ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சூழலியல் நோக்கில் இலையுதிர் நிர்வாணங்கள் (Ecological Approach on Ilayuthir Nirvanangal)

கட்டுரையாளர்: ஜோதிலட்சுமி லோ. முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம், அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா - 678104 | நெறியாளர்: முனைவர். க. சிவமணி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம், அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா – 678104 31 Jan 2024 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

      இயற்கையமைப்பில் அமைந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தன்னைத் தன் சுயத் தேவைக்காகச் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அனைத்தையும் வரைமுறை இல்லாமல் அழிக்கத் தொடங்கி விட்டான். இதன் விளைவாக மழை பெய்யாமல் போய்விட்டது. பருவநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறுச் சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மாசுக்கள் கலந்துள்ள இன்றைய உலகினை மிகத் தெளிவாகத் தன்னுடைய கவிதை வரிகளில் எடுத்துரைக்கிறார் கோவை சசிக்குமார். தன்னுடைய “இலையுதிர் நிர்வாணங்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் சூழலியல் பாதிப்புக்களை எவ்வாறு எடுத்துக் கூறுகிறார் என்று விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

Abstract

      All the living beings are playing their own role well in the natural environment. But only man exploiting his natural surrounding for his own selfish needs. Consequently rainfall started to decrease. There are lots of challenges to be handled because of climate change. Kovai. Sasikumar, in his poem clearly explaining the present situation of earth in which pollution in everything and everywhere. This article highlights, the references of ecological impacts by Kovai Sasikumar in his work “ Ilaiyuthir Nirvanangal”.

திறவுச்சொற்கள்

      சூழலியல், இயற்கை அழிவு, நிலத்தடி நீர், மணல் கொள்ளை

Key Words

      Ecology, Natural Disasters, Ground Water, Sand Mining

முன்னுரை

      உலகில் எந்த மொழி பழமை ஆனதோ, அந்த மொழி இயற்கையுடன் இசைந்து காணப்படுவது அந்த மொழியால் தான் இயற்கையின் முழுப் பரிமாணங்களையும் உணர்த்த முடியும். அப்படித் தமிழைப் போல் இயற்கையைப் பதிவு செய்த மொழி உலகில் வேறொன்றும் இல்லை எனலாம்.

      ஒரு மனிதன் வெட்கப்பட்டுத் தன்னுடைய நிர்வாணத்தை மறைக்கத் துவங்கிய நாள் முதல் இயற்கை சுரண்டப்பட்டு வருகிறது. உயிர்கள் வாழப் பலவிதமான வளங்களைப் படைத்துள்ளது இயற்கை. பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கை வளங்களை எப்போது மனிதன் சுரண்டத் தொடங்கினானோ அப்போதே இயற்கை அழியத் தொடங்கியது. அழிவின் உச்சிக்கு இயற்கையைத் தள்ளிவிட்டுக் காலடியில் பூமி சரிவதைப் பார்த்த பிறகே பலரும் ‘சூழலியலின்’ பக்கம் திரும்ப முயற்ச்சித்தனர்.

      சங்கச் செய்யுள்கள் பல வற்றிலும் நிலம், நீர், வளி என்னும் ஐம்பூதங்கள் பற்றிய விழிப்புணர்வும் அறிவுத் தெளிவும் இருந்திருக்கின்றது. இதற்குச் சான்றாகக் குறுந்தொகையில்,

            நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

           நீரினும் ஆர் அளவு இன்றே......”

           “ நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்

           விலங்கு இரு முந்நீர் காலின் சொல்லார்..”

போன்ற வரிகள் மூலம் சூழல் பற்றிய தெளிவு தமிழர்காளிடம் காணப்படுவதை உணர முடிகின்றது.

