ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கோத்தரின மக்களின் அணிகலன்கள் (Ornaments of Kothas people)

 முனைவா் க. ஸ்ரீமதி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூா். 641029        27 Jul 2023 Read Full PDF

Abstract: In the modern world various races and thousands of societies consists if different types of people. The most  primitive of these  ethnic groups are tribal people. In ancient times, they used to build their own dwellings in the forests and mountains.  At present, due to the development of various civilizations,  they are living in settlements like other ethnic groups. Tribal people live in more than thirty districts of Tamil Nadu. Nilgiri district is one of them. The kothas, a tribe belonging to the Dravidan family, live in seven village as Kokal in their language. The Kothas are skilled in handicrafts and have the ability to make everything they need by themselves, one of them is the art of jewelry, so the method if making jewelry through field research in one of the villages where the Kothas live, the method of making jewelry in the area called Kothagiri Kokal, one of the villeges where the Kothas live, about some jewelry and the purpose of wearing it. This review  article examines about their jewels of the Kothas.                 

Keywords:   Handicarfts – Gothic – Kadaku – Albanoic Bracelet weinar – Kasumalao – Mackail – Geekhaival – Methi - Kolusu

ஆய்வுச் சுருக்கம்

      மனிதகுலம் இ்ன்று பல்வேறு இனங்களாகவும் ஆயிரக்கணக்கான சமூகங்களாகவும் வாழுகின்றனா். இதில் மிகவும் தொன்மை வாய்ந்த இன மக்கள் பழங்குடி மக்கள் ஆகும். பழங்காலத்தில் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும்  தங்களுக்கான குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்தனா். தற்போது பல்வேறு நாகரிக வளர்ச்சியின் காரணமாக மற்ற இன மக்களைப் போன்று குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனா். தமிழகத்தில் ஏறத்தால முப்பதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனா். அவற்றில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்த ஒன்றாகும். திராவிடக் குடும்பத்தைச் சோ்ந்த இனமான கோடா எனப்படும் கோத்தா்கள் நீலகிரியில் மொத்தம் ஏழு ஊா்களில் வசித்து வருகின்றனா். இவா்கள் தாங்கள் வாழும் ஊரினைக் கோக்கால் என்று தங்கள் மொழியில் குறிப்பிடுவா். கோத்தர்கள் கைவினைக் கலைகளில் திறமை மிக்கவா்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் தாங்களே தயாரித்துக் கொள்ளும் திறமை பெற்றவா்கள். அவற்றில் ஒன்று அணிகலன் செய்யும் கலை.  எனவே கோத்தர்கள் வசிக்கும் ஊர்களில் ஒன்றான கீழ்க் கோத்தகிரி கோக்கால் என்னும் பகுதியில் கள ஆய்வு முலம் அணிகலன்கள் செய்யும் முறை அதனை அணிவிக்கும் நோக்கம் என சில அணிகலன் குறித்து, சேகரித்த தரவுகளின் அடிப்படையில் கோத்தர் அணிகலன்கள் எனும் இவ்வாய்வுக் கட்டுரை ஆராயப்படுகிறது.

திறவுச் சொற்கள்

     கைவினைக் கலைகள் – கோத்திக் கடுக்கு – அல்பனாய்க் – வளையல் – வெய்நார் – காசுமாலை – மேக்கைவள் – கீக்கை வள் – மெட்டி - கொலுசு

