ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நதியின் எழுத்துக்களில் மனித மாண்புகள் | Tamil Nathi's Writings and Human Values

முனைவர். பூ. சேகர், உதவிப்பேராசிரியர், அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-15 | Dr.P.SEKAR, Assistant Professor, Govt. Institute of Advanced Study in Education, Saidapet, Chenna- 15. 30 Apr 2024 Read Full PDF

Abstract

Literature is a powerful tool for portraying human life. These literatures are characterised by the way of life of the people, their social conditions and their cultural elements. The Tamil language is shaping itself in many forms, including novels, poetry, plays, essays, as a mirror of the contemporary social environment, changing itself with the changing times. It is the social vision of the creators that gives rise to the creations. Personal ethics, social ethics and love have made Tamil the pride of the world through his recent works. Many of the literary genres created today have not failed to express such cultural elements. This article is to say that this can be seen in the writings of Tamilnadi.

 

ஆய்வுச் சுருக்கம்:

இலக்கியம், மனித வாழ்வை படம்பிடித்துக் காண்பிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இந்த இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சமூக நிலைமைகள் மற்றும் அவர்களின் கலாச்சார கூறுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, சமகால சமூகச் சூழலின் காலக் கண்ணாடியாக புதினம், கவிதை, நாடகம், கட்டுரை, எனப் பல தளங்களில் தமிழ் மொழி தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. படைப்பாளிகளின் சமூக நோக்குதான் படைப்புகளுருவாகக் காரணமாகின்றன. தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், காதல் போன்றவை  சமீபத்திய படைப்புகளின் மூலம் தமிழை உலகின் பெருமையாக மாற்றியுள்ளன. இன்றைக்கு படைக்கப்படும் பல இலக்கிய வகைமைகள் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. இதைத் தமிழ்நதியின் எழுத்துக்களில் காணலாம் என்பதைச் சொல்லவே இந்தக் கட்டுரை.

Key words: Thamizh Nathi, Tamil Nathi's writings, Human values

 

திறவுச்சொற்கள்: தமிழ்நதி,  தமிழ்நதியின் எழுத்துக்கள், மனித மாண்புகள்

 

முன்னுரை:

இலக்கியங்களை ஆராய்ந்து பார்ப்போமானால் ஒரு உண்மை துலங்கும்.  அது, மனிதனது வாழ்க்கை நிலையைத் திறம்பட எடுத்துரைக்கும் கருவியாக விளங்குவதைக் காணமுடியும். இந்த இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சமூக நிலைமைகள் மற்றும் அவர்களின் கலாச்சார கூறுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, சமகால சமூகச் சூழலின் காலக் கண்ணாடியாக புதினம், கவிதை, நாடகம், கட்டுரை, எனப் பல தளங்களில் தமிழ் மொழி தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. படைப்பாளிகளின் சமூக நோக்கு தான் படைப்புகளுருவாகக் காரணமாகின்றன. தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், காதல் போன்றவை  சமீபத்திய படைப்புகளின் மூலம் தமிழை உலகின் பெருமையாக மாற்றியுள்ளன. இன்றைக்கு படைக்கப்படும் பல இலக்கிய வகைமைகள் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. இதைத் தமிழ்நதியின் எழுத்துக்களில் காணலாம் என்பதைச் சொல்லவே இந்தக் கட்டுரை.

தமிழ்நதி:

தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி என்பதாகும். இலங்கையின்  திரிகோண மலையில் பிறந்தவர். தமிழ் எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். இலங்கையின்  போர்ப் பதற்றம் காரணமாக 1992-இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்ததாக அறியப்படுகிறது. இவர், 1996-ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள், சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இலங்கை – கனடா – தமிழகம் என மூன்று இடங்களையும் தனது வாழிடமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். இவரது நூல்கள், மாயக்குதிரை, நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்), சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்), இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்), கானல் வரி (குறுநாவல்), பார்த்தீனியம் (நாவல்), ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்), போன்றவையாகும்.

