ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

மறுபக்கம் புதினத்தில் பனைத்தொழில் சார் பண்பாட்டு அசைவியக்கம் (Cultural Changes of Palm Industry in Marupakkam Novel)

திருமதி சு.வினோதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் -05 27 Jul 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

     தொன்றுதொட்டு குழுக்களாக வாழ்ந்து வரும் மனித சமுதாயத்தின் பண்பாடு கால மாற்றத்தில் பல அசைவுகளுக்கு (மாற்றங்களுக்கு) உள்ளாகின்றன. அந்த வகையில் பொன்னீலன் படைத்த மறுபக்கம் புதினம் நாஞ்சில் நாட்டு நாடார், சாணார்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பனைத்தொழில் சார்ந்த பண்பாட்டு அசைவுகளைப் பதிவு செய்துள்ளதோடு அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளதுஅது மட்டுமின்றி பனைத்தொழிலோடும் பனைபடு பொருளோடும் அம்மக்கள் இரண்டறக் கலந்து வாழ்ந்த மேன்மையும் அழகுற காட்டப்பட்டுள்ளது. நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பண்பாட்டு அசைவியக்கத்திற்கு உள்ளாக்கப்படுதலை ஆய்வு செய்வது பண்பாட்டு அசைவுகள் சார்ந்த காரணங்களுக்கான படிநிலைகளைக் கண்டறிவதற்கான முன்னோட்டமாக அமையும் என்ற அடிப்படையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Abstract:

        The culture of human society living in interconnected groups undergoes many changes over time. On the other hand, Ponneelan's  Novel Marupakkam has recorded the cultural changes related to the palm industry which is the livelihood of the Sanars, Nadars and has mentioned the reasons for it. The superiority of that people’s life with palm industry and palm products is also shown beautifully. This study is based on the study related to the people’s livelihood into cultural apathy can be a preliminary to find the steps for the causes of cultural movements.

திறவுச் சொற்கள்

     பண்பாட்டு அசைவுகள், பதநீர், கூப்பனி, நீராளம், கள், வீறைக் கருப்பட்டி, பத்திரகாளியம்மனின் பால், வரிக்கொடுமை, பனைத்தொழிலை அழித்தல்

Key Words

     Cultural changes,  Koopani, Neera, Neeralam, kall, Palm Jaggery, Milk of Pathirakali amman, High tax cruelty.

முன்னுரை

      மனித சமுதாயம் தோன்றி குழுக்களாக வாழக் கற்றுக் கொண்ட நிலையில்,  தான் வாழும் மண் சார்ந்த பண்பாட்டை அவை உருவாக்கிக் கொள்கின்றன. அவ்வாறு அவை பேணிய பண்பாடு கால மாற்றத்தில் சில மறைகின்றன, சில மாறுகின்றன, சில அரசியல் ஆதிக்க அதிகார காரணிகளால் அப்புறப்படுத்தப்படுகின்றன. அத்தகைய பண்பாட்டையும் அவற்றை மாற்றத்திற்கு உள்ளாக்கிய காரணிகளையும் பதிவு செய்வது சமுதாய ஆய்வின் தற்காலத்திய தேவையாகின்றது. அதன் அடிப்படையில் படைப்பாளர் பொன்னீலன் நாஞ்சில் நாட்டு மக்களின் பண்பாட்டையும் பண்பாட்டு அசைவியக்கங்களையும் தனது மறுபக்கம் புதினத்தில் பதிவு செய்துள்ளார். அத்தகைய பதிவின் அடிப்படையில் நாடார்களின் பூர்வீகத் தொழிலான பனை விளைவும் அதன் பயன்பாடு அத்தொழில் சார் மக்களின் வாழ்வியல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு அசைவியக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.   

பண்பாடு ஒரு பார்வை

      பண்பாடு என்பது மனிதன் தோன்றிய காலம் தொட்டு அவனது அறிவு, அனுபவத்தின் அடிப்படையிலான திருந்திய வாழ்க்கை முறையிலிருந்து உருவாவது. “பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்ப்படுதல் அல்லது திருந்துதல்.” “பண்பாடு பல பொருட்கு உரியதேனும், நிலமும் மக்கள் உள்ளமும் பற்றியே பெருவழக்காகப் பேசப்பெறும். இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும்”. 1

            “Culture or civilization taken in its wide ethnographic sense, is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society” (E.B.Tylor, Primitive culture, 2 Vols(Newyork: Harper & Row, 1958),P.1.originally published in 1871.)2

      மக்கள் தலைமுறை தலைமுறையாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்கங்களும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும். அத்தகைய பண்பாடு கால மாற்றத்தாலும் சூழலாலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகும். அதனைப் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்னும் தொடர் விளக்கும்.

