ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

"ராஜம் கிருஷ்ணன் படைப்புகளில் பெண்கள்"  |  "Women in the works of Rajam Krishnan"

முனைவர்  நா. ஹேமமாலதி, தமிழ்த் துறை தலைவர்,  உதவி பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி - 605 004. | Dr N.Hemamalathi, HOD & Assistant professor of Tamil, Saradha Gangadharan college,  velrampet Puducherry-605004. 01 Nov 2023 Read Full PDF

ஆய்வு சுருக்கம்:-
            "ராஜம் கிருஷ்ணன் படைப்புகளில் பெண்கள்" என்ற தலைப்பில்,  பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதத்தில் உலகெங்கிலும் ஒரு பொதுத் தன்மையைக் காண முடிகிறது.  எல்லா வகையானச் சமூக நிறுவனங்களும் ஆணை உயர்த்தி பெண் இனத்திற்கு அநீதி இழைக்க முயன்றிருக்கின்றன. என்பதனை இவரது படைப்புகளைக் கொண்டு ஆராயும் போது பழைய இலக்கியங்கள் எவ்வாறு ஆணாதிக்கத்திற்கு துணை போகின்றன என்பதனை அறிவது அவசியமாகின்றது.   இவரது எல்லா படைப்புகளிலும் புரையோடிப் போயிருந்த பழைய மரபுகளின் மீதான  விசாரணையையும் காண முடிகிறது.   ஆணாதிக்கம் வலுப்பெறத் தொடங்கிய பின்னரே,  ஆண் - பெண் விழைவுக்குப் பல பரிமாணங்களைக் கற்பிக்கும்,  கற்பனைக்கும் இலக்கிய இலக்கணங்களும் தோன்றியிருக்க வேண்டும் என்பது இவரது கருத்தாக உள்ளது.   ஆணாதிக்கத்தை வளர்க்க மத நிறுவனங்களும் துணை போகின்றன என்பதனை தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.   சின்னஞ்சிறு பெண் குழந்தைக்குப் பாட்டி சொல்லும் கதைகளில் கூட,  கட்டிய கணவன் வயது முதிர்ந்தவனாக இருந்தாலும் பொறுத்துக் கற்பைக் காக்காமல் தன் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்னும் கருத்தியலையும்,  காலங் காலமாகக் கற்பை வலியுறுத்த எழுந்த கட்டுக்கதைகளை மறுப்பரிசீலனைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.  இலட்சியமாக விதிக்கப்படும் கற்பு நெறியில் இருந்து சிறிதளவு மாறினாலும் பெற்றோரும்,  உற்றோரும்,  சமூகமும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.   ஒரு பெண்ணின் பதிசேவையின் மாண்பைக் கண்டு உருகி,  அக்னி தேவன் சந்தனமாக் குழந்தைக்கு இதம் செய்தான் என முடியும் கதையினை படிக்கும் பெண்களின் மனதில் கற்பின் மேன்மை போதிக்கப்பட்டு ஆணாதிக்கப் பிடிக்குள் அவளை நிலை நிறுத்தி விடுகிறது என்கிறார்.   இதை மனதில் கொண்டு தான் மார்க்சிய மூலவர்களின் ஒருவரான பிரட்ரிக் ஏங்கல்ஸ் , பெண்ணடிமைத்தனம் தான் உலகின் முதல் அடிமை உறவாக இருந்திருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்.

Abstract;

        Titled "Women in the Works of Rajam Krishnan", we can see a universality in the enslavement of femininity. All kinds of social institutions have tried to uplift the male and do injustice to the female race.When examining this with his works, it is necessary to know how old literature supports patriarchy.In all his works, we can see the investigation of the old traditions that have been swept away. It is his opinion that only after patriarchy started to strengthen, imagination and literary grammars should have appeared which taught many dimensions to the male-female relationship. He has revealed in his works that religious institutions also help to develop patriarchy.Even in the stories told by the grandmother to the little girl, the idea that the married husband should not show his opposition by protecting chastity even if he is old, he has reexamined the myths that have arisen to emphasize chastity over time. Even the slightest deviation from the prescribed ideal of chastity is frowned upon by parents, relatives and society.She says that the superiority of chastity is taught in the minds of women who read the story, which ends with Agni God doing this to the child of Sandalwood, who melts at the dignity of a woman's service and keeps her in the grip of patriarchy. It is with this in mind that one of the Marxist sources, Friedrich Engels, mentions that female slavery must have been the world's first form of slavery.

