ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நாட்டுப்புற இசையில் நாதஸ்வரம் | Nadaswaram in Folk Music

முனைவர் கு. பிரகாஷ், உதவிப்பேராசிரியர் (ப.மா), மாவட்ட அரசு இசைப்பள்ளி, கிருக்ஷ்ணகிரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 30 Apr 2024 Read Full PDF

Abstract

      Nadaswaram is the most significant and the oldest instruments among the wind-pouring music instruments. It was using not only Temple worshipping ceremomonies, but also in religious and other festivals, marriage functions and ceremonies. Different types of Folk music instruments are using by the people and each one has it’s own historical importance. Using Nadaswaram in Thanjavur region is a traditional and historical significant one. Though the people are using different types of folk music, Nadaswaram is the most significant and popular one. It plays a significant role in Folk-Arts like Kavadi Attam, Karakattam, Mailattam etc. and this paper analyse the importance and values of Nadaswaram in Folk Art and Music.

Key Word

  1. Pan               -     Ragam
  2. Karakam           -     Poongkudam
  3. Nagaswaram       -     Vangiyam
  4. Manodharmam      -     Imagination
  5. Thavil             -     Muzhavu

ஆய்வுச் சுருக்கம்

      இசைக் கருவிகளில் காற்றுக்கருவிகளில் கம்பீரமான இசையைக் கொடுக்கக்கூடிய நாதஸ்வர இசையானது ஆலய வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றுடன் இணைந்தும் மேடை நிகழ்ச்சிகள், திருமணங்கள் போன்ற இனிய விழாக்களிலும் நாதஸ்வர இசையை பயன்படுத்தி வருகின்றார்கள். இசைக் கருவிகளில் காற்றுக்கருவிகள், நரம்புக்கருவிகள், தோல்கருவிகள், கஞ்சக்கருவிகள், என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கென வரலாறு உள்ளன. இவற்றிற்கான வாசிப்பு முறைகள், தனிப்பட்ட தன்மைகள் உள்ளன. இவற்றில் காற்றிசைக் கருவிகளில் நாதஸ்வரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் பகுதியில் நாதஸ்வர இசையானது மிகவும் சிறப்பாகக் காணப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு இசைக்கு உரியவற்றையே கருவிகளில் வாசிக்கப்படுவதில் ஒவ்வொரு கருவிக்கும் தனிப்பட்ட குணம் அல்லது தன்மை உள்ளது. நாட்டுப்பற இசையில் பல இசைக்கருவியில் பயன்படுத்தப்பட்டாலும் அக்கருவிகளில் சிறப்பு வாய்ந்த கருவியாக நாதஸ்வர இசையானது காவடி, கரகாட்டம், மயிலாட்டும் ஆகிய இது போன்ற பல கிராமிய நிகழ்ச்சியில் இடம் பெறுவதை பற்றிக் கூறுவது இக்கட்டுரையின் ஆய்வுச்சுருக்கமாகும்.

திறவு சொற்கள்

  1. பண்         -     இராகம்
  2. கரகம்       -     பூங்குடம்
  3. நாதஸ்வரம்   -     வங்கியம்
  4. மனோதர்மம்  -     கற்பனைவளம்
  5. தவில்        -     முழவு

முன்னுரை

      உலகெங்கும் நாட்டுப் புறமக்கள் தங்களுக்கென்று ஒருவகை இசைச் செல்வத்தை அழியாது காத்து வருகின்றனர். அது இயல்பான இசை நயமும் இயற்கையான சொல்லொலி நயமும் சிறப்பான கருத்து வளமும் கொண்டு விளங்குகிறது. மனிதனின் உண்மையான உணர்வுகள் கொப்புளிக்கும் அமுதவொலியானது இனிய இசையாக வெளிப்பட்டு, நாடடுப்புறப்பாடல்களாக உருவாகியுள்ளன. வாழ்வின் பல்வேறு நிலைகளும் பாடல்கள் வழி விளக்கப்படுகின்றன. அவை உணர்வின் ஊற்றுக் கண்கள். எண்ணங்களின் எழிலோவியங்கள் மனக்கருத்தின் புறப்பாடுகள். மனித உணர்ச்சியின் வடிகால்கள். இயல்பாகவும் இயற்கையாகவும் எழும் இலக்கியங்கள். அதில் அன்பு தவழும். காதல் மிதக்கும். வம்பு துடிக்கும். இன்பம் இனிக்கும் துன்பம் துவழும். அனைத்துக்கும் மேலாக இனிமைவற்றாது சுரக்கும். நாட்டுப்புறப் பாடல்கள் உண்மையான உணர்வுகளுக்கு இசை வடிவம் தருவன. கலைஞர்களின் இசையில் உணர்வுகள் தோன்றும் முன்னதில் உணர்வுக்கும் பின்னதில் இசைக்கும் சிறப்பிடங்கள் தரப்படும். ஆனால் இரண்டிலும் உணர்வும் இசையும் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடல்களும் இராக அமைப்பை பெற்று அதனை நாதஸ்வரத்திலும் சிறப்பாக வாசித்து வருகின்ற நாதஸ்வர கலைஞர்கள் புகழ் பெற்று வருவதை பற்றியும் எடுத்துக்காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நாட்டுப்புறப் பாடல்களின் இசை நயம்

      பண்ணுடன் அமைவது இசைப்பாடல். நாட்டுப்புற மக்கள் பாடுவது ஒருவகையான இசைப்பாடல்கள். ஆகையினால் அவற்றில் உறுதியாகப் பண்ணமைந்து காணப்படும். ஆய்வு அறிஞரும் இசைக்கலை வல்லுநரும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு அவற்றின் பண்ணமைப்பைப் பற்றி அறிய முயல்கின்றனர்.

