ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழர் சமயங்களில் சைவம் (THAMIZHAR SAMAYANGALIL SAIVAM)

ஆ. அரிதாஸ், தமிழ்த்துறை, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), ஆர்.கே. எம். விவேகானந்தா கல்லூரி, சென்னை – 600 004. 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

          தமிழர் சமயம் சைவ சமயம் ஆகும். தமிழினம் தோன்றிய காலத்தில் உருவமில்லாதவைகளை வணங்கினர். பின்பு வணங்கிய உருவம் சிவபெருமானாகும். இதனைச் சிந்து நதிக்கரை நாகரீகத்தில் வழிபட்ட பசுபதி மற்றும் இன்றைய காலத்திலும்  நல்  நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பிள்ளையார் பிடிக்கும் வழக்கம் உள்ளதையும் அவ்வுருவம் பிள்ளையார் எனப்பெயர் சுட்டப்பட்டாலும்  சிவனைக்குறிப்பதாகும். தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படும் சிவ வழிபாடும் தென்னாடு உடைய சிவனே போற்றி என்னும் கருத்தையும் கொண்டு தமிழர் சமயம் சைவம்  என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

திறவுச் சொற்கள்

          சிவசமயம் – வகைகள் – பதி,பசு,பாசம் – சிந்துவெளி நாகரீகம் – பசுபதி – சிசினதேவர் – சைவ மடங்கள் – மானியம் – ஆகமம் – வழிபாட்டுமுறை – இலிங்க வடிவமைப்புப் பொருட்கள் – கந்தழி – தமிழ்க் கடவுள் – திராவிடர் கடவுள் - முக்தி.

STUDY SUMMARY:

               The Tamil religion is the Saiva religion, the idol worshiped since the beginning of Tamil is Lord Shiva, which was worshiped during the period of Indus River Civilization, and even today there is a custom of worshiping Pillaiyar as the beginning of a good event, and even though the image is called Pillaiyar, that figure is a reference to Shiva, and the worship of Shiva that is widespread in Tamil country and the worship of Shiva in the south, Tamil religion is a Saiva religion.

Key words

               Saivam – Varieties – Pathi, Pasu, Paasam – Indus Valley Civilization – Pasupati – Sisinadevar – Saiva Monasteries – Grants – Agama – Ritual – Linga Designs – Kandazhi – Tamil God – Dravidian God – Mukthi.

முன்னுரை

தமிழர் சமயங்களுள் ஒன்று சைவ சமயமாகும் இச்சமயம் தனிச் சிறப்பு வாய்ந்த சமயமாகும் சிவபெருமானை வழிபடுகின்றவர்களைச் சைவர்கள் என்கிறோம். அவர்களின் வழிபாடு மற்றும் வாழ்க்கை முறைகளை சைவ நெறிமுறைகள் என்கிறோம். சைவர்கள் பல்வேறு முறைகளில் இறைவனை வழிபாடு செய்துள்ளனர். எம்பெருமான் சிவனை வழிபடுவோரும் அவரின் அடியவர்களை வழிபடுவோருமாக சைவ பெரியோர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும் நாயன்மார்களை குருஅருளால் வீடுபேறு பெற்ற நாயன்மார்கள் இலிங்க வழிபாட்டால் வீடுபேறு பெற்ற நாயன்மார்கள், அடியார்க்கு அடியாராய் இருந்து வீடுபேறு பெற்ற நாயன்மார்கள் என இருப்பினும் இவர்களின் வழிபாட்டு முறை வெவ்வேறாயினும் இறையன்பு என்பது ஒன்றேயாகும் என்பதையும் சைவம் தமிழர் சமயம் என்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.

சைவம்

சைவம் என்ற சொல்லிற்குச் சிவசமயம், ஆகமம், சிவபுராணம், இளமை, புலால் உண்ணாதிருத்தல் என்றும், சைவர் என்ற சொல்லிற்குச் சிவசமயத்தார், புலால் உண்ணாதவர் என்று பொருள் கூறுகிறது      திருமகள் தமிழகராதி(பக்.522). சைவம் சிவசமயம் என்றும், சைவர் சிவசமயத்தார் என ஏற்கலாம். சிவனை வழிபட்ட நெறிகளை       வைத்து ஊர்த்தவ சைவம்,  அநாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம், நிர்க்குண சைவம், அத்துவா சைவம்,  யோக சைவம், ஞான சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம், சுத்த சைவம் எனப் பல திறப்படும் பின்னும் காளாமுகம், காபாலம்  முதலியவும் உள. அவற்றுள் சுத்தாத்துவித சித்தாந்தம் உயர்ந்தது என்பர்.

