ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மனிதனின் இறை நம்பிக்கைகள் – கோட்பாடுகள் | Human Beliefs on God– Theories

முனைவர் து.இலங்கேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம். 01 Nov 2023 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

      பழங்காலத் தமிழர்கள் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கினர். நல்நெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர். அதனால் நற்கதி அடைந்தனர். அறம் அல்லாத நெறியினைப் பின்பற்றுவோர் அதன் பயன் நுகர்வர். மனிதன் நல்வாழ்வு வாழவும் அவனது வாழ்வு சிறக்கவும் காரணமாக அமைவது வாய்மை, அறம், பற்று நீக்கல், குறிக்கோள் வாழ்வு, இறைப்பற்று, நல்வணக்கம் முதலிய நற்பண்புகளேயாகும். இவ்வகை பண்புகள் மனிதன் நல்நெறி வாழ்வதற்கு வாழ உதவுகின்றது. சமுதாய மாந்தர்கள் இறை நம்பிக்கையுடன் அறவுணர்வைப் போற்றி, ஒழுக்க நெறி பேணி சார்ந்து வாழும் எண்ணத்துடன் அறிவுக்கு எட்டாத மூடச்செயல்களை தவிர்த்து வாழ வேண்டும்.

திறவுச் சொற்கள்:

பண்டைய, தமிழர், இறையியல், கடவுள் நம்பிக்கைகள், தமிழ் மக்கள்

Abstract:

Ancient Tamils excelled in theology. They lived by virtue. So they were blessed. Those who follow a non-virtual practice are its beneficiaries. The virtues that make a man live a good life and make his life successful are virtues such as wisdom, virtue, removal of attachment, purposeful life, devotion to God, and goodwill. These qualities help man live a virtuous life. The community leaders should live with faith in God and praise morality and live with the intention of maintaining morality and avoiding superstitions that are beyond the reach of knowledge.

Keywords; Anciant, tamils, theology, beliefs on god, tamil people

முன்னுரை

இலக்கியங்கள் மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்த வாழ்வதற்கான கட்டமைப்புகளை உண்டாக்குகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ப மனிதன் மாறினாலும் கடவுள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை இன்றும் குறையாமல் இருக்கின்றது என்று கூறலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலுள்ள காலம் பக்தி இயக்கக் காலம் என்று போற்றப்படுகிறது.

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் அருளால் வாழ்ந்து வருகின்றன. இன்ப துன்பம் அனைத்தும் இறைவனின் திருவிளையாடல்களின் மூலமே நடைபெறுகின்றது. அக்காலத்தில் கடவுளை வணங்குபவர்களைத் தேவர்களுக்குச் சமமாக மதித்தனர். நக்கீரர்,

கை தொழூஉப் பரவிக்காலுற வணங்கி

(திருமுருகாற்றுப்படை, 252)

என்ற அடியின் மூலம் கூறியுள்ளார். இறைவனை வணங்குவதன் மூலம் பிறவி என்னும் பெரிய கடலைக் கடக்கலாம் என்பதைத் திருவள்ளுவர்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீத்தார்

இறைவன் அடி சேராதார்   (குறள்.10)

என்றும்,

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று

அலையும் அறிவிலிகாள்

கோபத்தின் ஆழத்தை பாரதி தெய்வம் என்பது என்ன என்பதை உணர முடியாமல் வெவ்வேறு தெய்வங்களைத் தேடி அலையும் பித்த மனிதர்களைச் சாடுகிறார்கள். மனதிற்குள் உதிக்கும் நல்ல எண்ணங்கள் கடவுள் என்பதை உணராமல் தினந்தோறும் தெய்வங்களைத் தேடி அலைபவர் பாரதி. சித்தர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படக் கூடிய ஒருவன் பாரதி என்பதால் அவனுக்குத் தெரியும் எது தெய்வம் என்று அதன் காரணமாக அவன் கூறிய ஒற்றைச் சொல்லே போதுமானது.

