ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மதங்களும் பெண்களும் | Religions and women

முனைவர் நா ஹேமமாலதி தமிழ்த்துறைத் தலைவர் & இணைப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, வேல்ராம்பேட், புதுச்சேரி -605 004 |  Dr. N.Hemamalathi, HOD & Associate professor of Tamil, Saradha Gangadharan college,  velrampet Puducherry-605004. 30 Apr 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

        முற்காலத்தில் உருவான புனைவுகளில் உலகத் தோற்றம் பற்றிய சிந்தனைகளைக் காண முடிகிறது.  அப்புனைவுகளில் உலகத் தோற்றம் பற்றிய ஒருமித்த கருத்து நிலவாமல்,  ஆணால் என்றும் பெண்ணால் என்றும் நேர் எதிர் எதிரான புனைவுகள் உருவாகியிருப்பதும்,  தாய் வழிச் சமுதாயம் முடிவுற்று தந்தைவழிச் சமுதாயத் தோற்றம் பெற்ற காலமாகத் தோன்றியிருக்க வேண்டும். சமயங்கள் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும் ஓர் உயர்நிறுவனமாக வளர்ந்த பின்பு,  உலகத் தோற்றம் பற்றிய கதைகளை நோக்கும்போது,  தந்தைவழி அல்லது ஆண்வழிச் சமுதாயத் தோற்றத்திற்குப் பின்னால் கட்டப்பட்ட கதைகளாகவே இருக்கிறது.          

            பைபிளில் சொல்லப்படும் யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களின் படைப்புப் பற்றிய வரலாற்றிலும்,  ஆதியாய் இருந்த ஆண் தன் தனிமையைப் போக்க தோழமை வேண்டி ஆணாகவும் பெண்ணாகவும் பிரிந்ததில் சொல்லும் புனைவுகளில் உலகில் முதலில் தோன்றியது ஆண் தான் என்ற ஆணாதிக்க சிந்தனையும்,  இதற்கு நேர் எதிராக தன்னின் அம்சமாய் ஆண்களாகிய தெய்வங்களைப் படைத்ததுடன் அவர்களுக்கு ஆற்றல்களை வழங்கியதும் பெண்ணே என்கிறது வாய்மொழி மரபுக்கதை.  இந்தியாவில் வேத காலத்தில் பெண்கள் இரண்டாந் தர மதிப்பையே பெற்றிருந்தனர்.   புத்தர் பெண்களுக்குத் தீட்சை கொடுக்க அஞ்சினார்.  பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பதும்,  பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயத்தின் நம்பிக்கை. பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு அடைய முடியாது என்பதும் சமணத்தின் கணிப்பு.  சீனர்கள் பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை என்றனர். ஜப்பானிய ஷிண்டே போதனையில் ‘உலகின் உதய காலத்தில் பெண் தான் முதலில் பேசினாள்.  அதன் விளைவாக அவளுக்குப் பிறந்தது ஒரு வேதாளம்.  ஹீப்ருக்களுக்கு, பெண் குழந்தையைப் புனிதப்படுத்த கூடுதலாக இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களது வேதம் கட்டளையிடுகிறது.  எனவே உலக மதங்களுக்கிடையே கருத்து மோதல்களும்,  தத்துவ பேதங்களும் இருந்தபோதிலும் இவற்றுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை அறிவதே இக்கட்டுரையின் பரந்த நோக்கமாக கருதப்படுகிறது.

Study summary:

There is no consensus about the origin of the world in the myths, and the fact that there are opposing myths created by men and women, must have appeared at the time when the matrilineal society ended and the paternalistic society emerged. After religion grew into a controlling institution of society, when we look at the origin stories of the world, they are stories built behind a patriarchal or patriarchal social origin. In the history of the creation of the Jews or Israelites told in the Bible, and in the legends that say that the primitive man sought  There is no consensus about the origin of the world in the myths, and the fact that there are opposing myths created by men and women, must have appeared at the time when the matrilineal society ended and the paternalistic society emerged. After religion grew into a controlling institution of society, when we look at the origin stories of the world, they are stories built behind a patriarchal or patriarchal social origin. In the history of the creation of the Jews or Israelites told in the Bible, and in the legends that say that the primitive man sought companionship to overcome his loneliness and separated into a man and a woman, the patriarchal idea that man was the first to appear in the world, Contrary to this, oral tradition says that it was the woman who created the male deities as her aspect and gave them powers. In Vedic India, women were given second-class status. Buddha was afraid to initiate women. It is the belief of Jainism that female birth is an inferior birth and a sinner is born as a female. Jainism predicts that a person born as a female cannot earn a living. The Chinese said that woman has no soul. According to the Japanese Shinte teaching, 'Woman was the first to speak at the dawn of the world. As a result a Vetala was born to her. For the Hebrews, their scriptures dictated that an additional two months be taken to sanctify a female child. Therefore, the broad purpose of this article is to know the unity between world religions despite the conflicts of opinion and philosophical differences.