      நிலம்,நீர்,காற்று முதலிய இயற்கை மூலாதாரங்கள் மாசுபாடு அடைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகின்றது. காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதாலும், தொழிற்சாலைக் கழிவுகளும் வாகனங்களில் இருந்து வரும் புகையும் காற்றிலும் நிலத்திலும் கலப்பதால் இயற்கை ஒவ்வொரு நாளும் நாசமாகிகப்பட்டு வருகிறது. நீரின் இன்றியமையாமையை,

            நீரிஇன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

           வான் இன்று அமையாது ஒழுக்கு” ( குறள் 20)

என்ற அடிகளில், நீரில்லாமல் உலகம் அமையாது. அதைப் போல் நீரைத்தரும் வான்மழை இல்லாமல் போனால் எல்லோரும் ஒழுக்கம் இழப்பர். எனவே மழை வளம் பெருக மரம் இன்றியமையாத ஒன்றாகும் என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

      மகாகவிகள் பாரதியும், பாரதிதாசனும் இயற்கையப் பாடிய முதல்தலைமுறை. பாரதிதாசன் அவர்களின் ‘அழகின் சிரிப்பு’ கவிதைகள் இன்னும் இயற்கையைக் கண்முன்னே கொண்டு வந்து சிலிர்ப்பூட்டுபவையாகும். அவை,

அருவிகள் வைரத்தொங்கல்

அடர்வனம் பச்சைப் பசும் பட்டு

குருவிகள் வெய்யில் மின்னும்

          குளிர் மணிக்குப்பை....”

என்று அவர் காட்சிப்படுத்தும் விதம் இயற்கை அழகை கண் ,முன்னே கொண்டுவருகிறார். அவையெல்லம் அந்தக் காலம். ஆலைப்புகையும், சாயக்கழிவுகளும், வாகனப் பெருக்கமும் இல்லாத காலம். ஆனால் சசிக்குமாரின் கவிதைகளில் வெளிப்படும் இயற்கை குறித்த உண்மைகள் நம் உள்ளத்தைச் சுடுகின்றன.

      சசிக்குமார் அவர்கள் இதற்குமுன் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘சிறகசிப்பில் மிளிரும் வெயில் (2018)’ ‘பிப்ரவரி 14 (2020)’ ‘இளையுதிர் நிர்வாணங்கள்’ இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. ‘இலையுதிர் நிர்வாணங்கள்’ என்று ஏன் கவிதை நூலுக்குப் பெயர் சூட்டியுள்ளார் என ஒரு கணம் நினைத்துப் பார்க்கும் போது அவருடைய கவிதைகள் மலை முகடுகளில் துவங்கி மரங்கள் தரித்துள்ள ஆடையான இலைகள் பச்சையமிழந்து சருகாகி உதிர்வதில் முடிகிறது. காரணம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் அப்பா, அருகில் உள்ள கல்குவாரி வெடிச்சத்தத்தின் போது அவருடைய தந்தை கூறிய வார்த்தை, ‘ஒவ்வொரு வெடியும் என் இதயத்தில் இடி விழற மாதிரி இருக்கு’-னு அவர் கூறிய வார்த்தையின் பிரதிபலிப்புத்தான் ‘இலையுதிர் நிர்வாணங்கள்’ தொகுப்பு. இவருடைய ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு புத்தகம் என்றே கூறலாம். அத்தனை வலிகளையும் வேதனைகளையும் பிரதிபலிக்கும் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கைச் சுரண்டல் /மரம் வெட்டுதல்

      இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயற்கையை அழிப்பது என்பது ஒரு சாதாரணமான  ஒரு விஷயமாகச் செய்து வருகிறான். மரங்ககளை வெட்டிக் காடுகளை அழிப்பதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவன் உணர்வதில்லை. ஆனால் மரங்ககள் எல்லாம் தன்னை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை உணர்கின்றன என்பதை கவிஞர் மரத்தின் அழிவை தனது எழுத்தின் மூலம் கூறுகின்றார். இதனை,

            “......................