தெய்வம் நீ என்று உணர்

என்பதாகும். நமக்குள்ள நல்ல சிந்தனைகள் உருவாகும் போது நாம் இறைவனாகவும் தீய சிந்தனைகள் தோன்றும் போது அரக்கனாகவும் தோன்றுகிறோம் என்பதே அவனுடைய பார்வையாகவும் இருந்தது. அதுவே அவனது அனைத்துப் பாடல்களிலும் வெளிப்பட்டது என்றால் மிகையாகாது.

      தன்னை யார் என்று உணராத ஒருவரால் பிறரைக் கணிக்க முடியாது, பிறரைக் கணிக்க இயலாமல் அவருடைய துன்பங்களை அறிய இயலாது. அவர்கள் துன்பங்கள் பற்றிய அறிவு இல்லாமல் அதைத் தீர்க்க இயலாது. எனவே தன்னை உணரத் தொடங்கும் போதே நாம் இறைவனை அடைய முதல் அடி எடுத்து வைக்கிறோம்.

      கடவுள் யார் என்பதைத் தேடி அலைவதை விட மேலானது ஒவ்வொருவரும் தன்னைத் தெய்வமாக உணர வேண்டும். கடந்து உள்ளே சென்று தன்னை அறியும் நிலைதானே தெய்வ நிலை. அதையே தான் பாரதியும் சொல்கிறான்.

மெல்லப் பழங்கதைகள் கூட்டி வளர்த்து

வெறுங்கதைகள் சேர்த்து சுபல

கள்ளமதங்கள் பரப்புதற்போர் மறை

காட்டவும் வல்லீரோ?

என்றே சாடுகிறான். மதங்களால் சாதிகளால் பிரிவினை செய்து தனது கடவுளே உயர்ந்தது என்று சொல்லி பிற கடவுளைத் தூற்றுதல் பாரதிக்குப் பிடிக்காத ஒன்று. எனவே புதிய ஆத்திசூடியில் வாழ்த்துப் பாடலில்,

ஆத்திசூடி இளம்பிறையணிந்து

மோனத்தீருக்கும் முழுவெண்மேனியான்!

கருநிறங்கொண்டு பாற்கடல் மிசைக்கிடப்போன்;

முகமதுநபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத்தாலே உணர்ந்துணராது

பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்

என்றே பாடியிருப்பான். அவனுக்கு அல்லாவும் ஏசுவும் கண்ணனும் கடவுளாகத் தெரிந்ததைவிட தனது நண்பனாகவும், குழந்தையாகவுமே தெரிந்தனர் என்றே கூறலாம். உலகத்தில் ஒட்டுமொத்த சக்தியாக உருவகம் செய்ததே பரம்-சக்தி-பராசக்தியாக நினைத்தே கொண்டாடி வேண்டினான். பாரதி-சித்தர் இலக்கியங்களில் பின்னாளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஈடுபாடும்,

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு

வாழும் மனிதருக்கு எல்லாம்

என்று பாடிய பாரதி வள்ளலாரிடம் கற்றுக்கொண்ட சீவகாருண்யத்தை தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தான்.

அன்பின் வெளிப்பாடு

      இந்த உலகம் அன்பினால் கட்டப்பட்டது. அதனால் தான் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. சக மனிதர்களிடம் அன்புகாட்ட முடியாது. எவராலும் இறைவனை அடைய இயலாது என்பது தான் உண்மை நிலை. அதனால் அன்பு செய்யக் கற்றுக் கொள்.

அன்பும் சிவனும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ(து) ஆகும் அறிகிலார்

அன்பேசிவமாவ(து) ஆகும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே (திருமூலர்)

கசடற கல் – ஞானக்கண்

      நாளை என்ன நடக்கும் எனச் சொல்ல இறைவனால் வழங்கப்பட்ட ஞானக்கண் வேண்டும் என்பதல்ல, கல்வியைக் கசடறக் கற்றுக் கொண்டவர்களுக்கு சகல துறை பற்றிய ஞானம் இயல்பாகவே வந்து விடும். நல்ல மனமும், பூரண அறிவும் கொண்டவர்களுக்கு அடுத்தவர்களால் சிந்தித்துச் செயல்படும் எந்தச் சொல்லும் சரியானதாகவே இருக்கும். நிறைய கற்றுக் கொள்ளலே ஞானக்கண் பெறுவதற்கான வழி என்ற குறளில் குறிப்பிடுகிறார். மேலும் இறந்தோர், தெய்வம், விருந்து, உறவினருடன் தனக்கும் ஐந்து புலன்களாலும் அறம்பேண இல்வாழ்வோன் உரியவன்.

