ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சீவக சிந்தாமணியில் மகளிரும் கலைகளும் 

ஆய்வாளர்: நா.கவிதா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு, தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: முனைவர் க.மலர்விழி, M.A., M.Ed., M.Phil., Ph.D.,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் 08 Feb 2024 Read Full PDF

1. ஆய்வுச் சுருக்கம்
    காலந்தோறும் பெண்களின் நிலைகளை காலங்களில் எழுந்த இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவில் மேம்பட்டு விளங்கியதையும் ஆண்களுக்கு நிகராக விளங்கியதையும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அக்காலகட்டத்தை அடுத்துத் தோற்றம் பெற்ற பல்லவர் காலத்தில் தோன்றிய காப்பியங்களிலும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அந்தந்த இலக்கியங்கள் எழுந்த காலச் சூழலுக்கேற்ப பெண்மையின் பண்புகளை வரையறுப்பது இன்றியமையாததாகும். பேரரசுகளின் காலத்தில் உருவாக்கம் பெற்ற காப்பிய இலக்கிய வகைகளுள் மையப் பொருள்களான அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் நாற்பொருளைச் சுட்ட பெண்ணிய சிந்தனைகளும் பின்புலமாக எடுத்தாளப்பட்டுள்ளது. இக்கால காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் காணலாகும் மகளிரின் கலைநுணுக்கம் பற்றி காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
2. திறவுச்சொல் 
    1. கலை 
    2. வரையறை 
    3. இசை 
    4. ஆடல் 
3. முன்னுரை 
    நாடோடி வாழ்க்கை முறைகளில் இருந்து நிலையான வாழ்வியலைக் கைக்கொண்ட மனித இனம் காலப்போக்கில் நாகரிக வாழ்வியல் நிலையின் உச்சத்தில் கலைகள் போன்ற சிறப்பம்சங்கள் தோற்றம் பெற்றன. மனித நாகரிகத்தின் பொழுதுபோக்காகவும் தனித்திறனின் வெளிப்பாடாகவும் அமைந்த கலைகள் இன்று வாழ்க்கையில் பிரிக்க இயலாத ஒன்றாக அமைந்துள்ளது. இலக்கியங்கள் கலைகளின் வெளிப்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதை அறியமுடிகிறது. 
    சீவகசிந்தாமணி காப்பியத்தில் கலைகள் குறித்தான பதிவுகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சமூகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பல்வேறு கலைத்திறன்களைக் கைக்கொண்டவர்களாக மகளிர் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றாதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் சீவகசிந்தாமணியில் மகளிர் கைக்கொண்டிருந்த பல்வேறு வகையான கலைகளைக் பற்றி ஆராய்ந்து விளக்கப்படுவதாக இக்கட்டுரை அமைகிறது. 
கலை விளக்கமும் வரையறையும் 
    தனிமனித சிந்தனையின் வெளிப்பாடாகவும் சமூகத்தின் கூட்டிணைவாலும் கலை குறித்த விளக்கமானது பின்வருமாறு இரண்டு வகை ஒன்று கலை கலைக்காகவே உள்ளது கலை வாழ்க்கைக்காக உள்ளது என்பர். முன்னதை ரசிக்கலாம் ரசித்துக் கொண்டே இருக்கலாம் அதில் எந்த பிரதிபலிப்பையும் காணமுடியாது. அழகை ஆராதிக்கலாம் அவ்வளவுதான். ஆனால் பின்னதில் ஒரு சிக்கலான ரசனை பொதிந்து கிடக்கும் அந்த ரசனையை மீண்டும் மீண்டும் சிந்தித்து ரசித்தால் தான் உண்மை அழகைக் காணமுடியும்.  கலை வாழ்க்கைக்காகவே என்ற பிரிவில் தொழில்முறைக் கலைகளை அடக்க வேண்டியிருக்கிறது. இதனால் பயனில்லாத நோக்கமில்லாக் கலைகளே இல்லை. கலைகள் நோக்கத்தோடே கருத்துப் புலப்பாட்டு நோக்கத்தோடு படைக்கப்படுகிறது”. என்ற கருத்து கலை என்பது என்ன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு மனிதனின் ஒவ்வொரு செயலும் கலையினை உள்ளடக்கியதாக உள்ளதை மேற்குறித்த கருத்துக்கள் மூலம் அறியமுடிகின்றன. 
