ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பத்துப்பாட்டில் இறை வழிபாடுகள் (Devotional worship in Pathuppattu)

முனைவர் சு.அனுலெட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 12 Feb 2024 Read Full PDF

Study Summary:

In the Sangha literature, worship of one deity and many other deities are found. The deities took precedence according to the nature of the land in which the people lived. The worship of the Tamils ​​is the most important in the literature. The form of worship which was nature worship in the early period was over time perfected in idolatry. Just as the life of man who started in harmony with nature has acquired various dimensions, the worship which originated on the basis of faith has also developed. Beginning with natural worship, worshiping God and individual worship has become an inseparable part of life.

Key words

1. Gandu - The loom where the goddess freezes
2. Package - Ambalam
3. Pithikai - Semmullai
4. Kondi Women - Women taken as wives by enemies
5. Wambalar - Freshman;
6. Savakar - Fasting during Jainism died at home
7. Alamar Selvan - Lord Shiva
8. Katunjul Women - Pregnant women

ஆய்வுச் சுருக்கம்:

சங்க இலக்கியங்களில் ஒரு தெய்வ வழிபாடு என்பது அன்றிப் பல தெய்வ வழிபாடுகள் காணப்பெறுகின்றன. மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. இலக்கியங்கள் கூறும் வழக்காறுகளில் முக்கியமானது தமிழர்களின் வழிபாட்டுமுறை. தொடக்கக் காலத்தில் இயற்கை வழிபாடாக இருந்த வழிபாட்டு நெறி காலப்போக்கில் உருவ வழிபாட்டில் முழுமை அடைந்தன. இயற்கையோடு இணைந்து தொடங்கிய மனிதனின்  வாழ்வு பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்ததிருப்பதைப் போல், நம்பிக்கை அடிப்படையில் தோன்றிய வழிபாடும் வளர்ந்தே வந்துள்ளது. இயற்கை வழிபாடு தொடங்கி, இறைவழிபாடு, தனிமனித வழிபாடு என்று பல்கிப் பெருகி வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு கூறாக வழிபாடு நின்று நிலைத்துள்ளது.

திறவுச் சொற்கள்

1. கந்து                  -     தெய்வம் உறையும் தறி

2. பொதியில்       -     அம்பலம்

3. பித்திகை         -     செம்முல்லை

4. கொண்டி மகளிர்  -     பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர்

5. வம்பலர்               -     புதியவர்;

6. சாவகர்                -     சமண சமயத்தில் விரதம் காக்கும் இல்லறத்தார்

7. ஆலமர் செல்வன்  -     சிவபெருமான்

8. கடுஞ்சூல் மகளிர்  -     கருவுற்ற மகளிர்

 

முன்னுரை:

சங்ககால மக்கள் சமய உணர்வும், கடவுள் நம்பிக்கையும் உடையவர்களாக விளங்கினர். மனிதனின் வாழ்வியல் நெறிமுறைகளுள் தலையாயது இறை உணர்வு. இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரும் அடைய வேண்டியது இறைவனது திருவடிகள் மட்டுமே ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பதற்கேற்ப தெய்வங்களும், தெய்வ வழிபாடுகளும் தோன்றின. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் அவ்வச்சத்தின் காரணமாக இவ்வியற்கையை வழிபடத் தொடங்கினான்.பழங்காலத்திலிருந்தே தெய்வத்தை வழிபடுவதற்கென்று பல்வேறு வழிபாட்டிடங்களை மக்கள் அமைத்தனர் அவைகள் இன்று கோயில்களாகத் திகழ்கின்றன.

வழிபாடு – வரையறை:

‘வழிபடு’ என்பதிலிருந்து பிறந்தது வழிபாடு என்னும் சொல். வழிபடு என்பதற்கு வணங்குதல், வழியில் செல்லுதல், பின்பற்றுதல், நெறிப்படுத்துதல், பூசனை முறை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. தெய்வங்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் பூசனை முறைகளுமே வழிபாடு என்றும், இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு என்றும் வழிபாடு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் முன் வைக்கப்படுகின்றன.

