ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நெய்தல் திணையில்  கழி மற்றும் கடல்வாழ் உயிர்கள்

முனைவர் கதி.முருகேசன் (கதிர் முருகு),  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி - 622403 | Dr.KT.Murugesan (Kathirmurugu), Assistant professor, Department of Tamil, Ganesar College of Arts and Science, Melaisivapuri - 62403 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

       நெய்தல் நிலம் மிகுதியான உயிர் வளத்தைத் தன்னகத்தே கொண்டதாகும். கடல் சார்ந்து வாழக்கூடிய பரதவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாகவும் கடல் அமைகிறது. கடலில் வாழக்கூடிய மீன்கள் முதலான பல்வேறு உயிரினங்கள் தமக்கெனத் தனிப்பட்ட பண்பு நலன்களைக் கொண்டும் உடல் அமைப்பைக் கொண்டும் விளங்குகின்றன. சங்கு, முத்துச் சிப்பி, நண்டு, இறால், சுறா முதலான கடல் மற்றும் உப்பங்கழி உயிர்கள் குறித்துச் சங்கப் புலவர்கள் பாடல்களின் வழியாக எடுத்துக் கூறியுள்ள சிந்தனைகள் நீர் வாழ் உயிர்களின் பண்புகள், வாழ்வியல், மக்கள் வாழ்வியலில் ஏற்படுத்தும் தாக்கம் முதலியனவற்றைப் பதிவு செய்துள்ளன. சங்ககாலப் புலவர்கள் கடல்வாழ் உயிர்களின் உடலமைப்பு மற்றும் பண்புகளை எடுத்துக் கூறியுள்ள முறை உயிரியல் சூழல் சார்ந்த அறிவை வழங்குவதாக அமைகிறது.

குறிப்புச் சொற்கள்

  கடல் வாழ் உயிர்கள்,  கடல் சூழல், சுற்றுச் சூழல், கடல்சார் வாழ்வியல், , சுறா, அலவன், இறால், முத்துச் சிப்பி, சங்கு.

ABSTRACT

         Neidhal  land is the sea and maritime region.  The sea is rich in biological resources.  The sea is the source of livelihood for the Bharatavas who depend on the sea and is the basis for various occupations.  Different organisms such as fish that can live in the sea have their own unique characteristics and body structure.  Conch, pearl oyster, crab, shrimp, shark and other sea and backwater life through songs have been expressed by the poets of the Sangam and recorded the characteristics of aquatic life, impact on people's life, etc.  The way in which the Sangam poets described the anatomy and characteristics of marine life provides knowledge about the biological environment.

KEY WORDS

           Marine Life, Marine Environment, Environment, Marine Biology, , Shark, Alavan, Prawn, Pearl Oyster, Conch.

முன்னுரை

சங்க இலக்கியம் பண்டைத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்து கூறும் சிறப்புடையது. சங்கப் புலவர்கள் நிலங்களைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்தாகப் பகுத்துக்கொண்டு பாடல்களைப் படைத்தனர். ஐவகை நிலங்களில் நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியைக் கொண்டதாகும். இது கடல் உப்பங்கழி என்னும் பகுப்பை உடையது. இரண்டிலும் பல்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. கடல் மக்களுக்கும் கடலில் வாழும் பல்வேறு உயிர்களுக்கும் வாழ்வாதாரமாக அமைகிறது. கடலில் பாம்பு பல்வகை மீன்கள் ஆமை முதலை சிப்பிகள் சங்குகள் நண்டு சுறா இறால் அயிரை முதலான உயிரினங்கள் வாழ்கின்றன. நெய்தல் திணையில் பாடல்களைப் படைத்த புலவர்கள் கடல் வாழ் உயிரினங்கள்  குறித்துப் பல்வேறு நுட்பமான செய்திகளைத் தாங்கள் படைத்த பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அப் பதிவுகள் கடல் வாழ் உயிர்கள் குறித்த பல்வேறு நுட்பமான செய்திகளை அறிந்து கொள்வதற்குத் துணை செய்கின்றன. அவ்வகையில்  நெய்தல் திணையில் புலவர்கள் எடுத்துக்காட்டியுள்ள கடல் மற்றும் கழி வாழ் உயிர்களை இக் கட்டுரை  ஆராய்கிறது.

