ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பூர்வீக சங்கீத உண்மை நூலும், இசைத்தமிழ்  ஆய்வும் ( A study of Tamil Music in Poorveeka Sangeetha Unmai)

கட்டுரையாளர்: ப. கோபாலகிருஷ்ணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழிசைக் கல்லூரி, தமிழ் இசைச் சங்கம், சென்னை. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். | நெறியாளர்: முனைவர் லலிதா ஜவஹர், தமிழ் இசைச் சங்கம், சென்னை 10 Aug 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம் :

உலக இசைக்கெல்லாம் ஆதியான தமிழிசை, தமிழ் பண்பாட்டின் மகுடமாக விளங்குகிறது. ஆபிரகாம் பண்டிதர் முதல் இன்று வரை, ஒவ்வொரு நாளும் தமிழிசையில், புதிய புதிய ஆய்வுகள் வளர்ந்துகொண்டுதான் உள்ளன. அத்தகைய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான, மதுரை எம். பொன்னுச்சாமி பிள்ளை இயற்றிய, 'பூர்வீக சங்கீத உண்மை' நூலில் காணப்படும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளே, இந்த கட்டுரையில் சுருக்கமாக திறனாய்வு செய்யபட்டுள்ளது.

Abstract:

Tamil music, the origin of all world music stands as the crown of tamil culture. From Abraham pandithar to the present time, Tamil music new research is emerging every day. One of the pioneers of such studies, in this article, the information on the music Tamil found in the book “Poorveeka Sangeetha Unmai “ by Madurai M. ponnusami pillai is briefly reviewed.

திறவுச்சொற்கள் :

பூர்வீக சங்கீத உண்மை,  மதுரை எம். பொன்னுச்சாமி பிள்ளை, 32 மேளகர்த்தா, வேனிற்காதை, கானல் வரி, ஆய்ச்சியர் குரவை

Poorveeka Sangeetha Unmai, Madurai M. Ponnusami pillai, 32 melakartha, Silappathikaram, Aaichiyar kuravai, Venirkathai, Kaanal vari

முன்னுரை :

     பூர்வீக சங்கீத உண்மை (1930) எனும் ஆய்வு நூல், நாகசுரம் மதுரை எம். பொன்னுசாமி அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இதில் , 72 மேளகர்த்தா முறையை மறுத்து, 32 மேளகர்த்தாவே இயற்கை என்ற கருதுகோளில் ஆய்வு செய்துள்ளார். இவர், தனது கருதுகோளின் அடிப்படையில், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைத்தமிழ் செய்யுள்களையும், உரைகளையும் ஆய்வு செய்து,  கர்னாடக இசைக்கு அடிப்படை, தமிழிசையே என்று தனது நூலில் நிறுவியுள்ளார். மேலும், சிலப்பதிகாரத்தின் இசைத்தமிழ் நுணுக்கங்களை மட்டும் எடுத்துக்காட்டாமல், அதற்கு தனித்தன்மையான உரையையும் தந்துள்ளார்.  அவற்றை பின்வருமாறு காணலாம்.

இசைத்தமிழ் அடிப்படையில் 12 சுரங்கள் :

    முத்தமிழ் நூலான சிலப்பதிகாரத்திலும், உரையாசிரியர்களின் உரையிலும், ஏழு சுரங்களைப் பற்றியே தெளிவாக கூறப்பட்டுள்ளது ; 12 சுரங்களைப் பற்றிய  தெளிவான விளக்கங்கள் ஏதும் காணப்படவில்லை. அதுபோல, இசைத்தமிழ் நூலான பஞ்சமரபிலும் தெளிவான விளக்கங்கள் இல்லை. ராசிகளில் சுரங்கள் பொருந்தி நிற்கும் வட்டப்பாலை முறையால் மட்டுமே, 12 சுரங்களைக் குறிப்பால் உணர முடிகிறது. பழந்தமிழர்கள், பண்களைத் தனித்தனியான பன்னிரண்டு சுரங்களில் வாசிக்காமல், பண்ணுப் பெயர்த்தல்(கிரகபேதம்) முறையில் வாசித்தலால், பன்னிரண்டு சுரங்களைப் பற்றி வெளிப்படையாக கூறவில்லை.

பொன்னுச்சாமி பிள்ளை, பூர்வீக சங்கீத உண்மை நூலின் முதல் பாகமான நூல் மரபில், பன்னிரு சுரங்களைப் பற்றி இசைத்தமிழ் நூலின் அடிப்படையில், அடியார்க்குநல்லாரின் மேற்கோள் பாடலைக் காட்டி,  பின்வருமாறு விளக்கியுள்ளார்.

