளிவாகின்றது. கணவன் மனைவிக்கிடையே நிலவவேண்டிய மன ஒருமைப்பாடு பற்றியும் அதர்வவேதம் குறிப்பிடுகிறது. “நாமிருவரும் ஓருள்ளம் கொண்டவராகிப் பிள்ளைகள் பெற்றோராவோம்” என வருகின்றது. மனைவி கணவனிடம் கூறும் அறிவுரை பற்றியும் இவ்வேதம் குறிப்பிடுகிறது. “ நீ பூரணமாய் எனக்கேயாக : எனது மலர்ந்த ஆடையால் உன்னைக் கட்டுகிறேன் : நீவேறு பெண்களின் பேச்சைப் பேசாதே” 37என்று கூறுகிறது. மேலும் புதிய தம்பதிகளை வாழவைக்கவல்ல மந்திரங்களும் இவ்வேதத்தில் இடம்பெற்றுள்ளன.38 அதர்வவேதம் கூறும் பின்வரும் கருத்து குறிப்பிடத்தக்கது.

“தம்பதியர் புதல்வர்களின் தீய நடவடிக்கைகளுக்குப் 

பலியாகாது இருப்பார்களாக”39 இதிலிருந்து கணவனும் மனைவியும் சமூகத்தின் ஒரு அலகாக நிர்ணயிக்கப்பட்டமைக்குச் சான்று கிடைக்கின்றது. 

குடும்பத்தில் மனைவிக்கு உயர்ஸ்தானம் வழங்கப்பட்டது. கணவனால் மேற்கொள்ளப்படும் யாகத்தில் அவள் பங்கேற்றாள். அவனுக்கு அவள் உறுதுணையாக விளங்கினாள். அதர்வவேதத்தில் வருகின்ற பின்வரும் குறிப்பு அக்கால சமூகத்தில் பெண்களது நிலையைக் காட்டுவதாக உள்ளது. “மாமன்மார்களிடம் நீ உயர்வானவளாக  விளங்குவாயாக: மாமியாரிடம் நீ உயர்வானவளாக விளங்குவாயாக: உனது மைத்துனர் மைத்துனிகளிடம் உயர்வான ஸ்தானத்தைப் பெறுவாயாக”40

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே  உள்ள சட்டபூர்வ அந்தஸ்துப் பற்றிய தகவல் குறைவாகவே காணப்படுகிறது. திருமணப்பாடல்கள் மூலம் மனைவியை வழிப்படுத்துபவனாகக் கணவன் விளங்குகின்றமை தெளிவாகின்றது. அத்துடன் மனைவியின் சீதனம் மற்றும் வருமானங்கள் அனைத்தும் அவனையே சார்ந்தன. மனைவி நற்குணம் வாய்ந்தவளாகவும் கணவனிடம் பாசம் மிகுந்தவளாகவும் விளங்கவேண்டியவளாய் இருந்தாள்.

இவ்வாறு பெண்கள் நிலை பற்றிச் சில உயர்வான கருத்துக்கள்  கூறப்பட்ட போதிலும் பெண்களது அந்தஸ்துப் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தமைக்கான சான்றுகளும் வேதத்தில் காணப்படுகின்றன. அதர்வவேதப்பாடல் ஒன்றில் மனைவி கடவுளால் தனக்குச்  சேவை செய்வதற்கே படைக்கப்பட்டவள் என்று கூறப்படுகின்றது.41 இதன் மூலமாக அக்கணவன் அவளைத் தன்னில் தங்கியிருப்பவளாகக் கூறுகின்றான். எனினும் கணவன் இறந்த பின் மனைவி இறந்துவிடுதல் பொருட்டு உடன்கட்டை ஏற்றிவிடும் பழக்கம் இருக்கவில்லை. விதவைகள் மறுமணம் செய்து கொண்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.42

2. பிராமண காலத்தில் பெண்களின் நிலை(கி.மு. 1000-700)

பிராமணகாலத்துப் பெண்களின்நிலை பற்றி அறிய உதவும் பிராமண மூலங்களுள் ஐதரேயபிராமணம், சதபத பிராமணம், தைத்திரிய சம்ஹிதை, மைத்திராயணி சம்ஹிதை, கௌ~Pதகி பிராமணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

2.1 பெண்பற்றிய எண்ணக்கரு

சடங்குகளின் வளர்ச்சி இக்காலகட்டத்தில் காணப்பட்டதால் மகாயாகங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்து நோக்கற்பாலது. சமயமும் சமூகவாழ்;க்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருந்ததால் ஒன்றை மற்றதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எனவே வாழ்க்கையில் சமூகக்கொண்டாட்டங்கள் அதிகளவில் நிறைந்திருந்தன. சமய மற்றும் சமூக நலன்களில் பெண்கள் பங்குபற்றும் அவசியம் உணரப்பட்டது.43 எனினும் யாகங்களில் அநேகமான சடங்குகளில் ஒரு புத்திரனின்  பிறப்புக்காக இறைவனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. புத்திரனின் பிறப்பு முக்கியத்துவம் பெற்றமையால் புத்திரிகள் குடும்பத்திற்குச் சுமையாகத் தோன்றினர். 

சடங்குகளில் புத்திரியின் பிறப்பைத் தவிர்க்கும் நோக்குடன் இறைவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. ஹரிச்சந்ரா என்ற மன்னனுக்கும் நாரதர் என்ற ரி~pக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் நாரதர் ஓர் ஆண் மகவின் நன்மை பற்றி விளக்கியதன் பின்னர் பின்வருமாறு கூறுகின்றார், என ஐதரேயபிராமணம் குறிப்பிடுகிறது. “ஒரு மனைவியானவள் கணவனுக்குத் தோழியாவாள். ஒரு புத்திரியானவள் தரித்திரமாகின்றாள். ஒருபுத்திரன் சுவர்;க்கத்திற்கு ஒளியாகின்றான்.”44 இக்காலப்பகுதியில் பெண்பிள்ளைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் காணப்பட்டன. சோமயாகத்தின்போது பெண்பிள்ளை கைவிடப்பட்டு ஆண் பிள்ளை எடுத்துச்செல்லப்பட்டமை குறித்த சடங்குகள் காணப்பட்டன. ஒரு குடும்பத்தில் திருமணம் செய்த பெண்ணைவிட ஒரு கன்னிப்பெண்பிள்ளையின் அந்தஸ்து தாழ்வாகவே விளங்கியதுடன் அவளின் அந்தஸ்து அவளது சகோதரனின் மனைவியை விடத் தாழ்வாகவே இருந்தது என்பதை ஐதரேயபிராமணம் கூறுகின்றது.45

2.2 குடும்ப நிறுவனத்தில் பெண்

i.திருமணம்

பிராமணகாலப்பகுதியில் திருமணபந்தம் வலிமையானதாகக் காணப்பட்டது. ஆனால் பலதாரமணம் தாராளமாக அனுமதிக்கப்பட்டது. கற்புப்பற்றிய கடப்பாடு பெண்களுக்குத் திணிக்கப்பட்டிருந்தது. பதியும் பத்தினியும் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற இலட்சிய வாழ்க்கை எப்போதும் பூரணமாக அமைந்ததா? என்பது சந்தேகத்திற்குரியது. ஆனால் பெண்களுக்கு நிரந்தரமான இடம் இல்லமாகவே இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் தைத்திரியசம்ஹிதையிலும்46 சதபதபிராமணத்திலும்47 உள்ளன. ஒரு பெண்ணானவள் பிள்ளையுடன் இருக்கும்போது தூய்மையற்றவள். அத்துடன் அவளோடு தொடர்புபட்ட எதுவும் தூய்மையற்றது என்ற கருத்து நிலவியது. மக்கள் கூட்டங்களில் பெண்கள் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டார்கள். இக்கருத்து ஐதரேயபிராமணத்திலும்48 மைத்திராயணி சம்ஹிதையிலும்49 குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் பலதாரமணம் பொதுவானதாகக் காணப்பட்டது.

