ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நற்றிணை கூறும் அகவாழ்வு பூக்கள்

ஆய்வாளர்: ச.காவியப் பிரியா, முதுகலை தமிழ் இலக்கியம் - இரண்டாம் ஆண்டு, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: முனைவர்.சொ.கோகிலமீனா, M.A..,M.PHIL..,B.ED.,PH.D. உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஒட்டன்சத்திரம், 08 Feb 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

          ஒரு மலர் என்பது பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க பகுதியாகும். பூக்கள் பூக்கும் நிலையில் சங்கத் தமிழில் அரும்பு/மொட்டு, மொட்டு/மென்மையான  பூ மொட்டு, முகை/திறக்கும் மொட்டு,மலர்/பூ மலர்கள், அலர்/முழுக்க மலர்ந்த மலர், வீ/மலர் உலர்த்துதல் மற்றும் செம்மல்/வாடிய மலர் போன்ற பல்வேறு கட்டங்கள் இருந்தன. இலக்கியம், திருக்குறள், நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்றவற்றில் மலர் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் புலவர்களுடன் சேர்ந்து கொண்டது. இந்த ஆய்வு ஆனது, வாசனை பண்புகளை புரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நற்றிணையில் பூக்கள் எனும் தலைப்பில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

திறவுச் சொற்கள்

        1. எட்டுத் தொகை பழம்பெரும் பாடல் ( Autsumam is a legendary song)

          2. தலைவன்,தலைவியின் அன்பு  (Love of leader, leader)

          3. திணை அடிப்படையில் பூக்கள்  (Flowers on a departmental basis)

          4. பூக்களின் பருவங்கள் (Seasons of flowers)

          5. அகவாழ்வு (அ) அகம் (Introspection (a) internal)

முன்னுரை      

           எட்டுத்தொகை நூல்களில் முதன்மையானது நற்றினை இதனுள் சிறப்பாக இருக்கின்ற மலர்கள் குறித்து ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

                 இவற்றில் 67 வகையான பூக்கள் இடம் பெற்று இருக்கிறது. மலர்கள் அனைத்தும் தலைவன் தலைவியின் காதல் நிலையை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது.  தங்களது மன எண்ணங்களை அக வாழ்வில் தெரிவிப்பது குறித்தும் மலர்களை வேலியாக பயன்படுத்தியதை பற்றியும் விளக்கப்படுவதாக இக் கட்டுரை அமைகிறது.

நற்றிணை அறிமுகம்

        எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் நற்றிணை ஆகும். நல்ல திணை என்னும் இதன் பொருள் நல்லொழுக்கம் எனப்படும். நானூறு பாடல்களைக் கொண்டமையால் நற்றிணை நானூறு என வழங்கப்படுகிறது.

                    ”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

                      ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்

                      கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென

                      இத் திறத்த எட்டுத் தொகை”

           என்ற பழம் பாடலில் நற்றிணை முதலாவதாக வைத்து பாடப்பட்டுள்ளது. இதன் பெருமையைச் சுட்டிக் காட்டும் நன்னூல் என்பதன் தன்மையால் இந்நூல் பெயர் பெற்றிருக்கிறது. திணை என்னும் சொல் “நிலம், குலம், சாதி, ஒழுக்கம்” எனப் பல பொருள்படும். தமிழ் அகராதி “நிலம், குலம், இடம், வீடு, ஒழுக்கம், உயர்திணை, அஃறிணை என்னும் பகுப்பு தமிழ் நூல்களில் வரும் அகத்திணை புறத்திணை ஒழுக்கம்” எனக் குறிப்பிடுகிறது. ஒழுக்கம் என்ற சொல் பொருத்தமானதாகும். நற்றிணை சிறந்த ஒழுக்கத்தை எடுத்தியம்பும் நானூறு பாக்களைக் கொண்டது.