           ஒவ்வொன்றும் கண்ணீர்

வடித்துக் கதறுகையில்

நிழல் தொடரும் மனிதர்கள்

சமூகங்களை உருவாக்கி

வனத்தினைக் கொன்று வன்மத்தில்

கிளையொடித்து

மகிழ்கையில்

இறக்கும் ஒவ்வொரு

இலைச் சருகும்

பெரும் சாபமொன்றை

உதிர்த்து விட்டுத்தான்

பச்சையமிழக்கின்றன”   

  • (பக்கம் 29)

என்று மரத்தின் சாபத்தைக் குறிப்பிடுகின்றார். எல்லா உயிர்களும் உயிர்வாழப் போராடுகின்றன. அவ்வாறு போராடும் மரங்களை மனித இனம் அழிக்கும் போது மரங்கள் ஒவ்வொன்றும் தன்னுடைய சாபத்தை இட்டுத்தான் செல்கின்றன எனப்பதிவு செய்கிறார் கவிஞர்.

நிலம் மாசடைதல்

      உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையானது நிலமாகும். நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பவே அவர்களின் வாழ்க்கை முறையும் அமைகிறது. அப்படிப்பட்ட நிலம் இன்று மாசடைந்து காணப்படுவதற்கு முழுமுதற்காரணம் மனித இனம் தான். நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை வற்ற செய்கிறான் மனிதன். மனிதன் உயிர் வாழ,நீர், நிலம் போன்றவை இன்றியமையாத காரணிகளாகத்  திகழ்கின்றன. இருந்தும் மனிதன் தன் சுயநலத்திற்காகக் காடுகளையும், நிலங்ககளையும் அழித்து வருகிறான். இதனால் பாதிக்கப்படுவது பல உயிர்கள் என்பதை உணர்வதில்லை. காடுகள், மலைகள் அழிக்கபடும் போது அங்குள்ள ஜீவராசிகளான  உடும்பு, நரி,தவளை, பறவைகள், நண்டுகள் போன்றவைகளும் அழிக்கப்படுகின்றன. மேலும் நிலத்தடி நீரும் இதனால் வற்றி வருவதை மனிதன் உணர்வதே இல்லை என்பதைக் கவிஞர்,

            விஞ்ஞானம் வளராத வரை

           மலையாகவோ கரடாகவோ

           உடும்பு மேயவும்

           நரிகள் தூங்கவும்

           பறவைகள் இளைப்பாறுவதற்கெனவும்    

           பரந்து கிடந்தது

            கொஞ்சம் கொஞ்சமாய்க்

           குடைந்து

           போன வருசம்

           அடியோடு அள்ளிப் போனதில்

           சுற்றிலுமிருந்த கேணிகளில்

           சுத்தமாய்த் தண்ணீரில்லை

  • (பக்கம் 38)

என்ற வரிகளில் மனிதனின் நாகரீக வளர்ச்சியினால் நிலத்தின் இன்றைய நிலையைத் தெளிவாகக் கூறுகிறார்.

      மனிதன் தனது சுயநலத்திற்காகவும் சந்ததிகளின் எதிர்காலத்திற்காகவும் இயற்கையை அழிக்கிறான். அது தனது சந்ததிகளுக்குப் பாதிப்பு என்பதை உணராமல் வாழ்வில் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக உணர்கிறான். வருங்காலச் சந்ததிகளுக்குக் கிண்று, குளம், குட்டை போன்றவைகளின் அருமையை உணராமலேயே போய்விடும். விவசாயம் அழிந்து நாம் இன்று காணும் கடைசி விவசாயக் குடும்பமும் இயற்கையோடு சேர்ந்து அழிந்து போவதைக் கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்,