முருகன் வழிபாடு

சங்ககால மக்கள் சமுதாயத்தில் பல தெய்வங்களை வழிபட்டுள்ளனர். அவற்றில் செவ்வேள் என்னும் முருகனை வழிபடுதலையும் காணமுடிகிறது. உருவ வழிபாட்டில் தொன்மையானது முருகன் வழிபாடாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களில் முருகனை வழிபட்டனர். ‘குறிஞ்சிக் கிழவன்’ ‘மலைக் கிழவோன்’ என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. சங்க காலத்தில் முருகன் கோயில் கொண்டிருந்த இடங்களைப் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன,

        “காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

         யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

         சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

 மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்” 1  (திருமுருக 223-226)

வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான். காட்டிலும், சோலையிலும், அழகுபெற்ற ஆற்றிடைக் குறையிலும், ஆற்றிலும், குளத்திலும், முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறு பல ஊர்களிலும், நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், ஐஞ்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்திலும், ஊர் நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்தும் மரத்திலும், ஊரம்பலங்களிலும், அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பதாக நம்பினர்.

          “செந்நூல் யாத்து வெண் பொரி சிதறி

          மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்

          குருதியொடு விரைஇய தூவெள் அரிசி

          சில்பலிச் செய்து பல்பிரப்பி இரீஇச்” 2 (திருமுரு - 231-234)

முருகனுக்கு  நெய்யோடு வெண்கடுகைச் சேர்த்து நெற்றியில் பூசிக்கொண்டு புது மலர்களைத் தூவி, வெண்ணிறப் பொரிதூவி, கடாவின் குருதியோடு கலந்த வெள்ளை அரிசிச் சோற்றைச் பலியாக படைத்தும், பலவகையான உணவுகளை படையலிட்டும், செவ்வலரி பூமாலையும் இன்னும் பல வாசமலர் மாலைகளையும் அணிவித்து மலைநாடும், நல்ல நகரும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, வாசனைத்தூபங்களைக் காட்டி குறிஞ்சிப்பண்பாடி வாத்திய இசையோடு சேர்த்து இறைவனை வழிப்பட்டனர்.

               “அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி

              வேறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து” 3 (நற்-47:9-19)

 

             “களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி

              வள நகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து

              உருவச் செந்தினை குருதியொடு தூஉய்” 4 (அகம்-22:8-10)

என்ற பாடல் அடிகள் முருகனை வழிபட்டதன் பாங்கினை அழகுற எடுத்துரைக்கின்றன. சங்க காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்த வழிபாடு மற்றும் நம்பிக்கைகளை இன்றும் காணமுடிகிறது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்றளவும் முருகனுக்குரிய வழிபாடுகள் மேலை நாடுகளில் பரவி காணப்படுகின்றன. இந்தோனேசியாத் தீவிலும், சுமத்திரா தீவிலும், ஆப்பிரிக்காவின் தென் கோடிக்கு அருகேயுள்ள மொரீசீயஸ் தீவிலும், சிங்கப்பூர், பினாங்கு போன்ற இடங்களிலும் முருகனுக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்கின்றனர்.

சிவன் வழிபாடு

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். அத்தகைய வழிபாட்டில் இறைவனை  சிவபெருமான், சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை அதற்கு பதிலாக ஆதிரையான், ஆலமர்செல்வன், ஈசன், தாழ்சடைப் பெரியோன், முக்கட்செல்வன், மணிமிடற்றன், என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான். அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்துள்ளன. மேலும் சிவபெருமான் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களையும் வழிபடும் வழக்கங்கள் பண்டையத் தமிழ் மக்களிடம் இருந்ததை

                “நீரும் நிலமும் தீயும் வளியும்

                  ……….    …………    …

               நாற்ற உணவின் உருகெழு பெரியோர்”5 (ம.காஞ்சி - 453-460)

               “ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த” 6 (சிறுபா:97)

நீர், நிலம், காற்று, வானம் என்னும் ஐந்தையும் படைத்துக் காத்துவரும் மழு ஏந்திய முழு முதற் கடவுள் சிவனையே தலைவனாக வணங்கி வழிபடுகின்றனர். முருகன் முதலான தெய்வங்களுக்கு மணமிக்க நல்ல உணவாகிய பலியைப் படைக்க, பலிப்படைப்பவர்கள் எழுப்பும் ஆனந்தப் பேரொலி அந்திப் பொழுதில் வாசிக்கும் பேரிசை வாத்திய முழக்கம் போல ஒழிக்கின்றன என மதுரைக்காஞ்சி காட்சிப்படுத்துகின்றன.

