ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஒப்பீட்டாய்வு நோக்கில் தமிழகத் தேவரடியார்களும் ஜப்பானிய கெய்ஷா பெண்களும் - ஓர் ஆய்வு

முனைவர் பிரியா கிருஷ்ணன் முதுமுனைவர் பட்ட மேலாய்வு ஆய்வாளர் (UGC), தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 09 Nov 2021 Read Full PDF

முனைவர் பிரியா கிருஷ்ணன்

முதுமுனைவர் பட்ட மேலாய்வு ஆய்வாளர் (UGC), தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

ஆய்வுச்சுருக்கம்

உலகமெங்கும் காணப்படும் பல பண்பாட்டுக்கூறுகள் மற்றும் கலாச்சாரங்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனலாம்.அவற்றை ஆராயும்போது பல தகவல்கள் ஒன்று போலவும் பல தகவலுகளுக்கு விடையறியா நிலையும் ஏற்படுவது இயல்பானது.எனினும் தரவுகளின் அடிப்படையில் பல செய்திகள் வரலாற்றுக்கு உரம் சேர்ப்பவையாக அமைவதும் உண்டு.அவ்வகையில் அன்றையத் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துவந்த தேவரடியார்களிடமும் ஜப்பானிய கெய்ஷாப் பெண்களிடமும்  உள்ள சில  ஒத்துப்போகும் பண்புகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வுக் கட்டுரை  தமிழில் கெய்ஷா பெண்கள் பற்றிய முதல் ஆய்வுக் கட்டுரையாகும்.

திறவுச் சொற்கள்

தேவரடியார்கள்,தேவதாசிகள்,கெய்ஷா,மைக்கோ,தமிழகம்,ஜப்பான்

முன்னுரை

பண்டைய காலங்களில் பெண்களை குறிப்பாக கன்னிப் பெண்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது புனிதசேவையாகக் கருதப்பட்டது.இம்முறை ஆசியா,ஆப்பிரிக்கா,ஐரோப்பா மற்றும் அமெரிக்காக் கண்டங்கள் ஆகிய பகுதிகளில்  இருந்ததை பல ஆய்வுகள் முன்வைக்கின்றன.அது இன்றளவும் சில இடங்களில் கடைப்பிடிக்கக் கூடிய வழக்கமாகவேப் பார்க்கப் படுகிறது.சுமேரியா,அஸ்ஸிரியா,பாண்ட்,கோமஜூன்,மெசப்டோமியா ,பாபிலோனியா,எகிப்து,லிடியா மற்றும் பிரிஜியரி,ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை ,கொரிந்த்,ரோம்,கம்போடியா,ஜப்பான்,இந்தியா,ஸ்ரீ லங்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய பகுதிகளில் கோயிகளில் இத்தகையப் பெண்களைப் புனிதச் சேவைக்காக அர்ப்பணிக்கப் பட்டிருந்தனர்  என்று கூறப்படுகிறது.என்.எம்.பென்ஸர்  என்ற ஆய்வாளிரின் கூற்றுப்படி மெசபடோமியாதான் இந்த அமைப்புக்கு உண்மையான பிறந்தகம் என்று கருதப்படுகிறது.மேலும் அவர் பாபிலோனின் முதல் அரச பரம்பரையின் காலத்தில் ஹம்முராபி என்ற நெறித் தொகுதியிலிருந்து இந்த அமைப்பு தொடங்கியிருக்க முடியுமென தனது தேடலில்  அறிந்த  அவரது கருத்தை கூறுகிறார்.இந்தியாவைப் பொறுத்தவரை  ஆய்வுகளின் படி இந்தமுறை சிந்து பள்ளத்தாக்குக் கண்டுபிடிப்புகள் சிலவற்றுள் தொடர்புபடுத்துப்படுகின்றன  என்று சதாசிவம் குறிப்பிடிகிறார்.இவ்வாறு பல ஆய்வுகள் வழி சரியான காலக்கட்டத்தை கணிக்க இயலாவிட்டலும் ஒருவாறு யூகிக்க தேவையான தரவுகளும் கிடைத்துள்ளன என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு .2009 இல் கெய்ஷா பெண்கள் பற்றிய ஒரு ஆங்கில புதினம்  படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அதுவே எனக்கு கெய்ஷா பெண்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஒரு களத்தை அமைத்துக் கொடுத்தது. தமிழக தேவரடியார்களைப் போலவே ஜப்பானிய கெய்ஷா பெண்களுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு.இவர்களும் இசையிலும் நடனத்திலும் சிறந்து விளங்குபவர்கள்.பல்வேறு கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள். இக் கட்டுரையின் வழி தேவரடியார்கள் பற்றிய  நாம் அறிந்த செய்திகளோடு  கெய்ஷா பெண்கள் பற்றியும் ஒப்பீட்டு ஆய்வு செய்யப்படுகிறதஇந்த ஆய்வை நான் துணைநூற்பட்டியலில் உள்ள நூலகளின் வழி மட்டுமே இக்கட்டுரையை அமைத்திருக்கிறேன். இது இன்னும் மேலதிக தகவல்கள் கொண்டு  ஆய்வு செய்யப்பட வேண்டிய களமாக கருதுகிறேன்.