பண்பாட்டு அசைவுகள்

      ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் நெடிய வாழ்க்கைப் பயணத்தில் பண்பாட்டைப் புரிந்து கொள்வதிலோ செயல்முறைப்படுத்துவதிலோ கொண்டு செலுத்துவதிலோ ஏற்படும் மாற்றங்களையே பண்பாட்டு அசைவுகள் எனபர் ஆய்வாளர்கள். “தமிழர் பண்பாடு என்றும் நிலையானவை அன்று. அவை கால ஓட்டத்திற்கேற்ப இடத்திற்கேற்ப பொருளாதாரத்திற்கேற்ப பெரும்பாலும் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது என்பதே பண்பாட்டு அசைவுகள். பல படையெடுப்புகளாலும் பல இனங்களின் குடியேற்றத்தாலும் நாம் எவ்வாறெல்லாம் மாற்றப்பட்டுள்ளோம், நம் பழக்கவழக்கங்கள் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளது? நம் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் சாட்சியுடன் தெரிந்து கொள்ள முடிகிறது” என்ற பதிவு பண்பாட்டு அசைவுகள் ஏற்படுவதற்கான காரணிகளைச் சுட்டுகின்றது.3

மறுபக்கம் - அறிமுகம்

      ‘மறுபக்கம்’ என்னும் புதினம் கம்யூனிச சிந்தனைவாதியும் நாஞ்சில் நாடான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தைத் தனது பூர்வீகமாகக் கொண்டவருமான படைப்பாளர் பொன்னீலனால் எழுதப்பட்டது. 1982-ல் மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற மீனவர்களுக்கும் நாடார் சமுதாயத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மதக்கலவரத்தின் அடிப்படையிலான கதையை மையமாகக் கொண்டது. 18,19-ம் நூற்றாண்டுச் சமூக மோதல்களின் தொடர்ச்சியைப் பதிவு செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்ட இப்புதினத்தில் அன்றைய மக்களின் பண்பாட்டு சமூக அசைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பனைத்தொழில் செய்யும் மக்கள் அவர்களின் பண்பாடு மற்றும் பண்பாடு சார்ந்த அசைவியக்கங்கள் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. அப்பதிவுகள் இன்றைய பண்பாட்டு சமுதாய நிலையைப் புரிந்து கொண்டு ஆய்வு செய்வதற்குப் பெரிதும் உதவும்.

பனைவிளைவு சார் வாழ்வியல்

      மறுபக்கம் புதினம் பனையும் பனைத்தொழிலும் அழிகின்ற நிலையீல் உள்ளதைப் பதிவு செய்கிறது. பனைத்தொழில் திருச்செந்தூர் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற மாநகரங்கள் சார்ந்த ஊர்களில் வாழும் நாடார் இனத்து மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியுள்ளது. தேரி நிலத்தின் முக்கிய அடையாளமாக அமைவது பனைமரம் ஆகும். இம்மரங்கள் அதிகமாய் உள்ள பகுதி தேரி நிலப்பகுதி தான். நெருக்கமாக வளர்ந்து நின்று காடு போல் காட்சி அளித்த்தால் ஆங்கில அரசின் ஆவணங்கள்பனைமரக்காடுஎன்றே இப்பகுதியைக் குறித்துள்ளன.4 பனை மரத்தின் வேரிலிருந்து உச்சி வரை மருத்துவ பயன்பாடுடையதாகவும் உணவுப்பொருளாகவும் உணவு உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் புழங்கு பொருட்களாகவும் பயன்பட்டு வருகின்றது.

மக்களின் ஆகாரமாகப் பனைபடு பொருட்கள்

     பனை மரங்களோடு தங்களது வாழ்வியலைப் பிணைத்துக் கொண்ட மக்கள் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களையே ஆகாரமாக உண்டதாகப் பொன்னீலன் கூறுகிறார். பதநீர், கூப்பதநீர், காணக்கூழ்ப்பதநீர், கருப்பட்டி, வீணிக்கருப்பட்டி, கள், நீராளம், நுங்கு, பனங்கிழங்கு, தவுன், போன்ற பொருட்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கும் ஆகாரமாகப் பயன்பட்டுள்ளது.

