ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பரதநாட்டிய வளர்ச்சியில் நட்டுவாங்கமும் நட்டுவனாரும் (Nattuvangam and Nattuvanar in the development of Bharathanatyam)

கலாநிதி (திருமதி) துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ், சிரேஷ்ட விரிவுரையாளர் (நடன நாடகத்துறை), சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை | ​​​​​​​Dr. Thushyanthy Juliyan Jeyapragash, Senior Lecturer, Department of Dance, Drama & Theater, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

பரதநாட்டியத்திற்கு மிக முக்கியமானதொரு அங்கம் நட்டுவாங்கம்.  பரதநாட்டியம் ஆடுபவர்களுக்கு பாடலின் பின்னணியில் பக்கபலமாக பயன்படுத்தப்படும் இத்தாளக்கருவி ஆடலுக்கு உணர்வியல் உயிரோட்டமளிக்கும் தாள வாத்தியமாகவும் தாளலயத்தினூடாக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கும் தாளலய வாத்தியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியினை உரிய முறையில் தட்டுவது என்பது இங்கு பிரதானமாகக் காணப்படுகிறது. நட்டுவாங்கத் தாளத்தினைத் தட்டி நடன மணியை ஆட்டுவிப்பவர் நட்டுவனார் எனப்படுகின்றார். இவரே குருவாகவும் இருப்பார். நட்டுவாங்கத் தாளமின்றி ஒரு நடன நிகழ்வு அரங்கேற்றம் காணாது. எனவே ஒரு பரதநாட்டிய நிகழ்விற்கு நட்டுவாங்கத்தினைப் பயன்படுத்தும் போது அந்நிகழ்வானது எவ்வாறு வலுப்பெறுகின்றது என்றும் நட்டுவாங்கத்தின் முக்கியத்துவம், நட்டுவாங்கத்தினை இயக்குவதில் நட்டுவனாரின் பங்களிப்பு, ஒட்டுமொத்தமாக நடன வளர்ச்சிக்கு நட்டுவனாரின் பங்கு, நட்டுவாங்கத்தின் தற்போதைய நிலை போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதை இவ் ஆய்வுக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திறவுச் சொற்கள் - தாளப்பிரமாணம், லயம், யதி, ஜதி, சொற்கட்டு,அபிநயம், அடவு,   நட்டுவாங்கம்

Research Abstract

Nattuvangam is the most essential aspect of Bharathanatyam. Used as a background accompaniment to dance music, further more this instrument is used as a percussive instrument for dancing and as a rhythmic instrument that organizes and harmonizes through  the rhythmic rhythms. For Bharathanatyam  dancers, this instrument is used as an accompaniment to the song, as a percussive instrument that enlivens the emotions of the dance and as a percussion instrument that organizes, organizes and integrates through the Talalayam. Proper taping of this instrument is seen as important here. A person who beats the nattuvanga tala and swings the dance bell is called a nattuvanar. He will also be the guru. A dance event cannot be staged without a rhythm. Therefore,this research paper aims to find out how the event is strengthened when  Nattuvangam is used for a Bharathanatyam event, the importance of Nattuvangam, the role of Nattuvanar in directing Nattuvangam, the role of Nattuvanar in overall dance development, and the current status of Nattuvangam.

Key Words – Talapramanam, Layam, Jadhi, Sotkattu, Abhinaya, Nattuvangam

முன்னுரை

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!  என்ற தேவாரப் பாடலில் இறைவன் ஓசையாகவும் ஒலியாகவும் வியாபித்துள்ளான் என்று அறியப்படுகிறது.  கடலின் இரைச்சல் கடலோசை!  காற்றின் இரைச்சல் சூறாவளி!  ஆனால் கவின் மிகு கலைகளில் பிறப்பதோ இனிய ஒலி!  நாத ஒலி!  சுநாத ஒலி!  செவிக்கு இசைபட நயம் சேர்ப்பதே ஒலி என்றும், நாபியிலிருந்து இசைக்கும் குரல் ஒலி, விரல் ஒலி, குழல் ஒலி, லய ஒலி, சலங்கை ஒலி இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காலப் பிரமாணத்தில் அடக்கி ஆளும் ஒரு அற்புத ஒலி ஒன்று உண்டென்றால் அதுவே தாள ஒலி!  நாட்டியத்தின் பிரதான ஒலி! “கொட்டு பாதி கூத்து பாதி" என்பதும் “கொட்டின்றி கூத்தில்லை" என்பதும் வழக்கிலுள்ள பழமொழிகள்.  இங்கு “கொட்டு என்பது சப்தகிரியையினால் அமைகின்ற “தாளம்” என்பதும் “கூத்து” என்பது தாளப்பிரமாணத்தையே ஆதாரமாகக் கொண்ட “நாட்டியம்” அல்லது “நடனம்” என்பதும் குறிப்பிடப்படும். அதாவது “கொட்டு-கூத்து" என்பது முறையே தாளத்துடன் வரும் நட்டுவாங்கமும், நிருத்தம், நிருத்தியம் என வரும் நாட்டியமுமாகும். அந்த வகையில் நுன்கலையான பரதக்கலை தமிழ் மக்களின் நாகரீகப் பண்பாட்டின் உயர்வினை, பண்டைய பண்பாட்டுத் தொன்மையினைப் பலதரப்பட்ட கலாச்சார விழுமியங்களுடன் ஒன்றித்து அன்றும் இன்றும் எடுத்தியம்புகின்றது.