தமிழகத்தில் தேவரடியார்கள்

தமிழில் தேவரடியாள் என்றால் இறைவனின் ஊழியர் என்ற பொருளில் அறியப்படுகிறது. தேவரடியாள் என்பவள் ஓர் ஆலயத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவள்.இவள் ஒரு  நடனமாதாகவே அதிகம் அறியப்படுகிறாள்..சங்க காலத்தில் இருந்த வடிவம் பிற்காலங்களில்(600 முதல் கிபி1800வரை) பரவலாக்கப்பட்டிருந்ததை இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தகவல்கள் மூலமாக அறிகிறோம். இவர்களை தேவரடியார்கள், பதியிலார், தளிச்சேரிப் பெண்டுகள், எம்பெருமானடியார் என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.ஆகமங்கள் இவர்களை நர்த்தகிகள் கணிகைகள்(ருத்ர கணிகை) ,தாசிகள் என்று அழைக்கின்றன.விஜய நகர காலத்தில் தேவதாசிகள் என்ற பெயர் நிலைத்துவிட்டன என்று சொல்லலாம்.பல்வேறு சமூக ,மதரீதியாக பரவலாக்கப்பட்ட இந்த அமைப்பு பல்லவர்களாலும் பாண்டியர்களாலும் ஆதரிக்கப்பட்ட அமைப்பாக மாறி  சோழர்கள் மற்றும் பிற்கால பாண்டியர்களின் அமோக வரவேற்பில் இது தமிழகம் எங்கும் விரிவாக்கப்பட்டது.விஜயநகரப் பேரராசின்  இறுதிக்  காலத்தின் போது சரிவை சந்தித்து நாயக்கர் காலத்தில் முழுமையான கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