மீன்

     கடலில் மிகுதியாகக் காணப்படும் உயிரினம்.  மீன் (fish) என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கினம். இவற்றை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள பகுதிகள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்குத் தனியாகக் கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன. பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவை தங்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். (www.wikipeadia.com) என்று மீன் குறித்து விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது.

சுறா

    நெய்தல் திணைப் பாடல்களில் மிகுதியாகப் பேசப்பட்ட உயிர்களில் ஒன்று சுறா. கடல் வாழ் உயிர்களில் பெரியதும் ஆபத்தானது. சுறா மீன்களின் குணம் உடலமைப்புக் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உப்பு நீரில் வாழும் மீன் வகையான் சுறா கடல் உப்பங்கழி ஆகியவற்றை வாழ்விடங்களாகக் கொண்டது. சுறா கடலில் வாழும் மீன். இதில் பல சாதிகளும் இனங்களும் உண்டு.....சுறாக்கள்  சமுத்திரத்தில் சஞ்சரிப்பவை. சில இனங்கள் ஆற்றின் கழிமுகங்களில் புகுந்து நன்னீருக்குள் சிறிது தூரம் செல்வதுண்டு. பெரும்பாலான வகைகள் வேறு மீன்களைப் பிடித்து உண்ணும். சில கடலில் மிதக்கும் நுண்ணுயிர்களை வடிகட்டி விழுங்கும். சில செத்துக் கிடப்பவற்றை இரையாகக் கொள்ளும். (கலைக்களஞ்சியம், தொகுதி - 5, ப.113) சங்கப் பாடல்களில் கோட்சுறா (நற்.207:8) கருஞ்சுறா (நற்.392:1) வயச்சுறா (குறுந்.269:3) கோட்டுமீன் (மேலது. 304:4) முதலான பெயர்கள் சுறா  குறித்து வழங்குகின்றன. சுறாக்கள் கடலில் எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படும் (குறுந்.318:1) கடலில் மட்டுமல்லாமல் கழியிலும் காணப்படுவதை நற்றிணை குறிப்பிடுகிறது. (27: 7-9) இதனைப் பெருமீன் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. (நற்.219:5-6) சுறாவின் வாய் வாள் போன்று காணப்படும் (மேலது. 111:6-7) பரதவர்கள் கடலுக்குச் சென்று சுறா மீனை வேட்டையாடுவர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகு வளைவானது என்பதை, 'கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் (நற். 199:4-6) என்னும் அடி விளக்குகிறது. சுறாவைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வலை சிவந்த நிறத்தையும் வலிமையான முடிகளையும் கொண்டதாகும் (நற்.308: 8-12)  சுறாக்களை எறியுளி வீசி வேட்டையாடுவர் (குறுந். 304:3-4) கடலில் வீசிய வலையைச் சுறாக்கள் கிழித்துவிடுவதுண்டு.  வலையைக் கிழித்த காரணத்தால்   பயன்படாமல் தாழை வேலியில் கிடந்ததை அகநானூறு குறிப்பிடுகிறது. (அகம்.340:21 - 23) கிழிந்த வலையை இரவுப் பொழுதில் பரதவர்கள் தம் சுற்றமுடன் கூடியிருந்து சீர்படுத்தியதை நற்றிணை குறிப்பிடுகிறது (207:6-9)  சுறாக்கள் தாக்கும் குணம் உடையவை. அதனால் காயம்பட்ட பரதவர்கள் புண் ஆறும் வரை மீன் பிடிக்கச் செல்வதில்லை (குறுந்.269: 3-4) தன் தந்தை சுறாவால் காயம்பட்டு அப்புண் ஆறி மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதை குறுந்தொகைத் தலைவி குறிப்பிடுகிறாள். (269: 3-4) வலையைக் கிழித்துச் சேதப்படுத்திய சுறாவைப் பரதவர்கள் அரிதின் முயன்று வேட்டையாடியதை நற்றிணை (214:9-12) குறிப்பிடுகிறது.

