ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கேடயம்: பண்டைய தமிழ்ச் சமூகத்தின் போர்க்கருவி பண்பாடு (Kedayam: The Weapon Culture of Ancient Tamil Society)

மு. சத்தியா (M. Sathya), முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் இலகியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை -600 005. 27 Jul 2023 Read Full PDF

கட்டுரையாளர்: மு. சத்தியா (M. Sathya), முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் இலகியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை -600 005.

நெறியாளர்: முனைவர் ஆ. ஏகாம்பரம் , பேராசிரியர் & தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை -600 005.

ஆய்வுச்சுருக்கம்

      சங்க இலக்கியத்தில் ஒரு பாதி காதலையும் அழகியலையும் பேசுகிறது என்றால் மறு பாதி போரையும் வீரத்தையும் பறைச் சாற்றுகிறது. போர்க்களத்தில் நேருக்கு நேர் போரிடும் போது பயன்படும் ஆயுத வகைகளில் ஒன்று கேடயம். கேடயம் என்ற இந்த ஆயுத வகை தொல்குடிகளில் இருந்து வேந்தர் வரை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் காணலாம். தொல்குடிகளின் கேடயம் கழிகளால் செய்யப்பட்டுள்ளது. இக்கேடயம் அவர்களின் நம்பிக்கைசார் நிகழ்விலும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். வேந்தர் உருவாக்கத்தில் இடம் பெறும் கேடயம் தோலால் ஆனது. இதில் பல வகைகள் உண்டு. இலக்கியத் தரவுகளின் வழி மூன்று வகையான கேடயத்தை இனக்காண முடிகிறது. அவற்றின் உருவம் தனித்துவம் மிக்கதாக உள்ளது.  

திறவுச்சொற்கள்

பலகை, கிடுகு, கறைத்தோல், வெண்தோல், நுண்தோல், பூசல், போர்

Kedayam : The Weapon Culture of Ancient Tamil society

Abstract

      One half of the Sangam literature speaks of love and aesthetics while the other half extols war and valour. A shield is one of the types of weapons used in face-to-face combat on the battlefield. We can see the evolution of this type of weapon called Kedayam from Tolgudis to Vendar. The shield of Tolkudi is made of trenches. It can be seen in their faith event. A shield that takes place in  Vendar is made of animal skin. There are several types of shield in sangam literature, by the way of literature data we can sort three types of shield. And their shapes are unique.

Key words

Palagai, Kidugu, Thol, Karaithol, Venthol, Nonthol, Poosal, War

முன்னுரை

      இனக்குழு வாழ்வில் இயற்கையோடு இயற்கையாக வேட்டையாடி கூடி உண்டு வாழ்ந்த மக்கள் ‘பரிணாம வளர்ச்சி’யை போல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைச் சேமிக்கவும் ஆநிரைகளைப் பழக்கவும் கற்றுக் கொண்டனர். நீர் நிலைகளைக் கொண்டு இருப்பிடங்களை அமைத்தனர். நிலைகுடிகள் ஆன பின் வேளாண்மையும் கைவசப்பட்டது. இந்நிலையில் நிலம் மீதான ஆர்வம் காரணமாகப் பூசல்கள் ஏற்பட்டன. நாளடைவில் அது போராக மாறியது. நிலங்களைக் கைப்பற்றிச் சேர்த்து அதனை காத்து வந்தவனே மன்னன், அரசன், வேந்தன் என அறியப்பட்டான். பெ. மாதையன் குறிப்பிடும் படிநிலையான இனக்குழு, தொல்குடி மன்னன், குறுநில மன்னன், வேந்தன் என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது1. பல இனக்குழுக்களின் அழிவிற்கு பின்னால் ஏற்பட்டதே வேந்தர் உருவாக்கம். இது நிற்க. கட்டமைக்கப்பட்ட ஒரு போரினை நடத்தும் வேந்தன் தனக்கான படை பலத்தை மிக வலிமையான ஒன்றாகவே வைத்திருந்தான். இதற்கு அவன் பயன்படுத்திய போர்க்கருவிகள் ஏராளமானவை. ஐம்பதிற்கும் மேற்பட்ட போர்க்கருவிகளைச் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றன. இவற்றில் பிற ஆயுதங்கள் தாக்காமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள பயன்படும் கருவிகளில் ஒன்று கேடயம். இதனை பலகை, கிடுகு, தோல் என்று அழைக்கின்றனர். இக்கேடயத்தின் வகைகளையும், அதன் மீதுள்ள மரபுசார் செயல்பாடுகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேலும் பலகை