கெய்ஷா எனப்படும் ஜப்பானியப் பெண்கள்

ஜப்பானில்  1589 ஆம் ஆண்டில் (Toyotoni hideyoshi)டொயோட்டோமி ஹிடயோஷி என்ற பெயரில் கியோட்டோவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அதற்கு அதிக பாதுகாப்புடன் வெளியில் முழுவதும் மறைத்து சுவர்கள் எழுப்பப்பட்டது.இதனை (shimapara) ஷிமாபரா என்று அழைப்பர்..இந்த அமைப்பு பணம் படைத்தவர்களின் கேளிக்கை மாளிகையாகவும் சிற்றின்பத்திற்கு ஏற்றத் தலமாகவும் வடிவமைக்கப்பட்டது. இது இசை,நடனம்,குடி,ஆடம்பரமான மற்றும் உயர்தர விலை மாதர்களைக் கொண்டு இயங்கி வந்தது.இங்குள்ள உயர்ந்த நிலை விலைமாதுகளுக்கு ஓரான் என்று பெயர். அதிக பணம் படைத்தவர்களை ஈர்ப்பது இவர்களின் முக்கிய வேலை . கெய்ஷாக்களின் கன்னித்தன்மை சில சமயங்களில் மிசுவேஜ் ("டிஃப்ளோரிங்") என்று அழைக்கப்படும் சடங்கில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது. சில ஆண்கள் இந்த சலுகைக்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்கு சமமான தொகையைச் செலுத்தினர்.சில கெய்ஷாக்கள் மலிவு விலைமாதர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஓரான்ஸ் என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் வரை, கெய்ஷாக்களாக இருந்த பெண்களுக்கு கெய்ஷாக்களாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. அவர்கள் உயிர்வாழ அதில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல  பெற்றோர்களால் கெய்ஷா வீடுகளுக்கு பலர் விற்கப்பட்டு அடிமைகளாக மாறினர்.இந்த சிறுமிகளில் பலர் ஐந்து வயதில் கெய்ஷா வீடுகளுக்கு விற்கப்பட்டனர். அவர்கள் பயிற்சி தொடங்குவதற்கு போதுமான வயது வரை அவர்கள் வீட்டு ஊழியர்களாகவும், பணிப்பெண்களாகவும் பணியாற்றினர். கெய்ஷா வீடுகள் சிறுமிகளை முதலீடுகளாகக் கருதி, பயிற்சி மற்றும் பராமரிப்புக்காக தங்கள் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததன் மூலம் சிறுமிகளை வெளியேறவிடாமல் தடுத்தன. சிறுமிகள் தங்கள் கடனை அடைக்க  உதவும் வகையில் மிசுவேஜ் வழக்கம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அதிலிருந்து மாறுபட்டு ஒடோரோகி  என்றழைக்கப்பட்ட நடனமாடும் பெண்கள் சிறந்த நடன கலைஞர்களாகவும், இசைக் கலைஞரகளாகவும் விளங்கினர்.இவர்கள் மிக விரைவில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகப் பெருமக்களை வைத்துக் கொண்டனர்.இதற்கு முன்பு வரை ஆண் கலைஞர்களைத்தான் கெய்ஷா என்று அழைத்து வந்தனர்.அந்த பெயரை இந்த பெண்களும் தங்களுக்குச் சூட்டிக் கொண்டனர்.சுமார் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஆண் கெய்ஷாக்களைவிட பெண் கெய்ஷாக்கள் மிகவும் பிரபலமடைந்தனர்.அதனால் கிட்டதட்ட அனைத்து கெய்ஷாக்களும் பெண்களே என்னும் நிலைக்கு வரவேண்டியதாகிப் போனது. . இந்த சமயத்தில் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கெய்ஷா பெண்களுக்காக அறிவித்தது. அதன்படி கெய்சாவை விலைமாதுகளாக வேலை செய்யக் கூடாது என்னும் சட்டத்தையும் , ஒபியை (சாஷ்) பின்னால் கட்ட வேண்டும் எனவும்  வலியுறுத்தியது.அவர்களின் சிகை அலங்காராம்,வெள்ளை அலங்காரம்,கிமோனோ ஆகியவை ஓரான்சைவிட மிக எளிமையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.அதிலிருந்து கெய்ஷாப் பெண்கள்  கலைகளுக்காக மட்டுமே அர்பணிக்கப்பட்டதாக  சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

தேவரடியார்  மற்றும் கெய்ஷா ஆக தகுதிகள்:

தமிழகத் தேவரடியார்களின் பயிற்சிகள்

ஒரு சாதரண பெண் முழுமையான தேவரடியாராக மாற்றப்பட அவளுக்கு அழகிய தோற்றம் முக்கியமானது.அடுத்துஅவளின் கல்வி .தேவரடியார் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைத்த உரிமையாக பார்க்கப்படுகிறது.அவளின் சாதிக்கு இதில் பெரிய அளவில் பங்கில்லை என்பது முக்கியமானதாகும்.அந்த உரிமையைப் பெற அவளுக்கு சில தகுதிகள் முன்மொழியப்படுகிறது.அதாவது அவளது தோற்றம்,பெற்றோர் சம்மதம்,அவளது நடத்தை,ஊர் மக்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்போரின் ஒப்புதல் ஆகியவைத் தேவைபடுகிறது.இதன்பின் தேர்ந்தெடுக்கப்படும் அந்த பெண் சர்வ லட்சணங்கள் பொருந்தியவளாக இருக்க வேண்டும்.அவளின் அழகு மற்றவரை கவர்ந்து இழுக்ககூடியதாகவும்,மின்னலைப் போன்ற அவளது பார்வையில் அனைவரும் ஈர்க்கும் சக்தி கொண்டவளாகவும் ,அவளில் சுவாசம் மணம்மிக்கதாகவும்,மயில் போன்ற பேச்சுப் போலவும்,இசை,நடனத்தை உணர்வுபூர்வமாக கற்பதற்கான மன்வொழுக்கம் உள்ளவளாகவும் ,எண் ,எழுத்து ,பாடல் ஆகியவற்ரை விரைந்து கற்றுக் கொள்ளக்கூடிய திறமைகளுடனும் இருக்க வேண்டும் என காமிகாமம் விவரிக்கிறது.கலைகள் அனைத்தும் கற்றபிறகு அவர்களுக்கு கோவிலில் நடனமாட அனுமதிக்க அவர்களது உடலில் முத்திரைகள் பதிக்கப்படுவது மரபு.

