ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நற்றிணைக் காட்டும் விளிம்பு நிலை மாந்தர்கள் | Marginal people showing Natrinai.

முனைவர் வே.ஆ.தீபா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி. 07 May 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

சங்க இலக்கியம் பழந்தமிழரின் அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியலை முழுமையாக பிரதிபலிக்கும் கருவூலமாகும். குறிப்பாக சமுதாயத்தில் அரசன் முதல் அடிதட்டிஉ மக்கள் வரை அவர்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்ததது என்பதற்கான சான்றாக பலப்பாடல்களை எடுத்துக் கூறலாம்.அந்த வகையில் நற்றிணையில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் எவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறித்து ஆய்வுதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract:

Sangha literature is a treasury that fully reflects the inner and outer life of Ancient Tamils. Many songs can be cited as proof of how their life was from the king to the common people in the society. In this way, the purpose of this article is to study how the life of marginalized people is recorded in the history.

Key words:

Natrinai, Sangamliterature, Pandiya kingdom, Tamil culture

திறவுச் சொற்கள்:

நற்றிணை, சங்ககாலம், பாண்டிய அரசு, தமிழ்ப் பண்பாடு

முன்னுரை;

சங்ககாலச் சமுதாயம் ஒரு கூட்டமைப்புச் சமுதாயம் ஆகும். இக்கூட்டமைப்புச் சமுதாயத்தில் பல்வேறு பட்ட ஏற்ற இறக்கங்கள் அமைந்திருக்கின்றன. சமுதாய நிலையில், வருண அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் செய்யும் தொழில் அடிப்படையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. சங்க காலச் சமுதாயத்தில் இவ்வேற்ற இறக்கங்கள் இருந்தது எனபதும் அவை பாடல்களாக பதிய வைக்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அவற்றைப் படைத்த புலவகளின் நேர்மையை உயர்த்துவனவாக உள்ளன.

விளிம்புநிலை மக்களுக்கான உதவி:

நற்றிணை ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்ட அகப் பாடல் உடையது. அகப்பாடல்களை கொண்ட தொகுப்பு என்றாலும் சமுதாய நிலைகளை ஆங்காங்கு இப்பாடல்கள் சுட்டிச் செல்கின்றன. நற்றிணையில் அமைந்த 210-ம் பாடல் விளிம்புநிலை மக்களுக்கு உதவுவது உதவி என்கிறது.

'அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈச் செறுவின்

வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புண்கள் அஞ்சும் பண்பின்

மென்கட் செல்வம் என்பதுவே'

(நற் 210)

என்ற இப்பாடல் தோழி கூற்றாக இடம்பெறுகிறது. தலைவி தலைவனைச் சார்ந்து நிற்பவள் ஆவாள். அவளைக் கண்ணீர் சிந்தாமல் மகிழ்வுடன் வாழவைப்பது தலைவனின் கடமை. அவன் இந்நிலையில் தவறுகின்ற போது தலைவி அழுகிறான் இது கண்டு தோழி பாடிய பாடல் இதுவென்றாலும் சமுதாய அறம் பற்றி கூறுவதால் சிறப்பு பெறுகிறது.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று ஒருவரால் புகழப்படும் மொழிகளைப்

பெறுவதும், யானை, குதிரை ஆகியவற்றில் வேகமாகச் செல்லுதலும் புகழ் உடையன அல்ல. இப்பெருநிலைகள் அவரவரின் வினைப்பயன்களால் ஏற்படுவதாகும்.

சான்றோர் செல்வம்

சான்றோரால் போற்றப்படும் செல்வம் எது என்றால் தன்னை சார்ந்தவர்களைத் தாங்கும் பணியே செல்வங்களில் சிறந்த செல்வம் ஆகும். இப்பாடலில் பொருள் வறுமை சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பொருள் வறுமையே சமுதாய விலக்கலுக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

ஒரு நாட்டைச் சேர்ந்தோரை, ஒரு சமுதாயத்தை சேர்ந்தோரை, ஒரு குடும்பத்தை சேர்ந்தோரை கண்கலங்காமல் விலக்காமல் காக்கும் நன்முறையே செல்வம் ஆகும் என்ற உயர்ந்த நோக்கு சங்க இலக்கியங்களில் இருந்தது என்பதற்கு இப்பாடல் அழியாச் சான்றாக அமைகிறது.

