ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அகநானூற்றில் தோழி கூற்று - ஓர் உளவியல் பார்வை | Thozhi kootru in Akananoor - A Psychological View

முனைவர் அ.இராஜலட்சுமி , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 29 01 Nov 2023 Read Full PDF

ஆய்வின் நோக்கம்

         செய்யுள் வழக்காகப் பண்டையோர் குறிப்பிட்ட களவொழுக்கத்தில் பெருவாரியாக உள்ளது தோழியிற் கூட்டமாகும். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்றற்குப் பின்னர் புலனெறி வழக்காகப் புலவர்களால் கூறப்பெறுவது தோழியிற் கூட்டமாகும். புலநெறி வழக்கம் என்பது சுவைப்பட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறும் நாடக வழக்கும், உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்துவரும் உலகியல் வழக்கும் விரவி வருவதாகப் பாடப்பெறும் அகப்பொருள் மரபும் ஆகும். அகப்பொருள் நாடகத்தைப் பொறுப்புடன் நடத்தும் பெரு விசை போன்ற தோழி செவிலியின் மகளாகக் கூறப்பெறுகின்றாள். உலகியலை நன்கு அறிந்தவளாகவும் பாடப் பெறுகின்றாள். இவளைப் பற்றுக் கோடாகக் கொண்டுதான் தலைவன், தலைவியை நிரந்தரமாகச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவான். அகநானூற்றின் மணிமிடைப்பவளத்தில் அமைந்த 180 பாடல்களில் உள்ள தோழி தலைவனிடம் கூறும் பாடல்களை உளவியல் அடிப்படையில் அணுகி பொருத்திப் பார்ப்பது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

SYNOPSIS

     As a case in point, the ancients have a lot of specific fields in which they gather together.  After the three namely, natural fertility, itanthalapam, and pangat koomat, which is said by the scholars to be the case of dothi kirot koomat.  Philosophical tradition is a theatrical case that sums up all that is to be tasted in one place, and a subjective tradition that teaches that the worldly case that conforms to the morals of the world is spreading.  She is said to be the nurse's daughter, a friend of great strength who conducts the internal drama responsibly.  She is also well versed in world science.  With her as a line of attachment, the leader will get opportunities to meet the leader permanently.  The purpose of this review article is to approach and match the songs to Doshi Thalaivan in the 180 songs of Akananoor's Manimidippavalam.

திறவுச்சொற்கள்:

பெட்குவம்,  மெய்யாண்டு, செவிக்கிடா அய், ஆய்இதழ்க்குறுமகள், அம்பல், ஏதிலமொழி,  தண்பெருஞ்சாரல்,  கங்குல்,  பனிமொழி பயிற்றியும்

KEYWORDS

   Pedkuvam, Meiyandu, Sevikida Ai, Ai Italkurumaal, Ambal, Ethilamozhi, Thanperuncharal, Kangul, Panimozhi are also taught.

முன்னுரை

உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் 3000 மொழிகள் எழுத்து வடிவம் பெற்று உள்ளன. அதிலும் சீனம், கிரேக்கம், இலத்தின், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 6 மொழிகள் திருந்திய செவ்வியல் பண்புகளைப் பெற்றுள்ளன. இந்த மொழிகளில் பல அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் சமயத்தில் முன்னைக்கும் முன்னையாய் தோன்றி இன்றளவிற்கும் சீர்த்த நாகரிகமும் செழித்த பண்பும் பெற்று என்றும் இளமையாய் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவள் தமிழ் மகள். அந்த தமிழ் மகளுக்கு அழகு சேர்ப்பன இலக்கியங்கள்.  பல இலக்கண இலக்கியங்களை அணிகலன்களாக அணிந்திருந்தாலும் மணிமகுடத்தில் மரகத கல்லாய் மிளிர்வது சங்க இலக்கியம்.

அகமும் புறமும்     

      தமிழர் வாழ்வியலை அகம் புறம் எனப் பிரித்து வாழ்ந்தனர். ‘அகம் என்பதற்குப் பொருள் என்ன? ஒன்றை அகம் எனச் சுட்டிக் காட்ட அமைந்த அடிப்படை கூறுகள் என்ன? புறம் என்பது எதைக் குறிக்கிறது. புறமென வகை செய்ய வாய்த்த அடிப்படைப் பண்புகள் யாவை? இன்னோரன்ன வினாக்கள் நம் முன் எழுகின்றன. “ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்து, அகத்துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம்” எனவும்,

புறத்தார்க்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படுவது புறம் எனவும் உரையாசிரியர்கள் இவற்றை விளக்கினர். அகம் என்றும் அகமல்லாதன எல்லாம் புறம் என்றும் வகைமை செய்யப்பட்டன எனலாம்.காதலை அகமென்றது   பொருத்தமே.1

அகமாவது ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தில் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது என்று கூறப்படாததால், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்பர். எனவே அகத்தே  நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்பது ஒரு ஆகுபெயராகும். 2

மேற்கூறிய நூற்பாவினை யாண்டும் தொல்காப்பியத்தை நோக்கும் பொழுது தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்களுள் ஐந்து இயல்களை அகத்திற்கே அமைந்துள்ள பாங்கும் புரிகிறது.

