ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வேள்பாரி நாவலில் இயற்கை வாழ்வும் இயற்கை இகந்த வாழ்வும் (Natural life and deviated natural life in the novel of velpari)

ஆய்வாளர்: வீ.மஞ்சு  (Reg.No:   BDU2310632780329), முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), அரசினர் மகளிர் கல்லூரி (தன்) , கும்பகோணம் 612 001 | நெறியாளர்: முனைவர் கோ.ஜெயஸ்ரீ, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசினர் மகளிர் கல்லூரி (தன்), கும்பகோணம் 612 001. பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது. 02 Nov 2023 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்:

          சங்க காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர்.  ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு இனக்குழுத்தலைவன் இருந்தான்.  அவர்களின் வாழ்வானது முழுவதும் இயற்கையைச் சார்ந்தே இருந்தது.  நிலங்களின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.  இனக்குழு ஆட்சி ஒழிந்து வேந்தர்களின் ஆட்சிமுறை வந்ததோ மக்களின் வாழ்க்கைமுறை இயற்கைக்கு முரண்பட்டு அமைந்தது.  அவ்வகையில் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வான இனக்குழுமுறைப் பற்றியும் இயற்கை இகந்த வாழ்வு பற்றியும் வேள்பாரி நாவலோடு ஒப்பிட்டு இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

Abstract:

          During the Sangam period people lived in ethnic groups.  Each ethnic group had an  group leader.  Their life depended entirely on nature.  People divided their livelihoods based on land.  When the rule of the ethnic group demolished and the rule of the king  came, changed the lifestyle of the people became contrary to nature.  In this way, this article compares the life of the people in harmony with the nature of the ethnic group leader and those people the life away from nature with in the Velpari novel.

திறவுச் சொற்கள்:

          சங்கத் தமிழர், இயற்கை சூழல், உணவுமுறை, இயற்கை மீறல், வணிகம்.

Key words:

          SangaThamizhar, Natural environment, Food system, Nature violation, Business.

முன்னுரை:

          சங்க காலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர்.  இயற்கை அதன் எல்லாத் தன்மைகளிலும் முக்கியத்துவம் பெற்று மனித வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது.  இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றியும், வம்ப வேந்தர்களால் இனக்குழுச் சமுதாயம் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.  பெருகி வரும் வணிக கலாசாரத்தால் இயற்கை அடையும் பெரும் இன்னல்களைப் பற்றிக் கீழ் வருமாறு காண்போம். 

இயற்கை: விளக்கம்

          மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படாத அனைத்தும் இயற்கை என்னும் ஒரு விளக்கத்திற்குள் அடங்கும்.  இயற்கையைக் குறித்து தமிழின் தொன்மையான இலக்கண  நூலாகிய தொல்காப்பியம் கூறுவதாவது,

இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்

                                 (தொல்.சொல்.கிளவி :19)

என்னும் நூற்பாவில் இயற்கை என்பதனை இயல்பு என்னும் பொருண்மையில் கையாளுகிறது. இந்நூற்பா உரையில் சேனாவரையர்1 இயற்கைப் பொருள் என்பதற்கு தன்னியல்பில் திரியாது நின்ற பொருள் என்ற விளக்கந் தருவர்.

          இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது.  இதனைத் தொல்காப்பியர்,

            நிலம்தீ நீர்வளி விசும்போடு

 ஐந்தும்

            கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

                                 (தொல்.பொருள்.மர.635)

என்ற நூற்பாவின் வழி குறிப்பிடுகிறார்.2

மேற்கூறிய ஐந்தும் இயற்கையின் உள்ளே அடங்கும்.  மக்கள் வாழும் நிலப்பரப்பை அவைகளின் தன்மைகளின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தினர்.  உயிர்களின் அடிப்படையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பிரிக்கப்பட்டுள்ளது.  படைப்பின் அடிப்படையில் கடைசி உயிரினம் மனிதனே ஆவான்.

