ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் கல்வெட்டுகளில் தொழில் குடிகள் (Professional Tribes as Gleaned from Tiruvannamalai Arunachaleshwara Temple Inscriptions)

கட்டுரையாளர்: ஜெ.விஜயகுமார், முனைவர் பட்ட ஆய்வாளர், முதுகலைவரலாறு & ஆராய்ச்சி துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,  செய்யாறு-604 407 | நெறியாளர்: முனைவர்.ஏ.மாரிமுத்து, முதல்வர், டாக்டர் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடவாசல்- 612601   31 Jan 2024 Read Full PDF

Abstract

There are 505 inscriptions in the Arunachaleswarar temple at Tiruvannamalai. There are inscriptions of rulers who ruled from the Pallava to the Vijayanagara period. In the inscriptions, we can learn about the occupation of the people of that time from the gifts given by the kings. Chettiar, Sakkiliyar, Paraiyar, Idiyar, Vellalar, Kaikkolar, Thachar, Vannar, Navidar, Mattalam, Kammalar, Oduvar are refered to the inscriptions found here. This article reveals about the professional people with the inscription as evidence.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் 505 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவர் காலம் முதல் விஜயநகர காலம் வரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் கல்வெட்டுகளில் அம்மன்னர்கள் வழங்கிய கொடைகளில் அக்காலத்தில் இருந்த தொழில் குடிகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக செட்டியார், சக்கிலியர், பறையர், இடையர், வெள்ளாளர், கைக்கோளர், தச்சர், வண்ணார், நாவிதர், மத்தளக்காரர், கம்மாளர், ஓதுவார் ஆகிய குடிகள் இருந்துள்ளனர்.    இக்கோயில் கல்வெட்டுகளை சான்றாகக் கொண்டு இடைக்காலத்தில் இருந்த தொழில் குடிகள் பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

Key Word

     Thiruvannamalai, Inscription, Occupation, Pallava, Chola, Vijayanagara, Donation. Tax, Land, Sale, Chettiar, Sakkiliar, Paraiyar, Pastoral community, Vellalar, Kaikkolar, Thacher, Vannar, Navidar, Mattalam, Kammalar, Tiruppattu Odhuvar

திருவண்ணாமலை, கல்வெட்டுகள், தொழில், பல்லவர், சோழர்கள், விஜயநகர், நன்கொடை, வரி, நிலம், விற்பனை, செட்டியார், சக்களியர், பறையர், இடையர், வெள்ளாளர், கைக்கோளர், தச்சர், வண்ணார், நாவிதர், மத்தளக்காரர், கம்மாளர், ஓதுவார்

முன்னுரை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் 505 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவர் காலம் முதல் விஜயநகர காலம் வரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் கல்வெட்டுகளில் அம்மன்னர்கள் வழங்கிய கொடைகளில் அக்காலத்தில் இருந்த தொழில் குடிகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக செட்டியார், சக்கிலியர், பறையர், இடையர், வெள்ளாளர், கைக்கோளர், தச்சர், வண்ணார், நாவிதர், மத்தளக்காரர், கம்மாளர், ஓதுவார் ஆகிய குடிகள் இருந்துள்ளனர்.    இக்கோயில் கல்வெட்டுகளை சான்றாகக் கொண்டு இடைக்காலத்தில் இருந்த தொழில் குடிகள் பற்றி இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