கழைக் கூத்து

தற்காலத்தில் தெருக்களில் பொதுமக்கள் அரங்கில் சாகச நிகழ்வுகளைச் செய்து காட்டும் கழைக் கூத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்நடைமுறை சங்க இலக்கியமான நற்றிணையில் கழைக் கூத்து என்ற பெயரிலேயே நடைபெற்று உள்ளது. இக்கூத்து ஆடுவோரின் நிலை அவர்களுக்கு உரிய சமுதாய மதிப்பினை, உணவு. இருப்பிடம், உடை ஆகியவற்றை சரிசமமாக பெற முடியாத நிலையில் இருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

கழைபாடு இரங்க பல்லியம் கறங்க

ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிறு

அதவத் தீம்கனி அன்ன செம்முகத்

துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்

கழைக்கண் இரும்பொறை ஏறிவிசைத்து

எழுந்து

குறக்குறு மாக்கன் தாளம் கொட்டும் அக்

குன்றகத் ததுவே கொழுமினைச் சீறூர்

சீறுரோனே நாறுமயிர்க் கொடிச்சி

கொடிச்சி கையத் ததுவே பிறர்

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே

(நற்-95)

என்ற இப்பாடல் கழைக்கூத்து பற்றிய செய்திகளைப் பற்றிக் கூறுகிறது.

கழை என்றால் ஊதுகுழல் என்று பொருள்படும் ஊதுகுழல் ஒரு பக்கம் இசைக்க, பல இசைக் கருவிகள் முழங்க முருக்குண்ட கயிற்றின் மீது ஆடுமகள் ஆடும் நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது. இப்போது ஆட்கள் இன்றிக் கிடக்கும் இவ்வடத்தில் உள்ள கயிற்றின் மீது இத்திப்ழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சு போனற் தலையையும் உடைய குரங்கு ஏறி ஆடுகின்றது. இவ்வாட்டத்திற்கு மலைப்பகுதியில் வாழும் சிறுவர்பள் பெரிய பாறையின் மீது ஏறி நின்று தாளங்களை இசைத்தனர். மீளவும் அங்கு ஒரு கழைக் கூத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வூரில் உள்ள நறுமணக் கடற்தலை உடைய கொடிச்சியிடம் என்மனம் பிணிப்புற்றுக் கிடக்கிறது. அவள் இரக்கப்பட்டு விடுதலை அளித்தால் மட்டுமே என்பதே இப்பாடலின் பொருளாகும்.

ஒவ்வொரு இடமாகச் சென்று இக்கழைக் கூத்தர் தன் ஆட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றனர் என்று கொண்டால் இவர்களுக்கு நிலைத்த வாழ்விடம் என்பது இல்லை என்பது தெளிவாகின்றது. நாடோடிகளாகவே தங்களுடைய புழைப்பை நடத்தி உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. மேலும் அவர்களின் நிலையை காணும் போது இரங்கத்தக்கதாகவே உள்ளது.

பாணர் குலம்

தலைவனுக்கும் தலைவிக்கும் ஏற்படும் ஊடலைத் தீர்க்கும் குலமாக விளங்குவது பாணர் குலம் ஆகும். இபபாணர் குலம் இசையோடும் கூத்தோடும் தொடர்புடையது என்றாலும், இவர்களும் சமுதாயத்தில் ஏற்கப்படாதவர்களாகவே இருந்துள்ளனர்.

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரை

களிற்றுச் செவி அன்ன பாசடை தங்க

வாளை விறழும் ஊரற்கு நாளை

மகட்கொடை எதிர்ந்த மடம்கெழு பெண்டே

தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி

உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபுடன்

கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை

உள்யாதும் இல்லது ஓர் போர்வை அம்

சொல்லே

(நற் 310)

மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பேண்டே என்ற விளி விறலிக்கு உரியதாகும். நாள்தோறும் புதிய புதிய பரத்தைகளை தலைவனுக்கு அறிமுகப்படுத்தும் விறலியே என்பது இவ்விளியின் விரிவாகும்.