ஊர்த்தவ சைவம்

சிவபெருமானை வணங்கி   சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, சடை, திருநீறு, உருத்ராக்ஷத்துடன் சிவவேடம் பூண்டு சிவத்தை அடைவது  ஊர்த்தவசைவம் ஆகும்.

அநாதி சைவம்

 சிவனை நினைத்து திருநீறு, உருத்ராக்ஷத்துடன் சிவவேடம் கொண்டு பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (ஆணவம்,கன்மம்,மாயை) ஆகியவற்றுள் பாசம் நீங்கிச் சிவனையடைவது அநாதி சைவம் ஆகும்.

ஆதி சைவம்

எல்லாவற்றையும் சிவமாய் நினைத்து சிவத்தின் மீது பேரன்பு கொண்டு,  வேடங்கள் பூண்டு,  திருநீறு, உருத்ராக்ஷம் தரித்து   சிவனை அடைவது  ஆதி சைவம் ஆகும்

மகா சைவம்

திருநீறு, உருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவனை மனம்மெல்லாம் நினைத்து  முக்தி அடைவது மகா சைவம் ஆகும்.

 பேத சைவம்

திருநீறு உருத்ராக்ஷம் அணிந்து சிவலிங்கத்துடன் சிவனடியார்களையும்  வழிபட்டு வீடுபேறு அடைவது பேத சைவம் ஆகும்.

அபேத சைவம்

திருநீறு, உருத்ராக்ஷம்  அணிந்து திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி சிவபாவனை செய்து சிவனாவது அபேத சைவம் ஆகும்.

அந்தர சைவம்

எல்லா உயிர்க்களிலும் சிவம் இருப்பதை உணர்ந்து வீடுபேறு அடைவது அந்தர சைவம் ஆகும்.

குண சைவம்

சிவனது எண் குணங்களையும் புகழ்ந்து பாடி சிவனை  மனதில் நினைத்து வழிபட்டு  முக்தி அடைவது குண சைவம் ஆகும்.

நிர்க்குண சைவம்

திருநீறு, உருத்ராக்ஷம் கொண்டு திருவைந்தெழுத்து ஓதி சிவனை மனதால் நினைத்து வழிபடுவது நிர்க்குண சைவம் ஆகும்.

அத்துவா சைவம்

திருநீறு, உருத்ராக்ஷம் கொண்டு மனதால் சிவத்தை நினைத்து  வழிபாட்டு முறைகளை விடாது செய்து சிவத்துடன் கூடி இறுதி நிலை அடைவது அத்துவா சைவம் ஆகும்.  

யோக சைவம்

எண்வகையான யோகத்தால்   சிவத்தை மனதால் கண்டு அஷ்டமா சித்தி பெறுவது யோக சைவம் ஆகும்.

ஞான சைவம்

திருநீறு, உருத்ராக்ஷம் கொண்டு சிவத்தை அறிந்த ஞான ஆசிரியரால் மும்மலங்களை அழிப்பதற்கான வழிமுறைகளைக் கற்றும் சிவத்தை உள்ளன்புடன்  ஏற்பது  ஞான சைவம் ஆகும்.

அணு சைவம்

எப்பொழுதும் அகமும் புறமும் சிவனை நினைத்து திருவைந்தெழுத்தை ஓதி மகிழ்ந்து சிவவேடத்தைப் பொருளாகக் கொண்டு அன்பின் வழியில்  முக்தி அடைவது அணுசைவம் ஆகும்.   

கிரியா சைவம்

 சைவ சமயத்தின் உயரிய தீட்சைப்பெற்று குரு கூறிய வழியில் வழிபாடுகளை மேற்கொண்டு இன்பமடைவது கிரியா சைவம் ஆகும்.

நாலுபாத சைவம்

சரியை, கிரியை, யோகங்களை ஏற்றுக்கொண்டு ஞானத்துடன்  முக்திநிலையை அடைவது நாலுபாத சைவம் ஆகும்.

