ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க இலக்கியத்தில் சுனை | MOUNTAIN POOL IN SANGAM LITERATURE

முனைவர் கதி.முருகேசன் (கதிர்முருகு), உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி – 622403 | Dr.KT.Murugesan (Kathirmurugu), Assistant Professor, Department of Tamil, Ganesar College of Arts and Science, Melaisivapuri - 622403 30 Apr 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

    சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள குறிஞ்சித் திணைப் பாடல்கள் குறிஞ்சி நிலத்தின் பன்முகத் தோற்றத்தை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப்புலவர்கள் தங்கள் படைத்த அகப் பாடல்களில் காதல் வாழ்க்கைக்குப் பின்னணியாக மலைக்காட்சியைப் பதிவு செய்துள்ளனர். குறிஞ்சித் திணைப் பாடல்கள் மூலமாகச்  சிகரம், கல்லகம்,  அடுக்கம், மலை முழைஞ்சு, கல்லதர் அத்தம், சாரல், சுனை முதலியன குறித்த செய்திகள் கிடைக்கின்றன. சுனை, கல் பாறைகளில் இயற்கையாக அமைந்த குறிஞ்சி நில நீர் ஆதாரமாகும்.. மழைக் காலத்தில்  மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சி சங்கப் பாடல்களில்   இயற்கையோடு இயைந்ததாக விளக்கப்பட்டுள்ளது. சுனை அமைப்பு , சுனை சார்ந்த இயற்கைக் காட்சிகள் , அக வாழ்வில் பெறும் இடம், சுற்றுச் சூழல் முதலான சிந்தனைகள் சுனைகள் குறித்த செய்திகளின்வழிப் பதிவு பெற்றுள்ளன. சுனை  குறிஞ்சி நில நீராதாரம் மட்டுமல்ல  குறிஞ்சி நில மக்களின் வாழ்வின் ஒரு பகுதி என்பதைச் சங்கப் பாடல்கள் விளக்குகின்றன.

* சென்னைப் பல்கலைக்கழக அகராதி சுனை என்பதற்கு ஆங்கிலத்தில் Mountain pool  என்று விளக்கம் தருகிறது.

 

குறிப்புச் சொற்கள்:

சுனை , குவளை, நீலம், பன்றிக் கண், எறும்பு அளை, எட்டாம் நாள் நிலவு.

 

ABSTRACT

                     The Kurinji hymns found in the Sangha literature help to understand the multifaceted nature of the Kurinji land. The Sangam Pulavas recorded the mountain scenery as a backdrop to their love life in their inner songs. Through Kurinjith Thiani songs, news about Sikaram, Kallakam, Kakkam, Malai, Muzhanju, Kalladhar Atham, Charal, Sunai etc. are available. Kurinji Nila is a natural source of water in the stone rocks. The water stagnates when it rains heavily during the rainy season. It is explained as natural. Thoughts such as the structure of the stone, the natural scenes related to the stone, the place in the inner life, the environment, etc. have been recorded through the news about the stones. Sunai is not only a Kurinji land water source but also a part of Kurinji land people's life, Sangha songs explain.

Key Words: Sunai Sikaram Kallagam Malai Malaichaaral Kuvalai Neelamalar

முன்னுரை

         சங்க இலக்கியங்கள் திணைப் பாகுபாட்டில் அமைந்த பாடல்களைக் கொண்டவை. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் திணைகளில் அமைந்த பாடல்கள் நில அமைப்பைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றன. குறிஞ்சி நில அமைப்பின் பல்வேறு கூறுகளையும் புலவர்கள் பாடல்களில் எடுத்துக் கூறியுள்ள முறை நிலவியல் குறித்த விரிவான அறிவை வழங்குவதாக அமைந்துள்ளது. குறிப்பாக நிலங்களின் வாழ்க்கை முறைக்கு ஆதாரமாக அமையும் நீர் குறித்த சிந்தனை விரிவான அளவில் பாடல்களில் பதிவு  பெற்றுள்ளது. குறிஞ்சி நில நீர் ஆதாரங்களுள் ஒன்றான சுனை அக வாழ்வின் பின்னணியாக அமைந்தாலும் புலவர்கள் அதன் வழி நுட்பமான செய்திகள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களின் பன்முகமான நுண் செய்திகள் வரிசையில் இக்கட்டுரை சுனை குறித்து ஆராய்கிறது.