மனிதனின் இன்பச்சுவை நாட்டம் காரணமாகவே புறத்தை விட அகத்திற்கு அன்று முதல் இன்று வரை முதன்மை வழங்கப்படுகிறது.”3

          என்று ச.வே.சுப்பிரமணியன் கூற்றின்படி அகம் சிறந்து விளங்க காரணமாக அமைந்தவர்கள் சங்க அகப்பாடல்கள் பாடிய புலவர்கள். அப்புலவர்கள் தாம் கூற விரும்பிய கருத்தினை மாந்தர் கூற்றின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

உளவியல்

மனவியல் அல்லது உளவியல் என்பதும் அறிவியல் துறையே. ஆங்கிலத்தில் சைக்காலஜி(Psychology) என்று அழைப்பர். இது சைக்கி’ ‘லாகாஸ்’( psyche/logos) என்னும் இரு கிரேக்கச் சொற்களை மூலமாகக் கொண்டுள்ளது. ‘சைக்கி என்பது ஆன்மாவையும்(soul),  லாக்கஸ் என்பது ஆராய்ச்சியையும் உணர்த்துவதால் அச் சொல்லின் நேரடி மொழி பெயர்ப்பின் படி இத்துறை மனிதனின் ஆன்மா அல்லது ஆவியின் தன்மை, ஆவியின்  இயல்பு ஆகியவற்றை விளக்குவது எனப் பொருள்பட்டது என்று கல்வி உளவியல் என்ற நூலில் வி. கணபதி அவர்கள் கூறுகிறார். 4

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவனது ஒவ்வொரு செயல்களும் உளவியலை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. குழந்தை பிறந்து தாயிடம் பால் அருந்துவதிலிருந்தே அதன் உளவியல் நிகழ்வு செயல்பட ஆரம்பித்ததாக ஃப்ராய்டு கூறுகிறார். குழந்தை வளர்வதிலிருந்து குடும்ப சூழ்நிலையிலிருந்து சமூகத்தை அவன் எதிர்கொள்ளும் திறன் முதல் ஒவ்வொரு நிகழ்வும் உளவியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சங்க அக மாந்தர்கள்

      சங்க அகப்பாடல்கள் புலவர்களால் அழகுற மிளிர்வதற்குப் பெருந்துணை புரிந்தவர்கள் தலைவன், தலைவி என்னும் முதன்மை மாந்தர்கள். களவிலும் கற்பிலும் தலைவனுக்கும் தலைவிக்கும் நேரிடையாகவும் எதிரிடையாகவும் அவர்களைச் சார்ந்தும் சாராமலும் வந்து கூற்று நிகழ்த்தும் தோழி, பாங்கன், பாகன், செவிலி, நற்றாய், பரத்தை, விறலி, கண்டோர் போன்றோர் துணைமை மாந்தர்கள் எனவும் கூறப்படுகின்றனர்.

ஆசிரியர் தான் கூற விரும்புவனவற்றைச் சமுதாயத்தில் நேரடியாகக் கூற முடியாதவற்றைக் கூறுவதற்குக் கதைமாந்தர்களின் கூற்றுக்களையே பயன்படுத்திக் கொள்கின்றனர்” 5

என்று இரா.ஈஸ்வரி அம்மையார் தனது தொல்காப்பியத்தில் கூற்று கோட்பாடு என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தலைவனையும் தலைவியையும்  கருவாக வைத்தே அனைத்து  அகப்பாடல்களிலும் பெரும் பங்காற்றியவள் தோழி. தோழி என்ற பாத்திரப் படைப்பே இல்லையெனில் சங்க அக இலக்கியங்கள் இத்துணை அளவு செம்மாந்து நின்றிருக்குமோ என்பதும், அகவாழ்வின் அறங்களை இத்துணை அமைப்பாக அற்புதமாக வெளிக்கொணர்ந்திருக்க   முடியுமோ என்பதும் சிறிது சந்தேகமே.

தோழி சொல்லாட்சி  

தோழி என்ற சொல்லாட்சி இறையனார் அகப்பொருள் உரையில் உள்ளது. ஆனால் நம்பியகப்பொருளில் ‘தோழி’ மறைந்து ‘பாங்கி’ என்ற ஆட்சி பெரும்பான்மையாக இருக்கிறது. சிறுபான்மை ‘சேடி’ என்று சொல்லும் ‘இகுளை’ என்ற சொல்லும் ஆளப்படுகிறது. தோழியின் செயல்திறன் பிற்காலத்தில் விரிவாக்கப்பட்டதால்,  அவளுடைய கூற்று நூத்தி நாற்பத்தி எட்டாக நம்பி அகப்பொருளில் அமைந்துள்ளது என்று சரளா இராசகோபாலன் எழுதியுள்ளதையும் நாம் காணலாம். (சரளா இராசகோபாலன், சங்க இலக்கியத்தில் தோழி ப.எண்:40) என்று கூறுகிறார்.

தோழி - சங்க அக இலக்கியத்தின் முத்து

தோழிதானே செவிலி மகளே (தொல். பொருள். களவு.1071) செவிலித்தாயின் மகளானவள் தோழியர் பலருள்ளும் களவிற்குச் சிறப்புடையதாக இருப்பவளே சிறந்த தோழியாகவும் இருந்துள்ளாள்  எனச் சொல்லப்படுகின்றாள்.

‘ஒன்றித் தோன்றும் தோழி’ ( தொல், பொருள், அகம்)  என்பதனால் தோழிமார் பலருள்ளும் இன்றியமையாதவள் என்று கொள்க. மேலும் பெண்கள் தங்களின் காதலை ஒன்றித் தோன்றும் தோழியிடம் மட்டுமே வெளிப்படையாகக் கூறும் பழக்கம் உடையவர்கள் என்பதும் பெறப்படுகிறது. அவ்வாறு தலைவி தனது காதலை முழுதும் ஒழிவு மறைவின்றி கூறியதாலும் தலைவியைத் தாயைப் போல பேணிக் காக்கும் பண்பினைப் பெற்றதாலும் தான் சங்க அகப்பாடல்கள் சங்க மக்களின் அக வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு புலப்பாட்டுப் பகுதியாக உள்ளன.