திறவுச் சொற்கள்:

பெண்ணடிமை, ஆணாதிக்கம், சமூக நிறுவனங்கள், ராஜம் கிருஷ்ணன், கற்புக்கோட்பாடு, அதிகாரம், ஆதிக்க வலிமை.
Keywords:-
Feminism, patriarchy, social institutions, Rajam Krishnan, ideology, power, dominant power.
முன்னுரை:-
       அடக்குமுறைகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன.   எல்லா வகை உற்பத்தி உறவுகளிலும் அவை செயல்படுகின்றன.   என்ற போதிலும் பாலியல் அடிப்படையிலான அடக்குமுறை மற்றெல்லா வகை அடக்குமுறைகளை விட மிகுதியாகக் காணப்படுகிறது.   பாலியல் அடிப்படையில் ஆணினம்,  பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதத்தில் உலகெங்கிலும் ஒரு பொதுத் தன்மையை காண முடிகிறது.  எல்லா வகைச் சமூக நிறுவனங்களும் ஆணை உயர்த்தி பெண் இனத்திற்கு அநீதி இழைக்க முயன்றிருக்கின்றன.   என்பதை நிறுவ இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
        ஐரோப்பியர் வருகைக்குப் பின்னாலான தமிழ் இலக்கியங்களில் பெண்களுக்கு வரையறை செய்யப்பட்ட கட்டுப்பாடுகள் சரியத் தொடங்கியதையும், காலணித்துவத்திற்குப் பிறகான ஆங்கிலக் கல்வி முறை,  முற்போக்குச் சிந்தனையுடைய படைப்பாளிகளின் எழுச்சி, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய பெண்ணிய இயக்கங்கள் ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு எங்ஙனம் உதவின என்பதையும்,  இந்த மாற்றங்களை உள்வாங்கி ராஜம் கிருஷ்ணனுடைய நாவல்கள் எங்ஙனம் பதிவிடப்பட்டிருக்கின்றது என்பதனையும் காணலாம்.
ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள்:
      இவரது படைப்புகளை அணுகுவதற்கு பழைய இலக்கியங்கள் எவ்வாறு ஆணாதிக்கத்திற்குத் துணை போகின்றன என்பதை அறிவது மிகவும் அவசியமாகின்றது.   அதன் அடிப்படையில் "ராஜம் கிருஷ்ணன் படைப்புகளில் பெண்கள்"  என்னும் இத்தலைப்பில் உள்ள ஆணாதிக்க போக்கை வெளிப்படுத்த முனைகின்றது.
பழைய மரபுகளின் மறுபரிசீலனை:-
       இவரது படைப்புகளில் பழைய மரபுகள் மீதான மறுபரிசீலனையும்,  மாற்றுக் கட்டமைப்பையும் காண முடிகிறது.  இவரது 'வனதேவியின் மைந்தர்கள்' நாவல்  இராமாயணப் பிரதி பெண்ணின் மீது உருவாக்கியிருந்த சட்டங்களைக் கட்டுடைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  அதேபோல்,  அவரது ' காலந்தோறும் பெண்' முதலிய நூல்களில் பெண்களுக்கான வரையறுக்கப்பட்டிருந்த கருத்தில் அடிப்படையிலான சட்டங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றது.   இதுபோல்,  அவரது அனைத்துப் படைப்புகளிலும் புரையோடிப் போயிருந்த பழைய மரபுகளின் மீதான விசாரணையைக் காண முடியும்.
