ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இருத்தல் கட்டமைப்பும் சமூக மரபாக்கமும் (Existential structure and social heredity)

கட்டுரையாளர்: சு.ஷண்முகப்பிரியா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, சமூக அறிவியல் & மொழிகள் புலம், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005 | S.Shanmugapriya, Ph.D., Research Scholar, Department of Tamil, School of Social Sciences & Humanities, Central University of Tamilnadu, Thiruvarur – 610 005 | நெறியாளர்: முனைவர் ச.சுபாஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சமூக அறிவியல் & மொழிகள் புலம், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005 | Supervisor: Dr. S.Subash, Assistant Professor, Department of Tamil, School of Social Sciences & Humanities, Central University of Tamilnadu, Thiruvarur – 610 005. 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

      சங்ககாலச் சமூகக் கட்டமைப்பிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் இருத்தல் என்ற உரிப்பொருளின் இயல்பை நிலத்துடன் இயைத்துக் கூறுகிறது. இலக்கியங்களில் உரைக்கப்படும் உரிப்பொருள்கள் என்பன வெறும் திணையுணர்கருவிகளாக மட்டுமே செயற்படுவதில்லை. அஃது ஒரு சமூகக் கட்டமைப்பின் மரபு நுண்ணரசியலை எடுத்தியம்புவதாகவும் அமைகிறது. இருத்தல் என்ற உணர்வுசார் நிலைப்பாடு ஓர் இலக்கிய மரபிற்குள் கொண்டுவரப்பட்டதன் மையப்புள்ளி யாதென்ற வினா எழும்புகிறது. இருத்தலின் மையப்புள்ளியாக ஒரு குறிப்பிட்ட பால்பாகுபாடு சார்ந்த பொருண்மை இருக்கிறது. சமூகத்தின் ஒழுக்கமாக இருத்தலை ஆக்கம் செய்வதற்கு இலக்கியத்தின் ஊடாக மதிப்புநீட்சி செய்யப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு தொடங்கி உடைமைப்பூணல் வரை பல எண்ணற்ற மதிப்பாக்கங்கள் சமூகத்தில் இருத்தல் ஒழுக்கத்தினை ஆழங்கொள்ளச் செய்திருக்கிறது. கற்பு என்ற செயற்பாடு இருத்தலுக்குள் துளிர்விட்ட செயற்கைச்சின்னமாகும். இருத்தல் என்பது ஓர் இலக்கியத்திற்குள் எவ்வெவ்வற்றின் துணைகொண்டு பாடுபொருளுக்குப் பலம் சேர்த்துள்ளது என்பதை அறியும் விதத்திலும் உடைமைச் சமூகத்திற்கு இருத்தல் எத்தகைய வழிவகை செய்துள்ளது என்பது குறித்தும் இயற்கை ரீதியிலான நிலவியல், காலம் ஆகியன இருத்தல் கட்டமைப்பில் எவ்வாறு பங்குகொண்டுள்ளன என்பது பற்றியும் நிறுவனமாக்கப்பட்ட மையத்தில் இருந்து இருத்தல் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்தும் இலக்கிய இலக்கணங்களின் துணைகொண்டு ஆராயும் விதமாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

திறவுச் சொற்கள் : இருத்தல், மரபாக்கம், பால்பாகுபாடு, காலக்கோட்பாடு, குடும்ப நிறுவனம், சடங்கு நம்பிக்கை, உடைமை மரபு, போர்மரபு

Abstract 

The archetype that grammar gives to the social structure of the Sangam period relates the nature of the subject of existence to the land. The epithets used in the literature are mere sensory devices.The epithets used in literature do not function as mere sensory devices and it also assumes the legacy of a social structure. The question arises as to what is the centrality of the emotional position of being brought into a literary tradition. Being at the center of existence is a certain gendered ideal. Values ​​are extended through literature to create moral existence of the society. From division of labor to ownership, countless values ​​have deepened the morality of existence in society. The act of chastity is an artifact that sprouts into existence. In terms of knowing how presence contributes to the meaning of the poem within a piece of literature, and how presence has enabled the possessive community and how natural geography and time have played a part in the structure of existence. This review examines how existence emerges from an institutionalized center with the help of literary grammars.