செட்டியார்

”செட்டி” என்பவர் வணிகராவார்.[1] இவர்கள் வணிகர்களில் ஒரு பிரிவினராவர். வலங்கைமான் வட்டாரத்தில் செட்டியார்களைப் பற்றியக் குறிப்புகள் மூன்று கல்வெட்டுகளிலும், ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன. கீழ்க்கோயில்பட்டு பூலோகநாதர் கோயிலில் உள்ள சரபோஜியின் 6-ஆம் (பொ.ஆ.1717) கல்வெட்டில் மான்மவாடியைச் சேர்ந்த குருநாத செட்டியார் என்பவர் சத்திரம் அமைக்க நிலம் கொடுக்கப்பட்டு அதை நிருவகிப்பதற்கு திரைக்கோனார் என்பவரை நியமனம் செய்துள்ள செய்திப்பற்றிக் குறிப்பிடுகிறது.[2]செப்பேட்டில் ஒப்பமிட்டுள்ள வணிகர்களாக பெருமாள் செட்டி, வெங்கடாசல செட்டி, சிவகுருநாதன் செட்டி, ஆகியோர் சாட்சிகளாக ஒப்பம் இட்டுள்ளார்கள். கனகசபை செட்டி, பட்டடை முத்தய்யன், பட்டடை குமாரசாமி பிள்ளை, முத்துவெள்ளைச் செட்டி, சின்னவீரப்பச் செட்டி, பெரியவீரப்பச் செட்டி, பட்டையார் உசிப்ப அருணாசல அய்யன் செட்டி, பட்டுநூல் செட்டி, மகமை பெரிய சேஷய்யன் நாசுப்பதனி, ஆனையப்பச் செட்டி, வாணிய கோணாசலச் செட்டி, கம்மாளபட்டடை, கைக்கொளப்பட்டடை ரெங்கப்பமுதலி, சேணியர், கம்மாளப்பட்டடை, கைக்குளப்பட்டடை ரெங்கப்பமுதலி, சேணியர்பெருமாள், சாயப்பட்டடை, எருத்துப்பட்டடை, பட்டுநூல்செட்டி, கைக்கொளப்பட்டடை, சேணியர், கம்மாளப்பட்டடை, வாணியச் செட்டி ஆகிய சாதிகளைச் சேர்ந்தோர் ஒப்பம் இட்டுள்ளனர்.[3] செட்டி என்பவர் வணிகராவார்.[4]  இவர்கள் ஐந்நூற்றுவர் கூட்டமைப்பின் உறுப்பினர் குழுக்களில் ஒருவராவார்.[5]

இக்கோயிலில் செட்டியார் பற்றிய குறிப்புகள் இரண்டாம் ஆதித்தனின் 4 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 969) திருவண்ணாமலை இறைவனுக்கு இலாடைப்பாடி கூடலுடைய வாழைகினான் என்ற செட்டி என்பவர் ஒரு விளக்குஎரிப்பதற்கு 96 ஆடுகளை தானமாகத் தந்துள்ளார்.[6]  இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் 12 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1254 - 55) அரையாற்று மங்கலத்து வீமசெட்டியார் மகன் மல்லிகாசன செட்டி என்பவர் கோயிலில் உள்ள நாயனார்க்கு (இறைவன்) ஒரு நந்தா விளக்கும், ஒரு குத்து விளக்கும் 32 பசுவும், 1 காளையும் தானமாகத் தந்துள்ளார்.[7]  விஜயநகரமன்னனான வெங்கடபதி தேவ மகாராயர் காலத்தில் (சகாப்தம் 1512 (பொ.ஆ. 1590) பெண்ணை வடகரை வாணகோப்பாடி அண்ணா நாட்டு தனியூர் திருவண்ணாமலையில் 56 தேசத்தில் அருணாச்சல ஈஸ்வரனுக்கு நெய்வேத்தியத்திற்கும், சந்தி கட்டளை என கிராமத்தில் 120 பொன், 2500 கலம் நெல், 2 வது கிராமத்தில் 120 பொன், 5100 கலம் நெல் கோயிலுக்கு கொடுக்க கட்டளை இட்டுள்ளனர். இவற்றுள் பல செட்டிகள் கையெழுத்து இட்டுள்ளதை அறிய முடிகிறது.[8] மணலூர் பேட்டை பச்சையப்ப செட்டியனரையன் முதலான ஆயிரவர் நகரத்தார் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் சாமிக்கு உச்சிக்கால கட்டளைக்கும், மடத்து தர்மத்துக்கும் மகமை (சத்திர முதலியவற்றின் செலவு) 56 தேசத்து நகரத்தார் பூஜைக்கும், அமுது செலவினங்களளுக்க கொடுக்கபட்ட கொடையில் செட்டிகள் பலர் கையெழுத்து இட்டுள்ளனர்.[9]

