ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள் | Creative Strategies in Suryakandan Novels

கட்டுரையாளர்: இரா. வசந்தி, முனைவா் பட்ட ஆய்வாளா் (பகுதிநேரம்), தமிழ்த்துறை, கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோபி செட்டிபாளையம் - 638 453 } நெறியாளா்: முனைவா் மு கருப்புசாமி, உதவிப்பேராசிரியா், கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோபி செட்டிபாளையம் - 638 453 30 Apr 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     இலக்கியத் தளத்தில் படைப்பாளரைத் தனித்தன்மையுடன் அடையாளம் காட்டுவதற்கு உத்திகள் பயன்படுகின்றன. படைப்பாளர் தம் படைப்புகளில் கையாளும் நுணுக்கமான படைப்புக்கூறே உத்திகள் எனப்பெறுகின்றன. இலக்கியங்களில் கருத்துகளை வெளிப்படுத்தக் கையாளப்பெறும் நுட்பமாக உத்திகள் அமைகின்றன. பல்கிப் பெருகும் படைப்பிலக்கியங்களையும் படைப்பாளரையும் குறிப்பிட்டத்தனித்தன்மையுடன் வாசகர்கள் நுகரவும் அறியவும் உத்தி முறைமை உதவுகின்றது. படைப்பாளரின் தனித்தன்மையை மதிப்பிடும் அளவீட்டு நுட்பமாகவும் மொழிநடையை அறிந்திட உதவும் கலைநோக்கியாகவும் உத்திகள் அமைகின்றன. அத்தகு உத்திகளைக் கொங்கு நாட்டுப் படைப்பாளர் சூர்யகாந்தன் புதினங்களில் பொருத்திக் காண்பதன் வாயிலாக அவரது படைப்பாளுமையை அறிய இயலும் எனும் கருதுகோளை முன்வைத்து சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள் எனும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Abstract

      Techniques are used to uniquely identify the author in a literary site. Techniques are the finer details that the creator uses in his creations. Strategies are the techniques used to express ideas in literature. The strategy helps readers to consume and learn about a wide variety of genres and creators with specificity. Techniques are a measuring technique to assess the individuality of the creator and an artistic approach to know the language. This review article titled Creative Techniques in Suryakandan's Novels proposes the hypothesis that we can understand the creative personality of the Kongu creator Suryakandan by applying such techniques in his novelties.

திறவுச் சொற்கள்

      சூர்யகாந்தன், கொங்குநாடு, படைப்பியல், உத்திகள், வட்டாரப் புதினம்

Keywords

      Suryakandan, konguNadu, Creative, Strategies, Regional Novelty

முன்னுரை

     இலக்கியங்கள் காலத்தை உணர்த்தும் கண்ணாடியாக அமைகின்றன. மனித வாழ்க்கையை ஏடுகளில் ஆவணப்படுத்தும் இலக்கியங்களில் சமூகத்தின் பிரதிநிதியாகப் படைப்பாளர் அமைகின்றார். தான் வாழும் சமூகத்தில் அவதானித்தக் கருத்துகளையும் தனது படைப்புத் திறனையும் கற்பனை வனத்தையும் இழைத்துப் படைப்பிலங்கியங்களைப் படைப்பாளர்கள் படைக்கின்றனர். நிகழ்வு ஒன்றாயினும் அதை வெளிப்படுத்தும் முறைமை சார்ந்து நிகழ்வின் தன்மையும் சுவையும் மாறுபாடு அடைகின்றது. எந்தவொரு படைப்பும் அதன் கருத்துருவை விட அது சொல்லப்படும் முறைமை சார்ந்தே வாசகர் தளத்தை எளிதில் தன்வயப்படுத்துகின்றது. காலம் நினைவில் கொள்ளத்தக்க படைப்புகள் அதன் படைப்புத் திறனாலே தனித்தறியப்பெறுகின்றன. அத்தகு திறனைப் படைப்பாளரின் படைப்பியல் உத்தி எனக் கொள்ளலாம். இத்தகு படைப்பியல் உத்தியை சூர்யகாந்தனின் புதினங்களில் பொருத்திப் பார்த்தல் சூா்யகாந்தன் புதினங்களில் படைப்பியல் உத்திகள் எனும் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

படைப்பாளர் - சூர்யகாந்தன்

      படைப்பாளா் சூா்யகாந்தன் கொங்குநாட்டில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரின் ராமசெட்டிப்பாளையத்தில் பிறந்தவர். மருதாசலம் எனும் இயற்பெயா் கொண்டவர். வேளாண்மைத் தொழில் புரியும் குடும்பத்தில் பிறந்ததால் வயல்வெளிகளில் இயற்கையில் இயைந்து வாழும் வாய்ப்பைத் தம் வளா்பருவத்தில் பெற்றவா்.

