ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வாழ்நிலை வேறுபாட்டில் தேவதாசிகளும் இல்லத்தாரங்களும் ( Devadasis and housewives in different living conditions)

கட்டுரையாளர்: மு.ரஞ்சிதா, முனைவர் பட்ட ஆய்வாளர்,  முதுகலை & தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை 08 Aug 2023 Read Full PDF

நெறியாளர்: முனைவர். அ.கன்னிமுத்து, உதவிப்பேராசிரியர், முதுகலை&தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை- 642 126

ஆய்வுச்சுருக்கம்:    

     தந்தைவழிச் சமூகம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை சமூகம் என்பது ஆணாதிக்கத்தினர் வரையறுத்த வரையறைகளின் படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இச்சமூகத்தில் பெண்கள் தங்களது சுயத்தை இழந்து ஆண்களின் எண்ண நிலைப்பாட்டின்படி ஆண்களுக்குத் தகுந்தவாறே வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் வாழ்ந்த தேவதாசிகளும், இல்லத்தாரங்களும் சமூகத்தின் பார்வையில் இழிவானவர்களாகவும், இழிவற்றவர்களாகவும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர். கவிஞர் வெண்ணிலாவின் படைப்புகளான ‘பெண் எழுதும் காலம்’,  ‘பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்’ என்ற இரு நூல்களில் தேவதாசிகளும், இல்லத்தாரங்களும் ஆணாதிக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் எவ்வாறு வாழ்ந்தனர்? அவர்களது மதிப்பு நிலை எவ்வாறு இருந்தது? அவர்களின் வரையறை எதுவாக இருந்தது? என்பதை வெளிக்கொணர்வதாக இவ் ஆய்வு அமைகிறது.

      சமூகத்தில் பெண்களைக் குறித்த தவறான பார்வையினையும், மதிப்பீட்டினையும் உருவாக்க காரணமாக இருந்த ஆணாதிக்கச்சமூகத்தின் அதிகார நிலையை சமூகத்திற்கு எடுத்தியம்புவதாகவும் இவ் ஆய்வு அமையப்பெறுகிறது.

Abstract
        Manij society is a social organization where men and women live together. When the power of patriarchy prevailed in this social system, the united society transformed into a segregated male-oriented unisexual society. Patriarchal society not only created division between men and women but also created many divisions among women. Devadasis and housewives are the ones born out of such division. This research paper aims to understand the life conditions of these two groups that were formed in the patriarchal society.
        From the beginning of the patriarchal society to the present day society has functioned according to the parameters defined by the patriarchs. In this society women have lost their self and are living according to men's ideals. Devadasis and housewives who lived in such a way are viewed from a different point of view in the eyes of the society as disgraceful and disgraceful How did Devadasis and housewives live under the control of patriarchy in the two works of poet Vanilla, 'Penn yeludum Kalam' and 'Brinda and Adolescent Men'? What was their value status? What was their definition? This study aims to reveal that.
        This study is also based on the fact that the society takes the position of power of the patriarchal society which is responsible for creating a wrong view and evaluation of women in the society.
Keywords:
        Devadasis, Housewives, Power of Patriarchy, Patriarchal Society, Prostitute, Patriarchal Society, Masculine Society, Devaradiyar, Nitya Sumangali, Consort of God, Sexuality, Gender Politics.

திறவுச்சொற்கள்:

     தேவதாசிகள், இல்லத்தாரங்கள், ஆணாதிக்கத்தின் அதிகாரம், ஆணாதிக்கச் சமூகம், பரத்தையர், தந்தைவழிச் சமூகம், ஆண்மைய சமூகம், தேவரடியார், நித்ய சுமங்கலி, கடவுளின் துணைவி, பாலியல் உணர்வு, ஆணிய அரசியல்.