Key words : existence, heredity, Gender discrimination, Chronology, family firm, Ritual faith, Legacy of Possession, Legacy of war 

முன்னுரை

      சமூக நடப்புகளைக் காலத்துடன் தொடர்புபடுத்தும் செயற்பாடே எழுத்துச் செயற்பாடாகும். நடைமுறைகளை, கட்டமைப்புகளை, மரபுகளை நயத்துடன் இயம்புவது இலக்கியம் என்றால் அவற்றின் இயல்பினை உரைப்பது இலக்கணம் ஆகும். மரபாக்கம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஒரு வர்க்கத்தை மையமிட்டதாகவே உருவாக்கப்படுகிறது. எந்தவொரு கட்டமைப்பும் தோன்றுவதற்குக் காலமும் வெளியும் கட்டாயம் தத்தம் இசைவினைத் தந்தளித்தே ஆக வேண்டும். அவ்வகையில் இருத்தல் என்ற கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட பாலினத்தை அடியொற்றி ஒரு சமூக மரபாக்கமாக எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதைச் சங்கப் பனுவல்களின் ஊடாகவும், இருத்தலின் ஒற்றைநிலைச் செயற்பாட்டிற்கு முதற்பொருள் பாகுபாடு எவ்வாறு வழிவகை செய்துள்ளது என்பதைத் தொல்காப்பியத்தின் ஊடாகவும் ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

இலக்கிய, இலக்கணமயமான இருத்தல்

செவ்வியல் பனுவல்களில் உரிப்பொருள் என்பது கவிதைக் குறியீடாக இருந்து வருகிறது. பாடுபொருளின் அம்சத்தினைக் கதைமாந்தர்கள்மீது ஏற்றிப் பாடுகையில் அவர்களின் மெய்யுணர்வுகளை எடுத்தியம்புவதில் உரிப்பொருள் முதன்மை பெறுகிறது. உணர்வுக் கட்டமைப்பின் இலக்கிய ஆக்கமான கவிதைகளின் இயங்குதளமாக உரிப்பொருள் இருக்கிறது. ஆகவே கவிதையின் இயக்கம் உரிப்பொருள் என்பது நன்கு புலனாகிறது.

"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங்காலை திணைக் குரிப்பொருளே"     (தொல்.960)

என்ற தொல்காப்பியத்தின் உரிப்பொருள் இலக்கணப்படி கூடல், பிரிவு, இருத்தல், இரங்கல், ஊடல் என்ற ஐந்து செயலுணர்வுகளும் உரிப்பொருள்களாக சங்கக்கவிதைகளில் பயின்று வந்துள்ளமை தெளிவு. இவற்றுள் இருத்தல் என்பது முல்லைத் திணைக்குரியதாய் இலக்கணக் கட்டமைப்பில் இருக்கிறது. இருத்தல் என்பதன் ஒருபொருட்பன்மொழியாக பொறுத்தல் என்ற சொல் ஏற்புடையதாகும். அஃதாவது தாங்குதல், சுமத்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருளுடையதே பொறுத்தல் ஆகும். இருத்தல் என்ற கட்டமைப்பு இலக்கண மரபில் பொதுவாக இருப்பினும் இலக்கியக் கூறுகளில் பெண் என்ற ஒற்றைநிலைப் பால்பாகுபாட்டிற்கு மட்டுமே பெரிதும் உரியதாக சங்கப் பாடல்களில் காட்டப்படுகிறது. இருத்தல் சூழமைவில் முல்லைத் திணையின் பாடல்களில் தலைவி கூற்றுப் பாடல்களைவிட தலைவன் கூற்றுப் பாடல்களே அதிகம் இருப்பினும், அப்பாடல்கள் பெரிதும் தலைவியின் காத்திருப்பினைத் தலைவன் வந்து தகர்க்கும்பொருட்டு எழுந்தமைந்த பாடுபொருளைக் கொண்டதாகவே இருக்கின்றன. இருத்தல் மரபில் உள்ள கட்டமைப்புக் கவிதைகள் பெண்ணினுடைய துன்பங்களைச் சித்தரித்தபோதிலும் அஃது ஆணைப் பிரிந்தபோது பெண் படுகின்ற துன்பத்தின் வெளிப்பாடாகவே படைப்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இலக்கணமயமாக்கப்பட்டிருக்கும் இருத்தல் என்ற முல்லைநில உரிப்பொருள் பால்பாகுபாட்டு நுண்ணரசியலைக் கொண்டுள்ளது என்பது இலக்கியப் பனுவல்களினூடாக அறியமுடிகிறது. எனவே இருத்தல் என்பதன் ஒற்றை நுணுக்கத்தைச் சமூகதளத்தில் நின்று ஆராய்வதே சாலப்பொருத்தமாகும்.