      கவிதை, சிறுகதை, புதினம் எனப் படைப்பிலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டவர். இதழ்களில் பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். வானம்பாடி இயக்கத்துடன் இவருக்கு ஏற்பட்டத் தொடா்பு தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கும் உந்துதலை இவருக்குள் விதைத்தது. 1984 இல் அம்மன் பூவோடு எனும் புதினத்தின் வழி புனைவியலக்கிய வெளியில் தன் முதல் தடம் பதித்தவர்.

ஆய்வு எல்லை

      சூா்யகாந்தனின் படைப்புகளுள் மானாவாரி மனிதா்கள், விதைச் சோளம், கல்வாழை, அம்மன் பூவோடு, ஒரு வயல்வெளியின் கதை, அழியாச் சுவடு, கிழக்கு வானம், எதிரெதிர் கோணங்கள், முள் மலர் வேலி, பூர்வீக பூமி உள்ளிட்டப் பத்துப் புதினங்களை ஆய்வு எல்லையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

உத்தி - சொல்லும் பொருளும்

     உத்தியை ஆங்கிலத்தில் டெக்னிக் என்பர். சிறப்பாகச் சொல்லுதல், மொழிதல், கலைநுணுக்கக்கூறு ஆகிய சொல்லாடல்கள் உத்தியைக் குறித்தமைகின்றன. படைப்பாளர்கள் கையாளும் கலைநுட்பத்தின் மாற்று வடிவமாக உத்திகள் அமைகின்றன.

      “கருத்துகள் எம்முறையில் எத்தகைய மொழியில் எவ்வைமைப்பில் வெளியிடப்பெறவேண்டும் எனும் நுட்பமே உத்தி”1 எனும் வரையறை உத்தியை அறிந்து கொள்ளத் துணைசெய்கின்றது.

      “உள்ளத்தில் பொங்கி வரும் அனுபவ நுகர்வை, உணர்ந்த அளவில் நினைத்த பொருளில் வெளிப்படுத்தக் கவிஞர் வெளிப்படுத்தக் கையாளும் லாவக பாவமே உத்தியை உணர்த்தும் முறை” 2 என க.ப. அறவாணன் குறிப்பிடுகின்றார்.

      படைப்பாளர்கள் தம் கருத்துகளை வெளிப்படுத்தும் ஊடகமாக உத்திகளைக் கையாள்கின்றனர். படைப்பவரும் படிப்பவரும் படைப்பில் ஏற்கும் வகையில் உத்திகள் அமைக்கப்பெறுதல் வேண்டும். படைப்பாளின் கலையுணர்வு செம்மையுறும் போது  உத்தி முறைமையாகப் பரிமாணம் கொள்கின்றது.

சூர்யகாந்தன் புதினங்களில் உத்தி

      புதினங்கள் புனைவிலக்கிய வகைமை சார்ந்தவை. நவீனத் தமிழிலக்கியத்தின் நாளங்கள் புதினங்களில் உயிர்ப்படைகின்றன. படைப்பிலக்கியங்கள் படைப்பாளரின் தனித்த முத்திரையைப் பதிவு செய்ய இடமளிக்கின்றன.

     “நாவலாசிரியர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் அவருடைய படைப்பில் நல்ல உத்தி நுணுக்கங்கள் இல்லையென்றால் அவரது நாவல் சிறக்காது” 3

எனும் கருத்து புதின இலக்கியங்களில் உத்திகள் பெறுமிடத்தை உணர்த்தி நிற்கின்றன. படைப்பியல் உத்திகளின் பல்வகைமைகளுள்,

1. நோக்குநிலை உத்தி 2. குறியீட்டு உத்தி 3. பின்னோக்கு உத்தி 4. நனவோடை       5. தொடர் உத்தி எனும் ஐந்து உத்திகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

1. நோக்குநிலை உத்தி

     கதைப்பின்னலுடன் கதைக்கருவை வெளிப்படுத்தப் படைப்பாளர் கையாளும் உத்தியாக நோக்கு நிலை அமைகின்றது. கதை யாருடைய நோக்கில் சொல்லப்படுகின்றது என்பது நோக்குநிலையின் அடிப்படையாகும். “யாருடைய நோக்கில் கதை சொல்வது என்று முடிவு செய்வதை நோக்குநிலை என்பர்”4 எனும் கூற்று இக்கருத்துக்கு வலுசேர்க்கின்றது.