படைப்பாளிகளும் பண்பாடும்:

படைப்பாளிகளும் தம் கற்பனைத்திறன் மூலம் பண்பாட்டை உள்ளடக்கியே இலக்கியங்களைப் படைக்கின்றனர் (அ.சேமலா வசந்தா). பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார் (இ.சௌந்தர்யா, 2020). தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் சங்ககாலத்திலும் இருந்து வந்துள்ளன. சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும், தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்து சங்கப்புலவர்கள் கூறியுள்ளனர். இதனையே,

"நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"

(புறநானூறு)

நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை குறிப்பிடுவதனை அறிய முடிகிறது.

பண்பாட்டின் மலர்ச்சியாக மனிதன் மூன்று நிலைகளின் வளர்ந்துள்ளான் என்கிறார் மார்கன். உலகம் முழுவதும் தாய்வழிச் சமூகமாக இருந்து அதன் பின்னரே தந்தைவழிச் சமூகமாக மாறியுள்ளது என்பதை அறிஞர்கள் பலர் ஆய்ந்து நிறுவியுள்ளனர்.

மானிட வரலாற்றை ஆராய்ந்தால் காலத்திற்குக் காலம் மனிதன் பல்வேறு மாற்றங்களினூடாக வளர்ந்து வந்திருப்பதைக் காணலாம். மனிதன், தன்னையும் தன் சூழல்களையும் உற்றுநோக்கிப் படிப்படியாக அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில் நாகரிகம், பண்பாடு என்னும் தனிமனித ஒழுக்கங்களோடு முன்னேறத் தொடங்கினான். பண்பாடு என்பது “ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பு, அல்லது மன அளவிலான விதி" எனக் கருத்தியலாளர்கள் ஒரு பொது விளக்கம் தருகின்றனர்.

அன்பெனும் சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கிறான் மனிதன். சமூக அமைப்பில் ஒவ்வொருவரும் தாம் வாழ பிறரைச் சார்ந்தே இருக்க / வாழ வேண்டியுள்ளது. இச்சார்புத்தன்மையே, மனித ஒற்றுமைக்கு வழிகோலுகிறது (புனிதா, 2020).

மெய்யுணர்வுகள்:

போட்டி, பொறாமை போன்ற பண்புகளினால் உண்டாகும் விளைவுகளை நீதி நூல்கள் காலம்தோறும் வலியுறுத்தி வந்துள்ளன. பிறருக்கு உதவுதல்,  சுயநலம் பாராமை, ஒற்றுமையுடனும் வாழ்வது போன்ற பண்பட்ட பண்புகளே உயரிய சமுதாயத்தை உருவாக்கும். இத்தகைய மாண்பை 'மெத்த பெரிய உபகாரம் எனும் அவரது கதையில் அறிய முடிகிறது.

மாயக்குதிரை:

இந்த படைப்பு, ஒரு புதிய சூழலில் (வேறு நாட்டு விமான நிலையத்தில்) தனியாக நின்று உழலும் ஒரு முதிய பெண்ணுக்கு உதவும் விதமாக கதாப்பத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அம்முதியவரை அவரது உறவுகளிடம் சென்று சேர்க்க எடுத்துக்கொள்ளும் பிரயத்தனம் போன்ற பண்புகள் எளிமையாக வாசகனின் மனங்களில் மனித மாண்புகளை கொண்டு சேர்க்கிறார்.

உடல் அசதி, சோர்வு போன்ற பயணத்தால் ஏற்படுகிற களைப்பு ஒருபுறம் இருந்தாலும் அவருக்கு உதவும் குணத்தின் மூலம் ஒரு படி மேலே நிற்கிறார்.

