ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மாயமான் -  குடும்ப அறமும் தொழில் அறமின்மையும் (Mayaman – family virtue and lack of professional virtue)

முனைவர் செ.சாந்தி, உதவிப்பேராசிரியர்,இளநிலைத் தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

படைப்பாளரின் அனுபவமும் மொழி ஆளுமையும் இலக்கியப் படைப்பின் இன்றியமையாத காரணிகளாகின்றன. ஒரு படைப்பானது அறிவித்தல், மகிழ்வித்தல் என்னும் இருவகைப் பணிகளோடு அறத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். வெற்றுச் சொற்களின் குவியல்கள் படைப்பு ஆகாது. அறத்தை, அறம் வலியுறுத்தும் ஒழுக்கநெறிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் மனிதனின் மனமாசினைப் போக்கிச்  சமுதாயத்திற்குத் தேவையான நன்மை தீமைகளை எடுத்துரைப்பதும் படைப்பாளியின் கடமையாகின்றது. தொடக்ககால அறக்கோட்பாடுகள் தற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்று வடிவத்தைப் பெற்றிருக்கின்றன என்பதனை நம்மால் மறுக்க இயலாது. எனவே, அறம் என்பதனை நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் என்பதன் அடிப்படையில் பகுத்து கி.ரா. அவர்களின்  மாயமான் சிறுகதையில் காணலாகும் குடும்ப அறமும் தொழிலில் அறமற்ற தன்மையையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ABSTRACT  :

 The author’s experience and language personality become essential factors of literary work.  A work should emphasize virtue with its dual function of informing and entertaining.  Heaps of empty words are not creative.  It is the duty of the creator to tell the people about virtue and the morals that emphasize virtue and to clear the mind of man and explain the good and bad things needed by the society.  We cannot deny that the early ideals have been expanded or modified in modern times.  Therefore, Virtue is divided on the basis of saying what is good and doing what is not.  This article highlights family virtue and immorality in business as seen in his short story Mayaman.

திறவுச் சொற்கள்  : மாயமான், அறம், அறமின்மை, கி.ரா.கதைகள், நோட்டு எழுதி வாங்குதல், கிணறு வெட்டுதல், அரசாங்க சலுகைகள்

Keywords : Mayaman, Virtue, Virtue, Ki.Ra. Stories, Billing, Well Drilling, Government Privileges

கதாசிரியரும் கதையும் :

       இலக்கியம் என்பது வெறுங் கற்பனைகளாலான பாடுபொருண்மைகளை உடையதும்,  அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் நடைமுறைப்  பொருண்மையிலிருந்து வேறுபட்டிருப்பதும் சில சமயங்களில் விலகியிருப்பதுவுமாகவும் அமையும் என்ற கருத்தைக் கட்டுடைத்தவர். கலை கலைக்காகவே என்ற நிலையை மாற்றி கலை மக்களுக்காக என்னும் உயரிய நோக்கினைக் கொண்டவர் கி.ரா. ஆவார். இவரது இலக்கியப் படைப்பின் அடிநாதமாக யதார்த்தம் ஒன்றே குடி கொண்டிருப்பதை வாசகனால் உணர முடியும். அன்றாடம் நாம் காணுகின்ற நம்மோடு வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை வலிகளைத் தன் படைப்பின் வழிப் புறவுலகிற்கு வடித்துத் தந்த பெருமை இவரையேச் சாரும்.