தேவரடியார்களைப் பொருத்தவரை கல்வியறிவு என்பது ஆடலும் பாடலும் தான்.ஆடல்,பாடல் என்பது பொழுது போக்கு அம்சமாக இருப்பதுடன் அரசனின் புகழ் பாட தேவையான அறிவைக் கட்டாயம் கொண்டிருப்பது அவசியமாகிறது.பொதுவாக இப்பெண்கள் இறைவனுக்கு செய்யும் சேவைகளை பலவழிகளில் செய்து வந்துள்ளனர்.கோயிலை சுத்தம் செய்தல்,பூ பறித்து கொண்டு வருதல்,மடைப்பள்ளியில் வேலை செய்தல் போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார்கள்.இவற்றில் இறைவனுக்கு முன் நிறுத்தம் ஆடவும் சில பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே தேவரடியார்களுக்கு பல பணி பிரிவுகள் இருந்துள்ளன என எடுத்துக் கொள்ளலாம்.இறைவன் முன் நடனமாடும் பெண்களுக்கு  அனைத்துக் கலைகளும் கற்றுத் தரபட்டிருக்கிறது.அதன் பின்பே இவர்கள் தேவரடியார்களாக  இறைவனுக்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.மற்ற தேவரடியார்களுக்கான கல்வித் தகுதி என்பது அறிய இயல்வில்லை.சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி, ஆடல், பாடல்,அழகு ஆகிய இம்மூன்றிலும் ஒன்றும் குறைவு ஏற்படாமல் ,ஐந்தாண்டில் தண்டியம் பிடித்து ஏழு ஆண்டுகள் நாட்டியப் பயிற்சி முடித்து தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் கரிகாலனின் அரசவைக்கு வந்து அரங்கேற்றம் செய்கிறாள். மாதவியுடன் பயிற்சி கொடுத்த ஆடலாசான்,இசையாசான்,இசைக்கருவி பயிற்சி கொடுத்த தண்ணுமையாசான்,குழலாசான்,யாழாசான் ஆகியோரும் வருவதாகச் சொல்லப்படுகிறது.இருவகைக்கூத்து ,பாட்டு,தூக்கு,தாளவறுதி ஆகியனவும் கற்றுத் தரபட்டுள்ளன.அக,புற நாடகங்களுக்கு உரிய பாடல்கள்,யாழ்,தண்ணுமை,குழல் முதலிய இசைக்கருவிகள் கற்றுத்தரப்பட்டிருக்கிறது.காலத்துகேற்ப ஒப்பனை,ஓவியம் ஆகியவையும் கற்றுத்தரப்பட்டுள்ளதை  சிலப்பதிகாரம்   எடுத்துக்  காட்டுகிறது.

”ஐயாண்டில் தண்டியம் பிடிப்பித்து

ஏழாண்டு இயற்றுவித்துப்

பன்னீராண்டில் வீரக்கழல் சூழ்ந்த காலினையுடைய

காட்டலை விரும்பி”(சிலம்பு/அடியார்க்கு நல்லார் உரை/1850)

ஐந்து வயதில் தண்டியம் என்னும் கோலை பிடித்த மாணவர்கள் ஏழு ஆண்டுகள் நடனம் பயில வேண்டும்.பயிற்சி முடித்து தனது பன்னிரெண்டாவது வயதில் அரசன் முன்போ அல்லது முக்கிய பிரமுகர் முன்போ அரங்கேற்றம் செய்ய வேண்டும்.குருவின் இல்லத்திலேயே பயிற்சி இருக்கும்.பயிற்சியளிக்கும் இடத்திற்கு பெயர் சிலம்பக் கூடம் என்று பெயர்.சிலப்பதிகாரம் காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டுவரை இம்முறை வழக்கத்தில் இருந்துள்ளது. மாதவி 11 வகையான கூத்துக்களை நிகழ்த்தியதாக அறிகிறோம்.