            பத்தாண்டுகளுக்கு முன்னால்

           நிரம்பி வழிந்த கிணறு

           நீர்வற்றி வெளியேற முடியாத

           தவளைகளின்

           கொலைக்களமாகின்றது

           வறட்சியில்

            வெள்ளாமை சாமாங்களை

           அடகு வைத்து

           ஆள்துழைக் கிணற்றுக்கு

           அடிக்கு அறுபது ரூபாய் வீதம்

           செலவு  செய்து சொட்டுச்சொட்டாய்

           வடியும் போது

           தண்ணீர் தண்ணீரொன்று

           இருகரம் குவித்துப் பிடித்து

           மடக் மடக்கென்று குடித்தார்

           கொடை வெயிலில்

           தலைதாழ்த்திக் கதறும்

           தென்னைமரம்

           சருகு காயும் வாழைமரம்

           மெல்ல நிமிருமென்று நம்பினார்

           தன்னைக்கும் வாழைக்கும்

           தெரியாமல்

           நிலமட்ட நீரும் வற்றிப் போகும்

           காங்கீரீட் காடுகளாகும்

           மனித வனம் பற்றி

           பாவம் அப்பாவுக்குத் தெரியவில்லை.”

  • ( பக்கம் 23)

என்ற வரிகளில் ஒரு விவசாயின் குடும்பம் அழியும் நிலையினையும் கூடவே இயற்கை அழிவையும் நம் ஆழ்மனதில் ஆழ்துளைக் கிணறு போல் துளையிட்டுக் காட்டுகிறார். மேலும் அழிவு இயற்கைக்கு மட்டுமல்ல மனித இனத்திற்கும் தான் என்று தெளிவாகத் தன் கவிதை வரிகள் மூலம் எடுத்துக் கூறுகிறார்.

மணல் கொள்ளை

      இயற்கை, நமக்கான செல்வத்தைக் கொட்டிக்கொடுக்க அதன் மதிப்புத் தெரியாதவர்களால் சீரழிக்கப் படுவதும், அதன் மதிப்பை உணர்ந்தவர்கள், அதை எப்படிப் பணமாக்கலாமென யோசிப்பதுமே சமகாலத் துயரமாக இருக்கிறது. இயற்கையைச் சீரழிக்கும் போது பெருக்கெடுத்து ஓடும் நதிகாள் காணாமல் போகும் நதியில் வாழும்  ஜீவராசியான மீன்களின் நிலையினை நாம் ஒருநாளும் எண்ணிப் பார்த்ததில்லை. அதுமட்டுமல்லாமல் நண்டுகள் சாபமிட்டும் செல்கின்றன. வற்றிய நதியில் இயந்திரங்கள் வைத்து மனிதர்கள் மணல்களை அள்ளிச் செல்கின்றனர். அந்நதியில் வாழும் மீன் ஒன்று வருத்தப்பட்டு என்னைக் கருவாடாக்கியது போல் இந்த பூமியையும் ஆக்கிவிடாதே மனிதா என்று கூறுவதைக் கவிஞர்,

அனல் தகிக்கும்

           வெப்பக் கதிர்களை

           மனச்சாட்சியற்று

           உமிழ்ந்து வீசிய பொழுதும் 

           குழிகளைத் தோண்டி

           மணலுக்குள் மறையும்

           நண்டுகள் பரிதவித்துச் சாபமிடுகின்றன

           கரையின் இருபுறமும்

           வேர் நனைத்துச் சென்ற

           தண்ணீரின் பாதையில்

           கொக்கரிக்கும் பொக்கிலியன் இயந்திரங்கள்

           மணல்களைத் தின்று

           ஏப்பம் விட்டுக்

           கொண்டிருக்கின்றன

           என்றோ உயிர் வாழ

           ஆசைப்பட்ட மீசை வைத்திருக்கும்

           மீன் கடைசி ஆசையாக

           வேண்டித் துடிக்கின்றது

           நான் கருவாடவதில் கவலையில்லை

           சிரித்துக் கொண்டிருந்த

           பூமியை என்னைப் போல்

           ஆக்கி விட்டாயே மனிதா என்பதில் மெல்லத்

           துடித்து அடங்கியது

           நீரற்ற மீனின் சடலம்

  • பக்கம் 25

என்ற வரிகளில் மணல் கொள்ளை மூலம் வியாபரம் காணும் மனிதர்களையும் அழிந்து வரும் நதிகளையும் விரிவாக வலிமிகுந்த சொற்களால் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.

      மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கிற வசதிகள் பலவும் இறுதியில் மனிதனுக்கே துன்பம் தரக்கூடியதாக மாறுகிறது. அதுமட்டுமல்லாமல் மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதனால் மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் உணர்வதே இல்லை. மரங்களை அழிப்பது மூலம் பின்னால் வரும் விளைவுகளை உணர்வதில்லை. மேலும்  நதிகளின் மணல்ப்பரப்பு வறண்டு போகும் படி சுரண்டியவர்களால் மரங்களின் வேர்களும் ஈரம் வற்றித் தாகத்தில் தவிக்கின்றன. மரங்களின் வேர் காய்ந்ததால் இலைகளின் பச்சையம் மறைந்து சருகாகி உதிர்கின்றன. இலைகளை உதிர்ந்த மரங்கள் நிர்வாணமாகக் காட்சியளிக்கின்றன என்பதைத் தன்  கவிதை வரிகள் மூலம் மரங்கள் உயிர் பிச்சை கேட்டு நிற்பதை வெளிப்படுத்துகிறார் கவிஞர்,

            ஆற்று மணலையும்

           காட்டு மரங்களையும்

           மனித மிருகங்கள்

           சுயநலத்திற்காக

           சுரண்டியும்

           வெட்டியும்

           தன்னகப் படுத்தியதால்

           நாட்டுக்குள்

           நாதியற்றுப்  போனோமென்று

           தென்றல் காற்றில்  கலந்து வந்த

           மூர்க்கத்தின் வலிமையில்

           அசைந்து போன வேர்களினால்

           தளிர்த்த மரமொன்று

           ஆடைகளைந்த நிர்வாணமாய்

           இலைகளையும் உதிர்த்து

           உயிர்ப்பிச்சை கேட்கிறது

  • பக்கம் 86

என்ற வரிகள் மூலம் இயற்கையின் இன்றைய நிலையினைக் கூறுகின்றார்.

முடிவுரை

      ‘இலையுதிர் நிர்வாணங்கள்’ என்ற கவிதை நூல் மரத்தின் ஒவ்வொரு இலை உதிர்வையும் அதன் கிளைகள் சிந்திய கண்ணீரை வலிமிகுந்த வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார். கவிஞரின் ஒவ்வொரு கவிதையும் வார்த்தைகளின் பயன்பாடும் மரத்தின் வேர்போல் வலிமையுடையதாகக் காணப்படுகிறது. மனிதனும் சூழலியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. மனிதர்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அவர்களின் வாழ்வு முறையும் வாழ்க்கைச் செயல்பாடுகளும் அமையும் என்பதனை இக்கட்டுரையின் வழி நாம் அறியமுடிகின்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

பயன் படுத்திய நூல்கள்

  1. இலையுதிர் நிர்வாணங்கள் – கோவை சசிக்குமார், பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
  2. காலந்தோறும் தமிழ்க் கவிதை மரபுகள் – முனைவர். பா. ஜெய்கணேஷ், பரிசல் புத்தக நிலையம்
  3. தமிழ் இலக்கிய வரலாறு – மு.வரதராசன்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. திருக்குறள் – திருவள்ளுவர்
  6. குறுந்தொகை
  7. இணையம்
  8. பருவ நிலை மாற்றம் – இரா.மகேந்திரன், ஜெ.பழனிவேல், காலச்சுவடு.
  9. சூழலியல் ஒரு அறிமுகம் – க.வி.இலக்கியா, சா.சு. நந்தினி, விடியல் பதிப்பகம்.