"இவர் கொழும்புக்குச் செல்கிறார். நான் செல்லவிருக்கும் அதே விமானந்தான். இவரை நான் பார்த்துக் கொள்கிறேன்”

என்று கூறியவுடன்,

அவளுடைய முகத்தில் தெரிந்த ஆசுவாசம் எனக்கு வியப்பூட்டியது. ஆ!. இந்த உலகில் இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள்"

துணையின்றி நின்றவருக்கு அவருடன் நின்று, அவரைப் பாதுகாப்பாக  அழைத்துச் செல்லுதல் என்ற பொறுப்பின் மூலம் கைமாறு கருதாத பேருதவியின் மேன்மையை வாசகனுக்கு உணர வைக்கிறார்.

"விமானத்தினுள் நுழைந்து அவருக்குரிய இருக்கையில் கொண்டுபோய் அமர்த்திவிட்டுத் திரும்ப முற்பட திடுக்கிட்டு எழுந்தார்”

"என்னை விட்டிட்டு எங்கை போறாய்?  இஞ்சை இதிலை இரன்”

என்ற வரிகள் நம்மையும் திடுக்கிட வைப்பதுடன் முதியவர்களின் தனிமை பயம் எத்தகையது என்பதை நமக்கெல்லாம் கையளிக்கிறார்.

'மெத்தப் பெரிய உபகாரம்' எனும் கதையின் மூலம் காலத்தினாற் செய்த உதவி என்பார்களே, அது போல, பசி நேரத்திற்கு உணவளிப்பது என்பது எவ்வளவு பெரிய உபகாரம். மனித மாண்புகளை மேலும், மேலும் காட்சிப்படுத்துகிறார். இதோ இந்த வரிகளை வாசியுங்கள்,

தான் அவ்வளவு பசியோடு இருந்தேன் என்பது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கே தெரிந்திருக்கும். பஞ்சு படர்ந்தாற்போலிருந்த அவருடைய கண்கள் தெளிவடைந்தன."

"மெத்தப் பெரிய உபகாரம்" என் தோளைத் தொட்டுக் கூறினார்."

எனும் வரிகள் மூலம் பசியின் தீவிரத்தையும் அது தணியும் போது அவர்கள் கூறும் மொழியின் ஆசீர்வாதத்தையும் வாசகனின் மனங்களில் படற விடுகிறார்.

அவ் வயதான பெண்மணியின் சுய பச்சாதாபக் குரலுக்கு செவிமடுத்து, பிள்ளைகள், அல்லது உற்றார் செய்யத் தவறிய பல செயல்களை செய்வதுடன்  அங்கு சக்கரநாற்காலிக்கும் ஏற்பாடு செய்து, மேலும், அடுத்த சில வரிகளில்

"பிள்ளை என்னை விட்டிட்டுப் போயிடாதை"

"நீயும் என்னோடை ஒரு வீல் செயாரிலை வா"

என்று அந்த முதிய ஆத்மாவின் மனம் கனடா முதல் இலங்கை வரும் வரை அனுபவித்த அத்தனை மனப் போராட்டங்க்களையும் படிப்போரின் மனங்களுக்கு  கடத்திவிடுகிறார். வயதானவர்களை இவ்வாறன துன்பங்களுக்கு ஆளாக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கின்றது இந்த வரிகள்.

"உங்கடை பிள்ளையளின்ரை கையிலை உங்களை ஒப்படைக்காமல் நான் போக மாட்டேன். நம்புங்கோ"?

என்னும் வரிகள், மனித மாண்பின் உச்சம். ஒழுக்கத்தையும், நீதியையும் போற்றி வாழும் தமிழ் மண்ணின் மாண்பிற்கு இந்த கருணை உள்ளம் சான்றாகின்றது. மேற்கூறிய வரிகளை புனிதா (2020) அவர்கள் அவரது கட்டுரையில் சிலாகித்து எழுதி இருப்பதைக் காணமுடியும்.

தாம்வாழும் சூழலில், தம்மோடு வாழும் சக உயிர்களுக்கு உதவி புரிந்து இயைந்து வாழும் உயரிய வாழ்வை தமிழ்நதி தம் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்.