முன்னுரை:

     மனிj சமுதாயம் என்பது ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து வாழும் சமூக அமைப்பாக இருக்கின்றது.   இந்த சமூக அமைப்பில் ஆணாதிக்கத்தின் அதிகாரம் மேலோங்கிய பொழுது ஒன்றிணைந்த சமூகம் பிரிவினைக்கு உட்பட்ட ஆண் சார்ந்த ஒருபால் சமூகமாக உருமாறியது. ஆணாதிக்கச் சமூகம் ஆண் பெண்களுக்குள் மட்டும் பிரிவினையை அமைக்காமல் பெண்களுக்குள்ளேயும் பல பிரிவினையை அமைத்தது. அத்தகைய பிரிவினையில் உருவானவர்களே தேவதாசிகளும், இல்லத்தாரங்களும் ஆவர். அவ்வாறு உருவாகிய இவ்விரு பிரிவினரும் ஆணாதிக்கச் சமூகத்தில் எத்தகைய வாழ்க்கை நிலையை வாழ்ந்தனர் என்பதை அறிந்துகொள்ளச் செய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள்:

     பெண்ணடிமைத் தனமும், பெண் ஒடுக்க முறையும் தந்தைவழிச் சமூகம் உருவான காலந்தொட்டு தமிழ்ச் சமூகத்தில் இருந்துகொண்டு வருகின்றது. தந்தைவழிச் சமூகத்தின் உருவாக்கத்திற்குப் பின்பு ஆண்கள் பெண்களை தங்களது அடிமைகளாகவே நடத்த ஆரம்பித்தனர். இந்த அடிமை முறையில் ஆண்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகையினரே தேவதாசிகள். ஆண்களின் தீராத காம இச்சையினைத் தீர்த்துக்கொள்ள தனக்குரிய மனைவி என்ற பெண்ணை விடுத்து மற்றொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக்கொள்ள ஆண்கள் இத் தேவதாசிப் பெண்களை சமய, மத நிறுவனத்தையும் மீறி உருவாக்கினர் என்று வெண்ணிலா கூறுகிறார். தேவதாசிகள் இறைவனுக்குத் தொண்டு செய்தல் என்னும் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்களுக்கு உடல் தொண்டு செய்பவர்களாக மாற்றப்பட்டனர்.

இறைவனின் பெயரில் உருவாக்கப்பட்ட தேவதாசிகளைப் போன்று பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் ‘பரத்தையர்’ என்ற ஒரு பிரிவினர் ஆண்களின் காம இச்சையினைத் தீர்ப்பவர்களாக இருந்துள்ளனர். ஆனால் பரத்தையர் இறைவனின் பெயரில் உருவாக்கப்படவில்லை வெளிப்படையாக ஆணின் காம இச்சைக்காக உருவாக்கப்பட்ட பெண்களாகவே இருந்துள்ளனர்.

தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் தேவதாசிகளுக்கு முன் இருந்த பரத்தையர் பற்றிய செய்தியைக் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் பரத்தையர் என்பவர் யாவரெனின், அவர் ஆடலும் பாடலும் அழகுமிளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார் (முனைவர் நர்மதா, 2006) என்று குறிப்பிடுகிறார். ஆக பரத்தையர் என்பவர் ஆடல் பாடல் நிகழ்த்தி தனது அழகால் இன்பமும் பொருளும் விரும்பி ஒரு ஆணிடத்து மட்டுமில்லாமல் பலருடன் வாழ்பவர் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.

தேவதாசிகளும் இவ்வகையில் தனது ஆடல், பாடல், அழகு போன்றவற்றால் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்களாகவும், கோவில் சார்ந்த நிலப்பிரப்புக்களுக்கும், பிற ஆண்களுக்கும், ஆண்களுக்குத் தோன்றும் பொழுது காம தாகத்தைத் தீர்ப்பவர்களாக இருந்துள்ளனர். இவர்களை ஆண்மைய சமூகம் இழிநிலை உடையவர்களாகவும் காட்சிப்படுத்திவைத்துள்ளது. கடவுளின் தாசிகளை தன்னுடைய தாசிகளாக, தன்னுடைய பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான கருவியாகவும், பிராமணர்களும், நிலப்பிரபுக்களும், பயன்படுத்திக் கொண்டுள்ளனர் (அ.வெண்ணிலா, 2007)  என்று கவிஞர் வெண்ணிலா தமது பெண் எழுதும் காலம் நூலில் பதிவு செய்கிறார்.