சுனை விளக்கம்

      தமிழ் அகரமுதலி சுனை என்பதற்கு  மலையூற்று, குகையில் உள்ள நீர்நிலை என்னும் பொருள்களையும் (www.தமிழ் அகரமுதலி.com) தமிழ் விக்சனரி மலை ஊற்று, நீர் நிலை, நீர் நிலையும் நிழல் தரும் மரமும் உள்ள பசும் புல்தரை (www.தமிழ் விக்சனரி.com) என்னும் பொருள்களையும் தருகின்றன . விக்கிப்பீடியா, சுனை என்பது இயற்கை நீர் நிலைகளுள் ஒன்று. இது பொதுவாக மலைகளில் காணப்படும் நீர்நிலை வகையாகும். இது மலைகளின்கண் தோன்றும் ஊற்று நீர் ஆகும். இது சிறு அருவி போலக் காணப்படும். சிறு குளம்போலத் தேங்கியும் காணப்படும். (www.wikipeadia.com – சுனை) என்று சுனைக்கு விளக்கம் தருகிறது. சுனை குறித்த விளக்கங்கள் இயற்கையாக அமைந்த நீர்நிலை என்பதை உணர்த்துகின்றன. உயர்ந்த மலைகளில் மழை பெய்யும்போது வழிந்தோடி அருவியாகப் பெருக்கெடுக்கும் நீர் மலைப்பகுதியில் இயற்கையாக உள்ள குழிகள் பள்ளங்கள் மற்றும் பிளவுகளில் தங்குகிறது. இதனைச் சுனை என அழைத்தனர். சுனைகள் மலைப்பகுதி உயிர்ச் சூழலுக்கு நீர் ஆதாரமாக அமைந்தன. உயர்ந்து விளங்கிய மலைகள் இனிமையான நீருடைய சுனைகளைக் கொண்டு விளங்கின.(பதிற்.85:6,7 )

 

சுனை புகைப்படம் : நன்றி: wikipedia.com

சுனைக்கு உவமை

     செய்யுளை அழகுபடுத்துவது உவமை. பண்டைக்காலத்தில் உவமை அணி அணிகளுக்கெல்லாம் தாயாக  விளங்கியது . பண்பு தொழில் பயன் என்பவற்றின் அடிப்படையில் ஒரு பொருளோடு ஒரு பொருளையும் ஒரு பொருளோடு பல பொருள்களையும் ஒப்புமைப் படுத்துவது உவமை என்று தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது (தண்டி.31) மலைப் பாறைகளில் இயற்கையாக அமைந்த சுனைகளின் தோற்றத்தை விளக்க வந்த புலவர்கள் உவமைகள் மூலமாக விளக்கிக் கூறியுள்ளனர். உவமைகள் அனைத்தும் சுனைகளின் இயற்கையான தோற்றத்தை விளக்குவனவாக உள்ளன. பாரி ஆண்ட பறம்பில் இருந்த சுனைகள் வானத்தில் உள்ள விண்மீன்களை ஒத்துக் காணப்பட்டதாகவும் (புறம் . 109: 9,10) அங்கு உள்ள சுனை எவ்வாறு காண்பதற்கு அரிதோ அவ்வாறே தலைவி காண்பதற்கு அரியவள் என்றும்  குறிப்பிடுகிறது. நுங்கின் வெட்டிய கண் போன்று நீர் நிறைந்த சுனைகள் விளங்கியதாகக் கலித்தொகை தெளிவுபடுத்துகிறது. (108:40-44) சுனை சார்ந்த சோலைகளிலும் சுனைகளிலும் மலர்கள் நிறைந்து காணப்படுவதால் காமனின் அம்பறாத் தூணியை ஒத்து விளங்கியதாகப் பரிபாடல் (18:30-33) குறிப்பிடுகிறது. சுனை வடிவத்திற்கு மலைபடுகடாம் நீர்ச்சாலையும் (104) அகநாநூறு பன்றியின் கண்ணையும் ஒப்புமைப்படுத்துகின்றன. பாறைகளில் உள்ள சிறிய சுனைகள் எறும்புப் புற்றுகளுக்கு உவமை கூறப்படுகின்றன (குறுந்.12:1,2)  கள் ஊற்றி வைத்த குப்பி போன்று சுனைகளின் வாய் அமைந்திருந்ததாகவும் அங்கிருந்து  ஒலித்த தேரைகளின் ஒலி தட்டைப் பறை போன்று இருந்ததாகவும் அறியமுடிகிறது (குறுந்.193 :1-3) சுனை வற்றி இருண்ட காலத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்ட காட்சி யாழின் வெறுமையான வாய்க்கு ஒப்புமை கூறப் படுகிறது ( பெரும்பாண்.10,16) அகநாநூறு நீரற்ற சுனைக்குப் பசி கொண்ட யானையின் அழகிழந்த கண்ணை உவமையாகக் கூறுகிறது .(32:1)