பழைய காலங்கள்ல எங்க வீடுகள்ல இது மாதிரிப் பண்டங்கள் தான் இருக்கும்!. இப்பனை ஏத்து அழிஞ்சி வாரதுனால, இதுவும் அரிதாப் போச்சி” சாப்பிடுங்க. உடம்புக்கு ரொம்ப நல்லது”

பதநீரை உண்ணும் முறை

      பனையிலிருந்து கிடைக்கும் பதநீர் மிகவும் குளிர்ச்சியானது. அதனை அம்மக்கள் உண்ணும் முறைகளைப் பொன்னீலன் மறுபக்கம் நாவலில் பதிவிட்டுள்ள விதம் அதனை அம்மக்கள் ரசித்து அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்த வாழ்க்கை முறையைப் பதிவு செய்துள்ளது.

பதநீரிலிருந்து கருப்பட்டி தயாரித்தல்

      பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களுள் கருப்பட்டியின் பங்கு சிறப்பானது. பொன்னீலன் மறுபக்கம் புதினத்தில் கருப்பட்டி செய்முறையை அப்படி அப்படியே பதிவிட்டுள்ளார். பதநீரைப் பானைகளில் ஊற்றிச் சுண்டக் காய்ச்சிச் சிரட்டைகளில் வார்த்து அந்தப் பதநீர்க்கூழ் ஆறி இறுகிய பிறகே கருப்பட்டித் துண்டங்கள் சிரட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன என்ற குறிப்பைப் பொத்தையடி முதல் பற்று நாடான் தாணுமாலயப் பெருமாள் என்னும் பாத்திரத்தை அறிமுகப்படுத்துமிடத்தில் விளக்கியுள்ளார்.

பானைகளில் கொதித்துக் கொண்டிருக்கும் பதநீரைத் துடுப்பு மட்டைகளால் கலக்குவதும் இடையிடையே மட்டையைத் தூக்கி முகர்ந்து பார்ப்பதும், மட்டையின் ஒட்டிக் கொண்டிருக்கும் தேன் நிற கூழை விரல்களால் தொட்டு பருவம் பார்ப்பமுதாக, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சற்றுத் தள்ளி குன்று போல் குவிந்து கிடக்கும் காவோலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெட்டுக் கத்தியால் வெட்டி அடுப்புக்குப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். பதநீர் பக்குவப்பட்டு இறுகும் மணம் மூக்கில் அடிக்கிறது. ஏட்டி தங்கப்பூ, சிரட்டைகளைக் கழுவி மண்ணுல பரப்பு, சீக்கிரம்…. லேளா தீயக் கறையுங்க. பருவம் வந்திற்று. பானைகளை இறக்கி வேகமாக் கிண்டுங்க”

நீராளமும், கள்ளும்

      நீராளம் என்பது பதநீரின் ஒரு வகை. பதநீர்ப்பானைகளில் சுண்ணாம்புத் தடவாமல் பதநிர் எடுத்தால் அதுவே நீராளம். அதையும் அன்றே எடுக்காமல் விளையப்போட்டால் அதுவே கள்ளாகின்றது என்றும் கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் பொன்னணைஞ்சான் என்னும் பனையேறியின் விளக்கத்தின் அடிப்படையில் நீராளம், கள் பற்றிய செய்திகள் பதிவாகின்றன

      “நீராளம்னா சுண்ணாம்பு தடவாத பயினி. பல மருந்துகள கிழியாக் கட்டி உள்ளப் போட்டிருப்போம். போதை இருக்காது. உடம்புக்கு நல்லது. தம்பி! சுண்ணாம்பு தடவாத பயினியை விளையப்போட்டாத்தான் அது கள்ளாகும். அதிக போதை வேணும்னா சில சரக்கு சேர்க்கணும்.  

கூப்பனி செய்முறை

      பதநீரைப் பதப்படுத்தி செய்யப்படும் ஓர் உணவுமுறைக்குப் பெயர்தான் கூப்பதநீர். பெரிதும் மருத்து குணம் நிரம்பிய இவ்வுணவு பனை சார் மக்கள் விளைவுப்பொருள் பதநீரை நன்றாகக் காய்ச்சி முந்திரிப்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு ஆறு மாதம் ஊற வைத்து செய்யப்படுவது. இது பற்றிய குறிப்பும் மறுபக்கம் புதினத்தில் காணப்படுகின்றது.

“இது தான் தம்பி கூப்பனி பயினியக் குறுகக் காய்ச்சி பாகுப்பருவத்தில் இறக்கி, அண்டிப்பருப்பும் சிறுபயத்தம்பருப்பும போட்டு ஆறமாசம் ஊறவச்சது. எடுத்துச் சாப்பிட கரண்டி போல் நறுக்கிய பனை ஓலை இலக்குகளும் அதில் கிடக்கின்றன.”

