ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பொருளியல் நோக்கில் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் | TIRUKKURAL AND ARTHASASTRA TOWARDS ECONOMICS

முனைவர் கா. சந்தானலெட்சுமி, இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை | Dr. K. Santhanalakshmi, Associate Professor and Head of Tamil Department, Raja Doraisingam Government Arts College, Sivaganga 30 Apr 2024 Read Full PDF

ABSTRACT:  From ancient times to the present, economic needs have been important in human life. Thiruvalluvar composed Thirukkuralai in three parts: Virtue, Materiality and Pleasure. A virtuous economy is conducive to the development of a country.

The development of any country is related to the happiness of its people. The happiness of the people belongs to the king There is happiness' (Artha Shastra 1.19.34).

The Arthasastra which recites was composed by Sanakya and its 380 hymns helped Chandragupta Maurya in the creation of Akandra Bharata. The beauty of Arthasastra is that it is written in such a way that it can be helpful not only for him but also for everyone.

Thirukkural and Arthasastra present that the king should make the happiness of the people as his commitment as the center of the creation of empires. Written two thousand years ago, these two texts focus on politics, economics and people's lives. It is because both these hundreds follow the principles of simplicity of expression, people's primary truthfulness and individuality that these two hundreds are universally followed till today.

 Thirukkural and Arthasastra make a great contribution to the application of the people. Only the economic views of these two hundred are considered in this review article. Based on Thiruvalluvar's concept that 'without material there is no world', 'material' is important for the prosperity of human life in the earth. It is the wealth earned by good deeds that enriches the country. Globally, economic life is affected by war, drought and natural disasters. Human life is interrelated in the social context. In that way, only the economic concepts of Thirukkural and Arthasastra are taken for this study in the three-dimensional perspective of descriptive approach, sociological approach and comparative approach. The aim of this study is to help in the promotion and protection of the future development of the people.

Keywords

Sevichelvam, seven births, money, commodity, political economy, distribution of wealth, tax exemption, enmity

ஆய்வுச்சுருக்கம்

      பண்டைக் காலந்தொட்டு, இன்றுவரை பொருளியல் தேவைகள் மானுட வாழ்வில் முக்கியமானவை. அறம், பொருள், இன்பம் என முப்பாலாகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார். அறவழிப்பட்ட பொருளாதாரமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமைகின்றது. எந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த நாட்டு மக்களின் மகிழ்ச்சியோடு இயைந்ததாக உள்ளது.

            ‘மக்களின் மகிழ்ச்சியிலேதான் மன்னனின்

             மகிழ்ச்சி உள்ளது’   (அர்த்த சாஸ்திரம் 1.19.34)

என்று உரைக்கும் அர்த்தசாஸ்திரம் சாணக்கியரால் இயற்றப்பட்டது இதிலுள்ள் 380 சுலோகங்களும் அகன்ற பாரதத்தின் உருவாக்கத்தில் சந்திரகுப்த மௌரியருக்கு உதவின. அவருக்கு மட்டுமல்ல இன்றுவரை அனைவருக்கும் உதவக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளமையே அர்த்தசாஸ்திரத்தின் சிறப்பாகும்.

      பேரரசுகள் உருவாக்கத்தின் மையமாக மக்களின் மகிழ்ச்சியையே மன்னன் தனது உறுதிப்பாடாகக் கொள்ள வேண்டும் என்பதையே திருக்குறளும், அர்த்தசாஸ்திரமும் முன்வைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட  இவ்விரு நூற்களும் அரசியல், பொருளாதாரம், மக்கள் வாழ்வு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. இவ்விரு நூற்களும் கருத்து கூறுவதில் எளிமை மக்களின் முதன்மை உண்மைப்பாடு நிலைப்பாடு தனித்தன்மை ஆகியனவற்றைப் பின்பற்றுவதால்தான் இன்று வரை இவ்விரு நூற்களும் உலகளாவிய பின்பற்றுதலுக்கு உரியதாகின்றன.

      திருக்குறளும், அர்த்தசாஸ்திரமும் மக்களுக்கான பயன்பாட்டில் சிறப்பான பங்களிப்பையே தருகின்றன. இவ்விருநூற்களின் பொருளியல் நோக்கிலான கருத்துக்கள் மட்டுமே இவ்வாய்வுக் கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ‘ பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற திருவள்ளுவரின் கருத்தின் அடிப்படையில் மண்ணுலகில் மானுட வாழ்க்கை வளம் பெற ‘பொருள்’ முக்கியமானதாகின்றது. நன்மக்களால் நல்வழியில் ஈட்டப்படும் பொருளே நாட்டிற்கு வளம் சேர்க்கும்.