விலங்குகளின் நீராதாரம்

   வன விலங்குகள் தம் நீர்த் தேவையை நிறைவேற்றிகொள்ளத் துணையாகச் சுனைகள் விளங்கின. மணம் மிக்க நரந்தம் புல்லை மேய்ந்த கவரிமான் குவளை மலர்கள் மலர்ந்த சுனை நீரைப் பருகிச் சுனை அருகில் இருந்த மர நிழலில்  துணையுடன் துயில் கொண்டது (புறம்.132:4-6) ஆண் மான் நெல்லிக் காய்களைத்தின்று மிகுந்த தாகத்துடன் பெருமூச்சு விட்டு மலைச் சுனையில் இருந்த பசுமை படர்ந்த நீரைப் பருகியது (குறுந். 317: 1-4) மலைச்சாரல்களில் வாழும் யானைகள் சுனை நீரைப் பருகின ( நற்.273:6-8) என இலக்கியங்களின் வழியாக அறியலாகும் செய்திகள் வன விலங்குகள் சுனை நீரை வாழ்வாதாரமாகக் கொண்டதை அறியத் துணை செய்கின்றன.

மக்களின் நீராதாரம்

   மலைப் பகுதியில் வாழ்கின்ற மக்களுக்குக் குடி நீராகவும் உணவு சமைக்கப் பயன்படுவதாகவும் சுனைநீர் விளங்கியது. குறிஞ்சி  நில மக்கள் வரகு அரிசியைச் சுனை நீரில் சமைத்தனர். (அகம்.393:12-16) புலி கொன்று தின்ற ஆண் யானையின் மாமிசத்தில் ஆறலைக் கள்வர்கள் கவர்ந்துகொண்டதுபோக எஞ்சியுள்ள மாமிசத்தை உப்பு  வியாபாரிகள் தீயில் வதக்கிச் சுனை நீர் கொண்டு உணவு சமைக்க உலை வைத்தனர். ( மேலது. 169:3-7) பொருள் பெறும்பொருட்டு வள்ளல்களை நாடிச்  சென்ற கூத்தர்கள் குவளை நிறைந்த பசுமை நிறமுடைய சுனையில்  வழிநடைக் களைப்புத் தீருமாறு சுனை நீரைப் பருகிப் பயணம் தொடருமாறு ஆற்றுப்படுத்தப்பட்டனர் (மலைபடு.250,251) மழவர்கள் பசுக்களைக் கவர்ந்து கொன்று தின்ற பின்பு தெளிந்த சுனை நீரைப் பருகினர் (அகம்.129:11,12)