    அப்பாவுச் செட்டியார் தன் மனைவி உலகம்மாள், மகன் சிவக்கொழுந்து, மகள் கைலாசம், அம்மா வடிவம்மாள், அப்பா நல்லசிவம் செட்டியாருடன் கிராமத்தில் சிறிய கடை வைத்துக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். அப்பாவுச் செட்டியார் டவுணுக்குச் சென்று கடைக்குத் தேவையான மளிகைப் பொருட்களோடு தான் படிக்காவிட்டாலும் தினந்தோறும் தினப்பத்திரிக்கை வாங்கி வரும் வழக்கம் உடையவர். இவருடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர் கூட்டமும் உண்டு. அன்று வாங்கி வந்த தினப்பத்திரிகையில் “மழை இல்லாமல் புஞ்சை நிலப்பகுதியில் வாழும் விவசாய மக்களின் வறுமையைப் போக்க அவர்களது நிலத்தில் கிணறு தோண்டுவதற்கு அரசாங்கம் 400 ரூபாய் இனாமாகக் கொடுக்கும் செய்தியை  ஊர் மக்கள் அறிகின்றனர்.” பலர் நம்ப மறுக்கும் வேளையில் செட்டியார், தனக்குச் சொந்தமான நாலரை ஏக்கர் நிலத்தில் கிணறு வெட்டி விவசாயம் செய்ய எண்ணித் தந்தையின் அறிவுரையைக் கேட்கிறார். கூடுதலாகத் தேவைப்படும் பணத்திற்கு அவ்வூரிலுள்ள ஸ்ரீமான் அய்யவார் நாயக்கரிடம் 500 ரூபாய் நோட்டு எழுதிக் கொடுத்து கடன் வாங்குகிறார். மீண்டும் பணம் தேவைப்படும் போது வீடு,நிலத்தை அடமானம் வைத்து 1000 ரூபாய் கடனாக வாங்கி மிளகுக்கொடிப் பயிரிடுகிறார். அப்போது அரசாங்கத்திடமிருந்து இனமாகப் பெற்ற பணத்தில் கிணறு தோண்டியவர்கள் மூன்றாண்டுகளுக்கு மிளகு, பருத்தி போன்ற பணப்பயிர்களைப் பயிரிடக் கூடாது என்ற செய்தியைக் கேட்டு இடிந்து போய் மிளகுக் கொடிகளை அழித்து விட்டு கேப்பைப் பயிரிடுகிறார் மழையில்லாமல் போனதால் கேப்பைப் பயிர் மாடுகளுக்குத் தீவனமாக மாறியது. தாது வருடப் பஞ்சம் பற்றி மக்கள் பேசுகின்றனர். செட்டியாரின் தாயார் இறப்பும்,தந்தையின் மரணப்படுக்கையும் செட்டியாரை நிலைகொள்ளச் செய்கின்றன. வாங்கிய கடனுக்காக நாயக்கர் வீட்டையும் நிலத்தையும் எடுத்துக் கொள்கிறார். செட்டியார் குடும்பத்துடன் பஞ்சம் பிழைக்க மதுரைக்குச் செல்கிறார். பழக்கதோசத்தில் தினப்பத்திரிகை வாங்க, அதில் அரசாங்கம் இந்த ஆண்டு கிணறு வெட்ட 500 ரூபாய் இனாம் தருவதாகச் சொன்ன சேதி கேட்டுப் பத்திரிகையைக் கிழித்து எறிகிறார். மாரீசன் என்ற மாயமானின் பின்னால் சென்ற இராமன், சீதையை இழந்து சுக்கிரிவனிடம் தஞ்சம் புகுந்தான். அதைப்போல் அரசாங்கம் இனாமாகத் தரும் ரூபாயை நம்பி தன் வீடு, நிலங்களை இழந்து பிழைப்புத் தேடிச் சென்றதால் இக்கதையின் தலைப்பும் பொருத்தமாகவே உள்ளது இங்குச் சுட்டிக்காட்டத் தக்கதேயாகும்.

அறம் சில விளக்கங்கள் :

           அறம் என்பது மனிதனின் எண்ணம், வாக்கு, நன்நடத்தை ஆகிய மூன்றையும் சார்ந்து அமைவது. பிற உயிர்களுக்கு நன்மை செய்வதும், தான தர்மங்களைச் செய்வதுமாகும். அறம் என்பதை அறு ூ அம் எனப்பிரித்துப் பொருள் கொண்டால் அறுத்துச் செல்லுதல், வழியை உண்டாக்குதல், தீயனவற்றைத் துண்டித்தல் என்பவை போன்ற பல பொருள்களைத் தருகிறது. இவ்விளக்கங்கள் அனைத்தும் அறம் என்ற சொல்லின் ஒரு சில கூறுகளை மட்டுமே விளக்கிச் செல்கிறது. இந்நிலவுலகில் வாழும் மனிதன் வகுத்துக் கொண்ட ஒழுக்க விதிகளின் தொகுப்பே அறம் எனக் கருத இடமுண்டு.  