பனைபடு பொருட்கள்

      பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமின்றி அதன் ஓலை, நார் முதலியவையும் மக்கள் புழங்குவதற்குப் பயன்படும் பொருட்கள் செய்வதற்கு உதவுகின்றன. குறிப்பாக விசிறி, கட்டில், நாற்காலி, அடியோலை எனப்படும் செருப்பு, கடவாப்பெட்டிகள், ஈர்க்குப் பெட்டிகள் மரக்காப்பிள்ளை எனப்படும் விளையாட்டுப் பொம்மைகள் செய்வதற்குப் பயன்படுகின்றன. இச்செய்தி மறுபக்கம் புதினத்தில்

      “பனை ஓலையில் விதவிதமான பெட்டி முடைவாரு. செருப்பு பின்னுவார்ரு. மரைக்காப்பிள்ளை செய்வாரு. இவர் பின்னுற ஈர்க்குப்பெட்டி ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்”

என்று பதிவாகியுள்ளது.

பனைக்குப் பூசை

     தொழில் செய்யும் மக்கள் அனைவருக்கும் செய்யும் தொழில் தெய்வம் தான். அது மரியாதை நிமித்தமான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பனைத்தொழில் செய்யும் தொழிலாளிக்கும் பனை மரம் வைத்திருக்கும் முதலாளிக்கும் அது அவர்களின் குலதெய்வமான பத்திரகாளியம்மன். அவள் கொடுத்த தொழிலைக் காராம் பசு கற்பகத்தரு, பத்திராளியம்ம பாலு என்றெல்லாம் மரியாதைக்குரிய தொழிலாக எண்ணுவது அவர்களின் நம்பிக்கை. எனவே பனை மரத்திற்கான பூசை என்பது பலியிடலோடு (சேவல்) வெகு விமரிசையாக நிறைவுறுகிறது. அப்பூசையும் பூசாரியால் செய்யப்படுவதில்லை. அப்பனையிலேறும் பனையேறியான சாணார்களாலெ செய்யப்படுகிறது என்ற குறிப்பு மறுபக்கம் புதினத்தில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பனை மூட்ல ஒருத்தர் குனிஞ்சி நின்னு ஒரு மடக்குப் பட்டையில பழம், வெத்தல, பாக்கு, எல்லாம் படைச்சிக்கிட்டிருக்கார். கிழக்கு முகமாப் பனையில ஒரு பூமாலை கட்டியிருக்கு. பனை மூட்டுல ஒரு கலயம் கள்ளிருக்கு. பக்கத்து ஆள் வச்சிருந்த கருஞ்சேவலை வாங்கி, கழுத்த்த் திருகி, தலையை வெற்றிலை மேல வைக்கிறாரு பூசாரி. சேவல் துடிப்பு அடங்கினதும், பக்கத்துல நின்னவங்க அதுக்க முடியைப் பின்னி சருகையும் சுள்ளியையும் குவிச்சி தீ வளர்த்து, சேவலைச் சுடுறாங்க. வெந்த கோழியை எடுத்து இன்னொரு பட்டையில வைக்கிறார் பூசாரி. தீக்கங்குகளை ஒரு சிரட்டையில அள்ளி அதுல சாம்பிராணித் தூள் தூவி, பனையையும் படைப்புக்களயும் மூன்று முறை சுற்றிக் கீழே வச்சிட்டு கும்பிடுறாரு. பக்கத்துல நிக்கிறவங்களும் கும்பிடுறாங்க. இது என்ன்னு கேட்டேன். பனைக்குப் பூசை குடுக்கிறோம், பனங்காடு நல்லாருக்கும் என்கிறாரு பூசாரி. அவரும் ஒரு ஏத்துக்கார்ர் என்கிறது நெஞ்சைப் பாத்தாத் தெரியிது”

பத்திரகாளியும் பனையேறிகளும்

      பனையேறும் மக்கள் தங்களின் குலதெய்வமாகப் பத்திரகாளியம்மனைப் போற்றி வந்தார்கள். பனைத்தொழில் அவள் தனது பிள்ளைகளாகிய பனையேறிகளுகளின் வாழ்வாதாரத்திற்காகத் தந்தது என்ற நம்பிக்கையில் பனைத்தொழிலை மிகுந்த பக்தியோடு செய்து வந்தனர். பனைத்தொழிலும் எந்த விதமான உழைப்பையும் பெற்றுக் கொள்ளாமலேயே அவர்களுக்கு அள்ளித்தந்தது என்பதால் வேறு தொழிலை நம்பாமல் பனைத்தொழிலை மட்டுமே நம்பியிருந்தாலும் நிறைவான வாழ்வையே நம்பி வந்தார்கள். பனையைப் பத்திரகாளி தந்த காராம் பசு என்றும் பதநீரைப் பத்ராளியம்மைக்கப்பாலு என்றும் செல்வத்தை அள்ளித்தரும் கற்பகத்தரு என்றும் மதிப்புடன் அடையாளப்படுத்தி வந்தார்கள். பனையேறிகள் பனையின் மீது வைத்த அன்பைப் பொன்னீலனின் மறுபக்கம் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.