       சங்க இலக்கியத்தில் நடுகல் முன்பு வேலூன்றி பலகை (கேடயம்) சார்த்தப்பட்டிருக்கும் குறிப்பை மருதனிளநாகனார் தருகிறார். இங்கு ஆகோள் பூசலில் இறந்த வீரனுக்கு எழுப்பியுள்ள நடுகல் முன்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பலகை நேருக்கு நேர் போரிடும் போது பயன்படும் ஆயுதமாகும். மாடு கவரும் போது வெட்சி, கரந்தை வீரர்களுக்கு இடையே நடந்த பூசலில் பலகை பயன்பட்டிருக்கலாம். ஆனால் பூசலில் ஈடுபட்ட வீரர்களின் கையில் பலகை இருந்ததற்கான சான்று இல்லை.

      அகம்.131-ஆம் பாடலில் பொருள் தேடி செல்ல நினைக்கும் தலைவன் தன் நெஞ்சிற்குத் தலைவியின் சிறப்புகளையும் பாலை வழியின் கொடுமைகளையும் எடுத்துரைத்து செலவு அழுங்குவதாக அமைந்துள்ளது. பொருள் தேடி செல்லும் வழியில் ஆநிரை பூசலில் இறந்துபட்ட வீரனின் நடுகல் இருப்பதைத் தலைவன் சுட்டுகிறான்.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சுட்டிய பிறங்குநிலை நடுகல்                           

வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்           (அகம்.131:10-12)

ஆகோள் பூசலில் இறந்துப்பட்ட வீரனுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லில் அவன் பெயரும் புகழும் எழுதி நடப்பட்டுள்ளது. அந்நடுகல்லிற்கு பீலி சுட்டி அதன் முன்பு வேல் ஊன்றி பலகை சார்த்தப்பட்டுள்ளது. இந்த ‘வேலூன்று பலகை’ போர்க்கள காட்சியை ஒத்து காணப்படுகிறது. இங்கு, நடுகற்களின் எண்ணிக்கையை உணர்த்த போர்முனையில் திரண்டு நிற்கும் படையை மருதனிளநாகனார் உவமையாக்கிக் கொள்கிறார்.

பலகை என்பதற்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் கேடயம் என்றும் பொ.வே.சோமசுந்தரனார் கிடுகு என்றும் பொருள் கொண்டுள்ளனர். சங்க இலக்கிய தொடரடைவின் (Tamil concordance) படி பலகை என்ற சொல் சங்க இலக்கியத்தில் பதினோரு இடங்களில் உள்ளன. இதில் எட்டு இடங்களில் ‘பலகை’ கேடயம் என்ற பொருளில் வந்துள்ளன2. கிடுகு மூன்று இடங்களில் உள்ளன3.    

பேய்கள் வராமல் தடுப்பதற்கு இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே உள்ளது. இதனால்தான் நடுகல் முன்பு வேலூன்றி பலகை வைக்கப்பட்டிருக்கிறது என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது. ஆனால், சங்க இலக்கியம் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் இக்கருத்திற்கு முரணாகவுள்ளது.

