ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சித்தர்கள்  பகரும் பண்பாட்டு ஒழுக்கலாறுகள் ( Sittarkal pakarum panpattu Olukkalarukal) | Cultural morals carried by the Siddhars

முனைவர்.தி.தர்மலிங்கம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால். | Dr. T. THARMALINGAM, Assistant Professor in Tamil, Arignar Anna Govt. Arts and Science College, karaikal-609605. 01 Nov 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

மிகுந்த மனக்கட்டுபாடு உடைய சித்தர்கள் மனித சமூதாயம் சாதி சமயங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் கட்டுண்டு கிடப்பதனைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். மனிதயினம் சுய ஒழுக்கமின்றியும், சமூக அக்கறையின்றியும் இருப்பதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தனர். தமது மனக்கட்டுப்பாட்டின் வழி தன்னையே தான் ஆளுகின்ற பண்புகளை முழுமையாக அறிந்த சித்தர்கள் சமூக அக்கறையோடு தமது பாடல்களில் தனி மனித ஒழுக்கத்தையும்,  சமூகவொழுக்கத்தையும் கூறியுள்ளனர். அத்தோடு தான் வாழும் சமூகத்தில் சாதி, சமய,  சடங்கு, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, மனம் வருந்திய சித்தர்கள், அவ்வேற்றத்தாழ்வுகளை களைய முற்பட்டு தனியொருவராய் போராடினார்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக களைய வேண்டுமாயின் ஒழுக்கம் அவசியம் என்று கருதியதால் தான் தனி மனித ஒழுக்கத்தையும், அதைச் சார்ந்து சமூக ஒழுக்கத்தையும் தன்னுடைய பாடல்களில் பதிவு செய்து சென்றுள்ளனர்.  அவ்வாறு கூறிவுள்ள பண்பாட்டு ஒழுக்கலாறுகளை இனங்கண்டு அறிய விழைகிறது ஆய்வு கட்டுரை.

Abstract

The Siddhars, who are very restrained, regretted to see the human society bound by caste, religion and superstition. They were deeply saddened to see mankind without self-discipline and social concern. Therefore, they are fully aware of the characteristics of self-control through their own self-control, and have written about individual human morality and social culture in their songs with social concern. Also, seeing the caste, religious, ritual and social inequalities in the society in which they live, the Siddhas, who felt remorseful, fought alone to eliminate those inequalities. They have recorded individual human morality and social morality depending on it in the songs because they felt that morals are necessary if social inequalities are to be completely eradicated. Hence, the research paper attempts to bring out the cultural morals that are contributed by the Siddas.

திறவுச்சொல்

பண்பாடு, ஒழுக்கலாறுகள், இஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்,  சமயப்பாகுபாட்டை உடைக்கும் உளிகள், பெண் நலவிரும்பிகளாக சித்தர்கள்,

Keyword:

Culture, morals, knowledge, truth, chisels that break religious discrimination, Siddhars as women well-wishers,

முன்னுரை

பண்பாடு என்பது ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், ஒழுக்கலாறுகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு, பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிப்பதாகும். மேலும், ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து  கொள்வதற்கு  உயர்ந்த இலக்கியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, நாடக்கலை முதலிய கலைகளிலும் ஓரினத்தாரின் பண்பாடுகள் தோன்றும்.

பண்பாடு என்பதற்கு விளக்கம் தரும் நமது முன்னோர்கள் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாமை முதலிய சொற்களைக் கொண்டு விளக்கமளித்துள்ளனர். இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் வேறுசில பொருட்களைக் குறித்தாலும், பல இடங்களில் பண்பாட்டையே குறிக்கிறது. கலித்தொகையில் பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது என்றும், திருக்குறளில் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்றும் கூறியுள்ளதைக் கொண்டு அறியலாம், பண்பாடு உடையவரைச் சான்றோர் என்றும், ஒழுக்கமுடையோர் என்றும், ஒளியோர் என்றும், மாசற்ற காட்சியுடையோர் என்றும் கூறுவர்.