முன்னுரை

      நீலகிரியில் இருளா், குரும்பா், கோத்தர், தோடா், காட்டுநாயக்கர் மற்றும் பணியா் முதலிய ஏழு வகை பழங்குடிகள் வாழுகின்றனா். அவர்களில் கோத்தர் இன மக்கள் நீலகிரி மாவட்டத்தில் முதலில் குடியமா்ந்த ஊா் கோத்தகிரி ஆகும். கோத்தா்கள் குடியமா்ந்த காரணத்தினால் தான் அம்மலைக்கு கோத்தகிரி என்ற பெயரும் வந்தது என்ற வாய்மொழி கருத்தும் உண்டு. மற்ற பழங்குடிகளைக் காட்டிலும் கோத்தா்கள் கலை நயம் மிக்கவா்களாவா். கைவினைக்கலைகள் முதல் தச்சுத் தொழில், கொல்லா் தொழில், குயவா் தொழில், கூடை, முறம் கட்டுவது, கட்டட தொழில் மற்றும் விவசாயம் போன்ற பன்முக தொழில்களைச் செய்து தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தாங்களே தயாரித்துக்கொள்கின்றனா். அவற்றில் குறிப்பிடத்தக்கது அணிகலன்கள் ஆகும். தங்களை அழகு படுத்திக் கொள்ள தாங்களே அணிகலன்கள் செய்யும் சிறப்பு மிக்க இன மாக கோத்தா்கள் கருதப்படுகிறார்கள்.  அவற்றை கள ஆய்வு மூலம் நேரடியாக அணிகலன்கள் சார்ந்த தரவுகள் சேகரித்து இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.     

அணிகலன்கள்

      அணி என்றால் அழகு என்று பொருள். அதற்கேற்ப உலகில் வாழும் ஒவ்வொருவரும் எதாவது ஒரு வகையில் தங்களை அழகுப் படுத்திக் கொள்கின்றனா். அவற்றில் அணிகலன் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதனை கோத்தா்கள் தாங்களே செய்து கொள்ளும் திறமைப் பெற்றவா்கள். அணிகலன்கள் செய்வதற்கு வெள்ளி, செம்பு, பித்தளை போன்ற உலோகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனா். அவ்வாறு செய்யப்பட்ட அணிகலன்களாவன கோத்திக் கடுக்கு, அல்பனாய்க், வளையல், கனுமோதிரம், வெய்நார், காசு மாலை, மேக்கைவள், கீக்கைவள், வெள்ளிக் காப்பு, கம்மல், செண்டுநார், கருகமணி மற்றும் மெட்டி கொலுசு போன்றவையாகும். இவையனைத்து ஏதாவது ஒரு பண்பாட்டுக் கூறுடன் தொடா்புடையதாகும்.  அவற்றைப் பற்றி விளக்கமாக காணலாம்.           

கடுக்கன் (கோத்திக் கடுக்கு) 

      கோத்திக்கடுக்கு எனும் அணிகலனானது கோத்தா்கள் தங்களின் குழந்தைகளுக்கு அணிவிக்கம் அணிகலன்களில் ஒன்றாகும். குழந்தை பிறந்து மூன்று அமாவாசை முடிந்தவுடன் பிறை பார்த்து அன்று அக்குழந்தைக்கு காது குத்தும் சடங்கு செய்வா். அச்சடங்கில் அணிவிக்கும் அணிகலனை கோத்தி கடுக்கு என்று அழைப்பா். இதனை ஆண் மற்றும் பெண் என இருபாலர் குழந்தைகளுக்கம் அணிவிப்பா். இக்கடுக்கானது இரும்பு மற்றும் செம்பு ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டிருக்கும்.

அல்பனாய்க்

      அல்பணாய்க் என்பது கோத்தரின பெண்கள் தங்களின் தலை முடிக்கு பயன்படுத்தும் ஊசியாகும். இவ்வூசியானது வெள்ளி மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும். வெள்ளியில் சிறிய தட்டு வடிவம் செய்து அதில் இரண்டு பக்கங்களிலும் பித்தளைக் கம்பியால் கூா்மையாக செய்து அதனை வளைத்து மீண்டும் அதன் மேல் வெள்ளி தட்டினை வைத்து பற்ற வைத்து ஊசி செய்து பயன்படுத்துகின்றனா். இவ்வூசியானது இருவகை உண்டு. ஒன்று வலது பக்கமாகவும் மற்றொன்று இடது பக்கமாகவும் குத்தி கொள்வா். இவ்விரண்டில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் காணப்படும்.