           ‘கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்’                   (புறம்.345-15)

           ‘விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு’        (புறம்.15-12)

           ‘மணியணி பலகை மாக்காழ் நெடுவேல்’                  (அகம்.369-18)

           ‘காழூன்றிய கவிகிடுகு’                           (பட்.167)

இவ்வடிகள் பலகையை உருவகப்படுத்துகிறது. பலகையைக் ‘கழிப்பிணிப் பலகை’ என்பதால் கேடயம் கழிகளால் (மரக்கொம்புகளால்) பிணைக்கப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது இரும்பால் அல்ல என்பது தெளிவு. மேலும், இப்பாடல் மகட்பாற்காஞ்சித் துறையில் இடம் பெற்றுள்ளது. மகள் மறுத்து, வம்ப வேந்தரை எதிர்க்க முனைப்புடன் இருக்கும் ‘பனை நல்லூரனை’ அடைநெடுங்கல்வியார் காட்டுகிறார் (புறம்.345). வேந்தனை எதிர்த்து நிற்கும் முதுகுடி மன்னரின் கூட்டத்தினர் வேலோடும் ‘கழிப்பிணிப் பலகை’யோடும் விளங்குகின்றனர். இங்கு தொல்குடிகளின் பயன்பாட்டில் ‘பலகை’ இருப்பதும் தெளிவாகிறது.

      கழிகளால் பிணைக்கப்பட்டு செய்யப்பட்ட கேடயம் இரும்பால் ஆன ஆணிகளால் அறையப்படுகிறது. ‘விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு’ என்ற அடி இதனை உறுது செய்கிறது. இங்கு பொன் என்பது இரும்பைக் குறிக்கிறது (பாட்டும் தொகையும்).

      ‘மணியணி’ என்பதற்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார் ‘மணிகள் பதிக்கப்பட்ட பரிசை (பலகை)’ என்றும்; நற்றிணைக்கு உரை எழுதிய ஔவை சு.துரைசாமிப்பிள்ளை ‘மணியணிபவ்வே’ (நற்.177:6) என்பதற்கு ‘மணியை நிரலே கோத்துக் கட்டுகின்றனர்’ என்றும் பொருள் கூறுகின்றனர். அகழாய்வின் வழி நமக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பான்மை துளையிடப்பட்டவையாகவே உள்ளன. அதனால் பலகையில் மணிகள் கோக்கப்பட்டு இணைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

      மேலும், ‘கவிகிடுகு’ என்பதிற்குக் கவிந்த கிடுகு என்று உரை கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் அதியன் மகன் பொகுட்டெழினியைப் பாடும் ஔவை ‘கவிகை நெடியோய்’ (புறம்.102) என்கிறார். இதற்கு இரவலர்களுக்குப் பொருள் கொடுத்துக் கொடுத்து கை கவிந்து (குழி பெற்று) விட்டது என்பதாகும். புரவலர்களின் வள்ளல் தன்மையை மிகைப்படுத்த புலவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். யானையின் நகத்தையும் காந்தள் மலரையும் வர்ணிக்க ‘கவி’ என்ற அடை பயன்படுகிறது. இதனால், கேடயத்தின் உருவம் நடுவில் குழியோடு நீள் வட்ட வடிவில் இருக்கிறது என்பது அறியப்படுகிறது. மேற்கூறிய சான்றுகளின் வழி கேடயம் இரும்பால் செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகிறது.

கிடுகு

      காவிரிப்பூம்பட்டிணத்தின் புறஞ்சேரியை விவரிக்கும் கடியலூர் உருத்திரங் கண்ணார், அங்கு நெடுந்தூண்டில்கள் நடப்பட்டுக் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார். இதன் அமைப்பு வேலூன்றி அதன் மீது கிடுகு கவிழ்த்தப்பட்டிருப்பது போல் உள்ளது.

           கிடுகுநிரைத் தெஃகூன்றி

           நடுகல்லின் அரண்போல

           நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய

           குறுங் கூரை                                            (பட்.78-81)

வேலூன்றி கிடுகு கவிழ்த்தப்பட்டிருப்பது ‘நடுகல்லின் அரண்’ என்பதால் ‘வேலூன்று பலகை’ என்று மருதனிளநாகனார் சுட்டுவது நடுகல்லின் பாதுகாப்பு சார்ந்து மக்களிடையே இருந்த வழக்கமாகலாம்.