                          “கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி

                      ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே”7 (ம.காஞ்சி 427-428)

சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாக கருதப்பட்டது. அத்திருநாளில் இறைவனுக்கு விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டில் சிவபெருமானுக்கு ஏழு நாட்கள் விழா எடுத்து வழிபட்டச் செய்தியை  குறிப்பிடுகின்றன. சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது என்பதையும் அதனை சிறப்பாக நடத்தி வழிபட்டவர்கள் அவிர்சடை முனிவர்கள் என்பதை,

                                    “அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்” 8 (பட்டின 54)

                                    “நல்வேள்வித் துறைபோகிய”9 (ம.காஞ்சி: 760)

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சிவனை வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக் கொண்டிருந்தனர் என்பதை,

                                   “கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

                                    முக்கோல் அசைநிலை கடுப்ப”10  (முல்லை 37-38)

இவ்வாறு சிவ வழிபாட்டின் தொன்மையை இலக்கியங்கள் வரையறுத்துக் காட்டுகின்றன.

கொற்றவை வழிபாடு

கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் கொற்றவையை வணங்கியதாகச் சங்க காலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந்தமிழ் நூல்கள் குறிப்பிட்டாலும் பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்குரிய தெய்வமாகவே விவரிக்கப்படுகிறாள். கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் என்பதை,

“ஓங்குபுகழ் கானமர் செல்வி” 11 (அகம் 345:4)

 என்று அகநானூறு குறிப்பிடுகிறது. தமிழ் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் திருமுருகாற்றுப்படையில்

“கொற்றவை சிறுவ”12 (திருமுருக:258)

“பழையோள் குழவி”13 (திருமுருக:259)

என்னும் தொடர்களால் குறிக்கப்படுகிறது. பழையோள் என்று குறிப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையை அறியலாம். மேலும்

            “பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு

       துணங்கைஅம் செல்விக்கு அணங்குநொடித் தாங்கு”14 (பெரும்: 459-460)

சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களோடு துணங்கைக் கூத்தையும் அழகையும் உடையவளே என்று கொற்றவையை குறிப்பதை அறியமுடிகிறது. 

இல்லுறை தெய்வ வழிபாடு

வீட்டுக்கு வெளியில் இருந்த காடுகளிலும், மலைகளிலும், மன்றங்களிலும் தெய்வங்களை வழிபட்ட மக்கள் தங்கள் இல்லங்களிலும் தெய்வங்களை வழிபட்டதை

                            “மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

                       …………..     ………….

                             நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது”15 (நெடுநல் - 39-43)

பெண்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் அரும்புகளை அழகிய பூந்தட்டுகளில் வைத்திருப்பர். அவை மலர்ந்து மணம் வீசுவதால் மாலை வேளை வந்துவிட்டது என அறிந்த பெண்கள் இரும்பு விளக்கில் நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துவர் நெல்லையும், மலரையும் தூவிக் கைக்கூப்பி இல்லுறைத் தெய்வத்தை வழிபட்டனர். அந்திப் பொழுதில் விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடும் தன்மை இன்றளவும் தமிழகத்தில் நிலவி வருகின்றது. இரவு வேளையில் அணங்குகளும், காட்டு விலங்குகளும் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக விளக்கேற்றியுள்ளனர். அந்தி வேளையில் ஒளியை வணங்குவதன் மூலம் இரவு குறித்த பயத்தை கடக்க முயன்று உள்ளனர்.

            “நெல்லோடு நாழி கொண்ட நறுவீ முல்லை

           அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது” 16 (முல்லை 9-10)

நெல்லோடு மலரையும் தூவி வழிபட்ட செய்தியினை அறியமுடிகிறது.

               “ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வளமனைப்

             பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி ”17 (குறிஞ்-223-224)

ஆம்பல் மலர்கள் மாலை வேளையில் இதழ் விரித்து மலர்ந்தன.செல்வர்களின் வீடுகளில் அழகிய வளையணிந்த பெண்கள் தங்கள் வீட்டில் விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டதன் சிறப்பை அறியமுடிகிறது.