இருத்தலின் பொதுப்போக்கு

முல்லைச் சமூகம் தாய்வழிச் சமூகத்தின் கடைநிலையையும் தந்தைவழிச் சமூகத்தின் முதல்நிலையையும் எய்துவதற்குத் தொழில் பாகுபாடும் ஒருவகைக் காரணம் ஆகும்.

"உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான"     (தொல்.979)

என்பதிலிருந்து பொருள் தேடுதல் என்பது ஒரு சமூக மதிப்பீடாக இருப்பது புலனாகிறது. ‘பொருள்தேடித் திரும்பி வருங்கால் இரங்கலும் ஊடலும் நிகழும் முன்பே முல்லை நிலத் தலைவன் திரும்பி வந்தமையாலும், விருந்துடனும் களிப்புடனும் இருத்தல் நிலையில் நிறைவு பெற்றதாலும் முல்லை நில உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆயிற்று’ (வாணி அறிவாளன், முல்லை மண் மக்கள் இலக்கியம், ப. 39) என்பதன் மூலம் இருத்தல் என்பது தொழில் வகையால் ஏற்பட்ட இரு சார்புடைத்த ஒழுக்கம் என்ற பொதுப்போக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான கருத்திலே இருத்தல் என்பதன் ஒற்றைமையமான உணர்வரசியல் தென்படுகிறது. அஃது ஏன் பெண்ணுக்கு மட்டுமே பெரும்பான்மை உரித்தானது என்ற கேள்வி எழுகிறது.

கால, வெளியுடன் இருத்தல்

காத்திருப்பு என்பது காலமோ சூழலோ அல்லது பிறரோ ஒரு தனிமனிதனுக்கு இட்டுச் செல்லும் உணர்வுநிலைக் காப்பு ஆகும். இருத்தலுக்கும் காலத்திற்கும் மிகவும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. காலத்தின் பற்றுக்கோட்டில் இருத்தல் உணர்வு செயல்படுகிறது.

“ஓதல் பகையே தூது இவை பிரிவே”     (தொல்.971)

என்ற பழந்தமிழ்ச் சமூகக் கட்டமைப்பின்கீழ் வாழும் மாந்தர்களிடையே பிரிவு நிகழும் தன்மையை அறியமுடிகிறது. இதில் பகை, தூது ஆகிய இரு திறத்தானும் ஏற்படும் பிரிவு போர்மரபை அடியொற்றியதாகும். எனில் முல்லைச் சமூகத்திற்கும் இப்பிரிவு நிலைப்பாட்டிற்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது அறியமுடிகிறது. இந்தப் பிரிவுகள் காலத்தின் அடிப்படையில் கூறப்பட்ட புறவயமான இலக்கண வரையறைக்கு உட்பட்டவையாகும். ‘அரசக்கடமை நிமித்தம் புறத்தே சென்ற தலைவனின் வருகைக்காக மனைவி காத்திருத்தல் என்றே இதற்கு மரபு ரீதியாக விளக்கம் கூறப்படுகிறது. அமைதியாய் காத்திருத்தல், பிரிவாற்றலால் வாடுதலினும் தெளிவாக வேறுபடுத்தலாம்’ (கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்று புரிதலை நோக்கி, ப. 185). காலம் என்பது ஒரு சூழல் சார்ந்த தன்மையது. இடம், பொருள் யாவும் காலத்தினால் இயங்கக் கூடியவை. இருத்தல் என்பது ஒரு வினை என்று கூறுவதைவிடவும் காலத்துடன் தொடர்புடைய உணர்வுநிலை என்றும் கருதலாம். இருத்தல் வினையாகாது. கூடல், ஊடல் ஆகியவற்றைக்காட்டிலும் இருத்தல் என்பதே காலத்துடன் அதீத தொடர்பு உடையதாகும். இருத்தலின் நீட்சி இரங்கலாகவும் இருத்தலின் தொடக்கம் பிரிவாகவும் அமைந்திருப்பது இருத்தலின் ஆக்கக் கூறுகள் ஆகும். காலத்துடன் இயையும் ஒருமித்த தன்மைத்தான இவ்வுணர்வு, காத்திருக்கும்பொழுதுதான் காலத்தின் உடனே பயணிக்கிறது.