அகம்

         ஒத்த தலைவனும் தலைவியும் அன்பு கொண்டு ஒழுகும் ஒழுக்கம் களவு கற்பு என்னும் இரு நிலைகளில் அமைந்தது அகம் எனப்படுகிறது. அகமெனப்படுவது ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவர்களால் இத்தகையதெனக் கூறுதற்கியலாததாய் யாண்டும் உள்ளத்தளவே நகர்ந்து இன்புறுவதோர் பொருளாக அதனை அகம் என்றார் தொல்காப்பியர். அகம் என்ற சொல்லின் பொருள் உள்ளிருப்பது தலைவனும் தலைவியையும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது என பிறர்க்கு விளக்கவியலாததாக இருப்பதும் காதல் ஒழுக்கத்தை அகம் என்பதற்கு அகராதி “இருப்பிடம், பூமி, மனை, வீடு, உள்மணம், உள்ளம்” அகப்பொருள் எனக் கூறுகிறது.

            அகவாழ்வில் களவில் காதலரின் களவு வாழ்க்கைக்கும் கூட்டுறவின்பத்திற்கும் காரணமான மன்மதன் மலர்கணையோன் என்றும் அவன் விடும் தாமரை, மா, அசோகம்,முல்லை, கருங்குவளை ஆகிய ஐவகை மலரம்புகளால் தான் காமம் முகிழ்க்கும் என்று கூறுவர். அவ்வகையில் பூக்கள் இளவேனிற் காலத்தில் மன்மதனுக்குரிய மலர்களை இன்பப்பருவம் என்று சிறப்பிப்பதைக் காணமுடிகிறது. தமிழர்களின் அழகுணர்வும் பூக்களால் அவர்கள் கண்டு கொண்ட ஒரு மென்மையும் போற்றுதற்குரியவை. அகவொழுகலாற்றில் காதல் களவு குறித்து வள்ளுவர்,

                                “மலரினும் மெல்லியது காமம் சிலரதன்

                                   செவ்வி தலைப்படு வார்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவன் மீதான அன்பு

        தலைவன் வரும் வழியில் உள்ள இன்னல்களை எண்ணித் தலைவி வேறுபடுவது கூற்றாய் அமைந்துள்ளது. இத்துன்பங்களை நினைத்த நான் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டேன் என்றும் என் நிலையைக் கண்ட அன்னை வெறியாடும் வேலனை அழைத்தாள். என் தலையில் சூடிள்ள காந்தள் பூவைக் காப்பதும் அரிதாக உள்ளது. தலைவன் வரும் வழியில் உள்ள பச்சிலை மரத்தை முறித்து நிற்கிற யானை ஆசினிப் பூவைச் சிதைத்து மலர்கள் உதிர்த்தும் காணப்படும் வேங்கை மரத்தின் அடியில் நிற்கிறது. அம் மலைக்கு உரியவன் என் தலைவன் என்பதைத் தலைவி தலைவன் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள் என்பதை,

                      “பெருந்தண் குளவி குழைத்த பாவடி

                       இடுஞ்சேறு ஆடிய நுதல கொல் களிறு

                       பேதை ஆசினி ஒசித்த

                       வீதா வேங்கையை மலை கிழ வோற்கே”      (நற் - 51)

           என்பதில் பூவை சிதைத்தக் களிறு என்பதனால் தலைவியின் நலனை நுகர்ந்தவன் தலைவன் என்று பொருள்படும். அக்களிறு சேற்றை நெற்றியில் அணிந்தது, ஊரார் தூற்றும் பழிச் சொல்லாகத் தலைவனைக் குறிக்கிறது. தன் அறியாமையால் ஆசினியை யானை முறித்தது. தலைமகனின் திருமணம் செய்யாத நெறிபிழந்த வாழ்வினைச் சுட்டுகிறது. வேங்கை மரத்தின் கீழே களிறு தங்கியிருப்பது தலைவன் களவில் தலைவியைச் சந்திப்பதைக் குறிப்பிடுகிறது.