பரதநாட்டியத்திற்கு மிக முக்கியமானதொரு அங்கம் நட்டுவாங்கம்.  பரதநாட்டியம் ஆடுபவர்களுக்கு பாடலின் பின்னணியில் பக்கபலமாக பயன்படுத்தப்படும் இத்தாளக்கருவி ஆடலுக்கு உணர்வியல் உயிரோட்டமளிக்கும் தாள வாத்தியமாகவும் தாளலயத்தினூடாக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து  ஒருங்கிணைக்கும் தாளலய வாத்தியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நட்டுவாங்கத் தாளத்தினைத் தட்டி நடன மணியை ஆட்டுவிப்பவர் நட்டுவனார் எனப்படுகின்றார். இவரே குருவாகவும் இருப்பார். நட்டுவாங்கத் தாளமின்றி ஒரு நடன நிகழ்வு அரங்கேற்றம் காணாது. எனவே ஒரு பரதநாட்டிய நிகழ்விற்கு நட்டுவாங்கத்தினைப் பயன்படுத்தும் போது அந்நிகழ்வானது எவ்வாறு வலுப்பெறுகின்றது என்றும் நட்டுவாங்கத்தின் முக்கியத்துவம், நட்டுவாங்கத்தினை இயக்குவதில் நட்டுவனாரின் பங்களிப்பு, ஒட்டுமொத்தமாக நடன வளர்ச்சிக்கு நட்டுவனாரின் பங்கு, நட்டுவாங்கத்தின் தற்போதைய நிலை போன்ற விடயங்களை விளக்கமாக ஆராய்கிறது இவ் ஆய்வுக் கட்டுரை.

நட்டுவாங்கம்

பரதநாட்டியத்தில் நட்டுவாங்கம் என்பது மிக முக்கியமானதொரு தாளக்கருவியாகும்.  இத் தாளக்கருவியானது பரதக்கலையின் சிறப்புமிகு முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது.  நாட்டியம் ஆடும் போது ஆசிரியர் பாடலில் பாவம் பொங்க இசை,மற்றும் தாளம் ஆகிய இவ்விரண்டின் இலக்கணம் அறிந்துபாடலைப் பாடியவாறே தாளத்தின் பின்னங்களைத் தட்டுவதே நட்டுவாங்கமாகும். நட்டுவாங்கமானது அசைவுகளின் பரிமாணத்திற்கேற்பவும் கால்களின் செயற்பாடுகளுக்கேற்பவும் நாதம் வெளியாகி அடவுகளை அழகுபெற வைக்கிறது.  நட்டுவாங்கத் தாள ஒலியானது சலங்கை ஒலியுடன் இணைந்து நடனமாடுபவரின் கால் தட்டுகளுடன் சேர்ந்து காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் தன்மை கொண்டது.  காலப்பிரமாணத்தில் அடக்கியாளும் ஒரு தாளக்கருவி நட்டுவாங்கமேயாகும்.  நாட்டியக் கலைக்கு பிரதானமானதும் ஆடும் நடனமணிகளுக்கும் பக்க வாத்தியக் கலைஞர்களுக்கும் இசை வல்லுனருக்கும் நடுவே பாலமாகவும் அனைவரையும் இயக்கும் தலைமை அங்கமாகவும் நாட்டிய அரங்கத்திலே நடு அங்கமாக நின்று ஆட்சி செய்யும் பிரதான அங்கமாக இந்த நட்டுவாங்கம் பயன்படுத்தப்படுகிறது. சொல்லும் செயலும் சேர்ந்து ஒருசுவை உருவாகும் என்றால் அதனை நட்டுவாங்க செய்கையினால் முழுமையாக உணரமுடியும். நாவில் பிறக்கும் சொல்லுக்கட்டுக்களுக்கும் கைகளால் செய்யும் செய்கைகளுக்கும், கால்களின் தட்டுதல்களுக்கும் தாளத்திற்குள் இணைந்து ஒருங்கே கிடைக்கும் நாத ஒலியாக நட்டுவாங்கம் விளங்குகின்றது.இசையோடு கலந்த பாடல், பாடலுக்கு வரும் பொருத்தமான அபிநயம், பாடலின்றி ஸ்வர அமைப்புக்களுக்கு மட்டும் இணைந்து செய்யப்படுக்கின்ற அடவுகள், பாடலோ ஸ்வர அமைப்புகளோ ஏதுமின்றி கொன்னக்கோல் முறையில் உதிர்க்கப்படுகின்ற ஜதிக் கோப்புகளுக்கு மட்டும் இணைந்து செய்யப்படுகின்ற அங்க அசைவுகள் யாவையும் ஆதாரப் பிரமாணத்தில் நிறுத்தி நிலைப்படுத்தி பார்ப்போரையும் ஒன்றி விடச் செய்யும் நடு அங்கமே நட்டுவாங்கமாகும். 

