ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

முல்லைத் திணையில் விருந்தோம்பல் | HOSPITALITY IN MULLAITHINAI

கட்டுரையாளர்: சா. ஜனார்த்தனன், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை – 606603 | நெறியாளர்: முனைவர் மு.பாலமுருகன், இணைப்போராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, திருவண்ணாமலை – 606603. 30 Apr 2024 Read Full PDF

Artical Summary: Tamilkudi, who appeared in front of the sword at the time when the stone appeared and the soil appeared. The man who appeared in Tamilkudi divided the habitat he lived in into five regions and developed his own civilization and culture. The one who lived in the forest region was a Mullai Thinai, the one who lived in the mountain region was a Kurunji Thinai, the one who lived in the Coastal region was a Neithal Thinai, Marutha Thinai is the one who matured the forest and the mountain, the one who lived in the mountain and forest was dried up as a Desert region (Pallai Thinai). Sangha literary songs highlight the discipline, growth and difference in their way of life. In this review article, how the people of Mullai land have been practicing the hospitality which is considered as the gift of life and the highest of homeliness in the article.

ஆய்வு சுருக்கம்:

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடித் தமிழ்க்குடி. தமிழ்க்குடியில் தோன்றிய மனிதன் தான் வாழ்ந்த வாழ்விடத்தினை ஐந்து நிலங்களாகப் பாகுப்படுத்தித் தனக்கென்ற நாகரிகத்திணையும், பண்பாட்டினையும் வளர்த்தான். காட்டில் வாழ்ந்தவன் முல்லைத் திணையாகவும், மலையில் வாழ்ந்தவன் குறிஞ்சித் திணையாகவும், கடற்கரையில் வாழ்ந்தவன் நெய்தல் திணையாகவும், காட்டினை மலையைப் பக்குவப்படுத்தி வாழ்ந்தவன் மருதத் திணையாகவும், முல்லைக் குறிஞ்சிக் காய்ந்தது பாலைத் திணையாகவும் மனிதன் வாழ்ந்து வந்தான். தனக்கென்ற வாழ்க்கை முறையினில் பின்பற்றும் ஒழுக்கத்திணையும், வளர்ச்சியினையும் வேறுபாட்டினையும் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அப்பாடல்களில் முல்லைத் திணைப் பாடல்களைக் கருவாகக் கொண்டு வாழ்வின் கொடையாகவும், இல்லறத்தின் உயர்வாகவும் கருதப்படும் விருந்தோம்பலினை முல்லை நில மக்கள் வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதை இவ்வாய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது முல்லை நில மக்களின் இல்விருந்து, கறிவிருந்து, வருவிருந்து, செல்விருந்து, நல்விருந்து ஆகியவை முல்லைத் திணைப் பாடல்களின் பதிவுகளிலிருந்து கருந்துக்களைத் தொகுத்து முல்லைத்திணையில் விருந்தோம்பலை இவ்வாய்வு எடுத்துரைக்கின்றது.

முன்னுரை:

உலகம் தோன்றி அதனுள் உயிரினங்கள் உருவாகி உயிரினத்தில் இருந்து மனிதன் தோன்றினான். விலங்கில் இருந்து வேறுபட்டவன் என்பதைத் தன்னுடைய உணர்வுகளின் வேறுபாட்டினாலும், நாகரிக வளர்ச்சியினாலும் மற்ற உயிர்களிடமிருந்து பகுத்தறிவினால் தன்னை வேறுபடுத்தினான். விலங்கோடு காட்டினில் வாழ்ந்து வந்தவன் தனக்கென்ற குடியமைப்பினைக் காட்டினில் நிறுவச் செய்தான்.

காட்டினில் வாழ்ந்தவன் வாழ்க்கை முல்லைத் திணை. காட்டினில் இருந்து மேடான குன்றுகளிலும், மலைகளிலும் வாழ்ந்தவன் வாழ்க்கை குறிஞ்சி திணை. காட்டினைச் சமப்படுத்தி வயல்வெளியாக்கி வாழ்ந்தவன் வாழ்க்கை மருதத்திணை. கடலைச் சார்ந்து வாழ்ந்தவன் வாழ்க்கை நெய்தல் திணை. முல்லையும், குறிஞ்சியும் காய்ந்து பாலைத் திணை ஆயிற்று.

