ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பெண் குறித்தான கருத்துருவாக்கங்களின் அரசியல்

கட்டுரையாளர்: வெ.ரேவதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை – 625 001 | நெறியாளர்: முனைவர் அ.நந்தினி, உதவிப் பேராசிரியர், நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை-625 001. 30 Apr 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:  தொல்குடிச் சமூகத்தில் முதன்மை பெற்றிருந்த பெண்ணின் இருப்பும், செயல்பாடுகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து விடுபட்டு ஆதிகாலச் சமூகத்தை, குறிப்பாக எந்த உடைமையும் யாருக்கும் பொதுவானது என்ற கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. அதனை காலந்தோறுமான கருத்துக்களின் வழியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Study Summary: The existence and activities of the women who were the foremost in the Tolgudi society have been questioned. Women have to break free from that and express the primitive society, especially the idea that any property is common to anyone. The purpose of this article is to explain it through chronological concepts.

திறவுச்சொற்கள்:

பெண்- Feminine, கருப்பை - Womb, ஆதி – Primordial, ஆண்பால் - Masculine, பெண்விடுதலை - Feminized.

முன்னுரை

      இயற்கையின் படைப்பில் பெண்பால் மற்றும் ஆண்பால் உயிரிகள் இரண்டும் சமத் தகுதியுடையவை. பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் அனைத்திலும் உச்சகட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ள ‘மனித இனத்தில்’ மட்டும் ஆண்பால் உயிரி முதலாவதாகவும், பெண்பால் உயிரி இரண்டாம் நிலையினதாகவும் கற்பிக்கப்பட்டுள்ளது. தனியுடைமை தோன்றிய தந்தைவழிச் சமுதாயத்தில் உருவாக்கப்பட்ட இவ்வகையிலான கற்பிதங்கள் பெண்ணை ஓர் உயிருள்ள பண்டம் எனும் நிலைக்குத் தரம் தாழ்த்தியது.

பெண்களின் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தீவிரமான குரல்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேலெழத் தொடங்கின. படைப்பிலக்கியங்களாகவும், கோட்பாடுகளாகவும் பெண் விடுதலைக்கான சிந்தனைகள் உருவாகி வளர்ந்து வருகின்றன. தமிழ்ச் சூழலில் ‘பெண் விடுதலை’ குறித்த தீவிரமான சிந்தனைகள் ஆண் படைப்பாளர்தம் படைப்புகளிலும், ஆண் சமூகச் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளிலும் வெளிப்பட்டன. பாரதியார், பாரதிதாசன், பெரியார் முதலியோர் இதற்குத் தக்க சான்றுகள் ஆவர்.

பெண் விடுதலை பேசவேண்டிய தேவைகள் உருவாகப் பெரிதும் காரணமாக அமைந்தது பெண் அடிமைத்தனமாகும். இதற்கு வழிசெய்ததாகப் பெண் குறித்தான கருத்துருவாக்கங்கள் உள்ளன. அதனைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பெண் குறித்த கருத்துருவாக்கம்

இன்றைய மனித சமூகம் தங்களின் புனிதங்களாகப் போற்றிப் பாதுகாக்கும் நூல்களும், நம்பிக்கைகளும், கருத்துகளும் என மதம் உள்ளிட்ட எல்லா வகைப் புனிதங்களும் ‘ஆண் மேலானவன், பெண் கீழானவள்’ என்ற கருத்தை உறுதிப்படுத்துபவை எனில் அதில் மிகையில்லை. “பெண் என்றால் கருப்பை என்று சொன்னவர் உண்டு. இயற்கையிலேயே குறைபாடுள்ள மனிதப் பிறப்பே மனுஷி என்று அரிஸ்டாட்டில் போன்ற அக்கால அறிஞர்கள் கூறியதுண்டு. உலகம் ஆண்களுடையது. அதில் பெண்களும் இருக்கிறார்கள். ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் - பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து, நம்பிக்கை சார்ந்து நிற்பவை. சில அறிவியலின் பெயரால் நிற்பவை”1 என ச.தமிழ்ச்செல்வன் ‘பெண்கள்’ குறித்து நிலவும் மரபான கற்பிதங்களைப் பட்டியலிடுகிறார்.