ஐந்திணை இலக்கியப் படைப்பிற்குத் தோழி என்பவள் இன்றியமையாதவள் என்பது தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதனை அறியலாம்என்று வ.சுப. மாணிக்கனார் வாயிலாகவும் தோழியின் திறன் பற்றி அறியலாம். 6

தோழி மொழியின் பயன்பாடும் புலமைச் சிறப்பும் சங்கப் பாடல்களின் மூலம் அறியப்படுகிறது. தோழிக் கூற்றுப் பாடல்களில் இன்பத் துன்ப உணர்வுகளின் வெளிப்பாடுகள் தலைவனுடனோ, தலைவியுடனோ அல்லது பிற மாந்தர்களுடனான உரையாடல்களாகவோ அல்லது தனக்குத்தானே கூறிக் கொள்பவராகவோ அமைந்தாலும் மன உணர்வுகளால் வலுப்பெற்று தன்னுணர்வு சிந்தைகளாலும் தலைவன் தலைவியின் நலன் கருதி கூற்று நிகழும் இடங்களில் உளவியல் கூறுகள் மிக நெருக்கமாக சரியாகப் பொருந்தி வருகின்றன

தோழி கூற்று

தோழி எல்லா வகையிலும் தலைவிக்குச் சமமாக விளங்குகிறாள். தலைவியினும் சிறப்புடையவளாய் அறிவும் ஆற்றலும் கொண்டிருக்கிறாள். அவளைத் தாங்கருஞ் சிறப்பின் தோழி என்று தொல்காப்பியம் கூறுகிறது. 75 இடங்களைத் தோழியின் கூற்றாகக் காட்டுகிறார் தொல்காப்பியர். தலைவனுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறாள். தலைவனுடன் சரிநிகர் சமமாகப் பல இடத்தும் பேசுகிறாள். தலைவனை ஏற்கத் தலைவி மறுத்த போது  தலைவியைக் கடிந்துரைக்கிறாள். அதேபோலத் தலைவியின் நலம்  சிதையும் இடத்து தலைவனைக் கடிந்தும் கொள்கிறாள். அலர் ஏற்பட்ட விடத்தும் தலைவியை ஆற்றுவித்து வரைந்து கொள்ளச் சொல்கிறாள் என்று அன்னிதாமசு அம்மையார் தனது நூலில் தெரிவித்துள்ளார். 7

களவில் தோழி

இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முடிந்த பின்பும் தலைவன், தலைவியிடம் திட்டமாக நெருங்க முடியாத சூழலில் தோழியின் துணை தேட நேரிடுகிறது. களவில் நாட்டம் பகுதியிலிருந்து தோழியின் செயல்பாடுகள் ஆரம்பமாகின்றன.மதி உடன்படுதல், குறை நயப்பு, இருவகைக் குறி ஒருவழித் தணத்தல், வரைவு கடாதல், வரைவு வேட்கை, வரைவு நீட்டிப்பு, அறத்தோடு நிற்றல், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல், வரைவு மலிதல், உடன்போக்கு போன்ற நிலைகள் தோழிக்கு உடையனவாக உள்ளன.

வரைவு கடாதல்

  • வரைவு - திருமணம்
  • கடாதல் - வன்மையாகச் சொல்லுதல், தலைவன் மனதில் தைக்குமாறு அறிவுரை கூறுதல், வினாதல், மணந்து கொள்ளுதல் பற்றித் தலைவனிடம் கேட்டலே வரைவு கடாதல் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.

இயற்கைப் புணர்ச்சியில் ஆரம்பமாகும் களவினை வரைவு கடாதல் என்ற நிலையே கற்பு நிலைக்கு உயர்த்த வருகின்றது. தலைவன், பாங்கன், தலைவி, தோழி என்ற நிலையில் நின்ற இன்ப வாழ்க்கை மற்றவர் அறிந்தனரோ அல்லது அறியும் முன்னரோ கற்பு வாழ்க்கைக்குத் தலைவியை  உடம்படுத்தவும் அவளது களவின்பம் கற்பின்பமாக மாறவும் தோழி  எடுக்கும் சீரிய முயற்சியே வரைவு கடாதல் எனக்கூறலாம்.

தோழியின் மிக இன்றியமையாத செயலாததால் அனைத்து இலக்கண நூல்களும் இதனைப் பற்றி விரிவாகவே ஆராய்கின்றன. தொல்காப்பியமும் 8

பல நூற்பாக்களால் இதை விரித்துக் கூறுகின்றது. தலைவனிடம் தோழி வரைவு கடாவும் சொற்களைத் தொல்காப்பியம் புரை தீர் கிளவி என்றே பகரும். 9

சரளா இராச கோபாலன் தனது நூலில் கூறுவதுபோல களவியலிலும்  பொருளியலிலும் தோழி வரைவு கடாவுவதலை மிக முக்கிய கடமையாகக் கொண்டுள்ளாள் என்றும் களவைக் கற்பாக்கத் தோழி எடுக்கும் முன்னேற்பாடு வரைவு கடாவுதல் என்பதையும் அறியலாம். 10

உடலளவிலும் மனதளவிலும் தலைவனுடன் கூடிய தலைவிக்குத் தலைவன் ஒரு நாள் பிரிந்தாலும் ஊர் அலர் எழுந்தாலும் மனதளவில் இடையூறு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்டு அது உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்தப் பாதிப்பு செயலிலிருந்து தலைவியை மீட்கும் ஒரு மீட்புச் செயலே (திருமணம்) (வரைவு கடாதல்) என்றாகிறது.