வள்ளலாரின் இறையியல் தத்துவம்

      அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை கோட்பாட்டில் வள்ளலாரின் இறையியல் தத்துவம் பற்றிப் பாடல் மூலம் அறியலாம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி என்பது அறிவு விளக்கம் ஏற்பட்டு உள்ளே வெளிச்சம் ஏற்பட்டு சுடர் ஏற்படுகிறது. இச்சுடரால் தன்முனைப்பு அறவே ஒழித்து விடுகிறது மற்றும் பழிச்செயல் பதிவுகள் நீங்கி விடுகின்றது. இதுவே அருட்பெருஞ்ஜோதியாகும்.

      அருளாக இருக்கக் கூடிய அருளாளன் உள்ளே அறிவாக இருந்து கொண்டு விளக்கிக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு காட்சிதான் அருட்பெருஞ்ஜோதியாகும். அந்நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும். அந்நிலையை அடைய மகாமந்திரமே அருட்பெருஞ்ஜோதியாகும்.

தனிப்பெருங்கருணை

      தனிப்பெருங்கருணை என்றால் தனக்குத் துன்பத்தைத் தரக்கூடியவர்களைக் கூட நன்றாக வாழ வேண்டும் என நினைத்து வாழ்த்தி இறைநிலையை வணங்கி வேண்டிக் கொள்வதே ஆகும்.

குழலார் சிறுபுறுத்துக் கோல்வளையைப் பாகத்

தொழிலாக வைத்தேக வேண்டா – கழல் ஆர்ப்பப்

பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்

ஆரழல்வாய் நீயாடும் அங்கு

(11 ஆம் திருமுறை, அற்புதத் திருவந்தாதி)

என்ற பாடலில் பேய் உருவம் பற்றிக் கூறுகின்றார்.

      இறைவா! கழல் என்னும் அணிகலன் ஒலி எடுப்ப, அடர்ந்த இருள் நிறைந்த நள்ளிரவில் பிணங்கள் எரியும் சுடுகாட்டில் பேய்க் கூட்டங்களோடு பெருகி எரியும் நெருப்பில் நின்று நடனமாடுகின்ற இடத்திற்கு, அழகிய கூந்தலுடைய வளையல்கள் அணிந்திருக்கும் உமையம்மையை உன்னுடைய இடதுபுறத்தில் அழகு பொருந்தியிருக்க வைத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்பது இப்பாடலின் விளக்கம். இதே கருத்தை திருஞானசம்பந்தர்,

கள்ளி யிடுதலை யேந்துகையர் தரிகாடர் கண்ணுதலர்

வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிராடவார்த்து

நள்ளிருள் நட்டமது ஆடுவர் நன்னலன் ஓங்கநாரையூர்

உள்ளிய போழ்தில் எம்மேல் வருவல்வினையாயின ஓடுமே

(திருநாரையூர் பதிகம், 3 ஆம் திருமுறை)

அருட்பெருங்ஜோதி தனிப்பெருங்கருணை கோட்பாட்டில் வள்ளலார் அறிவுறுத்துவது அருளாக இருக்கக்கூடிய அருளாளன் உள்ளே அறிவாக இருந்து கொண்டு விளக்கிக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு காட்சிதான் அருட்பெருங்ஜோதியாகும்.