தலைவியின் குணச் சிறப்பு

         பாணர்கள் தாம் பரிசாகப் பெற்ற குதிரைகளில் சென்றமையால் மலை மீது அவற்றின் குளம்பு பட்டுத் தேய்ந்து போனது. அந்நெறியில் இரவலர் வருந்தாது மேலே நடந்து சென்றனர். அத்தகைய கொல்லி மலையின் மேற்கே அகன்ற இலைகளையுடைய காந்தள் மலர்களில் தேனீக்கள் சேகரித்தத் தேன் இராட்டுகள் உள்ளன. அங்குத் தெய்வம் செதுக்கி வைத்தத் திறன் மிக்க சிற்பமாகிய கொல்லிப்பாவை உள்ளது. அதனைப் போன்று தலைவி தன் அழகால் என்னைக் கொல்ல நினைக்கிறாள். அதனால் பாங்கனே நீ உதவாவிட்டால் வேறு வழியில்லை எனத் தலைவன் கூறுவதை,

” உரைசால் உயர்வதைக் கொல்லிக் குடவயின்

                       அகல் இலைக் காந்தள் அலங்குபுலைப் பாய்ந்து”    (நற் - 185)

      என்ற நற்றிணைப்பாடல் வழி அறியலாம். இதனைத் தலைவனுக்கு உணர்த்திடும் வகையில்,

“விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை

                                   பூக்கொய் மகளிரின் தோண்றும் நாட

                                  பிரியினும் பிரிவது அன்றே

                                  நின்னொடு மேய மடந்தை நட்பே”

             என்று விளக்குகிறார். பரந்து விரிந்த பெரிய கிளைகளையுடைய பூத்த வேங்கையில் மயில்கள் அழகுற அமர்ந்திருந்தன. இக்காட்சியானது மலர் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றியது. வேங்கை மலர் மலரும் காலம் திருமணம் நிகழ்வுக்குரிய காலம் என்றும் உணர்த்துவதை அறிய முடிகிறது. வேங்கை மலரைப் பெண்கள் கொய்து தலையில் சூடுவது அக்கால வழக்கமாகும். வேங்கை மரங்களின் மீது அமர்ந்திருக்கும் மயில்கள் மலர் கொய்யும் பெண்கள் போல காட்சியளிப்பதில் திருமணக் காலம் வந்துவிட்டது, என்பதையும் கபிலர் புலப்படுத்துகிறார்.

திணை அடிப்படையில் பூக்கள்

  1. குறிஞ்சித் திணைப் பூக்கள்   -  வேங்கை, குறிஞ்சி, காந்தள்.
  2. பாலைத் திணைப் பூக்கள்    -  குராம்பூ,மராம்பூ,பாலை.
  3. நெய்தல் திணைப் பூக்கள்    -  நெய்தல் பூ,தாழம் பூ, முண்டகப் பூ.
  4. மருதத் திணைப் பூக்கள்       -  தாமரை,கழுநீர்,குவளை.
  5. முல்லைத் திணைப் பூக்கள்   -  குல்லை,முல்லை,தோன்றி,பிடவம்.

பூக்களின் பருவங்கள்

            பூ என்பதற்கு அகராதி  பூ தோன்றுதல் – மொட்டு, விரிதல் – மலர்தல், இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும். வெண்மையான இனப்பெருக்கத்திற்கான தாவரத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது. மலர்ந்த பூக்கள் தான் மலர்கள். தொல்காப்பியத்தில் பூ என்ற சொல் ஏழு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது,

                                “பூ என் ஒரு பெயர்” (தொல் . எழு 269)

”வண்டே இழையே வள்ளி பூவே” (தொல்.மர.89)