 ஜப்பானிய  கெய்ஷா பெண்களின் பயிற்சிகள்

18 ஆம் நூற்றாண்டுவரை கெய்ஷா பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் தந்து வாழ வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஆனால் அதற்கு பின் வந்தவர்கள் தனது கலைகளுக்கு முக்கியத்துவம் தந்து தன்னை ஒரு கலைப்படைப்பாக மாற்றிக் கொண்டனர்.அதனால் அவர்களது அசைவுகள், முதல் நடப்பது,உட்காருவது என அனைத்தும் ஒரு கலையாக மாற்றப்பட்டது.அவர்களில் வேலையில் இல்லாதபோதுங்கூட இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆரம்பக் காலங்களில் கெய்ஷாவாக டிரம்கேரியர் என்று அழைக்கப்பட்ட ஆண்களே இருந்தார்கள் . ஏனெனில் இவர்கள் நீண்ட காலமாக ஜப்பானிய ட்ரம் என்ற டைகோவை வாசித்து வந்தனர் .அதன்பின்தான் கெய்ஷவாக பெண்கள் உள் நுழைந்தனர் என்று முன்பே கண்டோம் .கெய்ஷாவின்  உலகம் மலர் மற்றும் வில்லோ உலகம் என்றழைக்கப்படுகிறது. ஒரு பெண்  கெய்ஷாவாக மாற முதலில் மூத்த கெய்ஷாவிடம் அனுமதிப் பெற வேண்டும்.கெய்ஷாக்கான  பல கடினமானப் பயிற்சிகளைத் தாண்டிவரவேண்டும்.அதற்கு பல தகுதிகளும்  வேண்டும்.அதனால்தான் இன்று கெய்ஷா பெண்களை அனைவரும் மதித்துப் போற்றுகின்றனர்.கெய்ஷாவின் மற்றொரு பெயர் கெய்கோ என்பதாகும்.கெய்ஷாவின் பாரம்பரியம் மிக பழமையானதும் மிக வலுவான கட்டமைப்பைக் கொண்டதாகும்.கெய்ஷா பாரம்பரியத்தைக் கற்றுகொள்ளும் வரும் பெண்களுக்கு மைகோ என்று பெயர்.ஜப்பானிய மொழியில் மை என்றால் நடனம் ,கோ என்றால் குழந்தை என்று பொருள். இவர்கள் அணியும் ஆடைக்குப் பெயர் கிமோனோ. சிறப்பு நாட்களில் மட்டும் வெள்ளை நிற அலங்காரம் அணிந்து கொள்வர்.ஆனால் முழுமையான கெய்ஷா எளிமையான ஆடையினை அணிந்திருப்பார்.கெய்ஷா பெண்களுக்கு பயிற்சியின் முதல்பகுதி ஷிகோமி என்று அழைக்கப்படுகிறது.ஆரம்ப காலங்களில் பெண்கள் தேயிலை வீடுகளுக்கு பணியமர்த்தப்பட்டபோது பணிப்பெண்ணாகத்தான் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.வீட்டின் ஷிகோமி ,மூத்த கெய்ஷா வரும்வரை இரவானலும் காத்திருக்க வேண்டியிருந்தது. பெரும்பாலானவர்கள் 14 அல்லது 15 வயதாக இருக்கும்போது  அதாவது  ​​அவர்கள் நடுநிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு ஒரு கெய்ஷா வீட்டிற்குள் தங்கள் பயிற்சியை ஆரம்பிப்பார்கள். பலர் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலும் தங்கள் விருப்பத்தின் பேரில் இணைவார்கள். கெய்ஷா வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டை நடத்தும் கெய்ஷாக்களுடன் தாய்-மகள் உறவை வளர்த்து, அவர்களை "அம்மா" என்று குறிப்பிடுவார்கள். இவர்கள் பயிற்சியின் போது  உடலை நேராக மண்டியிட்டு வணங்க கற்றுக்கொள்வதால் , அவர்கள் நீட்டிய விரல்களின் நுனிகள் டாட்டாமியைத் தொடும். அவர்கள் தங்கள் உள்ளங்கைகளைத் தரையில் தொடக்கூடாது. குளிர்கால பயிற்சியின் போது அவர்கள் ஒரு பால்கனியில் நின்று பாட வேண்டும். கோடை வெப்பத்தின் போது அவர்கள் முழு கெய்ஷா ரெஜாலியாவை அணிந்துகொண்டு சூடான தேநீர் பரிமாற வேண்டும். ஜப்பானில் உள்ள கியோட்டோவில் மைக்கோ பயிற்சி மிகவும் கண்டிப்பானது. கியோட்டோவுக்கு வெளியில் வேறு ஊர்களில் இருந்து  வருபவர்கள் கியோட்டோவில் பேசப்படும் வழக்கப்படி  உச்சரிப்பைப் பெற வேண்டும். 1920 முற்பகுதி வரை பயிற்சி பெற்ற கெய்ஷாகள் பனிக்கட்டி நீரில் தங்கள் கைகளை வைத்திருந்து பின்னர் குளிர்ந்த காலநிலைக்கு வெளியே சென்று விரல்களில் இரத்தம் வரும்வரை ஷாமிசென் விளையாடப் பயிற்சி பெற வேண்டும் . இவ்வகையானக் கடினமான பயிற்சிகளையெல்லாம் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே கெய்ஷாவாக மாற இயலும்.