ஆங்கிலத்தில் Culture எனப்படும் சொல்லிற்குத் தமிழில் பண்பாடு என்று குறிப்பிடுகிறோம். Cultura Agri என்ற  இலத்தின் சொல்லிருந்து தோன்றியது தான். Culture என்ற இச்சொல்லிற்கு நிலத்தைப் பண்படுத்துவது என்பது பொருள் விளக்கமாகும். அதுபோல தமிழ்ச்சொல்லாகிய பண்பும் நிலத்தைப் பண்படுத்துவதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். உழவுத்தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ, அவ்வாறே மனத்தையும். மக்களையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் பண்பாடு எனும் பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அதன் நூலாசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ் பக்தியின் மொழி என்பர். ஏனேனில் தமிழிலுள்ள பக்தி இலக்கியங்களைப் போல அழகிலும், ஆழத்திலும், பரப்பிலும் இத்துணை இலக்கியம் வேறேந்த மொழியிலும் இல்லை எனலாம். பரிப்பாடல் முதலாக இராமலிங்க சுவாமிகள், விபுலானந்தர் ஈறாக பக்தி பாடல்கள் பாடியப் புலவர்கள் எண்ணற்றவர்கள். பிறத்தமிழ் கலைகளிலும் பக்திப் பண்பினைக் காணலாம். பன்னிருத்திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள் ஆகியனவும், இன்னும் பிற சமயப்பாடல்களும் மக்களின் பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் உணர்த்துகின்றன. சித்தர் பாடல்கள் தமிழ் இலக்கியத்தின் மற்றோரு தளமாக விளங்குகின்றது. பிற பக்தி பாடல்களிலிருந்து வேறுப்பட்டு நின்று அறத்தையும் ஒழக்கத்தையும், ஆன்மா வழி இறையடியும் பெற வித்திடுகின்றன.

சித்தர் பாடல்கள் இஞ்ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் கூறுவதோடு அல்லாமல் மக்கள் சமுதாயத்தை ஓருலகுக் கோட்பாட்டிற்குள் அழைத்துச் செல்ல முனைகிறது. ஓருலகுக் கோட்பாட்டில் தனிமனித ஒழுக்கம் பற்றியும், ஒட்டுமொத்த சமுதாய ஒழுக்கம் பற்றியும் பேசுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியும், நிரந்திரமான நோய் தீர்வு மருந்துகள் பற்றியும் அதிகளவில் தமது பாடல்களில் கூறி இயற்கை மருத்துவ முறையை மக்களுக்கு அளித்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்கள் மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து உலகம் தழுவிய பார்வையைக் கொண்டவர்கள். இவர்கள் குறுகிய வட்டத்திற்குள் சுழல்பவர்கள் அல்லர். சாதி சமய எல்லைகளைக் கடந்து வாழ்ந்தவர்கள். சித்தர்கள் என்றால் சித்திகளை அல்லது வரங்களைக் கைவரப் பெற்றவர்கள் ஆவர். சுருக்கமாகச் சொன்னால் தம்தையும், தாம் வாழும் உலகையும் அறிந்து கடந்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றவர்கள் சித்தர்கள்.

சச்சிதானந்தம் என்ற சொல்லை சத்+சித்+ஆனந்தம் எனப் பிரிக்கலாம். சத் என்றால் என்றும் உள்ள பொருள். சித் என்றால் பேரறிவு. ஆனந்தம் என்றால் பேரின்பம் எனப் பொருள்படுகிறது. இதனடிப்படையில் சித் என்னும் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டே சித்து, சித்தன் என்ற சொற்கள் தோன்றின என்பர். தமிழில் இவ்வினத்தாரை சித்தர்கள் என்று அழைப்பது போல, சீன நாட்டு மெய்ஞ்ஞானிகளைத் தாவோயிகள் என்றும், ஜப்பான் நாட்டுச் சித்தர்களை ‘ஜென்’ என்றும், இஸ்லாமிய மொழிகளில் ‘நபிகள்’ என்றும் அழைக்கின்றனர். இனத்தின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தாலும் அவர்களின் உள்ளடக்கக்கோட்பாடு அனைத்தும் ஒன்றே. இவர்கள் ஒட்டு மொத்தமாக வலியுறுத்துவது மெய்ஞ்ஞானத்தையே. ஏனேன்றால் தாவோகக்களின் ‘தாவோயும்’ ஜென் துறவிகளின் சடாரியும், சூஃபிக்களின் சூபித்துவமும், கிறித்துவ மெய்ஞ்ஞானிகளின் ‘ஆன்மா ஞானமும்’ தமிழ்ச் சித்தர்களின் ‘சாயுச்சிய நிலையும்’ ஒன்றே என்பார்.