      படைப்பாளர் கதையைத் தானே கூறுதல், கதைமாந்தர்கள் கதையைக் கூறுதல், கதைக்கு வெளியே நின்று மூன்றாம் மனிதர் கதையைக் கூறுதல் எனும் மூன்று நிலைகளில் நோக்குநிலை அமைகின்றது. இவற்றுள், படைப்பாளர் கதையைத் தானே கூறுதல், கதைமாந்தர்கள் கதையைக் கூறுதல் எனும் இரு நோக்குநிலைகள் சூர்யகாந்தன் புதினங்களில் வெளிப்படுகின்றது. சான்றாக, மானாவாரி மனிதர்கள் புதினத்தில்,

“காலத்தின் ஓட்டமதான் எவ்வளவு வேகமாகச் செல்கின்றது. எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை நாட்கள்தான் தீர்மானிக்கின்றன என்பது போல காலத்தின் இந்தப் பயணம் இடையறாமல் ஓடிக்கொண்டிருந்தது”5எனப் படைப்பாளர் கதைக்களத்திற்கு வெளியே நின்று கதையை நோக்கி நகர்த்துகின்றார்.

      எதிரெதிர் கோணங்கள் புதினத்தில் தந்தை சீனிவாசனை மகள் பாக்யரதியின் நோக்குவழி படைப்பாளர் முன்னிறுத்துகின்றார்.

“ஆம்பிளைகளோடு பேசவே கூடாதுன்னா என்ன வீட்டுக்குள்ளாரவே திரை போட்டு பத்திரமா வச்சிருக்கனும். சில நூறு ரூபாய் சம்பளத்துக்காக என்ன ரோட்டுக்கு கூட்டிண்டு வந்து இப்படி பஸ் ஸ்டேண்டுல நிக்க வச்சுண்டு கீழ்த்தரமா எச்சரிக்கை பண்ணியிருக்க வேண்டாம். அப்பா இனிமேலாவது தயவு செஞ்சி எதுவும் சொல்லாதீங்க”6 எனும் பாக்யரதியின் கூற்றின்வழி, சீனிவாசன் வாசகர்களுக்கு வில்லன் போன்ற தோற்றத்தில் தெரிகின்றார். இவ்வாறாக நோக்குநிலை வாசகர்களுக்குப் புதினத்தை வாசிக்க உதவும் நுண்ணோக்கியாக அமைகின்றது.

2. குறியீட்டு உத்தி

      குறியீட்டு உத்தி என்பது படைப்பாளர் சொல்லக் கருதிய பொருளைத் தம் படைப்பில் அதனையொத்த பிறிதொரு பொருளின் துணைகொண்டு உரைத்தலாகும். சூர்யகாந்தன் தம் புதினங்களின் தலைப்புகளை அப்புதினத்தின் கதைப்பின்னலில் இடம்பெறும் நிகழ்வுகளின் குறியீடாக அமைத்துள்ளார். அதனைத் தலைப்புப் பொருத்தம் என்றும் குறிப்பர்.

      அம்மன் பூவோடு புதினத்தில் வன்மங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பொம்மனைக் கைது செய்ய வரும் காவல்துறையை எதிர்த்து நிற்கும் பொம்மனின் கோபம் அம்மன் பூவோடு போல வெம்மையுடன் இருந்தது. அநீதிக்கு எதிரான புரட்சியின் கோபக் கனலை அம்மன் பூவோட்டுடன் ஒப்புமைப்படுத்தும் சூர்யகாந்தன்,

     “நியாயங்களைக் காக்கவும்.. அநியாயங்களை வேரோடு சாய்க்கவும்.. கூடிய சர்வ வல்லமை இந்தப் பொதுமக்களின் கைகளுக்கே வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்ட போலிஸ் ஜீப்கள் பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்தோடிவிட்டன. கூட்டத்தின் மையத்தில் வாலிபத் தலைவனாய் தணலின் பிம்மபமாய் பொம்மன் நின்றிருந்தான். கோயில் வாசலில் அம்மன் பூவோடு அக்கினியின் உயிர்த் துடிப்பில் ஆவேசமாய்க் கனிந்து சிவந்தது”7 பொம்மனை அம்மன் பூவோட்டோடு படைப்பாளர் ஒப்பிடுகின்றார். பொம்மனின் அறச்சீற்றத்திற்கு அம்மன் பூவோடு குறியீடாக அமைகின்றது.