வளையல் (வெலாக்கு)

      பெண்கள் கையில் அணியும் ஆபரங்களில் ஒன்று வளையல். இதனை கோத்தா்கள் தங்கள் மொழியில் வெலாக்கு என்று அழைப்பா்.  இதனை வெள்ளி, பித்தளை மற்றும் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி தாங்களே தயாரித்துக் கொள்கின்றனா். இவ்வளையல்களை அணிவதன் நோக்கம் என்று நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்று கூறுகின்றனா்.

கையில் கட்டும் காப்பு (கக்கோள் நார்)

      கக்கோள் நார் என்பது மற்ற இன மக்கள் கையில் அணியும் காப்பு போன்ற வடிவத்தை ஒத்திருக்கும். வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் மணிகளை நூலில் கோர்த்து  கைகளில் கட்டிக்கொள்கின்றனா். இது பெண்கள் அணியும் அணிகலன்களில் ஒன்றாகும். இதனை கைகளில் அணிவதால் தீய சக்திகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றனா். குறிப்பிட்ட நாட்கள் என்று கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லா நாட்களிலும் இதனை அணிகின்றனா்.

கனுமோதிரம்

      கோத்தர்கள் விரலில் அணியும் அணிகலனான மோதிரத்தை கனுமோதிரம் என்று கூறுகின்றனா். இதனை வெள்ளி அல்லது பித்தளை போன்ற உலோகத்தால் ஆன மோதிரங்களை தயாரித்து அணிந்துக் கொள்கின்றனா். ஆண் பெண் என இருபாலரும் அணியும் அணிகலன்களில் இதுவும் ஒன்றாகும்.

குழந்தைக்கு கட்டும் நூல்  (வெய் நார்)

      கோத்தா்கள் பிறந்த குழந்தைக்கு அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் சடங்கு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர்.  அச்சடங்கில் வெள்ளிக் காசில் சிறிய துளையிட்டு வெண்மை நிற நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுகின்றனா். இதனை வெய் நார் என்று தங்கள் மொழியில் கூறுகின்றனா். இவ்வாறு வெள்ளிக் காசினை குழந்தைகளுக்கு கட்டுவதன் மூலம் தீய சக்திகளால் ஏற்படும் தீங்கானது தடுக்கப்படும் மற்றும் குழந்தை எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகின்றனா்.

காசு மாலை

      கோத்தா் இன மக்கள் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்றாக காசு மாலை கருதப்படுகிறது. திருமண பெண்கள் அணியும் வழக்கம் கொண்டுள்ளுனா். மேலும் சிறப்பு நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களில் கட்டாயம் அணியக்கூடிய ஆபரமாகும்.  காசு மாலையானது வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்

மேக்கைவள்

      கோத்தரின பெண்கள் தங்களின் முழங்கைக்கு மேல் அணியும் காப்பு போன்ற அணிகலனுக்கு மேக்கைவள் என்று கூறுவா். சுப நாட்களில் அணியக்கூடிய அணிகலன்களில் இதுவும் ஒன்றாகும். இது வெள்ளியில் செய்யப்பட்டிருக்கும்

கீக்கைவள்

      கீக்கைவள் என்பது முழங்கைக்கு கீழ் அணியும் ஒரு வகையான ஆபரணம் ஆகும். இது வெள்ளி மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருக்கம்.   இது சற்று தடித்து கடினமாக காணப்படும். இவ்வாறு செய்யப்பட்ட அணிகலன்களையே இம்மக்கள் அணியும் வழக்கம் கொண்டுள்ளனர்.

வெள்ளிக் காப்பு

     குழந்தை பிறந்தவுடன் தீட்டு அனைத்தும் கழித்துவிட்டு குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரும் சடங்கின் போது வெள்ளியால் செய்யப்பட்ட காப்பினை குழந்தையின் கழுத்தில் அணிவிப்பா். இந்தக் காப்பானாது  குழந்தையின் கழுத்து மற்றும் கால்களில் அணிவிக்கும் வழக்கம் கொண்டுள்ளனா்.