                         குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும்

                      நின்றார்ந்த மந்நகரந் தவ்வோடு - நன்றாக

                       நீளத்தா லேழு நிதானத்தா நின்றியங்க

                       ஆளத்தி யாமென் றறி

    மேற்கண்ட பாடலை ஆதாரமாகக் கொண்டு, ச,ப வைத் தவிர, ரி க ம த நி எனும் சிறிய சுரங்கள் குறில் என்றும், ரி க ம த நி எனும் பெரிய சுரங்கள் நெடில் என்றும், இசைநூல் வழக்காக  பன்னிரண்டு சுரங்களை பின்வருமாறு விளக்கியுள்ளார்.

" நிர்ணயித்த ஆதார சுதியும், அதன் பஞ்சமும், குறிலான ரி க ம த நி ஐந்தும், நெடிலான ரி க ம த நி ஐந்தும், ஆகப் பண்ணீர்மையில் ச ரி க ம ப த நி என சப்தசுர சம்பூரணமாகக் கண்டு ஆளத்திக்கு வரப் பெறுவது என்றறி எனக் கொளல் வேண்டும்.  இன்னும் குறிலைந்தும் அ, இ, உ, எ, ஒ என ஓசைபெற எழுப்பவும், நெடிலைந்தும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஓசை பெற எழுப்பவும், மவ்வும், தவ்வும், நவ்வும் (அதாவது) தநத்தொம் நம்தன என்று ஆளத்தி வரப்பெற சப்த சுரமாய்ப் பாடப் பெறுவது எனவுமாம்".1

பொன்னுச்சாமி பிள்ளை, உயிர் எழுத்துக்களை பன்னிரண்டு சுரங்களாகவும், குறில் ஐந்தும் அ, இ, உ , எ, ஒ என ஓசை பெறும் என்றும், நெடில் ஐந்தும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஓசை பெறும் என்றும்,  கூறியிருப்பது, சிந்தனைக்கு உரியதாக உள்ளது.

    ஆளத்தி என்பதே, தற்காலத்தில் ஆலாபனை என்று அழைக்கப்படுவதாக, ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. அதன்படி ஆலாபனையெனும் முறை அனைத்து ராகங்களுக்கும் பொதுவானதாகும். மேற்கண்ட பாடலில் பொதுவான இலக்கணமே கூறப்பட்டுள்ளதாக எடுத்துக் கொண்டால், பன்னிரண்டு சுரங்களில் நீளத்தால் ஏழு சுரங்கள், மந்நகரந் தவ்வோடு ஆளத்தி  செய்யப்படும் என பொருள்படும்.

சுரங்களின் பிறப்புகள் :

சுரங்களின் பிறப்பைப் பற்றி, வேனிற்காதையில் கூறப்பட்டுள்ள செய்யுளையும், அதற்கு அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் சூத்திரத்தையும் எடுத்துக்காட்டி,  அதற்கு பொருளையும் தந்துள்ளார்.

அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் செய்யுள்.

 "தாரத்துட் டோன்று முழையுழை யிட்டோன்று

 மோடுங் குரல்குரலி னு ட்டோன்றிச் - சேருமிளி

 யூட்டோன்றுந் துத்தத்தட் டோன்றும் விளரியுட்

 கைக்கிளை தோன்றும் பிறப்பு." 2

ஆசிரியரின் உரை :

     "ஷட்ஜ பஞ்சம கிராமத்தின் சுத்த நிஷாதத்தில் சுத்த மத்திமமும், சுத்த மத்திமத்தில் ஷட்ஜமும், ஷட்ஜத்தில் பஞ்சமமும், பஞ்சமத்தில் பிரதி ரிஷபமும், ரிஷபத்தில் பிரதி தைவதமும், பிரதி தைவதத்தில் பிரதி காந்தாரமும் ஷட்ஜ பஞ்சமமாய் பிறக்கு மெனவுமாம்."3 இதில் ஆசிரியர் தனது கொள்கைப்படி சுரங்களை சுத்தம், பிரதி என்றே விவரித்துள்ளார்.

கானல் வரி :

கானல் வரியில், கீழ்க்கண்ட பாடலுக்கு அரும்பதவுரையாசிரியர் கூறிய உரை மேற்கோள் சூத்திரத்திற்கு,  பொருள் கூறியுள்ளார்.