கலையுலகில் கையாளப்படுகின்ற தாளங்கள் பலவகை, அவைகளில் சற்று வித்தியாசமானதும், தனிப்பட்டதுமானது இந்த நாட்டிய வகைத் தாளமாகும். இத்தாளத்தில் ஒன்று இரும்பினாலானது. இது இடது கையில் பிடித்து மற்ற தாளத்தினை அணைப்பதாக செயற்படுகிறது.  அதனால் இது அணைப்புத்தாளம் எனப்படுகிறது.  இதன் விட்டம் 2..5 முதல் 3 அங்குலம் வரை இருக்கும்.  நடுப்பாகம் ஆழமாகக் குழிந்து விளிம்பு வரை சருகலாக அமைந்திருக்கும்.  இதன் விளிம்பு சற்று அகலமாகவே இருக்கும்.  குழிப்பகுதியின் மையத்தில் இருக்கும் துளை வழியாக கை பிடிப்பதற்கு ஏற்றவாறு நூல் கயிற்றினால் இறுக்கப்பட்ட கைப்பிடி சுமார் 4 அங்குல நீளத்தில்அமைந்திருக்கும். நாட்டிய தாளத்தின் மற்றொன்று வலது கையில் பிடித்து இரும்புத் தாளத்தின் மேல் தட்டி ஒலிக்கப்படுகின்ற தட்டுத்தாளமாகும்.  இது வெண்கலத்தினாலானது.  இரும்புத் தாளத்தினை விட இதன் கனம் குறைவாகும்.  விளிம்பு குழிவாக அமைந்து மத்தியில் உள்ள துளையில் நூற்கயிற்றுக் கைபிடி சுமார் 4 அங்குல நீளத்தில் இறுக்கப்பட்டிருக்கும்.

நட்டுவாங்கத்தாளமும் அதில் அடங்கும் அதிதேவதைகளும்

தாளம் பிடித்த வலக்கை கபித்தம் - விஸ்ணு    

தாளம் பிடித்த இடக்கை அராளம் - பிரம்மா

வலது குமிழ் - இலக்குமி                  

இடது குமிழ் - சரஸ்வதி

வலது தாளவட்டம் - சூரியன்               

இடது தாளவட்டம் - சந்திரன்

வலது, இடது துளை – வாயுதேவன்        

வலது கயிறு – ராகு

இடது கயிறு – கேது                    

வலது தாள ஓசை – சிவம்

இடது தாள ஓசை – சக்தி              

தாக்கி எழும் ஓசை – சக்தியும் சிவமயமுமாகும்

நட்டுவாங்கத்தின் பயன்பாடு

தாளப்பிரமானத்தில் செயற்படுத்தினால் நட்டுவனார் நடனமணியையும், தன்னையும் பக்கவாத்தியங்களையும் நிலைப்படுத்தும் சிறந்த மூலமாக நட்டுவாங்கம் அமைகின்றது. நட்டுவாங்கமானது தனித்துவம் வாய்ந்த உன்னத கலை. அதாவது நட்டுவனாரின் நட்டுவாங்கத்தின் மூலம் ஜதியும் நடனமணியின் அசைவுகளும் அடவுகளின் அழகும் வெளியாகுகின்றது. இவ்வாறு அமைவதால் தாளப்பிரமாணமும் ஈடுபாடும் அதிகமாகின்றது.  அசைவுகளின் பரிமாணத்திற்கேற்பவும் கால்களின் செயற்பாடுகளுக்கேற்பவும் நாதம் வெளியாகி அடவுகளை அழகுபடுத்துகிறது.  லய ஒலியானது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால் நட்டுவாங்க தாள ஒலியானது சலங்கை ஒலியுடன் இணைந்து நடனமாடுபவரின் கால்தட்டுதலோடு சேர்ந்து காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் தன்மை கொண்டது.

நட்டுவாங்கமானது அன்று தொட்டு இன்றுவரை ஆடும் கலைஞர்களை ஆட்டுவிக்கும் ஆசிரியர்களின் கைகளில் தவழும் தாளப்பிரமாணம்.  அது ஏதோ குண்டுத்தாளமல்ல வெறும் சத்தம் மட்டும் எழுகின்ற தாளமுமல்ல அந்த சித்தத்தில் இருந்து லய சத்தத்தோடும் நாவில் இருந்து பிறக்கும் ஜதிகளோடும் நடன மணியின் கால் சலங்கையோடும் இணைந்து ஒலிக்கும் தன்மை கொண்டது.  இத்தகைய மேன்மை கொண்ட ஒலிநயம், தாளம், சொற்கட்டு இணைந்த ஒரு கூட்டுக்கலையாக நட்டுவாங்கம் வளர்ந்து வருகிறது. பரதநாட்டியம் கற்கும் அனைவருக்கும் முதலில் தாளத்தைப் பற்றியும் ஐதி அமைக்கும் முறை பற்றியும், ஜதி சொல்லும் முறை பற்றியும் தெரிந்திருத்தல் வேண்டும்.  இவை யாவும் தெரிந்திருந்தால் நட்டுவாங்கம் செய்ய இலகுவாக இருக்கும்.  நட்டுவனார்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்கின்றனர்.  அத்துடன் நட்டுவாங்கக் கலையில் முன்னே கூறியபடி வாயில் ஜதி சொல்லும் போது ஒரு கணக்கிலும் கை தாளத்திலோ அல்லது தட்டுக்கழியில் தட்டும் போது ஒரு கணக்கிலும் அதே லயத்தில் வேறு ஒரு கணக்கு பங்கீட்டில் தட்டுவதும் நட்டுவாங்கத்தின் மிக முக்கியமான பணியாகும். குறிப்பிட்ட தாளத்தில் தாளக்கட்டுடன் தாளம் பிறழாமல் தட்டுவதற்கும், பாடலின் வேகத்தில் பஞ்ச ஜாதிகளில் அமைந்த ஜதிகளை தாளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஆரம்பித்து தாளத்தின் சமத்திற்கோ அல்லது கணக்கிடப்பட்ட இடத்திற்கோ சரியாக முடிப்பதற்கும், நட்டுவாங்கம் செய்யும் போது பாடகரோ அல்லது பக்கவாத்தியக் கலைஞர்களோ தாளத்தை விட்டோ அல்லது நாட்டியத்திற்கு அமைக்கப்பட்ட பாடல் வரிகளை அல்லது முறைகளை விட்டோ பிறழும் போது அவர்களை அங்கு சரியாகப் பாடவோ வாசிக்கவோ செய்ய முடியும். அத்துடன் தாள அக்ஷரத்தின் மாத்திரையில் பின்னங்களாக ஜதி, அடவுகள் மற்றும் ஸ்வரங்கள் போன்றவற்றை சரியாக கணக்குப் பிழைக்காமல் புகுத்தி நடனமணியை ஆடச்செய்வதற்கும், ஐதிகளை தக்க ஏற்ற இறக்கத்துடன் சொல்லி பாடலுடன் சரியாகக் கலப்பதற்கும் நட்டுவாங்கம் பயன்படுகிறது.