பொதியில் வழிபாடு

பொதியில் ஊருக்குப் புதிதாக வருவோர் தங்குவர். பகைநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘கொண்டி மகளிர்’ காலையில் எழுந்து நீராடியப் பின் பொதியிலுக்குச் சென்று அங்குள்ள திண்ணையைப் பசுஞ்சாணத்தால் மெழுகுவர்;;. அந்தியில் அப்பெண்கள் பொதியிலில் உள்ள கந்திற்கு விளக்கு ஏற்றி மாலைச் சூட்டுவர் கோயில் பணிக்குப் பகைவர் நாட்டிலிருந்து சிறையெடுக்கப் பெற்ற பெண்கள் பயன்படுத்தப்பட்டமையை பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றன.

                   “கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி

                   வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்;”18 (பட்டின-246-249)

மேலும், திருமுருகாற்றுப்படையிலும், புறநானூற்றிலும் பொதியில் வழிபாட்டிற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

                      “கந்துடை நிலையினும்” 19 (திருமுருக 226)

                      “கலி கெழு கடவுள் கந்தம் கைவிட” 20 (புறம் 52)

இவ்வாறு பொதியில் மன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டினைக் காணமுடிகிறது.

மர வழிபாடு

மர வழிபாடு உலகெங்கிலும் உள்ள வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். உருவ வழிபாட்டுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான வழிபாடு மரவழிபாடாகும்.

                 “காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை”21 (பொருநர்-52)

காடுகளில் வழியாக செல்வோர் அங்கு உறைகின்ற தெய்வத்தை வழிபட்ட பின்னரே கூத்தரும்,பாடினியும் காட்டை கடந்து சென்றனர் என்ற செய்தியை பொருநராற்றுப்படையில் காணமுடிகிறது. மேலும்,

            “நறுங்கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி

           கை தொழூஉப் பரவி பழிச்சினர் கழிமின்”22 (மலைபடு 359-360)

இனிய யாழினையுடைய விறல்பட ஆடும் ஆடு மகளிர் நறிய கரிய பக்க மலையில் குறிஞ்சி என்னும் பண்ணைப் பாட நீங்களும் அங்கு உறையும் தெய்வங்களைக் கையால் தொழுது எம் குறை முடித்தால் நுமக்கு இவை தருவோம் எனக் நேர்ந்துக் கொண்டு சென்றதை அறியமுடிகிறது.

திருமால் வழிபாடு

திருமாலைப் பரம் பொருளாக வணங்கும் வழக்கம் தமிழ் மக்களிடையே காணப்பட்டதையும் திருவோணம் நாள் விழாவில் கருவுற்ற பெண்கள் தாங்கள்  நன்முறையில் பிள்ளையை பெற்றெடுக்க தனக்கு முன்பு பிள்ளைப்  பெற்ற பெண்களைப் பார்த்துப் பார்த்து தொழுவார்கள். இதனை,

                          “புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு

                            ……….. …………….. ………..

                           கடுஞ்சூல் மகளிர் பேணி கைதொழுது”23 (ம.காஞ்சி - 603-609)

குழந்தைப் பெற்ற தீட்டுத் தீரச் சுற்றத்தார்களுடன் சேர்ந்து குளத்து நீரிலே மூழ்கி தீட்டு நீங்கப் பெற்று யாழை மீட்டி, செவ்வழிப் பண்பாடி, முழவுடன் சேர்ந்து சிறுபறை இசை கூட்ட ஒளிதரும் விளக்கேற்றி,பூசைக்கான படையலுடன் தெய்வத்தை தொழுவர். இதைக்கண்ட கருவுற்ற மற்றப் பெண்கள் தாங்களும் இதுபோல் நன்முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று வழிபாடு நிகழ்த்தியமையை மதுரைக்காஞ்சி வழி புலப்படுகின்றன. மேலும் திருமாலுக்குரிய ஓண நன்னாளினைக் கொண்டாடியதை.

              “சுணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

              மாயோன் மேய ஓண நன்னாள்”24 (ம.காஞ்சி 590-591)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. சங்கத் தமிழர் கொண்டாடிய ஓணத் திருநாள் ஆழ்வார்கள் காலம் வரை தமிழகத்தில் நீடித்ததற்குச் சான்றுகள் உள்ளன. கண்ணன் பிறப்பைப் பாடும் பெரியாழ்வார் ரோகிணி நாளிற் பிறந்த கண்ணனைத் ‘திருவோணத்தான்’ என்று குறிப்பதை

           “ஆணொப்பார் இவன் நேரில்லை காண்;

          திருவோணத்தான் உலகாளும் என் பார்களே”25 (பெரிய திருnமொழி 15)

என்ற செய்தி திருமால் வழிபாட்டினை உணர்த்துகின்றன.