சங்ககால மனிதன் வாழ்ந்த குடி வாழ்க்கையினையும், அமைவிடத்தையும், வாழ்வியல் சூழ்நிலைகளையும் கொண்டு தமிழ்ப்புலவர்கள் பாடியப்பாடல்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை வாழ்வியலாகத் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் கூறுகின்றன. மனிதன் முதன்முதலில் தோன்றி வாழ்ந்த காடும் காடு சார்ந்த முல்லை நில மக்களின் வாழ்க்கையின் கொடையாகிய விருந்தோம்பல் என்னும் பண்பாடு சிறந்து விளங்கியதை முல்லைத் திணைப் பாடல்களின் வழியாகக் காணலாம்.

விருந்தோம்பல்:

மனிதன் தனக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கை அமைப்பினில் உயர்ந்த பண்பாடாகவும், வாழ்க்கையின் கொடையாகவும் அமைந்ததே விருந்தோம்பல் ஆகும். விருந்தோம்பல் என்பதனை விருந்து + ஓம்பல் எனப்பிரித்து விருந்தினை உணவாகவும் ஓம்பல் என்பதைப் படைத்தல் என்றும் கருதினால் ‘’உணவினைப் படைத்தல்’’ எனப் பொருள்படும். படைத்தல் என்பது இறை வழிப்பாட்டினைக் குறிக்கும். இறைவனுக்குச் செய்யப்படுவதாகக் கருதி விருந்தோம்பலினை மனிதன் மனிதனுக்கு செய்து வந்துள்ளான். உறவினர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், ஊராருக்கும் என விருந்தோம்பல் மனிதன் வாழ்வினில் இடம்பெறுகிறது.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு                   

(குறள் 81)

என்று விருந்தோம்பலினைத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியப் பாடல்களில் முல்லைத் திணையின் விருந்தோம்பலினை அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காக்கை விருந்து:

“காக்கை கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவர்” என்பது ஆன்றோர் கூற்றாகும். இதனை மெய்பிக்கும் வகையில் தலைவனைப் பிரிந்து தலைவி மிகவும் வருந்துகிறாள். தலைவியின் துயரத்தைப் போக்குவதற்குரிய நேரத்தில் தலைவன் வந்தடைந்தான். தோழிக்கு நன்றி கூறுவனாக தலைவியை நன்கு ஆற்றுவித்திருந்தினை என்றான். அதற்குத் தோழி நின்வரவை அறிவித்துக் காக்கைக் கரைந்தது. நற்செய்தியைக் கூறிய அக்காக்கைக்கு நாங்கள் விருந்து படைத்தோம். அந்த விருந்தானது மிகவும் சிறியதாகும்.

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின், தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எருகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி

பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே

(குறுந் – 210)

திண்மை கொண்ட தேரினை உடையவன் கோப்பெருநள்ளி. அவனது காட்டிலுள்ள இடையர்களுக்குரியவாகப் பல பசுக்கள் இருந்தன. அப்பசுக்கள் அளித்த நெய்யோடு, தொண்டியிடத்துள்ள வயல்களிலே முற்றவும் ஒருங்கே விளைந்த வெண்ணெல் அரிசியாற் சமைத்த வெம்மையான சோற்றையும் கலந்து காகத்திற்கு வைத்தோம். தலைவியின் பெருந்தோள்களை நெகிழச் செய்த துன்பத்தைப் போக்குதப் பொருட்டுக் காக்கையும் கரைந்தது. நீரும் வந்தீர்.

தனது துயரத்தினைப் போக்குதற் பொருட்டு நற்செய்தி கூறும் பறவைகளுக்கு விலங்குகளுக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்திலே இருந்துள்ளதை இப்பாடல் எடுத்துரைக்கிறது. முதன்முதலில் விருந்தோம்பல் பறவைகளிடமும், விலங்குகளிடமும் இருந்து பின்னரே மனிதனிடம் வந்துள்ளது. இன்றும் கிராமப்புற மக்கள் உணவு உண்ணும் பொழுது நாய், பறவை வந்தால் அவற்றிற்கு உணவிட்டு உண்பர். காக்கைக்கு விருந்திடும் வழக்கம் முல்லைத்திணை மக்களிடம் இருந்துள்ளது. காக்கைக்கு விருத்திட்ட உடனே தலைவனும் வந்து சேர்கின்றான். இல்வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகின்றது. இக்கருத்தினை,

செஞ்சோற்று பலி மாந்திய கருங்காக்கை

( பொருநர்– 188)

பொருநராற்றுப்படைக் கூறுகின்றது. இவ்வழக்கத்தை இன்றும் அமாவாசை விருந்தாக மக்கள் காக்கைக்கு உணவிட்டு மகிழ்கின்றனர்.