காலமும் பெண்ணின் உணர்வும்

காலக்கோட்பாட்டின் அடிப்படையில் ஓர் உடல்சார் வரையறை அல்லது உடலுணர்வு அறக்கவலையாக இருத்தல்கூறு உள்ளதால் காலம் என்ற நிலம்சார் மாற்றத்தின் ஊடாக இருத்தல் என்ற மரபுக் கட்டமைப்பு நடைபெற்றிருக்க வேண்டும். பாடலில் காலம் என்கிற பெரும்பொழுது வந்தால் இருத்தல் தாக்கம் பெரிய அளவிலும் சிறுபொழுதுவரின் குன்றியதாகவும் கட்டமைக்கப்பட்டதே காலத்திற்கும் இருத்தலுக்கும் நிலம்சார்ந்த பிரிவிற்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தி நிற்கிறது.

"புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே"     (நற்.89)

என்ற சான்றின்படி முல்லையின் காலம் என்பது ஒருசார் தலைமாந்தர்க்குத் துன்பமாயும் மறுசார் தலைமாந்தர்க்கு இன்பமாயும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் நுணுகிப் பார்த்தால் பெரும்பொழுது தலைவியின் துன்பமாகவும் சிறுபொழுது தலைவனின் இன்பமாகவும் பயின்று வந்துள்ளன. இருத்தல் என்ற பாடுபொருளின் அடையாளம் கருப்பொருள் துணைவழிக் காலத்தை அறியும் முறைமையும் உண்டு.

“பிரிவில் புலம்பி நுவலும் குயிலினும்

தேறுநீர் கெழீஇய யாறுநனிகொடிதே"     (நற்.97)

என்பதில் ஆற்று நீர் என்ற கருப்பொருள் குறியீட்டின் வாயிலாகக் கார்காலத்தை அறியமுடிகிறது. உணர்வை உய்த்துணரும் கருவியாக காலம் செயல்படுகிறது. இதற்குச் சான்றாகப் பாடல்களில் வரும் கூற்றுகளாக உள்ள ‘இது பருவம் தான்’; ‘இது குறித்தப் பருவம் அல்ல’; ‘இது வம்பமாறி’ எனக் காலத்தோடு பெண்ணுணர்வு உறழ்ந்துள்ளது புலனாகிறது. மேலும் ‘இது பருவமே இல்லை’ ; ‘இது பருவத் தொடக்கம்தான்’ எனத் தோழி கூற்றுகள் அமைந்திருப்பது காலத்தினை உணர்விற்காக மாற்றி அமைத்துக் கூறும் நிலைப்பாடும் இருந்துள்ளமையைத் தெளிவுபடுத்துகிறது. மழையை வாழ்த்துதல், பழித்தல் என்பதெல்லாம் கதைமாந்தர்களின் மனநிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வர். இருத்தலின் காலத்தைப் பொருத்தே வாழ்த்து, பழிப்பு என்பதெல்லாம் அமைகிறது.

            "நினை மருள்வேணோ வாழியர் மழையே"     (நற்.248)

            "பருவம் செய்த கருவி மாமழை"     (நற்.238)

என்ற அடிகளே இதற்குச் சான்றுகள் ஆகும். காலம் என்பதன் அடியொற்றி இருத்தல் என்பது பாடல்மரபின் கடந்தகால நிகழ்வா அல்லது நிகழ்கால நகர்வா என்ற கேள்வி எழுகிறது.