நடுகல் வழிபாடு

நடுகல் வழிபாட்டு முறையினை தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

                 “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

                சீர்த்த மரபின் பெரும்படை வாழ்தல் என்று

                இருமூன்று மரபின் கல்லொடு புணர” 26  (தொல்-நூ-1537)

போரில் வீழ்ந்த வீரனுக்கு பொருத்தமான கல்லை கண்டறிதல் காட்சி, கண்டறியப்பட்ட கல்லை எடுத்துவருதல் கால்கோள், அவ்வாறு எடுத்த வந்த கல்லை புனித நீரால் நீராட்டுவது நீர்ப்படை,அக்கல்லை அதன் பின்னர் நட்டு வைப்பதே நடுதல், இவ்வாறு நடப்பட்ட கல்லுக்கு கோயில் எடுப்பது சீர்த்தமரபின் பெரும்படை,அக்கல்லை தெய்வமாக புகழ்ந்து வணங்குதல் வாழ்த்தாகும். போரில் இறந்த வீரனுக்கு அல்லது இயற்கையாகக் காலமான முன்னோர்களை வழிபட்டால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது என்று நம்பினர்.நடுகல்லில் இறந்துப்பட்ட வீரனின் ஆவி உறைவதாக நம்பினர்.இத்தகைய நம்பிக்கையில் தோன்றியதே நடுகல் என்ற முன்னோர் வழிபாடாகும்.

              “ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென

            நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

            செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட” 27  (மலை-386-388)

நெருக்கமாக நடப்பட்ட நடுகற்கள் நிறைய இருக்கும் அவை பகை வெல்லப் போரிட்டு வீர மரணம்; அடைந்தவர்கள் நினைவாக அவர் பெயர் எழுதி வைத்த புகழ்க் கற்கள் புறமுதுகிட்ட பகைவர்களைப் பார்த்துச் சிரிப்பது போல இருக்கும். இந்தக் கற்களைத் தெய்வங்களாகப் போற்றி யாழ் மீட்டிப்பாடி அவ்வீரர்களுக்கு வணக்கம் செலுத்தி பாணனே நின் வழிப்பயணத்தைத் தொடருங்கள் என்று  மலைபடுகடாம் நடுகல்லை வழிப்பட்ட தன் சிறப்பை அறியமுடிகிறது.

               “விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்

                எழுத்துடை நடுகல்”28 (அகம் 53)

 

             “பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

              பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”29( அகம் 67)

போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுத்து சிறப்பித்த செய்தி அகநானூற்றில் காணலாகிறது.

அருகன் வழிபாடு

மதுரை நகரத்தில் அருகப் பெருமானுக்கு வழிபாடுகள் நடத்தியதை,

                               “பூவும் புகையும் சாவகர் பழிச்சச்

                                ……….. ………..   …………..

                              கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து”30 (ம.காஞ்சி-476-484)

 

நறுமணம் மிக்;க மலர்களையும் வாசம் தரும் பொருள்களையும் கொண்டு நகரத்தில் உள்ள அருகப்பெருமான் கோவிலில் வழிபாடு நிகழ்த்தியமையை மதுரைக்காஞ்சி சுட்டுகிறது.

பௌத்த வழிபாடு

மதுரை நகரில் பௌத்த சமயத்தை சார்ந்தவர்கள் இருந்ததையும் அவர்களுக்கென பௌத்த பள்ளிகள் இருந்ததையும் அங்கு நடைப்பெற்ற வழிபாடுகளையும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றன.

               “காமர் கவினிய பேர்இளம் பெண்டிர்

               பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்

               சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும்”31 (ம.காஞ்சி 465-467)

ஒளிவீசக் கூடிய அணிகலன்களை அணிந்த அழகிய இளமையுடைய பெண்டிர் தம் கணவரோடு சேர்ந்து தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பூசைக்கு வேண்டிய பூவினையும், தூபங்களையும் ஏந்தி பௌத்த பள்ளியை வணங்கியமையை உரைக்கின்றன.