சித்தர்கள் கன்மங்களைக் கழுவி, எண்வகைச் சித்துக்களை, உள்ளடக்கி, பக்திநெறி அல்லாத வேறொரு நெறியில் ஒழுகி இறைவனைக் கண்டு தெளிந்தவர்கள். சித்தன் என்னும் சொல்லுக்கு பொருளாக சித்தன் கிருதகிருத்தியன் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து முடித்தவன், கன்மங்களைக் கழுவினவன், எண்வகை சித்திக்களையும் உண்டாக்கின்றவன் என்று அடியார்க்கு நல்லார் விளக்கம் தருகிறார். அத்தகைய தமிழ்ச் சித்தர்கள் காலந்தோறும் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். தமிழ்ச்சித்தர்கள் மரபு நெடியது. தனி மனித ஒழுக்கத்தை போற்றும் இவர்கள்  அதன் வழி சமுதாய ஒழுக்கத்தை பெற முனைந்தவர்கள். தனி மனித ஒழுக்கத்தில் முதலில் ‘ஆசையறுமின்’ என்கிறார்கள்.

ஆசையறுமின்:

            ”ஆசையறுமினகள்; ஆசையறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்

ஆசைபடப்பட ஆய்வருந்துன்பங்கள்

ஆசைவிடவிட ஆனந்தமாமே”1       

      மானிடா எப்பொருளையும் விரும்பி அலையாதே. அப்பொருளாள் நிம்மதி இழந்து துன்பப்படுவாய். உலகத் தொழில்களுக்காக ஆவஞ்சாதே. பலவற்றையும் சந்தித்து கொண்டே இருப்பதை தவிர்த்து விடு. அதனால் நோய்வாய்ப்படுவாய். அதற்கு பதிலக நாதத்தை அறிந்திடு. ஆசை, பிறவி, பொருள் இவையெல்லாம் நீர்க்குமிழியாக அழியும் தன்மைவுடையது. அதன் மீது பற்று வைக்காதே என்கின்றனர். திருமூலர் ஒருபடி மேலே சென்று இறைவன் மீதுகூட ஆசைப்படாதே. ஆசைப்படபட துன்பம் வரும். ஆசையை விடவிட ஆனந்தமாமே என்கிறார் திருமூலர்.

காமத்தை விடு:

      கனமான மார்பு கொண்ட மாதர் மேல் நாள்தோறும் விருப்பம் கொண்டு சிரிப்பாகிய வினைவசத்திற்கு ஏங்கவும் வேண்டாம். மேலும் மங்கையர் உடலும் மார்பும் பெண்குறியும் விரும்பித் தளராதே. அவை துன்பம் தருவன. மங்கையர்களின் காமவலைக்கு ஏங்கி அலைந்து திரியாதே. அதில் இன்புற்று உருகாதே.

      கரை தெரியாத சிற்றின்பக் கடலில் மூழ்காதே. நிலையற்ற வாழ்வை விரும்பாதே என்கிறார் பட்டினத்தார். தன் வீடு (மனைவி) இருக்கும் போது அயல் வீட்டில் பிறன் மனைவியிடம் செல்லாதே என்கிறார் கொங்கணச் சித்தர்.

அறியாமையை அகற்று:

      விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா

     இரும்புண்ட நீர்போல ஏகும் - கரும்பதனைத்

     தின்றலால் லோதெரியும் நெஞ்சேநின் தோன்றுங்கண்

     வென்றலால் லோவெளிச்ந மாம்”2         

      அறியாமையை முழுமையாக அகற்ற வேன்டும். ஐந்து புலன்களையும் வென்றால் தான் அறியாமை இருள் நீங்கும். கரிய நிறம் கொண்ட இரும்பு துண்டு உண்ட நீர் ஆவியாகி மறைதல் உண்மை எது? அறியாது மறைகின்றாய். இறைவனுடைய அருள் கரும்பைத் தின்றதும் சுவை அறிதல் போல முயன்றாலே பேரின்பம் கிடைக்கும்  என்கிறார் பட்டினத்தார்.