இனக்குழு வாழ்க்கைமுறை:

          இனக்குழு வாழ்க்கை முறையில் மக்கள் அடர்ந்த காடுகளில், வண்டல் பூமியில் கடலோரங்களில், வற்றிய பாலையில், மலை முகடுகளில் குழுக்களாக தங்கள் குலமுறைப்படி வாழ்வினை நடத்தினர்.  அரசோ, அரசனோ, உருவாகவில்லை.  குலத்தலைவன் மட்டுமே இருந்தான். அவனே குலங்களை வழி நடத்தினான்.  அம்மக்களின் வாழ்க்கையில் தேவை மட்டுமே ஆசையாக இருந்தது.  உழைப்பும், விளைச்சலும் பொதுச் சொத்தாக கொண்டனர்.  கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பாக இருந்தது.  எல்லா மனிதனும் சரிநிகராக இருந்தனர்.  இயற்கைப் பிரிவினையாகிய  ஆண், பெண் என்ற இரு பாலினப் பிரிவினை மட்டுமே இருந்தது.  இனக்குழு வாழ்க்கைமுறை என்பதனை நாவலில் ஆசிரியர் சு.வெங்கடேசன் குறிப்பிடுகிறார்3.

இயற்கையோடு இயைந்த வாழ்வு:

          தினைப்புனத்தை காவல் காக்கும் வீரர்கள் தினைப்பயிரை சாப்பிட வந்த விலங்குகளை அம்புகளை எய்து வீழ்திய செய்தியின் மூலம் உணவிற்காக சிறுதானியங்கள் பயிரிட்டு வளர்த்ததை அறியமுடிகிறது.

ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த

 பகழி அன்ன சேயரி மழைக்கண்”4

                                    (நற்.--13:3-5)

மற்றொரு பாடலில் சிறிய தினைக் கதிர்கள், எள்ளிளங்காய்(எள்இளம்பிஞ்சு) மற்றும் வரகு கதிர்கள் முற்றியிருத்தலை புலவர் குறிப்பிடுகிறார்.

மருதம் சான்ற தண்பனை சுற்றி ஒருசார்

சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்

கருங்கால் வரகின் இருங்குரல் புலர”5

                                (.கா. :270-272)

உணவுமுறைகள்:

          வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டுத்தின்றனர்.  குகைகளில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேகவைத்தனர்.  மாமிசத்தையும் கிழங்குகளையும் நெருப்பில் சுடாமலே உண்ணக் கூடிய பக்குவத்துக்கு அவர்கள் மாற்றினர்.  வேகவைத்த உணவு என்ற  புதியதொரு வகையை உருவாக்கினர். 

          அன்றிலிருந்து நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு ஆண் உணவு  என்று பெயர் ஆயிற்று நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு பெண் உணவு என்று பெயர் ஆயிற்று.  ஆண் அவசரத்தின் அடையாளம் ஆனான்.  பெண், பக்குவத்தின் அடையாளம் ஆனாள்.  இவ்வுணவு பற்றிய புதிய கருத்தினை ஆசிரியர் தம் நாவலில் குறிப்பிடுகிறார்.6

          பழந்தமிழ் மக்கள் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டு வகை உணவுகளையும் சாப்பிட்டுள்ளனர்.  சங்கப் பாடல் ஒன்றில் காரியாதி என்னும் மன்னன் தன்னிடம் வருவார்கெல்லாம் எய்ப்பன்றித்(முள்ளம்பன்றி) தசையுடன் வெண்சோற்றுக் கட்டியை தருவதாக புலவர் குறிப்பிட்டுள்ளார்.

எயினர் தந்த எய்ம்மான் எறி தசைப்

பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை

வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய”7

                                (புறம்-177:13-15)

பெருஞ்சித்திரனார் என்ற புலவர் குமணன் என்ற வள்ளலைப் பாடும்போது தன் குடும்ப வறியநிலையை கூறுகிறார்.  அதில் அவரின் மனைவி குப்பைக் கீரையைக் கொண்டு உப்பின்றி சமைத்தலைக் குறிப்பிடுகிறார்.