ii.கணவன் மனைவி உறவு

யாகங்களின்போது கணவனுக்கு ஒரு முக்கிய துணையாக மனைவி விளங்கினாள். சடங்குகளில் பெரும்பாலான நேரத்தில் அவள் பங்கெடுத்துக் கொண்டாள். ஒரு புத்திரனின் பிறப்புக்காகச் சடங்குகள் நடைபெற்றபோது அவள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டாள். யாகங்களில் இது பொதுவாக அவதானிக்கப்பட்டபோதிலும் கூட ஒரு சடங்கில் மனைவி பங்குபற்ற வேண்டும் என்ற அவசியம் சந்தேகத்திற்கு இடமான கருத்தாகவே அமைகிறது என ஐதரேயபிராமணம் கூறுகின்றது.50

கணவன் ஆகாரம் உண்டதன் பின்னரே மனைவி உண்ண வேண்டும் என்ற நியதிக்கான குறிப்புச் சதபதபிராமணத்தில் காணப்படுகின்றது.51 காத்யாயன சிரௌத சூத்திரத்தில் ஆண், பெண்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை என்ற கருத்தைக் குறிப்பிட்ட போதும் இந்தப் பிரமாணம் பெண்கள் தமக்குச் சொந்தமானவர்களுமல்லர். அவர்களுக்கு எச் சொத்தும் உரிமையும் அல்ல எனக் கூறுகிறது.52 எனவே இருக்கு வேதகாலத்தில் இருந்த பெண்கள் உரிமைகள், உயர்வுகள் படிப்படியாக இழக்கப்படும் நிலையைப் பிராமணங்கள் காட்டுகின்றன. சமுதாயச் சிக்கல்கள் பெருகிப் பெண்கள் முன்னைய தமது உரிமைகளை இழக்கும் நிலையே மேற்குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அறியமுடிகின்றது.

3. உபநிடத காலத்தில் பெண்கள் நிலை

3.1 பெண் பற்றிய எண்ணக்கரு

இக்காலத்தில் பெண்கள் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு நிலையை அறியமுடிகின்றது. பெண்களது முக்கியத்துவம் பற்றிப் பிருகதாரண்யக உபநிடதம் குறிப்பிடுகின்றது. “ஆத்மன் தனிமையாய் இருந்து மகிழ்ச்சி அடைந்திலன். எனவே தன்னிலிருந்து பெண்ணைத் தோற்றுவித்தான். தனியாக இருந்த ஆத்மனிலிருந்து ஆண்டவனின் தோழமைக்காக பெண் தோற்றுவிக்கப்பட்டாள். எனவே பதிபாதி பத்தினீபாதியாயினர். இவ்விருவரின் சேர்க்கையால் உலகம் தோன்றிற்று”.53 என்று கூறுகின்றது. உபநிடதம் கூறுகின்ற இக்கருத்துப் பிற்கால இந்தியாவிலே சிவன் பாதி சக்தி பாதியாகக்  கூறப்படும் அர்த்தநாரீஸ்வரக் கோட்பாட்டிலே நிலவுவதைக்காணலாம். உபநிடதகாலத்தில் பெண்பிள்ளைகளது பிறப்பு விருப்பிற்குரிய ஒன்றாகவே நிலவியது. இவ்வகையில் நெய்யில் சமைக்கப்பட்ட சோற்றையும் “ரிலா” என்னும் ஒருவகை உணவையும் உண்டாலே ஒருவனுக்குக் கல்விஅறிவுள்ள பெண்பிள்ளை பிறப்பாள் என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது.54

3.2 பெண் பற்றிய சமூகமயமாக்கம்

கல்வி

உபநிடதகாலத்தில் பெண்களின் கல்வி அந்தஸ்து உயர்நிலையில் இருந்தது. அரசசபைகளில் புலன்கடந்தவிடயங்கள் தொடர்பான வினாக்கள் மீதான கலந்துரையாடல்கள் மற்றும் புலனுக்கெட்டா உலகின் உண்மை பற்றிய விடயங்களில் பெண்கள் உயரிய பங்கு வகித்தனர்.55 இது பற்றி உபநிடதங்களில் சான்றுகள் காணப்படுகின்றன. இக்காலப்பகுதியில் இருவகைப்பட்ட பெண்களைக் காணலாம். திருமணம் வரை கல்வி கேள்விகளில் ஈடுபட்டு விளங்கியவர்கள் “ஸத்யோத்வாஹாக்கள்” எனவும் திருமணம் செய்து கொள்ளாது உயர் வாழ்கைக்கென்று தம்மை அர்ப்பணித்துக் கல்வி கேள்விகளில் ஈடுபட்டோர் “பிரம்மவாதினிகள்” எனப்பட்டனர். இவர்கள் இலட்சியப்பெண்களாகத் திகழ்கின்றனர்.56

பிரஜாபதி பெண்ணைப் படைத்து உபசரித்தார். எனவே யாவரும் அவளை உபசரிக்க வேண்டும்  எனப் பிருகஹதாரண்யக உபநிடதம் கூறுகின்றது.57 மேலும் இக்காலத்துச் சமூகத்தில் படித்தபெண் விரும்பப்பட்டாள்.58 யாக்ஞவல்லியருடைய மனைவியான மைத்திரேயி என்பவரும், வாசக்னு என்ற தபசியின் மகளாகிய கார்கியும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றனர். அவர்கள் உண்மைப்பொருளை அறிவதற்கு நாட்டம் கொண்டிருந்தமை பற்றிக் கூறப்படுகிறது. யாக்ஞவல்லியர் அவருடைய காலத்தில் சிறந்த கலைஞானம் மிக்கவராக விளங்கியதுடன் உலக வாழ்க்கையைப் புறக்கணித்துத் தனது இரு மனைவியராகிய மைத்ரேயி, காத்யாயனி ஆகியோரிடையில் தனது செல்வங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். 

இதை அறிந்து அவரின் மனைவி மைத்ரேயி மை நிறைந்த வளங்களை உடைய இப்பூமியானது முழுமையாக எனக்குச் சொந்தமானால் அதன் மூலம் நான் இறவாமையை அடையமுடியுமா? என வினவினார். அதற்கு யாக்ஞவல்லியர் இல்லை, செல்வந்தர்களின் வாழ்க்கை போன்றே உனது வாழ்க்கையும் அமையும் என்று பதிலளிக்கவே, மீண்டும் மைத்ரேயி இறவாமையை அளிக்காத இச்செல்வத்தைக் கொண்டு  நான் எதைச் சாதிக்க முடியும்? அதுபற்றி எனக்குக் கூறுங்கள் என்றாள். யாக்ஞவல்லியரும் இறவாமைக்கு மார்க்கமான பிரம்மம் பற்றிய அறிவை மைத்திரேயிக்குக் கூறினார்.59 மேலும் மைத்ரேயி ஆசிரியராயிருந்து ஒரு வேதப்பாடசாலையை  நடத்தினார் எனவும் கூறப்படுகின்றது.