இத்தகைய நம்பிக்கைகள் பெரும்பான்மை மனித சமூகத்தை ஓர் அழுக்குப் பேயைப் போல் இறுகப் பற்றியுள்ளன. மரபான சமூக விதிமுறைகளை நிந்தனை செய்யும் பாவச் செயலாகக் கருதப்படுகின்றன. இத்தகைய நம்பிக்கைகளும் கற்பிதங்களும் காலப்போக்கில் தோன்றியவைகளே. ஆதிகால மனித சமுதாயத்தில் ‘பெண்’ இந்தச் சமுதாயத்தைத் தலைமை தாங்கி வழிநடத்தினாள் என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “தொல்பொருள் ஆய்வுச் சான்றுகளிலிருந்தும் தற்பொழுது இருந்து வருகிற கற்காலக் கலாச்சாரங்களிலிருந்தும் பெண்கள் பின்வரும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர், அவற்றில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும் தெரிகிறது.

  • உணவு சேகரித்தல்
  • குழந்தைகளைப் பராமரித்தல்
  • தோல்களைப் பதப்படுத்தி உபயோகப்படுத்தல்
  • பிராணிகளின் தோல்களிலிருந்து ஆடைகள், கவண்கள் மற்றும் கொள்கலன்கள் தயாரித்தல்
  • சமையல் வேலை செய்தல்
  • மண்பாண்டம் வனைதல்
  • புற்கள், கோரைப்புல், நாணல், மரப்பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு கூடைகள் வேய்தல்
  • பற்கள் அல்லது எலும்புகளைக் கொண்டு மணிகளையும் அணிவதற்கான மாலைகளையும் ஆபரணங்களையும் செய்தல்
  • தற்காலிகமான அல்லது நிரந்தரமான உறைவிடங்களை நிர்மாணித்தல்

         விவசாயத்திற்கு மட்டுமின்றி ஆடைகள் தயாரிப்பதற்காக பிராணிகளின் தசைநார்களை வெட்டியெடுப்பதற்குக் கற்களாலான கூர்மையான கத்திகளைத் தயாரித்தல், தோல்களைக் கீறி பதப்படுத்துவற்கான கற்கருவிகள் போன்ற பல்வகைப்பட்ட உபயோகங்களுக்கான கருவிகளைச் செய்தல், காயத்தை ஆற்றுவதற்கு தாவரங்கள், உணவு மற்றும் மூலிகைகளை மருத்துவ ரீதியில் பயன்படுத்தல்”2 என ஆதிமனித சமூகத்தில் பெண்களின் பாத்திரம் தலையாயதாக இருந்தது. “உதாரணமாக நம்மில் பெரும்பாலோர் வலது கை வாகுடையவர்களாயிருக்கும் நிலைமைக்கு ஆதிகாலப் பெண்ணே காரணமாகும். தனது குழந்தையை இடதுபுற இடுப்பின் மீது வைத்து எடுத்துச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். அவ்வாறு செய்வதன் மூலம் தனது இருதயச் துடிப்பினால் குழந்தையை ஆறுதலடையச் செய்ய முடியும். இதனால் அவளுடைய வலது கையை வேறு வேலைக்குப் பயன்படுத்த முடிகிறது.”3 இவ்வாறு ஆதி மனித சமூகத்தில் வாழ்ந்த பெண்களும் தாய்மார்களும் மனித சமுதாயத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான பல அரும்பணிகளை ஆற்றியுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது. இதற்காக இப்பெண்களுக்கு மனித சமுதாயம் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளது.