இறவு - இறால்

இறால் மீன் கடல், உப்பங்கழி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான நீர் நிலைகளில் வாழக் கடியது. சங்க இலக்கியங்கள் இறவு, இறா என்னும் பெயர்களால் இறால் மீனைக் குறிப்பிடுகின்றன. ஆழமற்ற கடல் பகுதியில் இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை. இறால் குறித்துக் கலைக் களஞ்சியம், இறாவின் உடல் சற்று நீண்டு இருபுறங்களிலும் ஒடுங்கியிருக்கும். அதன் உடல் முழுவதும் வளையங்களால் ஆனது. கைட்டின் என்னும் கொழுப்புப் பொருளாலான தோல் மூடியிருக்கும் மேலோட்டின் முன் முனையின் நடுவே வாளின் பற்கள் போன்ற கூரிய முட்களையுடைய வலுவான கொம்பு ஒன்று முன்னுக்கு நீட்டிக்கொண்டிருக்கும். இறாலின் ஓட்டை நீக்கினால் வயிறு முழுவதும் பருத்த தசைக் கண்டங்கள் இருக்கும். இதன் கறி முள்ளோ எலும்போ நாரோ ஒன்றுமில்லாதது (கலைக்களஞ்சியம், தொகுதி - 2, ப.148) என்று குறிப்பிடுகிறது. இறால் சிவந்த நிறத்தையும் (ஐங். 188: 1; 196:3-4; அகம். 270 : 5-7) வளைந்த முதுகையும் (அகம்.220: 6 - 8) முள்ளைப் போன்ற கால்களையும் (குறுந்.104:1-2) கொண்டது. இதன் தலை இலுப்பைப் பூவைப் போன்று மென்மை உடையது (நற். 111: 1-8; 358: 8 - 9) முதுகு சொரசொரப்பாகக் காணப்படுவதால் தாழையின் அடி மரத்திற்கு உவமை கூறப்படுகிறது (நற்.19: 1-2) பரதவர்கள் இறால் மீனைப் பிடித்துக் கள் இருந்த பாத்திரத்தில் வைப்பர், கள் சுவை கண்ட இறால்கள் மயக்கத்தில் துள்ளிக் குதித்ததாக அகநானூறு (96:1-2) குறிப்பிடுகிறது. கூட்டமாகக் காணப்படும் இறால் மீன்கள் சிறிய மரக்கலத்தைத் தாக்கிச் சிதைப்பதை அகநானூறு (152:5-8)  குறிப்பிடுகிறது. கடற்கரையில் வாழும் பறவைகளான நாரை கொக்கு முதலியவை இறால் மீனைத் தின்று கடற்கரை மணல் வெளியில் உள்ள மரங்களில் ஓய்வு கொண்டிருந்ததைப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது (193 - 205) பரதவர்கள் இறால் மீனைச் சுட்டுத் திண்பர் (பட்டினப்.60 - 63) கொக்குகள் இறால் மீன் குஞ்சுகளையும் முட்டைகளையும் கூட்டில் உள்ள பார்ப்புகளுக்கு உணவாகக் கொடுத்ததைப் புறநானூறு (342:7-10) குறிப்பிடுகிறது. கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்படும் இறால் மீன்கள் கோவேறுக் கழுதையின் கால்பட்டு அழிந்ததையும் (நற்.278: 7-8) நண்டின் தாக்குதலால் துன்புற்றுப் புரள்வதையும் (ஐங். 179: 2) இலக்கியச் சான்றுகளால் அறிய முடிகிறது. 

அலவன் - நண்டு

நண்டு பண்டை இலக்கியத்தில் ஞெண்டு, அலவன்  என்னும் பெயர்களால் வழங்கப்பட்டுள்ளது. நண்டு (Crab) நீர் நிலையில் வாழும் ஓர் உயிரினமாகும். நன்னீர், உவர் நீர் இரண்டிலும் வாழும் தன்மை உடையது. வாழும் நிலைக்கேற்பப் பல்வேறு பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன (www.wikipeadia.com) சங்க இலக்கியங்களில் நெய்தல் மற்றும் மருதத்திணைப் பாடல்களில் நண்டுகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. நெய்தல் நிலத்தில் வாழும் நண்டுகள் கடற்கரை, கடல், உப்பங்கழி, கழிக்கரை ஆகியவற்றைத் தன் வாழிடமாகக் கொண்டவை. மருத நிலத்தில் காணப்படும் நண்டுகள் நெய்தல் நிலத்தை  ஒப்பிடுகையில் அளவில் சிறியனவாகவும் நெல்வயல் மற்றும் ஈரப்பாங்கான இடங்களில் வளை அமைத்துத் தங்குவனவாகவும் அறியப்படுகின்றன. நண்டின்  உடலில் பக்கவாட்டுப் பகுதியில் கால்கள் காணப்படுகின்றன இவை வலிமை உடையவை. கால்களின் நுனிப்பகுதி பிளவு பட்டுக் காணப்படும் காரணத்தால், கவைத்தாள் அலவன் (அகம்.350: 3-4) மாக்கவை மருப்பு (சிறுபாண் . 19) என்று அழைக்கப்படுகின்றன.