சுத்த சைவம்

 பதி, பசு, பாசம் (இறைவன், உயிர், மும்மலங்களை அழித்து சிவத்தை அடைவது) ஆகியவற்றை முறையாக அறிந்து பதி என்னும் இறைவனை அமைதியின் வழி சேர்வது சுத்த சைவம் ஆகும்.

சமயம்

சிவபெருமான் வழிபாடு தமிழர்களிடம் சிந்து சமவெளி நாகரிக காலம்தொட்டு வருவதாகும். “சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டது சைவ சமயமாகும் தமிழரின் பழம்பெரும்        சமயமென்பர் ஆராய்ச்சியாளர். ஆரியர் வருகைக்கு முற்பட்ட   சிந்துவெளி நாகரிகத்தில் சிவ வழிபாடு சிறப்புற்றிருப்பது எனத் தொல்லியலாராய்ச்சியளர்கள் நிறுவியுள்ளனார். பல சிவலிங்கங்கள் சிதைவுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தியாக நிலையில் அமர்ந்த ஓராண் தெய்வமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைச் சூழ்ந்து பல விலங்கு உருவங்கள் காணப்படும். சிவபெருமான் உயிர்களுக்குத் தலைவன் பசுகதி என்பதனை இது விளக்குகிறது என்பர். ஆரியர்கள் தம் பழைய மறையில் சிவபெருமனைச் சிசினதேவர் என இழிவாகக் குறிப்பிட்டுள்ளதால் சிவன் திராவிடர் தெய்வமே என்கிறார்”1(பக்.326) அ.தட்சிணாமூர்த்தி. சமயம் என்பது தெய்வீகத்தன்மையின் அடையாளம் எனலாம், ஒவ்வொரு சமயமும் ஒரு நெறிமுறைகளைப் பின்பற்றி அதனால் மனித ஒழுக்கத்தை பேணுவதாயும் மனித மேன்மைக்கு வழிகாட்டுவதாயும் அமைகின்றன. “சமயம் என்பது மதம். அது ஒருவகைச் சமைவைக் குறித்தலால் சமயம் எனப்பட்டது. சமைதல் நுகர்ச்சிக்குப் பதமாதல். அரிசி சோறாகச் சமைப்பது உண்பதற்குப் பதமாதல். பெண்பிள்ளை மங்கையாகச் சமைவது மண நுகர்ச்சிக்குப் பதமாதல். ஆதன்(ஆன்மா) இறையடிமையாகச் சமைவது, வீடுபேற்றிற்கு அல்லது இறைவன் திருவடிகளை அடைவதற்குப் பதமாதல்”2(பக்.91) என்கிறார். ஞா.தேவநேயப்பாவாணர். மேற்கூறிய கருத்துக்களால்  சைவ சமயம் மிகப்பழமையான சமயம் என்பதையும்  ஆன்மா இறைவனை அடைவது சமயம் என்பதையும் அறியமுடிகிறது.

சைவமடம்

 சைவத்தை         வளர்த்த பெருமையும் மீட்டெடுத்தச் சிறப்பும் மடங்களைச்சாரும்  முதலில் சைவமடங்கள் சிவ மறையோர்களின் வீடுகளில் செயல்பட்டன. ஆகமத்தோடு சிவமறையோர் சிவனை வழிபட்டு வாழும் இடமே சைவ மடமாகும். “தென்னாட்டில் சமயத் தொடர்பான மடங்கள் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. இவை கோவில்களை அடுத்து இருந்தன. சைவ மடங்கள், வைணவ மடங்கள், பௌத்த மடங்கள், சமண மடங்கள் என்பன இவ்வகையின. இவை சமயக் கல்வியை அறிவுறுத்தியதுடன்  நாட்டுப் பற்று, பலகலை அறிவு, சமூக அறிவு என்பவற்றையும் ஊட்டி வந்தன. இவை அந்தந்த இடத்துப் பொது மக்கள் துணையாலும் அரசர் ஆதரவினாலும் சிறந்த முறையில் தொண்டாற்றி வந்தன. அரசரும் அரசியல் உத்தியோகஸ்தர்களும் இவற்றிற்கு நிலங்களையும் பொருளையும் மானியமாக விட்டனர். அடிக்கடி இவற்றைப் பார்வையிட்டனர். இந்த மடங்களில் சமயக் கல்வி கற்கும் மாணவர் இருந்தனர். பொதுமக்கட்குச் சமயக் கல்விப் புகட்டத் துறவிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சமயம், வேற்று நாட்டார் படையெடுப்பினால் பாதிக்கப்படாமல் இருந்ததற்காகப் பொதுமக்கட்கு நாட்டுப்பற்றை நன்முறையில் ஊட்டி வந்தனர். இத்தகைய மடங்களின் தலைவர்கள் அடிக்கடி அரசர்களைச் சந்திப்பதுண்டு, அவர்களைக் கொண்டு சமய முன்னேற்றத்துக்கான தொண்டுகளைச்  செய்விப்பதும் உண்டு”3(பக்.21) என்று மடங்களின் தொண்டினை விளக்குகிறார் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். மடங்கள் அரசுடன் இணைந்து சமயத் தொண்டாற்றியதை அறியமுடிகிறது.