“நாங்க பரமசிவன் மக்கள் இல்ல, பத்திரகாளி மக்க. பதநீர்க் கலயத்தைக் கீழே வைத்துவிட்டுக் கட்டைச் செருப்பு டக்டக் என்று அடிக்க நடந்து போய், பக்கத்து மாமரத்தில் கிளிமூக்கு மாங்காய் பறித்து, தன் முழங்கை முனையில் ஓங்கி அடித்து உடைத்துப் பனிக்குள்ளே போடுகிறார். குட்டைப்பனை ஒன்றில் ஏறி, அருமையான கருஞ்சிவப்பு நுங்குக்குலையை அறுத்துக் கைப்பிடியாக இறக்கிக் கொண்டு வருகிறார். நுங்குகளைச் சீவி பெருவிரலால் குடைந்து கலயத்தில் போட்டு, பனை ஓலையில் வால்ப்பட்டை பிடித்து ஆளுக்கு ஒன்னு கொடுத்து அவற்றில் பயினி ஊற்றுகிறார். குடியுங்க, நல்லாக் குடியுங்க, பத்ராளியம்ம பாலு”

பத்திரகாளியிட்ட கட்டளை

     பனைத்தொழில் செய்வோர் சில நம்பிக்கை சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். அவற்றைப் பத்திரகாளியம்மன் இட்ட கட்டளைகளாகவே எண்ணித் தவறாது பின்பற்றுகிறார்கள். பனை மூடு அதாவது பனைமரத்தடியில் வைத்துப் பதநீரை விற்கக்கூடாது என்பதும் அதில் ஒன்று. அதனை மறுபக்கம் புதினம் சேதுவிடம் ஓர் ஏத்துக்காரர் பேசும் உரையாடல் மூலம் பதிவு செய்துள்ளது.

      ச்சீஇது என்ன வேல? பணத்தோட அந்தக் கையைத் திரும்பி மடக்குகிறார் ஏத்துக்காரர். நான் பழைய ஆளய்யா, பனை மூட்ல வச்சிப் பயினி விக்கப்படாது. விரும்பினவியளுக்கு வயிறு முட்ட குடுக்கணும். பத்ராளியம்ம எங்களுக்கு இட்ட கட்டளை…”

நாடார்களின் பிரிவுகள்

திருமாலுக்கும் சப்த கன்னியருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைத் திருமால் பத்திரகாளியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்ல பத்திரகாளி அமைத்துக் கொடுத்த பனைத் தொழிலில் ஈடுபட்டு ஏழு பேரும் சீரும் சிறப்போடும் வளர்கின்றனர். இந்நிலையில் காவிரியில் வெள்ளம் வர சோழன் கரையடைப்பதற்கு பத்திரகாளியின் மக்கள் எழுவரை அழைக்கின்றான். அவர்கள் மறுக்கவே அவர்களுள் இருவரை யானையின் காலால் தலையை இடறச் செய்து கொன்றுவிடுகின்றான். எஞ்சிய ஐவரே நாடார் இனத்தின் ஐந்து பிரிவினர். இதனை

“ஐந்து கிளைச்சாதிகளின் படிநிலையை மையமிட்டதாகவே நாடார்கள் வாழ்வு அமைந்துள்ளது. இவர்களின் ஐந்து கிளைச்சாதிகளான கருக்கு பட்டையர், மேல் நாட்டார், நட்டாத்தி, கொடிக்கால், கள்ளச்சாணார் ஆகிய பிரிவுகளில் கள்ளச்சாணாரே தாழ்ந்தவர்.” 5 என்ற பதிவு குறிப்பிடுகிறது

     நாடார்களின் ஐந்து வகை பிரிவுகளில் நாடாரே பனை மரத்துக்குச் சொந்தக்காரர். சாணார் என்பவர் பனையேறி. இவ்வேறுபாட்டை மறுபக்கம் புதினம் கீழ்வருமாறு பதிவு செய்கிறது.