"யாருமில்லை தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ"     (குறு.25)

என்பதன் மூலம் தன் காத்திருப்பினை வெளிப்படுத்தும் நிகழ்கால நகர்வாக இப்பாடலை அணுகமுடிகிறது. இதன்வழி கருப்பொருளின் ஊடாக முதற்பொருளை அறிந்து உரிப்பொருளைப் பலப்படுத்தும் விதமாக காலம் அமைந்திருக்கிறது. இருத்தல் என்பது கலங்கியும் பின்னர் தேற்றியும் இருத்தல் என்பதற்குச் சான்றாக

“வரினும் வாரார் ஆயினும் ஆண்டவருக்கு

இனிதுகொல் வாழி தோழி”     (அகம்.244)

என்ற பாடல் அமைகிறது.

இருத்தலின் சிந்தனைப்பள்ளிகள்

இருத்தல் என்பதில் பலதரப்பட்ட சிந்தனைப்பள்ளிகள் எழுகின்றன. முதலாவதாக இருத்தல் நம்பிக்கையுடன் பிணைக்கப்படும் விதத்தில் அமைந்துள்ளது.

"படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி

பரந்தலைப் போகிய சிரன்தலைக் கள்ளி"     (நற்.169)

என்ற சான்றுகளின்வழி தலைவன் வருவதைப் பல்லி பகருமா என்ற தலைவியின் இருத்தல்கூறு நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாகப் பெண் என்ற ஒற்றைமையமான இருத்தல் கட்டமைப்பு தலைவி என்ற பாத்திரத்திற்கு மட்டுமின்றி செவிலி, நற்றாய் என்ற பெண்ணியப் பாத்திரப் படைப்பிற்கே உரித்தானதாக இருக்கிறது. தலைவனுடைய இருத்தல் என்பது பாடலில் பேசப்பட்டாலும் தமையனோ தந்தையோ இருத்தல் கூற்றிற்கு அப்பாற்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். இவர்களுக்குக் கூற்றும் கிடையாது. ஒரு மரபினைக் கட்டமைப்பிற்கு உட்படுத்தும்போது அங்குக் குடும்பம் என்ற சமூக நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஐங்குறுநூற்றின் மறுதரவுப்பத்தில் அமைந்த பாலைப்பாடல் தக்கச் சான்றாகும்.

“மறுவில் தூவிச் சிறுகருங்காக்கை…

அஞ்சில் ஓதியை வரக்கரைந்தீமே”     (ஐங்.391)

என்பது நற்றாயின் கூற்று. தலைவி உடன்போக்கை மேற்கொண்ட பின்னர் அவளின் வருகைக்குக் காத்திருக்கும் நற்றாய் தன் காத்திருப்பினைக் ‘காக்கை கரைதல்’ என்ற நம்பிக்கை மரபோடு பிணைத்திருப்பது ‘இருத்தலும் நம்பிக்கையும்’ மற்றும் ‘நிறுவன அமைப்பிற்குக் கீழ் அமைந்த மரபாக்கம்’ என்ற இரு சிந்தனைப்பள்ளிக்கும் சான்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

இயற்கை, செயற்கை - செயல்பாடுகளில் இருத்தல்

இருத்தல் என்பது எவ்வாறு இயற்கையின் அடிப்படையில் காலத்தின் பற்றுக்கோட்டில் செயல்படுகிறதோ அவ்வாறே செயற்கைச் செயல்பாடான கற்பு என்ற பற்றுக்கோட்டில் இருத்தல் இயைந்திருக்கிறது. முன்னர் கூறிய கூற்றின்படி வெறும் உணர்வு சார்ந்த நிலையில் மட்டும் இருத்தல் என்பது பெண் என்ற பால்பாகுபாட்டிற்கு மட்டுமே உரித்தானதாக ஆக்கவில்லை. இஃது உடைமை, குடும்பம், நம்பிக்கை (சமயம்) என்ற சமூக நிறுவனத்தின் ஊடேயும் இருத்தல் கட்டமைப்பு ஒற்றைப் பால்பாகுபாடு நுணுக்கத்தை அடைந்திட்டது என்ற சிந்தனை எழுகிறது. கற்பு, முல்லை சான்ற கற்பு, மெல்லியல் என்றெல்லாம் முல்லைத்திணைசார் தந்தைவழிக் குடும்பக் கட்டமைப்பிற்கு மையமாக இருக்கும் கற்புக் கோட்பாடு பேசப்படுகிறது.