      உலகளாவிய நோக்கில் போர், பிணி, இயற்ககைச்சீற்றங்களால் பொருளாதார வாழ்க்கை பாதிப்படைகிறது. சமூக சூழ்நிலை மண்டலத்தில் மனித வாழ்வானது ஒன்றோடொன்று தொடர்புடையதாக அமைகின்றது. அந்த வகையில் விளக்கமுற அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை மற்றும் ஒப்பீட்டாய்வு அணுகுமுறை என்ற முப்பரிமாண நோக்கில் திருக்குறள் மற்றும் அர்த்தசாஸ்திரத்தின் பொருளியல் கருத்துக்கள் மட்டும் இவ்வாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மக்களின் எதிர்கால வளர்ச்சியின் உயர்விற்கும் பாதுகாப்பிற்கும் உதவும் வகையில் இவ்வாய்வின் நோக்கம் அமைகிறதெனலாம்.

கருச்சொற்கள்

      செவிச்செல்வம், ஏழுபிறவி, பண்கள், உல்குபொருள், அரசியல் பொருளாதாரம், செல்வப்பங்கீடு, வரிவிலக்கு, பகைச்செருக்கு

முன்னுரை

      ‘பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருள்’ என்பதால் பொருளாதாரமே உலகின் ஆதாமாக உள்ளது. சமூக கட்டமைப்பின் புற, அக செயல்பாட்டிற்கு ஆதாரமாக பொருளாதாரமே திகழ்கிறது. ஒரு நாட்டின் உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படை தேவை முதல் அனைத்து தேவைகளுக்கும் பொருளே முக்கியமானதாகும். பொருளாதாரம் பற்றி பல்வேறு விவாதங்களும் கருத்துக்களும் காலந்தோறும் பரிணமித்து வந்து கொண்டே இருக்கின்றன. இங்கு திருக்குறளும் அர்த்த சாஸ்திரமும் கூறும் பொருளியல் கருத்துக்கள் மட்டுமே ஒப்பீட்டு ஆய்வுக்குரியதாகின்றன. வரலாற்று அணுகுமுறை, சமூக அணுகுமுறை, சார்ந்த ஒப்பீட்டு ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும்

      ‘ஆற்றங்கரைகள் நாகரிகத்தின் தொட்டில்கள் என்பர். நாகரிகத்தின் அறிவுக்கண்ணாகத் திகழ்பவை ஆன்றோர்களின் படைப்புக்களே ஆகும். இப்படைப்புகளே பாமரையும் பண்டிதர் ஆக்கும் திறன் படைத்தவை. கல்வி அறிவானது செவிச்செல்வமாகவும் அழியாச் செல்வமாகவும், ஏழுபிறவியும் தொடரும் செல்வமாகவும், வளரும் செல்வமாக வாழும் செல்வமாகவும் சுட்டப்படுகிறது. எல்லாச் செல்வத்தின் அடிப்படை கல்விச் செல்வமாகும். அதன் அமுதசுரபியாகத் திகழ்பவை திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் ஆகும். திருக்குறள் - செம்மொழி தமிழ்மொழியில் இயற்றப்பட்டது. அர்த்தசாஸ்திரம் வேதமொழியான வடமொழியில் இயற்றப்பட்டது. இவ்விரு நூல்களும் பிரபஞ்ச முழுமைக்குமான பன்நோக்கு கருத்தியலை காலம் கடந்தும் செயலாற்றும் நிலையில் உருவானவை என்பது உண்மையாகும். ‘மக்களினத்தின் வேதமாக விளங்கும் திருக்குறளில் மில்டனின் கவிநலனும் தாந்தேயின் காப்பிய அழகும், செகப்பிரியரின் உலகப் பொதுமையும் பிளேட்டோவின் இலட்சிய நோக்கும் மாக்கசு அரேலியசின் அறவேட்கையும் ஏற்ற அளவில் இணைத்தும் இழைத்தும் கலந்தும் காணப்படுகின்றன.1 என்ற கருத்தானது திருக்குறளின் சிறப்பினை சிறப்பிக்கும்.