நாடாக்கமாரா? அப்படித் தெரியல்லியேவே. எங்கப் பக்கமெல்லாம் அவாள் ஒரு மாதிரியா….அவிய சாணாமார்! பன ஏறுவாவ. நாங்க எங்க நாட்டையே ஆண்ட பரம்பரை…”

பனையேறியின் அடையாளம்

     பனையேற்றம் கடுமையான தொழில். பனை மரத்தைச் சுற்றி சிராய்கள் நிறைந்திருக்கும். அதில் ஏறுவோரின் உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு உண்டாகும்.  பனை மரத்திலிருந்து தவறி விழும் ஏற்றுக்காரர்களின் கை கால் எலும்புகள் நசுங்கிப்போகும். அத்தகு கடுமையான பணி என்பதால் அவர்களின் உடல் இறுகிக் காணப்படும். மேலும் சிராய்ப்புகள் நிறைந்த பனையில் ஏறுவதால் நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் காய்ப்பாகியிருக்கும். இக்குறிப்பு மறுபக்கம் புதினத்தில்

“ஆறடி உயரம். மேல் றோக்கி முறுக்கின மீசை. எடுப்பான தலைப்பாகை, அதன் மேலே தளைநார்க்கிரீடம். பனையில் உரசி உரசிக் காழ்ப்பேறிப் போன விரிந்த நெஞ்சு, ஒடுங்கின வயிறு, தாறு பாய்ச்சிக் கட்டின இடுப்பில் பச்சை பெல்ட், ஒரு பக்கத்தில அரிவாள் பெட்டி, நீண்ட கையில மாலைப்பதினி நிறைந்த கலயம், இறுகித் திரண்ட நீண்ட கால்கள்”

என்று பதிவாகியுள்ளது.

பனையின் தொழில் சார்ந்த பண்பாட்டு அசைவுகள்

     பத்திரகாளியம்மை கொடுத்த கொடை என்று எண்ணி வந்த பனைத்தொழிலாளர்களுக்கு நாளடைவில் ஏற்பட்ட நாகரீக கலாச்சார மாற்றமும், கள் குடிப்பது தவறு என்று கூறி சட்டம் போட்டு பனை மரங்களை அழித்த அரசியல்வாதிகளின் சூதும், நாட்டில் வழக்கமாக்கப்பட்ட வரி விதிப்புகளின் கடினத்தன்மையும், பனைத்தொழில் பெரிதும் சரிய காரணமாகியது.

 “ஒரு காலத்ததுல இது ரொம்ப உயர்வான தொழில். அன்னு பனை என்கிறது கேட்டதெல்லாம் தரக்கூடிய கற்பக விருட்சம். சாணாமார் ஆண்டுக்கு ஒருநாள் பூச செய்யக்கூடிய காராம்பசு….அப்ப அது இழிவாப் போச்சி…இன்னும் பத்து வருசம் போனா பனையும், பயினியும் இந்த உலகத்தை விட்டே போயிரும்”

என்ற மறுபக்கம் புதின வரிகள் ஏற்றக்காரர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

நாகரிக மாற்றம்

     பனைத்தொழில் சரிவதற்கான காரணங்களுள் பெருகி வரும் நாகரிக மோகமும் ஒன்று. பனைத்தொழில் செய்து வருவோரின் பிள்ளைகள் கல்வி கற்றுப் பெரிய அதிகாரிகளாக மாறிய நிலையில் அவர்கள் தங்கள் பெற்றோர் பனைத்தொழில் செய்வோர் என்பதை வெளியில் சொல்லத் தயங்கும் நிலையில் தங்கள் பெற்றோரின் பனைத்தொழிலில் தாங்கள் ஈடுபடுவார்களா? என்றால் அது கேள்விக்குறியாகிவிட்டது. இதனை

      “இப்ப அதெல்லாம் போச்சி. பொன்னணைஞ்சான் பெருமூச்சு விடுகிறார். என் மகன் இங்சினியரிங் காலேசில படிச்சிக்கிட்டு இருக்கான். ஆனா தன் தகப்பன் ஒரு ஏத்துக்காரன் என்னு சொல்ல அவனுக்குக் கொறச்சல். வெவரந் தெரியாம ஒருநாள் அவனப் பாக்க்க் காலேசிக்கே போயி நான் பட்ட பாடு… கடவுளே…”  

என்னும் மறுபக்கம் புதின வரிகள் புலப்படுத்துகின்றன.

வரிக்கொடுமை

     பனைத்தொழில் செய்வோர் அதனைத் தொடர்ந்து நல்ல முறையில் செய்ய முடியாமல் போனதற்கு திருவிதாங்கூரை ஆட்சி செய்த இராசாக்களின் வரி விதிப்பும் ஒரு காரணம்.