ஆணாதிக்கச் சமூகம் தேவதாசிகளாக இருக்கும் பெண்கள் தங்கள் மனமுவந்து இதில் ஈடுபடுவதாகவும், பெருமையும் இன்பமும் கொண்டு வாழ்பவர்களாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் தேவதாசிகளின் கொடூர வாழ்நிலை புரியும். ‘தேவதாசிகளின் வாழ்வு சமய நிறுவனங்களின் அங்கீகாரத்துடன் ஆடம்பரமாகவும், சுதந்திரமாகவும், தங்கள் விருப்பப்படியும் ஆடல், பாடல்களுடன் ஆனந்தமான ஒரு வாழ்க்கையைக் கொண்டதாக இருந்தது என்று சமூகத்தை நம்பவைப்பதான ஒரு பிம்பத்தை ஆண்மைய சமூகம் உருவாக்கிவைத்தது’ என்பதனை வெண்ணிலா மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

தேவதாசிகளின் உருவாக்கம்:

     தேவதாசிகளாக முதலில் எந்த பெண்ணும் தானாக முன்வந்து உருமாறவில்லை. ஆண்களின் தீர்மானத்தின் படியே ஆண் தேர்ந்தெடுத்த பெண் தேவதாசியாக உருவாக்கப்பட்டாள் என்பது தேவதாசிகளின் வரலாற்றினை பார்க்கும் பொழுது அறிந்துகொள்ளமுடிகிறது. தமிழ்நாட்டில் தேவரடியார் முறையானது முதலாம் இராசராசனால் நிலைநாட்டப்பெற்றது என்று கூறலாம். சோழப் பெருவேந்தர் காலத்தில் இசை, நடனம், கூத்து போன்ற கலைகளில் வல்ல பெண்கள் பலர், திருக்கோயில்களில் பல பணிகளில் ஈடுபட்டு வந்தனர் எனபதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம் (முனைவர் நர்மதா, 2006) என்ற கருத்தின் வழி ஒரு ஆண்மகனால் தேவதாசிமுறை தொடங்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆச்ச பிடாரன் கனவடி நம்பியான அழகிய பாண்டிய பல்லவரையன் தன் இல்லத்துப் பெண்கள் ஐவரை தேவரடியார்களாகக் கொடுத்ததாகவும், மதுரை நாயக்கர் காலத்தில் சில பெண்களைப் பொட்டுக்கட்டி கோயிலுக்கு தேவதாசிகளாக விடப்பட்டனர் என்பதையும் முனைவர் நர்மதா ‘தமிழகத்தில் தேவரடியார் மரபு-பன்முக நோக்கு’ என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார்.

      “தமிழகத்தில் இசைவேளாளர் சாதியை சார்ந்தப் பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். பொட்டுக்கட்டுதல், நித்ய சுமங்கலி சடங்கு போன்ற சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாகுகிறாள் (அ.வெண்ணிலா, 2007) என்பதாக வெண்ணிலா குறிப்பிடுகிறார். இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே பிறந்த வாரிசினை தேவதாசிகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது சமுகவியல் ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கின்றதாக வெண்ணிலா கருதுகிறார். இப்படிப்பட்ட தேவதாசிகளின் உருவாக்கத்தில் சில பெண்களும் தாங்களாகவே தேவதாசிகளாக மாறினர் என்ற செய்தியும் குறிப்பிடப்படுகிறது. இப்படி தேவதாசிகளாக மாறியவர்கள் இறைவனின் மீதுள்ள அதீத பற்றால் சமயத் தொண்டிற்குத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் வறுமையின் காரணமாகவும் தாங்களாக முன்வந்து தேவதாசிகளானர் என்பதும் பதிவு குறிப்பிடப்படுகிறது.

