ஏப்ரல் 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஆற்றுப்படை இலக்கியத்தில் பாணர்கள் (Poems in the riverine literature)

ஆய்வாளர்: கி. ஹேமமாலினி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | நெறியாளர்: முனைவர். க. மலர்விழி, M.A., M.Ed., M.Phil., Ph.D., தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம். 08 Feb 2024 Read Full PDF

 

ஆய்வுச்சுருக்கம்:

     பத்துப்பாட்டு நூற்களுள் இடம்பெற்றுள்ள ஆற்றுப்படை நூல்களானது பாணர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றன. சங்க கால கலைஞர்களான பாணர்கள் ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல்உணவுக்காகவும், பொருளுக்காகவும் வள்ளல்களையும், மன்னர்களையும் நாடித் தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தினர்.

     பாணர்கள் இயல், இசை நாடகமென பல துறை வல்லுநர்களாக சிறந்து விளங்கினாலும் அவர்களது புலமைக்கு ஏற்ற பொருள்வளம் இல்லாமலும் பழுத்த மரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போலத் தம்மை ஆதரிப்பவர்கள் இருக்கும் இடம் தேடி அலைந்தனர். பாணர்களின் வாழ்க்கையானது வறுமை நிலையினையுடையதாகவே காணப்பட்டது.

     ஆற்றுப்படை இலக்கணத்தின் எல்லைக்குள் நின்று பாணர்களின் வாழ்க்கை முறையினையும் அவர்கள் ஆதரித்த வள்ளல்களின் சிறப்பினையும் இவ்வாய்வானது விளக்கி கூறும் வகையில் அமைகிறது.

 
 

1

 

 

 Study Summary :-

     The Aartuppa texts contained in the Ten padua books are a way of revealing the life of the Panars. The Panars who were artists of the sanga Period did not stay in one place but sought out the kings and  kings for food and material and showed their artistic skills and earned a living.

     Although Panars excelled as experts in various fields like physics, music and drama, they wandered like birds searching for a ripe tree in search of a place to support them.

This study is intended to explain the lifestyle of Panars and the characteristicsof the valleys supported by them within the scope of Aartuppa Grammer.

திறவுச் சொற்கள்:

     வழிப்படுத்தல் – பாணர்களின் வாழ்வியல் -  கூத்தர்களின் சிறப்புகள் – கடையெழு வள்ளல்கள் – ஐவகை நிலங்கள்.

Key Words:

     Navigation – life of the Panars – characteristics of the Kootas – kadiyelu valleys – Five types of Lands.

முன்னுரை:

     தமிழர்கள் இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் வசதிகளையும் தொடக்கக் காலத்தில் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் பண்டைய தமிழ் மக்கள் உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர்களாகவும் தன்னலம் ஒழித்து பொதுநலம் பேணும் செவ்வியர்களாக வாழ்ந்தனர்.

     அத்தகைய வாழ்க்கைப் பண்புகளுள் ஒன்று ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி ஆதரித்து வாழ்ந்து வருதலாகும். அவ்வாதரவு ஆற்றுப்படுதல் எனும் பொருளில் ஒருவர் பெற்ற வளங்களையும் வசதிகளையும் மற்றவரும் பெற வேண்டும் என்கின்ற வேட்கையையும் மக்கள் மனதில் குடிகொண்டிருந்ததனைக் காண்கின்றோம்.

அவ்வேட்கையின் விளைவு அரசர்கள் படைத்துள்ள இலக்கியங்களிலும் வேறுபட்டுள்ளது. இதனையே பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் ஆற்றுப்படை இலக்கியங்களாகப் பதிவு செய்துள்ளனர்.

     ஆற்றுப்படுத்துவதனை விளக்குகின்ற பாடல்கள் புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் காணப்படுகின்றன. ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றம் குறித்து தொல்காப்பியர் நூற்களை அமைத்துள்ளார். பத்துப்பாட்டில் ஐந்து வகையான ஆற்றுப்படை குறித்த வளர்ச்சியினையும், பத்துப்பாட்டில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஆற்றுப்படை நூல்களின் சிறப்பினையும், சங்ககால மக்களின் வாழ்க்கை முறையினையும், புலவர்களை ஆதரித்த மன்னர்கள் மற்றும் வள்ளல்களின் கொடைச் சிறப்பினையும், பாணர் வாழ்வியல், ஐவகை நிலங்களையும் தொகுத்துக் கூறுகின்றது.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை:

     சங்கத்தொகை நூல்களில் முதன்மையாக வைத்து எண்ணப்படுவதற்குரிய சிறப்பு வாய்ந்தது பத்துப்பாட்டு.

“முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை

பெருகு வள மதுரைக்காஞ்சி   - மருவினிய

கோல நெடுநல்வாடை கோல்குறிச்சிப் பட்டினம்

பாலை கடாத்தொடும் பத்து”

(பழைய வெண்பா)

எனும் பத்துப்பாடலில் குறிப்பிட்டுள்ள பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

ஆற்றுப்படை இலக்கணம்:

    ஒருவர் செல்ல வேண்டிய வழிகளைச் சொல்லி அவற்றைப் பின்பற்றிச் செல்க என வழிப்படுத்துவதே ஆற்றுப்படை. சங்க இலக்கியங்களில் புலவர்கள் பாடிய பாட்டு வகைகளுள் ஒன்றாக இவ்வாற்றுப்படை திகழ்கின்றது.

     தொல்காப்பியப் புறத்திணையியலில் ஆற்றுப்படைக்கான இலக்கணம் இடம்பெற்றுள்ளது.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

     ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்

சென்ற பயனெதிரச் சொன்ன பக்கமும்”.

(தொல். புறத். நூ:30)

எனவே அந்நூற்பா ஆடல் மாந்தரும், பாடற்பாணரும், கருவிப் பொருநரும் இவருள் பெண் பாலரான விறலியும் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த பாணர் முதலியோரும் பெற வேண்டும் என்ற நோக்கில் வழிப்படுத்தினர் என்பதை இந்நூற்பா வழி அறியலாம்.

     வள்ளலிடம் பரிசில் பெற்றுவரும் கலைஞர்கள் தங்கள் எதிரே வரும் கலைஞர் குழுக்களிடம் தம் வளமைக்குக் காரணமான வள்ளலின் புகழ், கொடைத் தன்மையைக் கூறி வழிப்படுத்துவதே ஆற்றுப்படை நூல்களின் பாடுபொருளாக அமைகின்றது.

ஆற்றுப்படை விளக்கம்:

     கலைகளில் பெயரும் புகழும் பெற்று அரசரும் செல்வரும் மதிக்கும் அளவிற்கு மதிநுட்பமும், உடல்தோற்றமும் கொண்ட கலைஞர்கள் வளமான வாழ்வைப் பெறாமல் வறுமையால் வாடும் நிலைமை இலக்கியக் கலையில் ஈடுபடும் புலவர்களுக்கும் உண்டு. இந்நிலையை மாற்ற எண்ணிய புலவர்கள் தம் வறுமை தீரப்பொருள் உதவி செய்யும் செல்வர்களையும், அரசர்களையும் அணுகிப் புகழ்ந்துபாடி பரிசில் பெற்று வாழ்ந்தனர். தம்மைப்போல மற்ற புலவர்களின் வறுமையையும் நீக்கி வளமாக வாழவும் வழிகாட்டினர்.

 
   

“இந்தக் கொடிய வறுமை தீர்ந்து நீயும் உன்

சுற்றத்தாரும் நன்றாக வாழ்வதற்கு ஒருவழி

சொல்வேன், இன்ன ஊரில் உள்ள தலைவன்

இன்னாரிடம் சென்று அவனைப் பாடுக

அவன் பரிசு தருவான், பெற்று மகிழ்

நானும் அவனை அணுகியதால் நன்மை பெற்றேன்”

(மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு ப.52)

என்று பாடுகின்ற வழக்கம் உண்டு என்பதனை மு. வரதராசனார் கூற்றால் உணர்கின்றோம்.

ஆற்றுப்படுத்தும் மரபு:

     சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களிடையே ஒற்றுமையுணர்வும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் மேலோங்கிக் காணப்பட்டிருந்தது. ஆலந்தூர் கிழார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் வறுமையில் வாடிய பாணனை அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தியுள்ளார்.