தலைவனிடம் வரைவு வேண்டல்

இற்செறிப்பு, ஊரலர், இரவுக் குறி மறுத்தல்,  தலைவன் அன்பிலன் என்றல்,  வழியின் ஏதம்,பகல் வரக் கூறல், வெறியாடல், தலைவியின் நிலை பற்றியெல்லாம் கூறி தலைவியை  விரைந்து வரைந்துக் கொள்ள வேண்டுமெனத் தலைவனிடம் கூறுகிறாள் தோழி.

ற்செறித்தல்

பொருள்ளன்ன  மொழிதலும் வரைநிலை இன்றே

காப்புக் கைம் மிகுதல் உண்மை யான(தொல்.1159:1-2)

எனத் தலைவியின் இற்செறித்தலைத் தொல்காப்பியம் பதிவிடுகிறது.

தலைவனைச் சந்திக்க இடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயது, முதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துகையே இற்செறித்தல் என்கிறார் நா. சுப்புரெட்டியார். 11

தினைப்புணம் காக்கும் தொழில் முடிந்தவுடன் தலைவி வீட்டினுள் இருக்க வைத்தல் இற்செறிப்பு என்றும் தலைவியின் மேனி வேறுபாட்டைக் கண்டு அஞ்சி வெளிவிடாமல் இல்லத்தார் வீட்டின் உள்ளே வைப்பது இற்செறித்தல் என்றும் வேறுபடுத்திக் கூறுவர் அறிஞர்.

தினை முற்றிய நிலையில் இற்செறிப்பு

ஏனலும் இறங்கு பொறை  உயிர்த்தன ( அகம்.192:8)

தினை அறுக்கும் காலத்தை உணர்த்துமாகலின் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதையும் இனி பகல்பொழுது வரமுடியாது என்றும் தோழி குறிப்பால் கூறுகின்றாள். மேலும் அதே பாடலில்,

                  ............. திருமணி

பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக்  குறுத்தலின் 12

      அழகிய அருவி ஒளிதரும் இரவுக் காலத்தும் வருதல் கூடாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினாள்.    

இரு குறியையும் மறுக்கும் போது தலைவியின் முயக்கம் வேண்டிய தலைவன் இனி எவ்வகையிலும் களவை நீட்டிக்க இயலாது என்பதை உணர்ந்து தலைவியை மணந்துக் கொள்ள வழி தேடுவான் என்பதை அறிந்து தோழியானவள் ஊக்கியாக செயல்பட்டுள்ளாள் என்பதும் நாம் அறியும் கருத்து.

காப்பு மிகுதியால் இற்செறித்தல்

மகளிர்  மாங்காடு அற்றே- துகள் அறக்

கொற்றோடு உதிர்த்த கதுப்பின்,

அம்தீம் கிளவித் தந்தை காப்பே 13

   கொத்தோடு பூக்களை உதிர்த்துக் குற்றமற அணிந்த கூந்தலையும், அழகிய இனிய மொழியினை உடைய எம்  தந்தையின் பெருமனையும்  மாங்காடு போன்ற காப்பு மிகுதியுடையது. இல்லத்தின் காப்பு மிகுதியைக் கூறுவது போல் தலைவி இற்செறிக்கப்பட்ட செய்தியையும் மறைமுகமாகக் கூறி தலைவியை மணம் முடிக்க குறிப்பில் புலப்படுத்துகின்றார்.

மற்றொரு  பாடல் ஒன்றிலும்,

எல்லினை பெரிது எனப் பல்மாண் கூறி,

பெருந்தோள் அடைய முயங்கி நீடு நினைந்து

அருங்கடிப் படுத்தனள் யாயே  14

மார்பில் தோன்றிய தேமல்,விம்மி எழுந்த முலையை நோக்கியும் அழகுடன் தோன்றுகின்றாய் என்று பலவற்றைச் சொல்லி கடந்து செல்வதற்கு அரிய காவலில் வைத்தாள் அன்னை என்று கூறுவதிலிருந்து காவலினால் ஏற்பட்ட இற்செறித்தல் பற்றி   அறியப்படுகிறது. 

தலைவியின் இற்செறித்தல் பற்றி கூறும் பாடல்களில் அவளின் மனநிலையைப் பற்றியும் தோழி கூறுகின்றாள். 

வாரார் கொல்?’ எனப் பருவரும்-

தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!  15

 தலைவனைப் பிரிந்து தலைவி பலவும் நினைத்து, நம் தலைவன் வரமாட்டாரோ என எண்ணி வருந்தும் நிலையைக்   கூறுவதாக இப்பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன. தலைவனுக்கான அடைவு ஊக்கத்தைத் தோழி தூண்டி விடுவதாகவும், தலைவி தன்னைப் பற்றிய தவறான மனப்பான்மை கொண்டு விடக் கூடாது என்பதைத் தலைவன் உணர்ந்து திருமணத்தை விரைவில் ஏற்பாடு செய்யும் கருத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தையும் தோழி ஏற்படுத்தினாள் என்பதை இப்பாடலின் வழி அறியலாம்.

ஊரலரின் இற்செறித்தல்

இரவில் வந்து நீங்கிச் செல்லும் நெய்தல் நிலத் தலைவனிடம்,

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ

தேரோடும் மறுகியும், பணிமொழி பயிற்றியும்  16

      தேரேறி வருவதாலும்   இனிய மொழிகள் கூறியும் செல்வதால் ஊரின் கண்ணும் சேரியின் கண்ணும் பழிச்சொற்கள் எழுகின்றன. அதனால் தலைவி இற்செறிக்கப்பட்டாள். அதனால் தலைவன், தலைவியைக் காண முடியாது என்று தோழி கூறுகின்றாள். தலைவனைக் காணாவிட்டால் தலைவிக்கு ஏற்படும் துன்பத்தையும் கூறுகின்றாள்.