 சக்கிலியர்

”சக்கிலி” என்போர் தோல் வேலை செய்யும் தொழில் குடிகள் ஆவர்.[10] இந்த தோல் வேலை செய்யும் தொழில்கள் மீதுசக்கிலி வரி பெறப்பட்டுள்ளதை இடைக்கால கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது. ஆய்வுக்கு எடுத்துக்ககொண்ட கல்வெட்டுகளில் சக்கிலியர் பற்றிய குறிப்புகள்  முதலாம் ராஜேந்திரனின் 18 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1030) ஆடையூர் நாட்டு சொறியான ராஜேந்திர சோழ நல்லூர் ஊர் சேர்ந்தவர்கள் ஸ்ரீராஜேந்திர சோழ சாலை உண்ணசண்டேஸ்வர தேவர் எடையில் கொண்ட பொன் 40 கழஞ்சு கொண்டு விற்று கொடுக்கும் போது  நிலத்தின் எல்லைகளை குறிப்பிடுகையில்  எங்களுர் வடக்கு லேரி (ஏரி) கீழ் கொன்றை எடுத்துக்கு கீழ்பார்கெல்லை இவ்வூர் ராஜேந்தர சோழ ஈஸ்வரமுடைய மகாதேவர் திருநந்தவனத்துக்கும், அம்பலப்பட்டிக்கும், முக்கியன்னும், வரவைக்கு மேற்கும், தென்பார் கெல்லை செப்பெத்ததுக்கு துணை நிலமாக கிட்ட கிழன் மேலாய் கிடக்கும், வரவைக்கும் வடக்கில் நாலடியில் கிழைவரவையில் கீழ்வரம்புக்கு (வரப்பு) வடக்கும், மேல்பார் கொல்லை வடக்கில் நாலாடியில் வடவரம்புக்கும், சக்கிலியன் குண்டிலுக்கும், பெருநான் கொல்லை நத்தத்தில் நூறுகாலுக்கு கிழக்கும், வடபார்கொல்லை போசநெத்தத்துக்கு தென் வரம்புக்கு தெற்கும்  எல்லைகளை பிரிக்கம் போது சக்கிலியன் குண்டு என்று குறிப்பிடப்படுவதால் சக்கியலியர்  என்ற சமூகம் இருந்துள்ளதை அறியமுடிகிறது.[11]  மூன்றாம் குலோத்துகனின் 24 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1202) அருங்குன்றங்கிழான் நாற்பத்தொண்ணாயிர பிள்ளையும் மற்றும் மங்கையர்கரசியாரும் சேர்த்து திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு செய்த பல தர்மங்களில் ஒன்று சக்கிலிக்கு தரிசனம் செய்து தோலால் செய்த தீருவடி நிலை செய்வதற்கு 6 பொன்கழஞ்சு கொடுத்து என்பதிலிருந்தும்.[12] மூன்றாம் ராஜராஜனின் 5 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1221) ஜெயங்கொண்ட சோழ குமணராயன் மருந்தனும், அழகிய சோழகங்கன் மட்டையாண்டானும் இருவரும்ய பிள்ளையார் பிருதிகங்கள் கண்மிகளான (கோயில் அதிகாரிகள்) எங்கள்வம்சத்தில் அனைவரும் பிள்ளையார் (அதிகாரி) திருவடியிலே பணி செய்து கொண்டு இருப்போம் என்றும், பிள்ளையார் ஸ்ரீ பாதம் விட்டு ஓடி போனால் எங்கள் மிணாட்டிமாரை (மனைவி) சக்கிலியர்க்கு கொடுப்பதற்கு சமம் என்று கல்வெட்டு வெட்டி கொடுத்துள்ளனர்.[13]இக்கல்வெட்டில் குறிப்பிடும் செய்தி இரண்டு கல்வெட்டுகளில் சமூக வேறுபாடுகள் இருந்துள்ளதையும், சக்கிலியரை சமூகத்தில் கீழாக வைத்திருந்ததையும் அறியமுடிகிறது.