இதனை:

“கிள்ளி  வளவன் படர்குவை ஆயின்

நெடுங்கடை நிற்றலும் இலையே, கடும்பகல்

தேர்வீசு இருக்கை ஆர நோக்கி

நீ அவற்கண்ட பின்றைப் பூவின்

ஆடும் வண்டு இமிராத் தாமரை”

(புறம்.69:16-20)

என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

திருமுருகாற்றுப்படை:

     ஆற்றுப்படை நூல்களில் காலத்தால் பிற்பட்ட நூலாக விளங்குவது திருமுருகாற்றுப்படை. பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் கடவுள்    வாழ்த்தாக அமைந்த காரணத்தினால் இந்நூல் முதலில் வைத்து தொகுக்கப்பட்டுள்ளது. பிற ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஆற்றுப்படுத்தப்படும் தலைவன் பெயரில் அமையவில்லை. ஆனால் திருமுருகாற்றுப்படை மட்டும் ஆற்றுப்படுத்தப்படும் தலைவனான முருகன் பெயரில் அமைந்துள்ளது.

     திருமுருகாற்றுப்படையைப் பாடியவர் நக்கீரர். முச்சங்க வரலாற்றுப் புலவர்களுள் இவர் தலைசிறந்தவராவார்.இவர் பாடிய திருமுருகாற்றுப்படை பதினோராந்திருமுறையுள் இடம் பெற்றுள்ளது. “இந்நூல் சங்க காலத்திற்கு கி.பி.300க்கு பின்பும் கி.பி. 600க்கு முன்பும் பாடியிருக்கலாம்”என்று மா. இராசமாணிக்கனார் அவரது பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பொருநராற்றுப்படை:

     ஆற்றுப்படை நூல்களுள் இரண்டாவதாகப் பாடப் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை. இந்நூல் 248 அடிகளைக் கொண்டது. பொருநராற்றுப்படையில் “பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”  என்ற தொல்காப்பிய விதிப்படியே, ஆற்றப்படுத்துவோன் தான் கரிகாலனிடம் சென்று பெற்ற பெருவளத்தை நன்கு விரித்துக்கூறி நீயும் சென்று பயன்பெற்று வருவாயாக என ஆற்றுப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

     முடத்தாமக்கண்ணியார் என்ற பெண்பால் புலவரால் இந்நூல் பாடப்பட்டுள்ளது. சோழ மன்னனான கரிகாற்பெருவளத்தானை இவர் புகழ்ந்து பாடியமையால் சோழ நாட்டைச் சார்ந்தவர் எனத் தெரிய வருகின்றது.

சிறுபாணாற்றுப்படை:

     சிறுபாணாற்றுப்படை ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்  மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியதாகும். இவ்வாற்றுப்படை 269 அடிகளைக் கொண்டது. நல்லியக்கோடனின் சிறப்புக்களையும், கொடைத் தன்மையினையும், கூறி பாணன் ஒருவன் தன் எதிரில் கண்ட பாணர்களை மன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இச்சிறுபாணாற்றுப்படை அமைந்துள்ளது.

பெரும்பாணாற்றுப்படை:

     பத்துப்பாட்டு நூற்களுள் நான்காவதாக இடம் பெற்றிருப்பது பெரும்பாணாற்றுப்படை.  தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். இப்பாடல்  500 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. வறுமையில் வாடிய பேரியாழ்ப்பாணனைக் காஞ்சி மாநகரில் இருக்கும் தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்துவதே பெரும்பாணாற்றுப்படை பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படையும், ஒன்பதாம் பாடலாகிய பட்டினப்பாலையும் இவரால் பாடப்பட்டதாகும்.

மலைபடுகடாம்:

     பத்துப்பாட்டுள் இறுதியாக அமைந்துள்ள நூல் மலைபடுகடாம். 583 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது. இந்நூல் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படும். கூத்தருக்கு வழிசொல்லி அனுப்பும் முறையில் பாடப்பட்டுள்ளது. கூத்தராற்றுப்படையைப் பாடியவர் பெருங்கௌசிகனார். இவரது ஊர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் என்பதாகும். “மதுரையை அடுத்த யானைமலை, அழகர் மலைப்பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட நாடு என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.     இவர் ஆகுளி முதலிய இசைக்கருவிகளைப் பற்றியும், யாழைப்பற்றியும் கூறியுள்ளதால் இவர் இசையறிவு மிக்கவராவர்”

தொல்காப்பியர் காட்டும் வாயில்களில் பாணர்கள்:

     சங்க காலத்தில் பாணர்கள், தலைவன், தலைவியரின் அக வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் ஊடலைத் தீர்ப்பவர்களாகவும், அவர்களுக்குத் தூது செல்பவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

     பாணர்கள் சமூகத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் எளிதாகச் சென்றுவரக்கூடிய உரிமை பெற்றிருந்தனர். இதற்கு பாணர்கள் சமூகத்தோடு கொண்டிருந்த நல்லுறவே காரணம் எனக் கூறலாம்.