இக்காலத்தில் சிறந்து விளங்கிய மற்றொரு பெண் கார்க்கி. அவர் சிறந்த ஒரு கல்விமானாக விளங்கினார். யாக்ஞவல்லியரிடம் இறப்பின் மூலம் பற்றி நீண்ட விளக்கத்தை வினவினார்.60 கார்கி யாக்ஞவல்லியருடன் வாதம் புரிந்து “தர்க்க அரசி” எனும் பெயரைப் பெற்றார். தேவபூபதி என்பவர் கபிலரைப் பெற்ற தாயாராவர். அவரிடம் கபிலர் கல்வி பயின்று அப்பயிற்சியின் பயனாகச் சாங்கிய நூல் இயற்றி ஒரு சமயத்தைக் காணும் திறனும் பெற்றார்.61 எனவே இத்தகைய பெருமைக்குக் காரணமாய் இருந்த தேவபூபதியின் கல்விச்சிறப்பு இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைவன் வேள்வி செய்யும் போது தலைவியும் உடனிருப்பாள். தலைவன் தவறிழைத்தால் தலைவி ஒழுங்கு செய்வது வழக்கம். எனவே அக்காலத்துக் கணவன் மனைவி உறவு நிலையில் சிறந்து விளங்கினர். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வியிலும் வேதப்பயிற்சிலும் சிறந்து விளங்கினர் என்பதும் தெளிவாகிறது. வேதகாலங்கடந்த பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் பெண்கள் கல்வித்துறையிலும் பிறதுறையிலும் உரிமை பெற்றிருந்தனர். சங்கரருக்கும் மிசிரருக்கும் நிகழ்ந்த விவாதத்தில் நடுநிலைத்தலைமை வகிக்கும் பேறுபெற்ற பாரதியும் மணம் செய்வதற்குத் தம்மையொத்த புலமைஉடைய நாயகன் வாய்க்கப்பெறாது கன்னியாகவே காலங்கழித்த சுலபையும். புலவர்களுடன் உரையாடிய ராஜேஸ்வரியும் பிறரும் அக்காலப் பண்டிதைமாரில் குறிப்பிடத்தக்கவர்கள்.62

உபநிடதகாலத்தில் தந்தைவழி உரிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். எனவே ஆண்மகனே கல்வி கேள்விகளில் சிறந்திருக்க வேண்டும். எனினும் இவ்வாறான ஒரு சமூகத்தில் கல்வியில் புலமைமிக்;க பெண்களும் இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது. இவ்வகையில் மைத்ரேயியைப் போன்று ஆன்மீக சாதகியரும் ரி~pகள் வீற்;றிருந்த அரசசபையில் பலரும் தயங்கி நின்ற வேளையில் யாக்ஞவல்லியரிடம் துணிந்து கேள்விகள் கேட்ட கார்க்கியைப் போன்ற பிரம்மவாதினியருமே அன்றைய லட்சியப் பெண்களாக விளங்குவதை உபநிடதகாலச் சமூகம் காட்டிநிற்கிறது.

4. இதிகாச காலத்தில் பெண்கள் நிலை,  காலம் :  கி.மு 500 – கி.பி 500 , மூலங்கள் : இராமாயணம், மகாபாரதம்

4.1 பெண் பற்றிய எண்ணக்கரு

வான்மீகியால் விபரிக்கப்படுகின்ற உயர்ந்த பெண்களை இரு பிரதான வகுப்பினுள் அடைக்கலாம். உலக ஆசைகள் அனைத்தையும் துறந்து தவவாழ்க்கை மேற்கொள்வதற்காக வனஞ்சென்ற அனசூயா, ஷ~பரி, சுவயம்பிரபா  ஆகியோர் ஒருவகையினர். அவர்கள் தனித்து வாழ்ந்ததுடன் தமது சூழலில் வாழ்ந்தவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினர். இவ்வகையில் அவர்களின் முயற்சிகள், அவர்கள் ஈடுபட்டுள்ளபணிகள் என்பன எமக்கு அதிக பாடங்களைப் புகட்டுகின்றன. சமுதாயத்தில் வாழ்ந்து குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டுத் தமது கடமைகளைப் புரிந்து உன்னதநிலை அடைந்த பெண்கள் அடுத்த வகையினர். இவர்களுள் இலங்கையில் வாழ்ந்த மண்டோதரி, சரமா, திரிசடை போன்றோரும் கிஸ்கிந்தையில் வாழ்ந்த தாராவும், தசரதனின் மூன்று தேவியரும், எங்கு வாழ்ந்தாலும் தனது மேன்மையை வெளிப்படுத்திய சீதையும் குறிப்பிடத்தக்கவர்கள்.63

உடலும் உள்ளமும் சபலமுள்ளவர்கள் பெண்கள் எனவும் எளிதில் எதையும் நம்பும் தன்மை உள்ளவர்கள் பெண்கள் எனவும்  இராமாயணம் கூறுகின்றது. அத்துடன் அவர்கள் மின்னலைப் போன்ற நிலையற்ற தன்மை உடையவர் எனவும் வர்ணிக்கப்படுகின்றனர். எனினும் ஒரு பெண்ணுக்குச் சமூகத்தில் அறவே கௌரவம்  இருக்கவில்லை எனக்கூறமுடியாதுள்ளது. கைகேயி யுத்தகளத்தில் தசரதனுக்கு உதவியமையும் இலக்குமணனதும் உள்நாட்டுப்போர் பற்றிய பிரேரணையைக் கோசலை அனுமதித்தமையும் இதற்குச் சான்றாகும். 

பெண்கள் அரசசபைக்கு அழைக்கப்பட்டார்கள். ஒரு பெண் பூமியை ஆளுபவளாகவும் இருக்க முடியும் என்பது வசிட்டர் கூற்று. இக்கூற்றுப் பண்டைய இந்தியாவில் அரசிகள் ஆட்சி நிகழ்ந்தமைக்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. பெண்கள் இருக்கும்; இடங்களில் ஆண்கள் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். “ஸ்திரீஹத்தி” மாபெரும்பாதகம் எனக்கருதப்பட்டது.  இன்னும் சில சந்தர்ப்பங்களில் பெண்ணைக் கொல்லுதலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இராமாயணம் கூறும் தாடகைவதம் இதற்கோர் சான்றாகும்.64

மகாபாரதம் இந்துப்பெண்களின் மறைக்கப்பட முடியாத உயர் இலட்சியங்கள் பற்றி எமக்கு அறியத்தருகின்றது. காந்தாரி, குந்தி, திரௌபதி, தமயந்தி ஆகியோரின்  வாழ்க்கையில் மிகவும் பூரணமான முறையில் இந்த இலட்சியங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. இவ்விலட்சியங்கள் மிகவும் முக்கியமானதும் தர்மத்தின் மீதான நம்பிக்கை அல்லது பிரபஞ்சத்தின் ஒழுக்க நியதியும் ஆகும். பெண்களுக்குத் தர்மமானது வெறுமனே ஒரு சடங்காகவோ அல்லது பாரம்பரிய நிகழ்வாகவோ அமையவில்லை.65 முழுப்பிரஞ்சத்தையும் இணைக்கின்ற சக்தி அல்லது தத்துவமாகத் தர்மம் மகாபாரதத்தில் விளக்கப்படுகின்றது. 

மகாபாரத்தில் இடம் பெறுகின்ற பெண் பாத்திரங்கள் அவர்களுடைய நடத்தைகளின் மூலம் உயர் ஒழுக்க மட்டத்தை  அடைந்தமையை நிரூபிக்கின்றது. காந்தாரி தனது மைந்தனை நோக்கி “ எங்கே தர்மம் நிலைக்கிறதோ அங்கே வெற்றி கிட்டும்” என்று கூறினாள். மேலும் அவள் தனது மைந்தன் துரியோதனனுக்குப் பேராசையை விடுத்துப்போரைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறினாள்.66 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாபாரத்தில்  ஆண்களின் நலன்கள் யாவும் பெண்களிலே தங்கியிருப்பதாயும் அத்துடன் அனைத்து மகிழ்வுகளும் அனுபவிப்புக்களும் முழுவதும் பெண்களிலேயே தங்கியிருப்பதாவும் கூறப்படுகின்றது. மேலும் செல்வத்தைச் சேகரிக்க நாட்டம் கொள்பவர்கள் பெண்களைக் கௌரவிக்க வேண்டும். ஒரு பெண்ணை வழிபடுத்தல் இலக்குமியை வழிபடுதலை நிகர்க்கும். பெண்கள் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அவர்கள் மதிப்பிற்குரியவர்கள். நலன்கள் ஈட்டித்தருபவர்கள். மேன்மையான குணங்கள் யாவும் மிக்கவர்கள்.67 மகாபாரத கதாபாத்திரமான குந்தி தமது புதல்வர்களுக்கு ஊக்கமூட்டிச் சோர்வு குலைத்து வீரம் எழும்பியதும், காந்தாரி அரசஅவை ஏறி அரசியல் அறிவுறுத்தியதும் , திரௌபதியின் அருஞ்செயல்களும் அக்காலத்தைய பெண்களி;ன் சிறப்புக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.68

கற்பு

இராமாயணத்தில் கூறப்படும் கற்பொழுக்கம் விவாகத்தின் முக்கியத்துவத்தை வற்புறுத்துகிறது.  “விவாகமானது ஒரு பெண்ணினது ஆன்மசௌந்தரியத்தை வெளிப்படுத்தும் ஒரு பிறவி” என்று கூறப்படுகிறது. மேலும் பெற்றோர் தமது பிள்ளைகளின் விவாகத்தைப் பற்றி அவர்கள் தகுந்த வயதடையும் போது சிந்தித்தார்கள் என இராமாயணம் கூறப்படுகின்றது.