பறையர்

பறை வாத்தியக் கருவியைக் கொண்டு இசைப்போரைப் பறையர் என்று அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் வாழ்விடங்கள் பறைச்சேரி என்றழைக்கப்பட்டன. சோழர் காலச் சமூகக் கட்டமைப்பைப் பற்றி நொபொரு கராஷிமா அவர்கள் தஞ்சாவூர் கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு பறைச்சேரியை ‘உழப்பறையிருக்கும் கீழைச்சேரி’ என்றும் ‘உழப்பறையிருக்கும் மேலச்சேரி’ என்பதிலிருந்து அவ்வூரில் இருந்த பறையர்கள் உழவுத்தொழிலில் ஈடுப்பட்டிருந்ததைச் சான்றுகளுடன் நிறுவுகிறார்.[14] மூன்றாம் குலோத்துங்க சோழனின் 27 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1205)  பாண்டிய நாட்டைச் சேர்ந்த சம்புவராயனும், செங்கேணி அத்தி மல்லன் விராண்டனான எதிரிலி சோழ சம்புவராயனும், அத்தி மல்லன் பல்லவாண்டானான குலோத்துங்க சோழ சம்புவராயனும், கிளியூர் மலையான் பெரியுடையானான இராசராச சேதிராயனும், கிளியூர் மலையமான் ஆகாராசனான இராச கம்பி சேதிராயனும், குந்தன் நம்பூரலான் இராச ராச நீலங்கரையனும், அம்மை அப்பன் மரூன்தனான இராசராச மூவேந்தரையனும், பாவந்தித்தான்னான இராசேந்திரசோழ சம்புவராயன், மலையன் நரசிங்க பன்மனான கரிகால சோழன், அடையூர் நாட்டாழ்வானும், சோமன் திருவண்ணாமலை உடையானான குலோத்துங்க சோழ பிருதிவிகங்கன், சோமன் வரந்தவானான சோளோந்திர (சோழேந்திர) சிங்கல பெருத்கங்கனும் இவர்களிடையே எற்பட்ட ஒப்பந்தத்தில்  வாண கோவரையனுக்கு உதவி செய்யும் பறையற்கு செருப்பு எடுப்பார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது.[15]மூன்றாம் ராஜராஜனின் 17 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1234) திருவண்ணாமலை உடைய நாயனாரான இறைவன் கோயில் தானத்தார் கொடுத்ததில் மேற்கு எல்லையில் பறையன் காணியான நிலமும், அவன் தம்பி சொந்தமான கொள்ளை, மருதம் பல்லத்துக்கு மேற்கும், என வரியை கொண்டு திருவண்ணாமலை உடைய நாயனாரான இறைவனுக்கு மடப்புறமாக (சமையல்) இறைவனுக்கு அமுதுக் கொடுப்பதற்காக கொடுத்துள்ளார் என்ற செய்தியிலிருந்து அறியமுடிகிறது.[16]

            வியஜயநகர அரசனான வீரவல்லாள தேவதனின் சகாப்தம் 1239 ஆம் ஆண்டில் (பொ.ஆ. 1317) ஆம் ஆண்டு மாசி மாதம் 29 ஆம் தேதி திருவண்ணாமலை இறைவனுக்கும், உண்ணாமுலை நாச்சியார்க்கும் அமுது படைக்கும், திருநாளுக்கும், பால் தருவதக்கும் கொடுக்கப்பட்ட கொடை ஊர்களைப்பற்றி குறிப்பிடுககையில்     சேதிராய நல்லூர், கொற்றிலை பட்டு, மேர்கவல் நாடாள்வான் பட்டு, பாண்டியன் பட்டு, வாண்ணேக்கன் பாடி, கூடநல் வாணபுரம், கொட்டையூர், தெப்பாக்க முடையான்பட்டு, வாகூர், காமன்பட்டு, சாத்தூர், கரும்பூர், தரையுடையான் பட்டு, கொளந்த கேன் பட்டு, கண்ணக்கேன் பட்டு, கலிங்கன் துரைபட்டு, விரணம் நெடுங்கனபட்டு, விண்ணவதிர நல்லூர், கீழ்ண்ணாத்தூர், நல்லூர், கூலைப்பாடி, திருவாண்டன், குவளைப்பாடி, பரையன் பட்டு, வில் பட்டு, மேலை புஞ்சை, வாசுதேவன் பட்டு, கங்கன பட்டு, அரவாளி நாட்டு பளயனுடையன் பட்டு, மங்கள், மயில் புள்ளுர் தாமரை பாக்கம், அரிடமங்கலம், மெலாற்றூர், பெரும் பாத்தரை, தென்தல் மல்லபாடி, கங்கை கிளிற்றூர், உளுதரை பூண்டி, முத்தரையன் பூண்டி, கட்டுப்பத்துறை ஆகிய 23 ஊர்களைில் பரையர் குடி இருக்கும் ஊரும் ஒன்றாகும்.[17]