ஆகமங்கள்

ஆகமம் என்பது ஆன்மா மீது பற்றற்று இறையைப்பற்றிக் கொள்வது இவற்றை சைவத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகை நெறிமுறைகளாகப் பகுப்பர். சரியை என்பது திருக்கோயிலுக்கு தொண்டுகள் செய்து இறைவனை அடைவது. கிரியை என்பது அனைவருக்கும் தொண்டு செய்து வாழ்ந்து இறைவனை அடைவது. யோகம் என்பது  சிவனை ஆழ்மனதில் நினைத்து ஆன்மாவால் உயிர்களைக் காத்து இறைவனை அடைவது. ஞானம் என்பது ஆழ்ந்த பக்தி உணர்வால் உண்டான இறைபற்றிய அறிவால் இறைவனை அடைவது. மொத்தத்தில் இறைவன் திருக்கோயிலுக்கு தொண்டாற்றுவதோடு நில்லாமல் எல்லோரிடமும் அன்பின்வழி வாழ்ந்து இறைவனை அடைவது ஆகமம் எனலாம். சிவஆகமம் என்பது சிவலிங்கத்தை பூசை செய்வதற்கு உரியனவற்றை முறையாகச் செய்து இறைவனை அடைவது  சிவ ஆகமம் ஆகும்.

சைவத்தின் உட்சமயங்களும் வழிபாட்டு முறைகளும்

சிவனின்    வெவ்வேறு வடிவங்களை வைத்து அவனின் பெயரும் தன்மையும் வேறுபடுகின்றன. சைவ சமயம் சிவனை முதலாகவும்  சைவ உட்சமயம்      சிவத்தின் வேறு தன்மைகளையும் சிவக்குடும்பத்தை மையமாகக்கொண்டு அமைகின்றன. சைவத்தின் உட்சமயங்களாக சிவாகமங்கள் ஆறினைக் கூறுகின்றன. அவை, பாசுபதம் என்பது பிள்ளையாரை வழிபாடு செய்வது, மாவிரதம் என்பது முருகனை வழிபாடு செய்வது, சைவம் என்பது சிவனை வழிபாடு செய்வது, காளாமுகம் என்பது வீரபத்திரனை வழிபாடு செய்வது, பைரவம் என்பது பைரவரை வழிபாடு          செய்வது, வாமம்          என்பது சக்தியை வழிபாடு செய்வதாகும்.  அவ்வழிபாட்டைச் சைவர்கள்  எத்தோற்றத்துடன் எவ்வாறு செய்வார்கள் என்பதை காணலாம்.

பாசுபதம் – உடம்பில் சாம்பலையும் களிமண்ணையும் பூசுவர், கருப்பு உடை அணிவர், தலைமயிர் வைத்தும் வைக்காமலும் இருப்பர், பசுபதியையும் இலிங்கத்தையும் சிவகணங்களையும் பேய்களையும் வழிபடுபவர். சாதி வேறுபாடு அற்றவர், முகத்திலும் தோளிலும் கொப்பூழிலும் மார்பிலும் இலிங்க முத்திரை இடப்பெற்றிருப்பர்.

மாவிரதம் -         உடல் முழுதும் நீறு பூசுவர், தலைமயிர் உச்சியிலும் காதிலும் கழுத்திலும் கைகளிலும்        எலும்புகளை அணிகலன்களாக அணிவர். மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பர்.