நீர் இல்லாச் சுனை

    கோடைக் காலதில் மழை இல்லாமல் சுனை வறண்டு விலங்குகள் தண்ணீர் இல்லாமல் துன்புறும் சூழல்களும் மலையில் நிலவும் மிகுதியான வெப்பமும் இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளன.  கோடை வெப்பத்தால் சுனைகள் வறண்டு காணப்பட்டன ( குறுந். 347:1)  மிகுதியான வெப்பத்தால் மரக்கிளைகள் தீப்பற்றி எரிந்தன (அகம்.295: 1,2) நீர் இல்லாததை உணராத யானைக் கூட்டங்கள் சுனை அருகில் நீரை விரும்பி நின்றன (கலித்.12: 3,4) வறண்டு  இருள் சூழ்ந்த சுனைக்குள் புலி குட்டியை ஈன்றது.(அகம்.329:13,14)  நீர் தேடி அலைந்த யானைகள் நீர் இல்லாத காரணத்தால் சுனைகளில் இருந்த பாசியைத் தின்றன. (அகம்.91:1-5)  புலியுடன் சண்டை இட்ட யானை உடலில் பட்ட காயத்துடன் நீர் வேட்கையால் பெரு மூச்சு விட்டு நீரற்ற சுனையில் நீர் தேடியது (அகம்.119: 16-20) நீர் இல்லாமல் வறண்ட சுனைப் பாறைகள்  நெல் பொரியும் அளவு வெப்பம் உடையதாக விளங்கின (அகம்.1: 12-13)

சுனை வளம்பெறுதல்

       கோடைக் காலத்தில் வறண்டு காணப்பட்ட சுனைகள் கார்காலம் தொடங்கி மழை பெய்யத் தொடங்கியதும் நீர் நிறைந்து காணப்பட்டதையும் அதனால் உயிர்கள் வளம் பெற்றதையும் இயற்கை அழகு பெற்றதையும் இலக்கியங்கள் வழி அறியலாம். அச்சம் தரும் இடம் அகன்ற சுனைகள் நிறையுமாறும் (நற்.7.1,5,6: 268:1,2)  நிறைந்த  சுனையில் விலங்குகள் நீர் உண்ணுமாறும் (அகம் .364: 7-9) தாவரங்கள் தழைக்குமாறும் (நற்.5: 2-5) மழை பெய்தது. அதனால் சுனைகளில் மலர்கள் மலர்ந்தன (அகம்.132:9-11; பரி. 14:112)

அகவாழ்வில் சுனை

   சங்கப் பாடல்களின் பின்னணியாக அமையும் கருப்பொருள்களில் குறிஞ்சி நிலப் பின்னணியில்  அமையும் சுனை அக வாழ்வில் பெறும் இடத்தைப்  பாடல்கள் பதிவு செய்துள்ளன. குறிஞ்சி மற்றும் பாலைப் பாடல்கள் வாழ்வியல் நோக்கில் ஆழமான அகப்பொருள் சிந்தனைகளைக் கொண்டுள்ளன . தலைவனின் தோற்றம் இயற்கைப் புணர்ச்சி குறியிடம் தலைவன் தலைவி உரையாடல் தலைவியின் வனப்பு சுனை நீராடல் பிரிவுத்துயர் உடன்போக்கு என்னும் நிலைகளில் சுனை பயன் கொள்ளப்பட்டுள்ளது.