சங்கப் பாடல்களின் மூலம் நண்டுகளின் நிறங்களை அறியச் சான்றுகள் உள்ளன. பொன் போன்ற வரிகளையும் (குறுந்.303: 6-7) செம்மை நிறமான புள்ளிகளையும் (கலி. 146:23) கொண்டு விளங்கின. நண்டின் கண்கள் வேம்பின் அரும்பு (ஐங்.30: 1) நொச்சியின் அரும்பு (நற்.267:1-2) யாழ்ப் பத்தரின் ஆணி (பொருந.9 - 10) என்பனவற்றுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன. நண்டுகள் விரைந்து ஓடும் இயல்புடையன. கடற்கரை ஈர மணல்வெளியில்  ஓடியதால் கால்கள் கீறிக் கோடுகள் காணப்பட்டன என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது. (குறுந்.351: 1-4) நெய்தல் நில நண்டுகள் தாழை (அகம். 380 : 4 - 81 ஞாழல் (குறுந்.328:1-3) முதலான மரங்களின் வேர்ப் பகுதியில் வளை அமைத்துத் தங்கியதை அறியமுடிகிறது. வயல் நண்டுகள் வயலில் ஆடித் திரிவதை மலைபடுகடாம் குறிப்பிடுகிறது (460) வளைகளைத் தோண்டி நண்டு பிடிக்கும் வழக்கை அகநானூறு (20:4) குறிப்பிடுகிறது. நண்டுகள் கடற்கரையில் விளையாடும் மகளிர்களுக்கும் (401: 3-4) கொக்கிற்கும் அச்சம் கொண்டு வளையில் ஒளிந்துகொண்டதைக் (117:1-4) குறுந்தொகை குறிப்பிடுகிறது.

சங்கு

சங்கு, கடல்வாழ் உயிரிகளில்  ஒன்று. சங்கு (conch) என்பது நடுத்தரம் முதல் பெரிய அளவு வரையிலான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாகப் பெரிய சுருள் அமைப்புள்ள தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுயிரிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை. வேறு பல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாகச் சங்கு என அழைக்கப்படும் இனங்களான தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப்படும் சங்கின் ஓடு (வெண்சங்கு) உள்பட டேபினெலே இனச் சங்குகள் காணப்படுகின்றன (www.wikipeadia. com) சங்கு இந்தியக் கடலிலே சாதாரணமாகக் காணப்படுவது. கடலிலே குளித்து எடுக்கக்கூடிய  பெரிய படுகைப் பகுதிகளிலே ஏறக்குறைய ஏழாள் ஆழம் வரையிலும் கிழக்குக்கரையிலே திருநெல்வேலி இராமநாதபுரம் தென்னாற்காடு தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மேற்குக்கரையிலே திருவாங்கூர் ஆகிய இடங்களிலும் அகப்படுகிறது என்று கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. (தொகுதி - 4, பக்.369 - 371) இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி, இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி, வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சஞ்சலம் , சஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்யம். (தி.முத்துக் கண்ணப்பன், சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம், ப.133) சங்குகளில் வலம்புரிச் சங்கு சிறந்தது என்று அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது (ப.548) கடலில் மூழ்கிச்  சங்கெடுக்கும் வழக்கத்தை திணைமாலை நூற்றைம்பது (33:1-2) குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களில் சங்கு பணிலம் என்னும் பெயரால் வழங்கப்பட்டிருக்கிறது (அகம்.350: 12; மதுரை. 380 : 621; குறுந்.15:1) சங்குகள் ஒலி எழுப்பும் இயல்புடையவை. இதனை , ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப , இரு தலைப் பணிலம் ஆர்ப்ப என்னும் சான்றுகள் விளக்கும். கடற்கரையில் சங்குகள் மேயும் (அகம். 20: 7; 150: 7) வெண்மை நிறமுடையவை (ஐங். 106:1-3) சங்குகளை அறுத்து வளையல் செய்யும் வழக்கம் நிலவியது (மதுரை, 315, 316)