      அர்த்தசாஸ்திரம் 15 புத்தகங்களையும் 150 பிரிவுகளையும் 80 உட்பிரிவுகளையும் 6000 சுலோகங்களையும் கொண்டது.2 சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் அதன் முதல் சூத்திரத்தில் தான் இதற்கு முன் இருந்த பொருளியல் நூல்களிலிருந்து உருவாக்கப்பட்டதை இவ்வாறு கூறுகிறது. ‘இந்த ஒன்றுபட்ட அர்த்தசாஸ்திரம் பெரும்பாலும் இதற்கு முன்னிருந்த ஆசிரியர்கள் நிலத்தைக் கைப்பற்றுவது, காப்பது, தொடர்பாக எழுதிய அர்த்தசாஸ்திரங்கள் (பொருளியல் நூல்கள்) அனைத்தையும் முடிந்தவரையில் தொகுத்து உருவாக்கப்பட்டது.3 (1:1:1) என்பதிலிருந்து அர்த்தசாஸ்திரத்தின் காலப்பழமையும் கருத்துச் செழுமையும் புலனாகிறது.

பொருளியலின் வகைப்பாடுகள்

            இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காக்க

            வகுத்தலும் வல்ல தரசு            (குறள் - 385)

      என்ற குறளுக்கு ஏற்ப பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலும் உருவாக்கல், இயற்றல் ஆகும். இயற்றிய பொருள்களைத் தொகுத்தல் ஈட்டல் என்பதில் அடங்கும். அப்பொருள் வருவாயைக் காத்தலும் காத்தவற்றை அறம் பொருள் இன்பம் வீடு என்ற நல்வழிகளில் வகுத்தும் பகுத்தும் செலவிடுவதில் வல்லதாக அரசு மட்டுமல்ல குடிமக்களும் திகழ வேண்டும் என்பதையே திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கூறுகின்றன.

பொருளை இயற்றும் வழிகள்

      பொருளை இயற்றுவதற்கான வழிகள் அறன் வழிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையே இருநூற்களும் கூறுகின்றன. விவசாயம், வணிகம் என்பனவே பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்.

வேளாண்மை வருவாயும் வள்ளுவமும்

      வேளாண் சமூகமே உலகத்தின் பெரும்பாலான சமூகமாகத் திகழ்கிறது. “சமூக முன்னேற்றம் என்பது வெளியிலிருந்து வருகின்ற ஒன்றல்ல ஒவ்வொரு சமூகமும் அதனைச் சேர்ந்த தனியங்களும் ஒன்றிணைந்து பெற்றுக் கொள்கின்ற ஒரு சமூக மாற்றம்”.4 சமூக வளர்ச்சியோடு சமூக மாற்றம் தொடர்புடையது. இது வேளாண்மையோடு தொடர்புடையது.

            “சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்

            உழந்தும் உழவே தலை”           (குறள் - 1031)

      என்பது குடியினால் வள்ளுவர் கூறும் கருத்தாகும் உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் அதன் மையம் உழவுத்தொழிலே ஆகும். அதுவே தலையானதும் ஆகும். ஏனெனில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனப் புறப்பாட்டு பண்ணனைச் சிறப்பிக்கிறது.

            ‘வரப்புயர நீர் உயரும்

            நீர் உயர நெல் உயரும்

            நெல் உயர குடி உயரும்

            குடி உயர கோன் உயரும்’

      என்ற ஒளவையின் பாடல் குடியும், கோனும் இயைந்து வளரும் மார்க்கத்தைக் காட்டும். விவசாயம் செழித்தால் மண்ணும் பொன்னாகும்.

            இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்

            நிலம் என்னும் நல்லாள் நகும்      (குறள்  1040)

      என்ற குறளில் நிலமகள் சோம்பி இருப்போரைப் பார்த்துச் சிரிப்பாள் என்று வள்ளுவர் கூறுகிறார்.’தாமஸ்மன் என்பார் உற்பத்தியில் தன்னிறைவு காண வேண்டுகின்ற நோக்கோடு நிலத்தின் ஒருபகுதியையும் தரிசாகப் போடாதே என்ற கொள்கையை வற்புறத்தினார்.5 என்ற கருத்து வள்ளுவத்தோடு ஒப்புநோக்கத்தக்கது. சாணக்கியரும் நிலத்தின் பாகுபாட்டையும் பயன்பாட்டையும் விளக்கி உள்ளார்.