4.2 பெண்பற்றிய சமூகமயமாக்கம்

கல்வி

இராமாயணத்தில் பெண்பிள்ளைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்பட்டதா என்பது குறித்துத் தெளிவாக அறியமுடியவில்லை. எனினும் இராமாயண கதாபாத்திரங்கள் முழுவதாக அறிவில்லாதவர்கள் எனக் கூறமுடியாது.69 கைகேயி, தாரை, சீதை முதலியோரின் உரையாடல்கள், வாதங்கள் என்பவற்றிலிருந்து அவர்கள் பல விடயங்களைப் பற்றிய அறிவுடையவர்களாக விளங்கினர் என்பது தெரியவருகின்றது.

அவர்கள் பாடல் ஆடலில் பயிற்சி பெற்றிருந்தனர். கதை சொல்லும்  வழக்கமும் அவர்களது அறிவை அகலச் செய்தது. கைகேயி போன்றவர்கள் போர்களத்தில் முதலுதவி அளிக்கக் கற்றிருத்தனர். இராமாயணத்தில் கோசலை “மந்திரவித்” எனக் குறிப்பிடப்படுகின்றாள். இது வேதக்கல்வியில் புலமைமிக்க ஒருவர் எனப்பொருள்படும். தாராவைக் குறிப்பதற்கும் அதே பதம் பாவிக்கப்பட்டுள்ளது.70

பெண்கள் சிறந்த கல்விமான்களாக விளங்கியுள்ளார்கள். என்பதற்கான சான்றுகள் மகாபாரதத்திலும் காணப்படுகின்றன. திரௌபதி “ பண்டிதை” எனக் குறிப்பிடப்படுகின்றாள். மேலும் உதி~;டிரனுடனான உரையாடலில் அவள் சிறந்த கல்விமானாகச் சித்தரிக்கப்படுகின்றாள். சத்திரியப்பெண்கள் சங்கீதம், நடனம், போன்ற நுண்கலைகளைக் கற்றிருந்தனர் என விராடபர்வம் குறிப்பிடுகிறது.71

4.3 குடும்ப நிறுவனத்தில் பெண்

i.திருமணம்

இராமாணயத்தில் திருமணத்தின் போது சீதனமுறை நிலவியமை பற்றித் தெரியவருகின்றது. இம்முறை செல்வந்த அரச குடும்பங்களில் நிலவியதாக ஜய்சி, சூர்தாஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர். மத்திய காலப்பகுதியில் குறிப்பாக ராஜ்புட் குடும்பங்களில் இம்முறை காணப்பட்டுள்ளது. இவ்வகையில் பெண்சிசுக் கெலைக்குப் பிரதான காரணமாக அமைந்தது. சீதனமுறையே ஆகும். என “அல்டேகர்” குறிப்பிட்டுள்ளார்.72 சீதையின் திருமண நிகழ்வில் இருந்து இராமாயண காலப்பகுதியில் உயர் குடும்பத்துப் பெண்களது சிறப்பினை மதிப்பிட முடிகின்றது. சீதா, இராமன் திருமண நிகழ்வில் இருந்து அக்காலத்தில் பெண்மை மதிக்கப்பட்டது. என்பதும் இந்துப்பண்பாட்டு மரபிலே பெண்கள் உயரிய ஓரிடத்தினை வகிப்பதற்;கு இத்தகைய சிந்தனைகளே வழிவகுத்தன என்பதும் பெறப்படுபடுகிறது.

இராமாயணகாலத்தில் இராமனையும் சீதையும் முறையே ஆதர்;ஸபுருஸனும் ஸ்திரியுமாக வருணிப்பதால் பண்டைய இந்தியர்கள் உத்தமமான ஆடவரையும் மகளிரையும் பற்றி எத்தகைய கருத்துடையவர்களாய் இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது. சீதையை “வனிதையர் திலகம்” என இராமாயணம் போற்றுகின்றது. பெண்கள் உறுப்புக்கள் சாமுத்திரிக்கா இலட்ஸணங்கள் உடையதாய் இருக்க வேண்டும். என்பது இராமாயணத்தின் கருத்து. இவ்வகையில் “சுந்தர ரூபமும் யௌவனமும் நிறைந்தவளே பெண்” என அந்நூல் கூறுகிறது.

இராமாயணத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது. தசரதனது அந்தப்புரத்தில் கோசலை, கைகேயி, சுமித்திரை போன்றோர் உள்ளிட்டு முந்நூற்றைம்பது மாதர்கள் இருந்தனர். பரதன் அனுமானுக்குப் பல பெண்களைக்கொடுத்தான். இராவணன் பலமனைவியரைக் கொண்டிருந்தான். மேலும் கைம்பெண்கள் மறுமணம் செய்தலை இராமாயணம் ஆதரிக்கின்றது. தாரை சுக்கிரீவனை மணந்தமை இதற்குச் சான்றாகின்றது.73 விதவைகள் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. உடன்கட்டை ஏறுதலைப்பற்றி இடையிடையே காணப்படும் குறிப்புக்கள் பிற்கால இடைச்செருகல்களாக இருக்கலாம். எனினும் இராமாயணத்தின் பிற்பகுதிகளில் உடன்கட்டை ஏறுதலைப்பற்றித் தெரிந்திருக்கலாம். உத்தரகாண்டத்திலே விதவை ஒருத்தி உடன்கட்டை ஏறும் சம்பவம் இடம்பெறுகிறது.74

மகாபாரததத்தில் திரௌபதிக்கு இடம்பெற்ற சுயம்பர நிகழ்வானது அக்கால சமூகத்தில் பெண்களது வீரப்பண்பினையும் மேன்மையையும் தெளிவாக்குகிறது. இங்கு சுயம்பரம் என்றால் என்ன என்று நோக்குவதும் இன்றியமையாததாகும்.         “ சுயம்பரம்”; என்பது தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக் கொள்ளுகை ஆகும்.”75 இவ்வகையிலேயே திரௌபதியின் சுயம்பர நிகழ்வு இடம்பெற்றதை நாம் அறியமுடிகின்றது. மகாபாரதகாலத்தில் ஒரு பெண்ணைப் பல ஆண்கள்  மணம் புரியும் நிலை காணப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.76

ii.கணவன் மனைவி உறவு

இராமாணயத்தில் மனவியுடன் கணவன் கூட இருந்தாலன்றி யாகங்கள் மேற்கொள்ளப்படவில்லை. காத்யாயனர் சமயச்சடங்குகளில் ஆணுடன் பெண் சேர்;ந்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் போது ஒரு கணவன் தனது மனைவி சமூகமளித்திருக்கும் நிலை ஒன்றை உருவாக்கி சடங்கை நிறைவேற்றுவான். சீதையில்லாதபோது இராமன் இவ்வாறே செய்தான் என றொல்கன் குறிப்பிடுகின்றார்.77

பெண்கள் குடும்பவாழ்க்கையின் முக்கியஸ்தர்களாக மட்டுமன்றி முழுச் சமூகநிலையிலும் அவர்களே மையப்படுத்தப்படுகின்றனர். நாட்டின் எதிர்காலமே அவர்களில் தங்கியுள்ளது. பிள்ளைகளைப் பெறுதல், பாரமரித்தல், சமூகத் தேவைகளுக்கு அவசியமான அனைத்துப்பணிகளையும் நிறைவேற்றல். இவையாவும் பெண்களுக்குரிய பணிகளே. எனவே ஆடவன் அவர்களுக்குச் சேவைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்களை மகாபாரதம் கூறுகின்றது.