கலைத்திறன்களில் மகளிர் 
    ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்;திட வேண்டும்மா’ என்ற கவிஞரின் கூற்று பெண்குலத்திற்குப் பெருமை சேர்க்கும் படியாக அமைந்துள்ளது. பண்டைக் காலம் முதல் தற்காலம் வரையில் தொன்று தொட்டு பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நான்கையும் அணிகலன்களாகக் கொண்டுள்ளனர். அவை மட்டும் இன்றி கலைத்திறன்களில் கைத்தேர்ந்தவர்களாகவும் தொழில்களில் தனித்திறமைகள் பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். மேலும் ஆண்களுக்கு இணையான தொழில்களில் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். 
    பெண்கள் பல்கலைகளில் வல்லுனர்களாகவும் திறமைமிக்க திறனாய்வாளர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக ஆலோசனை வழங்குபவர்களாகவும் அரசியல் அறிவுடையவர்களாகவும் மருத்துவப் பெண்ணாகவும் மந்திர ஆற்றல் உடையவர்களாகவும் ஆடல் கலையில் சிறந்தவர்கள் எனப் பல்வகைத் துறையிலும் தங்கள் திறமையினை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதை சீவகசிந்தாமணி காப்பியம் பதிவு செய்துள்ளது. 
சீவக சிந்தாமணியில் மகளிரின் கலைத்திறன்கள் 
    சீவகசிந்தாமணியில் ஆடல் கூத்து நாடகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாகப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். கலைகள் மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியைத் தோன்றச்செய்து அழகையும் இன்பத்தையும் அளிக்கக் கூடியது. பெண்கள் தங்களுடைய அறிவினாலும் கற்பனையாலும் திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவ்வகையில் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள மகளிரின் கலைத்திறன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாயினர். அவை ஒன்று நுண்கலைகள் சார்ந்த மகளிர் மற்றொன்று தொழிற்கலை சார்ந்த மகளிர் என்பதாகும். 
நுண்கலைகள் சார்ந்த மகளிர் 
    கலைகளைப் பொழுபோக்கிற்காகவும் திறமையினை வெளிக்காட்டும் நோக்கத்தோடும் செயல்படுத்தப்படுகின்ற கலைகள் உள்ளன. அந்தவகையில் இவ்விரு தன்மையிலும் மகளிர் தங்கள் கலைத்திறன்களைக் கைக்கொண்டிருந்துள்ளதை அறியமுடிகிறது. நுண்கலைப் பிரிவானது மிகவும் மென்மைத் தன்மையுடையதாகவும் கூர்மையுடைத்தாகவும் அமையும். குறிப்பாக நுண்கலைகளாக சுண்ணம் இழத்தல் வாழை இலையில் ஓவியம் வரைதல் கோலமிடுதல் ஒப்பனைக்கலைகள் சிற்பம் செய்தல் ஆடல் பாடல் மருத்துவம் போன்றவற்றை குறிப்பிடலாம். தொழிற்சார்ந்த கலைகளாக அரசியல்கலை பேச்சுக்கலை மந்திரக்கலை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். 
சுண்ணக்கலை 
    சீவகசிந்தாமணி காப்பியத்தில் பல்வேறு வகையான நுண்கலைகளைக் கைக்கொண்டு பாண்டித்தியம் பெற்ற மகளிர்கள் குறித்தான பதிவுகளைக் காணமுடிகின்றன. அந்தவகையில் சுண்ணப்பொடி இடுகின்ற கலையில் மகளிர் தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். மகளிர் தம் வாழ்வில் சிறந்த பண்புகளையும் அடக்கத்தையும் பெற்றதோடு கலைகளின் பிறப்பிடமாகவும் விளங்கினர். ஆண்களை எதிர்த்து வாதம் செய்யாத பெண்கள் இருந்த அதே காலத்தில் ஆண்களை எதிர்த்து வாதம் செய்யும் குணமும் பிடிவாத குணம்கொண்டு செயல்பட்ட முனைப்புடைய பெண்களும் இருந்துள்ளனர். அவர்களின் நுண்ணறிவுத் திறனை வெளிக்காட்டும்படியாக போட்டி நடைபெறுகின்றது. குணமாலை சுரமஞ்சரி தயார் செய்த சுண்ணப்பொடியில் சுண்ணம் தயாரிப்பதோடு மட்டும் இன்றி அதன் தன்மையும் ஆராயப்பட்டு கருத்து கூறப்பட்டுள்ளது. 