3. பின்னோக்கு உத்தி

      கதைப்பின்னலில் கால வரிசைப்படி கதைக்களத்தை அமைக்க இயலாதபோது படைப்பாளர் பயன்படுத்தும் உத்தியாக பின்னோக்கு உத்தி அமைகின்றது. நிகழ்வுகளை காரண காரியத்துடன் வாசகர்களிடம் கொண்டு சேர்த்திடப் பின்னோக்கு உத்தி பயன்படுகின்றது. கதைமாந்தர்களின் எண்ணவோட்டத்தின் வாயிலாக பின்னோக்கு உத்தி அமைக்கப்பெறுகின்றது.

      பூர்வீக பூமி புதினத்தில், தமிழ்நாட்டினின்று புலம் பெயர்ந்து வணிக நோக்கத்திற்காக கருநாடகா செல்லும் எல்லோர் நினைவிலும் தமிழ்நாட்டில் தம் பூர்வக்குடியின் எண்ணம் மறைந்து கிடப்பதும் அவ்வப்போது வெளிவருவதுமாக இருந்தது.

      ராமண்ணக் கவுண்டர் எனும் கதைமாந்தர் வழி, பொன்னம்மாளின் பாடலின் இனிமையைப் பின்னோக்கு உத்தியாகப் படைப்பாளர் புலப்படுத்துகின்றார்

“பொன்னம்மாளின் கும்மிப் பாடலைக் கேட்கத்தான் சிறுவயதில் எத்தனை இளம் பெண்களும்… தாய்மார்களும்… நிலாச்சோறு ஊட்டும் பௌர்ணமி இரவில் காத்துக் கிடப்பார்களே… அந்த வீதியின் வடக்குத் தெருவில் விநாயகர் கோயில் முற்றத்தில் இவளையொத்த பெண்களோடு சேர்ந்து பாடி மகிழ்ந்த கும்மிப் பாடல்கள்தான் எத்தனை இனிமையானவை.. எத்தனை சுவையானவை…” 8எனும் பகுதி நாட்டார் பாடலோடு மகிழ்ந்திருந்த பூர்வீகக்குடிகளின் வாழ்வியலை பின்னோக்கு உத்தி வழி உணர்த்துகின்றது.

4. நனவோடை உத்தி

     நனவோடை என்பது உள்மனதிலிருந்து தொடர்ந்து எழும் எண்ணங்களை அமைக்கும் முறைமையாகும். முன்னர் நடந்த நிகழ்வுகளைக் கதைமாந்தர்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நினைப்பது போல கதைப்பின்னல் அமைக்கப்பெறும். சான்றாக, ஒரு வயல்வெளியின் கதை புதினத்தில் கதை மாந்தர் மாரப்பன் இறந்த தன் மனைவி பழனியம்மாளை எப்போதும் நினைத்துக் கொணடிருப்பவராகத் திகழ்கின்றார். உறவின் பிரிவை ஏற்காத அவரது மனதின் வலியை நனவோடை உத்தி வழி படைப்பாளர் வெளிப்படுத்துகின்றார்.

“வந்து சோறுண்டுட்டுப் போய்ப் படுங்கய்யா பொன்னுமணியின் குரல் இவரைப் பழைய நினைவகளிலிருந்து இழுத்துக் கொண்டுவந்து விட்டது”9 எனும் வழி மாரப்பன் சமகாலத்தில் வாழ்ந்தாலும் அவர் நினைவெல்லாம் மனைவி பழனியம்மாளைச் சுற்றி இயங்கியமை புலப்படுகின்றது.

5. தொடர் உத்தி

      புதினத்தின் மொழிநடையைத் தொடர் அமைப்புகளின் கூட்டமைப்பே தீர்மானிக்கின்றது. வட்டார வழக்குச் சொற்களைப் பெரும்பான்மையாகக் கையாண்டு தம் புதினத்தில் தொடர்களை அமைத்திடும் சூர்யகாந்தனின் புதினங்களில் உவமை, வர்ணனை, இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர், வழக்குச் சொற்கள், பாடல்,விடுகதைகள், பழமொழி உள்ளிட்டஇலக்கிய உத்திகள் கையாளப்பெற்று மொழிநடைக்கு அணி சேர்க்கின்றன. குறிப்பாக கொங்கு வட்டாரத்தில் கையாளப்பெறும் தொடர்களே பெரும்பான்மையாகச் சூர்யகாந்தனின் புதினங்களில் இடம்பெறுகின்றன. சான்றாக முள் மலர் வேலி புதினத்தில் சென்னியப்பனும் வையாபுரியும் உரையாடும் தொடர் கொங்கு வட்டார எளிய மக்களின் தொடர் அமைப்பைச் செவிகளுக்குள் சோக்கின்றது. இதனை,