கம்மல் (காக்கஜ்)

      கோத்தா்கள் காதில் அணியும் அணிகலனை காக்கஜ் என்று தங்கள் மொழியில் கூறுவா்.  பிறந்த குழந்தைக்கு முதலில் காது குத்தும் சடங்கின் போது கடுக்கன் அணிவிக்கும் வழக்கம் கொண்டுள்ளனா். அதனை கோத்திக் கடுக்கு என்று கூறுவா். அதன் பின்பு காதில் அணிவிக்கும் கம்மலின் பெயா் காக்கஜ் ஆகும்.

செண்டு நார்

      செண்டு நார் என்பது ஆண்கள் அணியும் ஒரு வகையான அணிகலன் ஆகும். செண்டு நார் என்பது பூ நூல் ஆகும். இதனை செய்வதற்கு ஒன்பது வகையான மூலிகைச் செடியினைப் பயன்படுத்தி ஒரு அமாவாசை இரவன்று இறைவனை வணங்கி அந்த ஒன்பது வகையான மூலிகை இலையினை கையில் கசக்கி, அவற்றை வெள்ளியை உருண்டையாக உருக்கி அதில் சிறிய துளையிட்டு அதில் வைத்து மூடிவிடுவா். பின்பு அந்த சிறிய துளையில் வெள்ளை நிற நூலில் கோர்த்து அதனை உடம்பில் பூ நூல் போன்று அணிந்து கொள்கின்றனா். இந்த பூ நூல் செய்யும் சடங்கில் பெண்கள் கலந்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் செண்டு நார் என்பது புனிதமானதாக கருதப்படுகிறார்கள்.

கருகமணி

      கருகமணி என்பது கோத்தரின மக்களின் தாலி வகையாகும். திருமணம் ஆன பின்பு பெண்களை மாமியார் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள் அங்கு பெண்ணிற்கு பாரம்பரிய கொண்டை போடும் சடங்கினை செய்வா் பின்பு மணமகனின் தாயானவா் மணப்பெண்ணின் கழுத்தில் கருகமணியை அணிவிப்பா்.

மெட்டி, கொலுசு

      திருமணம் ஆன பின்பு அணியும் அணிகலனாகும். இதனை செய்யும் முறையானது வெள்ளியை நெருப்பில் இட்டு உருக்கி தேவையான வடிவத்திற்கு அதனை வடிவித்து மெட்டி மற்றும் காற் சலங்கையான கொழுசினை தாயரிக்கின்றனா்

முடிவுரை

      கோத்தர்கள் தாங்கள் அனையும் ஆபரங்கள் அணைத்தையும் தாங்களே செய்யும் திறமைப் பெற்றவா்கள். இவா்களின் பாரம்பரிய ஆபரணமாக வெள்ளி மற்றும் செம்பு போன்றவற்றில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆபரணமும் நம்பிக்கைக்காக அணிகின்றனா்.  அனைத்து ஆபரங்களும் அமாவாசை இரவு அன்று தான் செய்வார்கள். கோத்தர்களின் கடவுளான அய்யனோர், அம்மனோர் இரு கடவுளையும் அமாவாசை அன்று இரவு இறைவனை வணங்கி வழிப்பட்டுவிட்டு ஆபரணம் செய்யும் வேலையை துவங்குவா். இவ்வாறு தாங்கள் அணியும் ஆபரணத்தை செய்து அணிகின்றனா். மேற்கூறப்பட்ட அனைத்து அணிகலன்களும் கோத்தர்களின் பண்பாடு சார்ந்த அணிகலன்களும் ஆகும்.

தகவலாளா் பட்டியல்

  1. கொசல்யா மாதி ., வயது 45., கீழ்க்கோத்தகிரி கோக்கால்.
  2. கம்பட்ராயன்., வயது 56., கீழ்க்கோத்தகிரி கோக்கால்.
  3. சுலோட்சனா., வயது 40., கீழ்க்கோத்தகிரி கோக்கால்.
  4. மாதியம்மாள்., வயது 60., கீழ்க்கோத்தகிரி கோக்கால்.
  5. வித்ரமாதி., வயது 67., கீழ்க்கோத்தகிரி கோக்கால்.

புகைப்படங்கள்