    குணமாலை சுரமங்சரி சுண்ணம் தயார் செய்து அதை நீராடச் செல்லும் பொழுது எடுத்துச் செல்கின்றனர். யாருடைய சுண்ணம் சிறந்தது என்ற போட்டி இருவருக்கும் நடைபெறுகின்றது. இதனை 
        “சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் 
        வண்ண மாலை நுசுப்பு வருத்துவான் 
        எண்ணி வந்தன கூறிவை யொவென 
        நண்ணி மாலையை நக்கன ளென்பவே”1 
என்ற பாடல் நுண்ணறிவுடன் பெண்கள் தங்கள் பொழுதைக் கழித்ததை மேலே கூறப்பட்ட வரிகள் காட்டும் படியாக உள்ளது. சுண்ணப்பொடி என்பது பெண்கள் கண்ணில் இடக்கூடிய ஒன்று என்ற கருத்து கூறப்படுகின்றது. 
வாழை இலையில் கலை 
    மகளிர் இளங்குருத்து உடைய கன்னி வாழையின் வெள்ளிய கருத்திணை எடுத்து அதனுள்ளே சிறபத்தொழில் செய்வானைப் போன்று கொடியின் இடையே கயல்மீன்கள் விணைக்கப்பட்டது போன்ற ஓவியமாக கைவிரலின் நகத்தாற் கிள்ளிச் சிறந்த முறையில் மார்பகத்திலே சூடியுள்ளதோடு சீவகனைக் கூடி மகிழ நினைத்த மகளிர் குலை ஈனாத வாழையின் குருத்தில் இத்தகு சிறப்பான கலையினைச் செய்துள்ளனர். கலையாற்றலுக்கு இவை சிறந்ததொரு உதாரணம் என்றே குறிப்பிடலாம். இதனை பின்வரும் பாடல் வரிகள் வழியாக அறியலாம். 
        “கொழுமற் குமரி வாழித் துகிற் சுருள் கொண்டு தோன்றச் 
        செழுமலர்க் காம வல்லிசெருக்கயல் சிற்பமாகக் 
        எழுமணிச் செம்போ னாழிக் கைவிர லுகிரிற் கிள்ளி”2
இன்றைய காலகட்டத்திலும் நட்சத்திர விடுதிகள் கண்காட்சியில் வாழைக்குருத்தில் வாழைப் பழங்களில் வாழைப்பூவில் வாழைப்பட்டையில் சில வடிவங்களைச் செய்து அழகுபடுத்துகின்றனர். 
கோலமிடல் 
    கலைநயத்துடன் செய்யும் செயல்பாடுகளில் பெண்களுக்கே உரிய சிறப்புகள் தனித்துவம் மிக்கவை. எந்த ஒரு செயலும் எழிலுடன் இருப்பதற்கும் அமைப்பதற்கும் தகுதியுடையவர்கள் பெண்கள். திருமணத்திற்கு வண்ணப் பொடியாலே கோலமிட்டு மேவுதானம் அமைத்து அழகு பெறச் செய்கின்ற கலையில் கைதேர்ந்தவர்கள் என்பதை அறிவதற்குப் பின்வரும் வரிகள் சான்றாக அமைந்துள்ளன. 
        “வரிந்துவான் பூத்தென் விதானித் தாய்கதிர் 
        அருங்கலப் பொடியினா லாய்பொற் பூமகள் 
        மருங்குல போற் குறிற்றிய நகரின் மங்கல”3
என்ற பாடலில் பெண்கள் மாக்கோலமிடுவதில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளக்கியுள்ளதைக் காணமுடிகிறது. 
மாலை தொடுத்தல் 
    மகளிர் கூரிய நகத்தால் கீறி ஒரு செங்குழ நீர் மாலையை புனைந்ததாகக் காப்பியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. அதாவது நகத்தைக் கொண்டு மாலை தயார் செய்துள்ளதை கீழ்வரும் பாடல் விளக்குகின்றது. 
        “கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப் 
        பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக் 
        காரிகை யுலகுணர் கடவுப் பாடுமே”4
என்ற பாடல் வரிகள் மாலையை வீணையிலே சூடிக் கடவுளை வணங்கியதைக் காட்டுகின்றது. மாலை தொடுத்து அருகனை வழிபட்டதையும் மாலை தொடுத்தலில் தங்கள் திறமையினை மகளிர் வெளிப்படுத்தியுள்ளதையும் அறியமுடிகிறது. 