தலைவனின் தோற்றம்

    தலைவன் பரந்துபட்ட நிலம் முழுமையும் பயணம் செல்லும் இயல்புடையவன் என்பதைத் தொல்காப்பியம் உவமை இயல் உணர்த்தும். தொல்காப்பியர் தலைவன் தலைவி தோழி முதலானோர் உவமை கூறும் முறை குறித்து விளக்கும்போது  தலைவன் அறிவுடன் கிளப்பான் (தொல்.பொருள்.உவம. சூ. 27) என்று கூறுவது கருதத்தக்கது. தலைவன் பல இடங்களுக்கும் கடமை வழிப்பட்டுச்  செல்லும் இயல்புடையவன் என்பதை அறிய இலக்கியச் சான்றுகளும் துணை புரிகின்றன. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தலைவனை அறிமுகம் செய்யும்போது மலை, நிலம், கிளை, சுனை ஆகிய இடங்களில் மலர்ந்த மலர்களைத் தொடுத்து அணிந்த மாலை உடையவனாக விளங்கினான் (குறிஞ்சிப். 113-116) என்று கூறுவது இதற்குச் சான்றாகும். தலைவன் சுனையில் மலர்ந்த மலர்களைக் கண்ணியாகத் தொடுத்துச் சூடியதாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது. இதனால் தலைவன் சுனைகளில் மலர்ந்த மலர்களைச் சூடும் இயல்புடையவன் என்பது விளங்கும்.

தலைவியின் அழகும் சுனையும்

       தலைவியின் அழகிற்குச் சுனை சார்ந்த பொருள்கள் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. தலைவியின் கண்கள் நெற்றி கூந்தல் அல்குல் தழை ஆடை ஆகியன சுனையின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளன. மலைகளில் இருந்த சுனைகளில் கண்கள்போலக் குவளை மலர்கள் மலர்ந்திருந்தன (நற்.161:1-2) இரண்டு குவளை மலர்களை இணையாக வைத்தது போன்று தலைவியின் கண்கள் காணப்பட்டன (அகம்.149:16-19; நற்.301:2,3) மலைநாடனின் சுனையில் மலர்ந்த குவளை மலர்களைவிடத் தலைவி அழகான கண்களை உடையவளாக விளங்கினாள் (ஐங்.299:1-4)  தலைவி தினைப்புனத்தில் படிந்த  கிளிகளை விரட்ட அவை பறந்து செல்லாமல் மீண்டும் தினைப்புனத்தில் படிந்தது கண்டு அவளது கண்கள் குவளை மலர்களில் மழைத் துளிகள் படிந்ததைப் போன்று கலங்கிக் காணப்பட்டன (குறுந்.291) தலைவன் பிரிந்திருந்த காலத்தில் பசலை படர்ந்து காணப்பட்ட தலைவியின் கண்கள் தலைவன் வரவின் பின்பு  மழையால் வளம் பெற்று மலர்ந்த குவளை மலர்களைப் போன்று விளங்கின (ஐங்.500) அவளது நுதல் அரலைக்குன்றத்தில் உள்ள அகன்ற வாயை உடைய சுனையில் மலர்ந்த குவளை மலருடன் சேர்த்துக் கட்டப்பட்ட காட்டு மல்லிகை (குறுந்.59:2-4) சுனையில்பூத்த தேன்மணக்கும் புது மலர் ஆகியவற்றின் மணம் உடையதாக விளங்கியது (குறுந்.342:4-5) பெண்கள் குவளை மலர்களைச் சூடிக்கொள்வதில் விருப்பும் உடையவர்களாய் இருந்தனர் (திருமுருகு. 199,205) தலைவி குவளை மணம் கமழும் கூந்தலை உடையவளாக விளங்கினாள் (அகம்.371:11-14: நற்.105:7-10: ஐங்.225:1-3)   பெண்கள் தழையையும் குவளை மலர்களையும் கலந்து ஆடை கட்டிய வழக்கைப் புறநானூறும் குறுந்தொகையும்  தெளிவுபடுத்துகின்றன. (116:1,3: 342:4,5)