“கற்பெனப்படுவது கரணமொடு புணர”     (தொல்.1088)

“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்”     (தொல்.1098)

என்பனவற்றில் உள்ள கற்பானது ‘நெறி’ என்ற பொருள்தாங்கி வந்துள்ளதாகத் தோன்றுகிறது. ‘வேதம், போர் என அனைத்து ஒழுகலாறுகளுமே கற்பு (கல்வி) என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளமையை அறியமுடிகிறது’ (வாணி அறிவாளன், முல்லை மண் மக்கள் இலக்கியம், ப. 112). எனவே கற்பு என்பது இல்லறம் ஆற்றும் மகளிர்க்கே உரிய சொல்லாக மாறியது சங்ககாலத்தின் பிற்பகுதியில்தான் என்பதைச் சங்க இலக்கியப் பாக்கள் உணர்த்துகின்றன. ‘கற்பின்’ என்பதில் உள்ள ‘இன்’ என்ற ஐந்தாம் வேற்றுமையுருபின் உருபுப் பயன்பாடு மிக முக்கியமானது ஆகும். ‘இன்’ என்பது முதுமை, இளமை, சிறத்தல் என்ற பொருளில் வருவதாகும். ‘கற்பின் மெல்லியல்’ என்று கூறுவது நெறியில் மெல்லியல்புகளை உடைய குறுமகள் என்ற பொருள்தாங்கியும் வருவதைக் கவனிக்க வேண்டும்.

“…பொய்யா யாணர் அல்லில் ஆயினும்…

மெல்லியல் குறுமகள்”     (நற்.142)

என்ற பாடலில் தலைவி நெறியில், கல்வியில், பொருளாதாரத்தில் மெலிந்த இயல்பினள் என்ற கருத்து மேலோங்குவது கவனிக்கத்தக்கது. தொல்காப்பியரின் பெண்ணியல்புக்குரிய இலக்கணம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. மேலும் கற்பு என்பதை ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்ற உடலியற்சார்புடைத்தாய் நோக்கும்வண்ணம் சில புரிதல் ஏற்படுகிறது. அறம், நெறி, கல்வி என்ற பொருள்தாங்கி வந்த கற்பு மறுமுனையில் பெண்ணுக்கு மட்டுமே உரித்தான உடலியற்சார்புடைத்தாய் மாறியிருப்பதற்குக் காரணம் நிலம்சார் தொழிலடிப்படையிலான ஆண்வர்க்கத்தின் ஆதிக்கமே ஆகும். குறிப்பிட்ட பாலினத்திற்கு அடிமைத்தளத்தினை அளித்து பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் அதிகாரத்தினைப் பரிமாற்றம் செய்ததன் விளைவே கற்பு உடலியற்சார்புடைத்தாய் ஆனப்பெற்றதற்குரியக்காரணங்களுள் ஒன்றாகும். இதற்கு,

      "இறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினதுவே"     (நற்.142)

என்ற படைப்பாக்க நிகழ்வு சான்று பகர்கிறது. மேலும் கற்பின் குறியீடாக முல்லை மலரை வைத்திருப்பது சிந்தனைக்குரிய ஒன்று. மலரின் மெல்லியல்பு உடல்சார் – மெல்லியல்பு; ஒருமுறை பூத்தல் - ஒருதரப்பட்ட உரிமை; வெண்மை – தூய்மை; வாசனைநுகர்வு– இன்பநுகர்வு. இவ்வாறான ஒப்புமையாவும் கற்பு என்பதைச் சமூகத்தின் ஊடாகப் படைப்பாக்கத்தில் வலுப்பெறச் செய்த நுண்ணரசியலாகவே இருக்கிறது.