" பண்ணல் பரிவட் டணையாராய் தறைவரல

கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் "

 அரும்பதவுரை ஆசிரியர், ஆராய்தல் என்பதற்கு எடுத்துக் காட்டிய மேற்கோள் சூத்திரம்,

"ஆராய்த லென்ப தமவர்க் கிளப்பிற்

குரன்முத லாக வினைவழி கேட்டு

மிணையி லாவழிப் பயனொடு கேட்டுந்

தாரமு முழையும் தம்மிற் கேட்டுங்

குரலும் விளியுந் தம்மிற் கேட்டுந்

துத்தமும் விளரியுந் துன்னறக் கேட்டும்

விளரி கைக்கிளை  விதியுளிக் கேட்டுந்

தளரா தாகிய தன்மைத்  தாகும்.” 4

பொன்னுசாமி பிள்ளையின் விளக்கம் :

"ஷட்ஜத்தை முதலாக செய்யும் செய்கை வழியே பயன்தரக் கூடியதாய், செவிக்குணர்வாக சுதி சேர்த்து சுராவய லக்ஷணமாய் கேட்கும் தன்மையுடையதாக்கி, அதனின்று தோன்றும் நிஷாதத்திற்கு மத்திமத்தைப்  பஞ்சமமாகக் கேட்டும் அங்ஙனம் முதலான ஷட்ஜத்திற்கு பஞ்சமம் சமமாகக் கேட்டும், ரிஷபத்திற்கு தைவதம் பஞ்சமமாகக் கேட்டும், அங்ஙனமுண்டான தைவதத்திற்கு, காந்தாரம் பஞ்சமமாகக் கேட்குங்கால் சுதி சுத்த தன்மையில் தளராது நிற்கும் தன்மையுடைத் தனவாம்." 5

இங்கு, சுருதி என்பதை சுதி என்றே, பேச்சு வழக்கில் கூறியுள்ளார்.

ஆய்ச்சியர் குரவை :

பூர்வீக சங்கீத உண்மை நூலின், ‘சுதி பேத ராக சூட்சமம்’ எனும் இயலில், இசைத்தமிழ் அடிப்படையில் குரல்திரிபு முறையை (கிரகபேதம்) ஆய்வு செய்து, 32 மேளகர்த்தா ராகங்களே இயற்கையானது, என்று நிறுவியுள்ளார்.

    ஆய்ச்சியர் குரவையில் அமைந்துள்ள இசை நுணுக்கங்களுக்கு,  ஆபிரகாம் பண்டிதர் முதல், பிற்கால ஆய்வாளர்கள் வரை பலர் ஆய்வு செய்து  பொருள் கூறியுள்ளனர். அவற்றில், இவரின் ஆய்வு முடிவானது தனித்தன்மையுடனும், குரல் திரிபு முறையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.

   குடப்பால் உறையாமல், தீய நிமித்தம் காரணமாக ஆயர்க் குலப்பெண் மாதரி, தொன்றுபடு முறையில் ஏழு மகளிரை ஏழு இசைகளாக நிறுத்தி குரவை கூத்து ஆடுவதாக இளங்கோவடிகள் கூறும் பகுதியில், மாயவனாக நின்ற குரலானவள் தன்  கிளையை நோக்கி பாடச்  சொல்லும் முல்லைத் தீம்பாணி பண், குரல் திரிபு முறையால், துத்தம் குரலாக படுமலை பாலை என்றும், அது, தற்கால ‘நடபைரவி’ ராகம் என்றும், பொன்னுச்சாமிப் பிள்ளை இதில், ஆய்வு செய்து கூறியுள்ளார்.

அவை,

அவர்- தாம்,

சென்னிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைக்கோஒத்து

அந்நிலையே ஆடற் சீர் ஆய்ந்துள்ளார் - முன்னைக்

குறர்கொடி தன்கிளையை நோக்கிப், பரப்பு உற்ற

கொல்லைப் புணர்த்துக் குருந்து ஒசித்தான் பாடுதும்,

முல்லைத்த தீம் பாணி' என்றாள்.

எனாஅக்,

குரல் மந்தம் ஆக, இளி சமன் ஆக,

வரன்முறையே துத்தம் வழிய உரனிலா

மந்தம் விளரி பிடிப்பாள், அவள் நட்பின்

பின்றையைப் பாட்டெடுப் பாள்.  - பாடல் எண். 17, 18

மேற்கண்ட பாடலுக்கு, உரையாசிரியர்களின் மேற்கோள் சூத்திரங்களை எடுத்துக் கூறி, வட்டப்பாலை முறையைக் காட்டி,  செம்பாலை என்பது ஹரிகாம்போதி என்றும், துத்தம் குரலாவது நடபைரவி என்றும் பின்வருமாறு விளக்கம் தந்துள்ளார்.

