ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நாட்டிய  நாடகங்களில்   புதுமையையும், மாற்றத்தையும் உருவாக்கிய மாமேதை – ருக்மிணிதேவிஅருண்டேல் | Mamedhai - Rukmini Devi Arundel who created innovation and change in dance

கட்டுரையாளர்: மோ.சசிகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் – 608002 | நெறியாளர்: முனைவர் . அ.எஸ்தர் ப்ரதீபா, உதவி பேராசிரியை  (பரதநாட்டியம்), அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் 01 Nov 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

இருபதாம் நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டாக கருதப்படுகிறது. உலக அரங்கில் பல மாற்றங்களையும், புதுமையையும் உருவாக்கிய நூற்றாண்டு.  அடிமைபட்டு கிடந்த பல நாடுகள் சுதந்திரம் பெற்றதும் இந்தகால கட்டத்தில்தான். மரபு சார்ந்ததடைகள் நீங்கி புதுமை ஏற்பட்டதும் இந்த நூற்றாண்டில்தான். நமது தேசத்தில் மரபாக இருந்த நடனவடிவை புதுமை அலங்காரம் பூட்டி புதுப்பித்த மாமேதைகளில் ஒருவரான ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களை பற்றி இவ்வாய்வானது அமைந்துள்ளது

 

Abstract:

The 20th century marked a pivotal era in history, characterized by significant global transformations and innovations. During this period, numerous enslaved nations gained independence, traditional barriers were dismantled, and groundbreaking innovations flourished. This study focuses on Rukmini Devi Arundel, a legendary figure who revolutionized our country's traditional dance form.

திறவுச்சொற்கள்:

      கலாக்ஷேத்திரா, பொட்டுகட்டுதல், அன்னாபாவ்லோவா, தேவதாசிமுறை, சதிர்

 

முன்னுரை:

நாட்டிய நாடகங்களில் பாரம்பரிய முறையானது கடைபிடிக்கப்பட்டுவந்தது. இருபதாம் நூற்றாண்டில் கலைகள் புத்துயிர் பெறும் வேளையில் மரபாக அமைந்திருந்த நடன வடிவானது புதுமை பெற்று அதேசமயம் பாரம்பரியமுறை மாறாமலும் பாமரமக்களும் ஆர்வத்தோடு கண்டுகளிக்கும் வகையில் உருமாற்றம் பெறகாரணமாக அமைந்த மாமேதைகள்

 

*     ருக்மிணிதேவிஅருண்டேல்

*     சந்திரலேகா

*     மிருணாளினிசாராபாய் ஆகியோர். ஆய்வாளர், இவ்வாராய்ச்சிக் கட்டுரையில் ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் பங்களிப்பு பற்றி விளக்கியுள்ளார்.

 

ருக்மிணிதேவிஅருண்டேல் (1904-1986):

    கலாக்ஷேத்திரா என்னும் கலைகூடத்தை உருவாக்கி புதியதொரு சூழலில் மாணவர்களை கலை பயில செய்த மாமேதை ருக்மிணிதேவி அருண்டேல், பாதிக்கப்பட்ட பல பாரம்பரிய நடன கலைஞர்களை ஆதரித்தவர்.  அவர்களை கலாக்ஷேத்திராவில் நடனம் கற்பிக்க ஏற்பாடு செய்தார். கலை அழிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நட்டுவனார்களையும் தேவதாசிகளையும் ஆதரித்து அவர்களுக்கு விருப்பமான கலைப்பணியை மீண்டும் அவர்களுக்கு கொடுத்து, மாணவர்களுக்கும் ஒரு மாறுபட்ட சூழலில் கலைபயில ஏற்பாடு செய்தார்.  இதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி இமாலய வெற்றியை நோக்கி கலைத்துறை பயணித்தது என்று கூறலாம்.[i]

ருக்மிணிதேவியின் இளமைப்பருவம்:

1904 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் ருக்மிணிதேவி. நீலகண்ட சாஸ்த்திரி-சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தவர். ருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி அன்னிபெஸன்ட் அம்மையார் துவக்கிய பிரம்ம ஞானசபையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவர் தன் பணி ஓய்வுக்குப்பின் சென்னையில் குடி பெயர்ந்தார். பிரம்ம ஞான சபையில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் பலகலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ருக்மிணிதேவி 'ரவீந்திரநாத்தாகூர்' இயற்றிய மாலினி என்கிற நாடகத்தில் நடித்தார். இவ்வாறு ருக்மிணி தேவி கலைத் துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் வீணை வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்றார். இசையில் ஆர்வம் கொண்ட ருக்மிணி தேவி நாட்டியத்தை தழைத் தோங்க செய்ய பாடுபடுவார் என்று தானே எண்ணியதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்னிபெசன்ட் அம்மையார் தனக்கு கல்வி மற்றும் இதர பணிகளில் உதவி புரிவதற்காக  'ஜார்ஜ் சிட்னி அருண்டேல்' என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்தார்.  அவர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் ருக்மிணி தேவியும், அருண்டேல் அவர்களும் கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டு அன்னிபெஸன்ட் அம்மையாரின் அனுமதியோடு 1920ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.    [ii]