இதே போன்றதொரு உணர்வை சோளகர் தொட்டி நாவலில் ச.பாலமுருகன் (2019), ஒரு பழங்குடி கூறுவதாக காட்டியிருப்பார், “காத்தவன் தின்றது போக / கள்வன் தின்றது போக / கண்டவன் தின்றது போக / பறவைகள் தின்றது போக / எனக்கும் கொஞ்சம் விளையனும் சாமி…” என்று முடிகிறது. தமிழ்ச் சமூகம் எவ்வளவு உயரிய பண்பு நெறிகளில் வாழ்ந்துள்ளது, அதாவது பறவைகள் தின்றது போக என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் கள்வன் தின்றது போக என்னும் வரிகள் மூலம் அவனும் இல்லாமல் தானே திருடுகிறான் என்று... அவனும் தின்றது போக என்ற உயரிய கருத்தை அறிய முடிகிறது.

ஆனந்த விகடனில் தமிழ்நதி:

ஆனந்த விகடனில் தமிழ்நதி (2016) இவ்வாறு எழுதுகிறார்,

வாழ்வின் ஆதாரமான 'ஆண்- பெண் வேறுபாடுகள்?  தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்- பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன. என்பதை எப்போது கற்றுக் கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?  விகடனில் விடை பகர்ந்துள்ளார், தமிழ்நதி.

தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காதபோது, தன்னுடைய நெஞ்சை அலகினால் கீறி அதில் இருந்து வழியும் ரத்தத்தை உணவாகக் கொடுத்து குஞ்சுகளின் பசியை ஆற்றும் பெலிக்கான் பறவையைப் பற்றிய பௌராணிகக் கதை மனதை உருக்கும். நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள், பெலிக்கான் பறவைகளே.

எங்கள் வீட்டிலும் ஒரு பெலிக்கான் பறவை இருந்தது. இப்போது அதன் சிறகுகள் வயோதிகத்தினால் தழைந்துபோய்விட்டன. பானையில் அன்றைய சாப்பாட்டுக்கு அரிசி இருக்கிறதா... இல்லையா என்பதைப் பற்றி என்றைக்கும் கவலையுறாத தந்தைக்கும், அரிசியைப் பற்றி மட்டுமே கவலையுறும் தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான்…………. அம்மாவோ எதிர்மாறு, ஊராரின் வாய்க்கும் கண்களுக்கும் பயந்த, மரபார்ந்த பெண். அரசுப் பணியில் ஓரளவு நல்ல பதவியில் இருந்த எனது தந்தை, வேலையைத் தொலைத்துவிட்டு வந்து நின்றபோது, குடும்பமே அதிர்ந்துபோய் நின்றது. அதுவரை அனுபவித்து வந்த மத்தியதர வாழ்வின் வசதிகள் கண் முன்னால் சரியக் கண்டோம். ஆனால், அம்மா அசரவில்லை!

அம்மாவின் கால்கள் எங்கெங்கு அலைந்தனவோ, உதடுகள் எவர் எவரைக் கெஞ்சினவோ, திரும்பி வரும்போது நெல் மூட்டை ஒன்றை தலைச்சுமையாகச் சுமந்து வருவார்…இப்படிப் போகிறது அந்த வரிகள், மேலும்,

விடுதலைப்புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்பில் நிழல் அரசு நடத்திய காலத்தில், பாலியல்ரீதியான வன்கொடுமைகள் இன்றி பெண்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இருள் அடர்ந்த இடத்தில் இருந்தோம். பின்னாலும் சைக்கிள்களில் தெருவை அடைத்து வரிசையாகச் செல்லும் இளம்பெண்களைக் கண்டிருக்கிறேன். நேசத்துக்குரிய துப்பாக்கிகளின் நிழல் மடியில் நிம்மதியாக உறங்கிய காலங்களாக அவை இருந்தன.