இயற்கைப் புணர்ச்சி

   தலைவன் தலைவி இருவரும் நல்ல ஊழ் காரணமாக ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு காட்சி ஐயம் தெளிவு குறிப்பறிதல் என்னும் கைக்கிளை ஒழுக்கங்கள் நடைபெற்ற பின்பு இயற்கைப் புணர்ச்சி நடைபெறும். தலைவன் தலைவி இருவரும் மனதால் ஒன்று சேரும் நிகழ்வு குறிஞ்சித் திணையில் நடைபெறுவதைச் சுனைகளின் பின்னணி கொண்டு புலவர்கள் விளக்கியுள்ளனர். மந்தி கடுவனுடன் சுனையை ஒட்டியுள்ள வேங்கை மரத்தில்  கலந்து மகிழ்ந்த காட்சியை நற்றிணை பதிவு செய்துள்ளது (334:1-5) கடுவனால் முயங்கப்பட்ட மந்தி தன் புணர் குறியைச் சுற்றம் அறியும் என்னும் அச்சம் கொண்டு சுனை அருகில் உள்ள வேங்கை மரத்தில் ஏறித் தன் கலைந்த மயிரைச் சரி செய்ததை நற்றிணை குறிப்பிடுகிறது (நற்.151: 5-11)  இலக்கியங்கள் விளக்கியுள்ள இயற்கைப் புணர்ச்சி குறித்த சிந்தனைகள் தலைவன் தலைவி இருவருக்கும் நடைபெற்ற இயற்கைப் புணர்ச்சியின் குறியீடாகச் சுனையைப் பின்னணியாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன.

தலைவன் தலைவி உரையாடல்

   களவுக் காலத்தில் தலைவன் தலைவி இருவரும் சந்திக்கும்போது தலைவன், தலைவியின் பண்பு நலன்களைப் பாராட்டிக் கூறுவது உண்டு. ஆய் அண்டிரனின் நாட்டில் அணங்கு வாழும் மலைமீது உள்ள சூர் போன்றவள் இவள் என்று வியந்து கூறி (கலி .55:18) அவளது கண்களைச் சுனையில் மலர்ந்த மலருக்கு ஒப்புமை கூறுகிறான் (மேலது.55:18) சுனையில் பூத்த குவளை மலர் மாலையைத் தலைவன் அவள் சூடிக்கொள்ளத் தருவதுடன் (குறுந்.346:4)  சுனை சார்ந்த இடத்திற்கு முன்பு சந்தித்த இடத்திற்கு வருமாறு கூறுகிறான் (நற்.204:3,4) இச் செய்திகள் தலைவன் தலைவியின் களவு வாழ்க்கைக்குச் சுனை பின்னணியாக அமைந்ததைத் தெளிவுபடுத்துகின்றன.

குறியிடம் கூறுதல்

         தலைவன் தலைவிக்கு இடையேயான களவு  வாழ்வில் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பவள் தோழி. தலைவனுக்கு அவள் சந்திக்கும் இடம் குறித்துக் கூறும்போது சுனையை அடையாளமாகக் கொண்டு குறியிடம் காட்டுவதை அறியமுடிகிறது. நீ பகல் பொழுதில் வந்தால் பாறையில் உள்ள நீர் பெருகிய சுனையில் மலர்ந்த குவளை மலர்களைச் சூடிய தலைவியின் கூந்தலில் துயின்று மாலை வேளையில் உன்னுடைய ஊருக்கு செல்லலாம் என்று தோழி குறியிடம் உணர்த்தியதை அகநானூறு விளக்குகிறது (அகம்.308:7-16) .

சுனை நீராடல்

         குறிஞ்சித் திணைப் பாடல்களில் தலைவன் தலைவி இருவரும் சுனையில் நீராடிய காட்சிகளை அகப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. கற் பாறையில் இருந்த அகன்ற சுனையில் மலர்ந்த மலர்களைக் கொய்த தலைவி (நற்.357:7-10)  சுனையில் நிறைந்திருந்த பளிங்கு போன்ற தெளிந்த நீரில் தலைவனுடன் நீராடினாள். (அகம்.365:10,11:228:3-5)  என்னும் செய்திகள் களவுக் காலத்தில் தலைவன் தலைவி இருவரும் சுனையில் நீராடும் வழக்கம் கொண்டிருந்ததை விளக்குகின்றன.

