ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சங்க கால பயன்பாட்டில் போர்க்கால மருத்துவம் | Wartime Medicine in Sangha Period Use

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் 01 Nov 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

பண்டைக்கால மக்களின் முக்கிய பணிகளுள் ஒன்று போரிடுதல். தன் நாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் வீரர்களைக் கொண்ட நாடு தமிழகம். சிறுவனைக்கூடப் போருக்கு வீரமாய் அனுப்பி மகிழ்ச்சி அடையும் பெண்ணை சங்க இலக்கியம் பகிர்கிறது.  வீரமும் காதலும் கொண்ட தமிழ் மக்களின் வாழ்வியலை அழகாய் படம்பிடித்துக் காட்டுகின்றது சங்க இலக்கியங்கள்.குறிப்பாக வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு மருத்துவம் பார்க்கும் முறையினையும் பதிவு செய்யத் தவறவில்லை இலக்கிய ஆவணங்கள். அந்த வகையில்  போர்க்கால மருத்துவமாக சங்க இலக்கியங்களில் காணப்பெறும் மருத்துவ முறைகள் அனைத்தும் போர் வீரர்களுக்கு போரினால் ஏற்படுகின்ற புண்ணையும், அதற்குண்டான மருத்துவம்  குறித்தும் அறிய வழி செய்கின்றது. இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் குறிக்கும் சில போர்க்கால மருத்துவம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

திறவுச் சொற்கள்:

தமிழர் மருத்துவம், போர்கால மருத்துவம், சங்க இலக்கியம், பண்டை மருத்துவம்,ஆதுரச்சாலை

Abstract;

One of the main tasks of ancient people was warfare. Tamil Nadu is a country with soldiers who sacrifice themselves for their country. Sangha literature shares a woman who is happy to send even a boy to war. Sangha literature beautifully portrays the life of Tamil people with valor and love. Literary documents do not fail to record the method of medical treatment especially for soldiers' injuries. In that way, all the medical methods found in the Sangha literature as wartime medicine allow the soldiers to know about the wounds caused by the war and the medicine related to it. This article examines some of the wartime medicine that literature and inscriptions refer to.

Keywords:

Tamil Medicine, Wartime Medicine, Sangam Literature, Ancient Medicine, Athurachalai

முன்னுரை:

தமிழ் மருத்துவம் தொல்காப்பியர் காலத்திற்கும் முந்தியது என்ற கருத்து தொல்காப்பியத்திலேயே  காணமுடிகிறது. எனவே, தமிழ் மருத்துவம் தொல்காப்பியக் காலத்திற்கும் முன்பிருந்தே தமிழ் மக்களால் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளது என்பதை இலக்கியங்கள் வழி அறிகின்றோம். அன்றையக் காலகட்டத்திலும் சரி இன்றைய நவீனக் காலத்திலும் சரி மனிதனுக்கு நோய்கள் தாக்குவதும் உடலில் காயங்கள் ஏற்படுவதும் இயல்பு. நவீன மருத்துவத்திற்கு வித்திட்ட பண்டைய மருத்துவ முறைகள் நம்மை வியக்க வைக்கின்றன. குறிப்பாகப் போர்க் காலங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு உடனடியாக தீர்வாக அமையும் மருத்துவமுறைகள் பாராட்டத்தக்கவையாக இருந்துள்ளன.

மருத்துவமும் மருத்துவரும்

அக்காலத்தில் மருத்துவரை அறவோன் (நற்:136), மருத்தன், மருத்துவன் (கலி:17:20,21,137:24-25, புறம் 173:11) என்று அழைத்துள்ளனர்.  போர்க் களத்திற்குச்  சென்று மார்பில் விழுப்புண் கொண்டு திரும்பும் வீரனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக மனைப் பெண்டிர் இருந்துள்ளனர். மருத்துவம் பார்க்கும்  ஆண்பாலரை  ”மருத்துவர்”   என்றும் பெண் பாலரை  ’மருத்துவி” என்று அழைக்கும் வழக்கமும் அன்று இருந்துள்ளது. இதனை ஆருயிர் மருத்துவி (மணி:17:15) என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் தாபத முனிவர், நோய் மருங்கு அறிநர் ஆகியோரைக் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் இருபாலரும் மருத்துவர்களாக இருந்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.  நோயுற்றவருக்குத் தேவையான மருந்துகளை மட்டும் கொடுத்துக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவர்களாக இம்மருத்துவர்கள் இருந்துள்ளனர்.