ஆண் - பெண் விழைவுக்கு பல பரிமாணங்கள்:-
      பெண்ணின் தாய்த் தலைமை விழ்ந்து,  தந்தையாண் சமுதாயத்தில் ஆணாதிக்கம் வலுப்பெறத் தொடங்கிய பின்னரே,  ஆண் - பெண் விழைவுக்குப் பல பரிணாமங்களைக் கற்பிக்கும் கற்பனைகளும் இலக்கிய இலக்கணங்களும் தோன்றிருக்க வேண்டும் என்பது ராஜம் கிருஷ்ணனின் கருத்தாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. (ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண்மை ப. 17)
     மகாபாரத இதிகாசம்,  இந்தச்சரிவை விளக்குவதாக்க கருதும் அவர் சத்தியவதியின் தாய்மை கௌரவிக்கப்படுவதையும், பிந்திய தலைமுறையினர்களின் நாயகியான திரௌபதி,  வெறும் 'பெண்டாகக்'  கொச்சைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்". (ராஜம் கிருஷ்ணன்,  காலந்தோறும் பெண்மை,  ப. 17)
      சின்னஞ்சிறு பெண் குழந்தைக்குப் பாட்டி சொல்லும் கதைகளில் எல்லாம்,  அரசனின் இளையராணி,  மூத்த ராணியின் மகளைக் கொடுமைப்படுத்துவதும்,  பயங்கரியாகவே இருப்பாள்.  அவள் விஷம் வைத்துக் கொல்வாள்; அரசனை மோசம் செய்வாள்;  இந்த மூத்த ராணியின் தாயற்ற சிறுமியை நாடு கடத்துவாள்;  எங்கேனும்,  எந்த மொழியிலேனும் இளையராணி அரசனுக்கு உண்மையாக,  அனைவரையும் அன்பால் வசப்படுத்தும் தாயாகப் படைக்கப்படுவதில்லை இறுதியில் இளையராணியின் நயவஞ்சகம் அம்பலமாக,  கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர் சிரிக்க வலம் வந்தபின் தீயில்,  காயும் எண்ணெய் கொப்பரையில் உயிருடன் தள்ளப்படுவாள்.  இவ்விதமான அனைத்து தண்டனைகளும்,  இளம் மனதில் பதிக்கப்பட்டு,  கட்டிய கணவன் வயது முதிர்ந்தவனாக இருந்தாலும் பொறுத்துக் கற்பைக் காக்காமல் தன் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்னும் கருத்தியலை வலுப்படுத்துவதற்காகவே இத்தகைய கதைகள் படைக்கப்பட்டு இருக்கின்றன என்பது ராஜம் கிருஷ்ணனின் கருத்து". (ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண்மை, ப. 20)
ஆண் தர்மம்:-
     பெண்ணை அடிமையாக வைத்திருப்பதையே ஆண் தர்மமாக்கினான்.   இந்த ஆதிக்க வலிமையையே தன் உரிமையென்று கொண்டான்.  கற்பு நெறியை வலியுறுத்தும் நீதிக் கதைகள் படிப்பதற்காகவே பெண்களுக்கு எழுத்தறிவு கொடுக்கப்பட்டது.  சமையல் அவளுடைய முதன்மைப்பணி,  பிள்ளை பெறுதல் வாழ்க்கையின் ஒரே இலட்சியமாகிய பங்கேற்பாகிய கடமை.   மூடப்பழம் பசலிகளின் மரபுகளைத் தாங்கி நிற்கும் தூண்களே,  பெண்கள் என்பது ஒரு பெருமை,  சமயம்,  சமுதாயம்,  சமூகக்களம்,  அரசியல் எங்கும் பெண்கள் அடிமைகளாகவே பாவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடும் அவர்,