காபாலம் - பழமையானது, சிவனை பைரவர் வடிவத்தில் வணங்குவர், ஜடை வைத்திருப்பர் புலித்தோலை அணிந்தவர், கபாலம் ஏந்தியவர் நரபலியில் ஈடுபடுபவர்.

வாமர் - அனைத்தும் சக்தியின் வடிவம், வாம நூலில் விதித்த முறையை ஒழுகுவர் சக்தியில் லயித்தே முக்தி அடைவர்.

பைரவம் – பைரவனே பரம்பொருள், பைரவ மதத்திற் சேர்வதே முக்தி என்பர்.

சைவம் – சிவனையே முழுமுதற் கடவுளாக வழிபடுவர், அவனை அடையப் பாடுபடும் சமயம், பதி, பசு, பாசம் ஒப்புக்கொண்டவர்.

வீரசைவம்          - சிவனை மட்டுமே இலிங்க வடிவில் வழிப்படுவர், இலிங்கத்தை மார்பில் தொங்கவிடுவர், நெறி வழுவாது பக்தி செலுத்துபவர்.

சிவலிங்க வழிபாடும் வகைபலனும்

திருவாருரில் பிறக்க முக்தி, காஞ்சிபுரத்தில் வாழ முக்தி, சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி, மதுரை சொல்ல முக்தி, அவிநாசி கேட்க முக்தி, திருமறைக்காடு தீர்த்தமாட முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர் ஆன்றோர்.   நினைத்தாலே முக்தி அருளக்கூடிய  சிவனை நாம் ஆற்று மணலில் இலிங்கம் அமைத்து வழிபட்டால் தீர்க்க ஆயுள், பசுஞ்சாணத்தால் இலிங்கம் அமைத்து வழிபட்டால் செல்வம், திருநீற்றால் இலிங்கம் அமைத்து வழிபட்டால் முக்தி, ஆற்று மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டால் இன்பம், செல்வம், மைந்தர், சந்தனத்தால் இலிங்கம் அமைத்து வழிபட்டால் குபேரபாக்கியம், வீடு, மாடு கிடைக்கும் என்பர். வீட்டிலுள்ள  பொருள்களை வைத்தும், மண்ணால் இலிங்கம் அமைத்து வழிபட்டாலும், மனதால் நினைத்தாலும் முக்தி தரக்கூடியவர் சிவபெருமான். அம்மையப்பரை வணங்கினால் நல்லன அனைத்தும் கிட்டும், சிவனை வழிபட்டோரின் வாழ்கை செழித்தோங்கி வாழ்வார் என்பது  நம்பிக்கை. சிவ வழிபாடு மிக எளிமையான வழிபாடு என்பதற்கு இவைகள் சான்றாகின்றன.

 தமிழ்க்கடவுள்

தொல்காப்பியத்தில் சிவபெருமான் குறிக்கப்படவில்லை. நானில மக்களும் பொதுவான நிலத் தெய்வங்களைக் கூறுகின்றனர். சிவனைக் கூறவில்லை, “ஊர்பேர்          குணங்குறியற்று, மன மொழி மெய்களைக் கடந்து எங்கும் நிறைந்திருத்தல், எல்லாம் அறிந்திருத்தல், எல்லாம் வல்லதாதல், என்று முண்மை, அருள் வடிவுடைமை, இன்ப நிலை நிற்றல், ஒப்புயர்வின்மை, மாசுமறுவின்மை ஆகிய எண் குணங்களை யுடையதாய் எல்லாவுலகங்களையும் படைத்துக் காத்தழித்து          வரும்          ஒரு பரம்பொருள் உண்டென்று நம்பி அதனை வழிபடுவதே கடவுள் நெறியாம்”4(பக்.96) என்கிறார் தேவநேயப் பாவாணர். மேற்கூறப்பட்ட எண்வகை குணங்களையும் ஒருங்கேப்பெற்றவர் எம்பெருமான் சிவன் ஆவார், சங்கப் பாடல்களிலும் சிவன் என்னும் பெயரில்லை, எனினும் சிவனின் இயல்புகளாக,

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை

மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்

– என்கிறது புறம் 56 ஆம் பாடல்

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று ஒருவன் – என்கிறது புறம் 91ஆம் பாடல்