தோல்

      சங்க இலக்கிய தொடரடைவின் (Tamil concordance) படி ‘தோல்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் மொத்தம் ஐம்பத்தி ஐந்து (55) இடங்களில் உள்ளன. தோல் என்பதற்கு சதை, யானை, செருப்பு, கேடயம், உரை என்று பொருள்கள் உள்ளன. ‘கேடயம்’ என்ற பொருளில் மொத்தம் இருபத்தி நான்கு (24) பாடல்கள் அமைந்துள்ளன.

      தோல் என்று குறிப்பிடப்படும் ஒரு வகை கேடயம் விலங்கின் தோலால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அதனால் தான் இவ்வகை கேடயத்தைத் ‘தோல்’ என்று அழைத்துள்ளனர். போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட, புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளைப் போர் வீரர்கள் பயன்படுத்தியதாகக் கந்தையாப்பிள்ளை தமிழகம் என்னும் தம் நூலில் குறிப்பிடுகிறார்4.

‘பல்தோல்’ என்று சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது5. இதனால் தோலால் செய்யப்பட்ட இந்த கேடயம் பல வகைகளில் இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது. கேடயத்தைச் சிறப்பிக்க கூறப்படும் பெயரடைகளைக் கொண்டு இந்த கேடயத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை கறைத்தோல், வெண்தோல், கூர்மையான வேல் பதிக்கப்பட்ட நுண் தோல் ஆகும்.

கறைத்தோல்

கறைத்தோல் என்பது கரிய நிறம் கொண்ட கேடயமாகும். அகநானூற்றில் நான்கு இடத்திலும் புறநானூற்றில் இரண்டு இடத்திலும் பதிற்றுப்பத்தில் இரண்டு இடத்திலும் மலைபடுகடாத்தில் ஓர் இடத்திலும் கேடயத்தின் கருமையை உணர்த்த மழை பொழியும் இருண்ட மேகத்தைப் புலவர்கள் உவமையாக்கியுள்ளனர்6.

கழிபிணிக் கறைத்தோல் பொழி கணை யுதைப்புத்      (அகம். 24:14)

மழைமருள் பல்தோல் மாவண் சோழர்                   (அகம்.123:10)

                     … வென்வேல்

மாரி அம்பின் மழைத்தோல் பழையன்                   (அகம்.186:15)

வென்வேல்

மாரி அம்பின் மழைத்தோல் சோழன்                    (அகம்.336:20)

மழையுருவின தோல்பரப்பி                                (புறம்.16:2)

மழையென மருளும் பஃறோன் மலையெனத்             (புறம்.17:34)

மை அணிந்து எழுதரு மரு இரும் பல் தோல்               (பதி.52:2)

மழை என மருளும் மா இரும் பல் தோல்                 (பதி.62:2)

புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்                    (மலை.377)

      கருமை நிறம் கொண்ட இந்த கேடயம் விலங்கின் தோல் கொண்டு மரக்கொம்புகளால் (கழிகளால்) கட்டி பயன்படுத்தியுள்ளனர்.

           கழிபிணிக் கறைத்தோல் பொழி கணை யுதைப்புத்         (அகம்.24:4)

     கழிகளுடன் பிணிக்கப்பட்ட கரிய தோலாளாகிய கேடயத்தின் மீது அம்புகள் தைப்பதால் எழும் ஓசையுடைய வேந்தனின் பாசறையில் தலைவன் உள்ளான் என்பதை ஆவூர் மூலங்கிழார் காட்டுகிறார். தோல் என்ற கேடய வகை கட்டமைக்கப்பட்ட போரில் பயன்படுத்துவது தெரிய வருகிறது. கரிய நிறம் கொண்ட இந்த கேடயத்தைப் பயன்படுத்தி பகைவர் எறியும் படைக்கருவிகளைத் தடுக்கும் ‘சால்புடையோர்’களாக இருந்துள்ளனர். வேந்தர் உருவாக்கத்தில் தோல் முக்கிய இடம் பெற்றுள்ளது.