“செரித்தாம் போங்க..! நீங்க நம்பவு ஒசக்கத்துக்குப் போயிட்டீங்க! அதுக்குத்தானுங்க என்னாலும் முடிங்ச இந்த ஒபகாரத்த்தையாச்சும் பண்றதுங்கோ.

ச்செரி நீ சொல்றது மனசுல வுழுவுது. சும்மா நீயி தொண தொணன்னு பேசிட்டு நிக்காம உள்ளாற போயி சரக்கு வாங்கிட்டு வா! போட்டுட்டுப் போகலாம். நேரமாகுதில்ல”எனும் பகுதி. கொங்கு மக்களின் மொழி வழக்காறை இத்தொடர் நினைவூட்டுகின்றது.

முடிவுரை

     சூா்யகாந்தனின் படைப்புகளில் கொங்கு மக்களின் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மக்களின் மொழி வழக்காறுகளில் பல கதைக்களம் சார்ந்து பெரும்பான்மையாகக் கையாளப்பட்டுள்ளன. கொங்கு வட்டாரப் புதின அமைப்பைக் கட்டமைக்க முயன்ற படைப்பாளா் சூா்யகாந்தன் அதன் சிறப்புக்கூறுகளை உள்வாங்கியதோடு அதனைத் தன் புதினத்தில் தேவைக்கேற்ப அதன் தன்மை மாறாமல் அங்ஙனமே எடுத்தாண்டுள்ளார். கொங்கு மண்ணின் வட்டார இலக்கியமான சூா்யகாந்தனின் புதினங்களில் கையாளப்பெறும் நோக்குநிலை உத்தி, குறியீட்டு உத்தி, பின்னோக்கு உத்தி, நனவோடை உத்தி, தொடர் உத்தி எனும் ஐந்து உத்திகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் இக்கட்டுரை அமைகின்றது. இத்தகு படைப்பியல் உத்திகள் சூர்யகாந்தனின் படைப்புத் திறனுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைகின்றது. கொங்கு வட்டாரப் புதினம் எனும் சிறப்பு அடையாளத்தை சூர்யகாந்தனின் படைப்புகளுக்கு படைப்பியல் உத்திகள் அளிக்கின்றன என்பதை நிறுவும் வகையில் இவ்வாய்வுக்கட்டுரை அமைந்தது.

அடிகுறிப்புகள்

1. சுப. வீரபாண்டியன், இந்தக்கால கவிதை உத்திகள், ப.9

2. அ.ச ஞானசம்பந்தன், இலக்கியக் கலை, ப. 4

3. மு. சுதந்திரமுத்து, படைப்புக்கலை, ப. 103

4. சிவ. பரந்தாமன், திறனாய்வு நோக்கில் தமிழ்ப் புதினம், ப. 35

5. சூர்யகாந்தன், மானாவார் மனிதர்கள், ப.113

6. சூர்யகாந்தன்,எதிரெதிர் கோணங்கள், ப. 13

7. சூர்யகாந்தன், அம்மன் பூவோடு, ப. 167

8. சூர்யகாந்தன், பூர்வீக பூமி, ப. 119

9. சூர்யகாந்தன், ஒரு வயல்வெளியின் கதை, ப. 19

10. சூர்யகாந்தன், முள் மலர் வேலி, ப. 3

துணைநூற்பட்டியல்

1. சு.ப. வீரபாண்டியன், இந்தக் காலக் கவிதை உத்திகள், கனிமுத்துப் பதிப்பகம், சென்னை, பதிப்பு - 1985

2. அ.ச ஞானசம்பந்தன், இலக்கியக் கலை, சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு - 1993

3. மு. சுதந்திரமுத்து, படைப்புக்கலை, பாரி நிலையம், சென்னை

4. சிவ பரந்தாமன், திறனாய்வு நோக்கில் தமிழ்ப் புதினம், காவ்யா பப்ளிசா்ஸ், சென்னை, பதிப்பு - 2010