இல்லத்தாரங்கள்:

     ஆண்மைய சமூகம் சில பெண்களை தம்முடைய காம இச்சைக்காக தேவதாசி என்ற பிரிவினுள் அடக்கி வைத்ததுபோல், இன்னும் சில பெண்களை குடும்பங்களைக் கட்டிக்காத்து, சமூகத்தில் ஆணுக்கான மதிப்பினை உயர்த்தும் இல்லத்தாரங்களாகவும் உருவாக்கியது. இந்த இல்லத்தாரங்களாக உருவாக்கப்பட்ட பெண்கள் தங்களை ஆக்கிரமித்த ஒர் ஆடவனுக்கு மட்டுமே உரியவளாகி, அவன் சார்ந்த குடும்ப உறவுகளையும், அவனையும் கவனித்து குடும்பத்தை நடத்தும் ஒரு சேவகியாகக் கருதப்பட்டு வருகிறாள்.

      வெண்ணிலாவின் படைப்புகளில் வெளிப்படும் பெண்கள் பெரும்பான்மையாக ஆணுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையானதை செய்து வாழ்பவளாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். குடும்பத்தையும், வயக்காட்டையும் பாத்துக்கிற பொறுப்பு அம்மாளுடையது. நாலும் ஆம்பள புள்ளையா போனதால, ஒத்தாசைக்கு ஆளில்லனுட்டு, இந்தம்மாவே எல்லா வேலையும் செய்யப்பழகிடுச்சு. விடியல்ல எழுந்து பளபளன்னு மஞ்சள பூசிக்கிட்டு, பெரிய குங்குமப்பொட்டு வச்ச மொகத்தோட வேலைங்கள பம்பரமா சுழட்டுவாங்க. சமையல்ல எந்தகொறயும் வைக்க மாட்டங்க. ரெண்டு வகை பதார்த்தமும், குழம்பும், ரசமும் ஒன்னும் குறை இருக்காது (அ.வெண்ணிலா, பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்,2013) என்னும் பெண் கதாப்பாத்திரத்தின் வழி பெண் ஆணையும், ஆண் சார்ந்த குடும்பத்தையும், குடும்பம் சார்ந்த பிற வேலைகளையும் செய்பவளாக இருப்பது வெளிப்படுத்தப்படுகிறது.

      அதிகாலை எழுந்து வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலமிட்டு, அடுப்பங்கரை வேலையெல்லாம் செய்து கணவனாகிய ஆண் ஒருவனை மட்டுமே தன் ஆடவனாகக் கொண்டு, குடும்ப விதிகளுக்குட்பட்டு வாழ்பவளே இல்லத்தாரம் என்று ஆண்மைய சமூகம் வரையறுத்துள்ளது. அவ்வாறு வாழும் பெண்களே இழிவற்ற, புனிதமான பெண்கள் என்றும் வடிவமைத்துள்ளது.

தேவதாசிகள் மற்றும் இல்லத்தாரங்கள்:

      ‘தேவதாசிகள்’ ‘இல்லத்தாரங்கள்’ என்ற இரு வேறுபட்ட பெண்களையும் ஆணாதிக்கச் சமூகம் தான் உருவாக்கியுள்ளது. ஆனால் இல்லத்தாரப் பெண்களை மேன்மையுடைய, உயர்ந்த,  குடும்பப்பாங்கான பெண்களாகவும், தேவதாசிப்பெண்களை குடும்பப்பாங்கற்ற இழிவான பெண்களாகவும் முரணாக அமைத்துள்ளது. தேவதாசி என்ற சொல்லே சமூகத்தில் இன்று பரவலாக அறியப்படுகிற சொல்லாக இருக்கிறது. ஆனால் இச்சொல் தேவரடியார்களைக் குறிக்கப் பிற்காலத்தில்தான் பயன்பட்டிருக்கிறது. அத்துடன், இச்சொல் ஓர் இழிசொல்லாகவும், பெண்ணின் நடத்தையக் கொச்சைப்படுத்திப் பேசுவதற்குப் பயன்படும் வசவுச் சொல்லாகவும் மாறிவிட்டது (அ.வெண்ணிலா,2018) என்பதன் வழியாக தேவதாசி என்ற சொல்லும், தேவதாசிப் பெண்களும் இழிவு நிலையில் கருதப்பட்டது என்பதை அறியமுடிகிறது. ‘ஒரு தேவதாசிப்பெண் என்றும் விதவையாக்கப் படுவதில்லை.

கடவுளின் துணைவி, அடிமை என்ற பொருளில் நித்ய சுமங்கலியாக இருக்கிறாள். இந்தக் காரணத்தினாலே தேவதாசிப் பெண்கள் விசேச நாட்களில் பல சடங்குகளை செய்வதற்கு முன்னிறுத்தப்படுகிறார்கள். தேவதாசியின் இறப்பிற்கு உயர்ந்த மரியாதையாய் அவள் சார்ந்திருந்த கோயில் தெய்வத்தின் மேலுள்ள புதுத்துணியும் ஈமச்சடங்கிற்கு வேண்டிய பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்’ என்பதாக தேவதாசிகளைக் குறித்த ஒரு பக்க கருத்தினை மட்டுமே தெரிந்துகொள்வது தவறு என்பதை வெண்ணிலாவின் தேவதாசிகளைக் குறித்தான கட்டுரையைப் படிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது. நிலையற்றப் பொருளாதார வாழ்வு, வாழ்நாள் முழுவதும் புரவலர்களைத்தேடி அலையும் இழிநிலை, உடல் தளர்ந்தப்பின் நிகழும் சமூகப்புறக்கணிப்பும், கவனிப்பின்மையும் என கீழான வாழ்நிலை ஒன்றிலேயே தேவதாசிப்பெண்கள் இருந்துள்ளனர்7 என்று தேவதாசிகளின் மறுபக்கத்தை வெண்ணிலா எடுத்தியப்புகிறார். பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்த இத்தேவதாசிப் பெண்களை சமூகம் மிக இழிவானவர்களாகவே கருதி ஒதுக்கி வைத்தது.

      ஆண்கள் பலருடன் வாழாமல் ஒரே ஒரு ஆடவனையே  தனக்குரிய ஆடவனாகக் கொண்டு அவனைச் சார்ந்து வாழ்தலே குடும்பப்பெண்ணாகியவளின் கடமை என்பதையும் ஆண்மைய சமூகம் நிர்ணயத்துள்ளது. ஆனால் இத்தகைய இல்லத்துப்பெண்களுக்கு ‘நித்ய சுமங்கலி’ என்ற அடையாளத்தை தர மறுப்பதின் ஆண்மைய அரசியலை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இங்கு இல்லத்தாரங்களைக் காட்டிலும் தேவதாசிகள் உயர்ந்தவர்களா? இல்லை இல்லத்தாரங்களையும், தேவதாசிகளையும் கட்டமைத்த ஆணாதிக்கச் சமூகத்தின் நிர்ணயிப்பு தவறா? என்ற கேள்வி எழுகிறது.