      “அது அன்னிக்கி ஆட்சி செய்த ராசாமார் பண்ணின கொடுமை தம்பி. பெருமூச்சு விடுகிறார் பொன்னணைஞ்சான். அநியாய வரி போட்டு, எங்கள அன்னிக்கிக் கொன்னானுவ…

ஏட்டோலையும் தண்டனையும்

     மறுபக்கம் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சமுதாயம் திருவிதாங்கூர் இராசாக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்ட சமுதாயம். அவர்கள் இடும் கட்டுப்பாடுகள் மக்களால் ஏற்க இயலாத அளவு கடுமையாக உள்ளன. பனை வைத்திருப்போர் அரசிற்கு ஏட்டோலைகளை இலவசமாக வழங்க வேண்டும். அவ்வாறு தர மறுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்களின் உழைப்பு சுரண்டப்படும் பணிக்கு ‘ஏட்டோலை ஊழியம்’ என்று பெயரிட்டு சாணார்களைச் செய்யப் பணித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் பட்ட துன்பம் மறுபக்கம் புதினத்தில் பதிவாகியுள்ளது.

      “நெடுங்குளம் மூத்த உள்ளைக்க கடுமையான உத்தரவாம், நாடார் சொல்லியனுப்பியிருக்காரு. ஒன்பது கட்டு ஏட்டோலை நம்ம கணக்கில இன்னும் பாக்கி நிக்குவாம். நாள மறுநாள் கட்டாயம் கொண்டு போணுமாம்.” “போன திங்கக்கிழமை தானே இருபத்தி நாலு கட்டு கொண்டு சேர்த்தேன். இன்னும் ஒன்பது கட்டா? என்னைய மட்டம் இப்படி உயிர எடுக்கானே. நூறு நூறு வச்சி நறுக்கி ஓட்டை போட்டு, மஞ்சத்தடவிக் காய வச்சி, முத்தாரம்மா, பனைக்குப் போகாம முழு நாளும் நறுக்கினாலும், மூனு கட்டுக்கு மேல தேறாதே. நாப்பத்தொரு பனை. அந்தியும் வெள்ளனையுஞ் சீவணுமே! ஓலை கொண்டு போகாட்டா முதுவுல சவுக்கடி விழுமே! அதிகாரிகளைக் கூடப் பகைச்சிக்கிடலாம், நாடானப் பகைச்சா ஊர்ல வாழ முடியாதே”

வரிவிதிப்பால் பாண்டிக்குத் தப்பிச் செல்லல்

     திருவிதாங்கூர் இராஜாங்கம் பனைத்தொழில் செய்வோருக்குத் தாங்கள் ஈட்டும் பொருளை விடவும் அதிகமான வரி விதித்தனர். இறந்தோருக்கு வரி, ஏறும் பனைக்கு மட்டுமின்றி, ஏறாத பனைக்கும் வரி, விவசாயம் செய்யப்படாத நிலங்களுக்கு விவசாயம் செய்ததாக வரி என்று அநியாய வரிகள் விதிக்கப்பட்டதால் மக்கள் நில புலங்களை விட்டுவிட்டுப் பாண்டிக்கு ஓடிப் போகிறார்கள். பாண்டி என்பது தூத்துக்குடி மாவட்டம். அங்கு திருவிதாங்கூர் இராசாவின் அதிகாரம் செல்லுபடியாகாது என்பதால் மக்கள் பாண’டிக்கு ஓட நினைக்கிறார்கள்.  ”பாண்டிக்கு ஓடிவிட்டால் என்ன? காவல்கிணத்துக்கு அந்தப்பக்கம் இந்த ராசாவுக்கு அதிகாரமில்லையே”

என்று பதிவு செய்துள்ளது.

கள் தீது மது?

     திருவிதாங்கூர் அரசிடமிருந்து தமிழகத்தின் கையில் நாகர்கோவில் பகுதி வந்த பிறகு அரசாங்கம் மதுவை ஊக்குவிக்கும் வகையில் கள் உற்பத்தியை  அழிக்க நினைத்தது. அதனால் ஆயிரக்கணக்கான பனை மரங்களை அழித்தொழித்தது. வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் மனப்பதிவு மறுபக்கம் புதினத்தில் துயரமாகப் பதிவாகிளுள்ளது.

“நல்ல கள்ளு சாப்பிட்டா எத்தனையோ நோய் நீங்கும். உடம்பு தேறும். ஆனா, இந்தப் பாழாப் போன அரசாங்கம் காலங்காலமா நாம தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாகக் குடிச்சி வளர்ந்த கள்ளக் குடியாதேன்னு சட்டம் போட்டுத் தடுக்கிறான். ஈரலை எரிச்சி, மனுசனைக் கொல்லுற சாராயம், பிராந்தி வித்து, மக்களக் கொள்ளையடிக்கிறான். காலக்கொடுமை!”