மந்திரக்கலை 
    தத்தை தன் மனதில் எண்ணியதை நினைத்தவுடன் அறியும் மந்திரம் கற்றவளாகக் காட்டப்படுகிறாள். அம்மந்திரத்தைத் தகுந்த நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவதை சில நிகழ்வுகளின் வாயிலாக வெளிக்காட்டியுள்ளாhர். இதனை 
        “மாண்டதோர் விஞ்சை யோதி மதிமுகந்த தைவந்திட்டா 
        நீண்டது பெரிது மன்றிநினைத்துழி விளக்கிறறன்றே”5 
என்ற பாடல் வரிகள் சீவகனைக் காணாத அவனுடைய நண்பன் நந்தட்டன் தத்தையின் உதவியை நாடுகின்றான். அவளுடைய மந்திர ஆற்றலால் “ஓர் விஞ்சையைக் கூறித் தன் திங்களனைய முகத்தைத் தடவினாள்.” நீண்ட தொலைவும் அரியதுமாக அல்லாமல் அவ்விஞ்சை சீவகன் இருக்கும் இடத்தைக் காட்டுகின்றது. இவ்வாறு தான் கற்ற கலையின் வழியாக தன் கணவனைக் கண்டு அறியும் மந்திரக்கலையினைப் பொருத்தமான இடத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். 
பொறியல் கலை 
    காப்பியச் காலத்தியப் பெண்கள் அறிவியல் பாங்குடன் இருந்துள்ளனர். விசயை வானூர்தியைச் செயல்படுத்தும் விதம் போற்றுதற்குரிய ஒன்றாக உள்ளது. சான்றாக 
        “ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழி 
        மாடமும் காவும டுத்தொர்சின் னாள்செலப் 
        பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந்
        தோடமு றுக்கிய ணர்ந்தவு ணர்ந்தாள்”6
என்ற பாடலில் விசயை மயிற்பொறியினை இயக்கும் வித்தையினைக் காணமுடிகின்றது. 
பாடல் கலை 
    பாடுவதில் சிறப்பு பெற்றவர்களாகப் பெண்கள் இருந்துள்ளதை வெளிப்படுத்தும் நோக்கில் கேமசரியாரை ஆசிரியர் காட்டியுள்ளார். மூன்றுலகம் அன்பினால் பாடப்படுவதாகிய அருகனுடைய பாடலை கேமசரி பாடுகிறாள் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது. இதனை
        “முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகம் 
        பத்திமையாற் பாடல் படுவான்றான் பாடக் கேட்டு”7
என்ற பாடல் வரிகளில் இருந்து பெண்கள் பாடும் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. 
ஆடல் கலை 
    மன்னர்களின் பொழுது போக்கிற்காக ஆடல் கலை நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆடல் மங்கையாக அநங்கமாலை காட்டப்பட்டுள்ளார். ஆடல் மகளிர் என பொதுவாகவும் குறிப்பிட்டுள்ளனர். 
    சச்சந்தன் இறந்த பொழுது அவர்கள் வருத்தமுற்றதைக் கூறும் பொழுது அரம்பை போன்ற முற்றுங்கற்ற ஆடல் புரிகின்ற நாடக மகளிர் ஆடியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. என்பதனை 
        “மந்தீ கிளவியா ரைஞ்றூற்றுவ ரவைதுறை 
        போயாட லரம்பை யன்னா”8
என்ற பாடல் மூலம் ஆடல் கலையில் காண்போரும் வியந்து நிற்கும்படி ஆடிய அநங்கமாலையின் ஆடும் திறனை அறியமுடிகின்றது. 
இசைக்கலை
    இசைக்கு முக்கியத்துவம் கருதியும் பெண்ணின் திறனை வெளிக்காட்டும் விதத்திலும் காந்தருவத்தையார் இலம்பகத்தில் இசைக்கலைகள் குறித்தான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது. “இசைக்கலைஞர் கட்குக் கந்தருவர் கந்தருவி எனப்பட்டங்கள் வழங்கப்பட்டன. வாத்தியக் கலைஞர் வாச்சிய மாராயன் எனப் பெயர் பெற்றார்”17
    “இசையால் நெஞ்சங்களை அசையவைத்து இறைமையோடு இயல்புடையதாகும் புறக்கட்டமைப்பில் இசைத்தமிழ் என்றே ஒரு வகைமை கொண்டு விலங்குகின்ற தனித்திறமை உடையது”18 என்ற கருத்துக்கு ஏற்றது போல இசை மனதினை மாற்றவல்லது. 