நல் எழில் சிதையா ஏமம்

சொல் இனித் தெய்யயாம் தெளிவு மாறே  17

தலைவியின் நலன் கெடாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பான உபாயத்தைத் தெரிவிக்குமாறு தோழி, தலைவனிடம்  குறிப்பிற் புலப்படுத்துகிறாள்.

இந்தப் பாடல் மனதைச் சார்ந்த தேவைகளில் இருந்து எழும் ஊக்கிகள்( Psychological motives)  வகை நோக்கப்படுகின்றது.

  • சமூகத் தொடர்பு+ அடுத்த வகைத் தேவை = மனம் சார்ந்த  தேவை

  (அலர்)                       +   (தலைவியை                      = (திருமணம் செய்து

                                             இற்செறிப்பில்                              தலைவியுடன்    இருந்து    

                                              காப்பாற்றுதல்)           இன்புறுதல்)    

      ஊரார் பழிச்சொல்லில் இருந்து  தலைவியைக் காப்பாற்றவும், தலைவியுடன் இல்லறம் நடத்தவும் தலைவனை ஊக்கப்படுத்துவதற்காக தோழியின் புற ஊக்கச் செயல்பாட்டிற்கான பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

     தினை முற்றியவுடன் இற்செறிக்கப்படுவதையும் (இற்செறிப்பு) காப்பு  மிகுதிக்கண் இற்செறிக்கப்படுவதையும் (இற்செறித்தல்) பற்றியும் இருவேறு பாடல்கள் நமக்கு உணர்த்தின. மேற்கண்ட  பாடல்களின் அடிப்படையில் குறி மறுத்தலினால்   தலைவி வருத்தப்படுகின்ற நிகழ்வு   சிறிது காலமே இருக்கும். இந்தச் சிறு வருத்தத்தைச் சமாளித்துக் கொண்டால் நீண்ட காலத் தேவைக்கு அடிப்படையான திருமணம் நடைபெறும் என்பதை அறிந்தவளாக தலைவனுக்கு மறைமுக ஊக்கியாக தோழி செயல்படுகின்றாள்.

இரவுக்குறி வருமாறு கூறுவதுபோல் வரைவு கடாதல்

மெல்அம் புலம்ப!

நெகிழ்ந்தன, தோளே; 18

புன்னை மரங்கள் உடைய கடற்கரைச் சோலையில் பெரிய துறையிடத்து தலைவனை எதிர்பார்த்து இருப்பதால் பகல் பொழுதில் வருத்தமுடன் இருக்கிறாள் தலைவி.

இன்னாது உயங்கும் கங்குலும்,

               நும் ஓர் உள்ளுவை; நோகோ யானே  19

பகல்பொழுதில் தலைவனைக் காண முடியாவிட்டாலும் இரவில் மகிழ்ந்து இருப்போம் என்று எண்ணும் வேலையில் தலைவன் விரைந்து அவன் ஊர் செல்லுவதை நோக்கமாக எண்ணுகிறான்  என்ற தொடரின் மூலம் இரவுக்குறி மறுக்கப்படுகின்றது.

இரவுக்குறி மறுத்து வரைவு கடாவுதல்

கானவர் மடிந்த கங்குல்

மான் அதர்ச் சிறுநெறி வருதல், நீயே?  20

வேடவரும் உறக்கம் கொள்ளும் விலங்குகள் செல்லும் வழியாகிய சிறு வழியில் வருதலை இனி நீ விட்டு விடுதல் வேண்டும் என்று இரவுக்குறி மறுத்து தலைவியை மணந்து செல்லுமாறு குறிப்பால் கூறுகின்றாள் தோழி.

பகல் வா என்பது போல் கூறி வரைவு கடாதல்

வண்டு இறை கொண்ட எரிமருள் தோன்றியொடு

ஒண்பூ வேங்கை கமழும்

தண்பெருஞ் சாரல் பகல்வந்  தீமே! 21

அன்னை அறிந்தாலும் அறியட்டும். அலர் தூற்றும் பெண்கள் அறிந்தால் அறியட்டும் என்று கூறுவதிலிருந்து அவர்களிடமிருந்து தலைவியைக் காத்து விரைந்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாகவும் தலைவியின் நிலையை எண்ணி தலைவன் விரைந்து திருமண ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அடைவு ஊக்கத்தினைப் பெற்றவனாகவும் மாற வேண்டிய செய்தியை இப்பாடல் நமக்குக் காட்டுகின்றது.

தோழி ஊக்கியாக (Motives) செயல்பட்டு தலைவியுடன் கூட வேண்டிய நிலையை உட்கருத்தாகக் கொண்டு தலைவனை வரைவு நோக்கி இயக்குவிக்கின்றாள். இந்த நிலையில் ஊக்கமின்றி எதுவும் நடவாது என்ற நிலையும் தெளிவாகின்றது.

லர்

களவும் கற்பும் அலர் வரை வின்றே’ 22

‘அம்பல் என்பது முகிழ்த்தல். ஒருவரோடு ஒருவர் குறிப்பினால் தோற்றுவித்தல். அலராவது சொல்லுதல்’ ( தொல்.பொருள்.இளம்.160) என்று அலரைப் பற்றி தமது உரையில் இளம்பூரணார் கூறுகின்றார்.