பனைத்தொழிலை அழித்தல்

     பனைத்தொழிலால் கள் உற்பத்தி பெருகி அதனால் மக்களின் நலன் கெடுவதாகப் பிரச்சாரம் செய்த அரசாங்கம் பனை மரங்களை வெட்டியும் இனி வளராதவாறு விஷங்களைத் தெளித்தும் பனைத்தொழிலைப் பூண்டோடு அழித்த்து. இச்செய்தி

“ஆனா நாசமாப் போன அரசாங்கம், இந்தத் தொழில காப்பாத்த எதுவும் செய்யலியே. விஞ்ஞானம் இந்தத் திசைக்கே வரல்லியே. ..காட்ல தானா வளர்ந்து, பாலாப் பொழியிற இந்தக் கற்பக மரத்த வெட்டிற்று. பம்புசெற்று வச்சி, சீமை உரம் போட்டு ...அதுக்கு மேல நஞ்சத் தூவி…. மயிறப்புடுங்குறானுவ…..ச்சீ..”

என்று மறுபக்கம் புதினத்தில் பதிவாகியுள்ளது.

தொகுப்புரை

  • பொன்னீலனின் மறுபக்கம் புதினத்தில் நாஞ்சில் வட்டார நாடார் சமுதாயத்தின் தொழில் சார் பண்பாட்டு அசைவுகள் ஆராயப்பட்டுள்ளன.
  • பனைத்தொழில் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழில் ஆதாரமாக இருந்துள்ளது.
  • பனையின் மூலம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் நாஞ்சில் வட்டார மக்களுக்கு ஆகாரமாகவே இருந்துள்ளன.
  • பனை சார் உணவுப்பொருட்களே அனைவர் வீட்டிலும் உணவுப்பண்டங்களாக இருந்திருக்கின்றன.
  • ஆரோக்கியம் தரும் ஆகாரமாக மட்டுமின்றி நோய் எதிர்ப்பு மருந்தாகவும் திகழ்ந்துள்ளன.
  • பனைபடு புழங்கு பொருட்களும் பெரும்பான்மையாக மக்களுக்குப் பயன்பட்டுள்ளன.
  • காலப்போக்கில் இளைஞர்கள் நாகரிகம் கருதி பனைத்தொழில் செய்யவோ பனைபடு உணவுகளை உண்ணவோ மறுத்துவிடுகின்றனர்.
  • அது மட்டுமின்றி திருவிதாங்கூர் அரசோ வருமானத்திற்கு மீறி வரி வசூலிக்க முயல்கின்றது
  • இந்திய அரசும் பனைபடு பொருளான கள் குடித்தல் உடல்நலத்திற்குக் கேடு என்று கூறி பனை மரங்களை வெட்டி அவை முளைத்திருந்த இடத்தில் விஷத்தைப் போட்டு அதனைப் பெரும்பாலும் அழித்துவிட்டனர்.
  • ஒரு காலத்தில் பத்திரகாளியம்மன் கொடுத்த காராம் பசு என்று பக்தியோடும் மரியாதையோடும் பார்க்கப்பட்டு வந்த பனை மரங்களைத் தொழில் ஆதாரமாகக் கொண்டோரின் எண்ணிக்கை குறைந்து போனது.
  • பண்பாடு மாற்றத்திற்கு உள்ளாக்க்கூடியது என்ற நிதர்சனத்திற்குப் பனைத்தொழிலும் விதிவலக்கல்ல என்ற கருத்தை நிறுவுவதாய் இவ் ஆய்வு அமைந்துள்ளது

அடிக்குறிப்பு

1. பொன்னீலன், மறுபக்கம், ப.94

2. மேலது, ப.119

3. மேலது, ப.98

4. மேலது, ப.94

5. மேலது, ப.439

6. மேலது, ப.96,97

7. மேலது, ப.439

8 மேலது, ப.96

9. மேலது, ப.331

10. மேலது, ப.95

11. மேலது, ப.96

12. மேலது, ப.97

13. மேலது, ப.97

14. மேலது, ப.143

15. மேலது, ப.144

16. மேலது, ப.143

17. மேலது, ப.98

துணைநூற்பட்டியல்

1. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், நாம் தமிழர் பதிப்பகம், 2-ம் பதிப்பு 2018, சென்னை 600005.

2. (Kroeber, A.L., and Kluckjojn,C (eds). Culture A Critical review of concepts and definitions. (Newyork: Random House, 1952)

3. (https://www.goodreads.com/ta/book/show/18371455)

4. டாக்டர் வெ.கோபால கிருஷ்ணன், டாக்டர் மு.கண்ணன், தேரிக்காட்டு இலக்கியங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், முதல் பதிப்பு, மார்ச் 2014, ப -5,6

சென்னை – 600098,

5. பக்தவத்சல பாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு 2021, ப -107, திருச்சி 621310