அவை,

"அங்ஙனமவர்கள் அவ்விதம் செம்பாலையாகின்ற ராகத்தை ஆரம்பித்த பின், மாயவனாக நின்ற குறர்கொடி தன் கிளையாகிய பின்னையை நோக்கி அதாவது ரிஷபமாய் நின்றவளை நோக்கி, முல்லைத் தீம்பாணி என்னுமொருப் பாட்டைப் பாடென்று குறிப்புக் காட்ட, அங்ஙனம் ரிஷபம் வலுக்க, ஷட்ஜம் மந்தமாகி, பஞ்சமம் அதற்கு சமமாகி வந்த முறையே, ரிஷப ஷட்ஜமாகி அதற்கு தைவதம் பஞ்சமமாகிய நட்பின் மேல் பாடத்  தொடங்கினாள்.  அவ்விதம் தாங்கள் முதலாவது நிறுத்திக் கட்டிக் கொண்ட செம்பாலையாகிய கர்த்தாவின் நிலம் மாறிவிடாது சட்ஜ பஞ்சமக் கிரமமாய் இணை, கிளை, நட்பு ஆராய்ந்து மாறிப் பாடியுமாடியும்  நாரணனைக் கொண்டாடி யிருக்கிறார்கள். அங்ஙனம் பிரதி ரிஷபம் ஷட்ஜமாகுங்கால் ஷட்ஜம் சுத்த நிஷாதமாயும், சுத்த நிஷாதம், சுத்த தைவதமாயும் பிரதி தைவதம் பஞ்சமமாயும், பஞ்சமம் சுத்த மத்திமமாயும் சுத்த மத்திமம் சுத்த காந்தாரமாயும், பிரதி காந்தாரம் பிரதி ரிஷபமாயும் " ச ரி க ம ப த நி " என்று இணையிற் கிளை நட்புடன் பொருந்தி தற்காலம் நடபைரவி என்னும் கர்த்தாவாய் பிறந்திலங்குமன்றோ?” என்று கூறுகிறார். 6

ஆனால், இங்கு முல்லைதீம்பாணி என்பது நடபைரவி என்று வெளிப்படையாக அவர் கூறவில்லை. அங்கு பாடப்பட்ட துத்தம் குரலாகிய படுமலைப் பாலை,  தற்கால ராகமான ‘நடபைரவி’ என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட சிலப்பதிகாரம் பாடலுக்கு அரும்பத உரையாசிரியர் பொருள்  கூறாமல் விடுத்துள்ளார். மேலும் அவர், ஏழிசைகளும் நிற்கும் வரிசை முறைக்கூறும் பின்வரும் பாடலுக்கு, திரிபு சூத்திரத்தை மேற்கோளாகத் தந்துள்ளார்.

மாயவன் சீருளார்  பிஞ்ஞையுந் தாரமும்

வால்வெள்ளை சீரா ருழையும் விளரியும்

கைக்கிளை பிஞ்ஞை இடத்தால் வலத்துளாள்

முத்தைக்கு நல்விளரி தான்   -பாடல் எண்.15

அரும். உரை :

"மாயவனென்ற குரநரம்பைப் பின்னையான துத்தமும், தாரமும் சேர நின்றன ; பலதேவராகிய இளி நரம்பை உழையும், விளரியும் சேர நின்றன. கைக்கிளை யென்கின்ற நரம்பு பின்னைக்கு இடப்பக்கமே நின்றது. முந்தையாகிய தாரத்துக்கு வலப்பக்கம் நின்றது விளரி."

("குரன் மருங்கிற் பாகந் தன் மருங்கணைந்து நின்ற வுழை கைக்கிளைக் கண் மேலொரோவலகு செல்லவுமைப்பது துத்தங் குரலாகவக் குரன் முதலேழு  வகையோசையு நிரல்படப் பிரிந்திசைப்பது நேரிசை மண்டிலம் ") இது திரிபு சூத்திரம். 7

என்று திரிபு சூத்திரத்தை மேற்கோள் காட்டியிருப்பதால்,  ஏழிசைகளும் குரல் திரிபு முறையில் பிரிந்து நிற்பதாக பொருள் கூறியுள்ளார். எனவே, அரும்பத உரையாசிரியரின் வழியிலே,  பொன்னுசாமிப் பிள்ளையின் முடிவானது, பொருத்தமானதாகவே காணப்படுகிறது.