நன்றாய்ந்த நீள்நிமிர் சடைமுது முதல்வன்

– என்கிறது புறம்166 ஆம் பாடல்

 இப்பாடல் வரிகளால் விரித்த சடையுடையவன், கணிச்சியைக் கொண்டவன் பிறைநுதலன், நீல மணிமிடற்றன் போன்றவை சிவபெருமானின் தோற்ற இயல்பைக் காட்டுகின்றன, மேலும் சிலப்பதிகாரம் பிறவா யாக்கைப் பெரியோன் என்றும்  மணிமேகலை நுதல்விழி நாட்டுத் திறையோன் என்றும் சிவபெருமானைச் சிறப்பிக்கின்றன. “சிவ என்னும் சொல்லுக்குச் செம்மை என்றே பொருள். கடவுளைச் செம்பொருள் என்பது தமிழர் மரபு. சிவந்த மேனியுடையவராகவே சிவன் போற்றப்படுகிறார். அழல் வண்ணன், செக்கர் மேனிப் பெருமான், பவளம்போல் மேனியன் என்று  கூறுதல் காணலாம். எனவே சொல்லாராய்ச்சியின் முடிவும் சிவனைத் தமிழ்க் கடவுள் என்றே பறைசாற்றுகிறது. ” 5(பக்.98) என்கிறார் தேவநேயப்பாவாணர்.

திராவிடர் தெய்வம்

திராடவிடர் முதலில் உருவமில்லாத  தெய்வங்களை வழிபட்டனர் அத்தெய்வ வழிபாடு பின்னாளில் சிவ வழிபாடாக மாறின எனலாம் இன்றும் வீடுகளில் நல்நிகழ்ச்சி நடைபெறும் பொழுது முதலில் சாணத்திலோ சந்தனத்திலோ மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வர் அப்பிள்ளையார் சிவலிங்க உருவமோ என எண்ணத் தோன்றுகிறது. “சிவபெருமான் தென்னாட்டுத் தமிழரின் (திராவிடரின்) பழம் பெருங்கடவுள். தமிழர் சிறு தெய்வங்களையும் வணங்கினார்கள் ஆனால், அச்சிறு தெய்வங்களுக்கெல்லாம் ஒரு          பெருந்தெய்வமாக, முழு முதற் கடவுளாகச்           சிவபெருமானைத் தமிழர் வணங்கிப் போற்றினார்கள். பழங்காலத்தில் சிவபெருமானை வணங்கியவர்கள் உருவம் இல்லாத ஓர் அடையாளத்தை வைத்து வணங்கினார்கள். உருவம் இல்லாத அந்த அடையாளத்தின் பெயர் இலிங்கம் என்பது. சிவலிங்கத்துக்குத் தமிழர் வழங்கிய பெயர் ’கந்தழி’ என்பது. இலிங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு, பழைய கந்தழி என்னும் பெயர் மறைந்து விட்டது. கந்தழியாகிய சிவலிங்க வழிபாடு மிகமிகத் தொன்மையானது. சிவபெருமானுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆதிரை முதல்வன், ஆதிரையான், ஆலமர்கடவுள், ஆனேற்றுக் கொடியான், ஈர்ஞ்சடை அந்தணன், எரிதிகழ் கணிச்சியான், ஏற்றூதியான், கறை மிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள், சடையன், செல்விடைப் பாகன், தாழ்சடைக் கடவுள், நீர்சடைக் கரத்தோன், நீலமிடற்றொருவன், புதுத் திங்கட் கண்ணியான், மணிமிடற்றண்ணல், மழுவாள் நெடியோன், முக்கட் செல்வன் முதலிய பெயர்கள் சங்க நூல்களில் காணப்படுகின்றன என்று கூறுகிறார்” 6(பக்.68) மயிலை சீனி. வேங்கடசாமி.