      "குரூபியான கணவனை,  தொழுநோயால் அழுகிச் சொட்டுபவனை,  கட்டியவளை அடித்துத் துன்புறுத்தி நாள்தோறும் அவள் கண்முன் வேறொரு நங்கையிடம் குலாவுபவனை,  அவள் நலங்களை உறிஞ்சிச் சக்கையாக்கிவிட்டு,  அவளையும் குழந்தைகளையும் உதறிவிட்டு மறந்து போனவனை,  என்றெல்லாம் கதைகளில் வரும் கணவன்மார்களை உத்தம பத்தினிகளாக கற்புக்கரசியர், கடைசிவரையிலும் தெய்வமாகத் தொழுது பணி செய்வர்.  அவன் உதறினாலும் அவன் காலடியில் அழுது கரைந்து,  அடிமையாகப் பணிபுரிய ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சிநிற்பர்.  கணவன் ஆவி பிரியும் முன் தன் ஆவியை விடுத்து,  பரலோகத்தில் அவனுக்கு முன் சென்று அவனை எதிர் கொள்வார்கள்." (ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண், முன்னுரை) என்று காலங் காலமாகக் கற்பை வலியுறுத்த எழுந்த கட்டுக்கதைகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
பெண்ணிற்கான கற்பு நெறி:-
      ஒரு பெண்ணுக்கு லட்சியமாக விதிக்கப்படும் கற்பு நெறி இது.  இந்த கற்பு நெறியில் இருந்து அவள் இம்மி அளவு மாறினாலும் பெற்றோர்,  உற்றோர் யாவரும் அவள ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.   சமுதாயம் அவளைப் புறக்கணித்து ஒதுக்கும்.  இந்தக் கற்பு நெறியின் கூறிய வாள் முனையில் தான் பெண்ணின் எல்லா மேன்மைகளும்,  மலர்ச்சிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று ராஜம் கிருஷ்ணன் கருதுகிறார்."  (ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண், ப.4)
      இலக்கியத்திலும்,  சமயத்திலும் பெண்ணின் கற்பு பற்றிய வரையறைகள் மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.  பெண்ணின் மீதான ஆணின் அதிகாரத்தை வலுப்படுத்தவே கற்பு பற்றிய விளக்கங்கள் மிகுந்திருக்கின்றன.  ராஜம் கிருஷ்ணன் இக்கற்பு பற்றிய விளக்கங்களை தம் நூல்களில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
     "கற்பு என்பது மகளிருக்கும் மட்டுமாக அறிவுறுத்தப்படும் ஒரு புனைவே தவிர, அது உண்மையில் ஒரு பண்பாக இருக்க முடியாது"
என்றும் ,
     "ஒரு பெண்ணை ஒரு ஆண் பலாத்காரமாக மணந்து அவள் விருப்பத்திற்கு விரோதமாக,  ஆயுட்காலம் முழுவதும் அவளுக்குத் தண்டனையாக அளிக்க வழிவகுக்கிறது."
என்றும்,
      " பொருளாதாரச் சுதந்திரமும், கல்வியும், உயர் பதவியையும் பெற்ற பின்பு கூட,  தனித்து சுயச்சார்பை வளர்த்து விடாதபடி,  கணவன் ஆதிக்கம் செலுத்துவதற்கு இக்கற்புக் கொள்கையே காரணமாகிறது." என்றும்,
தம் நூல்களில் குறிப்பிடுகிறார்" . ( இரா.பிரேமா, கற்புக் கோட்பாடு,  ப.45)
     மேலும்,  "கற்பு ஒர் உன்னத சமுதாய ஒழுக்கம் என்பதை மறுக்க முடியாது என்றாலும்,  அதுவே வாழ்க்கையின் முழுமையாகி விடாது.   இந்த ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்று அவளுடைய விடுதலை தந்தால் கற்பு நெறியே தொலைந்து விடும் என்பது அபத்தம் என்றும், ஆக அவர் குறிப்பிடுகிறார்."(ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண்மை, ப. 58)
ராஜம் கிருஷ்ணனுடைய நாவல்களின் முழு வீச்சை அறிந்து கொள்வதற்கு,  ஆணாதிக்கச் சிந்தனைகளால் வளத்தெடுக்கப்பட்ட இலக்கிய ஆக்கங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
இலக்கியப் புனைவுகள்:-
     இது சாதாரண மக்களை எங்ஙனம் பாதிக்கின்றன என்பதையும், இலக்கியத்தின் வாயிலாகக் கருத்தியல் வலைகள் எப்படிப் பின்னப்படுகின்றன என்பதையும் பின்வரும் கதை வாயிலாக விளக்கியிருக்கிறார்.