      மீ.ப. சோமு ஓர் இசைப் பேரறிஞர். அவர் நாட்டுப்புற மக்களின் பாடல்களைச் சுவைத்து மகிழ்ந்து அவற்றில் அமைந்துள்ள பண்களைப் பற்றிச் சிந்தித்துக் கூறியுள்ளதைக் காணலாம். தோடி, புன்னகவராளி போன்ற ராகங்களுக்கு வித்தாக அமைகிற ஒரு பண் தமிழகத்து நாட்டுப்புறப் பாடல் களிலே மிகவும் முக்கியமான இசை வடிவமாகத் திகழ்கிறது என்பது அவருடைய கருத்து. இந்த இரண்டு ராகங்களும் பலநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் நாட்டுப்புறங்களில் மக்களின் நாவின் இன்னொலியோடு நடனமாடி வந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிவதாகக் கூறுகிறார்.

      மேலும் செஞ்சுருட்டி, ஆனந்த பைரவி, மாயாமாளவ கௌள, கௌளி பந்து, நாதநாமக்கிரிய, சக்கரவாகம், சௌராஷ்டிரம், ஆஹிரி, சாமா ராகம், செஞ்சுருட்டி,
ஸ்ரீ ராகம் ஆகியவையும் நாட்டுப்புறப் பாடல்களில் ஒலிப்பதாகவும் தெரிவிக்கின்றார். எந்த இசைக்கும் பண்ணமைப்பு உண்டு. அதைக் கண்டுபிடிக்க வேண்டியது இசையறிஞரின் கடமை. நாட்டுப்புறப் பாடல்களைப் பண்ணமைத்துக் காண்பதாயின் பண்டைத் தமிழிசை பற்றிய தெளிவு கிடைக்கலாம்.

கிராமிய இசைக்கருவிகள்

      கிராமிய இசைக்கருவிகள் பொதுவாக பண்படுத்தப்பட்டதாக (சுருதி, வேலைப்பாடு நிறைந்ததாக) இருக்காது. அதிலும் தாள வாத்தியங்களே இதில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தந்தி வாத்தியங்கள்

      இதில் ஏக்தார், ஏகநாதம், துந்தினா, வீணைக்குஞ்சு, கொட்டாங்குச்சிப் பிடில் ஆகியவை தந்தி வாத்தியங்களாக உள்ளன.

காற்றுக்கருவிகள்

      இதில் சங்கு, புல்லாங்குழல், கொம்பு, நாகசுரம், நெடுங்குழல், ஆயர் குழல், திருச்சின்னம், தாரை மற்றும் மகுடி ஆகியவை துளைக்கருவிகளாக உள்ளன.

தாள வாத்தியங்கள்

      இதில் அரப்சட்டி, உடுக்கை, தப்பு (டெப்பு, தவண்டை, டோல், டோலக், கும்மட்டி குந்தலம், ஜாமிடிக்கா, புல்லுவன் குடம், பம்பை, ராம்டோலு, ரம்ஜா, சூரியப்பிறை, சந்திரப்பிறை, தம்பட்டம், தமுக்கு, தந்திப் பானை, தவில், திமிலை, உறுமி, கடம் மற்றும் முரசு  போன்றவை தோற்கருவிகளாக உள்ளன.

கரக ஆட்டம்

      ‘கரகம்’ என்ற சொல் கமண்டலம், ஆலங்கட்டி, நீர்த்துளி, கங்கை. பூங்குடம் ஆகிய பொருள்களைத் தருகிறது. மலர்களைக் கொண்டு அழகாக ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து ஆடும் ஆடலுக்குக் கரக ஆட்டம் என்று பொருத்தமாகப் பெயர் கொடுத்துள்ளனர். இதைத் தென்மாவட்டங்களில் ‘கும்பாட்டம்’ என்று கூறுகின்றனர். நெல்லை, குமரி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கரக ஆட்டக் கலைஞர்கள் பலர் உள்ளனர். இந்த ஆட்டத்தைத் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் விரும்பிப் பார்க்கின்றனர். மாரியம்மன் கொடை விழாக்களில் மிகப் பரவலாக இந்த ஆட்டம் நடத்தப்படுகிறது. இறை வழிபாட்டு நிகழ்ச்சியுடன் இவ்வாடல் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. கரகாட்டக் குழுவில் பத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்குபெறுவார்கள். அதில் முன்னனிக் கலைஞராக நாதஸ்வர கலைஞர்கள் இருப்பார்கள். இவருடைய பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டத்தை தொடங்குவார்கள். பல விஞ்ஞான மாற்றத்தினால் நாட்டுப்புற இசையில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களும் பல இராகங்களை தெரிந்துகொண்டு சிறப்பான முறையில் வாசித்து வருகின்றார்கள்.