அர்த்தசாஸ்திரமும் வேளாண்மையும்

      ‘விவசாயத்திற்கு தகுதியில்லாத நிலங்களை வீட்டு விலங்குகளின் மேய்ச்சலுக்காக அவர் ஒதுக்க வேண்டும்6|(2.2.1) இதிலிருந்து பொருளாதார மண்டலங்கள் அனைத்தும்: விளை நிலங்களுக்கு தகுதியுள்ள நிலங்கள் ஒதுக்கப்பட்ட பின்பே வடிவமைக்கப்பட்டன என்ற கருத்தினைப் பெற முடிகிறது. இன்றும் கூட விவசாயத்திற்கும் அதுசார்ந்த பிறதொழில்களுக்கும் தகுதியில்லாத இடங்களே வீட்டடி மனைகளாக்கப்பட வேண்டும் என்ற வரையறை உள்ளது. இதனை மீறி, ஏரி குளம், கண்மாய், கால்வாய், விளைநிலங்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறும் போது இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது நிதர்சனம். அரசர் விவசாயத்துடன் வலுவான தொடர்பு உள்ளவராக இருக்கிறார். விவசாயிகளுள் அவரும் விவசாயியாகவே உள்ளார். விவசாயத்தொழிலை மேற்கொண்ட குடும்பங்கள் தான் அதிகமாக இருந்தன. அவர்களே நாட்டின் இதயமாக விளங்கினார்கள். ஏனெனில் வரி வசூலில் பயிர்வரியே முதன்மையாக இருந்தது7.

      அரசர் தானே ஒரு பெருநிலப்பரப்பைக் கொண்ட விவசாயியாகவும் இருக்கிறார். சித் என்று அரசரின் சொந்த விளை நிலம் அழைக்கப்பட்டது. தானியங்கள், பயிர்வகைகள், விவசாய முறைகள் பற்றி அர்த்தசாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது.(2.24.1.4) விவசாயம் நடைபெறாத பகுதியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும் நிலம் மனிதரின் காப்பகமாக கருதப்படவேண்டும் என்பதையும் சாணக்கியர் எடுத்துரைத்துள்ளார்.

            ‘உறுபசியும் ஓவாப்பணியும் செறுபகையும்

            சேராதியல்வது நாடு;’       (குறள்  734)

      என்ற அரணியலிள் குறளானது நாட்டின் முதல் தகுதி பசியின்றி குடிகள் வாழ்வதைக் கூறுகிறது. பசியின்றி வாழ்தல், பிணியின்றி வாழ்தல், பகையின்றி வாழ்தல் என்பனவே நாட்டின் அரண்களாகும். இதற்கு அடிப்படையானது வேளாண்மை என்பதையே திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் எடுத்துரைக்கின்றன.

வருவாய் இயற்றலில் பிறதொழில்கள்

      நாட்டின் வணிகம், அவை சார்ந்த முறைகள்; தொழில்களும்  வருவாயை இயற்றத் தரவல்லனவாகும்.

            ‘உறுபொருளும்  உல்கு பொருளும் தன் ஒன்னார்த்

             தெறு பொருளும் வேந்தன் பொருள்’            (குறள் - 756)

      இரையாக வரும் பொருளும், சுங்கமாக வரும் பொருளும் பகை நாட்டிலிருந்து திரையாக வரும் பொருளும் அரசருக்கு உரிய வருவாய் காரணிகளாக அமைகின்றன. அர்த்தசாஸ்திரத்தில் ‘வர்த்த என்ற பொருளாதாரத்தின் மூன்று கிளைகளில் இரண்டில் பொருளாதார மண்டலங்களாக விளை நிலமும் மேய்ச்சல் நிலமும் விளங்குகின்றன. அதன் மூன்றாவது கிளையான வர்த்தகம் இரண்டாவது புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில் சந்தைகள் என் வடிவில் இல்லாமல் வர்த்தவழிகள் என்ற தலைப்பில் அமைந்திருக்கின்றன.8 வர்த்தக வழிகள் தொழிற்சாலைகள், இயங்குமிடங்கள் உற்பத்தி பொருள்களைக் கொண்டு செல்லும் விதம் அதற்கான கண்காணிப்பு விலைநிர்ணயம், வருவாயின் நிலைப்பாடு ஆகியனவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.வர்த்தக வழிகளைப் பற்றிப் பேசும் போது அர்த்தசாஸ்திரம் நிலவழி, நீர்வழி, சந்தை இருக்கும் நகரங்கள்(பன்ய பட்டினம்) ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது.9(2.1.1.9) வனப்பாதுகாப்பு(2.1.7.1) பற்றியும் சாணக்கியர் கூறியுள்ளார்.