இல்விருந்து:

மனிதனின் வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியுடன் வாழ்வதாகும். மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றது. தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ்வதே இல்வாழ்வாகும். அவ்வாறு சேர்ந்து வாழ்கின்ற தலைவன் தலைவியிடத்துக் கூடிமகிழும் இன்பத்தைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் அன்பாகவும், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் உணர்ந்துக் கொள்ளும் பண்பாடாகவும் விருந்தோம்பல் இல்லற வாழ்க்கையில் இருந்துள்ளது. இல்லற வாழ்வில் நிகழும் விருந்தோம்பலினால் உண்டாகும் அன்பினை முல்லைத் திணைப் பாடலில் அறிய முடிகின்றது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உட்இக்

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

‘இனிது’ எனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே

(குறுந் – 167)

ஆயர் வீட்டில் இருக்கும் பசுக்களின் வழியாக பெறப்படும் முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மென்மையான விரல்களை உடைய ஆயர்மகள் குவளை மலரைப் போன்ற மையூண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்பதானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் கணவன் இனிது என்று உண்பதனால் தலைவியின் முகமானது மகிழ்ந்தது. தலைவன் தலைவியின் அன்பின் வெளிப்பாடாகவும் அரவணைப்பின் வெளிப்பாடாகவும் விருந்தோம்பல் இல்வாழ்வில் இடம் பெறுகின்றது.

கறிவிருந்து:

மனிதன் காட்டில் உள்ள விலங்குகளைப் பார்த்தே உண்ணத் தொடங்கினான். முதலில் விலங்குகளைப் போலவே தானும் பச்சையாகவே இறைச்சியை உண்டான். நாகரீகத்தின் வளர்ச்சியினால் சுட்டும் பின்னர் வேக வைத்தும் உண்டான். பண்டைய காலம் தொட்டே விருந்தினருக்குக் கறிவிருந்து அளிக்கும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வழகம் முல்லைத் திணைப் பாடல்களிலும் காண முடிகின்றது. சங்ககால விருந்தினர்களாகிய பாணர், கூத்தர், பொருநர்களுக்குக் கறிவிருந்திட்டு உபசரித்ததை சிறுபாணாற்றுப்படை  கூறுகின்றது.

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் சூட்டின் அமைவரப் பெறுவீர்

(சிறு : 175 – 177)

முல்லை நிலத்தில் கார்காலம் வந்ததை மழையும் பூக்களும் உணர்த்தின. முல்லைக் கொடிகள் படர்ந்த காட்டிடத்து எயிற்றியர் வாழ்ந்தனர். எயின் குலப்பெண்கள் கைகளில் வளையல்கள் அணிந்திருந்தனர். ஆயர்பெண்கள் சமைத்த இனிய ‘தித்திப்பான புளிக்கறியிட்ட சுடுச் சோற்றை ஆமான் சூட்டிறைச்சியோடு நும்பசி ஆறப் பெறுவீர்’ என்று பாணன் கூறும் சொல்லின் வழியாகக் கறிவிருந்து இட்டதை அறியமுடிகின்றது. ஆமான் என்பது காட்டுப்பசு, காட்டு எருதினைக் குறிக்கின்றது. அக்காலத்தில் மாட்டின் இறைச்சியினை உணவாக உட்கொண்டு உள்ளனர் என்பதும் புலப்படுகின்றது.

புல்லரசி சோறு:

முல்லை நிலத்தில் மக்கள் பயிரிட்டு உண்பதற்கு முன்னர் காட்டில் உள்ள கனிகளையும், காய்களையும் உண்டனர். எறும்புகள் சேகரித்து வைத்திருக்கும் புல்லரிசியினை உணவாக உண்டனர். காட்டிடத்துள்ள புற்களில் விளைகின்ற அரிசியினை குழித்தோண்டி எடுத்த செய்தியினை முல்லைப் பாடல்களில் காணமுடிகிறது.