சொற்கட்டுக்களையோ, ஸ்வரங்களையோ, கோர்வைகளையோ சேர்ப்பின் அது "ஐதி" என்று சொல்லப்படும், இதுவே ஆடற்சொற்கட்டுக்கோவையாகும், நட்டுவாங்கத்தை தட்டியும், உரசியும், மோதியும் அற்புத சொற்கட்டுகளைச் சொல்லும் போது அரங்கத்திலே நாட்டியத்தின் சிறப்பு வெளியாகிறது.  மிருதங்கத்திற்கு இணையாக நட்டுவாங்கம் செய்யப்படுகிறது. நட்டுவாங்கத்திலே துரித, மத்திம, விளம்பித காலம் என மூன்று காலங்களாக வாசிக்கலாம்.  நாட்டியத்தில் நட்டுவ ஆசான் செய்யும் தாள வேறுபாடுகள் ஈ..கிருஷ்ளையர் சொல்வது போல் “ஆடல்களை லாவகமாகவும், கச்சிதமாகவும் ஆடி நிர்வகிப்பதற்கேற்ற நடன சித்திரங்களாய் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றார். நாட்டியப் பேராசான் தஞ்சாவூர் கே.பி.கிட்டப்பாபிள்ளை அவர்கள் சொன்னது போல் பாட்டின் இசைக்கும் பொருளுக்கும், பொருளுக்குப் பொருந்திய கவை நயத்தோடும், இனிமையாகவும் லய சுத்தத்தோடும் நட்டுவாங்கச் சொற்கட்:க்களை இசைத்து கைத்தாளத்தை பிடிப்போடு போட வேண்டும் அப்போதுதான் இயல்பாகவும் அழகாகவும் அமையும் எனக் கூறியுள்ளார்.

நட்டுவாங்கத்தில் நர்த்தகியின் பங்கு

நடனமணி முதலில் எவ்வாறு நட்டுவாங்கம் தட்டுவது எந்த அடவுகளுக்கு எவ்வாறான முறையில் ஒலிகளை எழுப்பலாம் என முன் கூட்டியே அறிந்திருத்தல் வேண்டும். நர்த்தகியானவள் நட்டுவாங்கத்தினை முழுமையாகக் கற்றிருத்தல் வேண்டும்.  ஏனெனில் நடனமணியானவள் அரங்கில் நடனமாடும் போது நட்டுவாங்கத் தாளத்திற்கே நடனமாடுகின்றாள்.  நடனமணிக்கு நட்டுவாங்கம் பற்றி தெரியாதிருந்தால் அவள் அடிக்கடி நடன ஆசிரியரைப் பார்க்க வேண்டி வரும். ஏனென்றால் அடுத்தது என்னவென்று நடனமாடுபவருக்குத் தெரியாது. ஆனால் நட்டுவாங்கம் பற்றித் தெரிந்தால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதனை அறுதியிட்டு உணர்த்துவார்கள்.  ஆகையால் நர்த்தகிக்கு இன்றியமையாத ஒரு தாளக்கருவியாக நட்டுவாங்கம் காணப்படுகிறது.  

நடனமாடுபவர்கள் ஜதிகள், கோர்வைகள் இவற்றிற்கு நட்டுவாங்கம் எவ்வாறு தட்டப்படுகிறது என்பதனை அறிந்திருத்தல் மிகவும் அவசியமானதொன்று. ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு பாடல் குழுவினர் பாடும் போது நட்டுவாங்கம் எவ்வாறு தட்ட வேண்டும் எனவும், நட்டுவாங்கம் மூலம் நடன ஆசான் என்ன கூறுகின்றார் என அறியும் ஞானம் நர்த்தகிக்கு அவசியமாகும். நர்த்தகியானவள் நடன ஆசானின் ஆளுமையையும், திறமையையும் வெளிப்படுத்த ஒரு காரணியாகக் காணப்படுகின்றாள்.  இதனால் நர்த்தகியின் திறமைகள், பாவம், ஆளுமைகள் என்பன நட்டுவாங்கத் தாளத்திற்குள் நடனமாடும் போதுதான் புலனாகின்றது.  இவ்வாறாக நர்த்தகியானவளுக்கு நட்டுவாங்கத்தின் பங்கு மிக அவசியமாகின்றது. 