      வணிகத்தின் வியாபாரவரி,அரசருக்குச் சேரும் வரி(2.2.7.11)வர்த்தக கண்காணிப்பாளர்(2.16.1) அயல்வணிகம்(2.16.4.7) பற்றி அர்த்தசாஸ்திரம் மிக விரிவாகக் கூறுகிறது. இப்பகுதிகள் காலத்தின் சுயசரிதையாக அமைகிறது. ‘அரசருடைய லாபம் வணிகருடைய லாபம் பொருட்களை நியாயமான நிலையான விலைகளுக்கு வாங்க வேண்டுமென்ற மக்களுடைய விருப்பம் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையை அர்த்தசாஸ்திரம் தெளிவுபடுத்துகிறது.10

      அரசின் வெற்றி வலுவான பொருளாதாரத்தைச் சார்ந்துள்ளது. இயற்றல் ஈட்டல் என்பதில் அரசும் பொருளாதாரமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன இரண்டறக் கலந்துள்ளன என்பதைத் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் கூறுகிறது.

பொருளியலில் காத்தலும் வகுத்தலும்

      பொருளைக் காக்க வேண்டும். பொருள் நம்மைக் காக்கும்.

            ‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

            எஃகதனிற் கூரியதில்’        (குறள் - 759)

      என்பதில் பகைவரின் செருக்கை அழிக்கும் கூரிய ஆயுதம் பொருளே என வள்ளுவர் கூறுகிறார். குன்றின் மேல்நின்று யானைப்போர் காண்பது போன்ற பாதுகாப்பினைச் செல்வமே வழங்கும் என வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.

      இயற்றி காத்த செல்வத்தை பிறருக்கு நல்குதலே செல்வத்தின் பயன் எனப் பொருளாதார பகிர்வு பற்றி திருக்குறள்,

            பயன்மரம் உள்ளுர் பழுத்தற்றால் செல்வம்

            நயனுடையான் கண்படின்         (குறள் - 216)

      என்று கூறுகிறது. ஊரின் நடுவே உள்ள பழங்கள் கொண்ட மரம் போல நல்நெஞ்சம் உடையவனிடம் உள்ள செல்வம் பயன் தரும்.

            அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்

            பெற்றான் பொருள் வைப்பழி             (குறள் - 226)

            தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

            வேளாண்மை செய்தற் பொருட்டு   (குறள் - 231)

      என்ற குறள் அறம், பொருள், இன்பம் என்ற வகைப்பாட்டின் அடிப்படையில் மனிதப்பிறவியின் நோக்கத்தினை எடுத்துரைக்கும். அன்பினையும் அறத்தினையும் தரக்கூடிய இன்ப வாழ்விற்குரியதாக அறன்வழிபட்ட பொருள் மறுமைக்கும் மனிதப்பிறவிக்கும் பயன்தரக் கூடியது என வள்ளுவர் கூறுகிறார்.

      சுhணக்கியரே பொருளாதாரப்பங்கீடு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.’பல்வேறு விருப்பங்களிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்திப் பொருளாதாரத்தின் மூலம் அனைவரும் நன்மையடையச் செய்வது அரசின் முக்கிய பணியாகும்.11 ‘வரிவிலக்குகளின் காலம் முடியும்போது உதவிகளைச் செய்து அரசர் ஒரு தந்தையைப் போல நடந்து கொள்ள வேண்டும்12(2.1.13.18) என சாணக்கியர் கூறுகிறார். இதனையே வள்ளுவரும்,

            முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

            இறை என்று வைக்கப்படும்        (குறள் -  )

      என்கிறார். தந்தையை விட இறைவனாகவே அரசரை வள்ளுவர் காட்டுகிறார்.