 

முத்துச் சிப்பி

     கடலில் வாழும் உயிரினம். முத்துச் சிப்பிகள் மிகுதியாகக் காணப்படும் காரணத்தால் பாண்டியர் துறைமுகமாகிய கொற்கை முத்துக் குளித்தலில் சிறந்து விளங்கியது. சாணக்கியர் பாண்டிய நாட்டு முத்தைப் பாண்டிய கவாடம் என்று குறிப்பிடுகிறார். பாண்டி நாட்டு முத்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதிப் பொருளாக விளங்கியது. கடலில் உள்ள முத்துச்சிப்பி என்னும் ஒருவித ஆளியின் (Coyster) சிப்பியினுள் ஒரு மணலோ வேறு உறுத்தும் பொருளோ புகுந்தால் அப்போது அப் பிராணி தன் புறத்தோல் அடுக்காகிய எப்பிதீலியம் என்னும் படலத்தால் அதைப் பொதிகின்றது. அந்தப் பையினுள் பிராணி சுரக்கும் நீர் மெல்லிய அடுக்காக வந்து சேர்ந்த பொருளைப் பொதிகின்றது. முற்றிலும் நன்கு பொதியப்பட்ட பொருள் தான் முத்து. (கலைக்களஞ்சியம், தொகுதி - 8, ப.405) முத்துச் சிப்பியின் உடலமைப்புக் குறித்து அபிதான சிந்தாமணி, இப் பூச்சிகளுக்கு மேலும் கீழுமாக வட்டமான கற்கள்போல் இரண்டு முடிகள் இருக்கின்றன. இந்த முடிகளில் நடுவில் சதையுள்ள பூச்சி இருக்கிறது. இது இரைக்காகக் கடலின் கீழ் ஒடுகையில்  நண்டும் மீன்களும் கலக்கிய சேறும் கல்லும் இதன்  வயிற்றினுட் புகுந்து நோவைத் தரும். கையில் வாலாமையால் கற்களை வெளியில் விடாது. கற்கள் உட்சென்றதால் உண்டான நோவினால் ஒருவிதப் பசையை அது கல்லின் மேல் பூசுகிறது. அதுவே முத்தாகிறது (அபிதான சிந்தாமணி, ப.1334) பாண்டியர்களின் கடற்கரை நகரமான கொற்கை முத்துக்குப் புகழ் பெற்றது. இதனை, புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்றுறை/ அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து (அகம் .240:1-5) முத்துப் பரப்பின் கொற்கை முன்னுறை (நற்.23:6) என்னும் இலக்கியச் சான்றுகள் விளக்கும். கொற்கை மட்டுமல்லாமல் கொடுமணல், பந்தர் என்னும் ஊர்களிலும் கடலில் விளைந்த முத்துகள் மிகுதியாகக் கிடைத்ததைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது (67: 1, 2, 4 ; 74:56) கடலுக்குச் சென்ற பரதவர்கள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு வந்து தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர் ( அகம். 280: 11-14) கடற்கரை முத்து வளம் கொண்டு விளங்கியதை ஐங்குறுநூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி முதலான இலக்கியங்கள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளன. சங்க இலக்கியம் அக புற வாழ்வைப் பாடுவதோடு மட்டுமல்லாமல் இலக்கியம் படைக்கப்பட்ட நிலப்பகுதியை அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரியல் சூழல்களைத் தன்னகத்தே பதிவு செய்துள்ளது. அவ்வகையில் நெய்தல் திணைப் பாடல்கள் கடல் மற்றும் உப்பங்கழி சார்ந்த உயிரியலை விரிவான களத்தில் பதிவு செய்துள்ளன. புலவர்கள் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள உயிர்கள் குறித்த தரவுகள் கடல் வாழ் உயிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் கடல் வாழ் உயிர்களின் தன்மையை அறிந்து கொள்ள உதவுபவர்களுக்கும் அடிப்படையான அறிவை வழங்குகின்றன.