 வெளிப்படை கூற்றில் பேசுவது அலர் என்றும் மறையாத அமுக்கி அமுக்கி பேசுவதை அம்பல் என்றும் கூறுவர்

ஊரலர் குறித்த வரைவு வேண்டுதல்

ஏதில மொழியும், இவ்  ஊரும்;23

கொண்டனை சென்மோ 24

ஊர்- ஊரிலுள்ள அம்பற் பெண்களைக் குறித்தது; கொண்டனை சென்மோ- வரைந்து கொண்டு செல்க என்ற பொருளில் வந்தது. ஊரில் எழுந்த அலரினைத் தடுக்க,  தலைவியை மணம் முடிக்க வேண்டிய கட்டாயச் சூழலைத் தோழி அலர் மேல் ஏற்றிக் கூறுகின்றாள்.

மற்றுமொரு பாடலிலும் உள்ளுறை வழியாக ஊரலர் பற்றி தோழி கூறுகின்றாள்.

புலிப்பகை வென்ற புண்கூர் யானை

கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்,25

புலிப்பகையை வென்ற யானை பெருமூச்செறிந்ததால் வேங்கை மரத்தில் இருந்து சிதறி விழுந்த மலர்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல் தாவும் என்று கூறும் அடிகளில் இருந்து தலைவன் சூறாவளி போன்ற இடையூறுகளைக்  கடந்து இரவு நேரத்தில் வருதலால் ஊரில் எங்கும் அலர் எழுந்தது என்பதைக் குறித்து நின்றது.  26

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்துமென்று

அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் 27

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.

      ‘அல்லது செய்தல் ஓம்புமின் அல்லது ஆயினும் நல்லது இந்த அலர்’ என்று எண்ணத்தக்க வகையில் உள்ளது.

தலைவியின் நிலை உரைத்தல்

 தலைவியின் துயரச் சூழலிலிருந்து அவளை மீட்க வேண்டிய நிலை உணர்வுத் தேவைகளால் எழும் ஊக்கிகளாகிறது( Personal motives) ஆகிறது. தலைவனைக்குத் தலைவியின் மீதான கவர்ச்சியை( Interest)  வைத்துக் கொண்டு  தோழி தலைவனுக்குப் புற ஊக்கியாக செயல்படுகிறாள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால்  அவனது அடைவு ஊக்கம்  ( Achievement motive) உயர்த்தப்படுகிறது.

பெருங்கல் நாட! பிரிதி ஆயின்,

மருந்தும் உடையையோ மற்றே  28

      மணக்கும் நெற்றியையுடைய தலைவியைப் பிரிந்து சென்றால் அவள் கண்டிப்பாக இறந்துவிடுவாள். அத்தகைய துன்பத்திலிருக்கும் அவளைக் காப்பதற்கு மருந்தினைப் பெற்றிருந்தால் தந்து அவளைக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் அவளை மறந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று தோழி கூறுகின்றாள். தலைவியை இழந்து விடுவோமோ? என்ற அச்ச உணர்விலிருந்து மீண்டு  அவளை மணந்து செல்ல வேண்டும் என்ற ஊக்கத்தினைத் தலைவனுக்கு ஏற்படுத்துவதாக இப்பாடல்  அமைந்துள்ளது.

மணிஏர் மாண்நலம் சிதைய,

பொன்நேர் பசலை பாவின்று மன்னே! 29

      தலைவியின் பால் அன்பு இல்லாதவனாய் தலைவன் இருப்பான் என்பதை முன்னமே அறிந்திருந்தால் தலைவனுடன் பழக விடாமல் தலைவியைத் தவிர்த்திருப்பாள் அவ்வாறின்றி பழக விட்ட பின் இன்று தலைவனை எண்ணி வருந்தி பசலையில் வாடுகிறாள் என்று கூறுவது தலைவனின் தனித்தன்மை வாய்ந்த ஆளுமையைத் தட்டி எழுப்புவதாகவும் தன்மதிப்பைக் குறைப்பதாகவும் உள்ளது.இதனைத் தலைவன்  எண்ணிப் பார்த்து தன் ஆளுமையை மேம்படுத்தவும்,  மதிப்பை உயர்த்தவும் தலைவியை விரைவில் மணம் முடித்துக் கொள்வது ஒன்றே தீர்வு என்பதை அவன் உணரவும் அவனது புற ஊக்கியாக தோழி செயல்பட்டுள்ளாள் என்பதை அறிய முடிகிறது.

வெறியாடல்  

தமிழருடைய வழிபாட்டிலே வெறியாடல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல்களில்  வேலனை மையப்படுத்தி வெறியாடல் எடுக்கப்படுகின்றது. மருதத்திணை பாடலில் நீர்த்துறையிடத்து நிலைபெற்ற கடவுளுக்கு வெறியாடல் எடுப்பதைப் பற்றி அகநானூறு கூறுகின்றது.

நீர்த்துறையில் உள்ள கடவுளுக்குக் கள்ளையும்  மாலையயும் நிமிர்ந்து நேர் கொண்ட கொம்பினையும் தொங்கும் காதினையும் உடைய வெள்ளாட்டுக் கிடாவினையும் சேர்த்து காணிக்கை பொருள்களாகத் தந்தும் வெறியாடல் எடுக்கும் செய்தி கூறப்படுகின்றது.

தணிமருங்கு அறியாள், யாய்அழ

மணிமருள் மேனி பொன்நிறம் கொளலே? 30

அன்னை நீர்த்துறை தெய்வங்களை வழிபட்ட போதும் தலைவியின் மேலுள்ள பசலை மறையவில்லை. அதனால் தலைவி வருத்தம் அடைகிறாள் என்பதைக் கூறி வரைவு கடாவ கூறுகின்றாள் தோழி.