     ஸ்ரீ அச்சுதாய தேவ மகாராயர் பிறுதுலி ராச்சியம் பண்ணிய சகாப்தம் 1456 செய சங்குவ வருடம் (பொ.ஆ. 1554) ஆம் ஆண்டில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெண்ணை வடகரை வாணகோப்பாடி அண்ணநாடு தனியூர் திருவண்ணாமலை உடைய நாயினார் திருகோயில் பண்டராத்துக்கு (கருவுலத்திற்கு) அண்ணாமலை நாதர் பெரிய மடத்து முதலியார் என்பவர் மடப்புற விலைப் பிரமானம் செய்த ஊர்களில் பரையன் பட்டும் ஒன்றாகும்.[18]அச்சுத தேவமகராயர் சகாப்தம் 1458 துன்முகி வருடம் (பொ.ஆ.1534) ஆம் ஆண்டில்கல்வெட்டில் பறைத்திடர் என்று குறிப்பிடுகிறது.[19] திருமலை தேவ மகாராயர் பிறுதிவி இராச்சியம் பண்ணிய சகாப்தம் 1492 (பொ.ஆ. 1570)  காலத்திலும் பறையன் பட்டு என்ற ஊரில் கொடை வழங்கியுள்ளனர்.[20] திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகளில் சுமார் 8 மேற்பட்ட கல்வெட்டுகளில் பறையன், பறையன் ஏந்தல், பரையன்பட்டு, பறையன் திடர் என்று குறிப்பிடுவதிலிருந்து பறையர் குடிகள் இடைக்கால சமூகத்தில் மதிப்பு மிக்க குடியாக இருந்ததை அறிய முடிகிறது.

இடையர்

ஆடு, மாடு மேய்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர் இடையர் குலத்தைச் சார்ந்தோர் ஆவர்.[21]இவர்கள் கால்நடை மேய்ப்புச் சமூகம் என்றும் இடைச்சான்றார் என்றும்அழைக்கப்பட்டனர்.செப்பேட்டில் இராஜாதிராஜ வளநாட்டில் திருக்கழுமலத்தைச் சேர்ந்த மூவருக்குப் பங்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.[22] சதுர்வேதிமங்கலத்தில் உள்ள இடையர்கள் கோயில்களில் கொடையாக வழங்கப்பட்ட ஆடு, பசுக்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கோயிலுக்கு விளக்கெரிக்கவும் நெய் வழங்க இடையர்களுக்கும் பங்குகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும். குலசேகரனின் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலையில் தன் பெயரில் சந்தி ஏற்படுத்தப்பட்டு உணவு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். தேவதானம், திருவிளையாட்டம், பள்ளிச்சந்தம் என பழைய பெயரை நீக்கி தன் பெயரால் குலசேகர நல்லூர் என பெயரிட்டுத் தந்துள்ளார். இவ்நிலத்தின் வரியான கடமை, அந்தாராயம், விணியோகம், கார்த்திகை பச்சை அரிசி, வெட்டிப்பாட்டம், கண்டி விக்கிராமப்பர், சினைப்போர், எலஞ்சினைப்பர், தறியிறை, செக்கிரை, தட்டோலி, இடையர் வரி, இன வரி, கார்த்திகை பச்சை, அழகான எருது, மனையிறை, நஞ்சை கடமை, தோட்ட கடமை, மாவடை, படிக்காவல், குற்றவாளிகளுக்கு அபராதம், கோமுற்ற மாபேர், தோளோட்டு, பொன்வரி, அயவரம் என வருவாய் பூசை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகளில் இடையர் மீதான வரி பற்றி குறிப்பிடுவதை அறிய முடிகிறது.[23]

 

வெள்ளாளர்

வெள்ளாளர் என்போர் உழவுத் தொழிலை முக்கியமாகக் கொண்டகுடியினர் ஆவர்.[24]  திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழனின் 13 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1191) ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் பல்குன்ற கோட்டத்தில் பங்கள நாட்டில் மதுராந்தக வேளாண்என்பவன் இருந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.[25]   மற்றொரு கல்வெட்டில்    குலசேகரனின் 14 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1281) மனியார் மகள் குலசேகரதேவர் மகன் அருணகிரிபெருமளான யாதவராயர் என்பவருக்கு சாலைபூண்டியில் வெள்ளாளரில் படைத்தலைவன் பெரியநாயன் மகன் மாணிக்கம் என்பர் பற்றிய குறிப்பு உள்ளது.[26]கோயில் கல்வெட்டுகளில் வேளாளர் பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

கைக்கோளர்

      கைக்கோளர் என்போர் போர் மரபைக் கொண்ட இனம் ஆகும்.[27]  கைக்கோளர்கள் பற்றி இக்கோயிலில் உள்ள குலசேகர பாண்டியனின் 15 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1282 - 83) ஆம் ஆண்டு கல்வெட்டில்திருவண்ணாமலை உடைய நாயனாரான இறைவன் கோயிலில் கைக்கோளரில் கலவளி நாடு ஆள்வார் மகன் குலசேகரக்கு காணி விலை பிரமாணம் செய்து கொடுத்துள்ளார் என்று காணப்டுகின்றது.[28] வீர பொக்கண உடையார் குமாரர் கம்பண உடையார் சகாப்தம் 1290 (பொ.ஆ.1369) ஆட்சியாண்டில் இரண்டாம் தெருவில் கைக்கோளரும் வீரபத்திரரும்,  என்று குறிப்பிடுவதிலிருந்து  கைக்கோளர் இருந்துள்ளதை அறியமுடிகிறது.[29] இக்கோயில் கல்வெட்டுகளில் கைகோளர் பற்றி கல்வெட்டுகளில் கோயில் அதிகாரிகளுடன், கைகோளரும் இணைந்து மண்டபத்தில் ஒன்றிக் கூடி நில விற்பனை செய்துள்ளதை அறிய முடிகிறது.