நட்டுவாங்கத்தில் நட்டுவனாரின் பங்கு

பரதநாட்டிய வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் நட்டுவனார்கள். இவர்கள் நாட்டியம் ஆடுகின்ற நடராஜப் பெருமானுக்கு இணையாக மதிக்கப்படுவார்கள்.  ஆதலால் அவர்கள் ஒழுக்கம் பூஜை, கல்வி ஆகிய அனைத்திலும் தங்களிடம் பயில்பவர்களுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். தன் மாணவர் தான் பயிற்றுவிக்கும் கலையில் திறன் மிகுந்தவராக நின்று செயல்பட வேண்டும் என்ற ஆத்ம தாகத்துடன் பயிற்றுவிக்கும் மனிதரே வணங்கத்தக்க நட்டுவனார்களாவார்கள்.

மஹாபரத சூடாமணியில் கூநப்பட்டுள்ள நட்டுவனாருக்குரிய தகுதிகள்

ஸ்தானகம், பாதசாரி, மண்டலங்களின் அளவு, பாவம், கரண நாட்டம் அங்ககாரம் இவற்றில் நல்ல அறிவும், ஈனமில்லாத தொழிலுடைமையும் சுற்றங்களுடமையும் பெற்று, சாளவ, சங்கீர்ண, தாள பேதங்களனைத்தையும் அறியும் அறிவும், துளைக்கருவி, நரம்புக்கருவி கஞ்சற்கருவிகளின் அறிவும் தாளம் மிகுந்த தசாங்கத்தின் செய்கையாலான நடனபேதங்களின தெளிவும் பெற்று அவற்றைத் தானே செய்ய வல்லவனாயும் சர்வ பாஷைகளின் அறிவு பொருந்தினவனாயும் இருப்பவனே நட்டுவனாவான். இன்னும் அங்கக்குறை நோய் முதலியனவும் பிறதடுப்புக்குரிய எக்குற்றமும் இல்லாதவனும், பங்கமற்ற குலப்பிறப்பும்.  கடவுள் பக்தி இந்திரிய வெற்றி ஆகியவை உடையவனும் நிருத்த பேத அறிவு தானே பிரபந்தம் செய்யும் ஆற்றல். இவற்றில் வல்லவனும் எட்டு வட்டணைகள் ஆறு தூசி, பத்து மண்டலங்கள்.  ஏழு நயனங்கள் நாலுவித சங்கீதங்கள்.  ஐந்து அலங்காரங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவனுமான நட்டுவனே நடனம் புரியலாவான்.

மதுர வாக்கியம்,ரூபம், தைரியம், வாக்சாலகம் சாமர்த்தியம், உத்தம குலப் பிறப்பு, பரத சாஸ்திர உணர்ச்சி. கானம், வாத்யம், நிருத்தியம் என்ற மூன்றிலும் நல்ல ஞானம். பொறுமை, கற்பனாசக்தி, சரீரநேசம், சதுரத்வம். குறிப்பறிதல், சாந்தகுணம், பிறர்மனை எண்ணாமை என்னும் குணங்களைப் பெற்றவனும், சுத்தம், தேசியம் ஆகியவற்றில் அறிவும், சொல், பொருள், யாப்பு, அலங்காரம், சொல்லும் எழுத்தும் ஆகிய இவற்றை நன்றாகத் தெரிந்தமையும், மனம், செவி, கண், வாய், மூக்கு, முகம் இவற்றில் விகற்பமில்லாமை, பக்தி, சிரத்தை, தயை, பரத்தில் நம்பிக்கை, சத்தியம், பனுவல் காணல் ஆகியவற்றில் மெய்த்திறமையுடையவனும், நட்டுவன் என்கிற நிர்த்தனாவான். பாடச்செய்ய, பாட பரதமுறைப்படி கூத்தை ஆட்டுவிக்க, ஆட. கரணம் பூட்டிவைக்க, பல பாஷைகள் கற்றுச் சொல்லிவைக்க இஷ்டமுடையவனும் நட்டுவனாவான். அன்றியும், குறுகிய உடல், மெலிந்த உடல், கூன் முதலியன இல்லாதவனும், கர்வம், அறிவின்மை, கைகால்களில் வெள்ளை, அங்கவீனம் முதலியன இல்லாதவனும், நெறியுள்ள கல்வி கேள்வி நிறைந்தவனும், ஆகியோன் நட்டுவனாவான். மேலும், நூல்களில் கூறப்பட்ட நால்வகை அபிநயங்கள் கற்றும், பழைமையான பல பரத நூல்களைப் பயின்றும், தாள தசப்பிராணன், அஸ்த துவாதசப் பிராணன், மார்க்கம். பேரணி, சக்கணி, சாரி, ஆகியவற்றையும், சுத்த, தேசியங்களையும், சிரோநயன பேதங்கள் முதலானவற்றையும் அறிந்து, பாத்திரத்தை ஆட்டிவைப்போனே நட்டுவனாவான். நட்டுவனை ஆடலாசிரியன் என்று சிலப்பதிகாரம் கூறும்