இந்த வரைவு கடாதல் துறை முழுவதிலும் தோழியானவள், தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஊக்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஊக்குவித்தல் ( Motivation)

      ஊக்குவித்தல், எனப்படுவது ஒரு தேவையை நிறைவு செய்ய நம்மை முயலத் தூண்டும், நம் உள்ளிருந்து இயங்கும் உந்துதலாகும். 31     ஊக்குவித்தல்  பற்றிய உளநூல் கோட்பாடுகள் ( Theories of Motivation) உள்ளன. Hull( ஹல்) என்பவர் உந்துதல் வலுக்குறைதல் கோட்பாடு ( Drive – reduction) என்ற கோட்பாட்டினைக் குறித்துள்ளார். அறிவுசார் கோட்பாடு( cognitive), தூண்டுதல் கோட்பாடு ( Stimulation Theory) போன்ற பிற கோட்பாடுகளையும் உளவியலாளர்கள்  குறிப்பிடுகின்றனர்.

      மாஸ்லோ என்ற உளவியலாளர் ஊக்கிகளை 7 படிநிலைகளாகக் கூறுகின்றார். அந்த ஏழு படிநிலைகளும் தோழியின் புற ஊக்கச் செயல்பாடுகளினால் தலைவனுக்கு ஏற்படும் அக ஊக்கிகளின் செயல்பாடுகளின் விளைவாக  அவன் அடைவு ஊக்கம் அடைய வேண்டிய வழிகளுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன.

  • உடல் தேவைகள்- தலைவியுடன் கூடி இன்புற வேண்டிய தேவை.
  • பாதுகாப்புத் தேவைகள் - தலைவியின் இல்லறத்தாரால் தலைவிக்கு ஏற்படும் கடுங்காவலிலிருந்து அவளைப் பாதுகாக்க வேண்டிய தேவை,
  • அன்பு-உரிமை தேவைகள் – வேற்று வரைவில் செல்லவிடாமல் தனக்கு உரிமையான தலைவியை அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை,
  • மதிப்புத் தேவைகள்- ஊரிலெழும் அலரினை ஒழித்து ஊரார் மதிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள்,
  • தன்னாற்றல்களும் பண்புகளும் முழுமைபெற உதவும் தேவைகள்- பகற்குறி இரவுக்குறி வந்து செல்வான் பொருளீட்டி தலைவியின் தமர் ஏற்றுக்கொண்டு வாழ்வு முழுமை பெற வேண்டிய தேவைகள்
  • அழகுணர் தேவைகள் –  பல்வேறு  பிரிவுகளால்  தலைவியின் நலன் அழிவதைத் தடுக்க வேண்டிய தேவை
  • அறிவு மற்றும் புரிந்து கொள்வதில் ஆர்வம் சார்ந்த தேவைகள் - வரும் வழி ஏதும் குறித்து புரிந்து கொண்டும் ஊராரின் அலரைப்  புரிந்துக் கொண்டும் தலைவியின் நிலையைப் புரிந்து கொண்டும் தலைவியுடன் சேர்ந்து வாழ வேண்டிய தேவைகள்.

தலைவியைக் காண பகலிலும் இரவிலும் வரக்கூடாது என்று தண்டனை போல் தோழி ஏற்படுத்தி தரும் புற ஊக்கியே மேற்கண்ட ஏழு நிலைகளில் தலைவன் அடையும் அக ஊக்கிகளுக்குக் காரணமாக அமைகின்றன.

மேற்கண்ட வரைவு கடாவுதல் பாடல்கள் அனைத்திலும் ஒரே விடயத்தின் மையத்தை நோக்கி (வரைதல்) வேறு வேறு வழிகளில்   தலைவியின் நிலைபற்றி தலைவனின் மனதில் ஒரு அடைவினை ஏற்படுத்துவதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது என்று கூறினாலும் இவை அனைத்தும் குவி சிந்தனை ( Convergent Thinking) வழியிலும் அமைகின்றது.

குவி சிந்தனை ( Convergent Thinking)

      ஒன்றைப்பற்றி எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உள்ளார்ந்த ஆய்வு குவி சிந்தனை. இது குறுகலானது. ஒரு திசையில் சிந்திக்கக் கூடியது  பொதுவான தீர்வு வழியை மட்டும் சிந்திப்பது குவி சிந்தனை ஆகும். இது ஒரு நோக்கில் அமைக்கப்படுவது. திசைப்படுத்தப்பட்டது. பல்வேறு துறைகள் இணைந்து ஒருமுகமாகச் செயல்படுவது குவி சிந்தனையை வளர்க்கும். பல தூண்டல்கள் ஒரு துலங்கலையே வெளிப்படுத்துகின்றன.

      இற்செறித்தல், குறி விலக்குதல், தலைவியின் நிலை உரைத்தல், அலர், வெறியாடல் போன்ற பல்வேறு தூண்டல்கள் வரைவு கடாவுதல் என்னும் ஒரு துலங்கலை வெளிப்படுத்தும்.