தச்சர்

மரவேலை செய்பவர்கள் தச்சர் ஆவர்.[30] இவர்களைத் தச்சர்அல்லது தச்சார் என்றும் தச்சு செய்யும் தலைமை ஆசாரியை தச்சாசார்யம்[31] என்றும் அழைத்தனர்.  தச்சர், கொல்லர், தட்டார் ஆகியோர் மரம், உலோகத் தொழில் செய்வோர் ஆவர்.  இக்கோயிலில் உள்ள மூன்றாம் ராஜேந்திரனின் 5 வது ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1251) கல்வெட்டில் ஸ்ரீ மனுமகாப்ரதானன் மண்டலிகரியமராசன் சிங்கண தண்ணாயக்கர் என்பவர் தச்சக்கூலி பற்றி குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து தச்சர் வாழ்ந்திருந்தனர் என்று அறியமுடிகிறது.[32]

வண்ணார்

     ஆடைகளில் அழுக்கை அகற்றும் தொழில் செய்யும் குடியினர் துணிவெளுப்போர் ஆவர்.[33]இவர்களை வண்ணார்[34], வண்ணத்தார் என்றும் அழைப்பதுண்டு. செப்பேட்டில் ஈரங்கொல்லி, வண்ணார் என்று காணப்படுகின்றனர். ஈரம்+கொல்லி ஈரம்கொல்லி என்பது துணியில் உள்ள ஈரத்தைக் காயவைப்போர் ஈரங்கொல்லி[35]  என்ற பெயரும் உண்டு. வீரவல்லாள தேவனின் ஆட்சியாண்டு கொண்டு கல்வெட்டில் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருந்த உடையார் இறைவனுக்கு  கொடுக்கபட்படட்ட நிலத்தில் வண்ணார்  இரண்டு பேருக்கு கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் வண்ணார் குடிகள் இருந்ததை அறியமுடிகிறது.[36]  மற்றுமொரு கல்வெட்டில் ஸ்ரீ வீரப்ரதாக தேவராய மல்லிகாச்சுனைராயர் மகன் இராஜசேகராயர் சகாப்தம் 1401 விகாரி வருடம் (பொ.ஆ. 1479) ஆம்வண்ணார்வரி கொடுத்தோம் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.   [37]

நாவிதர்

முடிதிருத்தும் அல்லது நாவிதம் தொழில் செய்யும் சமூகத்தைச் சார்ந்தோர்கள்நாவிதர்கள் ஆவர்.[38]முடித்திருத்துவோரான நாவிதர் பற்றிவீரவல்லாள தேவனின் ஆட்சியாண்டு கொண்டு கல்வெட்டில் திருவண்ணாமலையில் எழுந்தருளி இருந்த உடையார் இறைவனுக்கு பொன்னில் நாவிதருக்கு இதிலிருந்து ஊதியம் வழங்கியதை குறிப்பிடுகிறது.[39]

மத்தளக்காரர்

            மத்தளம் என்பது ஒரு வகையான வாத்திய வகையாகும்.  அந்தக் கருவியை வாசித்தவர் மத்தளக்காரர் ஆவார்.  இதனை பறை வகை என்றும் கூறலாம்.இக்கருவியைக் கொண்டு கோயிலில் மத்தளம் கொட்டும் குடிகள் பற்றி இக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஸ்ரீ வீரஅரியப்ப உடையார் குமாரர் ஸ்ரீ வீர புக்கண்ண உடையார் சகாப்தம் 1323 விசு வருடம் (பொ.ஆ. 1402) ஆட்சியாண்டில்கேயாயிலில் மத்தளம் கொட்டுவோருக்கு  நிலம் விற்றதிலிருந்து ஊதியம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது. [40]