அரும்பிணி அறுநர்க்கு,வேஅது கொடாஅது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல (நற்:136:2-3) என்றும்,

யாக்கையுண் மருத்துவன் ஊட்டிய

மருந்துபோல மருந்தாகி (கலி:17:19-20) என்று கலித்தொகையும் மருத்துவர்களைக் குறித்துக் குறிப்பிடுகின்றது.

இசை மருத்துவம் (Musicotheraphy)

பாசறையில்  பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்யும் முறை பற்றியும் அவர்களைக்  காயங்களினால் ஏற்படும் வேதனைகளிலிருந்து காக்க விறலியர் ஆடி

பாடி மகிழ்விப்பதும் உண்டு. நோயாளியின் நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், அன்பான பணிவிடை தேவைப்படும். இதனோடு இனிய இசையும் தேவை என்று அன்றே உணர்த்தியவர்கள் சங்க கால மக்கள். இன்று மேலை நாடுகளில் நோயாளியைக் குணமடையச்  செய்ய இசையைப் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. ஆனால் சங்க காலத்திலேயே  Musicotheraphy என்னும் முறையைப் பயன்படுத்தியுள்ளது கவனத்திற்குரியதாகும். இதனை,

தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,

………………………………………………………….

…………………………………………………………..

பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. (புறம்:281)

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கயர் ஐயவி புகைப்பவும்

எல்லா மனையும் கல்லென் றவ்வே (புறம்:296:1-3)

ஆகிய புறநானூற்று பாடல் வரிகளின் வழி அறியமுடிகின்றது.

விழுப்புண் பட்ட போர்வீரன் கிடத்தப்பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம், வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிற கொண்ட சிறுகடுகைத்தூவி (ஐயவி), நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து, யாழினால்  பல்லிசை  இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்ததைத் தெரிவிக்கின்றது. தம் கணவரின் வரிப்புலி மார்பைக் கிழித்தது போல் போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுவதற்குப் பாட்டிசைத்த செய்தி

கொழுநர் மார்பின்

நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென

வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் (மலை:302-304)

மலைபடுகடாம் வழி அறியமுடிகிறது.

ஐயவி என்னும் வெண்சிறுகடுகு:

ஐயவி என்பது மிகச் சிறியது. அதன் நிறை மிகக் குறைவானது. இதனை ஆரல் மீனின் முட்டை போன்றது என்கிறது புறப்பாடல். (ஆரல் நீன்ற ஐயவி முட்டை (புறம்:342:9) போரில் புண்பட்ட வீரர்களைப் பேய்க் கணம் தீண்டாதிருக்கும் பொருட்டு ஐயவி-யைப் புகைப்பர் என்றும், ஐயவியைச் சிதறுவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதுவே சிறு வெண்கடுகு என்று அழைக்கப்படுகிறது.

வேம்பு:

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குடிப்பூக்களாக முறையே சேரன் பனம்பூவையும்,சோழன் ஆர்ப்பூ(ஆத்திப்பூ)வையும் பாண்டியன் வேப்பம் பூவையும் சூட்டிக் கொண்டனர்.மன்னர்கள் மட்டுமின்றி வீரர்களும் இப்பூக்களைச் சூடிக் கொண்டனர். இவ்வீரர் இன்ன அரசனைச் சார்ந்தவர் என்று வேறுபாடு தெரிந்துகொள்ளப் போரின்போது அவரவர் பூக்களைச் சூடிக் கொண்டு ஆர்ப்பர். இதனை,

’வேதிடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ்’போந்தை,ஆரே,வேம்பென வரூஉம்

மாபெருந்தானை மலைந்தபூவும்’ (தொல்.பொருள்.60:2-5) எனத் தொல்காப்பியமும்

’……………………………………………… கருஞ்சினை

வேம்பும் ,ஆரும் ,போந்தையும் மூன்றும்

மலைந்த சென்னியர் அணிந்தவில்லர்’ (புறம்:338:5-7) எனப் புறநானூறும் எடுத்தியம்புகின்றன.