தீதில்ல வாழ்க்கை

      நிலையற்றவை எல்லாம் நமக்குப் பனையை, துன்பத்தைத் தரும். திணையளவு நேரமாவது தீது செய்யாமல் இரு. தீது செய்தால் இனத்தை விட்டு பரிந்த மான் போல கலக்கம் அடைந்து துன்பமடைவாய். தன் நிலையறிந்து செயல்படு. சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளாதே. அது கரை தெரியாத கடல்.அக்கடலை நீந்தி கரையை கடக்க யாராலும் இயலாது. எனவே இறை வழிபாடு செய்து மெய்ஞ்ஞானம் பெற்று தீதில்ல இறை வாழ்க்கையை பெறுவாய். சமுதாயத்திற்கு தனி மனித ஒழுக்கம் அவசியம் எனக்கருதிய சித்தர்கள் சமுகத்தில் நிலவிய சமூக அவலங்களைக் களைய முற்ப்பட்டனர். இங்கு பத்திரகிரியார் 14 ஆம் பாடலில்

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டுஉழலாமல்

 தன்னுயிர்போல எண்ணித்தவம்முடிப்பது எக்காலம்”3  என்கிறார்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை களைதல்:

      சித்தர்களின் குரல்கள் அனைத்தும் சமூக அவலங்களைக் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய முனையும் போர்கருவிகளாகத் திகழ்கின்றன. தமிழ்ச் சமூத்தில் காணப்படும் சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள், போலித்தனமான வேதங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், பேதங்களை ஏற்படுத்தும் பயனற்ற உருவ வழிபாட்டு முறைகள் போன்ற எண்ணற்ற இருண்மைகளைக் களைய முனைந்தவர்கள் சித்தர்கள். புனிதம், தீட்டு ஆகியன அடிப்படையில் மனிதக் குலத்தைக்கூறுபோட்டு வேரறுக்கும் ஆதிக்கச் சக்தியினருக்கு எதிராகப் புரட்சிக்கலகக்குரல் எழுப்பியவர்கள்.

 அதன் விளைவாக ஆளும் ஆதிக்க வர்க்கத்தினரின் கோபத்திற்கு  உள்ளாகித் தனியொருவராய் தனித்துப் போரடியவர்கள். சாதிப்பாகுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் காண விரும்பி சதறிக்கிடந்த சமுதாயத்தை ஒன்றிணைக்கப் போராடியவர்கள். இவர்கள் சமுதாயத்தின் அடித்தள மக்களும் எளிதில்  புரிந்துக் கொள்ளக்கூடிய புரிதல் மொழி பயன்படுத்தி புரட்சி செய்தனர். சிவவாக்கியார் காலத்தில் மனுதர்மக் கொள்கை ஆதரிக்கப்பட்டு  சாதிப்பாகுபாட்டால் தமிழகம் பிளவுபட்டிருந்தது எனலாம்.

  அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோணியாய்

     மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்

     சனிப்பதேது சாவதேது தாபரத்தின் ஊடுபேபாய்

     நினைப்பதேது நிற்பதேது நீர்நினைந்து பாருமே”4    

மனிதன் சாதி பேதங்களை ஏற்று வாழ்வது பிறர் தம்மை ஏளனமாய் இகழ்வதற்கு வாய்ப்பளிக்கும் எனக்கண்டித்துப் பேசுகிறார் அழுகணிச்சித்தர்.

சமயப்பாகுபாட்டை உடைக்கும் உளிகள்:

      மனிதர்கள் சமச்சீராய் வாழ்வதற்கு பெருந்தடைக்கற்களாய் இருப்பவை சமயப்பாகுபாடுகளே. அறிவியல் சிந்தனை மேலோங்கிய இக்கால கட்டத்திலும் மனிதன் மனிதனை அழிக்க கையில் எடுக்கும் கருவி சமயமே ஆகும். அதற்கு காரணம் சமயப்புரிதல் இன்னையே எனலாம். எல்லாச் சமயங்களும் மனிதனின் ஆன்மா ஈடேற்றத்திற்கு வழிகாட்டி, அவனைப் பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்ல முனைகின்றன. இதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் உணர்ந்து பரம்பொருள் ஒன்றே என வாதிட்டவர்கள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் பாடல்வரிகளும், ஒன்றொன்றிரு தெய்வ உண்டேன்றிரு எனும் பட்டினத்தாரின் வரிகளும் மிகவும் சிந்திக்கத்தக்கன. சிவவாக்கியார். ஒன்றும் ஒன்றும் ஒன்றும் உலகனைத்தும் உன்றுமே, அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே என்று ஒரு படி மேலே சென்று பேசுகிறார்.