கரக ஆட்டமும் கலையழகு சிறக்கத் தொழில் முறையாகப் பல இடங்களில் நடைபெறுகிறது. வழிபாட்டுக் கரகத்துக்கும், கலைத்தன்மைக் கரகத்துக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முன்னது தண்ணீரால் நிரப்பி இருக்க பின்னது அரிசியால் நிரப்பபட்டிருக்கும். மலராலும் வண்ணக் காகிதத்தாலும் ஒப்பனை செய்திருப்பர். கரகத்தின் உச்சியில் ஒரு பொம்மைக் கிளி பொருத்தப் பட்டிருக்கும். பெண்கள் மிகப் பெரும்பாலான ஆடுவார்கள். ஆண்களும் சில இடங்களில் ஆடுவதைக் காணலாம். இருபாலரும் இணைந்து ஆடுவதும் உண்டு. கரகத்தைக் கையால் பிடிப்பது இல்லை, தலையில் அதைச் சமனப் படுத்தி மிக வேகமாகக் குதித்தும் சுழன்றும் ஆடுவர். பெரும்பாலும் தொழில்முறைக் கலைஞர் வெண்கலக் குடத்தையே வைத்து ஆடுவார்கள். காலில் சதங்கை கட்டி இருப்பர் ஆடையை இறுக்கமாக அணிந்து கொள்வர். நையாண்டி மேளத்தின் இசை கரக ஆட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக அமையும். இசைக்கும், தாளத்துக்கும் தக்கவாறு ஆட்டம் நடக்கும். படிப்படியாக உயர்ந்து உச்சக்கட்டத்தை அடைந்து பின் திடீரென நிற்கும் பேரொலியின் திடீர் நிறுத்தமும் ஆட்ட முடிவும் ஒரு வியப்பான அமைதியை ஏற்படுத்தி மக்களின் ஆரவாரக் கைதட்டலைப் பெறும் சில சமயம் ஒன்றிய உணர்வில் ஒலியற்ற அமைதியுடன் அனைவரும் வியந்து நின்றுவிடுவர்.

முடிவுரை

      நாதஸ்வரத்தில் இசையின் எல்லா அம்சங்களையும் கையாள முடியும். சில இசைக்கலைஞர்கள் சில இராகங்களை மணிக்கணக்கில் ஆலாபனை செய்து வாசிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக உள்ளனர். கற்பனை நிரம்பிய இராக ஆலாபனை, தாளநுட்பங்கள் நிறைந்த பல்லவி, கற்பனை சுவரங்கள், சங்கதி மாறாத கீர்த்தனைகள் போன்றவற்றை இதில் வாசிக்கலாம். மேலும் அபூர்வ இராகங்களை மிகவும் சிறப்பாக வாசிக்கும் கலைஞர்களும் உண்டு. இந்த இசைக்கருவியை நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கலைஞர்கள் கற்பனை வளம் நிறைந்து எந்த பாடலை கேட்டாலும் உடனடியாக வாசிக்கும் ஆற்றலை படைத்தவர்களாக உள்ளனர். பெரும்பாலும் நாதஸ்வரம் வீதிகளில் வாசிக்கும் பொழுது அதனுடைய கம்பீரத்தன்மை வெளிப்படுகிறது. நாட்டுப்புற இசையில் நாதஸ்வரத்தை இசைக்கும் பொழுது அவ்விடத்தில் அனைவருடைய மனதையும் நாதஸ்வர இசையை கேட்க செய்கிறது. நாதஸ்வரத்தின் நாதம் மென் மேலும் வளர்ந்த வண்ணமாக உள்ளது என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.

வாழ்க கலை!                                      வளர்க நாட்டுப்புற இசை!!

துணைநூற்பட்டியல்

  1. முனைவர் ஏ.என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-வது மெயின் ரோடு, சி.ஐ.டி. கேம்பஸ், சென்னை, 2003.
  2. டாக்டர் சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புற இயல், காவ்யா வெளியீடு, 16, இரண்டாம் குறிக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை, 2007.
  3. பக்கிரிசாமி பாரதி, இந்திய இசைக்கருவூலம், குசேலர் பதிப்பகம், சென்னை-78, 2009.
  4. டாக்டர் ஏ.என். பெருமாள், தமிழர் இசை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவுனம், டி.டி.டி.ஐ. தரமணி, சென்னை-600 113, முதற்பதிப்பு-அக்டொபர், 1984.
  5. https://www.aninews.in, wwwthani.com.
  6. http://ta.wikipedia.org/s/mah.