ஆபிரகாம் பண்டிதர் , தனது கருணாமிர்த சாகரத்தில் செம்பாலை என்பது, தீர சங்கராபரணம் என்றும், படுமலைப் பாலை கரகரப்பிரியா என்றும் கூறியுள்ளார்.8

   டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள்,  செம்பாலை என்பது ஹரிகாம்போதி என்று கூறினாலும், படுமலைப்பாலை என்பது கல்யாணி என்றும் கூறியுள்ளார்.9 மேலும் அவர், ஆய்ச்சியர் குரவையில் பாடப்பட்ட முல்லைத்தீம்பாணி என்பது, தற்கால மோகனம் என்றும் தனது ஆய்வில் கூறியுள்ளார்.10

      எனவே  செம்பாலையென்பது  ஹரிகாம்போதி என்றும், முல்லைத் தீம்பாணியாக பாடப்பட்டது, துத்தம் குரலாகிய (படுமலைப்பாலை) நடபைரவி என்றும்,  பொன்னுசாமிப் பிள்ளை  கூறியுள்ள முடிவானது,   பழந்தமிழிசையின் அடிப்படையையும், கிரகபேத முறையையும் விளங்குவதாக  அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

முடிவுரை :

சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைநுணுக்கங்களுக்கு, பல்வேறு ஆய்வாளர்கள், தங்களது நோக்கத்திற்கு தகுந்தவாறு ஆய்வு செய்து, முடிவுகளைக்  கூறியுள்ளனர். இந்த முடிவுகள், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. திரு. பொன்னுச்சாமி பிள்ளையும் , 12 சுரங்களும், 32 மேளகர்த்தாவுமே  சரியானது என்னும் தனது கருதுகோளுக்கு ஏற்ப, இசைத்தமிழை ஆய்வு செய்து முடிவுகளைக் கூறியுள்ளார். எனவே இவரது முடிவுகள், இசைத்தமிழில்  புதிய சிந்தனையை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

    72 மேளகர்த்தா நிலைபெற்றுவிட்ட தற்காலத்தில், பொன்னுச்சாமி பிள்ளையின் ஆய்வு பயனற்றது என்று, சில ஆய்வாளர்களால் கூறப்பட்டாலும், எடுத்துக்கொண்ட தனது கருதுகோளின் பின்னணியில், இசைத்தமிழின்  சிறப்பையும், கர்னாடக இசைக்கு அடிப்படை தமிழிசையே என்றும், இசை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய வகையில் இந்நூல்,  இசைத்தமிழ் ஆய்வுலகில்  முன்னோடியாகத் திகழ்கிறது.

 

அடிக்குறிப்புகள்:

1. நூல் மரபு, பொன்னுச்சாமி பிள்ளை, பூர்வீக சங்கீத உண்மை, பக்.9

2. வேனிற்காதை, சிலப்பதிகாரம், பக்.232

3. மேலது நூல், பக்.150

4.கானல் வரி, சிலப்பதிகாரம், பக். 201

5. ஐந்தாவது பாகம், பொன்னுச்சாமி பிள்ளை, பூர்வீக சங்கீத உண்மை, பக்.151

6. மேலது நூல், பக்.154,155

7.ஆய்ச்சியர் குரவை, சிலப்பதிகாரம், பக் 440

8. மு.ஆபிரகாம் பண்டிதர், கருணாமிர்தசாகரம் - (முதல் புத்தகம் - நான்காம் பாகம்) பக்கம் 55

9. டாக்டர்.எஸ்.இராமநாதன்,  சிலப்பதிகாரத்து இசைத்தமிழ், பக்.37

10. மேலது நூல், பக்.90

 

துணை நூல் பட்டியல் :

1. பூர்வீக சங்கீத உண்மை

M.K.M. பொன்னுச்சாமி பிள்ளை

முதல் பதிப்பு - 1930

 

2.  சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாரயுரையும்

பதிப்பாசிரியர், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள்

ஆறாம் பதிப்பு - 1955

ஸ்ரீ தியாகராச விலாச வெளியீடு.

 

3. தமிழிசைக்களஞ்சியம், கருணாமிர்த சாகரம், முதல் புத்தகம் - நான்காம் பாகம்

மு. ஆபிரகாம் பண்டிதர், பதிப்பாசிரியர், திருமதி. மு. அங்கயற்கண்ணி

வளவன் பதிப்பக வெளியீடு. 2009 மீள் பதிப்பு.

சிலப்பதிகாரத்து இசைத் தமிழ்

 

4. டாக்டர் எஸ். இராமநாதன்

இரண்டாம் பதிப்பு -மார்ச் 2006

தி கர்னாடிக் மியூசிக் புக் சென்டர். சென்னை.

அடியார்க்கு நல்லார் உரை