பிரிவுத்துயரம

தலைவன் தலைவியின் சந்திப்புக்குக் காரணமாக அமையும் தினைப்புனத்தில் கதிர் விளையும் காலம் தொடங்கித் தலைவியும் தோழியும் காவல்புரிவர். அக்காலத்தில் நல்லூழின் தன்மையால் காந்தருவக் காதலில் ஒன்று சேர்ந்து இயற்கைப் புணர்ச்சியில் சங்கமிக்கும் இருவரின் மகிழ்ச்சியும் தினைப்புனத்தில் கதிர்கள் கொய்யப்பட்டவுடன் தடைப்படும். சந்திக்க வாய்ப்பின்மையால் இருவரும் துயரடைவர். அக்காலத்தில் சுனைகள் அருவிகள் முதலியவற்றில் நீராடியதையும் மகிழ்ச்சியாக இருந்த பொழுதுகளையும் நினைத்துத் துன்புறுவர். அவர்களின் துயரமான மனநிலை சுனை குறித்த செய்திகள் வழி விளக்கப்பட்டுள்ளது. தலைவனுடன் அருவி நீரில் நீராடுவதும் சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மகிழ்ச்சி கொண்டு விளையாடுவதும் இனி அரியன போலும் என்றும் (அகம். 302: 4 - 8)  நீராடாத காரணத்தால் தெளிந்த நீருடன் நீலப் பூக்கள் மலர்ந்த சுனையையும் கதிர்கள் கொய்யப்பட்டு வெறுமை அடைந்த தினைப் புனத்தையும் கண்டு தலைவன் வருத்தம் கொள்வானே என்று தோழி தலைவனுக்காகவும் தலைவிக்காகவும் வருந்துவதும் குறிப்பிடத்தக்கது. தலைவனைச் சந்தித்த சூழலில் தோழி, உன்னோடு கொண்ட உறவை அன்னை அறிந்தால் என் தந்தையின் மலைச் சாரலில் உள்ள இனிய சுனையில் நீராடித் தோழியருடன் பறித்த குவளை மலர் போன்ற அழகுடைய தலைவியின் கண்களில் கண்ணீர் வழிய அவள் நிலை என்ன ஆகுமோ என்றும் வருந்துகிறாள் (நற். 317: 5-10) தான் தலைவனைச் சந்தித்த இடத்திற்குச் சென்ற தலைவி சுனையில் மலர்ந்திருந்த நீல மலர்களைக் கண்டு அழுத கண்களை உடையவளாக மனத்தில் மிகுந்த வருத்தம் கொண்டாள் (குறுந். 366: 4-6) தலைவன் பிரிவால்  தலைவியின் கண்கள் மழையை ஏற்று நனைந்த குவளை மலர்களில் இருந்து நீர் துளிர்ப்பதை ஒத்துக் கண்களில் நீர் வழியத் துன்பம் கொண்டாள் (கலி. 7:11, 12; 48: 14, 15; அகம். 143: 12 - 16) .

செலவழுங்குவித்தல்

தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதால் அவளுக்கு ஏற்படும் துன்ப நிலையைத் தலைவனிடம் எடுத்துக்கூறித் தோழி தலைவனைச் செலவழுங்குமாறு கேட்டுக்கொள்வாள். தலைவன் தலைவியின் துன்பம் கண்டு இல்லத்து அழுங்கலும் இடைச்சுரத்து அழுங்கலும் உண்டு. தலைவன் பொருள்தேடச் செல்ல முயன்றவிடத்துத் தோழி தலைவனிடம், சுர வழியில் உள்ள நீரற்ற சுனைகளில் இலைகளுடன் வாடிக் காணப்படும் மலர்கள் உன்னைச் செல்லவிடாமல் தடுக்கும் (கலி.3:8,9)  என்று  கூறுவது தலைவனின் பயணத்தைத் தடுக்க நினைக்கும் தோழியின் நுட்பமான அறிவுத் திறனைக் காட்டுகிறது.