மகாபாரதத்தில்;  பெண்கள் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் சிறந்த நண்பர்களாயும், சமயச்சடங்குகளின் போது தந்தையராயும், நோய் துன்பவேளைகளில் தாயாகவும் விளங்குபவர் எனக்குறிப்பிடப்படுகிறது. குடும்பவாழ்க்கையில் பெண் தலைமைத்துவம் உடையவளாக விளங்கினாள். குடும்பத்தில் பணி;களை நிறைவேற்றுவதில் அவளின் தீர்மானமே இறுதியானதாய் விளங்கியிருந்தது. அவள் திருமணம் புரிந்தவுடன் கணவனின் இல்லத்திற்குத் தலைவியாய்ச் செல்லுமாறு பணிக்கப்படுகின்றாள். இல்லத்தின் ராணியாக அவள் மீண்டும் மீண்டும் அழைக்கப்படுகின்றாள். குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் அவள் ஆள்கிறாள். இத்தகைய சான்றுகளிலிருந்து புராதனகால இந்தியக்குடும்பங்களில் பெண்கள் பெருமைக்குரிய நிலையை வகித்தமை தெளிவாகின்றது. மேலும் குடும்பத்தின் நல்லொழுங்கைப் பேணுவதற்குரிய பொறுப்புக்களும் கடமைகளும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

பெண்கள் குடும்பத்தில் முக்கியத்துவம் உடையவராயும் மேன்மைமிக்கவராயும் விளங்கினர். என்பதைப் “பெண்கள் வணக்கத்திற்குரியவர்களும் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டியவர்களுமாவர். அவ்வாறு பெண்கள் நடத்தப்படும் போதெல்லாம் கடவுளும் வணங்கப்படுகின்றனர். பெண்களை உரிய முறையில் மதிப்பதன் மூலம் ஆடவன் தனது அனைத்து இலக்கையும் எய்துகிறான்.” எனப்பலவாறாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. தந்தை குடும்பத்தலைவன், வீட்டு நடப்புக்கள் அனைத்தும் மனைவியை மையமாகக் கொண்டவை எனும் குடும்ப ஏற்பாட்டை மகாபாரதம் கூறுகின்றது. வீட்டிற்கு உடையவள் மனைவி இருந்தாலே கணவனுக்கு வீட்டில் பாசமும் உரிமையும் உண்டு என்பது சாந்திபருவம் கூறும் கருத்தாகும்.78

மகாபாரதம் கூறுகின்ற பெண்களான காந்தாரி, குந்தி, திரௌபதி போன்றோரது வாழ்க்கை அக்கால சமூகத்தில் பெண்கள் நிலை பற்றி அறிய முக்கிய சான்றுகளாகும். இவ்வகையில் இந்தியப்பெண்களின் உயர்லட்சியங்களுக்குக் காந்தாரி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். துணிவு, நேர்மை, நீதி ,நியாயம் ஆகிய பண்புகளின் உருவமாக மகாபாரதம் முழுவதும் திரௌபதி; விபரிக்கப்படுகின்றாள். மேலும் திரௌபதியின் உயர் ஆத்மீக நிலையும், அனர்த்தங்களின் போது சோர்ந்து போகாத துணிவும், தியாக உணர்வும், அவற்றுக்கு மேலாக ஒழுக்கக்கடப்பாடும், தன்மானமும் புராதன இந்தியாவின் தன்மானத்திற்கு அடையாளமாக விளங்கின.

5. புராணங்களில் பெண்களின் நிலை

5.1 பெண்பற்றிய எண்ணக்கரு

புராணங்களில் ஆசிரியர்களும் அவற்றை விளக்குபவர்களும் சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும் பெண்கள் வகித்த பங்குபற்றி முழுமையாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் வருணாச்சிரமதர்மம் என்ற கோட்பாட்டின் மூலம் அறியப்படுகின்ற சமூக அறக்கட்டுப்பாடுகள் தொடர்பான வேதக்கருத்துக்களைப் பிரபல்யப்படுத்துவதிலேயே அவர்கள் பிரதான அக்கறை கொண்டிருந்தனர். அதன் காரணமாகப் பெண்களை மனைவி, தாய், ஆகிய ஸ்தானங்களிலேயே அவர்கள் நோக்கினார்களே அன்றி வேறெந்த நிலையிலும் நோக்கவில்லை. இதனாலேயே கன்னிப்பெண்களி;ன் வாழ்க்கை, மற்றும் கடமைகள் பற்றிப் புராணங்களில் மிகக் குறைந்தளவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களைப் போர்வீரர்களாகவோ, அரசியல் நிர்வாகிகளாகவோ, மதச்சீர்திருத்தவாதிகளாகவோ புராணங்கள்  அதிகளவில் நோக்கவில்லை. அவர்கள் தந்தையருக்கும், கணவருக்கும் மற்றும் பாதுகாவலர்களுக்கும் கீழ்ப்படிந்தவர்களகாவே காணப்பட்டனர்.79

புராணங்களில் பெண்கள் எந்தவெரு சந்தர்ப்பத்திலும் சமூக, சமய வாழ்க்கையில் பூரண  சுதந்திரத்தை அனுபவித்ததாகத் தெரியவில்லை. அத்துடன் அவர்கள் தமது கணவனுக்கு விசுவாசமாகப் பணிபுரிய வேண்டியவராகவும் இருக்கவேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. மார்க்கண்டேயபுராணம் பெண்களின் சிறப்புப்பற்றிக் குறிப்பிடுகையில்  “சமயம், செல்வம், அன்பு” ஆகியவற்றை முற்றாக அடைவதில் கணவனுக்கு உறுதுணையாக விளங்குபவள் மனைவி. கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் கட்டுப்பட்டு வாழும் போது மேற்கூறப்பட்ட அம்சங்கள் ஒன்றிணைகின்றன. 

ஆடவர் தெய்வங்களையும் பிதிர்களையும் தம்மில் தங்கியுள்ளோர், மற்றும் விருந்தினரை மனைவி இன்றி வழிபட முடியாது. ஒரு மனைவியின்றி ஆடவரால் சேகரிக்கப்படும் செல்வம் விரயமாக்கப்படும். மனைவி இன்றி ஒரு ஆடவனுக்கு அன்பு கிட்டாது. அதே போன்று ஒரு பெண்ணுக்குக் கணவனின்றிச் சமயமோ, அன்போ, பிள்ளைகளோ, செல்வமோ கிட்டாது.”80 என்று கூறுகின்றது. இக்கருத்தினை நோக்கினால் ஆண், பெண் இருவரதும் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகின்றது. எனவே தான் இறைவனும் சக்தியைப் பாதி உருவாக்கக் கொண்டு விளங்கும் அர்த்தநாதீஸ்வர தத்துவம் சிறப்படைந்தது எனக்கொள்ளலாம்.

5.2 குடும்ப நிறுவனத்தில் பெண்

சதி

இந்துப் பெண்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளுள் சதி எனும் உடன்கட்டை ஏறுதல் மிகவும் கொடுமையான ஒரு நிகழ்வாகும். எனவே தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன இந்து சீர்திருத்தவாதிகள் சதியை ஒழிப்பதில் மிகவும் அக்கறை கொண்டு செயற்பட்டனர். இவ்வாறு நவீன இந்து சீர்திருத்தவாதிகள் சிந்திப்பதற்க்கு முன்னோடியாகப் புராணகாலத்திலும் சதி பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தக்கன் புரிந்த யாகத்தில் சதியின் கணவராகிய சிவனும் அழைக்கப்படவில்லை. 