தனிமனித அறமே சமுதாய அறம் :

     தனிமனிதன் ஒழுங்குபட்ட வாழ்க்கையை வாழும் போதுதான் அவனால் உருவாகும் சமுதாயம் உயரிய நிலையை அடையும். நீதி இலக்கியங்கள் அனைத்தும் தனிதனித ஒழுக்கத்தையும் அதனால் விளையும் அறத்தையுமே எடுத்துரைக்க, தற்கால இலக்கியங்களின் இத்தன்னையைத் தேடிப்பார்க்க வேண்டிய அவலநிலையே உள்ளது. தனிமனிதன்  கடைபிடிக்கும் அறம் ஒரு நல்ல சமூகத்தையும் பல நல்ல சமூகங்கள் சேர்ந்தால் சீரிய சமுதாயம் உருவாகும் என்ற கொள்கைப் பிடிப்பினை கி.ரா. படைப்புகளில் உணர முடிகிறது.

குடும்ப அறம் - தந்தை மகன் உறவு நிலை : 

    கி.ரா.வின் எழுத்துகளில் மனிதமனவுணர்களும் குடும்ப உறவுகளுமே ஆட்சி செலுத்தும். இன்றைய குடும்ப உறவுகள் தோற்றுப்போவதற்குத் தங்களுக்குள் மனமிட்டுப் பேசிக் கொள்ளாமையும் விட்டுக்கொடுத்து வாழாமையுமே காரணமாகின்றன. பணத்தின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்திக் கொண்டு வாழும் மக்களுக்கு உறவின் மேன்மையை இக்கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனை, “இப்பதான் வர்ரயா? நல்ல எதிர்காத்து….  கருப்பட்டிச் சிப்பம் என்ன விலை?” (கி.ரா.கதைகள்,ப-32) என்கிற தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவர்களது உன்னதமான உறவினைப் பறைசாற்றுகிறது.

     அப்பாவுச் செட்டியார், நாயக்கரின் சூழ்ச்சியால் வீடு,நிலத்தை இழந்து பிழைப்பிற்காக மதுரை நோக்கிப் பயணப்படும் போது தன் தாயாரை அடக்கம் செய்த இடத்தில் அழுது புலம்புகிறார். அப்போது தாயை, மண்ணைப் பிரிந்தவனின் வேதனையை உணர்ந்தவராய் மகனைத் தூக்கி நிறுத்தித் தேற்றுகிறார். இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் போதும் எல்லாவற்றையும் இழந்து விட்ட போதும் ஒரு ஞானியைப் போல புன்னகை செய்யும் தந்தையின் அறிவுரை ஆயிரம் அகராதிகளுக்குச் சமம் என்பதனையும் வாசகர் உணரத் தவறவில்லை. 

   “கெடுவல் எனப்பட்டக் கண்ணும் தனக்கோர்

   வடுவல்ல செய்தலே வேண்டும்” (பழமொழி, பா 40)

         அறத்தைக் கைக்கொண்டவர் எந்தச் சூழ்நிலையிலும் அதனின்று நீங்குவதில்லை. அவர்களுக்குப் பழி நேர்ந்த போதும்,நிலை தாழ்ந்த போதும் அப்பழியை தான் கொண்ட ஒழுக்கத்தாலே நீக்க முயல்வர் என்பதனை இப்பழமொழிப் பாடல் உணர்த்துகிறது. இதன்படியே தந்தையும் மகனும் ஒழுக்க நெறியிலிருந்து பிறழாமல் வாழ்கின்றனர்.

மூத்தோரை மதித்தல் :

      மூத்தோரைத் துணை கொண்டு காலம், இடம், செயல் அறிந்து செயல்படும் நிலையும் அறத்தின் வழிப்பட்டதாகும். இதனடிப்படையில் கிணறு வெட்டும் எண்ணம் தோன்றும் போது கூடச் செட்டியார், தன் தந்தையின் ஆலோசனையைக் கேட்கிறார். “தோட்ட நிலம் என்றால் அதுக்கு நிறைய சிரமப்படவேணும் நமக்கு கடைகண்ணியை நிர்வகிக்கவே நேரம் சரியா இருக்கு. தோட்டத்திலெல்லாம் சொந்த ஆள் பாடுபட்டால்தான் லாபம் உண்டு. அதோடு அதில் போட்டு எடுப்பதற்கு நிறைய பணம் வேணும். இதுக்கெல்லாம் நாம எங்க போகிறது? இதெல்லாம் உத்தேசம்பண்ணித்தான் நம்முடைய பெரியவர்கள் அதை அப்படியே புஞ்சை நிலமாக வைத்திருக்கிறார்கள்.” (கி.ரா.கதைகள்,ப-34) என்று தனது மகனுக்குச் சந்தேகம் ஏற்படும் போது விளக்கம் சொல்லித் தெளிவுறுத்துகிறார்.