உடன்ோக்கும் உறவுகள் நிலையும்

தலைவி உடன்போக்குச் சென்றவிடத்து நற்றாயும் செவிலியும் துன்புறும் காட்சிகளில் சுனை குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவனுடன் உடன்போக்குச் சென்ற தலைவி நீரற்ற சுனைகள் உள்ள வழியில் தலைவனுடன் சென்று நீர் பெறாமல் தளர்ச்சியடைந்து கானவர்களின் சிறிய குடிசையில் தங்கியிருப்பாளோ என்று தாய் புலம்புவதும் (அகம். 315: 8 - 18) தலைவன் காவலாகச் செல்ல நீர் வளமற்ற சுனையின் அருகே வெம்மையான கலங்கல் நீரைக் குடிப்பதற்கு எவ்வாறு அவள் உடல் தாங்கும் என்று செவிலி புலம்புவதும் (குறுந். 356: 1-5) தலைவியின் மென்மைத் தன்மையை அறிவிப்பனவாக உள்ளன. தலைவனுடன் செல்லும் தலைவி நெல்லி மரங்கள் நிறைந்த சோலையில் நெல்லிக்காயைத் தின்று வறண்ட சுனையில் உள்ள சிறிதளவு நீரைப் பருகுதலும் உண்டு என்பதை நற்றிணை குறிப்பிடுகிறது ( 271: 5 - 7).

முடிவுரை

       சுனை குறிஞ்சி நில நீராதாரம். உயர்திணை வாழ்வியலுக்கும் அஃறிணை வாழ்வியலுக்கும் உயிர் நீராக அமைவது. இயற்கை நீர்நிலையான சுனை குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை வறட்சி வளம் அழகியல் சுற்றுச்சூழல் என்னும் அனைத்து நிலைகளிலும் தாக்கம் ஏற்படுத்தியதைச் சங்கக் கவிதைச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. புலவர்கள் நுட்பமான நிலையில் சுனை சார்ந்த பின்னணியைப் பாடல்களில் பதிவு செய்துள்ள விதம் அவர்களின் நுண்மான் நுழைபுலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. சுனை, குறிஞ்சிப் பண்பாட்டை அறிய உதவும் சான்றாய் விளங்குகிறது.

துணை நூற் பட்டியல்

அகநானூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி. எச், 2004

ஐங்குறுநூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

கதிர்முருகு, திருமுருகாற்றுப்படை  மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

.................. , பெரும்பாணாற்றுப்படை மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

...................... , குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும், சென்னை: சாரதர பதிப்பகம், 2009

கலித்தொகை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

தண்டியலங்காரம் மூலமும் உரையும், சென்னை: முல்லை நிலையம், 2009

நற்றிணை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

பதிற்றுப்பத்து மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

பரிபாடல் மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

புறநானூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

இணையம்

www. wikipedia.com - சுனை

www. தமிழ் அகரமுதலி .com

www. தமிழ் விக்சனரி .com

BIBLIOGRAPHY

Agananooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Aingurunooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Kathirmurugu, Thirumurugatrupadai Moolamum Uraiyum, Chennai: Saradha Publishers, 2009

Kathirmurugu, perumpanatrupadai Moolamum Uraiyum, Chennai: Saradha Publishers, 2009

Kathirmurugu, Kurinjipattu Moolamum Uraiyum, Chennai: Saradha Publishers, 2009

Kalithogai Moolamum uraiyam, Chennai, NCBH, 2004

kurundhogai Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Nattrinai Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Pathittru Patthu Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Paripaadal Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Purananooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Thandiyalangaram moolamum uraiyum, Chennai: Mullai Nilayam , 2009

INTERNET SOURCE

www. wikipedia.com - Sunai (Mountain pool)

www. tamil akara mudhali.com

www. tamil victionary .com