ஆயகலைகள் அனைத்தும் அறிந்து அவற்றை மாணவர்களுக்கு திறம்பட ஓதுவித்து 'கூலி கொடுத்தார், கூலி கொடாதார்' என்ற பாகுபாடின்றி தன் மாணவர் தான் பயிற்றுவிக்கும் கலையில் திறம் மிகுந்தவராக நின்று செயல்பட வேண்டும் என்ற ஆத்மதாகத்துடன் பயிற்றுவிக்கும் மனதினரே வணங்கத்தக்க நட்டுவனார்கள் ஆவார்கள். நாட்டியக் கலை ஐந்தாம் வேதமாக பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது. இதனைப் பயிற்றுவிக்கின்ற நட்டுவனார்கள் நட்டுவாங்கக் கலை மூலமாக தம்மிடம் பயில்கின்ற மாணவர்களை இறையுணர்வுக்கு எடுத்து செல்கின்றவர்கள் என்ற நினைப்பு நாட்டிய ஆசிரியர்களுக்கு வந்தாலே போதுமானது. தான் பயிற்றுவிக்கும் கலையை திருத்தமாகவும் விரிவாகவும் பயன் தரும் விதத்திலும் பக்தி பூர்வமாகவும் கற்றுத் தருவார்கள் என்பதில் எத்தகைய ஐயமும் இல்லை.

நாட்டிய நிகழ்ச்சிகளில் நட்டுவனாரின் பங்கு

நட்டுவனார் என்பவரே நிகழ்ச்சியின் ஆட்டுவிப்பவர் நிகழ்ச்சியின் அனைத்து நிகழ்வுகளும் ஆடலில் ரச பாவங்களும் இசைச் சூழல்கள் அனைத்தும் அவருக்கே தெரியும், தெரிந்திருக்க வேண்டும். நடனமணி ஆடும் தாளத்தில் இயைந்த அசைவுகள் கோர்வைகள் ஆகியவை நட்டுவனாருக்கு தெரிந்து நடனமணிக்கு அனுசரனையாக தேவைக்கேற்ப பாடியும், ஜதிகள் சொல்லியும் குரலில் ஏற்றத் தாழ்வுகள் காட்டியும் நிகழ்ச்சியை நடத்தி செல்ல வேண்டும்.

நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் இசைக் கலைஞர்களுக்கு இராக, தாள, ஸ்வரக் குறிப்புகளை எடுத்துக் கூறியும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அவர்களை நோக்கி திரும்பி சைகையினால் அறிவுறுத்தியும் அவர்களை வழி நடத்திச் செல்கின்ற பொறுப்பு சூத்திரதாரியான நட்டுவனாரையே சாரும். திரும்பி சைகையினால் அறிவுறுத்தியும் அவர்களை வழி நடத்திச் செல்கின்ற பொறுப்பு சூத்திரதாரியான நட்டுவனாரையே சாரும்.

பின்பாட்டு பாடுகின்ற கலைஞருக்கு பாடல் வரிகள் எத்தனை முறை வருகிறது என்பதும் தாளத்தின் அக்ஷரக்காலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தாளஅளவு எடுத்து தருவதும் ஜதிகள் முடிந்ததும். அல்லது தீர்மானம் முடிந்ததும் சக கலைஞர்களுக்கு அறிவுறுத்துவதும் நாட்டிய ஆசிரியரின் கடமையாகும்.

ஆடுகின்ற நடனமணி தவறு செய்தால் அதனை தன் ஜதி போன்ற சொற்களினால் மறைத்து சொல்லியும் அவர் விட்ட இடத்தை திறமையாக நினைவூட்டுவதும் குருவான நட்டுவனாரின் பங்காகும்.

நட்டுவனாருக்கு சரியாக ஜதி சொல்ல தெரிவதும், நன்கு பாவ பூர்வமாகப் பாடத் தெரிவதும், லய வாத்தியக் கலைஞர்கள் வாசிக்கின்ற நடை, தீர்மானம். எதிர்நடை போன்றவற்றிற்கேற்ப தட்டவும் வேண்டும்.

நட்டுவனாருக்கு தானமைத்த நடனத்தில் கோர்வைகள் பின்னமாக வரும்போது பாடியவாறே கைத்தாளத்தைத் தட்டுவதும் தாள நிர்ணயமும் இருக்க வேண்டும். நாட்டிய நிகழ்ச்சிகளில் நட்டுவனாரின் நினைவுத் திறன் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிகள் செய்யும்போதும் புதிய உருப்படிகள் செய்வதும் அவற்றில் வருகின்ற தாள படைப்புகளை நினைவில் சரிவர வைத்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதும் நட்டுவனாரின் பங்காகும்.

நடன உருப்படிகளுக்கு மாத்திரைகளைக் கொடுத்து அழகு சேர்ப்பவர் நட்டுவ ஆசான். தாளத்தின் நடைகளுக்கேற்ப மட்டுமல்ல திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் முதலான நடைகளைக் கலந்து லய வேறுபாடு செய்யும் போது நட்டுவாங்கத்தின் சிறப்பு புலனாகின்றது.  சொற்கட்டுக்களையோ, ஸ்வரங்களையோ, கோர்வைகளையோ சேர்ப்பின் அது "ஜதி" என்று சொல்லப்படும், இதுவே ஆடற்சொற்கட்டுக்கோவையாகும், நட்டுவாங்கத்தை தட்டியும், உரசியும், மோதியும் அற்புத சொற்கட்டுகளைச் சொல்லும் போது அரங்கத்திலே நாட்டியத்தின் சிறப்பு வெளியாகிறது.  மிருதங்கத்திற்கு இணையாக நட்டுவாங்கம் செய்யப்படுகின்றது. 