டோக்கியோவைச் சேர்ந்த கெய்ஷா பயிற்சி பெற்றவர்கள் தங்கள் கியோட்டோ உச்சரிப்பு கெட்டுப்போகும் என்ற கவலையால் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில்கூட பேச முடியாது. இந்த வகயில் 10 பயிற்சியாளர்களில் ஒருவரே உண்மையில் மைக்கோவாக மாற முடியும் என்பதே உண்மை.

டோக்கியோவைப் பொறுத்தவரை ஒரு முழுமையான கெய்ஷாவாக மாற ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்.டோக்கியோவில் பயிற்சி பெறும் கெய்ஷா ஹன்ஜியோகு ,அரை நகை, ,ஓ -ஷாகு, சேவை செய்பவர், ஆல்கஹால் என்று அழைக்கப்படுவார்.அடுத்த நிலையில் மிக கடின நடன பயிற்சி பெற்று இரண்டாம் நிலைக்கு உயர்த்தபடுவார்.இந்த நிலையில் உள்ளவர்களை மினாராய் என்று அழைப்பர்.இவர்கள் இனி வீட்டு வேலைகள் செய்யத் தேவையில்லை ..மூத்த கெய்ஷாக்களுடன் சென்று விருந்துகளில் கலந்து கொண்டு அங்கு மூத்த கெய்ஷாக்களும் நடந்து கொள்ளும் முறைகளைப் பார்த்து அணுகுமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும்..மூன்றாவது நிலையில் உள்ள பயிற்சிப் பெண்களுக்கு மைக்கோ  என்று பெயர். இந்த நிலையில் மூத்த கெய்ஷாவுடன் உள்ள உறவு நிலை மிக முக்கியமானதாகும்.மைக்கோ நிலையில்தான் எல்லாவற்ரையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது.எனவே மூத்த கெய்ஷாவுடன்  இணைக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.இந்த உறவிற்கு ஒன் சான் , இமோடோ- சன் என்று பெயர்.மூத்த கெய்ஷா இப்போது தேனீர் பரிமாறவும் ,ஹாமிசென் விளையாடுவதற்கும், நடனம் ஆடுவதற்கும் ,இக்கியின் கலை பற்றிய அனைத்தையும் கற்பிப்பாள்.மைக்கோ இப்போது கனமான  வெள்ளை அலங்காரம் (முகதிலும் கழுத்திலும்)  மற்றும் அழகான  சிகை அலங்காரம், உதடுகளில்  எல்லா நேரங்களிலும் வண்ணம் தீட்டப்பட்டு  கெய்ஷாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பவளாக இருக்க வேண்டும். இவர்களின் கிமோனோக்கள் மற்றும் ஒபி  முழு கெய்ஷாவைவிட பளிச்சிடும் வண்ணங்களிலும், ஆடம்பரத்துடன் கூடிய எம்பிராய்டரிகளாலும் கொண்டு சிறப்புடன் திகழ வேண்டும்.