கம்மாளர்

     கம்மாளர் என்போர் உலோகத்தொழில் செய்வோர்ஆவர். இவர்கள் வசிக்கும் இடம் கம்மாண் சேரி என்று அழைக்கப்படும்.மேலும் இவர்கள் மீது கம்மாள மகழ்மை என்ற வரியும், கம்மாளப் பேறு என்ற நில விளைச்சளில் கம்மாளருக்கு அளிக்கப்படும் பங்குகளைஒரு வரியாகவும் இவர்கள்பெற்றனர். இக்கோயில் உள்ள விஜயநகர் மன்னரான சிரங்கதேவ மகாராயர் ஆட்சி காலத்தில் சகாப்தம் 1496 பவ வருடம் (பொ.ஆ. 1574) ஆம் ஆண்டு அய்யன் செவ்வப்ப நாயக்கருக்கு புண்ணியமாக உடைய திருவண்ணாமலை உடைய நாயனார் திருகோயில் பண்டாரத்தில் சிவனேச பண்டாரமும், அணையப்ப பிள்ளையும் தானதலவர்களும் கூடி ஏழபட்டை முதலியார்களும், கைவினை கற்கும் இனி மேல் வருகிற குடிக்கும், ஊசிவாசி, குதிரைலாயம், ஆயத்தில் கம்மாளரிம் வாங்கப்பட்ட வரியை குறிப்பிடுகிறது.[41]

ஓதுவார்

கோயில்களில் வேதம் ஓதுவாருக்கு திருப்பாட்டு ஓதுவார்என்று அழைக்கப்படுவதுண்டு.இவர்களை ஓதுவார் என்றும் அழைப்பதுண்டு.கோயில்களில் விழாக்காலங்களில் இறைவனை வேண்டி திருபாட்டு ஓதுவது இவர்களின் பணியாகும்.இப்பணிக்கு கோயில்களில் இருந்து ஊதியம் பெற்றுள்ளதை இக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கய்யாபெருமாள் என்பவர் குலசேதவர்களின் ஆட்சி காலத்தில் மேலை தெருவில் வசிக்கும் தேவர் அடையார்க்கு (தேவரடியார்) திருவெம்பாவை முதலிய பாடல்களுக்கு என்று உள்ளது.[42]  ஸ்ரீமன் மகாமண்டேஸ்வரன் மேதினிமிஸ்வர கண்ட கட்டாரி சாளுவ வீர நரசிம்ம தேவமகாராயர் பிறுதிவி ராச்சியம் பண்ணியருள நிறை சகாப்தம் 1431 விபவ வருடம் (பொ.ஆ. 1509) ஓதுவதற்கு 1 நபருக்கு 100 குழியும் இறைவனுக்கு திருபாட்டு ஓதுவதற்கு 200 குழியும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.[43]வீர கிருஷ்ண தேவ மகாராயர் விசைய நகரத்தில் எழுந்தருளி சாலிவாகனம் 1438 ஆண்டு (பொ.ஆ. 1517), பெரிய திருப்பாட்டு ஓதுவார் தேவரடியார் 6 பேர், என்று குறிப்பிடப்படுகிறது.[44]

மேற்குறித்த தொழில் குடிகளான செட்டியார், சக்கிலியர், பறையர், இடையர், வெள்ளாளர், கைகோளர், தச்சர், வண்ணார், நாவிதர், மத்தளக்காரர், கம்மாளர், திருப்பாட்டு ஓதுவார் ஆகியோர்களின் தொழில் பெயர்கள், ஊர், நாடு, வளநாடு பற்றிக் குறிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவர்கள் இடைக்காலச் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக சக்கிலியர், பறையர், நாவிதர் போன்றோர் இடைக்கால கல்வெட்டுகளில் காணப்படுவது சிறப்பம்சமாகும்.  பொதுவாக வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது சக்கிலியர் விஜயநகரர் காலத்தில் இடம் பெயர்ந்தவர்கள் என்ற கருத்து முன்வைக்கப்படும் நிலையில் இவர்கள் சார்ந்த பணிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம், நிலத்தின் எல்லை குறிப்பிடுகையில் இடைக்காலத்தில் நல்ல நிலையில் இவர்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று அறியமுடிகிறது. மேலும் இங்கு குறிப்பிடும் சக்கிலியர் தோல் தொடர்பானதொழில் புரிவோர் என கொள்ளவது அவசியமாகிறது. இடைக்காலச் சமூகத்தில் தொழில்சார் குடிகள் சமூகப் படிநிலையில் இருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. காரணம் கோயில் வழியாக கொடுக்கப்பட்ட நிலங்கள்மற்றவர்களுக்கு கொடக்கப்பட்ட அளவை விட சிறிதாக வழங்கபட்டதிலிருந்து அறியமுடிகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் மட்டும் ஆய்வுக்கு எடுத்தக்கொள்ளபட்டதில் சோழர் காலமான இடைக்காலத்தில் சமூகத்தில் இருந்ததொழில் அவர்களிடையெ இருந்த படிநிலையை இக்கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

சான்றெண் விளக்கம்

[1]ச.கிருஷ்ணமூர்த்தி., திருவாடுதுறை ஆதீனச் செப்பேடுகள்,பக்.355-359.