வேம்பின் சிறப்பை பறைசாற்றும் பொருட்டு வேப்பமரம் பழையன் மாறன் என்ற பாண்டிய மன்னனுக்குக் காவல் மரமாக அமைந்தது,  அதனை வெட்டி வீழ்த்திக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் வென்றான் என்பதை, கீழ்வரும் பதிற்றுப்பத்து பாடலின் மூலம் அறியமுடிகின்றது,

பழையன் காக்கும் கருச்சினை வேம்பின்

முழ் ஆரை முழுமுதல் துமியப்பண்ணி (பதிற்.பதிகம்:5:14-15)

அதேபோல், பாண்டியன் நெடுஞ்செழியன் போர் முடிந்த நாள் இரவில் புண்பட்டுப் பாசறையில் உள்ள வீரர்களைக் கண்டு ஆறுதல் சொல்லச் செல்கிறான். ஒவ்வொருவரையும் காட்டுவதற்கென படைத்தலைவன் மன்னனை அழைத்து செல்கிறான். அவன் கையில் வேல் ஒன்றுள்ளது. அதன் தலையுச்சியில் வேப்பிலை செருகப்பட்டுள்ளது என்று கூறுகிறது நெடுநல்வாடை.

வேம்புதழை யாத்த நோன்காழ் எஃகமொடு

முன்னோன் முறைமுறைகாட்ட (நெடுந்:176-177)

வேந்தர்களும் மறவர்களும் சூடிச் செல்லும் பூக்கள் போர்க்களத்தில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப் படுபவையாகும் என்பதும் ஒரு செய்தியாகக் கொள்ள வேண்டும்.

வீட்டின் முகப்பிலும் வேப்பிலை செருகுகப்படுவதையும், வேப்பிலை குழந்தைகட்குக் கடிப்பகையாகச் சூட்டப்படும் என்பதை,

கோட்டிணர் வேம்பின் ஓடுஇலை மிடைந்த

படலக்கண்ணி (பெரும்:59-60) எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic surgery) :

பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை (Tetanua Toxiod) முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறியபின் வடு தோன்றாமல் இருக்கவும் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் (Plastic surgery) அத்திப்பாலைப்  பயன்படுத்தியுள்ளனர். போரினால் ஒரு வீரனுக்கு அடிப்பட்டு புண்ணாகி விடுகிறது. அதற்கு அத்திமரத்தின் பாலை மருந்தாகப் பயன்படுத்தியதைப் பின்வரும் புறப்பாடலால் அறியலாம்.

வடுவின்றி வடிந்த யாக்கையான்( புறம்:180)

அறுவை சிகிச்சை:

அன்றைய காலத்தில் போர் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்ததால் வீரர்கள் உடலில் அடிபடுவதும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்கும் வண்ணம் பலவகையான மருத்துவ முறைகள் கையாளப்பட்டுள்ளன. இன்று நடைமுறையில் உள்ள அறுவை சிகிச்சையினைப் போல் அன்றே, போர் வீரர்களுக்கு ஏற்படும் பெரிய புண்களை ஊசியும் நூலும் கொண்டு தைத்துள்ளனர். இதனை,

சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள் ஊசி

நெருவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்று:5:2(3-4)

என்ற அடிகளால் அறியலாம். மேலும் இத்தகைய மருத்துவத்திற்குப் பலவகையான ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தோல் தொழிலில் பயன்படுத்தப்படும் கூரிய ஊசிகள் (பதிற்று:7474:13,14)  செந்நாயின் பற்கள் போல் விளங்கிய அரத்தால் அராவப்பட்ட வலிமையான ஊசிகள் (அகம்:19:8), அறுவை சிகிச்சைக்காகப் பயன்படும் நெடிய ஊசியை  நெடுவள் ஊசி (பதிற்:42:3) போன்ற ஊசிவகைகளை மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகின்றது.

இக்கால  மருத்துவத்தில் காயம்பட்ட புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும்போது பஞ்சையும் வைத்துக் கட்டுவதை பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வழக்கம் சங்க கால தமிழ் மக்களிடம் இருந்துள்ளது.

கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணார் (புறம்:353:15-16)

பாசறையில் நிகழும் இந்நிகழ்ச்சி குறித்து புறப்பாடல் கூறுவதால் பாசறையில் அறுவை மருத்துவரும், மருந்துகளும், மருத்துவத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்கள் ஆகியவற்றையும் போருக்குப் போகும்போது கொண்டு செல்வர் என்பதை அறிய முடிகின்றது. அதேபோல் போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு முதலுதவி மேற்கொள்வதற்குக் கையில் விளக்குகளை ஏந்திக் கொண்டு ஆராய்ந்து மருத்துவம் அளிக்கும் மருத்துவரும் உண்டு. இதனை,

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

புண்தேர் விளக்கின் தோன்றும் (அகம்:111:13-14)

”பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந்திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன் காரி' என்பது குறிப்பிடத்தக்கது என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார்” (இரா.வாசுதேவன்,இணையத் தகவல்)என்பதிலிருந்து சிற்றரசர்கள் கல்வி, போர்க்கலை ஆகியவற்றோடு  மருத்துவத்தையும் கற்றுள்ளனர் என்பது புலனாகின்றது.