நட்டுவாங்கத்திலே துரித, மத்திம, விளம்பித காலம் என மூன்று காலங்களாக வாசிக்கலாம்.  நாட்டியத்தில் நட்டுவ ஆசான் செய்யும் தாள வேறுபாடுகள் உ.கிருஷ்ளையர் சொல்வது போல் “ஆடல்களை லாவகமாகவும், கச்சிதமாகவும் ஆடி நிர்வகிப்பதற்கேற்ற நடன சித்திரங்களாய் இருக்க வேண்டும்” என்று கூறுகின்றார். நாட்டியப் பேராசான் தஞ்சாவூர்கே.பி.கிட்டப்பாபிள்ளை அவர்கள் சொன்னது போல் பாட்டின் இசைக்கும் பொருளுக்கும், பொருளுக்குப் பொருந்திய கவை நயத்தோடும், இனிமையாகவும் லய சுத்தத்தோடும் நாட்டுவாங்கச் சொற்கட்டுக்களை இசைத்து கைத்தாளத்தைப் பிடிப்போடு போட வேண்டும் அப்போதுதான் இயல்பாகவும் அழகாகவும் அமையும் எனக் கூறியுள்ளார். 

நட்டுவாங்கத்தின் இன்றைய நிலை

பரதநாட்டியத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது இவ் நட்டுவாங்கம் தான்.  பரதநாட்டியக் கச்சேரியில் லயப்பிரமாணம் எவ்வளவு முக்கியமானது என்பதனை இவ் நட்டுவாங்கம் தான் ஆடுபவர்களுக்கும் பார்வையாளருக்கும் புரிய வைக்கும்  வகையில் தாள வாத்தியமாகப் பயன்படுகிறது. ஆனால் நட்டுவாங்கமானது ஓர் தாளக்கருவியே அதனை மட்டும் தனியாகக் கொண்டு பரதநாட்டிய நிகழ்வினை அரங்கேற்ற முடியாது.  அத்துடன் ஏனைய பக்கவாத்தியங்களும் இணைந்தேதான் அழகு பெறுகின்றது.  அந்த வகையில் நட்டுவாங்கமானது பக்கவாத்தியங்களை தன்னகத்தே கொண்டு தானே நடுநிலையாக நின்று அரங்க நிகழ்ச்சிகளை பூரணமாக்குகின்றது. 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பரதநாட்டிய நிகழ்ச்சிகள்  பக்கவாத்தியங்களுடன் தான் நடைபெற்றது. ஆனால் எந்த வாத்தியங்கள் இருந்தாலும் இல்லாவிடினும் நட்டுவாங்கம் இல்லாமல் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆனால் தற்போது அரங்கேற்றங்கள், சில அவைக்காற்றுகைகளில் மட்டுமே நட்டுவாங்கம் பிரதான வாத்தியமாகக் காணப்படுகின்றது.

மேலைத்தேய புதிய இசைக்கருவிகளின் வருகையினாலும் அவ்வாறான வித்தியாசமான வாத்தியங்களின் இசைகளை ரசிப்பதாலும் நட்டுவாங்கம் பயன்படுத்தி ஆடுவது குறைந்து கொண்டே செல்கிறது. இன்றைய காலகட்டங்களில் பாடசாலை மட்டங்களில் நட்டுவாங்கம் என்பது அறிமுறையில் தான் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தமது உயர்தரப்பரீட்சையினை நிறைவு செய்த மாணவர்கள் பொழுது போக்கிற்காகவும் தமது உயர் கல்வியினை ஆரம்பிப்பதற்கு பயிற்சியாக அமையும் என்ற நோக்கில் தமது வீடுகளில் நடனம் கற்பிக்கின்றனர். ஆனால் அவர்கள் கற்ற முறையின் படிதான் கற்றுக் கொடுப்பார்கள். அவ்வாறு கற்றுக் கொடுக்கும் போது நட்டுவாங்கத்தின் பயன்பாடும் அதன் முக்கியத்துவமும் அங்கேயே குறைகின்றது. பரதநாட்டியம் கற்றவர்கள் அரங்கேற்றம் செய்யும் போது நட்டுவாங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் குழுக்களாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே இறுவட்டுகளுக்கு ஆடப்படுகின்றது. காரணம் தற்காலத்தில் பக்கவாத்தியங்களுடன் நடனம் செய்வதால் பொருளாதாரப் பற்றாக்குறை பெரும் குறையாகக் காணப்படுகின்றது.