பெண் – உடைமையாக்கம்

பெண் என்பவள் செழுமையின் சின்னமாகப் பார்க்கப்பட்டதன் புரிதலுக்குள் அவள் வாட்டத்திற்கும் உகந்தவள் என்ற களனமைப்பு உள்ளதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது. ‘முதன்முதலில் பூப்பெய்தியதில் இருந்து மாதவிடாய் நிற்கும் காலம்வரை பெண் செழிப்பின் சின்னம். அதற்கு முன்னும் பின்னும் அவள் கருவுயிர்த்து இனச்செழிப்பிற்குக் காரணமாவதில்லை’ (வானமாமலை, நா., தமிழக வரலாறும் பண்பாடும், ப. 80) என்பதில் இருந்து சமூகத்தில் பெண் என்ற பாலினம் செழிப்பின் குறியீடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இருத்தல் என்பதன் ஒற்றை நுணுக்கத்தைச் சமூகதளத்தில் நின்று ஆராய்வதே சாலப்பொருத்தமாகும். நிலவுடைமை வர்க்கப் பிரிவினைக்குத் தொழில் பாகுபாடு என்பது முதற்காரணமாகும். ‘இனக்குழுச் சமுதாயத்தின் தொடக்கக் காலத்தில் வேலைப் பிரிவினை என்பது பாலினம் பொருத்தே இருந்தது’ (சுப்பிரமணியன், கா., சங்ககாலச் சமுதாயம், ப. 19). நிலத்தினைப் பயிர்செய்தல், வேளாண்புரிதல் முதலியன பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டு நில எல்லைகளை விரிவுபடுத்துதல், நில எல்லைகளைக் காத்தல் முதலியவை ஆண் ஏற்றுக்கொண்டதன் விளைவே அவனது உடைமைப்பூணலில் பெண்ணும் ஒன்றாக மாற்றப்பட்டதற்கு அடித்தளமாகும். ‘உடைமைகள் தோன்றி ஆண்கள் ஆள்வினைகளுக்கு உரியவராக நிலைத்துவிட்டப் பின்னர் அந்த ஆள்வினைகள் காரணமாக வீரர், மன்னர், வேந்தர், உடைப்பெருஞ்செல்வர், பெரியோர், சான்றோர் என்று மாறிய ஆண்கள் இயற்கையான பாலியல் வேட்கையை அதன் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதன் காரணமாகவே பெண்ணும் தனது பாலியல் வேட்கையை அடக்கி, அடங்கிய பாலியல் பாத்திரமாகவே வாழும் நிர்ப்பந்தத்தை அடைந்தாள்’ (ராஜ் கவுதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ப. 14). பெண்வர்க்கமானது தன்னுடைய உடலியல் நெறி சார்பினை ஆணின் மையத்தில் நின்றே வெளிப்படுத்தியது. பெண்ணின் உடலுணர்வு ஆணின் இயக்குதலுக்கு உள்ளானதாக இருந்திருக்கிறது.

            “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்”     (தொல்.1091)

என்ற சங்கச் சமூகக் கட்டமைப்பிற்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியமே இதுபோன்ற உடலியல் அறக்கவலைக்கும் முடிவினை ஏற்படுத்தியுள்ளது. கற்பு என்பது வரையறை, கட்டளை, ஆணை என்ற ஏதோ ஒரு பொருளமைதியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. கல்வியைக் குறிக்க கற்பு என்ற சொல் பயன்பட்டது யாதெனில் ‘கல்வி பிறரால் தரப்படுவது’; ‘பிறருக்கு வழங்கப்படுவது’ என்ற விளைவைக் கொண்டதாகும். அதனை ஒப்பு நோக்குங்கால் பெண்ணின் கற்பு என்பது ‘பிறரால் உருவாக்கிக் கட்டப்பட்டது’; ‘பிறருக்கு உரிமையுடையது’ என்ற பொருள்தளம்கொண்டு இவ்விரண்டையும் நோக்க வேண்டும்.