இந்நிலையில் சதி, தந்தையை நோக்கி யாகத்தில் சிவனுக்குரிய இடம் கொடுக்காமைக்கான காரணத்தை வினவுகிறாள். அப்போது தக்கன் சிவனை ஏளனம் செய்து இழித்துரைத்தபோது தந்தையைக் கண்டித்துத் தரையில் அமர்ந்து கண்களை மூடிச் சிவனை நினைத்துச்செய்த தியானத்தில் உருவான யோகத்தீயில் தனது உடலைச் சாம்பலாக்கிக் கொண்டாள். எனப் பாகவதபுராணம் கூறுகிறது.81 எனவே மனைவி சதியினால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட இம்முறையே காலப்போக்கில் சமூகத்தில் “சதி” எனப்படும் உடன்கட்டை ஏறும் நிகழ்வினைத் தோற்றுவித்திருக்கலாம் என்று கூறமுடிகின்றது.

6. தர்மசாஸ்திரங்களில் பெண்கள் நிலை 

6.1 பெண் பற்றிய எண்ணக்கரு 

வேதகாலத்தில் பெண்களுக்கிருந்த சம உரிமைகள், ஸ்மிருதிகள் எழுந்த காலத்தில் அருகத்தொடங்கின எனலாம். பெண்கள் வேதங்களைக் கற்கத் தடை இருந்தது. திருமணமும் குடும்பவாழ்க்கையும் கட்டாயமாக்கப்பட்டன. பெண்களின் கடமை கொண்ட கணவனுக்குக் கீழ்ப்படிந்து பணிவிடை செய்தலாகும். மனுவைப் பொறுத்தவரையில் ஒரு பெண் வாழ்க்கையின் அனைத்துக்கட்டங்களிலும் பாதுகாத்து கௌரவிக்கப்பட வேண்டியவளாவாள். 

“ பிள்ளைப் பராயத்தில் அவளுடைய தந்தையாலும், இளமைப்பருவத்தில் கணவனாலும் முதுமைப்பருவத்தில் அவளுடைய புத்திரர்களாலும் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்ணைப் பாதுகாப்பின்றி விடப்படலாகாது”82 என்று கூறுகிறார்.  பெண்ணை உரியபருவத்தில் திருமணம் முடித்துக் கொடுக்காத தந்தையும், உரியபருவத்தில் அவளுடன் புணராத கணவனும், கணவன் இல்லாத நிலையில் அவளைப் பாதுகாக்காத மகனும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். 83 எனவும் மனு கூறிப் பெண்களது விடயத்தில் அக்கறை கொண்டுள்ளார். 

ஸ்மிருதிகால சமூகத்தில் பெண்ணை மகள், மனைவி, தாய் என்ற முறையில் ஒரு உறுப்பினராக மட்டுமே கடமைகளை ஆற்றுபவளாகக் காணமுடிகின்றது. அதற்கு மேல் சுதந்திரமோ தன்னாதிக்கமோ வேறு உரிமைகளோ உள்ள பெண்ணாகக் காணமுடியவில்லை. குழந்தைகளைப் பெறுதலும், வளர்த்தலும் ஒரு பெண்ணின் கடப்பாடாகக் கருதப்பட்டு வந்தது. மேலும் பெண்ணடிமை, பாலியவிவாகம், கட்டாய விதவைக்கோலம், பர்தா அணியும் முறை, சீதனம் வழங்கல் , உடன் கட்டை ஏறுதல் போன்ற மனிதாபிமானமற்ற இழிவான வழக்கங்கள் மூலம் பெண்களின் நிலை சீரழிக்கப்பட்டது. 

6.2 குடும்ப நிறுவனத்தில் பெண் 

i.  திருமணம் 

பெண் தனது திருமணத்தைப் பரிசுத்த சடங்காகக் கருதவேண்டும். அத்துடன் தனது வாழ்க்கைக்குப் பொருத்தமான கடமைகளை அவள் ஆற்ற வேண்டும். திருமணத்தின் பின்னர் கணவனுடன் வாழும் இல்லமானது ஒரு குருவுடன் சீடன் வாழும் இல்லம் போன்றது. அவளது கணவனே அவளுக்கு அனைத்துமாவான். அவனின் மீதுள்ள அன்பினால் அவள் தனது கடமையை நிறைவேற்றுவதுடன,; பெறக்கூடிய அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றாள். சட்ட பூர்வமாக அவள் அக்குணங்களை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். 84

ஒரு பெண் தனது திருமணத்தின் தூய்மையைக் கடைப்பிடிக்கும் போதும் கணவனுக்குத் தொண்டாற்றும் போதும் குடும்பக்கடமைகளை ஆற்றும் போதும் அவள் கல்வியிலும் வழிபாட்டிலும் கணவனுக்கு நிகராகிறாள். கணவனுக்குக் கீழ்ப்படிகின்ற பெண்ணானவள் சொர்க்கத்திற்கு உயர்த்தப்படுவாள் என மனு குறிப்பிடுகிறார். 85 ஒரு  மனைவியைத் தெரிவுசெய்யும்போது விரிவான அறிவுறுத்தலை மனு கூறியுள்ளார். ஆண்பிள்ளை இல்லாத குடும்பத்தில் தோன்றிய ஒரு பெண்ணும் வேதக்கல்வி பயிலப்படாத குடும்பத்தைச் சார்ந்த பெண்ணும் திருமணத்திற்கு பொருந்தாதவர்கள் எனும் கருத்துக் குறிப்பிடப்படுகிறது. ஒத்த சமூக, கலாசார, ஆத்மீக அந்தஸ்து உள்ள குடும்பங்களில் திருமணம் செய்யப்படல் வேண்டும். அத்துடன் திருமணம் திருமணம் செய்பவர்களின் உடல் ஆரோக்கியம் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.86 எனவே மனுவின் இக்கருத்தானது இத்தகைய வரையறைகளுக்குள் அடங்காத பெண்களைப் பொறுத்தவரையில் பரிதாபகரமானதாகவே இருந்துள்ளது. 

திருமணத்தில் இரு ஒத்த பாதிகள் ஒரு முழுமையை உருவாக்குவதற்கு ஒன்றாகப் புணரப்படுகின்றன. திருமணம் வெறும் உடலியல் சேர்க்கையாக அல்லாமல் உள்ளப்பிணைப்பாக அமைதல் வேண்டும். கணவன்,மனைவி,பிள்ளை ஆகிய மூவரும் உளவியல் ரீதியாகப் பிணைக்கப்பட வேண்டியவர்களாவர் என்பது மனுஸ்மிருதி கூறும் கருத்தாகும்.87 இந்த உளவியல் பிணைப்பானது மறுதலிக்கக்கூடிய ஒன்றல்ல பணத்திற்காகவோ அன்றி வேறு யாதாயினும் நன்மதிப்புக்காகவோ மனைவி கணவனிடமிருந்து விடுபடமுடியாதவள். பரம்பரையாகப் செயற்பட்ட சொத்தானது ஒருமுறையே வழங்கப்படமுடியும். 