இறுவட்டுகளைப் பயன்படுத்துவதனால் நன்மைகளும் சில தீமைகளும் காணப்படுகின்றன. நன்மைகளை எடுத்துக் கொண்டால், குறுகிய காலத்தினுள் நிகழ்வினை நெறியாள்கை செய்யக் கூடிய தன்மை காணப்படும். இதனால் பக்கவாத்தியங்களினால் ஏற்படும் செலவுகள் என்பன குறைக்கப்படும். அத்தோடு விரும்பிய ஏனைய இடங்களுக்கும் இறுவட்டினை எடுத்துச் சென்று நிகழ்வுகளை நடாத்தவும் பலவகையான இசைகளை ஒன்று சேர்த்து புத்தாக்க நடன நிகழ்வுகளை நிகழ்த்தவும் இது பயன்பெறுகிறது. தீமைகளை எடுத்துக் கொண்டால், நட்டுவனாரது திறமைகள், ஆளுமைகள் என்பன விருத்தியடையாது போய்விடும். அத்தோடு இறுவட்டின் பாவனையினால் காலப்போக்கில் நர்த்தகி இசைக்கருவிகளின் லயம், சுருதி, தாளம் என்பவற்றிலிருந்தி விலகும் தன்மையும் காணப்படும். பரதநாட்டியம் வீழ்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். இறுவட்டினைப் பயன்படுத்தி அரங்கில் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நிகழ்வு இடைநடுவில் நின்றுவிடும் இதனால் நடனத்தின் ரசனை இல்லாது போய்விடும். பக்வாத்திய இசையைத் தவிர்த்து நேரடி இறுவட்டு இசைக்கு ஆடப்படுவதனால் இனிமை, மரபுவழித்தன்மை, பாரம்பரியம், நடன ஆசிரியரின் கற்பனைத்திறன், நர்த்தகி பாவத்தினை வெளிப்படுத்தும் ஆற்றல், குருவணக்கம், சபையோர் வணக்கம் என்பவற்றை இதில் காணமுடியாதுள்ளது. எனவே இறுவட்டின் பாவனையைத் தவிர்த்து இயன்றளவு நேரடிப் பக்கவாத்தியங்களைப் பயன்படுத்தி நடனமாடுவதே சிறந்ததாக அமையும்.

முடிவுரை

பரதநாட்டியத்தில் நட்டுவாங்கமும் நட்டுவனாரும் எனும் தலைப்பினூடாக நோக்கும்போது இன்றைய காலகட்டத்தில் நட்டுவாங்கத்தின் பாவனை குறைவாகவே காணப்படுகின்றது. காரணம், பொருளாதாரப் பிரச்சனைகளும், பக்கவாத்தியங்களை அங்கும் இங்கும் எடுத்துச் செல்வது சிரமம் என்பதாலும் இதன் பாவனை குறைவாகக் காணப்படுகிறது.  பரதநாட்டியத்திற்கு பக்கவாத்தியங்களின் பங்களி;ப்பு அதிலும் நட்டுவாங்கத்தின் பங்களிப்பு மிகமிக அவசியமாகின்றது.  இனிவரும் காலங்களில் பக்கவாத்தியங்களைக் கொண்டே பரதநாட்டியம் வளர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது பரதநாட்டியம் எனும் சிறப்பு வாய்ந்த கலைக்கு நட்டுவாங்க தாளக்கருவி அவசியமானதும் முக்கியமானதுமொன்றாகக் காணப்படுகிறது.

நடனம் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாட்டிய இலக்கண விளக்கத்தினையும் தாளக் கணக்கு வழக்குகளையும் பயில்வதன் அவசியத்தை உணர்த்துதல் ஓவ்வொரு நட்டுவனாரினதும் தலையாய கடமையாக உள்ளது. இதுவே பரதம் வளர்ச்சியடைவதற்கான காரணங்களாக அமையும். எனவே ஒரு பரதநாட்டிய நிகழ்விற்கு நட்டுவாங்கத்தினைப்  பயன்படுத்தும் போது அந்நிகழ்வானது வலுப்பெறுகின்றது, உயிர்ப்புள்ளதாகின்றது, முழுமை பெறுகின்றது.. ஆகவே பரதநாட்டியம் பயில்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் நட்டுவாங்கத்தின் பயன்பாடு, அதன் தனித்துவம், சிறப்பு, அதனைக் கையாளும் விதம் மற்றும் அதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு நட்டுவாங்கம் அவசியம் என்பதனை விளங்க வைத்தல் ஒவ்வொரு நட்டுவனாரினதும் தலையாய கடமையாகும்.

உசாத்துணை நூல்கள் :

1. சரஸ்வதி கலைமாமணி,நாட்டியக்கலை,சென்னை, 1994

2. ஞானாகுலேந்திரன் டாக்டர்,பரத இசை மரபு,மதுரை,1994

3. பத்மாசுப்ரமணியம் டாக்டர்,பரதலைக்கோட்பாடு,சென்னை,2005

4. பாலசந்த்ர ராஜு ஸ்ரீ.எஸ்,.நாட்டிய நட்டுவாங்கசாரம்,சென்னை, 2006

5. .பாலசந்த்ர ராஜு ஸ்ரீ. எஸ்,.நாட்டிய மணிகளின் கையேடு,சென்னை, 1993

6. பாலசந்த்ர ராஜு ஸ்ரீ.எஸ் .நடன அடைவுகள்,சென்னை, 1993

7. பவித்ரா, நடனச்சுவடுகள்,மன்னார்.  2006

8. ரேவதி,தமிழிசை கலைக்களஞ்சியம், திருச்சி, 1997

9. ஹரிதாஸ் ஏ.பி. கொட்டும் கூத்தும், சென்னை, 2002

10. லீலாம்பிகை செல்வராஜா, ஆடற்கலை, கொழும்பு, 2008