ஆதி மனித சமூகம் (புராதனப் பொதுவுடைமைச் சமூகம்) சிதையத் தொடங்கி தனியுடைமையும் நாகரிகமும் வளர வளர பெண்களின் சமூகப் பாத்திரம் சரியத் தொடங்கியது. ஆண்கள் உயர்வானவர்கள், பெண்கள் இழிபிறவிகள் போன்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படத் தொடங்கின. “பிறப்பின் ரகசியம் தெரிய வந்த, வரலாற்றில் அந்த அறியப்படாத தருணத்திலிருந்து, பெண்கள் அவர்களது பெண்தெய்வம் போன்ற உன்னதத் தன்மையிலிருந்து சரியத் தொடங்கினர். ஆனால், ஆண், தன்னைத்தானே ஒரு கடவுளாக உயர்த்திக் கொண்டதானது, பெண்ணைப் பொதுநிலையான மனிதப் பரிமாணத்திற்குக் குறுக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அது, அவனை ஒரு கீழ்நிலைப் பிறவியாகத் தாழ்த்துவதில் வெற்றியடைந்தது. யூதமதம், பௌத்தம், கன்பூசிய மதம், கிறித்துவ மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஐந்து பிரதான நம்பிக்கை அமைப்புகள் (மதங்கள், ஒவ்வொன்றும் அதனதன் வழியிலேயே, தமது இயல்பினாலேயே பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி, ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கோரின”4 என உலகின் முதன்மையான ஐந்து மதங்களும் பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்த்தெடுத்த நிலை குறித்து ரோஸலிண்ட் மைல்ஸ் எடுத்துரைக்கிறார்.

இந்து மதம் பெண்களை ஆகக் கீழானவர்களாகக் கற்பித்தது. இந்து மதத்தின் சட்ட நூலைப் போன்று கருதப்படும் மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப் பற்றி ‘மாதர்க்கு உரியவை’ எனும் பகுதியில்,

“147.எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும்    

            தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.

    148.இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையானபின் மக்கள்   

            இவர்கள் காவலிலன்றி பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது.

    149.தகப்பன், கணவன், மக்கள் இவர்களைத் தனித்திருக்க விரும்புதல்  

           கூடாது. அப்படித் தனித்திருப்பின், பிறந்தகம் புத்தகமாகிய இரு  

           குலங்களுக்கும் நிந்தை யுண்டாக்குவாள்.

    154.இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை

            இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத்   

            தெய்வமாகப் பேணுக”5

எனப் பெண்களுக்கான வாழ்க்கை விதிகளை அடுக்கிச் செல்கிறது மனுதர்ம சாஸ்திரம். மனு கூறும் மாதர்க்கான விதிகள் யாவும் பெண்கள் சுயமாக வாழவும், முடிவெடுக்கவும் உரிமை இல்லாதவர்கள். முழுக்க முழுக்க ஆண்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். கணவன் எவ்வளவு தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தாலும் மனைவி கணவனை தெய்வமாகப் போற்ற வேண்டும். பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இல்லை. ஆனால் ஆண்களுக்கு உண்டு என்றெல்லாம் பெண்ணடிமைத்தனக் கற்பிதங்களை வலியுறுத்தின. மனு கூறிய இந்த விதிகள், ‘கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் முதலிய பழமொழிகளாகவும், நளதமயந்தி, சத்யவான் சாவித்திரி முதலிய புராண இதிகாசங்களாகவும் சமுதாய வழக்கில் நிலைபெற்று பெண்மையைத் தரக்குறைவு செய்தன.