தொகுப்புரை

மனிதன் தன்னைக்காத்துக் கொள்ளும் நோக்கத்திலும் தன்னைக் காக்கும் சக்தி தெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கையிலும் தெய்வங்களை உருவாக்கி வழிபாடு செய்கின்றான். அவ்வாறு வழிபாடு செய்யப்படும் தெய்வத்திற்கு உருவம் கொடுத்தும், கோயில் அமைத்தும், நடுகல் செய்தும் வழிபடுகின்றனர். மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கவும், இறையுணர்வை பெருக்கவும் வழிபடுகின்றனர்.

இறைவனை உண்மையோடும், அன்போடும் வணங்கி வழிபட்டால் நம் துன்பங்கள் நீங்கி நன்மை நடந்தேரும் என்பது மக்கள் பெற்ற நம்பிக்கையாகிறது.மக்கள் உருவ,அருவ நிலைகளில் காணும் தெய்வங்களை மட்டுமின்றி அத்தெய்வங்கள் உறையும் பகுதிகளையும்,மரங்களையும்,ஆற்றையும் பழந்தமிழர் வழிபட்டனர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

(தொகுதி1)ப.14

2.  மேலது.,ப.15

3.  கு.வெ.பாலசுப்பிரமணியம்(உ.ஆ).,நற்றிணை மூலமும் உரையும்.,ப.87

4.  முனைவர் இரா.செயபால்(உ.ஆ).,அகநானூறு மூலமும் உரையும்.,ப.43

5.  முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

(தொகுதி2)ப.17

6.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

(தொகுதி1)ப.16

7. மேலது.,(தொகுதி 2).,ப.305

8. மேலது.,(தொகுதி 2).,ப.327

9. மேலது.,(தொகுதி 2).,ப.178

10. மேலது.,(தொகுதி 2).,ப.177

11. முனைவர் இரா.செயபால்(உ.ஆ).,அகநானூறு மூலமும் உரையும்.,ப.

12.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

     (தொகுதி1)ப.16

13.    மேலது.,ப.17

14.    மேலது.,ப.222

15.    மேலது.,(தொகுதி 2).,ப.234

16.    மேலது.,(தொகுதி 2).,ப.312

17.    மேலது.,(தொகுதி 2).,ப.234

18.    மேலது.,(தொகுதி 2).,ப.312

19.    மேலது.,(தொகுதி 1).,ப.14

20.    புலவர்ஆ.மாணிக்கனார்(உ.ஆ).,புறநானூறுமூலமும் உரையும்.,ப.58

21.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

      (தொகுதி1),ப.82

22.    மேலது.,(தொகுதி 2).,ப.377

23.    மேலது.,(தொகுதி 2).,ப.22

24.    மேலது.,(தொகுதி 2).,ப.24

25.நாராயணவேலுப்பிள்ளை(உ.ஆ).,நாலாயிரத்திவ்யபிரபந்தம்.,

(தொகுதி3).,ப.453

26.தொல்காப்பியம்.,பொருளதிகாரம்.,கழக வெளியீடு.,ப.169

27.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

     (தொகுதி2),ப.378

28.    முனைவர் இரா.செயபால்(உ.ஆ).,அகநானூறு மூலமும் உரையும்.,ப.84

29.    மேலது.,ப.98

30.முனைவர்இரா.மோகன்(உ.ஆ).,பத்துப்பாட்டுமூலமும்உரையும்.,

    (தொகுதி2),ப.20

31.    மேலது.,(தொகுதி 2).,ப.25

 

பார்வை நூல்கள்

1.முனைவர் இரா.மோகன்(உ.ஆ)          -     பத்துப்பாட்டு   மூலமும் உரையும்

2.புலவர் ஆ.மாணிக்கனார்(உ.ஆ)                -     புறநானூறு   மூலமும் உரையும்

3.நாராயணவேலுப்பிள்ளை(உ.ஆ)          -     நாலாயிரத் திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

4.தொல்காப்பியம்(பொருளதிகாரம்)  -     கழக வெளியீடு

5.முனைவர் இரா.செயபால்(உ.ஆ)         -     அகநானூறுமூலமும் உரையும்

6.கு.வெ.பாலசுப்பிரமணியன்(உ.ஆ)  -     நற்றிணை மூலமும் உரையும்

7.க.காந்தி                            -     தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்

8.க. கைலாசபதி                       -     பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்