      "கானக சூழல்,  பெண்ணொருத்தியின் கணவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்து உறங்குகின்றான். பக்கத்தில் அவர்களுக்குச் சமையல் செய்த அடுப்புத்தீ தணலாக இருக்கிறது.  குளிருக்கும் இதமாக இருக்கிறது.  பக்கத்தில் உறங்கிய குழந்தை விழித்தெழுந்து விட்டது.  நடக்கும் பருவம் வந்திராத பிஞ்சுக் குழந்தை தவழ்ந்து,  ஜொலிக்கும் தணலின் அருகே செல்கிறது.  அவள் அசைந்து தடுத்தால், கணவனின் உறக்கம் தொலைந்து விடும்.  கத்தினாலும் அவன் உறக்கம் கலைந்து விடும்.  ஒரு பக்கம் பதிசேவை.  மறுபக்கம் விடைத் தெரியாத குழந்தை நெருப்பை நாடிப் போகிறது.  குழந்தை உயிர் பெரிதா?  பதிசேவை பெரிதா?  என்ற கேள்விக்குச் சந்தேகமின்றி அவளுக்குப் பதிசேவையே சரியான விடையாகத் தெரிகிறது.  அவள் பதிசேவையின் மாண்பைக் கண்டு உருகி,  அக்னி தேவன் சந்தனமாக் குழந்தைக்கு இதம் செய்தான் என்று முடிகிறது அக்கதை.   இக்கதையைப் படிக்கும் பெண்களின் மனதில் கற்பின் மேன்மை போதிக்கப்பட்டு ஆணாதிக்கப் பிடிக்குள் அவளை நிலை நிறுத்தி விடுகின்றது." (ராஜம் கிருஷ்ணன், காலந்தோறும் பெண், ப.7)
அடக்குமுறைகள்:-
     பெண்ணின் அடக்குமுறைகள் என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற  நிறைந்திருக்கிறது.   எல்லா வகை உற்பத்தி உறவுகளிலும் அது செயல்படுகிறது என்ற போதிலும்,  பாலியல் அடிப்படையிலான அடக்குமுறை மற்ற எல்லா வகை அடக்கு முறைகளை விட மிகுதியாகக் காணப்படுகிறது.  பாலியல் அடிப்படையில் ஆணினம்,  பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் விதத்தில் உலகெங்கிலும் ஒரு பொதுத் தன்மையைக் காண முடிகிறது.  எல்லாவகைச் சமூக நிறுவனங்களும் ஆணை உயர்த்தி பெண் இனத்திற்கு அநீதி இழைக்க முயன்றிருக்கின்றன.   இவ்வாறு அநீதி இழைக்கும் முறை வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்கி இருக்க வேண்டும்.   இதை மனதில் கொண்டே மார்க்சிய மூலவர்களில் ஒருவரான பிரட்ரிக் ஏங்கல்ஸ்,  பெண்ணடிமைத்தனம் தான் உலகின் முதல் அடிமை உறவாக இருந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்." (பிரெடரிக் ஏங்கல்ஸ் , குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.53)
ஆணாதிக்கத்திற்கு மத நிறுவனங்களின் பங்கு:-
      ஆணாதிக்கத்தை வளர்க்க மத நிறுவனங்களும் துணை போகின்றன என்பதைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.  பழைய புராணங்கள் இவரது படைப்புகளில்  மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.             
          இறைவன் நடனமாடும் போது,  இடது காலை  ஆகாசத்தை நோக்கி உயரத் தூக்கினார்.  இறைவி பெண்ணாக இருந்த காரணத்தினால்,  அவ்வாறு தூக்கவில்லை.  அவள் அவ்வாறு செய்ய இயலாமல் நாணம் தடுத்தது எனவே,  இறைவி,  தலை குனிந்து,  தான் ஆட்டத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டு,  ஊரைவிட்டே பெயர்ந்தாளாம்.  புராணங்களில் வரும் இக்கதைக்கு, ஆண் - ஆண் தான்.   அவன் நாணம் பாலிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெண்ணுக்கு எந்த நிலையிலும் நாணம் இன்றியமையாதது என்ற அந்த மானக் கோட்பாட்டை விளக்குவதற்காகவே அமைகிறது.  சைவ சித்தாந்தம் புருஷச்சிவனை ஏற்றி வைக்க இப்படி அன்னை வடிவைக் கொச்சைப்படுத்தி இருக்கிறது.' ( ராஜம் கிருஷ்ணன்,  காலந்தோறும் பெண்,  ப. 29) என்கின்ற மாற்றுக் கருத்தாடலை முன்வைக்கிறார்.