      பெண்மை குறித்த இவ்வாறான கருத்தாக்கங்கள் இன்றளவும் கடினமான பாறைகளைப் போல் பொதுப்புத்தியில் கெட்டிதட்டிப் போய் உள்ளன. “ஆண்மை - பெண்மை என்ற ஒரு துருவ நிலைப்பாட்டின்படி, பெண் நசுக்கப்பட்டாள். இதில், ஆண்கள் எல்லாச் சக்திகளையும் தங்களது சேவைக்கு உட்படுத்தி, ஆக்கிரமிப்பு மிக்க வெற்றிகரமான ஆற்றல் ஒன்றுக்குள் ஒழுங்குபடுத்தினார்கள். எல்லாவிதமான பிற - பாலியல் தொடர்புகளையும் பிறவதை - சுயவதை என்னும் ஒரு வடிவமைப்பில் சுருக்கினார்கள். இது, அன்பு பற்றிய நமது கருத்தாக்கங்களின் திரிபினை உணர்த்தும். ஓர் இலட்சியத்தின் கொண்டாட்டமாகத் தொடங்கிய இந்த அன்பு, பிறர்நலம், தன்னலம், பித்து (Obsession) ஆகிய தலையான வக்கிரங்களை அல்லது பிறழ்ச்சிகளை விளக்கத் தொடங்குகிறது. இந்தத் திரிபுகள் பல்வேறு தொன்மப் போர்வைகளால் தம்மை மறைத்தபடி அணிவகுக்கின்றன. அவற்றில் இரண்டு வருமாறு : ஒன்று, அற்புதநவிற்சிக்காதல் (Romance). இது மாயப் புனைவுகளைப் (Fantacies) பற்றியது. இரண்டு, ஆண்பாலின் மாயப் புனைவிற்கு உரிய பொருள். ஆண்பாலின் இலக்கியத்தில் படைக்கப்படும் பெண்கள் இப்படிப்பட்டவர்கள்”6 என்கிறார் ஜெர்மெய்ன் கிரீர்.

      ஆண்பாலால் படைக்கப்படும் இலக்கியங்களில் பெண்பாலின் இயல்புகள் மறைக்கப்பட்டது. பெண்மையின் பண்புகள் சுருக்கப்பட்டது. ஆண்பால் தாம் விரும்பும் பெண்மையினைப் புனைந்துரைத்தது. கிட்டத்தட்ட ஓர் அடிமையைப் போலோ அல்லது மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கைப் போலத்தான் ‘பெண்’ பார்க்கப்பட்டாள். ஆரம்பகால முதலாளித்துவச் சமுதாயத்தில் கூட பெண்ணின் நிலை ஓர் உயிருள்ள பண்டம் என்பதாகவே இருந்தது. “கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லோர்க்கும் பொதுவாக்கிவிடுகிறீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.

      முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார். உற்பத்திக் கருவிகள் எல்லோர்க்கும் பொதுவாக்கப்பட்டு பயன்படுத்தப்படப் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகிவிடும் இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டுவிடுகிறார்.

      பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும். உண்மையில் இதுதான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருதமுடியாத ஒன்றாகும்”7 என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடும் கூற்றிலிருந்து ஆரம்ப கால முதலாளியச் சமுதாயத்தில் ‘ஓர் உற்பத்திக் கருவி’ எனும் நிலையில் பெண்களின் இருப்பு கருதப்பட்டுள்ளதனை அறிய முடிகிறது.

      பெண், பெண்மை குறித்த கருத்துருவாக்கங்களைத் தொகுத்துக் காணும் போது,

  • ஆதி மனிதச் சமுதாயத்தில் (தாய்வழிச் சமுதாயத்தில்) பெண் வலிமையானவளாகவும் தலைமைத்துவம் உடையவளாகவும் இருந்தாள்.
  • தந்தை வழிச் சமுதாயத்தில் பெண்ணின் நிலை சரியத் தொடங்கியது.
  • தனியுடைமைச் சமுதாயத்தில் தோன்றிய அறிஞர்கள் மற்றும் மத நிறுவனங்கள் ஆண்களை உயர்ந்தவர்களாகவும், பெண்களை இழிவானவர்களாகவும் கற்பிதம் செய்தன.
  • முதலாளித்துவச் சமுதாயத்தில் பெண்ணின் ஓர் உற்பத்திக் கருவி என்பதாகவே இருந்தது

என்பனவற்றை அறிய முடிகிறது.   