Key words: Religions, women, slavery, Religions, மதங்கள், சமயங்கள், பெண்கள், அடிமை

முன்னுரை:

            நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் தத்துவ மோதல்கள் ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் இடையே நிலவியது.   நாகரிக வளர்ச்சி அடையாத பூர்வ காலத்தில்,  உருவான புனைவுகளில் உலகத் தோற்றம் பற்றிய சிந்தனைகளைக் காண முடிகிறது.   அக்கதைகளில்,  உலகத்தோற்றம் பற்றிய ஒருமித்த கருத்து நிலவாமல்,  உலகம் யாரால் படைக்கப்பட்டது என்ற வினாவிற்கு,  ஆணால் படைக்கப்பட்டது என்றும்,  பெண்ணால் படைக்கப்பட்டது என்றும் நேரெதிரெதிரான புனைவுகள் உருவாக்கப்பட்டன.

              இக்கதைகளை நோக்குமிடத்து,  இவை தாய் வழிச் சமுதாயம் முடிவுற்று தந்தைவழிச் சமுதாயத் தோற்றக் காலத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.   இக்கதைகள் தாய்வழி,  தந்தை வழிச் சமூக அமைப்புகளின் சிந்தனைக்கேற்ப இவ்வுலகம்,  பெண்ணால் படைக்கப்பட்டது என்றும்,  ஆணால் படைக்கப்பட்டது என்றும் புனைவுகளை உருவாக்கி உள்ளன என்பதை அறியலாம்.   இனி,  சமயங்கள் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும் ஓர் உயர்நிறுவனமாக வளர்ந்த பிறகு தோன்றிய உலகத் தோற்றம் பற்றிய கதைகளை நோக்குமிடத்து அவை அனைத்தும்,  தாய்வழிச் சமுதாயத் தோற்றத்திற்குப் பின்னால் கட்டப்பட்ட கதைகளாகவே தோன்றுகின்றன.

   பைபிளில் சொல்லப்படும் யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களின் படைப்புப் பற்றிய வரலாற்றில்,  தேவன் ஆவியாக அசைந்தாடி வானையும்,  கடலையும் பிரித்தார்.   சூரியன்,  சந்திரன்,  நட்சத்திரங்களைப் படைத்தார்.  தாவரங்களையும் படைத்து தனது சாயலாக ஆதாம் என்னும் முதல் மனிதனைப் படைத்தார்.   அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார் என்று கூறப்படுகிறது. 

            ஆதியாய் இருந்த ஆண் தன் தனிமையைப் போக்க தோழமை வேண்டி ஆணாகவும் பெண்ணாகவும் பிரிந்து கொள்கிறான்.   அப்போது தன்னைப் பின்தொடரும் ஆணிடம்,  உன்னிடம் இருந்து பிறந்த நான் உன்னுடன் சேரலாகாது என்று கூறும் பெண்,  பசுவாக மாறுகிறாள்.   அவன் எருதாக மாறி பசுவுடன் சேர கால்நடைகள் உண்டாகின்றன.   பின்னர் அவள் ஆடாக மாற அவன் கிடாயாக உருக்கொண்டு சேர,  ஆட்டினம் உண்டாகிறது இப்படியே எறும்பினம் வரை உண்டாகின்றன.   இது பீதாரண்ய உபநிடதத்தில் இடம்பெறும் உலகத்தோற்றம் பற்றிய கதை. (சா. தேவதாஸ், மூன்றாவது விழியின் முதலாவது பார்வை (பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்) ப.1)

          மேற்கண்ட புனைவுகளில் உலகைத் தோற்றுவித்தவர் ஆணென்றும்,  உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்னும் ஆணாதிக்கச் சிந்தனையைக் காணமுடிகிறது.