        பௌத்தமும்,  சமணமும் பெண் வெறுப்புத் துறவை உயர்த்தின.  புத்தர் பெண்களைத்  துறவு சங்கத்தில் சேர்க்க மறுத்தார்.  அவருடைய தாயும்,  மற்ற நிராதரவான பெண்களும் புத்த சங்கத்தில் சேரத் தவம் கிடந்தனர்.  அவரது சீடர் ஆனந்தர் பல நாட்கள் வேண்டிப் பரிந்துரைத்ததன் பேரில் தான் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.   என்றாலும்,  ஆடவரான துறவிகளுக்கும் இவர்களுக்கும் சமநிலை கொடுக்கப்படவில்லை. " பெண் போகமே பாவம் என்ற கருத்தில் கிருத்துவம்,  ஆண்,  பெண் கூடலையே புனிதத்துக்கு ஒவ்வாததாகக் கற்பித்துத் தூய கன்னிமையில் உதித்த மமைந்தரான இயேசுவை உலகுக்கு அறிவித்தது.   சங்கரர் மரபு இந்தியப் பெண்களைச் சிதை ஏற்றவும் கைம்மைக் கொடுமைகளை இழைத்தும் அவர்களை உயிரோடு வதைக்கவும் வழியமைத்தது என்று அவரது பார்வையில் மதச் சிந்தனைகள் கட்டுடைக்கப்படுகின்றன." ( ராஜம் கிருஷ்ணன், உயிர் விளையும் நிலங்கள், ப. 36)
தொகுப்புரை:
1.  உலகில் பலவிதமான அடிமை முறைகள் இருப்பினும் ஆண் பெண்ணை அடிமை கொள்ளும் முறை எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கிறது.
2. தந்தை வழிச்சமுதாய தோற்றத்திற்கு பிறகு சமயங்களில் ஆணாதிக்க சிந்தனை மேலோங்கி இருக்கின்றன.  கடவுள் முதலில் ஆணை படைத்து,  அதன் பின் பெண்ணை படைத்தார் என்றும்,  பெண் தோன்றிய பிறகு தான் உலகில் பாவங்கள் தோன்றின என்றும்,  இம் மதங்கள் கூறுகின்றன.
3. பெண்களால் ஆண்களின் வாழ்க்கை சீரழியும் என்றும்,  பெண்கள் மதகுருமார்கள் ஆக முடியாது என்றும்,  பெண்களுக்கு தீட்சை கொடுக்கக் கூடாது என்றும்,  பெண் ஒரு தாழ்ந்த பிறவி அதனால் அவளுக்கு மோட்சம் கிடையாது என்றும், மதங்கள் வாயிலாக பெண் ஒடுக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
4. பெண்களுக்கு ஆன்மா இல்லை.  அதனால் அவளைக் கொன்றாலும் பாவம் இல்லை.  என்றும், பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறாள் என்றும்,  சில மதங்கள் போதித்துள்ளன.
5. பெண்கள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும். அடக்கமின்றி நடக்கும் பெண்களுக்கு பல கொடுமையான தண்டனைகளை இம்மத நிறுவனங்கள் வழங்கியும் இருக்கின்றன.
துணை நின்ற நூல்கள்:-
1. ஏங்கெல்ஸ், பி, குடும்பம், தனிச்சொத்து,  அரசு ஆகியவற்றின் தோற்றம், பாரதி புத்தகாலயம்,  சென்னை பிப்ரவரி, 2008.
2. செல்வராசு, அ.,  ஆண் ஆளுமையில் பெண் கற்பு, எழில், திருச்சி, 2003.
3. தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, பாரதி புத்தகாலயம்,  சென்னை,  மறு பதிப்பு. 2006.
4. பஞ்சாங்கம், க, பெண்ணெனும் படைப்பு, செல்வன் பதிப்பகம்,  புதுச்சேரி, 1994.
5. பிரேமா, இரா., கற்பு -  கலாச்சாரம், தமிழ்ப் புத்தகாலயம்,  சென்னை, நவம்பர். 1998.
6. ராஜம் கிருஷ்ணன், காலம் தோறும் பெண்மை, தாகம், சென்னை, நவம்பர் . 1990.
7. ராஜம் கிருஷ்ணன், காலந் தோறும் பெண், நேஷனல் புக் டிரஸ்ட்,  புதுதில்லி,  1994.
8. ராஜம் கிருஷ்ணன்,  வனதேவியின் மைந்தர்கள், தாகம், சென்னை, ஆகஸ்ட் 2001.