முடிவுரை

       சங்க இலக்கியங்கள் பண்டைத்  தமிழகத்தின் சூழலியலை விரிவான நிலையில் பதிவு செய்துள்ளன. குறிப்பாக நெய்தல் நிலச் சூழல் பிற நிலங்களிலிருந்து வேறுபட்டதாகும். கடலை நம்பிக் கடல் படு பொருட்களை நம்பி வாழும் மக்கள் கடலில் மீன் பிடித்து அவற்றைப் பண்டமாற்று முறையில் விற்பனை செய்து தங்களுக்கான வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். கடற்கரைச் சூழல்,  கடல், உப்பங்கழி, கடற்கரைச் சோலை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டது. பரதவர்கள் கடற்கரை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். சங்கப் புலவர்கள் படைத்த நெய்தல் திணைப் பாடல்கள் கடற்கரைச் சூழலையும் கடல் சார்ந்து வாழும் உப்பங்கழி சார்ந்து வாழும் உயிர்களையும் எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக, உப்பங்கழி மற்றும் கடல் சார்ந்து வாழும் உயிர்கள் குறித்துச் சங்கப் புலவர்கள் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ள குறிப்புகள் கடல் மற்றும் கழி வாழ் உயிர்களின் பண்பு நலன்களையும் அவை மனித வாழ்வோடு பிணைந்த தன்மையினையும் கடல்படு பொருள்களின் பயன்பாடுகளையும் எடுத்துக்காட்டுவனவாக விளங்குகின்றன.

துணை நூல்கள்

அகநானூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி. எச், 2004

ஐங்குறுநூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

கதிர் முருகு, பத்துப்பாட்டு மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம், 2009

கலித்தொகை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

கலைக்களஞ்சியம் , தொகுதி - 5, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை: கழக வெளியீடு, 1958

மேலது. தொகுதி - 8, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை: கழக வெளியீடு, 1961

மேலது, தொகுதி - 1, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை: கழக வெளியீடு, 1958

மேலது, தொகுதி - 4,  தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை: கழக வெளியீடு, 1956

குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

சாமி, பி.எல், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் , சென்னை: கழக வெளியீடு, 1970

சிங்காரவேலு முதலியார் ஆ , அபிதான சிந்தாமணி, சென்னை : 1934

திணைமாலை நூற்றைம்பது, சென்னை: சாரதா பதிப்பகம், 2007

நற்றிணை மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

பதிற்றுப்பத்து மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

பரிபாடல் மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

புறநானூறு மூலமும் உரையும், சென்னை : என். சி. பி.எச், 2004

முத்துக் கண்ணப்பன், தி, சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம், சென்னை: அதிபத்தர் பதிப்பகம், 1978

இணையம்

www.wikipeadia.com - இறால்

www.wikipeadia.com - சங்கு

www.wikipeadia.com - சுறா

www.wikipeadia.com - நண்டு

BIBLIOGRAPHY

Agananooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Aingurunooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Kathirmurugu, Patthu Paattu Moolamum Uraiyum, Chennai: Saradha Publishers, 2009

Kalithogai Moolamum uraiyam, Chennai, NCBH, 2004

Kalaikalanjiyam, Volume - 5, Chennai:   Tamil Valarchi Kazhagam, Kazhaga veliyeedu, 1958

Kalaikalanjiyam, Volume - 8,  Chennai:   Tamil Valarchi Kazhagam , Kazhaga veliyeedu, 1961

Kalaikalanjiyam, Volume - 1,  Chennai:   Tamil Valarchi Kazhagam , Kazhaga veliyeedu, 1958

Kalaikalanjiyam, Volume - 4,  Chennai:   Tamil Valarchi Kazhagam , Kazhaga veliyeedu, 1956

kurundhogai Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Samy, BL, Sanga Ilakiyathil Vilangina vilakkam, Chennai: Kazhaga veliyedu, 1970

Singaravelu Mudhaliyar, Abidhana Sindhamani, Chennai: 1934

Thinai Maalai Nootru Aimbadhu, Chennai: Saradha Publishers: 2007

Nattrinai Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Pathittru Patthu Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Paripaadal Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Purananooru Moolamum uraiyam, Chennai: NCBH, 2004

Muthu Kannappan T , Sanga Ilakiyathil Neidhal Nilam, Chennai: Adhipatthar Padhippagam, 1978

online Source

www.wikipedia.com - Shrimp

www.wikipedia.com - Conch

www.wikipedia.com - Shark

www.wikipedia.com - Crab