         ஆனால், வாய்மொழி மரபில் படைப்பினை விவரிக்கும் கதை இதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது.   எல்லா உயிர்களும் ஜனிக்கும் முன்பாகவே ஆதிப் பெண்தெய்வம் பிறந்து விடுகிறாள்.  வெகு சீக்கிரமாய் வளர்ந்து ஆணின் துணை நாடுகிறாள் யாரும் இல்லாது போகவே தன்னிலிருந்து பிரம்மனை உண்டாக்கி சீக்கிரமாய் வளர்ந்து தன்னுடன் சேறுமாறு கூறுகிறாள்.   தாயாகிய உன்னுடன் நான் எப்படிச் சேருவது என்று கூறும் பிரம்மனைத் தன் உள்ளங்கையில் உள்ள நெருப்பு விழியால் சுட்டெரித்து விடுகிறாள். அடுத்த நாள் விஷ்ணுவை உண்டாக்குகிறாள் அவனும் தாயாகிய உன்னுடன் நான் எப்படிச் சேருவது என்று வினவ அவனையும் அப்படியே எரித்துவிடுகிறாள்.   மூன்றாவது நாளில் சிவனை உண்டாக்குகிறாள் அவன் வளர்ந்து வருகையில் உன் சகோதரர்களுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று சுற்றும் முற்றும் நோக்கிக் கவனி என்கிறாள்.  இரு சாம்பல் குவியல்களாய் அவர்கள் இருப்பதைக் கண்ணுற்று. .  “நீ சொல்வதன் படியே நடந்து கொள்வேன்” என்று சிவன் கூறுவதாக அக்கதை தொடர்கிறது. ( சா. தேவதாஸ்,  மூன்றாவது விழியின் முதலாவது பார்வை (பெண்ணிய ச் சிந்தனைகளும் படைப்புகளும்) ப.3)

         படைப்பின் கிரமத்தில் முதலில் தோன்றியது மட்டுமல்லாமல் தன்னின் அம்சமாய் ஆண்களாகிய தெய்வங்களைப் படைத்ததுடன் அவர்களுக்கு ஆற்றல்களை வழங்கியதும் பெண்ணே என்கிறது வாய்மொழி மரபுக் கதை.

     இந்தியாவில் வேத காலத்தில் ஆணாதிக்கக் கருத்தே மேலோங்கி இருந்ததைக் காணமுடிகிறது.   வேதகாலத்தில் முக்கிய கடவுளர்களாகக் கருதப்பட்ட இந்திரன், மித்ரன், வருணன், ருத்திரன், அக்னி இவர்கள் அனைவரும் ஆண்களே.   பெண்கள் ஆண்களின் மனைவிமார்களாகவே இரண்டாந்தர மதிப்பைப் பெற்றிருந்தனர்.   “உலக வரலாற்றில் பெண்கள்” என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் ரோஸிலிண்ட்மைல்ஸ்,

     “யூத மதம், பௌத்தம், கன்பூசிய மதம், கி றித்துவ மதம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஐந்து பிரதான நம்பிக்கை அமைப்புகள் (மதங்கள்) ஒவ்வொன்றும் அதனதன் வழியிலேயே, தமது இயல்பினாலேயே பெண்களின் தாழ்ந்த நிலைமையை வலியுறுத்தி, ஆண்களின் மேலாதிக்கத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆணைகளுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டும் என்று கோரின. “ ( ரோசிலின் மைல்ஸ், உலக வரலாற்றில் பெண்கள், ப. 234) என்று கூறுகிறார்.    

      புத்தர் பெண்களுக்குத் தீட்சை கொடுக்க அஞ்சினார்.   பெண்களால் சந்நியாசிகள் கெட்டுப்போக நேரிடலாம் என்று அவர் கருதினார்.   ஒரு பெண்ணின் உடம்பு அழுக்கு நிறைந்தது,  சட்டத்திற்குரிய ஒரு கொள்கலனல்ல என்று புத்தர் கருதினார்.  புத்தர் மரணப் படுக்கையில் இருக்கும்போது,  தனது விசுவாசமான சீடரிடம் இப்படிச் சொல்கிறார்.

         “ஆனந்தா,  பெண்கள் அடங்கா பாலின விழைவு உள்ளவர்கள்.  பெண்கள் பொறாமை உடையவர்கள்,  அவர்கள் அறிவில்லாதவர்கள், பொதுச் சபைகளிலேயே பெண்களுக்கு இடம் இல்லாததற்கு,  வர்த்தகத்தில் அவர்கள் ஈடுபடாதற்கு,  எந்த தொழிலின் மூலமும் அவர்கள் ஊதியம் ஈட்டி வாழ்க்கை நடத்தாததற்கு அதுதான் காரணம்.” (ரோசிலின் மைல்ஸ், உலக வரலாற்றில் பெண்கள், ப.  21)

       பெண் பிறவி தாழ்ந்தபிறவி என்பதும்,  பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயத்தின் நம்பிக்கை.  பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு அடைய முடியாது என்பதும் சமண மதத்தின் கணிப்பு. 