குப்பைக் கீரை கொய்கண் அகைத்த

முற்றா இளந் தளிர் கொய்து கொண்டு உப்பு இன்று

நீர் உலையாக ஏற்றி மோர் இன்று

அவிழ்ப் பதம் மறந்து பாசடகு மிசைந்து”8

                           (புறம்-159:9-12)

வைகறைப் பொழுதில் மகளிர் தயிர் கடையும் நிகழ்வினை கயமனார் என்னும் புலவர் குறிப்பிடுகிறார்.  தயிர்ப்பானையில் முடைநாற்றம் தீர விளம்பழத்தை இட்டு வைத்துள்ளனர்.

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்‘9

                                       (நற்-12:1)

 விளைந்த நெல்லின் கதிரை முறித்து உலக்கையால் பச்சை அவலை இடித்து உணவாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்

பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து

பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை”10

                                 (அகம்-141:16-18)

நாவலில் பறம்பினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் புலவர் கபிலர் வழியெங்கும் மரங்களும், செடிகளும், கொடிகளையும் கண்டு வியப்படைகிறார்.  அவரை அழைத்துச் செல்லும் பறம்பின் வீரன் நீலன் என்பவன் கபிலரிடம் பனைமரத்தின் கள்ளினைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

இறக்கப்பட்ட கள்ளுக்கு ஒரு நேரம் இருக்கிறதுகள் மதப்பேறித் திரண்டிருக்கும்போது அருந்த வேண்டும்அப்போதுதான் கீழ் நாக்கில் இருந்து உச்சந்தலைக்கு பாய்ந்தோடி கிறங்கச் செய்யும்நேரம் தவறினால் அந்த ஆட்டம் தவறும்.”11

மதுவை மூங்கில் குழாயில் இட்டு களிப்பு மிகும்பொருட்டு சிறிது நாட்கள் வைத்திருந்து உண்ணுதல் பண்டைய வழக்கமாக இருநதுள்ளது.  பொதிய மலையில் சிறுமனையின் கண் உள்ள குறவர் மக்கள் மூங்கிற்குழாயில் வைத்திருந்து முதிர்ந்த மதுவை உண்டு குரவைக் கூத்தாடிய நிகழ்வை புறப்பாடல் ஒன்று  குறிப்பிடுகிறது.

குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து

வேங்கை முன்றில் குரவை அயரும்.”12

                                (புறம்-129:1-3)

கபிலர் குடிப்பதற்கு அணில் வால்திணைக் கொண்டு காய்ச்சப்பட்ட கஞ்சியையும், புளிப்பிரண்டையோடு வால் மிளகு சேர்த்து அரைத்த   துவையலையும் கொடுத்தனர்.  துவையலையும் கொடுத்தனர். துவையல் முதல் நாளே மகர வாழையில் கட்டி வைத்து விடுவர் அது நாள் ஆக ஆக காரத்தை வைத்திருக்கும் என்பதை கூறினர்.  கபிலரை ஆதிமலையை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை முழுவதும் விலங்குகளின் தடயங்களை பார்த்தே கடந்து சென்றனர். காடுகளில் பறம்பு மக்கள் பாதைகளை உருவாக்குவதில்லை பெரும்பாலும் கடமான் உருவாக்கும் பாதைகளையே பயன்படுத்தினர்.13

இயற்கைவேலி:

          பாரி இருக்கும் எவ்வியூர் என்னும் ஊரினைச் சுற்றி விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்  கொள்ள நாகப்பச்சை வேலி அமைத்திருந்தனர்.  நாகப்பச்சை வேலி என்பது தாவரங்களின் கொடிகள், முட்கள், பிசின்களைக் கொண்டு வலைப்போன்று உருவாக்கியிருப்பர்.  இதிலிருந்து வரும் வெறிமணத்தை நுகர்ந்தால் விலங்குகள் கிட்டே நெருங்கி வராது.14   இவ்வூரின் சூழல்போல்  தற்போது கேரள கடற்கரையோரத்தில் அமைந்துள்ள தலைபறம்பா என்னும் பகுதிகளில் காணப்படுகிறது இக்கருத்து ஆய்வுக்கு உட்பட்டது.        