மான்தோல் பள்ளி மகவொடு முடங்கு,

ஈன்பிணவு ஒழியப்போகி, நோன்காழ்

இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்

உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி,

இருநிலக் கரம்பைப் படுநீறு ஆடி,

நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்

(பெரும் : 89 - 94)

முல்லை நிலத்தில் குழந்தைப்பெற்ற எயினப்பெண் குழந்தையோடு மான்தோல் விரிப்பில் படுத்திருந்தாள். அவளைத் தவிர ஏனைய எயின மகளிர் புல்அரிசி எடுக்கச் செல்கின்றனர். வைரம் பாய்ந்த மரத்தடியில் மேல இரும்பு உளிப் போன்ற ஒன்றை இணைத்துக் கொண்டு அதனால் நிலத்தை தோண்டி புல்அரசி எடுக்கின்றனர். அப்புல்லரசியினை நிலத்தைத் தோண்டி உரல்போன்று அமைப்பை ஏற்படுத்தி அந்த உரலில் குற்றித் தூய்மைப்படுத்துவர். அருகே உள்ள கிணற்றில் இருந்து உவரி நீரைக் கொண்டு வந்து வாய் முறிந்த பானையில் உலைநீரை வைத்து அதில் புல்அரிசியையிட்டுச் சமைப்பர். அதனுடன் உப்புக் கண்டமாகிய கருவாட்டையும் வைத்திருப்பர். புல்லரசி உணவினையும் கருவாட்டினையும் சுற்றத்தாரோடு மிகுதியாக உண்ணலாம். இதனை,

நீழல் முன்றில் நில உரல் பெய்து

குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடுங்கிணற்று

வல்ஊற்று உவரி தோண்டித் தொல்லை

முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி

வாராது அட்ட வாடுஊன் புழுக்கல்

(பெரும் : 96 – 100)

என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இப்பாடலின் மூலம் காட்டிடத்தில் வாழ்ந்த முல்லைநில மக்கள்  இயற்கையாக கிடைக்கும் புல்லரிசியினை உணவாக உட்கொண்டதையும் விருந்தினருக்கும் உணவாக அளித்ததையும் அறிய முடிகின்றது.

பால்சோறு:

ஆயர்கள் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலினை சோற்றில் கலந்து உண்டுள்ளனர். ஆயர்களின் வீட்டில் எந்நேரமும் பால் இருந்துள்ளதையும் பால்சோற்றினை உணவாக உண்டதனையும், வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களுக்கும் பால்சோற்றினை உணவாக உபசரித்தனையும் முல்லை நில பாடல்களில் அறியலாகிறது.

சிறுகுழை துயல்வரும் காதின், பணைத்தோள்,

குறுநெறிக் கொண்ட கூந்தல், ஆய்மகள்

அளைவிலை உணவில் கிளைஉடன் அருந்தி,

நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமை, நல்ஆன், கருநாடு, பெறூஉம்

மடிவாய்க் கோவலர் குழவியிற் சேப்பின்

இருங்கிளை எருண்டின் சிறுபார்ப்பு அன்ன

பசுந்தினை முரல் பாலொடும் பெறுருவிர்

(பெரும் – 161 – 168)

முல்லைநில இடைக்குலப் பெண் இருள் புலரும் காலையில் பறவைகள் எழுகின்ற காலத்தில் எழுந்து புலிக்குரல் போன்று ஒலிக்கின்ற தயிர் மத்தினை எடுத்துத் தயிர் கடைவாள். குடைக்காளான் போன்று தயிர் உறைந்திருக்கும். அதைக் கடைந்து அதிலிருந்து வந்த வெண்ணெயை எடுத்துத் தனியாக வைத்துவிட்டு மோரைமட்டும் அதற்குரிய பானையில் எடுத்துக் கொண்டு புள்ளிகளையுடைய அம்மோர்ப்பானையைத் தலையில் மென்மையான சும்மாட்டின் மீது வைத்து விற்கச் செல்வாள். காதில் தாளருவி எனப்படும் சிறுகாதணியை அணிந்திருப்பாள். வலிமையான மூங்கில்போன்ற தோளை உடையவள். குறிய நெறிப்புடைய கூந்தலையுடையவள். இத்தகைய ஆய்மகள் மோரை விற்றுத் தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களை வாங்கி வருவாள். அவற்றைத் தம் சுற்றத்தாருடன் உண்பாள்.