என் நண்பர்களும்கூட தங்களது ஆண் அதிகாரத்தை என் மீது பிரயோகித்தது இல்லை. தன்னியல்போடுகூடிய மனித உயிராக அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அத்தகையோருடனான ஆரோக்கியமான உரையாடல் மற்றும் விவாதங்களால் புடம்போடப்பட்டது என்னுடைய எழுத்து எனச் சொல்லிக்கொள்வதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. தவிர, அவ்வாறான தொடர் விவாதங்களும், நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களுமே, அரசியலை உணர்ச்சிபூர்வமாக அல்லாது அறிவார்த்தமாக அணுகும்படி எனக்குக் கற்பித்தன.

அவர் தமது கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்,  ‘இந்தச் சமூகத்தின் அச்சில் வார்க்கப்பட்ட இன்னொரு பெண்ணாக இல்லாமல் இருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. போகும் இடங்களுக்கு எல்லாம் வீட்டைச் சுமந்து செல்லும் பெண்ணாக இல்லாமல், போகும் இடங்களை எல்லாம் வீடெனக்கொள்ளும் பெண்ணாயிருப்பதும் ஒரு கொடுப்பினையே. அது என் சகதோழிகளுக்கும் வாய்க்கட்டும்’.

முடிவுரை:

தமது வாழ்வில் போராட்டங்களையே அன்றாட நடைமுறையாகக் கொண்டு வாழ்ந்தவர் எழுத்தாளர் தமிழ்நதி. போராட்டங்கள் நிறைந்த வாழ்வில் பிறரைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அளவிற்கு வாழ்க்கை முறைகள் அழுத்தத்தைத் தருகின்றன. சுயநலம் என்ற ஒன்றையே அச்சாகக் கொண்டு சுழலும் இவ்வுலகம் மனிதர்களின் வாழ்வியல் உன்னதங்களை இருந்த இடம் தெரியாமல் செய்து விட்டது. இந்நிலையில்தான் மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான மற்றும் உன்னதப் பண்புகளான தனிமனித ஒழுக்கம், பிறரை வஞ்சிக்காமை, துன்புறுத்தாமை, பெரியோரை பேணல் மற்றும் மதித்தல்,  காலத்தினால் செய்த உதவி கருதுதல், சமூக அக்கறை போன்ற விழுமியச் செயல்பாடுகளை படைப்புகளின் வழியே மனிதர்களிடத்து நினைவுபடுத்துகிறார், தமிழ்நதி.  அவ்வகையில் தமிழ்நதியின் எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், நாட்டின் மீதான, சக மனிதன் மீதான அக்கறை, சமுதாய ஒழுக்கம், விருந்தோம்பல் போன்ற பல உன்னத தமிழ் பண்பாட்டுக் கூறுகள் இவர் எழுத்தில் மிளிர்வதைக் காணமுடிகிறது.

 

துணை நூல்பட்டி:

  1. சேமலா வசந்தா, அ. (2020). நடுநாட்டு மக்களின் பண்பாட்டுக்கூறுகள். (In) தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள், திருச்சி, எம்.ஜே.பப்லிகேஷன்.
  2. சௌந்தர்யா, இ, (2020). தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள். (In) தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள், திருச்சி, எம்.ஜே.பப்லிகேஷன்.
  3. தமிழ்நதி. (2016). ஆண்பால் பெண்பால் அன்பால், ஆனந்த விகடன் 90 ஸ்பெஷல், பக். 310-316.
  4. பாலமுருகன், ச. (2019). சோளகர் தொட்டி,   சென்னை: எதிர் வெளியீடு.
  5. புனிதா, ம. (2020). தமிழ்நதியின் புனைவுகளில் வாழ்வியல் மாண்புகள், (In) தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள், திருச்சி, எம்.ஜே.பப்லிகேஷன்.
  6. முருகேசன், ச. (2006). தமிழ் இலக்கியத்தில் சமுதாயச் சிந்தனைகள், சென்னை: சேகர் பதிப்பகம்.