வெண்தோல்

      வளைந்த வில்லினையும் வளையாத நெஞ்சினையும் களிறு எறிந்ததால் நுனி மழுங்கிய வேலினையும் உடைய வீரர்களைக் கொண்டவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இச்சேர மன்னனின் புகழை விதந்து பாடும் பரணர், இவன் கையில் வலிமையான வெண்மை நிறங்கொண்ட ‘தோல்’ இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

                                …தெவ்வர்

           சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்                (பதி.45:15,16)

      பகைவரின் வில்லின் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாளான கேடயத்தைக் கொண்டுள்ளோர் உன்னையன்றி வேறு யாரும் இல்லை என்று புலவர் பாடுகிறார். இங்கு ‘தோல்’ வெண்மை நிறத்தில் இருப்பது தெரிகிறது. மேலும், வெண்தோல் ஒரு வேந்தனின் கையில் இருப்பதால் இது வேந்தர்களுக்குரியது என்பதும் தெளிவாகிறது. இப்பாடலன்றி வெண்தோல் பற்றிய குறிப்பு வேறெங்கும் இல்லை.

நுண்தோல்

      பாலைக் பண்ணை வாசித்துக் கொண்டு வரும் ஒரு முதுமை வாய்ந்த இரவலன் செல்வக்கடுங்கோ வாழியாதனைத் தேடி செல்கிறான். அவனை நோக்கி செல்வக்கடுங்கோ வாழியாதனின் வீரத்தையும் அவன் நாட்டின் வளத்தையும் கூறி கபிலர் ஆற்றுப்படுத்துகிறார்.

            நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல்

           தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்

           தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின்           (பதி.66:11-13)

      விடியற்காலையில் மலை உச்சியை மேகங்கள் சூழ்ந்து இருப்பது போல் வேல் எழுந்து நிற்கும் கேடயத்தையும் மாலைகள் முறுக்கிக் கொள்வது போன்ற வாளையும் உடைய வீரர்கள் செல்வக்கடுங்கோ வாழியாதனை நிறைந்து சூழ்ந்துள்ளனர். இங்கு வீரர்கள் கையில் இருக்கும் கேடயத்தின் மீது வேல் பகைவரை நோக்கியவாறு செங்குத்தாகப் பொருத்தப்பட்டுள்ளது.     

      மேலும், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின் படை பலத்தை விவரிக்கும் பரணர் அவன் வீரர்கள் வைத்திருக்கும் கேடயத்தைச் சற்று விளக்குகிறார்.

           புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர                    (பதி. 50:9)

     உயர்ந்த தோலின் மீது மேல்பக்கத்தில் வேல் முனைகள் மீன்களைப் போல மின்னுகின்றன என்கிறார் பரணர். இங்கு மீன்களை ஏன் உவமையாக்கியுள்ளார் என்ற கேள்வியும் எழுகிறது.

      மேலும், தலைவன் வரைவு நீட்டிப்பதை உணர்ந்த தோழி தலைவன் சிறைப்புறத்தே நிற்கும் நேரம், வண்டினை நோக்கி ‘தலைவி இன்னும் தன் வீட்டிலேயே தான் உள்ளாள்’ என்று கூறுவது போல் தலைவனைச் சாடுவதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. இதில் தலைவனின் மலை சிறப்பை எடுத்துரைக்கும் போது ‘நுண்தோல்’ என்பதை தோழி உவமையாக்கிக் கொள்கிறாள்.