      அருட்பெருங்சோதி என்பது அறிவு விளக்கம் ஏற்பட்டு உள்ளே வெளிச்சம் ஏற்பட்டு சுடர் ஏற்படுகிறது. இச்சுடரால் தன்முனைப்பு அறவே ஒழிந்து விடுகிறது. மற்றும் பழிச்செயல் பதிவுகள் நீங்கி விடுகின்றது. இதுவே அருட்பெருஞ்சோதியாகும். இதானல் உள்ளத்தில் அனைவரையும் சமமாகக் கருதி அனைவருக்கும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதும் மற்றும் தனக்குத் துன்பத்தைத் தரக்கூடியவர்களைக் கூட நன்றாக வாழ வேண்டும் என நினைத்து வாழ்த்தி இறைநிலையை வணங்கி வேண்டிக் கொண்டும் அவர்களுக்கு உதவி செய்வதே தனிப்பெருங்கருணையாகும்.

காரைக்காலம்மையார், திருஞானசம்பந்தர், பக்திநிலை

பேயின் தோற்றத்தின் இறைநிலை காணுதல்

      பேயின் உருவத்தினை காரைக்காலம்மையும், திருஞானசம்பந்தரும் கூறுகின்றனர். காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதியில் கள்ளிச்செடிகளையம் இடுகாட்டில் மண்டையோட்டினைக் கொண்டுள்ளவர்; அவர்தம் கோயில் சுடுகாடு; நெற்றிக்கண் காட்டியவர்; நள்ளிரவில் நட்டம் பயில்பவர் என்று பேயின் தோற்றத்தை சம்பந்தர் தேவாரத்தில் கூறியுள்ளார். காரைக்காலம் அம்மையும் சம்பந்தரும் தமது பாடல்களில் பேய்களின் தோற்றத்தைச் சித்திரிக்கிறார். காரைக்காலம்மையார் பேய் அடியெடுத்து நடனம் செய்து பூதங்களை வணங்கி நிற்கும் அருள் நிறைந்த பாதத்தை உடையவன் என்று கூறுகிறார். காரைக்கால் அம்மையாரும், திருஞானசம்பந்தரும் இருவரும் சிவபெருமானின் பெருமைகளை ஒரே முறையில் எடுத்துக் கூறியுள்ளனர். சிவபெருமான் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர்களை சிவபெருமான் அம்மையாக காரைக்காலம்மையையும் பிள்ளையாக சம்பந்தரையும் எண்ணி அருள் புரிந்துள்ளார்.

முடிவுரை

      தனிமனிதனுடைய வாழ்வு தூய்மையாக அமையுமானால் தானாகவே சமுதாயத்தின் வாழ்வு சீராகும். இதனை நன்கு உணர்ந்தவன் சமுதாயத்தின் எந்த மனிதனுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்வான்.

துணைநூற் பட்டியல்

இராமசாமி, ஆ.வே., திருக்குறள், வல்வில் அச்சகம், திருச்சி, ஏழாம் பதிப்பு, 2012.

களிமேட்டுப் புலவன் (க.அப்பராசன்), திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய முதல் திருமுறை, முதற்பதிப்பு, 2007.

தமிழ் மொழியும் தமிழர் வாழ்வியலும், விஜயா பதிப்பகம், கோயமுத்தூர், 2018.

தமிழர் தம் மெய்யியலும் வாழ்வியலும், விஜயா பதிப்பகம், கோயமுத்தூர், 2019.

திருவள்ளுவர், திருக்குறள், கமர்ஷியல் பதிப்பகம், சிவகாசி, 2014.

நாகராசன், வி., பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, நான்காம் பதிப்பு, 2011.

பாரதியார், பாரதியார் கவிதைகள், சுரா பதிப்பகம், சென்னை, 2016.

பெருமான், நா., பல்லாண்டு வாழ்க வளமுடன், மலேசியப் பண்பாட்டு இயக்கம், அங்கேரிக், டாமான்சாரா உத்தமா, 2005.

மணிவாசகன், புலவர் அடியன், திருமந்திரம் மூலம் எளிய உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.

மாணிக்கம், அ., பன்னிரு திருமுறைகள் மூலமும் உரையும், திருவாசகம் தொகுதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2017.