 

முடிவுரை

  • மனித சமூகத்தின் தொடக்ககாலங்களில் உழைப்பிலும், அதிகாரத்திலும் சமப்பங்குடையவர்களாக வாழ்ந்துள்ளனர். தொல்குடிச் சமூகம் ஆதித்தாயால் உருவாக்கம் பெற்று, உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதை அறியமுடிகிறது.
  • உடைமைச் சமூகத்தை உருவாக்கிய ஆண்கள், பெண்களை இரண்டாவது நிலைக்குத் தாழ்த்தினர். இதற்கு அடிப்படையாக அவர்களது உழைப்பு இழிவானதாக ஆக்கப்பட்டது. வலிமையான பணிகளைப் பெண்கள் செய்யமுடியாது என்ற கருத்துக்களை உருவாக்கி அடிமையாக்கியதைக் காணமுடிகிறது.
  • மதமும் அதன் வழியாக உருவாக்கப்பட்ட வேதங்களும், மனுஸ்மிருதி போன்ற நூல்களும் பெண்ணை தூய்மையற்றவர்களாக, ஒழுக்கம் குறைந்தவர்களாகச் சித்தரித்தன. அதனை அக்காலப் பெண்களும் உண்மையென்றோ அல்லது இயலாமையாலோ ஏற்று நடக்கத் தொடங்கினர்.
  • இன்றைய முற்போக்கு இயக்கங்கள் பெண்ணை, பெண்ணின் செயல்பாட்டை, முழுமையான விடுதலையை ஆதரிக்கின்றன. அதனால் முதலாளித்துவ சமூகமாக உள்ள ஆணாதிக்கவாதிகள் மீண்டும் பெண்களை அடிமைப்படுத்த பல்வேறு கற்பிதங்களையும், கருத்துருவாக்கங்களையும் உருவாக்க முயல்வதையும், அவற்றை இக்காலப் பெண்கள் உதறி எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளதையும் அறியமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.     தமிழ்ச்செல்வன், ச., பெண்மை என்றொரு கற்பிதம், ப.8.

2.     பாக்கியம், அ., பெண்குல வரலாறு, பக்.7-8.

3.     மேலது., ப.9.

4.     ராதாகிருஷ்ணன், வி(மொ.ஆ.), உலக வரலாற்றில் பெண்கள், பக்.126-127.

5.     திருலோக சீதாராம் (மொ.ஆ.), மனுதர்ம சாஸ்திரம், ப.81.

6.     ராஜ் கௌதமன் (மொ.ஆ.), பாலற்ற பெண்பால், ப.23.

7.     கிருஷ்ணய்யா, ரா (மொ.ஆ.), மார்க்ஸ் எங்கெல்ஸ், கம்யூனிஸ்டுக் கட்சி  

              அறிக்கை, பக்.72-73.

 

துணைநின்ற நூல்கள்:

1. கிருஷ்ணய்யா, ரா (மொ.ஆ.), முதற்பதிப்பு-ஆகஸ்ட்-2004, கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.

2. தமிழ்ச்செல்வன், ச., முதற்பதிப்பு-2009, பெண்மை என்றொரு கற்பிதம், பாரதி புத்தகாலயம், சென்னை – 600 018.

3. திருலோக சீதாராம் (மொ.ஆ.),இரண்டாம் பதிப்பு-ஜூன்-2003,  மனுதர்ம சாஸ்திரம், அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024.

4. பாக்கியம், அ., முதல் பதிப்பு-ஏப்ரல்-2006, பெண்குல வரலாறு, மருதா வெளியீடு, சென்னை-600 014.

5. ராதாகிருஷ்ணன், வி(மொ.ஆ.), இரண்டாம்பதிப்பு-மார்ச்-2002,  உலக வரலாற்றில் பெண்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.

6. ராஜ் கௌதமன் (மொ.ஆ.), முதல்பதிப்பு-அக்டோபர்-2011, பாலற்ற பெண்பால், விடியல் பதிப்பகம், கோவை-641 015.