நனைபருவம்                                              

            நனைப் பருவத்தைப் பூக்களின் கருப்பருவம் – குழந்தைப்பருவம் என்று கூறுவர்.   இப்பருவத்தில் புறத்தே நீர்ப்பிடிப்புள்ள ஈர நனைப்புத் தோன்றும். அகத்தே தேன் நனைப்புத் தோன்றும். தேன் நனைப்புத் தோன்றுவதை,

“குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ” (நற்-56)

“மாநனை கொழுதி மகிழ் குயிலாலும்”  (நற் - 9)

என்ற நற்றிணைப் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

அரும்புப் பருவம்

            அரும்புப் பருவம் இரண்டாவது பருவமாகும். நனைப் பருவத்தின் தோற்றப் பருவத்தின் அடுத்த வளர்ச்சி நிலையாகும். கரு உருக் கொள்ளும் காலம் என்று கூறலாம். பூவாகப் பூப்பதற்கு அடிப்படை வடிவம் தோன்றும் நிலையாகும். அரும்புதல் பருவமே அரும்புப் பருவமாகும்.

“சினையே குழையே பூவே அரும்பே”

எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.

முகைப் பருவம்

          முகை மூன்றாவது வளர்ச்சி பருவமாகும். அரும்பின் அடிப்பக்கம் சற்றுப் பருத்து முகைத்துக் காணப்படுவதால் இப்பருவத்திற்கு முகைப்பருவம் என இலக்கியத்தில் குளவி முகை என்றும் கொழுமுகை என்று குறிப்பிடுகின்றது. அரும்பு உள் இடைவெளி பெற்றுக் குவிந்திருப்பதால் குவிமுகை என்றும் அரும்பு இதழ்கள் நெகிழ்ச்சிஅடைந்து கொழுத்திருப்பதால் கொழுமுகை என்றும் அடைமொழியுடன் குறிக்கப்படுகிறது. அரும்பு உள் இடைவெளி பெற்றுக் குவிந்திருப்பதால் குவிமுகை என்றும் அரும்பு இதழ்கள் நெகிழ்ச்சி அடைந்து கொழுத்திருப்பதால் கொழுமுகை என்றும் அடைமொழியுடன் குறிக்கப்படுகிறது.

“நுண்முகை யவழிந்த புறவில்”     (நற் - 59)

“முல்லை முகைவாய் திறப்பப்பல்வயின்”   (நற்-69)

                             “கோங்கங் குவிமுகை அவிழ ஈங்கை”   (நற் - 86)

 என்ற அடிகள் மூலம் அறிய முடிகிறது.

போதுப் பருவம்

            போது பூவின் நான்காவது வளர் பருவமாகும். முகைக்கு அடுத்த நிலைப் போதுப் பருவமாகும். முகைக்கும் மலருக்கும் இடைப்பட்ட நிலையாகும். இந்நிலையில் இதழ்கள் நெகிழ்ந்து இடைவெளி கொண்டு முனையில் வாய் திறக்கும் நிலையாகும். முகை வாய்விட்டு உடையும் பொழுதினுக்குப் போது என்று இவற்றை,

“ஏதி லாளன்னும் என்ப போதவிழ்”     (நற் - 74)

“அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது” (ஐங் - 343)

என்னும் நற்றிணை அடிகள் மூலம் உணரலாம்.

மலர்ப் பருவம்

          பூவின் ஐந்தாவது பருவம் “மலர்” ஆகும். மல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து மலர் என்ற சொல் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த வளர் பருவத்தில் பூ மகரந்தச் சேர்க்கைக்குத் தயாராகிறது. இதனால் வளத்தைக் குறிக்கும் மல் என்ற வேர்ச்சொல் அடிப்படையில் மலர் என்ற சொல் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார்.

“போத விழ் புன்னை ஓங்கிய கானல்” (நற்-327)

“போது அவிழ் புதுமலர்” (ம.கா 564)

இவ்வடிகள் சுட்டுகின்றன.