          பறம்பு நாட்டில் மனிதன் உழைத்து விளைவிக்க கூடிய எந்தவொரு பொருளும் இல்லை.  தினைவகைகள், பழவகைகள், காய்கறி வகைகள் எல்லாம் இயற்கையில் தாமாகவே விளைகின்றன.  இதனைப் புலவர் கபிலர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே, தீம்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே,கொழுங்கொடி வள்ளிக்கிழங்க    வீழ்க்கும்மே

நான்கே, அணிநிறஓரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே.”15

                                (புறம்-109:3-8)

உணவு என்பது சேகரிப்புத்தானே தவிர உற்பத்தி அல்ல என்பதை மக்கள் உறுதியாக கொண்டிருந்ததால். உணவு உற்பத்திக்காக அவர்கள் பெரும் உழைப்பை செலவிடுவதில்லை.16

இயற்கை இகந்த வாழ்வு:

(Deviation of Nature)

          இனக்குழு ஆட்சியில் சொத்தின் மீதான ஆசையும் தனக்கான உடைமை, தனது சந்ததிக்கான  சேமிப்பு என குலங்களின் அமைதி குலைய ஆரம்பித்தது.  ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.  குலங்களில் வலுத்தவனின் கை ஒங்கியது, வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலை கொண்டது வலிமையடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது.  தமிழ் நிலம் எங்கும் இருந்த நூற்றுக்கணக்கான குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின.  அம்மோதலில் வெற்றி பெற்றவர்கள் தங்களை வேந்தர்களாக அறிவித்துக் கொண்டனர்.  எஞ்சியவர்கள் சிற்றரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தனர். குறுநிலமன்னர்களின் இருப்பிடங்கள் பொதுவாக மலை மற்றும் காடுகளில் இருந்தன.  அத்தகைய குறுநில மன்னர்களில் பாரியும் ஒரு மன்னன் ஆவான்.  வேந்தர்களால் அழித்தொழிக்கப்பட்ட குலங்களில் எஞ்சி இருப்போர் பாரியின் இருப்பிடமான பறம்பு மலையில் தஞ்சம் அடைந்தனர். இதனை ஆசிரியர் நாவலில் குறிப்பிடுகிறார்.19

           வேந்தர்கள் தங்களை சேரர், சோழர், பாண்டியர் எனப் பிரித்து கொண்டு நாட்டினை ஆட்சிசெய்தனர்.  தங்கள் நாட்டின் வளத்தை உயர்த்துவதற்கான பகை மன்னனின் நாட்டை போரிட்டு அழித்து தீக்கிரையாக்கினர்.  அச்செய்திகள் பின்வருமாறு,

          பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடும்போது குறிப்பிடுகிறார்.  பகைநாட்டினை பாழ் செய்த விதம் குறித்து,

          கழுதைகளைக் கொண்டு பாழ் மனைகளை உழுதல், விளைவயலை அழித்தல், யானைகளைக் கொண்டு நீர்த்துறைகளை கலக்குதல், இடங்களுக்கு எரியூட்டதல், விளைவயலில் குதிரைகள் மற்றும் கழுதைகள் புகச்செய்து பாழ் படுத்திய திறத்தை கூறுகிறார்.

           ”கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

            வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,

            பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல்எயில்,

                  புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்”20

                                      (புறம்-15:1-4)

ஒவ்வொரு நாட்டிற்கும் காவல் மரம் இருக்கும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகை நாட்டினை வென்று அதனைப் பாழ்படுத்தி அந்நாட்டில் நீர் நிலைகளில் உள்ள காவல்மரங்களை வெட்டினான்.  பெரியநகரில் அழகிய வேலைப்பாடமைந்த வீடுகளை பெருந்தீயால் அழித்தான்.  இச்செய்தியை  புலவர் பாடலில் குறிப்பிடுகிறார்.