தயிற்கடைந்த வெண்ணெயில் இருந்து பெற்ற நெய்யை விற்றுப் பசும்பொன்னை வாங்க மாட்டாள். எருமை, நல்ல பசு, கன்றுகள் வாங்குவாள். சீழ்க்கை அடிக்கும் இடையர்கள் குடிசையில் நீங்கள் சென்று தங்கினால் உங்கள் சுற்றத்தோடு நண்டுகளின் சிறுபார்ப்பினைப் போன்ற சோற்றைப் பாலுடன் நீங்கள் உண்பீர்கள். இச்செய்தியை மலைப்படுகடாமும் எடுத்துரைக்கின்றது,

கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்

பல்லாட்டு இனநிரை எல்லினிர் புகினே

பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்

(மலை – 415 – 417)

கல்லென்ற ஓசையையுடைய காட்டில் ஆடுகளின் ஓசை கடல் ஒலி போன்றிருக்கும். அத்தகைய ஆட்டிடையர் வீட்டில் இரவுக்காலத்தில் சென்றாலும் பாலும் பாற்சோறும் வெண்ணெயும் உமக்காகச் செய்யாது அவர்களுக்குச் செய்து வைத்திருந்ததை வழிப்போக்கர்களாகிய நீங்கள் பெறுகுவீர். முல்லை நிலத்தில் பாலும் பாற்சோறும் உணவாகவும் விருந்தோம்பலாகவும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

வரகுச்சோறு அவரைப் பருப்பு:

முல்லை நிலத்திற்குரிய உணவாக வரகு, சாமை, முதிரை குறிப்பிடப்படுகிறது. முல்லைநில மக்கள் மிகுதியாக வரகினை உணவாக உண்டுள்ளனர் என்பதை முல்லைத்திணைப் பாடல்களில் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. முல்லை நில உணவாகவும் விருந்தாகவும் வரகு அரிசிச்சோறு இடம்பெற்றுள்ளது என்பதனை

கருவை வேய்ந்த, கவின்குடிச் சீறூர்

நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன,

குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி

புகர்இணர் வேங்கை வீ கண்டன்ன

அவரைவான் புழுக்குஅட்டி, பயில்வுற்று

இன்சுவை மூரல் பெறுகுவீர்

(பெரும் – 191 – 196)

முல்லை நிலத்தில் மக்கள் வாழ்கின்ற பகுதியைச் சுற்றி முள்ளால் அமைந்த வேலியை அமைத்திருந்தனர். அவர்கள் வீட்டு முற்றத்தில் பெண் யானைக் கூட்டம் போன்ற வரகுக் கதிரைப் போட்டு வைத்திருந்தனர். அத்துடன் முன்றிலில் வரகுக் கதிரைத் திரிப்பதற்கு யானையின் கால்கள் போன்ற திரிமரங்கள் இருந்தன. சின்ன வண்டிகளின் சக்கரங்களையும், கலப்பையையும், நீண்ட சுவரில் சார்த்தி வைத்திருந்தனர். அப்பகுதியே உணவாக்கும் சமையல் கட்டாக இருந்ததால் புகைப் படிந்திருந்தது. கார்காலத்து வானத்து மேகங்கள் தோன்றுவது போல அவர்களுடைய குடிசைகளில் வரகு வைக்கோலால் கூரைபோட்டிருந்தனர். அழகிய சிறிய ஊராக அது அமைந்தது. குட்டையான அடியையுடைய வரகுப்பயிரால் வந்த நீண்ட கொத்துக்களையுடைய பூளைப் பூ போன்ற வரகுச் சோற்றையும் வேங்கைப் பூவை ஒத்ததான அவரைப் பருப்பை அவித்தும் வரகுச் சோற்றோடு சேர்த்து முல்லைநில மக்கள் உணவாகத் தருவர். அந்த உணவானது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றை மகிழ்ச்சியுடன் உண்பீர். முல்லைத் திணைக்குரிய வரகுச் சோற்றினை விருந்தோம்பலாக உண்டதை இப்பாடலில் அறிய முடிகின்றது.