          “இந்திரன் தேவிமார்க்கும்,

           இறைமைசெய்முறைமை     

                                                     இல்லை. 

            பைந்தொடி மகளிராவார்    

            பாவத்தால் பெரிய நீரார்”

 ( மேரு மந்திரபுராணம்.  பா 738)  என்று மேரு மந்திர புராணம் கூறுகின்றது.  சீவகன் துறவு பூண்டபோது அவனுடன் துறவு பூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்கு தவம் செய்யவில்லை.  மாறாக பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர்.  அதன் பலனாய் அவர்கள் மறுபிறப்பிலேயே தேவலோகத்தில் ஆண் பிறவிகளாகப் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது. (சீவக சிந்தாமணி,  நாமகள் இலம்பகம், பா. 234) 

ஒரு பெண்  குளியலறைக்குச் செல்லும்போது சைத்தான் அவளுடன் இருக்கிறான் என்று முகமது அறிவித்தார். (ரோஸ்லின்மைல்ஸ்,  உலக வரலாற்றில் பெண்கள்,  ப. 152) பின்னாளில் முஸ்லிம்கள் “ பர்தா என்ற பெயரில் பெண்களைக் குற்றவாளிகள் போல் வீடுகளில் அடைத்து வைத்தனர்.  (ரோஸ்லின்மைல்ஸ் உலக வரலாற்றில் பெண்கள் ப. 206)

    “நான் நரகத்தின் தலைவாயிலில் நின்றேன்.  அங்கு பிரவேசித்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள்” . (ரோஸ்லின்மைல்ஸ் உலக வரலாற்றில் பெண்கள் ப. 135) பெண்கள் ஆண்களின் பொறுப்பில் உள்ளனர்.   ஏனெனில் அல்லா பெண்ணை,  ஆண் விஞ்சிச் செல்லும்படிச் செய்துள்ளார்.  எனவே,  சிறந்த பெண்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  அல்லா பாதுகாத்தவற்றை,  இவர்களும் ரகசியமாக பாதுகாக்கிறார்கள். கலகம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறவர்களைப் பொறுத்தமட்டிலும்,  அவர்களைக் கண்டித்து அறிவுரை கூறுங்கள்.  அவர்களைத் தனியாகப் படுத்துக்கொள்ளச் சொல்லி தூர விலக்குங்கள், கசையடி கொடுங்கள் என்கிறார் முகம்மது நபி. ( ரோஸ்லின்மைல்ஸ் உலக வரலாற்றில் பெண்கள் ப. 131)

        கடவுளின் பிம்பத்தில் பெண் படைக்கப்படவில்லை.  ஆண் மட்டுமே கடவுளின் பிம்பமாவான்;  படிநிலை அமைப்பில் ஆண்,  கடவுளுக்கு கீழே நிற்பதால் பெண்ணும் அப்படியே,  ஆனால் மிகவும் தள்ளி,  ஆணுக்குக் கீழாக நிற்கிறாள். அப்படியெனில்,  நடைமுறை ரீதியாகப் பார்த்தால்,  ஒவ்வொரு ஆணும்,  ஒவ்வொரு பெண்ணுக்கும் மேலாக அமைக்கப்பட்டிருக்கிறான் என்று புனித அகஸ்டின் விளக்கினார்.

      கடவுள் அவளுடைய உடம்பை ஓர் ஆணுக்குச் சொந்தமாவதற்கும்,  குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்காகவும் உருவாக்கினார்.  அவர்கள் மரணமடையும் வரையிலும் குழந்தைகளைப் பெறட்டும் என்று லூதர் அறிவுரை கூறினார்.