                 ” வடி நவில நவியம் பாய்தலின் ஊர்தொறும்

                 கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்

                 வினைபனை நல்இல் வெவ்எரி நைப்ப..”21

                                      (புறம்-23:8-10)

தொன்று தொட்டு வந்த பகைவர் நிலத்தே புகுந்து அவர்கள் காவலில் உடைய பொழில்களை வெட்டி அழித்து ஒரு காலத்தும் குன்றுதலறியாத பெரிய மருத நிலங்களை, நெருப்புண்ணச் செய்தனர்.  இதனை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

                152:163 உறுசெறுநர்……………...பெயர்பாட22

இவ்வனைத்து போர்களும் மண்ணாசையின் காரணமாகவே நடைபெற்றன.  இதனைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

              ”எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

                    அஞ்சுதகத் தலைச் சென்றடல் குறித்தன்றே”23

                                                     (தொல்.பொருள்.புறத்.64)

பகை நாட்டினை முற்றிலும் அழித்து அவர்கள் எழுச்சிபெறாத அளவிற்கு நாட்டினை எரித்து பாழ் படுத்திய நிலங்களின் முன்னைய நல் நிலைமையை பற்றியும் இப்போதைய துயர் நிலையைப் பற்றியும் பட்டினப்பாலையில் புலவர் நன்கு விளக்கி உள்ளார்.

வணிக வறுமை:         

           மண்ணாசையை அடுத்து பெருகிவரும் வணிக கலாசாரத்தால் இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பித்தனர்.

யவனநாட்டின் உடனான வணிக உறவை பலப்படுத்திக் கொள்வதில் மூன்று பேரரசுகளும் போட்டி போட்டன.

         பாண்டிய பேரரசு முத்து வணிகத்தில் முதலிடம் பெற்று விளங்கியது.  சேரர்கள் கரு மிளகையும், பட்டையையும் ஏற்றுமதி  செய்தனர்.

          இந்நிலையில்தான் பாரியின் வள்ளல்தன்மையின் புகழ்கண்டு மூன்று பேரரசுகளும் அழுக்காறு கொண்டனர்.  பாரியிடம் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ள மூவரும் முயன்றனர்.

          பாரியை பொறுத்தவரையில் வணிகம் இயற்கைக்கு எதிரானது ஆகும்.  இயற்கை வழங்குகிறது நாம் வாழ்கிறோம்.  இடையில் வாங்கவும், விற்கவும் நாம் யார்? என்பது பாரியின் கருத்தாக இருந்தது.24

மூவேந்தர்களின் முற்றுகை:

          பாரி வணிக உடன்பாட்டிற்கு மறுத்ததால் மூன்று பேரரசுகளும் சேர்ந்து பறம்புமலையை முற்றுகையிட்டன. யானைக்கு தரையில் பலம், முதலைக்கு தண்ணீரில் பலம் அதனைப் போன்று பறம்பு மலையில் பாரியை அழிப்பது என்பது இயலாது. ஆதலால், பாரியை பறம்பு மலையைவிட்டு கீழிறங்கச் செய்து அழிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.  எனவே பறம்பு வீரர்களின் ஒருவனான நீலன் என்னும் வீரனை கடத்தி சென்றார்கள்.  பாரி தன் குலமான வேளிர் குலத்தில் அடைக்கலமாக வந்த அகுதை குல வீரனான நீலனை காப்பாற்ற மலையின்று கீழிறங்கி சண்டையிடுகிறான். இதனை ஆசிரியர் நாவலில் குறிப்பிடுகிறார்.25

போர்க்கருவிகள்- வெற்றி

         வேந்தர் படை வீரர்கள் வாள், கேடயம், இரும்பாலான வில், அம்பு, வேல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.  ஆனால் பறம்பின் வீரர்களிடம் கயிறால் கட்டப்பட்ட வில், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர் இயற்கை ஆயுதங்களான அணலி(அணலி என்பது நெருப்பு பூச்சி நெருப்பின் வெளிச்சத்திற்கு வரும் பூச்சிகள் இது உடம்பில் பட்டாலே மொத்த உடலும் தீப்பிடித்து எரிவதைப்போல துடிக்கத் தொடங்கும்) மற்றும் கொம்பு தூக்கி வண்டுகளைப் பயன்படுத்தினர். அம்புகளில்  சுருள் அம்பு பயன்படுத்தினர்.  கோடரி, எறியுளி, மூவிலை வேள் ஆகியவைகளையும் பயன்படுத்தினர்.  வேந்தர் படை வீரர்களின் எண்ணிக்கைக்கு நான்கில் ஒரு பங்குக்கு குறைவான வீரர்களே பறம்பின் வீரர்கள் இருந்தனர்.  இறுதி போரில் பறம்புபடை வேந்தர் படையை அழித்து நீலனை மீட்டது.28   பழமொழியும் பாரியிடம்   பொய்த்து பாரி கொடை வீரம் கண்டது.    