ஒரு கன்னிப்பெண் ஒரு தடவை மட்டுமே திருமணத்தில் ஈடுபடுத்தக்கூடியவள். ஒரு தடவை மட்டுமே நடைபெற முடியும். இறப்புவரை பரஸ்பர நம்பிக்கை தொடரவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமான மிக உயர்ந்த விதியின் சாரம் இதுவே. மனு கூறியுள்ள இக்கருத்துக்கள் மூலம் இந்துப்பண்பாட்டு மரபில் திருமணத்தில் பெண்களுக்கான ஒழுங்குமுறைகள் தெளிவாகின்றன. 

ii) விதவைப்பருவம் 

கணவனின் இறப்பை அடுத்து ஒரு பெண் தூய்மையான வாழ்க்கை வாழ்வதன் மூலமும் அவனது எதிர்கால சந்ததிக்குத் தியானம், தெய்வவணக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலமும் தனது கணவனுக்கு விசுவாசமாக இருக்கமுடியும். ஒரு பெண் தனது மரணம் வரை பொறுமை, சுயகட்டுப்பாடு, கற்பு என்பவற்றைக் கடைப்பிடிப்பதுடன், கணவன் உயிரோடு இருக்கும் போது ஆற்ற வேண்டும் எனப்பணிக்கப்பட்ட  கடமைகளைத் தொடர்ந்தும் ஆற்ற வேண்டும். கணவனின் மரணத்தின் பின்னர் தூய்மையாக வாழும் பெண் அவளுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையிலும் சொர்க்கத்தில் அவனுடன் சேர்ந்து கொள்ளுவாள்.88

திருமணத்தின் போது நிலை நிறுத்தப்பட்ட விசுவாசமே விதவைப் பராயத்திலும் நிலை நிறுத்தப்பட வேண்டும். கணவன் இறந்த பின்னர் பிள்ளைகளைப் பெறுகின்ற ஒரு விதவையானவள் இறந்த கணவனுக்கான பணிகளிலிருந்தும் விலகுவதுடன் தனக்குத்தானே அவமானத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறாள். விதவை பிற ஆடவன் மூலம் மகவைப்பெறுதல் சட்டவிரோதமானதாகும். நற்பண்புடைய ஒரு பெண்ணுக்கு இரண்டாவது கணவன் அவசியமில்லை என்பது மனுவின் கருத்து. எனவே அவரது இக்கருத்து இந்து சமூகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரந்தளவில் நிலவிய சதி வழமைக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம். 

iii) விவாகரத்து 

மனுவின் கருத்துப்படி ஒரு மனைவி கணவனை வெறுத்த போதிலும், அவன் அவளுடன் ஒரு வருடம் வாழவேண்டும். அதன் பின்னரே பிரியவேண்டும். கணவனுக்கு மரியாதை கொடுக்காதவளும்,மதுபானம் அருந்துபவளும், உணர்ச்சிவசப்படுபவளும், நோய்வாய்ப்பட்டவளும், கணவனால் விலத்தப்பட்டு, வேறொரு பெண்ணை அவன் மணம் புரியலாம். மறுபுறத்தில் ஒரு பெண் சித்தசுவாதீனமற்ற கணவன் , ஆண்மையற்றவன் அல்லது நோயால் பிடிக்கப்பட்டவன் ஆகிய ஒருவனுடன் வாழக்கூடாது. சொத்தில் தனக்குரிய பங்கினைப் பெற்றதன் பின்னர் அத்தகைய கணவனிடமிருந்து பிரிந்து செல்ல அவள் அனுமதிக்கப்படவேண்டும்.89

iஎ) குடும்பத்தில் கல்வி 

ஒரு பிள்ளையின் ஆரம்பகாலகட்டத்தில் தாயின் கல்விச் செல்வாக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அப்பிள்ளையின் முதற்குரு தாயே. ஒரு சாதாரண ஆசிரியரைவிட வேதங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் பத்து மடங்கு மதிப்பிற்குரியவர். ஒரு ஆசிரியரைவிட தந்தை நூறு மடங்கு மதிப்பிற்குரியவர். ஒரு தந்தையை விட தாயானவள் ஆயிரம் மடங்கு மேன்மையானவள் என மனுஸ்மிருதி குறிப்பிடுகிறது.90 இவ்வகையில் இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை ஒரு வரலாற்று நோக்கு எனும் இவ்வியலிலே மனு கூறியுள்ள இக்கருத்துக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். 

நிறைவுரை

கோட்பாட்டளவில் இந்துப் பண்பாடு பெண்மைக்கு சமநிலையை கொடுத்திருக்கின்றது என்பது நாம் அறிந்த உண்மை. இந்திய சமூகத்தின் வரலாற்றுப்போக்கை ஒட்டிச் சிந்திக்கும் போது இந்துக்களது வாழ்க்கையில் ஆண்களை முன்நிறுத்திய சமுதாய அமைப்பிலே சகல வழிகளிலும் சமயவளர்ச்சிக்குத் துணைநின்று அதனை வளர்த்தெடுக்கும் பெண்ணாகவே காணப்படுகின்றாள். இத்தகைய நிலையிலும் கணவன் தவறு செய்யும் பட்சத்திலும் கற்புக்குப் பங்கம் ஏற்படாது தனது பங்களிப்பை செய்வதற்கு முன்றின்ற பெண்களையும் நாம் காணமுடிகின்றது. 

எனவே பண்பாடு என்ற அம்சத்தை நாம் முதன்மைப்படுத்தும் போது அதன் வளர்ச்சிக்குப் பெண்ணானவள் பல வகைகளிலும் தம்மை அர்ப்பணித்து வந்துள்ளாள் என்பதைத்தான் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டதான இந்துப்பெண்கள் பற்றிய இவ்வாய்வு எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய நிலையில் பெண்கள் தமது வாழ்வியலில் அந்தஸ்தை நிலைநிறுத்துவதற்கு இந்துப்பெண்களது முன்னேற்றம் வழிவகுத்தது எனலாம். சமயத்துறையில் மட்டுமல்லாது சமூகரீதியிலும் தலைமைத்துவம், அரசியல், விளையாட்டுப் போன்ற துறைகளிலும் பெண்கள் சிறப்புற்று விளங்குவதனை இன்று நாம் அவதானிக்க முடிகின்றது.  

அடிக்குறிப்புகள்

1. கைலாசநாதக் குருக்கள்.கா, வடமொழி இலக்கிய வரலாறு, கலாநிலையம், கொழும்பு, 1962,  ப-22.

2. மேலது., ப -87.

3. மேலது., பக் – 91-92.

4. Shakunthala Rao sasri, Women in Vedic age, Bombay, 1954, P -01.

5. Ibid,P – 01.

6. ராஜம் கிரு~;ணன், காலம் தோறும் பெண், சின்ன நிலா அச்சகம், மைலாப்பூர், சென்னை 3ம் பதிப்பு, 1994,  ப – 37.

7. Shakunthala Rao sasri, Op.cit, P-3.

8. இருக்கு வேதம்iii, 5.65.16, தாமோதரபட்டர் ஸ்ரீபாதசர்மா (பதி.), 1957.

9. யசுர் வேதம்எiii, கிரு~;ணசுக்ல மந்திரங்களின் பரிபூரணத் தமிழ்மொழிபெயர்ப்பு, ஐம்புநாதன். எம்.ஆ, ஐம்புநாதன் புத்தகசாலை, சென்னை, 1938.

10. Keay, F.E, Indian Education in Ancient and Later Time, Oxford University Press, London, 1954, P -74.

11. இருக்கு வேதம், 1.48.6.4.58.8: ஓ 86:10.

12. சுவாமி ஆசுதோ~hனந்தர், அன்னை சாராதாதேவி விரிவான வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ இராணமகிரு~;ணமடம், மைலாப்பூர், சென்னை, 1995, பக்-1-2.

13. பிருகதாரண்யக உபநிடதம், 2.2.6.

14.இருக்கு வேதம், 10.125.1-8.

15. Altekar.A.S.Dr,Position of Women inHinducivilization, Motial Banar sidas Delhi, 1978, P-11.

16. Altekar .A.S.Dr,Education in Ancient India, Nandkishore & Bros, Fourth Edition, India, 1951, P-213.

17. Rolhan.O.P,Indian women Through Ages, Vol 1, Anmol publications Pvt, Ltd, New Delhi, 1995, P-79.

18. Ibid, p-79.

19. Vedic index( I, 486: ii,485),  of names and subjects, Madonell, Arthur Anthony, Delhi, 1958

20. இருக்கு வேதம், 8.38.8.

21. Vedic index I, 486: ii,429; Rothin stpetersberg Dictionary renders it as a battle or Festival R.V.vi.

22. இருக்கு வேதம், ஒ.85.

23. அதர்வ சம்ஹிதை, தமிழ்மொழிபெயர்ப்பு, ஜம்புநாதன். எம்.ஆர், ஐம்புநாதன் புத்தகசாலை, சென்னை, 1940, ப-க.உ.

24. அதர்வ வேதம், 14.2.63.

25. சிவசாமி.வி.,ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும், கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், இலங்கை, 1976, ப-77.