அலர் பருவம்

         பூவின் ஆறாவது வளர்பருவம் அலர் ஆகும். இந்நிலையில் மகரந்தங்கள் வெளியேற்றப்பட்டு வேறு பூவின் மகரந்தச் சேர்க்கை மூலம் சூலகத்தை அடைந்து அதனைக் கருவுறச் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இவ்விதழ்கள் நன்கு விரிதலும் பரவலும் அலர்தல் என்று சொல்லப்படும் இப்பருவம் பற்றி நற்றிணை,

“கரும்புண விரிந்த கருங்கால் வேங்கை” (நற் - 168)

என்றும்,

”இலகிய விரிமலர்ப் பேர்

                        இகமலர் வெதிர் தொடர்ப்பூ”  (சூடா.நிக - 50)

என்று குறிப்பிடுகின்றன.

வீ பருவம்

         பூவின் ஏழாவது பருவம் வீ ஆகும். வீ என்றால் நீங்குதல், விழுதல், ஒழிதல், விடுதல் எனப் பொருள்படும்.” பொதுவாக பூவின் இதழ்கள் வீழ்ந்தாலும் கருவுற்ற சூலகம் புதிய வீரியத்தோடு வளர ஆரம்பிக்கும் நிலையை வீ உணர்த்துகிறது. நிறை மலராக விளங்கிய விரிமலர் காம்பின் பிடிப்பிலிருந்து விழும் நிலையில் நீங்கும். விடுபடும் நிலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இதனை,

                           “வேங்கை வீபுகு” (நற்- 13)

                           “வீதா வேங்கை மலைகிழ வோற்கே” (நற் - 51)

என்று குறிப்பிடுகிறது.

முடிவுரை

            சங்ககாலத் தமிழர் வாழ்க்கை அகம், புறம் என்று இரு வகைப்படும். அக வாழ்வில் பூக்களின் தேவையும், அதன் சிறப்பும் போற்றுதற்குரியதாகும். அக வாழ்வில் காதலனின் வாழ்க்கைக்குக் காரணமாக மன்மதன் விடும் தாமரை, மா, அசோகம், முல்லை, கருங்குவளை ஆகிய ஐந்தும் பூக்களும் இன்பப் பருவத்தின் சிறப்பைக் குறிக்கின்றன. வேங்கைப் பூக்கள் பூத்திருப்பது களவு வாழ்க்கையில் உள்ள காதலர்களைக் கற்பு வாழ்க்கைக்கு அறிவுறுத்துவதாக உள்ளது. நற்றினையில்  காணலாகும் பூக்கும் நிறம், வடிவம், வண்ணம், மணம், குணம், தன்மை ஆகிய சிறப்புகளைப் பெற்றுள்ளன. கால வளர்ச்சியில் நற்றிணையில் காணலாகும் பூக்களில் சில மறைந்தும் பல அருகியும் உள்ளன. நற்றிணைப் பூக்களில் பல பூக்கள் பண்டைய தமிழர்களின் மரபு என்பது இன்றளவிலும் தெளிவாக அறிய முடிகிறது.

 

துணை நூற்பட்டியல்

1. இராசேந்திரன்.,                     -       இலக்கியத்தில் மலர்கள்,

                                                          பூங்கொடி பதிப்பகம்,

                                                          மேற்குத் தெரு, மயிலாப்பூர்.

2. நாரயணசாமி ஐயர்.அ.திரு.

                           பின்னத்தூர்    -       நற்றிணை நானூறு

                                                          திருநெல்வேலி,

                                                          தென்னிந்திய சைவ சித்தாந்த

                                                          நூற்பதிப்புக் கழகம் லிட்.,

                                                          ஆள்வார்பேட்டை

                                                          சென்னை – 18.

3. மகாதேவன். கதிர்.                 -       சங்க இலக்கிய நற்றிணை,

                                                          கோவிலூர் மடாலயம்,

                                                          காரைக்குடி.

 

4. வரதராசன்.,                          -       திருக்குறள்,

                                                          பாரி நிலையம்,

                                                          சென்னை.