 இயற்கை மீறல்கள்:

         அக்காலத்தில் வேந்தர்கள் செய்து வந்த நிலங்களைப் பாழ்படுத்தும் தன்மையால் இயற்கை அழிந்து சூழல்  மாறுபட்டுக் கொண்டே வந்தன.  தற்காலத்தில் பறம்பு மலையின் நிலையானது மிகவும் வறண்ட பகுதியாக காட்சியளிக்கிறது.  மழை பெய்யினும், பெய்யாதொழியினும் வேள்பாரியின் மலையில் எக்காலமும் அருவி கொட்டும் என்பதை புலவர் கபிலர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். ஆனால் தற்காலத்தில் பறம்பு மலை என்று கூறப்படும் பிரான்மலை அருவிகள் அற்று காணப்படுகிறது.  பிரான்மலையே பறம்பு மலை என்று சொல்வாருண்டு.

          சிறு சிறு சுனைகளே காணப்படுகிறது.  பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது.  அம்மலையில் பாலமுருகன் கோவில் ஒன்றும், இசுலாமிய பெரியவர் ஒருவரின் சமாதி கொண்டு தர்காவும் அமைந்துள்ளது.  இறை நம்பிக்கை கொண்ட இசுலாமிய மக்கள் நிறைபேர் இத்தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.  மலைப்பாதைகள் சற்று கரடுமுரடான பாதை அமைப்புடன்தான் காணப்படுகிறது.  மக்கள் நடமாட்டம் இருப்பதால் தங்களோடு கொண்டு செல்லும் உணவும்  பொருட்களின் பிளாஸ்டிக் குப்பைகளையும், தண்ணீர் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கேயே போட்டுவிட்டு வருகிறார்கள்.  இதனால் மலைப்பாதைகள் எங்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பிக் காணப்படுகிறது.  மலைகளில் உள்ள மரங்களில் பழங்கள் இல்லாததால் அங்குள்ள குரங்குகள் வந்து செல்வோர் கொடுக்கும் திண்பண்டங்களையே சாப்பிடுகின்றன.  அங்குள்ள சுனைகளிலும் மக்கள் குப்பைகளை போட்டு வைத்திருக்கின்றனர்.  ஏராளமாக கள்ளிச் செடிகள் காணப்படுகின்றன. மலையின் அடியில் ஒரு பகுதியில் குவாரி அமைத்துள்ளனர்.  கார்பரேட் கம்பெனிகளின் வருகையால் எராளமான மலைகளின் வளங்கள் குவாரிகளின் மூலம் வெட்டியெடுக்கப் படுகின்றன.  இதற்கு முழு காரணமாக அமைவது பெருகி வரும் வணிக கலாசாரமே ஆகும்.  இதனால் தமிழகத்தின் சூழ்நிலைகள் நாசமாக தொடங்கியுள்ளன.  வணிகத்திற்கான வேட்டை என்ற பெயரில் விலங்குகள் அழிகின்றன.  நீர் நிலைகளை அழித்து மனைகளாக மாற்றப்படுகின்றன.  மழைபொழிவு அதிகமாக ஏற்பட்டால் நீர் வழிந்து ஓடுவதற்கு கால்வாய்கள் இல்லை.  இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிகழ்வானது சில வருடங்களுக்கு முன்பு சென்னை நகரத்தில் நடந்தது இதனால் பல மக்களின் வாழ்வாதாரங்களே அழிந்துபோய் அவர்கள் மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆயின.

சூழல் சீர்கேடுகள்:

          இது மட்டுமல்லாது சாயத்தொழிற்சாலை, மற்றும் தோல்தொழிற்சாலைக் கழிவு நீரை முறையாக அப்புறப்படுத்தாமல் அந்தக் கழிவுகளை ஆற்று நீரில் கலந்து விடுகின்றன.  இதனால் அதனைப் பயன்படுத்தும் பல உயிர்கள் பாதிப்படைகின்றன.  இரசாயம் கலந்த நீரால் விளைநிலங்கள் பாதிப்படைகின்றன.