கெய்ஷாக்கள் தங்கள் அலங்காரம் மற்றும் ஆடை அணிவதற்கு மூன்று மணிநேரம் வரை பொறுமை காக்க வேண்டும். அதற்கு  அதிகமாக செலவாகும். கெய்ஷா ஆடைகளின் எடை 10 கிலோகிராம் இருக்கும்.தனியாளாக இந்த ஆடை அலங்காரத்தை செய்ய இயலாது. பெரும்பாலும் இளம் உதவியாளர்களும் ஒரு அத்தைப் போன்ற பெண்ணும் கெய்ஷாக்களுக்கு ஆடை அணிவதற்கு உதவுகிறார்கள். ஓபி மீது போடுவதற்கான கடினமான பகுதிகளைச் செய்ய ஒரு ஆண் துணை கட்டாயம் தேவைப்படும். கெய்ஷாவின் தலைமுடியுடன் கெய்ஷா ஹேர்டோஸ் உருவாக்கப்படுகின்றன, மேலும் மனித மற்றும் விலங்குகளின் முடி நீட்டிப்புகள் மெழுகு, பட்டு ரிப்பன்கள் மற்றும் உறிஞ்சக்கூடிய ஜப்பானிய காகிதத்தால் செய்யப்பட்ட உள் பிணைப்புகளுடன் வைக்கப்படுகின்றன. ஒரு ஹேர்டோ மூன்று கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.ஒரு கெய்ஷா ஹேர்டோவை ஸ்டைல் ​​செய்வது ஒவ்வொரு முறையும் ¥ 20,000 செலவாகும்,.. இவை சில நேரங்களில் மெழுகு மற்றும் யாக் முடியுடன் மறைக்கப்படுகின்றன.கெய்ஷாவின் தலைமுடியைத் தயாரிக்கும் சிகையலங்கார நிபுணர்கள் கெப்பாட்சு-ஷி என்று அழைக்கப்படுகிறார்கள்.  ஹெய்ஷா பெண்கள் பயிற்சியின் போது ஷாமிசென், ஷாகுஹாச்சி, ட்ர்ம்ஸ் மற்றும் பாரம்பரியப் பாடல்கள்,நடனங்கள்,தேநீர்விழா, இலக்கியம் ,கலை ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஆறுமாதங்கள் டோக்கியோவிலும் அல்லது 5 வருடங்கள் கியோடோவிலும் பயிற்சிக்குப் பின் மைக்கோ ஒரு முழுமையான கெய்ஷாவாக அறியபடுகிறாள். அது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கமாகும் .

ஒரு மைக்கோ வழக்கமான அவள் 20 வயதாக இருக்கும்போது ஒரு கெய்ஷாவாக மாறுகிறாள்.இன்றையக் காலங்களில் கெய்ஷா  20 வயதின் ஆரம்பத்தில் இருக்கும் போது கெய்ஷா வீடுகளை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள். சில கெய்ஷாக்கள் எண்பதுகளிலும் தான்  நன்றாக இருக்கும் வரை தொடர்ந்து வேலை செய்கிறார்கள். புகழ்பெற்ற கெய்ஷா, ஹரு கட்டோ, 1996 இல் தனது 102 வயதில் இறக்கும் நாள் வரை கெய்ஷாவாக இருந்தார். 2005 ஆம் ஆண்டில், பழமையான கெய்ஷா 96 வயதாக இருந்தார். இன்று பெரும்பாலான கெய்ஷாக்கள் நாற்பது வயதிற்கு முன்பே ஓய்வு பெறுகிறார்கள். கால மாற்றத்தால் இப்போது அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுகிறார்கள்.

தேவரடியார்களுக்கும் கெய்ஷா பெண்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகள்