சமூக ஏற்றத்தாழ்வு:

நம்முடைய சமுதாயத்தில் வருணப்பாகுபாட்டை நியாயப்படுத்தி, மக்களைக் கூறுபோடும் சாத்திரங்களால் எவ்விதப் பயனுமில்லை என்பதைச் சித்தர்கள் கண்டு உணர்ந்தனர். உண்மை நிலையை அறியாமல் மனிதருக்கு மாறுப்பட்ட சிந்தனைகளை ஊட்டிச் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் சாத்திரக் குப்பைகளை அகற்ற வேண்டும். தன்னுள் உறைந்திருக்கும் இறைவனைக் கண்டுணராமல், வெற்றுச்சாத்திரங்களை ஓதுவதால் எந்த பயனுமில்லை என்று சாடுகிறார் வாலைச்சாமி சித்தர்.

தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடி

     வேத சாத்திரப் பொத்தலை மூடுங்கடி

முக்தி தருஞான வத்துவை வாவென்று

மூட்டி கும்மியடி யுங்கடி.5           

என்று மனிதனுக்கு இறுதிவரை துணை வருவது சாத்திரங்கள் அல்ல. அவன் செய்த தர்மங்களே என்கிறார்.

      சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்

     சேமமாக ஓதினும் சிவனைநீர் அறிகிலீர்

     காமநேயை விட்டுநீர் கடுத்துளே உணர்ந்தபின்

     ஊமையான காயமாய் இருப்பான்எங் கள்ஈசனே”.6  

என்றும், சாத்திரக் குப்பைகளால் மனிதன் இறைவனை கண்டுணர முடியாது. மனதில் ஞானஒளி ஏற்றினால் மட்டுமே அறியமுடியும் என்கிறார்.

மனமாற்றல் தேவை (தன்னம்பிக்கை)

      மனிதனுக்கு ஏற்படும் அனைத்து விளைவிற்கும் அவன் மனமே முதற்காரணம் என்பதைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். மனத்தின் ஆற்றலைக் கணக்கிட்டு ஆறு ஆதாரங்கள் வழியாகக் குண்டலினி சக்தியை எழுப்பிப் பேரின்பத்தைத் தான் நுகர்ந்து, பிறரையும் நுகருவதற்கு வழிக்காட்டியவர்கள். சொர்க்கத்தை நரகமாக்குவதும், நரகத்தைச் சொர்க்கமாக்குவதும் மனம் தான் என்று கூறியுள்ளார் ஆங்கிலக் கவிஞர் மில்டன்.

வயல்வெளியில் மேய்ந்து திரியும் விலங்கினங்களுக்கு அருகில் புள்ளினங்கள் இருப்பதும், அவற்றின்மீது அமர்வதும் இயற்கையான நிகழ்வு. ஆனால் அப்புள்ளினங்கள் மனிதருக்கு அருகில் வருவதில்லை. மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. காரணம் மனித மனதில் எழும் தீய காந்த அதிர்வுகளே. சமதாயத்தின்  அனைத்து  முரண்பாடுகளுக்கும் காரணம் மனமே எனலாம். இம்முரண்பாடுகளைக் களைய முனைந்து  நின்று போராடிய சித்தர்கள், தாம் போரடிப்பெற்ற மெய்ஞ்ஞானத்தைத் தான் கண்டுணர்ந்து  இவ்வுலகமும் கண்டுணரப் பெரிதும் வழிக்காட்டியவர்கள். பொதுவாக மனிதனுக்கு மன ஆற்றல் தேவை என்றும், மனமாற்றம் தேவையில்லை என்றும் அறிவுறித்தியவர்கள்.

மனிதநேயம்:

நாட்டில் மனிதநேயம் வளரத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். சித்தர்கள் குறிப்பிமுவதில் முதன்மையானது சமத்துவ உரிமை. சமயத்தின் பெயராலும், பாலின வேற்றுமையாலும், பொருளாதாரப் பாகுபாட்டினாலும் உலகில் சமத்துவ உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. சித்தர்கள் சமத்துவ உரிமைக்காக குரல் எழுப்பினார்கள்.

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல்  எலும்பினும் இலக்கம்இட்டு இருக்குதோ

பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்தப்பாரும் உம்முளே”7

சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வும், அதனடிப்படையில் ஏற்படும் உயர்வு, தாழ்வும் பிறப்பால் அமைவதில்லை. ஆதிக்கச் சக்தியினரின் அறியாமை. இதனை குதம்பைச் சித்தர் வினா எழுப்பி கண்டனம் செய்கிறார்.

பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்

தீர்ப்பாகச் சொல்வதென்னெ? குதம்பாய்

தீர்ப்பாகச் சொல்வதென்னெ?”8

சித்தர்கள் மனித உரிமை அமைப்பின் முன்னோடி எனலாம். பரந்து விரிந்த தமிழகத்தில் பாகுபாடுகளைக் களைந்து ஓருலகக் சமத்துவபுர சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் சித்தர்கள்.

பெண் நலவிரும்பிகள்:

      சித்தர்கள் பெண்ணினத்திற்கு எதிரானவர்கள் அல்லர். உண்மையில் சித்தர்கள் பெண்மையைப் போற்றியவர்கள். பெண்களை வெறும் பாலியல் சார்ந்த போதை நுகர்பொருளாகப் பார்ப்பதைக் கண்டனம் செய்தார்கள். பெண்ணடிமைத் தனத்தைக் கண்டனம் செய்யும் சிவவாக்கியார் ஆணும் பெண்ணும் ஓன்றே என வலியுறுத்துகின்றார்.

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே

பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்

கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே

மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே”9

குடும்பத்தில் கனவன் மனைவி ஆகிய இருவரும் சமமே. இருவரும் இணைந்தே இல்லறத்தை நல்லறமாக நடத்துதல் வேண்டும் என்று கடுவெளிச்சித்தர் வலியுறுத்துகிறார்.

வழிபாடு:

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பது போல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனது தான் இந்தப் பிரபஞ்சம். குழந்தைக்குப் பொம்மையில் மரம் இருப்பது தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் இருப்பது தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன என்பதனை  

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற்பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற்பூதம்”10 –

இப்பாடலில் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார். இறைவனுக்கு செய்யும் பூசையால் பயன் ஒன்றுமில்லை. நடமாடும் கோவிலாகிய அடியவர்க்கு தொண்டு செய்தால் அது இறைவனுக்கு சென்று சேரும் என்கிறார் திருமூலர். இறைவன் ஐந்து பூதங்களிலும் மறைந்து இருக்கின்றான். இறைவனில் ஐந்து பூதங்கள் மறைந்திருக்கிறது என்கிறார்.

முடிவுரை:

      சித்தர்கள் மனக்கட்டுபாடு உடையவர்கள். தன் மனக்கட்டுப்பாட்டின் வழி தன்னையே தான் ஆளுகின்ற பண்புகளை முழுமையாக அறிந்தவராவர்கள். தன் பாடல்களில் சித்தர்கள் தனி மனித ஒழுக்கத்தையும்,  சமூகவொழுக்கத்தையும் விரும்பியவர்கள். அதனால் தன் பாடல்களில் தனிமனித ஒழுக்கத்தையும், அதன் வழி  சமூகவொழுக்கத்தையும் கூறியுள்ளனர். தான் வாழும் சமூகத்தில் சாதி, சமய,  சடங்கு, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, மனம் வருந்திய சித்தர்கள், அவ்வேற்றத்தாழ்வுகளை களைய முற்பட்டு தனியொருவராய் தனித்து நின்று போராடியவர்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக களைய வேண்டுமாயின் ஒழுக்கம் அவசியம் என்று கருதியதால் தான் தனி மனித ஒழுக்கத்தையும், அதைச் சார்ந்து சமூக ஒழுக்கத்தையும் தன்னுடைய பாடல்களில் பதிவு செய்து சென்றுள்ளனர் எனலாம். ஒழுக்கம் பண்பாட்டின் ஒரு கூறாக விளங்குகிறது. இதன்வழி தம் பாடல்களில் தமிழர்களின் பண்பாட்டு ஒழுக்கலாறுகளைப் பதிவு செய்து சென்றுள்ளனர் என்று கூறலாம்.

அடிக்குறிப்புகள்

  1. திருமுலர் – திருமந்திரம்- திருமுறை அவா அறுத்தல் – பா-03.
  2. பட்டினத்தார்-பா – 28.
  3. பத்திரகிரியார் – பா-14.
  4. சிவவாக்கியார்- பா-216.
  5. வாலைச்சாமி சித்தர்- பா- 146.     
  6. சிவவாக்கியார்- பா – 20.
  7. மேலது -பா – 39.
  8. குதம்பைச்சித்தர்-பா - 138.
  9. சிவவாக்கியார்-பா-25.
  10. திருமூலர்- திருமந்திரம்-பா-309.

துணைநூல்கள்

  1. சித்தர் இலக்கியம் – தமிழ் இணையக்கல்விக்கழகம், சென்னை.