கடன் வாங்காமை :

       இன்றைய மக்களிடையே ஒரு பொருள் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையோ இல்லையோ ஆடம்பத்திற்காகக் கடன் வாங்கிக் குவிக்கும் பழக்கம் மேலோங்கி இருக்கிறது. அதற்கு நுஆஐ இ ஊசநனவை ஊயசன  என்று ஆங்கிலப் பெயர் சூட்டுகள் வேறு. ஆனால் கரிசல் நில மக்கள் எதனையும் இனமாகப் பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. கை நீட்டிக் கடன் வாங்கவும் அஞ்சுகின்றனர். இக்கதையிலும் அப்பாவுச் செட்டியார் கடன் வாங்கிக் கிணறு வெட்டலாம் என்று தன் தந்தையிடம் கேட்கும் போது முதலில் மறுக்கிறார். பின்பு மகனின் திட்டமிடுதலையும் மன தைரியத்தையும் கேட்டு சம்மதிக்கிறார்.

        “தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

         வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்…” (திரிகடுகம், பா- 12)

என்கிற பாடலுக்கேற்ப கடன்படாமல் வாழ்க்கையை வாழ்ந்தனர்.

தொழிலில் அறமின்மை :

     சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் என்ற பழமொழிக்கேற்ப அரசாங்கம் சலுகைகளை வழங்கினாலும் அரசாங்க அதிகாரிகள் தாங்கள் செய்யும் தொழிலில் நேர்மையற்றும் அறமற்ற தன்மையோடும் நடந்து கொள்கின்றனர். அரசாங்கம் இனாமாகத் தருவதாகக் கூறிய பணத்தை மக்களுக்குத் தருவதற்கு அவர்களிடம் கையூட்டுப் பெறுகின்றனர். இல்லையென்றால் காரியம் கிணற்றில் போட்ட கல்லைப்போல் அப்படியே கிடப்பில் கிடந்து விடும் என்பதன் வழி அரசாங்க அதிகாரிகளின் தொழில் அறமற்ற தன்மையை  இக்கதை வழி அறிய முடிகிறது. இதனைத் தற்காலக் கவிஞர்,

“அரசாங்க சலுகைகளும்

       ஊற்றாதான் பிறப்பெடுக்கும் - அது

       நதியாகி நகருகையில் …. அதன்

       வேரெல்லாம் உறிஞ்சி உறிஞ்சி

       புல்லுக்கு வருகையிலே – நதி

       வத்தித்தான் போகுதல்லோ?”  என்ற கவிதை வரிகள் பதியவைக்கிறார். மேலும், ‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை’  என்றொரு பழமொழி உண்டு. அதன்படி அரசாங்க அறிக்கை, நாயக்கரைப் பூதமாக ஆசிரியர் உருவகித்துள்ளார்.         