  • தமிழகத்தில் சங்க காலத்திலும் அதற்கு பிறகும் கலைகளை கற்பிக்க பல வகையான ஆசான்கள் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.ஆடல் மகளிருக்குப் பாடல்களும் இசையும் கற்றுத்தர பாணர்களும் பிடார்களும் அடிகள்மாரும் உதவினர் .சோழர் காலத்தில் ஆடல் கற்பிக்க நட்டுவ ஆசான்களும் ,தலைக்கோல் மகளிரும் கூத்தர்களும் இருந்துள்ளனர்.முற்கால சோழர்களின் ஆடற் சிற்பங்களில் பெருபான்மையானவற்றுள் பெண்களே கருவிக் கலைஞர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
  •  கெய்ஷா பெண்களுக்கு கெய்ஷா பெண்களே பிரதான ஆசான்கள்.இசைக் கருவிகளை கற்றுக் கொள்ள சில ஆண் கெய்ஷாக்களும் உதவுகின்றனர்.
  • ஆடலில் சிறந்த பெண்களுக்கு தலைக்கோலி பட்டம் வழங்கப்படுகிறது.
  • கெய்ஷா பெண்கள் பயிற்சி முடிந்ததும் கெய்ஷா பட்டத்தைப் பெறுகின்றனர்.இதில் புகழ்பெற்ற கெய்ஷாக்களும் உள்ளனர்.இவர்களை இன்றளவும் மக்கள் பாராட்டி மகிழ்கிறார்கள்.
  • ஆடல் மகளிர் கோவில்களில் மட்டுமே ஆடுவர்.அரசவை நாட்டிய மகளிர் அரசனுக்கு முன்பாகவும் அரசனின் அவையிலும் நடனமாடினர்.
  • கெய்ஷா பெண்கள் விருந்துகளிலும் ஆடம்பர உணவகங்களிலும்  தங்களது கலையினைக் காண்பித்து அதற்கான ஊதியத்தைப் பெறுகிறார்கள்.
  • தேவரடியார்களும் அரசர்களையும் ,முக்கிய பிரமுகர்களையும் மணந்ததைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.
  • மிக பழைய காலங்களில் கெய்ஷா பெண்கள் சாமுராய் என்றழைக்கப்படும் அரசர்களையும்,முக்கிய பிரமுகர்களையும்  மணந்தார்கள்.
  • தோல் கருவிகளான மத்தளம் ,செண்டை,குடமுழவு ,திமிலை,கரடிகை,படகம்,உடுக்கை,இடைக்கை,சகடை,கொட்டிமத்தளம்,தட்டழி,தடாரி,தகுணிச்சம்,துந்துபி,மொந்தை,கல்லவடம்,கல்லலகு,கல்லல்,சல்லரி, துத்தரி,கைத்திரி,பூகரகம்,பெருவடகம்,தமருதம் ஆகிய பழங்கால இசைக்கருவிகளை ஆண்களும் பெண்களும் இசைத்தனர்.
  • கெய்ஷா பெண்கள்  ஷாமிசென் என்ற ஜப்பானிய பாரம்பரிய இசைக் கருவியையும்,ஷாகுஹாச்சி என்ற இசைக்கருவியையும்,ட்ரம்ஸ்யையும் கொடோ என்றழைக்கப்படும் யாழ் இசையினையும் ,சுசுமி என்ற உடுக்கையும் ,ஜப்பானிய கலைகளையும்,எண்,எழுத்து போன்ற கல்வியையும் கற்க வேண்டும்.
  • இறைவனுக்கு சேவை செய்யும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வந்த தேவரடியார்களின் உயர்ந்த நிலை, விஜயநகர பேரரசு காலத்தில் சரிந்து நாயக்கர் காலத்தில் மேலும் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு மராத்திய மன்னர் சரபோஜிக்குப்பின் ஐரோப்பர் வருகையால் இழி நிலைக்குத் தள்ளப்பட்டது.இன்றைய நிலையில் உயர்ந்த நிலையில் கல்வி கற்ற அறிவார்ந்த தேவரடியார்களின் சமூகம், இழி நிலையினை அடைந்த வரலாறே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களின் மேன்மை நிலை பலரும் அறியா இருளில் தொலைந்து கொண்டே வருகிறது.
  • விலை மாதுகளாக இருந்த கெய்ஷா பெண்களின் நிலையோ முற்றிலும் மாறி இன்று  மதிக்கக்கூடிய நிலைக்கு வந்துள்ளனர்.அவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள்.அவர்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டு ஜப்பானின் ஒரு முக்கிய பாரம்பரிய பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது.
  • பிறகாலத்தில் புகழ்பெற்ற தேவரடியார்களாக பரவைநங்கை,பொன்னனையாள்,பெங்களுரு நாகரத்தினம்மாள்,வீணை தனம்மாள் ஆகியோர் அறியபடுகின்றனர்.
  • பிற்காலத்தில் கெய்ஷா பெண்களில் புகழ்ப் பெற்றவர்களாக சுஸிவாசாகி,எட்டாரோ,ஹோனா கிரஹாம்,சடா அபே,சட யாக்கோ ஆகியோரை குறிப்பிடலாம்.

துணை நின்ற நூல்கள்

1.சிலப்பதிகாரம்/சந்தியா பதிப்பகம்

2.தமிழகத்தில் தேவதாசிகள்/முனைவர்.கே.சதாசிவன்

3.இசைக்கருவிகள் /பி.சைதன்யா தேவ/தமிழாக்கம் டி.எஸ்.பார்த்த சாரதி

4.நரம்புக் கருவிகள்/முனைவர் செ.சுப்புலட்சுமி மோகன்

5.தேவரடியார்/அ.வெண்ணிலா

6.பழந்தமிழர் ஆடலில் இசை/ஞானா.குலேந்திரன்

7.இசைக்கலை நுணுக்கங்கள்/முனைவர்.ஆ.பத்மாவதி.

8.தமிழ் இசைக் கலை களஞ்சியம்/முனைவர்.ப.க.சுந்தரம்

9.தமிழ் இசை இலக்கண வரலாறு /மு.அருணாசலம்

10. https://en.wikipedia.org/wiki/Geisha

11. https://www.youtube.com/watch?v=g08JvFDWq4Q

12. https://www.youtube.com/watch?v=AiBYGugc17k

13. https://www.insidejapantours.com/blog/2018/01/05/are-geisha-prostitutes/

14. https://people.howstuffworks.com/geisha1.htm

15. https://www.japan-guide.com/e/e2102.html