          மேற்கண்டவாறு இயற்கை மனிதனை அழிக்கிறதா அல்லது மனிதன் இயற்கையை அழிக்கிறானா என்பதை நோக்கினால் மனிதனே முழுவதும் இயற்கைமுறை வாழ்க்கையில் இருந்த விலகி அவற்றின் அழிவிற்கு முதல் காரணமாக உள்ளான்.

          சங்க காலத்தில் இருந்த நிலவியல் அமைப்பிற்கும் தற்கால தமிழகத்தில் உள்ள நிலவியல்  சூழல் அமைப்பிற்கு பெரிதும் வித்தியாசம் காணப்படுகிறது.  குறிஞ்சி நிலமான மலைகள் குவாரிகளாகவும், முல்லை நிலமான மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன.  இதனால் விலங்குகளின் பெருக்கம் சிதைவுபெறுகின்றன.  மருத நிலமான வயல்வெளிகள் வீட்டுமனைகளாக மாறுகின்றன.  பெருகிவரும் சூழல் சீர் கேடுகளினால் இயற்கையாக வரும் நீருற்றுகள் அற்றுப்போய் ஆறுகள் வறண்டு போய்விட்டன.  விளைநிலங்களில் பூச்சிக்கொல்லி போன்ற இரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தற்காலத்தில் அதிகளவில் நீரிழிவுநோய் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் குறைபாடுடைய குழந்தைகளாக பிறக்கின்றன.  மனிதன் இயற்கையிலிருந்து முழுவதுமாக பிரிந்து வாழும் வாழ்க்கை முறையை மேற்கொண்டு வருகிறான்.

முடிவுரை

          பண்டைய இயற்கைச் சூழலுக்கு மனிதன் வாழ்க்கை முறையை  மாற்றுவதன் மூலமே மனிதகுல அழிவினைத் தடுக்கமுடியும்.

                ”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

                 காடுகள் உடையது அரண்.”27   (குறள்: 742)

                 ”நீரின்றி அமையாது உலகு”28  (குறள்:20)

போன்ற குறட்களை வள்ளுவர் பெருந்தகை கூறுவதற்கான காரணம் காடுகள் மற்றும் நீர்நிலைகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவேதான்.  இயற்கை வளங்களை தான் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற  ஒரு சுயநலத்தின் விளைவு அவர்களின் எதிர்கால சந்ததியரின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கும் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதே உண்மை.

குறியீட்டு விளக்கம்:

 தொல். – தொல்காப்பியம்   அகம். –அகநானூறு

 நற்.      - நற்றிணை                 புறம்.   – புறநானூறு

 ம.கா.    –மதுரைக்காஞ்சி     குறள். - திருக்குறள்

 

பார்வை நூல்கள்:

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்), சேனாவரையனார் உரை  9-ஆம் பதிப்பு- ஜனவரி 2012, சாரதா பதிப்பகம், சென்னை – 600  014.

தொல்காப்பியம்(பொருளதிகாரம்), ச. திருஞானசம்பந்தம் உரை, முதற்பதிப்பு- மார்ச்சு-2020, கதிர் பதிப்பகம், திருவையாறு – 613 204.

வீரயுக நாயகன் வேள்பாரி நாவல், சு.வெங்கடேசன், எட்டாம் பதிப்பு-ஆகஸ்ட்-2022, விகடன் பிரசுரம், சென்னை – 600 002.

நற்றிணை கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை, மூன்றாம் பதிப்பு- பிப்ரவரி -2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.

மதுரைக்காஞ்சி பொ.வே. சோமசுந்தரனார் உரை, பத்துப்பாட்டு பகுதி-2, பதிப்பு -2008, கழக வெளியீடு, சென்னை – 600 018.

புறநானூறு கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை, இரண்டாம் பதிப்பு- அக்டோபர் -2011, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.

அகநானூறு முனைவர். இரா. செயபால், மூன்றாம் பதிப்பு- பிப்ரவரி -2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.

திருக்குறள், அழகப்பா தாளகம், மன்னார்குடி.