‘தேவதாசிப் பெண்களுக்குத் தன்னுடைய பாலியல் துணையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான நிலை மறுக்கப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுமையும் புரவலர்களையே நம்பி வாழ்பவர்களாகவும் தேவதாசிகள் இருக்கின்றர்’. இந்த பாலியல் சுதந்திரம் இல்லத்தாரங்களிடத்தும் மறுக்கப்பட்டதை வெண்ணிலா பதிவு செய்துள்ளார். பசியோடு இருக்கும்போது மூளை வேறு சிந்தனையில் ஈடுபடுமா? வயிற்றின் நிறைவையே யாசித்துக் கொண்டிருக்கும் நானும், ஒவ்வொரு இரவும், யுதிஷ்டிரருடன் கூடிக் களிக்க வேண்டிய தருணங்களுக்காகக் காத்திருப்பேன்8 என்று திரெளபதி தன்னிடத்து தோன்றிய பாலியல் உணர்வை தன் இணையிடத்துக்கூட சொல்லமுடியாத நிலையினை வெளிக்கொணர்கிறது.

முடிவுரை:

     காலங்காலமாக தேவதாசி என்பவர்கள் இழிவானவர்கள், அவர்கள் மனமுவந்தே இத்தொழில் ஈடுபட்டார்கள், அவர்கள் எந்தவொரு துன்பமும் இன்றி சமூகத்தில் சிறப்பான நிலையில் இருந்தார்கள் என்ற கருத்தாக்கத்தை இவ் ஆய்வுக்கட்டுரை தகர்க்கின்றது. சமூகத்தால் உருவாக்கப்பட்ட தேவதாசிகளும், இல்லத்தாரங்களும் ஆண்களின் தேவைக்காக சமூகத்தில் பல நிலைகளில் இழிவானவர்களாகவும், உயர்வானவர்களாகவும் மாற்றப்பட்டார்கள் என்பதை அறியப்படுத்துகிறது. ஆணாதிக்கச்சமூகத்தின் முரண் கொண்ட கருத்துநிலை தவறானது என்பதைத் தமிழ்ச்சமூகம் அறிந்து தேவதாசிகளின் மீதான பார்வையினை மாற்றியமைத்தது. ஆணாதிக்கத்தின் கட்டுக்குள் சிக்கி வாழும் பெண்கள் அனைவரும் தேவதாசிகளாக, இல்லத்தாரங்களாக , மற்ற நிலைப் பெண்களாக இருப்பவர்கள் தன்னிலைப்படி இருப்பதேயில்லை என்பதும் பதிவுசெய்யப்படுகிறது. ஆணுக்குத் தகுந்த இடங்களில் பெண்களை உயர்வானவர்களாகவும், இழிவானவர்களாகவும் முரணாக மாற்றியமைத்ததன் ஆணிய அரசியலை சமூகத்திற்கு தெரியப்படுத்தவதாகவும் இவ் ஆய்வுக்கட்டுரை அமையப்பெறுகின்றது.

துணைநூற்பட்டியல்:

  1. அ.வெண்ணிலா, 2007, பெண் எழுதும் காலம், அகநி வெளியீடு, அம்மையப்பட்டு, வந்தவாசி.
  2. முனைவர் நர்மதா, 2006, தமிழகத்தில் தேவரடியார் மரபு- பன்முக நோக்கு, போதி வனம், இராயப்பேட்டை, சென்னை.
  3. ஆ.சிவசுப்பிரமணியன், 2021(பத்தாம் பதிப்பு), தமிழகத்தில் அடிமை முறை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
  4. அ.வெண்ணிலா, 2018, தேவரடியார் கலையே வாழ்வாக, அகநி வெளியீடு, அம்மையப்பட்டு, வந்தவாசி.
  5. அ.வெண்ணிலா, 2013, பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், விகடன் பிரசுரம், சென்னை.

ஆய்விதழ்:

  1. தியட்டோர் பாஷ்கரன், 2016, தேவதாசி பாரம்பரியமும் ஆரம்பகாலத் தமிழ் சினிமாவும், காலச்சுவடு, தொகுதி 28, காலச்சுவடு தலைமை அலுவலகம், நாகர்கோவில், ப.44