முடிவுரை

முல்லைச் சமூகத்தில் ஒழுக்கநெறி கற்புடன் பொருத்திக்கூறும் வழக்கு உடைமை உருவாக்கத்திற்கு வழி சேர்க்கிறது. ஏனைய நிலத்தின்கண்ணும் ஆண் பிரிந்து செல்கிறான். எனில் அந்நிலப் பெண்களுக்குக் கற்புநெறி கூறப்படுவதைக் காட்டிலும் முல்லைப் பெண்களுக்கு வலியுறுத்தப்படுவது முல்லைநிலம் போர்மரபுச் சமூகமாக இருந்ததால்தான் எனக் கருதமுடிகிறது. மற்றைய சமூகத்தில் தொழிற்சார் பிரிவில் ஆண் மீண்டுவரும் தன்மை மிகுதி. மேலும் வேற்றுப்புலம்சார் ஆண்கள் அச்சமூகத்தில் நுழைவதற்கு வாயில்கள் அருகியே காணப்படுகின்றன. முல்லைப் போர்ச்சூழல் அப்படி அல்ல; நிலவியல் சார்ந்த அமைப்பில் முல்லை என்பது நாட்டின் தலைப்பகுதியாக முனைப்பகுதியாக இருந்துள்ளது. இது பகைவரால் எளிதில் பற்றக்கூடிய நிலச் சூழலமைவு ஆகும். ஒருவேளை நாடு தோற்றால் அந்நாட்டில் உள்ள பெண்கள் பகைநாட்டவரால் அபகரிக்கப்படுவர். எந்த ஒன்றின்மீது பிறரது தாக்கம் வரும் சூழல் முன்பே அறிய முடிகிறதோ அங்கே உடைமை என்ற உரிமை தோன்றுகிறது. போரின் ஏதுவாகச் சொத்து வளம் அதிகரித்ததால் தன்னுடைமை தோன்றிபோரினை உருவாக்கி வழிநடத்தி எதிர்த்து தங்களுக்குள்ளாகவே எழுச்சி - வீழ்ச்சி அடையும் ஆணினத்தால் தன் தேவையைக் கவனித்துக்கொள்ளும் பெண்ணிற்கு உடைமைமரபு கருதி கற்பு உருவாக்கப்பட்டது. இருத்தல் என்ற கட்டமைப்பிற்குக் கற்பு என்னும் இருத்தல் பற்றுக்கோடு வலு சேர்ப்பதிலிருந்து பால்பாகுபாடு சார்ந்த இருத்தல் கட்டமைப்பு தொழிற்சார் நிலம் மற்றும் காலச் சூழலின் அடியொற்றியது என்பது புலனாகிறது. எந்த ஒன்றும் தோன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது நிலமும் பொழுதும் ஆகும். இதுவே முதற்பொருள் எனத் தமிழ் இலக்கணமரபு கூறுகிறது. நிலத்தையும் பொழுதையும் தொல்காப்பியர் முதற்பொருளாக வைத்துக் கட்டமைத்ததற்குள் இத்தகைய சமூக மரபாக்கம் பொதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

துணைநின்ற நூல்கள்      

  1. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்று புரிதலை நோக்கி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி. லிட்., சென்னை 600 098, 2010.
  2. சாமிநாதையர், டாக்டர், . வே., (உ.ஆ.), ஐங்குறுநூறு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை – 600 090,
  3. சாமிநாதையர், டாக்டர், . வே., (உ..), குறுந்தொகை, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை 600 090, 1937.
  4. சுப்பிரமணியன், கா., சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை – 600 098, 2019.
  5. சுப்பிரமணியன், ச.வே., (உ.ஆ.), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை – 08, 1998.
  6. செயபால், இரா., (உ.ஆ.), அகநானூறு (மூலமும் உரையும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை – 600 098, 2004.
  7. நாராயணசாமி ஐயர், பின்னத்தூர், ., (உ.ஆ.), நற்றிணை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18, 1952.
  8. ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் (கட்டுரை - 1), தமிழினி வெளியீடு, சென்னை - 14, 2006.
  9. வாணி அறிவாளன், முல்லை மண்மக்கள் இலக்கியம், அருண் அகில் பதிப்பகம், சென்னை – 600 029, 2018.
  10. வானமாமலை நா., தமிழக வரலாறும் பண்பாடும், (கட்டுரை - 1, 9), ஜனசக்தி அச்சகம், சென்னை - 600108, 1990.