நாட்டியத்தின் மீது ஈர்ப்பு:

ருக்மிணிதேவி, ஜார்ஜ் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், பாலே போன்ற பலகலைகளை அறிந்து கொண்டார். 1924ஆம் ஆண்டு 'அன்னாபாவ்லோவா' என்கிற ரஷ்ய நாட்டு பாலே கலைஞரிடமும் மற்றும் 'கிளியோநார்டி' என்பவரிடமும் பாலே நடனம் பயின்றார். அப்பொழுது பாவ்லோவா அவர்கள் இந்திய பாரம்பரிய நடனத்தினை கற்குமாறு ருக்மிணியை அன்போடுகேட்டுக் கொண்டார். அதுவரைசதிர் என்கிற இந்திய பாரம்பரிய நடனத்தினை கண்டதில்லை இவர். கிருஷ்ண அய்யர் சென்னையில் உள்ள மியூசிக் அகாதமியில் 1933ஆம் ஆண்டு இரு தேவதாசிகளின் சதிர்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியை கண்டபிறகு அவர்களது ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு சதிர் ஆட்டத்தினைகற்க வேண்டும் என்று தீர்மானித்தார். புகழ்பெற்ற தேவதாசியான மயிலாப்பூர் கெளரி அம்மாளிடம் கற்க ஆரம்பித்தார். பிறகு பந்த நல்லூர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையிடம் நடனம் பயின்றார்.  நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று 1935 ஆம் ஆண்டு பிரம்ம ஞானசபையின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது அரங்கேற்றம் செய்தார்.

   

சமூகம் ஏற்றகலை வடிவமாக நடனம்:

ருக்மிணி தேவி நடனத்தில் ஏற்படுத்திய புரட்சியின் காணமாக நடனத்தை ஒரு கலை வடிவமாக சமூகம் ஏற்றுக் கொள்ளச் செய்தது. பாடல்களில் சிருங்காரரசத்திற்கு பதிலாக பக்திரசத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தேவதாசி பெண்களால் நடைமுறை படுத்தப்பட்ட நடன வடிவமாக இருந்தது சதிர் எனப்படும் நடனம். பூசாரிகள், நிலப் பிரபுக்கள் போன்றோர் தேவதாசிகளை தவறாக பயன்படுத்தியதின் காரணமாக நடனகலைக்கு களங்கம் ஏற்பட்டது. 'சதிர்' நாட்டியத்திற்கு எதிராக 'நாட்ச்எதிர்ப்பு இயக்கம்' நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கோவில்களில் நடனம் ஆடுவதை தடைசெய்து முத்துலட்சுமி ரெட்டி மசோதாதாக்கல் செய்தார். தேவதாசி தடுப்புச்சட்டம் என்பதை ஏற்படுத்தி தேவதாசிகள் கோயிலில் சதிராடுவதை தடைசெய்த போது அனைவருமே இந்தசட்டத்தை ஆதரித்த நிலையில் ருக்மிணிதேவி அவர்கள் கலை அழிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கோயில்களில் நிகழ்த்த பெறும் வழிபாட்டு முறைகளில் தேவதாசிகளின் ஆட்டமான சதிர் என்பதும் மிகமுக்கியமான ஒன்று. அது நம் பாரம்பரிய வழிபாட்டு முறையாகும். ஆனால் பின் தோன்றிய காலங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், நிலப்பிரபுக்கள் தேவதாசிகளை தவறான முறையில் கையாண்டனர். 'பொட்டுகட்டுதல்' என்கிற முறையை பலரும் தவறான வழியில் பயன்படுத்தி பெண்களின் வாழ்வை சீரழித்தனர். அதை தடுக்கவே 'தேவதாசி தடுப்புச் சட்டம்' இயற்றப்பட்டது. ஆனால் சட்டம் இயற்றப்பட்ட போது கோயில்களில் நடனம் ஆடுவதும் தடை செய்யபட்டது. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இ.கிருஷ்ண அய்யர், ருக்மிணிதேவி போன்றோர் மட்டுமே நாட்டியக்கலை அழிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

கலாக்ஷேத்ரா:

 ஒரு மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936 ஆம் கலாக்ஷேத்ரா என்கின்ற கலைக்கூடம்.பாரம்பரிய நடன கலைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்த அந்த சூழ்நிலையில் அவர்களை ஆதரித்து, அவர்களை கலாக்ஷேத்ராவில் நடனம்  கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆன்மீகம் நிறைந்திருக்கும் நமது கலையில் பக்தி ரசத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்கின்ற கருத அவர் வலியுறுத்தினார். பரத நாட்டியத்தில் புரட்சி ஏற்பட்ட அந்த காலகட்டத்தில் நடனமும், நடன கலைஞர்களும் புதிய பரிமாணத்தில் உருவான விதம் பாரம்பரியமான வழியில் வந்தவர்கள் அல்லாத புதிய நடன கலைஞர்களும் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.[iii]

நாட்டிய நாடகங்கள்:

ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் தயாரிப்பில் பல நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. "குற்றால குறவஞ்சி", "குமார  சம்பவம்", "சீதா ஸ்வயம்வரம்", "சபரி மோக்ஷம் ","சாகுந்தலம்",  போன்றவை குறிப்பிடத்தக்க சில நாட்டிய நாடகங்கள் ஆகும்.  இவற்றிற்கான நடன வடிவமைப்பு செய்யும் தருணத்தில் நடன  கலைஞர்கள் அரங்கத்தில் நுழையும் நிகழ்வே பல புதுமைகளுடன்  கையாளப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. மேலும் நடன அரங்கமும் பல பாகுபாடுகளுடன் பல திரைசீலைகள் கொண்ட பெரிய நடன அரங்கமாக விளங்குகிறது. அதில் ஒலி, ஒளி  அமைப்புகளும் சிறந்த முறையில் கையாளப்பட்டுள்ளன. ருக்மிணி தேவி அவர்களின் நாட்டிய நாடகங்கள் குறிப்பிடத்தக்க  காட்சிப் படங்களாக அமைய காரணங்களை ஆராயும் பொழுது அவர்களுக்கு நாட்டியத்துறையில் அடியெடுத்து வைப்பதற்கு  முன்பே பல நாட்டிய நாடகங்களான, "தி லைட் ஆப் ஏசியா" (The light of Asia), "பிஷ்மா" (Bhishma), "குசேலவ்ரதம்", "காரைக்கால் அம்மையார்" போன்றவற்றை தயாரித்திருந்தமையால் அவை ஏற்படுத்திய தாக்கமே காரணமாக அமைந்திருப்பதை நாம் கண்டறிய முடிகிறது. இந்த நாட்டிய நாடகங்கள் காட்சிகளாக பிரிக்கப்படாமல்,  கதாபத்திரங்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து மேடையை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அங்கு கதாபாத்திரங்கள் மேடையின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று அபிநயித்து காட்டுவதின் மூலம் காட்சிகளை விளக்குவது புதுமையாக இருந்தது.

சபரி மோக்ஷம்:

நாட்டிய நாடகங்களில் இத்தகைய புதுமைகளை அவர்  ஏற்பத்தியதோடு, குறவஞ்சி, பாகவத மேளம் மற்றும் கதகளி நாட்டியங்களின் நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான இசைமைப்புடன் நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை காண்பவர் அனைவரையும் கவருவதாக அமைந்திருந்தது. ருக்மிணி தேவியின் சபரி மோக்ஷம் 1965 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. இதில் பஞ்ச அப்சரஸ் என்கின்ற காட்சியில் ஐந்து அப்சரஸ்கள் நாட்டியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஐந்து நடன மங்கைகளும் அரங்கத்தில் ஓரிடத்தில் இருந்து நுழையாமல் இருவர் இடதுபக்கம் முன் நுழைவு வாயிலிலும் இருவர் வலதுபக்கம் இருக்கும் நுழைவு பகுதியிலும் மற்றொருவர் இடது வழியிலும் நுழைந்து அருமையாக ஆடுவது போன்று நடன வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்துபேரின் இயக்கம் ஒரே மாதிரியாக அமைக்கப்படவில்லை என்றாலும் உடற்பகுதியில் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஒற்றுமை உள்ளது. இதில் ருக்மிணி தேவி அவர்களின் நேர்த்தியான நடன வடிவமைப்பு திறன் நம்மால் உணரமுடிகிறது. நடன மங்கைகள் மெய்யடவு செய்யும் போது  அவற்றை பிரம்மரி  அடவுகள் மற்றும்  உத் பிளாவன அடவுகள் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடவுகளின் இயக்கம் அரங்கத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து ஆடுவது போல் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.[iv]

ஜடாயு பாத்ர பிரவேசம்:

 ருக்மணி தேவியின் ஜடாயு பாத்ர பிரவேசம் என்கிற நாட்டிய நாடகத்தில் காட்சி இரண்டில் ஒரு பெரிய கழுகு ஒன்று ராம லட்சுமணனை எதிர்கொள்கிறது அது ஒரு ராட்சசனாக இருக்குமோ என்று சந்தேகித்து இராமர் அவருக்கு சவால் விடுகிறார்.  அச்சமயம் கழுகு தன்னை ஜடாயு என்றும், சைனி மற்றும் அருணன் மகன் என்றும், ராமனின் தந்தை தசரதனின் நண்பன் என்றும் அறிமுகம் செய்து கொள்கிறது. ஜடாயு பார்ப்பதற்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக ஆனால் மிகவும் அமைதியானவராக இருந்தார். இந்த காட்சி அமைப்பில் ஜடாயுவின் அறிமுகம் அதன் சிறப்பு உடை/ அலங்காரம் மற்றும் கழுகு எழுப்பும் ஒலி போன்ற அமைப்பு இதை நமக்கு உணர்த்துகிறது. பறவையின் சிறப்பு இயல்பை குறிக்கும் மூக்கின் அமைப்பு மேலும் உடையின் அமைப்பு ஆடுபவரின் செயல் திறனை குறைப்பதாக இருக்கக் கூடாது, அதற்கு ஏற்ப அவ்வளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது  அதன் தனிச்சிறப்பு. ஜடாயு வேடம் தரித்திருப்பவர் ஆடுவதற்கு அவரது உடை, இறக்கைகள் அமைப்பு, கால்களில் கட்டப்பட்டிருக்கும் கச்சைகள் என எதுவும் தடையாக இருந்திராதவாறு பலகோணங்களில் ஆராய்ந்து சிந்தித்து உடை அமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜடாயு மோதித மண்டலம், ஆயத்த மண்டலம், ப்ரேரித மற்றும் கர்தரி உத்ப்ளாவன போன்ற அடவுகள் செய்வதற்கும் ஏதுவாக  உடையமைப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இறக்கைகள் இணைக்கப்பட்டு கைகள் அகலமாக விரித்து ஆடுவது ஒரு பிரம்மாண்டமான பெரிய கழுகு எவ்வாறு செயல்படும் என்பதை சித்தரிப்பது போன்று ஜடாயுவின் உடல் அசைவு வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவையின் அசைவுகள் உடலை திருப்பும் விதம் மற்றும் பறக்கும் தருணத்தில் இறக்கைகளை படபடப்பது போன்ற நடன அமைப்பு செய்யப்பட்டுள்ளது.[v]

முடிவுரை:

இந்த ஆய்வு கட்டுரையில் ருக்மிணி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் நாட்டிய துறைக்கு ஆற்றிய மிகச் சிறந்த தொண்டினை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு தேசியவாதியாக கலையை சீர்திருத்தம் செய்த ஒரு போராளியாக ருக்மிணி தேவி அவர்களின் சேவை, சமஸ்கிருத நாடக மரபுகளில் இருந்து பரதநாட்டியத்திற்கான ஒரு புது வரலாற்றை உருவாக்கியது. நமது நாட்டிய நாடகங்களும் புத்துயிர் பெற்று புதுமையுடன் மாற்றமும் கண்டு வளர்ச்சி அடைந்தது.

துணைநூற்பட்டியல்:

  1. https://en.m.wikipedia.org/wiki/Rukmini_Devi_Arundale
  2. Rukmini Devi- A Life, Leela Samson, 2010.
  3. Bharatanatyam refined re defined Analysing dance works of Rukmini Devi Arundale and ChandralekhaResearcher: P Radhika http://hdl.handle.net/10603/313209
  4. https://books.google.com/books?hl=hi&lr=&id=uNYZ1vp-xFIC&oi=fnd&pg=PR7&dq=Rukmini+Devi+A+Life&ots=AvQ3UEJacT&sig=LVwLuCNBGahiNNtqc7YSCLu_q6Q
  5. https://books.google.co.in/books?hl=hi&lr=&id=uNYZ1vp-xFIC&oi=fnd&pg=PA85&dq=info:GqlzgfAYkC4J:scholar.google.com/&ots=AvQ3UEK69U&sig=KsDejh4Ggi0c9kA4iO8cXCzXbfQ&redir_esc=y#v=onepage&q&f=false

 


  1. [i]  https://en.m.wikipedia.org/wiki/Rukmini_Devi_Arundale
  1. [ii]  Rukmini Devi- A Life, Leela Samson, 2010.
  1. [iii]https://books.google.com/books?hl=hi&lr=&id=uNYZ1vp-xFIC&oi=fnd&pg=PR7&dq=Rukmini+Devi+A+Life&ots=AvQ3UEJacT&sig=LVwLuCNBGahiNNtqc7YSCLu_q6Q
  1. [iv]  Bharatanatyam refined re defined Analysing dance works of Rukmini Devi Arundale and ChandralekhaResearcher: P Radhika http://hdl.handle.net/10603/31320
  2. ]  https://archive.org/details/dni.ncaa.KF-KF_DD_VHS_SM_003-VHS