                            …அரசர்

           நிரை செலல் நுண் தோல் போல

           பிரசம் தூங்கு மலை கிழவோற்கே                       (குறு. 392:6-8)

      அரசர்களின் வரிசையாகச் செல்லும் கூர்மையான கேடயம் போல் தேனடைகள் தொங்குகின்ற மலையை உடையவன் தலைவன் என்கிறார் தும்பிசேர் கீரனார். இங்கு கேடயத்தை ‘நுண்தோல்’ என்கிறார். நுண் என்பதற்கு ‘கூரிய’ என்று பாட்டும் தொகையும் பொருள் கூறுகிறது. கூர்மையான கேடயம் என்று பொருள்படுவதால் மேற்கூரியது போல கேடயத்தில் செங்குத்தாகப் பகைவரை நோக்கியவாறு வேல் குத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது.

முடிவுரை

  • தொல்குடிகள் பயன்படுத்திய கேடயம் கழிகளால் ஆனது தெரிய வருகிறது. இதனை பலகை என்றும் கிடுகு என்றும் அழைக்கின்றனர். அவர்களுக்கிடையே நடந்த ஆநிரைப் பூசலில் இறந்த ‘ஆடவர்’க்கு நடுகல் வைக்கப்படும் போது, பிற வீரசெயல்களில் இறந்துபட்டோருக்கு வைக்கும் நடுகல்லில் இருந்து ஆகோள் பூசலில் இறந்த வீரனுக்கு வைக்கப்படும் நடுகல்லைத் தனித்துக் காட்டும் பொருட்டு வேலூன்றி கேடயம் சார்த்தப்படும் மரபு உருவாகியிருக்க வேண்டும்.
  • வேந்தனும் வேந்தனின் வீரர்களும் தோல் என்ற கேடய வகையைப் பயன்படுத்தியுள்ளனர். இது விலங்கின் தோல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் வெண்தோல் வகை கேடயத்தை வேந்தன் பயன்படுத்தியுள்ளான். கரிய நிறம் கொண்ட கறைத்தோல், கூர்மையான நுண்தோல் வகை கேடயத்தை வேந்தனின் வீரர்கள் பயன்படுத்தியுள்ளனர். தோல் என்ற கேடய வகை பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்தில் மிகுந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடிக்குறிப்பு

  1. சங்ககால இனக்குழுச் சமூதாயமும் அரசு உருவாக்கமும்.
  2. அகம்.67,131,369; புறம்.15,282,345; நற்.177; பெரும்.120.
  3. பட்.78,167; முல்.41.
  4. தமிழர்களின் போர்க்கருவிகள், கீற்று.
  5. அகம்.123:10, புறம்.17:34, நற்.197:11, பதி. 52:5, 62:2,83:3, மலை. 377.
  6. அகம். 24:14,123:10,186:14,15, 336:19,20, புறம். 16:2,17:34, பதி. 52:5, 62:2, மலை. 377.

துணைநூற்பட்டியல்

  1. அகநானூறு மூலமும் உரையும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் (உரை), பாரதி பதிப்பகம், சென்னை, 2022.
  2. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. (உரை), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2020 (9-ஆம் பதிப்பு).
  3. பத்துப்பாட்டு மூலமும் உரையும், நச்சினார்க்கினியர் (உரை), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2019 (9-ஆம் பதிப்பு)
  4. பதிற்றுப்பத்து மூலமும் உரையும், உ.வே.சா. (உரை), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2018 (10-ஆம் பதிப்பு)
  5. புறநானூறு மூலமும் உரையும், உ.வே.சா.(உரை), உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2021 (9-ஆம் பதிப்பு)
  6. கோவிந்தன். கா., பண்டைத் தமிழர் போர் நெறி, ராமையா பதிப்பகம், சென்னை, 2017 (4-ஆம் பதிப்பு)
  7. மாதையன். பெ., சங்ககால இனக்குழுச் சமூதாயமும் அரசு உருவாக்கமும், பாவை பப்ளிகேஷன்ஸ், 2004.
  8. மாதையன்.பெ., சங்க இலக்கிய சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை, 2007.

இணையதளங்கள்

  1. www.tamilconcordance.in  
  2. www.keetru.com
  3. www.tamilvu.org