வடநாட்டார் வணங்கிய உருத்திரனுக்கும் தென்நாட்டார் வணங்கிய சிவனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்பர். எனினும் பிற்காலத்தில் சிவனும் உருத்திரனும் ஒன்றாயினர் என்பதிலிருந்து வெவ்வேறானத் தோற்றத்தால் வழிபட்டாலும் சிவன் ஒன்றே என்று உணரமுடிகிறது. தொண்டை நாட்டு குன்றத்தூர் அருகிலுள்ள சோழர் கால சிவத்தலங்களில் இணைந்த அம்மையப்பரை சிற்ப வடிவிலும், இலிங்க வடிவிலும் என்றும்  தரிக்கலாம்.   “எந்நாட்டவர்க்கும் இறைவ னாகிய  கடவுளைத் தென்னாட்டவர் சிவன் என்று சொல்லி வழிபடுவர்.  இதனைத் திருவாதவூரடிகள், தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று குறிப்பது தமிழறிஞர் பலரும்  சால அறிந்ததொன்று மேனாட்டாராய்ச்சியாளரும் கிரையர்சன், சர்ஜான் மார்ஷல், அறிஞர் எர்னஸ் டுமாக்கே. எச்.எம். பிரெயில்ஸ்போர்டு முதலியோர் சிவனை வழிபடும் சமய நெறி திராவிடருடையதென்று துணிந்துரைத்துள்ளனர். தென்னாட்டைத் திராவிட நாடு என்றும் அந்நாட்டவரைத் திராவிடர் என்றும்  உலக அறிஞர் பலரும் ஒருமுகமாகக் கூறுவது  உண்மை.  ஆகவே சிவ நெறியாகிய சிவ வழிபாட்டைச் சமயம் தென்னாட்டாக்குச் சிறப்பாக உரியதாதல் தெளியப்படும். முழுமுதற் கடவுளாகிய சிவத்தைச் சைவனென்று வழங்குவதுண்டு. அதனால் சிவ நெறி சைவமென்று வழங்குவதாயிற்று”7(பக்.33) என்கிறார் ஒளவை சு.துரைசாமிபிள்ளை.  உருவமில்லாத வழிபாட்டோடு தொடர்புடையது இலிங்க வழிபாடு ஆகும். அவ்வழிபாடு  திராவிட வழிபாடு எனத் தெளியலாம்.

 முடிவுரை

மனித இனத்தை நல்வழிப்படுத்திடத் தோன்றியதே சமயமாகும். எல்லா சமயங்களும் நன்னோக்கம் உடையனவாகும், செல்லும் வழிகள் பலவாயினும் சேருமிடம் ஒன்றாகும். இறைவனைப் போற்றுதலும் அவன் இயல்புகளைக் கூறுதலுமாய் சமயங்கள் அமைகின்றன. அவன் அருளால் அவன்தாள் பணிந்து என்றவாறு அவனருளால் தோன்றிய சமயம், சைவ  சமயமாகும். இச்சமயம் தமிழர் சமயம் என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

அடிக்குறிப்புகள்

1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – முனைவர் அ. தட்சிணமூர்த்தி. (பக்.326)

2. பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்  ஞா. தேவநேயப் பாவாணர். (பக்.91)

3. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்(பக்.21)

4.பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் -ஞா. தேவநேயப் பாவாணர். (பக்.96)

5. பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் -ஞா. தேவநேயப் பாவாணர். (பக்.98)

6. சமயங்கள் வளர்த்த தமிழ் – மயிலை சீனி. வேங்கடசாமி (பக்.68)

7. சைவ இலக்கிய வரலாறு – ஓளவை சு. துரைசாமிப் பிள்ளை (பக்.33)

 

பார்வை நூல்கள்

டாக்டர் ப. அண்ணாமலை - பக்தி இலக்கியம், பாரி புத்தகப் பண்ணை, சென்னை – 108. மறுபதிப்பு – 2019

கா. அப்பாத்துரையார் -  தென்னாட்டுத் திலகங்கள், வசந்தா பதிப்பகம், சென்னை   – 88, முதல் பதிப்பு  – 2003.

வ. த. இராம சுப்ரமணியம்  - திருமகள் தமிழகராதி, திருமகள் நிலையம், சென்னை-17, ஐந்தாம் பதிப்பு, செப்டம்பர் - 2012.

முனைவர் அ. தட்சிணா மூர்த்தி - தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை – 40. திருத்திய மறுபதிப்பு - மே2023.

ஞா. தேவநேயப் பாவாணர் - பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், பூம்புகார் பதிப்பகம், சென்னை–108, மூன்றாம் பதிப்பு – 2020.

மயிலை சீனி. வேங்கடசாமி  -  சமயங்கள் வளர்த்த தமிழ்

பதிப்பாசிரியர்: புலவர் கோ. தேவராசன், வெளியிடுவோர் எம்.வெற்றியரசி சென்னை – 88. முதற் பதிப்பு – 2002.