     பாணர்கள் கற்புக் காலத்து வாயில்களில் முதன்மையுடையவராகக் குறிக்கப்பெற்றுள்ளனர்.

“பாணன் கூத்தன் விறலி பரத்தை

யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

மூன்றுறக் கிளந்த அறுவரொடு தொகை இத்

தொன்னெறி மரபிற் கற்பிக்குரியர்”

(தொல். பொருள். இளம். நூ. 491)

மேலும் ,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

     கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

     யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”

(மேலது. நூ. 1139)

எனப் பாணர்கள் பன்னிரண்டு வாயில்களில் ஒருவராகவும் தலைவன் தலைவியின் அகவாழ்வில் முதன்மையுடையவராகவும் குறிக்கப் பெற்றுள்ளனர்.

கடையெழு வள்ளல்களின் சிறப்பு:

  1. பேகன்                      :     மயிலுக்குப் போர்வை அளித்தவன்.
  2. பாரி                        :     முல்லைக்குத் தேர் தந்தவன்.
  3. காரி                        :     இரவலர்க்குக் குதிரைகள் நல்கியவன்.
  4. ஆய் அண்டிரன்              :     நீலமணியையும், நாகம் தந்த

கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன்.

  1. அதியமான் நெடுமான் அஞ்சி  :     ஔவைக்கு நெல்லிக்கனி தந்தவன்.
  2. நள்ளி                       :     தன் மனத்தில் உள்ளதை மறைக்காமல்

கூறி நாடி வந்தவர்களையும் நகைக்கச் செய்பவன், பிறர்க்குப் பொருள்களை வாரி வழங்குபவன்.

  1. ஓரி                        :     இரவலர்க்கு நாடுகளைப் பரிசிலாக

நல்கியவன்.

என்று பட்டியலிட்டு கூறப்பட்டுள்ளது.

முடிவுரை:

           ஆற்றுப்படை விளக்கமும் சிறப்புக்களும் என்னும் இயலில் ஆற்றுப்படைக்கான இலக்கணத்தையும், பத்துப்பாட்டு ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய நூல்களின் அமைப்பு முறையினையும், பாணர்களை ஆதரித்த வள்ளல்களின் சிறப்பினையும் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

     சங்ககாலத்தில் வாழ்ந்த பாரி, பேகன், காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகிய கடையெழு வள்ளல்கள் ஏனைய சிற்றரசர்களையும், பேரரசர்களையும் விட பெருவள்ளல்களாக விளங்கினர் என்பதையும் அறிய முடிகின்றது.

பத்துப்பாட்டு ஆற்றுப்படை நூல்களின் வாயிலாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகள் சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளன.

     பாணர் வாழ்வியல் முறையினையும் அவர்களது வறுமை நிலையினையும், அறிந்து கொள்ள முடிகின்றது. பாணர்களின் செயல்திறமை மற்றும் பல்வேறு சிறப்புகளையும் சிறப்பாக எடுத்தியம்பப்பட்டுள்ளன.

துணை நூற்பட்டியல்

முதன்மைச் சான்று:

மோகன். இரா. முனைவர்                பத்துப்பாட்டு (முதற்பகுதி) மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,

                                      சென்னை, 2007.

துணைமைச் சான்றுகள்:

இராசமாணிக்கனார். மா               பத்துப்பாட்டு ஆராய்ச்சி,

அவ்வை அச்சுக்கூடம்,

சென்னை, 1970.​​​​​​​

இளம்பூரணனார்                 தொல்காப்பியம்

(உரை)                              பொருளதிகாரம்,

சாரதா பதிப்பகம்,

                                    சென்னை, 2018.​​​​​​​

கதிர்முருகு                      பட்டினப்பாலை, சாரதா பதிப்பகம்,

(உரை)                              சென்னை, 2017.​​​​​​​

துரைச்சாமிப்பிள்ளை சு           பதிற்றுப்பத்து,

ஔவை                            சைவ சித்தாந்தநூல் பதிப்புக்கழகம்,

                                    சென்னை,  2007.​​​​​​​

பாலையன். அ.ப                 புறநானூறு

சாரதா பதிப்பகம்,

சென்னை, 2008.