[2]வி.இராமமூர்த்தி, இராஜேந்திரன் செய்திக்கோவை, ப.14.

[3]ச.கிருஷ்ணமூர்த்தி., திருவாடுதுறை ஆதீனச் செப்பேடுகள்,பக்.355-359)

[4]A.R.E.1911/42

[5]வி.இராமமூர்த்தி, இராஜேந்திரன்செய்திக்கோவை, ப.14)

[6].SII.VOL.VIII-57

[7].SII.VOL.VIII-113

[8].EO. 914 - 934

[9].4.EO. 18.8. ARE. A8 195 - 53

[10].தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி (தொ–1),  சாந்தி சாதனா, சென்னை,2002, ப.227

[11].SIII.VOL.VIII-67

[12].SII.VOL.VIIII-75

[13].SII.VOL.VIII-86

[14].நொபொரு கராஷிமா, வரலாற்றுப்போக்கில் தென்னக சமூகம், ப.92

[15].SII.VOL.VIII - 106

[16].EO.304-307

[17].EO.33(17)

[18].EO.799-805

[19].EO.33(16) 

[20].ARE.NO.421 YEAR1929

[21].SII.Vol.XIX,No.263

[22].தி.செ.ஏடு 84-பி.வரி-7-9

[23].EO.577-629

[24].தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி (தொ–2),  சாந்தி சாதனா, சென்னை,2002, ப.576

[25].SII.VOL.VIII-137

[26].ARE-67 YEAR 1945-46

[27]தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி (தொ–1),  சாந்தி சாதனா, சென்னை,2002, ப.207

[28].EO.649-653

[29].EO.813-824

[30].ஆவணம்,தொகுதி -7,ப.13-14

[31]. SII.Vol.II,No.66

[32].SII.VOL.VIII-88

[33].SII.Vol.XIV,95;EI.Vol.XXV,No.6 

[34].TAS.Vol.II,p.67-68

[35].தி.செ.ஏடு.85

[36].EO.1679-1682,1697-1704,1599-1610,1667-1675,1615-1624

[37].EO.1201-1211

[38] .SII.Vol.III,151-151a

[39].EO.1679-1682,1697-1704,1599-1610,1667-1675,1615-1624.

[40].EO.769-774

[41].ARE 423 / 1929

[42]..EO-913

[43].EO.967-977

[44].SII.VOL.VIII-165

நோக்கீட்டு நூல்கள்

Annual Report on Indian Epigraphy, Archaeological Survey of India, Delhi,1929,1945-46

Tiruvannmalai a Saiva Sacred Complex of South Indian  Vol.I& II,  EO. Pondicherry, Unpublished Estanm page Number,934,304-305,33(17),799-805,577-629,649-653,813-824, 1679-1682,1697-1704,1599-1610,1667-1675,1615-1624, 1201-1211, 769-774, 913,967-977

Epigraphia Indica , Volumes, Archaeological Survey of India, Delhi, EI.Vol.XXV, XIX

South Indian Inscription Volumes, Archaeological Survey of India, VOL. III ,VIII ,XIV

Travancore Archeological Series, Vol.II

ஆவணம் -இதழ்-7, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்

கராஷிமா.நொபொரு, வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர்கள் காலம் 850-1300), தமிழக தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1995

கிருஷ்ணமூர்த்தி.ச., திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள், உண்ணாமலை பதிப்பகம், சிதம்பரம் 2000

தமிழ் கல்வெட்டு சொல்லகராதி தொகுதி -1,2, (எ.சுப்பராயலு) சாந்தி சாதனா பதிப்பகம், சென்னை,2002.

திருவிந்தளூர் செப்பேடு, எஸ்.சங்கரநாராயணன், நா.மார்க்சியகாந்தி, ஆ.பத்மாவதி, இரா.சிவானந்தம்(ப.ஆ) சென்னை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2011