கல்வெட்டுகளில் மருத்துவம்:

பண்டையக் கல்வெட்டுகளை ஆராயும்போது , பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும்  அறியமுடிகிறது. மதுரை மாவட்டத்தில்  பிராமி கல்வெட்டுகள் வாயிலாக சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றை செய்ததாக  அறியமுடிகின்றது. இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும் என்று மயிலை சீனி வேங்கட சாமி பதிவிடுகிறார்.

மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.” என்று அறியமுடிகின்றது. சோழர் காலக் கல்வெட்டுகளில் கொடைச் செய்தி மட்டுமின்றி கல்வி, மருத்துவம், நீதி முறை, ஊராட்சி முறை போன்ற செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. முதலாம் இராஜேந்திரனுடைய 'எண்ணாயிரம்' என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டும், செங்கல்பட்டு வட்டம் திருமுக்கூடலில் காணப்படும் கல்வெட்டும் சோழர் காலக் கல்வி முறையை விளக்குவனவாக உள்ளன. செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு வீரராசேந்திரனுடைய மருத்துவச்சாலை பற்றிக் குறிப்பிடுகிறது. அதில், மருத்துவச்சாலை "ஆதுரச்சாலை" என்று சுட்டப்படுகிறது.

அக்கால மருத்துவர் குறித்துக் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு குறித்து நடுவணரசால் படியெடுக்கப்பட்டுத் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 22ன் முதற் பிரிவில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து,

”பாண்டிய அரசர்களுள் ஒருவரான சுந்தரபாண்டியரின் எட்டாம் ஆட்சி யாண்டில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, அரசாணையாக அமைந்துள்ளது. நாமக்கல் பகுதியில் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறப்பு மருத்துவர்களுள் ஒருவரான நாங்கூர் நாட்டைச் சேர்ந்த சுவர்ணன் பாராசிரயன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான வைத்ய புரந்தரனுக்கு வாழ்வூதியமாக மன்னர் நிலம் அளித்தமையைக் கல்வெட்டுப் பதிவுசெய்துள்ளது. வடகொங்கு நாட்டு ஏழூர் நாட்டைச் சேர்ந்த வானவன் மாதேவி எனும் ஊரில் ஏற்கனவே திருக்கோயில்களுக்கும் சமண, பௌத்த பள்ளிகளுக்கும் பெருமாள் கோயில்களில் வழிபாடு நிகழ்த்தும் பட்டர்களுக்கும் தரப்பட்டிருந்த கொடை நிலங்கள் நீங்கலாக உள்ள நிலப்பகுதி முழுவதும் அந்தச் சிறப்பு மருத்துவருக்கு அரசரால் வரிவிலக்குச் செய்யப்பட்ட நிலமாக அளிக்கப்பட்டது. 'உதகபூர்வ தன்மதான இறையிலி' என்று கல்வெட்டு இக்கொடையைக் குறிக்கிறது” என்று  மு.நளினி குறிப்பிடுகின்றார்.

முடிவுரை:

இவ்வாறாகச் சங்க கால மக்கள் மருத்துவம் மற்றும்  மருத்துவ முறைகள்  ஆகியவற்றைக் கற்றுணர்ந்து நோயாளியின் நோயைக் கண்டறிந்து அதற்கான  மருத்துவ முறைகளை  மேற்கொண்டுள்ளனர் என்றும்  தொடர்ச்சியாகப்  போர் ஏற்பட்டுக் கொண்டிருந்த  அன்றையக் காலத்தில் பெண்களும் மருத்துவமுறைகளை அறிந்தும் உளவியல் ரீதியாக அணுகியும் நோய் போக்க உதவியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

துணை நின்ற நூல்கள்:

1.தொல்காப்பியம்

2.புறநானூறு

3.சீவகசிந்தாமணி

4.அகநானுறு

5.பதிற்றுப்பத்து

6.மலைப்படுகடாம்

7.கலித்தொகை

8.நற்றிணை

9. சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பக்கம் 41,

இணையத் தகவல்:

1.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D )

2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=916