வெள்ளாட்டுக் கறிச்சோறு:

காட்டித்து வாழும் முல்லை நில மக்களிடையே மூவினமாகிய பசு, ஆடு, எருமை இருந்தன. ஆட்டிட இடையர்கள் ஆட்டினை கறியாகவும் உண்டு வந்துள்ளனர். வழிப்போக்கர்களுக்கும், விருந்தினருக்கும் ஆட்டில் ஒருவகையான வெள்ளாட்டு கறியினை சோற்றிடன் உணவாக உபசரித்து உள்ளனர். இதனை,

பொன்அறைந் தன்ன நுண்நேர் அரிசி

வெண் எறிந்து இயற்றிய மாக்கண் அமலை

தண்ணென் நுண்இழுது உள்ளீடு ஆக

அசையிளிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்

(மலை – 440 – 443)

பொன்னை நறுக்கியதைப் போன்ற நுண்ணிய தம்முள் ஒத்த அரிசியுடன் வெள்ளாட்டுத் தசையைச் சேர்த்து ஆக்கிய கருமையான சோற்றுத் திரளில் குளிர்ந்த வெண்ணெய் இழுதை உள்ளேயிட்டுச் செய்த உணவைத் தங்கும் நாள்களில் எல்லாம் தினந்தோறும் பெறுவீர். முல்லை நிலத்தில் வெள்ளாட்டு கறி விருந்து இட்டதை இப்பாடல் வாயிலாக அறிய முடிகின்றது.

தினைமாவு விருந்து:

முல்லை நிலத்தில் விளைகின்ற வரகு, சாமை, முதிரை ஆகியவற்றினை அரைத்து மாவாகவும் உண்டுள்ளனர். தினைமாவில் ஆயர் வீட்டில் இருக்கும் நெய்யினையிட்டு கலந்து சுவையாகவும் உண்டனர். இத்திணைமாவினை விருந்தினர்களுக்கும் உபசரித்து மகிழ்ந்துள்ளர். இச்செய்தியினை,

விசையம் கொழித்த பூழி அன்ன

உண்ணுநர்த்தடுத்த நுண்இடி நுவணை

நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்

(மலை – 444 – 446)

சர்க்கரைப் பொடித்த மாப்போன்ற பிற உணவை விரும்பாது தடுக்கும் தினைமாவிலும் நெய்யிழுதை விட்டுச் செய்த உணவையும் தருவர். அதனையும் பெறுவீர். முல்லைத் திணைக்குரிய திணைமாவு விருந்து இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

வருவிருந்து:

நம்வீட்டிற்கு வருகின்ற உறவினர்கள் அறிந்தவர், அறியாதவர் அனைவருக்கும் உணவளித்து விருந்தோம்பல் செய்பவனது வாழ்க்கை ஒருநாளும் கெடுதல் இன்றி மேன்மேலும் வளர்ந்து கொண்டே செல்லும். என்பதனை திருவள்ளுவர்,

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று

(குறள் – 83)

என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தினை சங்க இலக்கியப் பாடல்களிலும் காண முடிகின்றது. சங்ககால விருந்தினர்களாக தலைவனும், கூத்தர், பாணர், பொருநர் இடம்பெறுகின்றனர். தலைவன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் தலைவி, தலைவன் வந்ததும் தன் இல்லத்தில் சமைத்துத் தலைவனுக்குக் கொடுக்கின்றாள். தலைவனும் மகிழ்கின்றான். வழிப்போக்கர்களாய் வருகின்றவர்களுக்கும் இல்லத்தில் உணவிட்டு மகிழ்கின்றனர். இரவு உறங்க செல்வதற்கு முன்வரை வீட்டிற்கு யாரேனும் வருகின்றனரா என்று எதிர்நோக்கிப் பார்க்கும் வருவிருந்தின் இன்றியமையாமையை முல்லைத் திணைப் பாடல் விளக்குகின்றது,

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,

பாணி கொண்ட பல் கால் மெல் உறி

ஞெலி கோல் கலப்பை அதளொடு சுருக்கி,

பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்

நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி

சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே – பொய்யா யாணர்,

அல்லில் அயினும் விருந்து வரின் உவக்கும்,

முல்லை சான்ற கற்பின்,

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.