      கால்நடைகளை கொள்ளையர்களிடமிருந்து மீட்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.13(2.2.9.17) என செல்வங்களைக் காக்கும் தன்மையைச் சாணக்கியர் சுட்டுகிறார். ‘கிராமப்புற மக்களுக்கு ஆபத்து வரும் காலங்களில் தேவைக்காக அரசர் களஞ்சியத்திலிருந்து சரிபாதியை ஒதுக்கி வைத்துவிட்டு மற்றொரு பாதியைத் தமக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்14.(2.15.22.23) என்றவாறு செல்வப்பகிர்ந்தளிப்பை பற்றி அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. செல்வத்தின் நோக்கம் பாதுகாப்பும், உதவுதலுமே என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது எனலாம்.

முடிவுரை

      காலத்தின் பொருளாதாரப் பெட்டகமாக, பொருளாதாரத்தின் இருதட்டுக்களாக திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் விளங்குகின்றன. நாணயத்தின் இருபக்கங்களாக நாளைய தலைமுறைக்கும் அரசியல்,பொருளாதாரத்தை கொண்டு செல்லும் படைப்புக்களாகத் திருக்குறளும் அர்த்தசாஸ்திரமும் திகழ்கின்றன. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் என்ற நிலைகளில் இவ்விரு நூல்களும் இணைந்தே செல்கின்றன. ஆனால் ஒப்புரவு பொருளாதாரம் பொதுவுடைமைப் பொருளாதாரம் ஆகியவற்றின் வெளிப்பாடாக; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்; ஈதல் இசைபட வாழ்தல் என்ற வள்ளுவத்தின் பொருளியல் கோட்பாடே மானுடமேன்மைக்கு வழிகாட்டும் வகையில் உள்ளதை இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது.

குறிப்புகள்

1.     க.த. திருநாவுக்கரசு, தமிழ்ப்பண்பாடு ப.18

2.     R. Sharmasastry kavtilya’s  page – 9 Translated to English Arthashastra. Such are the contents of this science there are on the whole 15 books 150 chapters 180 sections and 6000 slokas.

3.     தாமஸ் ஆர் டிரவுட்மன் அர்த்தசாஸ்திரம் எஸ்.கிருஷ்ணன் (தமிழில்) உலகின் முதல் பொருளாதார நூல் ப.32

4.     அ. சண்முகதாஸ் ச.மனோன்மணி, திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுப்பு ஆசிரியர்கள் தொகுப்பு II)

5.     தி. முருகரத்தினம் வள்ளுவம் வகுத்த தொகுப்பும் பகுப்பும், பொருளியல் - கருத்தரங்கக் கட்டுரைகள் ப.34

6.     தாமஸ் ஆர் டிரவுட்மன் அர்த்தசாஸ்திரம், எஸ்.கிருஷ்ணன் (தமிழில்) உலகின் முதல் பொருளாதார நூல் ப.92

7.     மேலது ப.86

8.     மேலது ப.95

9.     மேலது ப.96

10.    மேலது ப.129

11.    மேலது ப.147

12.    மேலது ப.89

13.    மேலது ப.60

14.    மேலது ப.60

 

துணைநூற்பட்டியல்

1.சண்முகதாஸ்.அ                           

திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு I

மனோண்மணி ச (தொகுப்பு ஆசிரியர்கள்)       

பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை   மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடக்கு மகாணம்.

முதற் பதிப்பு – 2021

2.தாமஸ். ஆர்.டிரவுட்மன்                     

அர்த்தசாஸ்திரம்

(தமிழில் எஸ்.கிருஷ்ணன்)                     

உலகின் முதல் பொருளாதார நூல்

3. முனைவர் க.த. திருநாவுக்கரசு,               

தமிழர் பண்பாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி சென்னை  - 600 112

இரண்டாம் பதிப்பு 2009

4. முனிசாமி. வீ                            

திருக்குறள் அதிகார விளக்கம்

வானதி பதிப்பகம், சென்னை

முதற் பதிப்பு – 1988

5. முருகரத்தினம் தி                         

வள்ளுவம் வகுத்த பொருளியல்

தொகுப்பும் பகுப்பும்                            

கருத்தரங்கக் கட்டுரைகள்

 திருக்குறள் ஆய்வகம்

 திருக்குறள் ஆய்வக வெளியீடு – 14

 மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்

 மதுரை – 21 முதற்பதிப்பு – 1975

6.  Shamasastry kavtilaya’s Arthashastra, Banglore Government press - 1915