26. இருக்கு வேதம், 10.85.

27. சிவசாமி வி.,மு.கு.நூல், ப-71.

28. இருக்கு வேதம், 3.53.4.

29. இருக்கு வேதம், 1.73.3.

30. இருக்கு வேதம், 10.107.10.

31. இருக்கு வேதம், 6.75.3.

32. இருக்கு வேதம், 1.66.5.

33. சிவசாமி.வி.,மு.கு.நூல், ப.72

34. அதர்வவேதம், 14.2.63.

35. அதர்வவேதம்,14.2.7.

36. அதர்வவேதம், எ.ங.எ.க.

37. அதர்வவேதம், க.ரு.உ.

38. கைலாசநாதக்குருக்கள்.,கா.டாக்டர், வடமொழி இலக்கிய வரலாறு, நர்மதா பதிப்பகம், சென்னை, 1981, பக் 111-112.

39. அதர்வவேதம், ஒii..3.14.

40. அதர்வவேதம், ஒiஎ.1.44.

41. Rolhan.o.p,op.cit,p-6.

42. மங்கள முருகேசன். ந.க., இந்திய சமுதாய வரலாறு, தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், 1975, ப-77.

43. Shakunthala Rao Sastri, op.cit, p-70.

44. ஐதரேய பிராமணம், எii.13.

45. ஐதரேய பிராமணம், iii.37.

46.தைத்திரீய சம்ஹிதை, iஎ.76.

47. சதபதபிராமணம், 5.2.1.10.

48. ஐதரேய பிராமணம், எii.9.10.

49. மைத்திராயணி சம்ஹிதை, iஎ.76.

50. ஐதரேய பிராமணம், எii. 9.10.

51. சுதபத பிராமணம், 1.9:2:12:10.5.2.9, ஆனந்தாஸ்ரம பதிப்பு, பூனா.

52. காத்யாயன சிரௌத சூத்திரம், 1.1.7.

53. பிருகதாரணியக உபநிடதம், 1.4.3.

54. Shakunthala Rao Sastri, op.cit, p-84.

55. Rolhan.o.p, op.cit,p-81.

56. ஆசுதோ~hனந்தர். சுவாமி,  மு.கு.நூல், ப-01.

57. பிருகதாரணியக உபநிடதம்,  6.4.3.

58. பிருகதாரணியக உபநிடதம், 6.17.

59. Madhavananda Swami, Ramesh Chandra Majumdar, GreatWomen of India, Advaita Asharm Publication Department, Culcutta, September 1993, p-139.

60. பிருகதாரணியக உபநிடதம்,  iii.8.2.

61. கலியாணசுந்தரனார்.வி.,பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, 6ம்பதிப்பு சென்னை, 1946, பக் 19-20.

62. மேலது., ப-20.

63. Madhavananda Swami, Ramesh Chandra Majumdar, op.cit, p-169.

64. Rolhan.o.p, op.cit,p-83.

65. Madhavananda Swami, Ramesh Chandra Majumdar, op.cit.p-169.

66. மகாபாரதம்,  5.129.40,  பண்டார்க்கர் கீழைத்தேய ஆய்வுநிறுவனம், பூனா.

67. Rolhan.o.p, op.cit,p-3.

68. கலியாணசுந்தரனார்.வி.,மு.கு.நூல், ப-21.

69. ஆனந்தகுருகே.கலாநிதி.,இராமாயண சமூகம், தமிழாக்கம் இராமலிங்கம்.நா, கலைவாணி புத்தக நிலையம்,  யாழ்ப்பாணம், 1996, ப-171.

70. Rolhan.o.p, op.cit,p-83.

71. Ibid,p-84.

72. Altekar.A.S.Dr,op.cit,P-6.

73. ஆனந்தகுருகே.கலாநிதி.,மு.கு.நூல்,  ப-167.

74. மேலது, ப-168. 

75. Tamil Lexicon,vol iii part 1, university of Madras, 1982, p-1523.

76. ராஐhஐp.,வியாசகர் விருந்து, தினமணி காரியாலயம், சென்னை, 1956, ப-61.

77. Madhavananda Swami, Ramesh Chandra Majumdar, op.cit.p-221.

78. மகாபாரதம்சாந்திபருவம்இ 144இ5-6.

79. Madhavananda Swami, Ramesh Chandra Majumdar, op.cit.p-221.

80. மார்க்கண்டேய புராணம்,  21.70-1, 74-8, சரஸ்வதி பிரஸ், கல்கத்தா, 1879.

81. பாகவத புராணம்,  4.4.11-8, கீதா அச்சகம், கோரக்பூர்.

82. மனுதர்மசாஸ்த்திரம், iஒ, 4-5(தமிழில்) திருலோகசீதாசாரம், பதிப்பாசிரியர், ஏ.கே.கோபாலன., ஆர்.கே.எல்.பிரிண்டர்ஸ்,  நான்காம் பதிப்பு,  சென்னை, 1999.

83. மேலது.,ஏ. 147-49.

84. மேலது.,iஒ. 21-24.

85. மேலது.,ஏ. 155.

86. மேலது.,iii 7-10.

87. மேலது., iஒ.8.

88. மேலது.,ஏ. 158-60.

89. மேலது.,iஒ. 77-80.

90. மேலது.,ii.145.

துணைநூல்கள் 

ஆனந்தகுமாரசுவாமி (1980), சிவானந்த நடனம், (தமிழாக்கம் வித்தியாரத்தினம், நவாலியூர் சோ. நடராசன்) 

சாந்தா.ஆ.ளு (1994), காரைக்காலம்மையாரும் அக்கமாதேவியும் ஓர் ஒப்பாய்வு, சென்னை.

கலியாணசுந்தரனார்.வி, (1975), பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, சென்னை. 

மங்களமுருகேசன்.ந.க., (1946), இந்தியசமுதாய வரலாறு, சென்னை. 

தங்கம்மா அப்பாக்குட்டி, (2001), பெண்மைக்கு இணையுண்டோ, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், இலங்கை.

கந்தையா.ந.சி, (2003), பெண்களும் சமூகமும் அன்றும்-இன்றும் பெண்கள் உலகம்- பெண்கள் புரட்சி, அமிழ்தம் பதிப்பகம், சென்னை. 

சித்திரலேகா மௌனகுரு, (1996), பாரதியின் பெண்விடுதலை இலக்கியம்-கருத்து-காலம், விபுலம் வெளியீடு, மட்டக்களப்பு, இலங்கை. 

கைலாசநாதக்குருக்கள்.கா, (1962), வடமொழி இலக்கிய வரலாறு, கலாநிலையம், கொழும்பு. 

சிவசாமி.வி, (1976), ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும், கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், இலங்கை. 

மனுதர்மசாஸ்திரம், (1999), திருலோகசீதாராம் (தமிழில்), ஆர்.கே.எல். பிரிண்டேர்ஸ், சென்னை. 

இருக்குவேதம், (1957), தாமோதரபட்டர் ஸ்ரீபாதசர்மா(பதிப்பாசிரியர்), சென்னை. 

உபநிஸத்ஸாரம்- சாந்தோக்கியம், பிருகதாரணியகம், பிரம்மசூத்திரம்,(1976), அண்ணா உரை, இராமகிருஷ்ணமடம், சென்னை. 

விக்னேஸ்வரி பவநேசன், (2002), இந்துப்பண்பாட்டு மரபில் பெண்கள் நிலை- பத்தொன்பதாம் நூற்றாண்டு நவீன சீர்திருத்த இயக்க காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு, யாழ்ப்பாணப்பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முதுதத்துவமாணி ஆய்வேடு, பிரசுரிக்கப்படாதது. 

Altekar.A.S (1978), Position of Women in hindu civilization, Motilal Banar sidass, Delhi. 

Ghosh,S.K(1989), Indian Women through the ages, Asihish publishing house,New Delhi. 

Oak,A.W.(1988), Status of Women in Education, The Indian Publications, India. 

Shakuntala Rao Sasri,(1954), Women in Vedic Age,  Bombay.