  • இற்செறித்தல்--- தூண்டல் 1
  • குறிவிலக்குதல்----- தூண்டல் 2
  • தலைவியின் நிலை உரைத்தல்---தூண்டல்3
  • வெறியாடல்----- தூண்டல் 4
  • அலர் பற்றி கூறல்---- தூண்டல் 5

முடிவுரை

  • தோழி எனப்படுபவள் தலைவிக்கு மிகவும் நெருக்கமானவளாக இருக்கின்றாள். பயின்றா ரெல்லாருந் தோழிய ராகார் அருமறை  கிளக்கப் படுதலான் உடன்முறையுண்டு வளர்ந்த செவிலி மகளை தோழி எனப்படுவாள் 41

               எனத் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். தலைவியின் இன்பத்தினை எண்ணி தலைவனை இரவில் வரக் கூறுவதும் வழி ஏதும் குறித்து தலைவி வருந்துவதால் பகலில் வரக் கூறுவதும்,  பகலில் அலர் ஏற்படுவதால் இரவும் பகலும் குறியிடம் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் அப்பிரச்சனையை அழகாகக் கையிலெடுத்து வரைவு ஒன்றை முடிவாகக் கொண்டு செயல்படுகின்றாள். நேரிடையாக திருமணம் பற்றி பேசுதல் பல இடங்களில் தவிர்த்து தலைவன் தன்னை உணர்ந்து  உயர்ந்த நிலையை அடைய வேண்டிய புற ஊக்கியாகவும் தோழி செயல்பட்டுள்ளாள். குவி சிந்தனை வழி  ஒரு துலங்கலை ஏற்படுத்த (வரைவு), பல தூண்டல்களைக் (வழி ஏதம், குறிமறுப்பு, அலர், இற்செறிப்பு, வெறியாடல்) குறிக்கும் இடங்களையும் காண்கின்றோம். தலைவன் சூளுரைத்தான் என எண்ணி அவனைப் பற்றிய உயர்ந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றாள் தோழி. இரவில் தலைவன் தங்கிப் போக வேண்டிய அவாவு நிலை  நிறைவேற்ற தலைவன் மனம் மாறும் அளவு பல செய்திகளையும் கூறி தன் எண்ணத்தை அடைந்தே தீர வேண்டுமென உறுதி கொண்டவளாக இருந்துள்ளாள். இவை அனைத்திலும் தலைவியின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு சுயநலமற்ற ஒரு அன்னையாகவே தோழி காட்சியளிக்கின்றாள்.

அடிக்குறிப்புகள்

  1. தமிழண்ணல்.  சங்க இலக்கிய ஒப்பீடு. பக்கம்.39.
  2. தொல்.அகம்.நச்சினார்க்கினியர் உரை: நூற்பா:1.
  3. சுப்பிரமணியன் ச.வே.சங்க இலக்கியப் பதிப்பு ப.54
  4. எஸ். சந்தானம், வி. கணபதி- கல்வி உளவியல் பக்கம். 15
  5. இரா. ஈஸ்வரி, தொல்காப்பியத்தில் கூற்றுக் கோட்பாடு ப.13.
  6. தமிழ்க் காதல் பக்கம்.58
  7. அன்னித்தாமசு.  சங்க காலப் பெண்மை. பக்கம் 55.
  8. தொல்.பொருள். 207,221; களவியல் 23:30-36;43
  9. தொல்.பொருள். 105: 11 -12
  10. சரளா இராச கோபாலன், சங்க இலக்கியத்தில் தோழி: பக்கம்.44
  11. நா. சுப்புரெட்டியார், தொல்காப்பியம் சுட்டும் வாழ்க்கை, ப.113
  12. அகம்.192:11-12
  13. அகம்.288:15-17
  14.  அகம்.150:3-5
  15. அகம்.150:13-14
  16.  அகம்.220:1-2
  17. அகம்.220:21-22
  18. அகம்.270:4
  19. அகம்.270:14-15
  20. அகம்.168.13-14
  21. அகம்.218.18-22
  22. தொல். பொருள். கற்பு.160
  23. அகம்.132:3
  24. அகம். 132:8
  25. அகம்.202:3-4
  26. அகநானூறு மூலமும் உரையும்.NCBH.ப.607
  27. தொல்.பொருள்.221
  28. அகம்.238:10-11
  29. அகம்.172:14-18
  30. அகம்.156:13-17
  31. பேராசிரியர் வி. கணபதி., கல்வியின் உளவியல் அடிப்படை. பக்கம்: 215
  32. கல்வி உளவியலும் மனித வள மேம்பாடும்.பெ. பாஸ்கரன் ப.259
  33. அகம்.286:14-17
  34. அகம்.200:3
  35. அகம்.200:11
  36. அகம். 200:13
  37. அகம்.300:4
  38. அகம்.300:8
  39. அகம்.300:21
  40. கி. நாகராஜன், கல்வி உளவியல்.ப.291
  41. இளம். தொல். உரை. ப.84

துணைநூற்பட்டியல்

  1. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு- மீனாட்சி புத்தக நிலையம்-1975
  2. நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம்,  பொருளதிகாரம்- திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6, 1965
  3. சுப்புரமணியன் ச.வே.,தொல்காப்பியம் தெளிவுரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6, 1998
  4. எஸ்.சந்தானம், வி.கணபதி- கல்வி உளவியல் – சாந்தா பப்ளிஷர்ஸ்- நான்காம் பதிப்பு – ஜனவரி-2023
  5. வ.சுப.மாணிக்கம், தமிழ்க்காதல், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்-ஜனவரி-2023
  6. சரளா இராசகோபாலன், சங்க இலக்கியத்தில் தோழி- அன்பு பதிப்பகம்-சென்னை-18,1986
  7. நா.சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை- சந்தியா பதிப்பகம்-2011
  8. அகநானூறு மூலமும் உரையும் – புலியூர்கேசிகன்-சாரதா பதிப்பகம்- சென்னை-ஜூன்-2010
  9. கி.நாகராஜன், கல்வி உளவியல்- ஸ்ரீராம் பதிப்பகம்- ஜனவரி-2017
  10. தொல்காப்பியம் (எழுத்து சொல் பொருள்) மூலமும் உரையும், உரையாசிரியர் இளம்பூரணர், சாரதா பதிப்பகம், சென்னை 14, 2010