    இசைக்கலையில் பெண்கள் சிறந்து விளங்கியதை சீவகசிந்தாமணி குறிப்பிடகின்றது. சிந்தாமணியில் சுரமஞ்சரியார் இலம்பகம் காந்தருவதத்தையார் இலம்பகமும் இசை நுட்பங்கள் சிலவற்றைக் கூறுகிறது. 
    யாழ் வாசிப்பில் சிறந்தவளான தத்தை பல மன்னர்களோடு யாழ்ப்போர் கொண்டுää சீவகனைத் தவிர்த்து மற்றவர் தோற்கும் படி யாழ் மீட்டினாள் என்ற செய்தி புலப்படுகின்றது. 
    அவளுடைய யாழ் வாசிப்பினைக் கண்டு பறவைகள் மயங்கியதை அறியமுடிகிறது. அவளுடைய வீணைப் போருக்கு இசை நூலோடே வாசிக்கத் தொடங்கிய நுண்ணிய நுண்;கலையுடைய வணிகரும் தோற்றுவிடுகின்றனர். வாடைக் காற்றுபட்டால் பொருத்துக் கொள்ளும் தன்மை இன்றி கருகும் அழகியப் பூவைப் போன்று வாடினார்கள் என்பதை 
        “வாலரக் கெறிந்த காந்தன்மணியரும் பனைய வாகிக் 
        கோல்பொரச் சிவந்த கோலக் குவிவிரன் மடந்தை வீணை 
        நூல்பொரப் புகுந்த நுண்னுல்வணிகருத் தொலைந்து மாதோ 
        கால் பொரக் கரிந்த காமர்பங்கயப் பழன மொத்தார்”9
இப்பாடல் வரிகள் விளக்குகின்றன. 
    தத்தை மட்டும் இன்றி விமலையும் யாழ் வாசித்துப் பாடுகிறாள் என்பதையும் 
        “பண்ணமை மகர வீணைநரம்புரீஇப் பாடலை பாட”10
என்ற வரி புலப்படுத்துகிறது. பந்தாடல் திறன் மட்டும் இன்றி யாழ் வாசிப்புத்திறனும் உடைய பெண்ணாக விமலை காட்டப்படுகிறாள்     
முடிவுரை 
    இனக்குழு வாழ்வில் காட்டுமிரண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரிக வாழ்க்கையில் கலைத்திறன்களைக் கைக்கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. 
    காப்பிய காலத்தியச் சமூகத்தில் மகளிர் ஆண்களுக்கு இணையாக நுண்கலைகளையும் தொழிற்கலைகளையும் கற்றுத் துறைபோகியவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை மேற்கண்ட பாடல்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. 
    நுண்கலைகளான சுண்ணப்பொடி இடித்தலில் சுரமஞ்சரி தேர்ந்தவளாக அறிப்படுகின்றாள். வாழை இலையின் குருத்துக்களில் பல்வேறு வடிவங்களில் கலைப்படுத்தியுள்ளதையும் அறியமுடிகிறது. 
    கோலமிடுதல் கலையில் சிறப்புப் பெற்றவர்களாக மகளிர் திகழ்ந்துள்ளனர். சமூகத்தில் மகளிர்களுக்கு ஒப்பனை செய்வதற்கு என மகளிர்களே இருந்துள்ளனர். காந்தருவத்தைக்கும் ஒப்பனை செய்ததற்கானக் குறிப்புகளைக் காணமுடிகின்றன. 
    விசய வானூர்தியை இயக்குகின்ற அறிவினைப் பெற்றவளாக இருந்துள்ளதையும் இன்றைய காலத்தில் விமானம் ஓட்டுகின்ற பெண்களுக்கு இணையானவளாக விசயை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது. 
    விமலை பந்தாடல் என்னும் பொழுதுபோக்குக் கலைகளில் சிறந்தவளாக விளங்கியுள்ளதைக் காணமுடிகிறது. பாடல் ஆடல் இசை போன்ற நுண்கலைகளிலும் மகளிர் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கியுள்ளனர்.
துணை நூற்பட்டியல்
முதன்மைச் சான்றாதாரம்
1.    சாமிநாதையர் உ.வே. (உ.ஆ)  -    சீவகசிந்தாமணி 
ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு சென்னை