(நற்றி – 142)

மழைப் பொழிந்து விளங்கிய இறுதி நாளிலே கையில் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டிப் பனையோலைப் பாயோடு முதுகில் சுமந்த பால் விலைகூறும் இடையன். நுண்ணிய மழைத்துளித் தன்னுடம்பில் ஒருபுறம் நனைத்தலைச் செய்ய ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் ‘வீளை’ எனப்படும் அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து சிறிய தலையையுடைய ஆட்டின் தொகுதி பிறபுலம் புகாது மயங்கி அவ்வண்ணமே புறவின் நின்றது. அத்தகைய முல்லை நிலத்தில் இரவுப்பொழுதாய் இருப்பினும் வந்த விருந்திரைக் கண்டு மகிழும் இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும் மென்மையாகிய சாயலையும் உடைய இளமை மாறாத ஆயர்மகள் உறைகின்ற ஊராகும். இப்பாடலின் மூலம் இரவு உறங்க செல்வதற்கு முன்பு வரை வீட்டிற்கு யாரேனும் வருகின்றனரா என்பதனை எதிர்பார்த்து இருக்கும் வருவிருந்தின் உயர்வினை அறியமுடிகின்றது.

செல்விருந்து:

மனிதன் இப்பிறவியில் செய்கின்ற விருந்தோம்பல் மறுமையில் அடுத்தப் பிறவியில் பயன் அளிக்கும் என்பதனை உணர்ந்து தன்னுடைய இல்வாழ்வில் விருந்தோம்பலினை உயர்ந்த அறமாகக் கொண்டு தமிழன் வாழ்ந்துள்ளான் என்பதனை திருவள்ளுவர்,

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு

(குறள் – 86)

என்று குறிப்பிட்டுள்ளார். தான் உபசரித்த விருந்தினரை வயிறுநிறைய உணவிட்டு வழியனுப்பி வீட்டிற்கு வரும் விருந்தினரை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவன் மறுமையில் வானத்தில் உறையும் தேவர்களுக்கு நல்விருந்தாளியாக கருதப்படுவர். இக்கருத்தினை ஆற்றுப்படையில் விருந்தினர்களாகிய நல்விருந்திட்டு உபசரித்ததை முல்லைத் திணைப் பாடல்களில், பொருநர், பாணர், கூத்தர், செல்விருந்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றனர்.

முடிவுரை:

பண்டைய தமிழர்கள் கிடைத்தற்கரிய அமுதம் கிடைத்தாலும் அதை தான் மட்டும் உண்ணாது அனைவரும் பகிர்ந்து உண்ட நிலையினையை

“உண்டாலம்ம இவ்வுலகம்

இந்திரர்அமிழ்தம் இயைவதாயினும்

இனிதெனத் தமியார் உண்டலும் இலரே”

(புறம் – 182)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளின் வாயிலாக அறியமுடிகின்றது. இக்கருத்தினை திருவள்ளுவரும்,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

(குறள் – 90)

என்று குறிப்பிட்டுள்ளார். ஐந்திணைகளில் முல்லை மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள விருந்தோம்பல் பண்பினை முல்லைத் திணைப் பாடல்களின் வாயிலாக மேற்கண்டவாறு அறியலாகிறது. சங்ககாலத்தில் மனிதன் வாழ்க்கையின் கொடையாகவும் பண்பாடாகவும் அறமாகவும் உயர்வாகவும் கருதியது விருந்தோம்பல் ஆகும். அத்தகைய விருந்தோம்பலினை நாமும் வாழ்வினில் கடைப்பிடிப்போம்.

துணைநூற் பட்டியல் :

ச.வே.சுப்பிரமணியன்   –   சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், மாணிக்கவாசகர் பதிப்பகம்

தி.வே.விஜயலட்சுமி -  இலக்கிய ஆய்வுகள், மாணிக்கவாசகர் பதிப்பகம்

கதிர் முருகு –   சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் சாரதா பதிப்பகம்

புலியூர் கேசிகன்  -  சங்க இலக்கியம் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம்

கா. விஜயரத்தினம் -      சங்கக்கால தமிழர் வாழ்வியல், மணிமேகலை பிரசுரம்

சாமி சிதம்பரனார்  -      தமிழர் வாழ்வும் பண்பாடும், சாரதா பதிப்பகம்

நாமக்கல் கவிஞர் உரை  -      திருக்குறள், பூம்புகார் பதிப்பகம்