       சீனர்கள் பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை என்றனர்.  எனவே கணவன் மனைவியைக் கொன்றால் அது கொலைக் குற்றமாகக் கருதப்படவில்லை. (அப்துல் ரகுமான்,  சிறகுகளின் நேரம், ப.  206)    

             ஜப்பானிய ஷிண்டோ போதனையில்,  உலகின் உதய காலத்தில் பெண் முதலில் பேசினாள்.  அதன் விளைவாக அவளுக்குப் பிறந்தது ஒரு வேதாளம், அவளுடைய வாழ்க்கைத் துணைவனான முதலாவது மனிதன் ஆண்தான் எப்போதும் பேசவேண்டுமென்று கடவுளிடத்திலிருந்து வந்த உபதேசச் செய்தியாக உணர்ந்தான்’  என்று கூறப்பட்டுள்ளது. (ரோஸ்லின்மைல்ஸ் உலக வரலாற்றில் பெண்கள் ப. 153)

      ஆண் குழந்தையைக் காட்டிலும் பெண்குழந்தையைப் புனிதப்படுத்த கூடுதலாக இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஹீப்ருகளுக்கு அவர்கள் வேதம் கட்டளையிடுகிறது. (நாகரத்தினம் கிருஷ்ணா, சிமோன் தி பூவா  ப. 52)

        யூதப் பண்பாட்டில் ஆண்களின் வழிபாடு ‘கடவுளே! என்னை ஒரு பெண்ணாகப் படைக்காததற்காக,  உமக்கு நன்றி கூறுகிறேன்!’ என்றும் பெண்களின் வழிபாடு ‘கடவுளே! என்னை ஆண்களின் விருப்பப்படிப் படைத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்! என்றும் அமைந்துள்ளன. ( க. பஞ்சாங்கம் பெண் னென்னும் படைப்பு , ப. 22)  மேலும், யூதர்கள் பெண்களுக்கு அளிக்கும் அநீதிகளை ப் பற்றி ரோஸ்லிண்ட் மைல்ஸ் தம் நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

   ஒரு கணவன் (யூதன்), தனது மனைவியின் உள்ளார்ந்த இ ழிநிலையின் தயவில்தான் இருக்க நேர்ந்துள்ளதாகக் கருதினால்,  பொறாமை உணர்வு அவனை ஆட்கொள்ளும்போது,  எந்த சமயத்திலும் அவன் அவளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொள்ளும் அதிகாரம் படைத்துள்ளவனாகிறான்.  அவளின் தவறான நடத்தைப் பற்றி அவனுக்கு ஏதாவது சான்று இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.  அவளைக் கோவிலுக்கு இழுத்துச் சென்று அவன் அவளைக் குருக்களிடம் ஒப்படைத்து விடுகிறான்.  குருக்கள் அவளை இழிவுப் படுத்துவதன் அடையாளமாக, அவள் தலைமுடியை மூடி யிருக்கும் துணியை அகற்றி,  கோயிலின் தரையைக் கழுவிய அழுக்குக் கரைந்துள்ள ‘கசப்பு நீரை’ க் குடிக்கும்படி அவள் நிர்பந்தப்படுத்தப்படுகிறாள்.  அவளுடைய வயிறு வீங்கும்படியும்,  தொடை நாற்றம் எடுக்கும் படியும் குருக்கள் அவளைச் சபிக்கிறார்.  இவ்வாறு தனது  நியாயப்படுத்தப்பட்ட கணவன் கடவுளிடமிருந்து முழு ஊக்கம் பெறுகிறான். (ரோஸ்லின்மைல்ஸ், உலக வரலாற்றில் பெண்கள், ப. 35) முடிவுரை:

         உலக மதங்களுக்கிடையே கருத்து மோதல்களும் தத்துவ பேதங்களும் இருந்தபோதிலும் இவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை இருப்பதே மேற்கண்ட விளக்கங்களினால் அறிய முடிகிறது கடவுள் கோட்பாடுகள் பற்றி முரண்பட்ட சிந்தனைகள் இருந்தபோதிலும் எல்லா மதங்களும் பெண்ணை ஒடுக்கி ஆணுக்கு பெண்ணை அடக்கி ஆளும் உரிமையை வழங்கி இருக்கின்றன என்பதை இதன் வழி அறிய முடிகிறது.

துணை நின்ற நூல்கள்:

1.     தேவதாஸ்.சா, மூன்றாவது விழியின் முதலாவது பார்வை, ஆருத் புக்ஸ், சென்னை.

2.     அப்துல் ரகுமான்,  இது சிறகுகளின் நேரம்,  நேஷனல்  பப்ளிஷர்ஸ்,  சென்னை,  2005

3.     நாகரத்தினம் கிருஷ்ணா,  சிமொன் தெ சொல்வார், எனி இந்தியன் பதிப்பகம், சென்னை, 2008

4.     பஞ்சாங்கம், க., பெண்ணெனும் படைப்பு,  செல்வன் பதிப்பகம், புதுச்சேரி, 1994.