இத்தகைய விறலி அன்றைக்குத் தலைவியை தோழியை ஆற்றுப்படுத்தித் தலைவனை ஏற்க வைக்க மென்மையான மொழிகளைச் சொல்லுகிறாள். இதனை கேட்ட தோழி எங்களை சமாதானம் செய்ய வேண்டாம். நாளைக்கு வேண்டிய பரத்தையை, அவளின் தாயைச் சென்று நீ பார்ப்பது உனக்கு நன்மை தரும். எங்களிடம் நீ பேசும் சொற்கள் எவ்வாறு உள்ளது என்றால் பாணன் கையிலுள்ள தண்ணுமைக் கருவிபோன்று உள்ளே ஒன்றும் இல்லாமல் உள்ளன. இவற்றை பரத்தையிடம் போய்ச் சொல் அவர்கள் நம்புவார்கள் என்று வாயில் வேண்டி வந்த விறலியை மறுக்கிறாள் தோழி, இதில் சங்க காலத்தில் வாழ்ந்த கலைர்களான விறலி, பாணன் ஆகியோர் நிலை பற்றியும், அவர்களைச் சமுதாயம் மறுக்கும் நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.

குயவன்

ஊரில் திருவிழாக்கள் நடைபெறும் போது அத்திரு விழாக்களுக்கு அனைரும் வருகை தரவேண்டும் என்ற செய்தியைக் குயவர் மரபினர் ஊருக்குச் சொல்லியுள்ளனர் என்பது நற்றிணையின் பாடல் ஒன்றால் தெரியவருகிறது. என்பதை

கண்ணி கட்டிய கதிர் அன்ன

ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி

யாறுகிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

சாறு என நுவலும் முதுவாய்க் குபவர்

ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ

(நற் 200)

மேற்கண்ட பாடலில் குயவர் பற்றிய செய்தி காணப்படுகிறது.

இப்பாடலின் மூலம் குயவர் மரபினர் திருவிழா அறிவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர் என்றாலும் அவர்கள் வழியாகவே ஊரில் உள்ளோரை ஏற்பதும் அவர்களை விலக்குவதும் ஆன செய்திகள் வெளிப்படுத்த பெற்றுள்ளன என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் சமுதாய விலக்கம் எவ்வாறு நடைபெறும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஏவல் இளையோர்

சங்க கால சமுதாயத்தில் ஏவிய ஏவல்களைச் செய்யும் ஏவல் மரபினர் இருந்துள்ளனர். இவர்கள் இட்ட வேலைகளை செய்பவர்கள் என்பதைத் தவிர தனக்கான உரிமை பெற்றவர்கள் இல்லை என்பது இவர்களின் பெயரால் உணர முடிகிறது.

என்னையும்

களிற்றுமுகம் திறந்த கல்லா விழுத்தொடை

ஏவல் இளையரொடு மாவழிப் பட்டென

(நற் 384)

இப்பாடலில் ஏவல் இளையருடன் தலைவியின் தந்தை வேட்டைக்குக் கிளம்பிய செய்தி தெரிய வருகிறது. இதன் மூலம் இளையோர் என்ற மரபினர் இருந்துள்ளன என்பது பெறப்படுகிறது. இங்கு தொல்காப்பியர் சுட்டும் ஏவல் மரபு என்பது பொருத்தமுடையதாகின்றது.

பரத்தை

அக்காலத்தில் பரத்தை விலக்கப்படுவதும் அதிலும் குறிப்பாக வயது ஏற ஏற பரத்தை என்ற குலத்தவர் சமுதாயத்தில் விலக்கத்திற்கு ஆளாக்கப் பெறுகிறார்கள் என்பதை

நகைநன் உடையன் பாண நும் பெருமகன்

மிளைவலி சிதையக் களிறு பல பரப்பி

அரண்பல கடந்த முரண்கொள் தானை

வழுதி. வாழிய பல என தொழுது ஈண்டு

மண்எயில் உடையோர் போல அஃதுயாம்

(நற் 750)

இளம் பரத்தையின் தாய் அவளின் வயது சிறுமக் கருதி தலைவனிடம் இருந்து அவளை விலக்குவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

முடிவுரை

சங்க காலம் தொட்டு இன்றுவரை விளிம்புநிலை மக்கள் தங்கள் வாழ்வாதரத்தில் பின் தங்கியவர்களாகவும் செல்வந்தர்களை நம்பி பிழைப்பு நடத்தும் அவல நிலையும் காணப்படுவதை நற்றிணைப் பாடல்கள்வழி அறியமுடிகின்றது.

துணை நூற் பட்டியல்:

1. நற்றிணை, வித்வான் வேங்கடராமன், உ.வே.சா நூல் நிலையம், சென்னை

2. நற்றிணை, பின்னத்தூர் நாராயணசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

3. நற்றிணை, கு.வெ.பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் அவுஸ், சென்னை.

4. நற்றிணை, ஔவை துரைசாமி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.