      பல உயிர்கள் வாழும் இப்பேரண்டத்தில் மனித உயிர் மட்டுமே இல்லாதவனின் துன்பத்தை ரசிக்கிறது, மகிழ்கிறது, சில நேரம் காசாக்குகிறது. வானம் பார்த்த பூமியை வைத்துக் கொண்டு வாழும் புஞ்சை நில விவசாயிகள் வானம் பொய்த்த போது, மண் மலடாகி மகசூல் தர மறுத்த போது வீட்டில் இருக்கும் பொருட்களை அடமானம் வைத்தோ, விற்றோ பிழைப்பு நடத்துகின்றனர். இவர்களது வறுமையை மூலதனமாக்கி வாழும் முதலைக் கூட்டங்கள் எல்லாக் காலத்திலும் எல்லா தேசத்திலும் வாழவே செய்கின்றனர். இதற்கு முன்னுதாரணமாகப் படைக்கப்பட்டவர்  ‘ஸ்ரீமான் அய்யவார் நாயக்கர்’ ஆவார். தன் வீட்டைத் தேடி வருபவர்கள் கடன் வாங்கவே வருவார்கள் என்பதனை மோப்பம் பிடிக்கிறார். இதனை, “ரூபாய் கிடைத்து விட்டதாக செட்டியாருக்கு எண்ணம், நாலரை ஏக்கம் நிரம் கிடைத்து விட்டதாக நாயகருக்கு எண்ணம்.” (கி.ரா.கதைகள்,ப- 35) என்ற வரிகள் மூலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார். நாயக்கர் பணம் கேட்பவர்களிடம் சாதி மீறிய உறவுமுறையைக் கையாளுகிறார். அண்ணன், அத்தாச்சி, மருமகனே என்றெல்லாம் தேனில் விஷம் கலந்து பேசுகின்றார். பாம்புக்குப் பால் ஊற்றினாலும், தேனிக்குக் கூடு கட்டிக் கொடுத்தாலும் அவைகளது குணம் கொட்டுவதுதான். ஒரே ஊரிலே வாழ்ந்து, ஒன்றாய் உண்டு உறங்கி வாழ்ந்தாலும் வட்டிக்குக் கடன் கொடுத்தவன் ஈட்டிக்காரனே என்பதனைக் கி.ரா. தெளிவுறுத்துகிறார். சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்கள் முதலாளித்துவ சமுதாயத்தின் பொய் பித்தலாட்டம் என்ற லெனின் கூற்றும், “நீதி, மதம், சமுதாயம் சம்பந்தமான எல்லா விதமான சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் பின்னே ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை உணராத வரை அவர்கள் ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவராகவும் இருந்தனர்.” (மனிதன் சமூகம் வரலாறு, ஆர்.ஜெயராமன்,ப-191) என்ற காரல் மார்க்ஸின் கூற்றும் இவண் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

நோட்டு எழுதி வாங்கும் முறை :

         ரூபாய் 500, 1000 என்றால் வாய்ப்பேச்சில் பணம் கொடுத்து விடுவர். அதற்கு மீறிப்பணம் கேட்கும் போது நோட்டு எழுதி வாங்கியோ, வீடு,நிலங்களை அடமானம் எழுதிக் கொடுக்கும் முறை கிராமங்களில் இன்றும் காண முடிகிறது. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாதபோது தன் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்றும், மனைவி, மகள் காது,கழுத்தில் இருக்கும் தங்கப் பொருட்களை விற்கும் ஏழை விவசாயிகளின் அவல நிலையைக் கி.ரா.தோலுரித்துக் காட்டுகிறார். நாயக்கரும் 500 ரூபாய் கடன் கொடுத்துவிட்டு 1000 ரூபாய் என்றும் 1000 ரூபாய்  கொடுத்துவிட்டு 2000 ரூபாய் என்றும் நோட்டில் மாற்றி எழுதிக் கையெழுத்து வாங்குகிறார். இதனைக் கண்டறிந்து கேட்டால் இதெல்லாம் சும்மா தானே மருமகனே என்றவாறு மழுப்பி, பின்பு அவர்களது பொருட்களை அபகரித்துக் கொள்ளும் நரித் தந்திர வேலையைக் உணர முடிகிறது.                         

முடிவுரை  :

        வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கும் ஆடம்பர விருப்பத்திற்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமையால் நிகழும் விபரீத குழப்பமே மாயமான் பின் செல்லும் நிகழ்வு. பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி நிலத்தையுடைய விவசாயிகளின் பாடுகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. தனிமனித அறமே நல்ல சமுதாயத்தை உருவாக்கும் என்பதும் அனைத்தையும் இழந்துவிட்ட போதிலும் தன் ஒழுக்கநெறிகளிலிருந்து பிறழாத கிராமப்புற மக்களின் பண்பட்ட நிலையையும் இதன்வழி அறிய முடிகிறது.

துணை நின்ற நூல்கள் :

1. ராஜநாராயணன் கதைகள்.கி., அகரம் அச்சகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு -  

    1998 

2. தமிழ்ப்பிரியன், (உ.ஆ) திரிகடுகம், மூலமும் உரையும்,கற்பகம் புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு -  2011

3. ஜெயராமன், ஆர், மனிதன் சமூகம் வரலாறு, உழைப்பின் வெற்றிப் பயணம்,பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு -  2011