ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அற இலக்கியங்களில் சமூகப்பின்புலமும் சமயப் பின்புலமும் (Social background and religious background in Ethic literature)

முனைவர் பா.தமிழரசி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி 27 Jul 2023 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்: தனிமனிதன் சமூகத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ முயலும் பொழுது அவன் சமுதாயத்தின் ஓர் அங்கமாகிறான். சமூகத்திலிருந்து எந்தவொரு தனிமனிதனும் வேறுபட்டு வாழ முடியாது. தனிமனிதன் தம் செயல்களையும் கடமைகளையும் செயற்படுத்த வேண்டுமெனில் அவன் சார்ந்துள்ள குடும்பம், அரசு போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் இயங்க இயலாது. சமூகத்தோடு இணையும் பொழுதே தனிமனிதனால் பூரணமாகச் செயல் பட முடிகிறது. களப்பிரரின் ஆட்சியில் சமுதாய மக்களிடையே நெறி பிறழ்ந்த ஒழுகலாறுகள் திகழ்ந்தன. இத்தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டித் தனிமனிதன் திருந்தினால் சமூகம் திருந்தும் என்று சமய நோக்கோடு அறக்கருத்துக்கள் கற்பிக்கப்பட்டன என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைகின்றது.

Abstract: An individual becomes a part of the society when he tries to follow the norms of the society. No individual can live apart from society. In order to perform his duties and responsibilities, he cannot function without interacting with his family, government, etc. An individual can function fully only when he is connected with the society. During Kalaprara's rule, there were no morals among the people of the society. By pointing out such trends, this article is meant to highlight that morals were taught with a religious aim that if the individual changes, the society will change.

திறவுச்சொற்கள் : சமூகப்பின்புலம், சமயப் பின்புலம், அற இலக்கியங்கள், சாதி, மூடநம்பிக்கை

Key words: Social background, Religious background, Ethic literature, Caste, Superstition

அறிமுகம்: தனிமனித ஒழுக்கங்கள் முறையாக இருப்பதே சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்லும் வழிமுறையாகும். தனிமனித ஒழுக்கத்திற்கு இன்றியமையாமை கொடுத்துள்ளனர் சங்க காலத்துச் சான்றோர். தனிமனிதனுடைய உரிமைகளும் கடமைகளும்> சமூகப்பிணைப்பும்> குடும்ப இணைப்பும்> பழக்கவழக்கங்களும்> விருப்பு> வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. (திருக்குறள் நீதி இலக்கியம் ப.49) என்பர் சமூகவியலாளர். அற இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் இயற்கையோடு இயைந்த அறிவுறுத்தலாகக் காணப்படுகின்றன. இவ்வகை அறக்கருத்துகளைத் தனிமனிதன்> இல்வாழ்க்கை> சமூகம்> அரசியல் என்ற நிலைகளில் பாகுபடுத்திக் காணமுடியும்.

அறக் கோட்பாடும் தனிமனித ஒழுக்கமும்:

இலக்கிய உலகில் அறநெறிக் கோட்பாடுகள் சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுகின்றன. மற்றவர்களுக்கு இயன்ற வழியில் எல்லாம் அறம் செய்ய வேண்டும் எனும் அறக் கோட்பாடு களப்பிரர் கால நீதி இலக்கியங்களில் மிக உரத்துப் பேசப்படுகிறது. இஃது சைவ, பௌத்த போதனைகளில் மிகத் தலைமை வாய்ந்ததாகும்.   “சங்க மருவிய காலப் பகுதியில் தோன்றிய அறநூல்களும், சிலம்பு, மேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுட்களும் ஈகையை ஒரே முகமாக வற்புறுத்துகின்றன. செல்வர்களுக்கும், வறியவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு பெருத்து விட்டதை இவை காண்பிக்கின்றன.”

     உழவும், உழைப்பும் அற இலக்கியங்களில் மிக முதன்மையளித்துப் பேசப் பெற்றன. திருவள்ளுவர் உழவு எனும் தலைப்பில் தனி அதிகாரம் ஒன்றையே அமைத்துப் பத்துக் குறட்பாக்கள் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

      சுழன்றும் ஏர்பின் னதுலகம்  - 1031

      உழுவார் உலகத்தார்க் காணி  -1032

      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்  -1033

    எனும் குறள் அடிகள் உழவனையே அடிப்படையாக வைத்துப் பேசப்படுகின்றன. சைன அற இலக்கிய ஆசிரியர் எவரும் உழவிற்கு முதன்மை அளித்த அளவு வணிகத்திற்கு எனத் தனி அதிகாரத்தையோ, மிகுந்த கருத்துகளையோ சொல்லாதது குறிப்பிடத்தக்கது.

     சிறுபஞ்சமூலம் எழுதிய காரியாசன் எனும் தமிழ்ப்பெயர் கொண்ட அறிஞர் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டவர். எக்காரணம் கொண்டும் அத்தொழிலை விடாதவர்.(46): சொர்க்கத்தை எளிதாக உழவரே அடைவர் என்று உழவுத் தொழிலையும், உழவரையும் மிகச் சிறப்பித்துப் பேசுவார்.  (58 64)

     தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்;

     இன்னிலையும் ஈடில் இயல்நிலையும் துன்னி

     அறதறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்

     பிறந்தறியும் பேரற்றலான்.  (சிறுபஞ்சமூலம்.58)

 

     பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோடு

     எடுத்திரந்த உப்பு இத்துணையோடு அடுத்துச்

     சிறுபயம் என்னார் சிதவலிப்பு ஈவார் 

     பெறுபயன்பின் சாலப் பெரிது.  (சிறு.64)

    அறஇலக்கியங்களில் கொடுங்கோன்மை மிகக் கண்டிக்கப்பட்டது. தனிமனித முறைகேடும் மிகமிக கண்டிக்கப்பட்டது. அனைத்துக் கட்டங்களிலும் அறமும், நெறியும் மிக வற்புறுத்தப்பெற்றன. எனவே, உழைப்பில் இருந்தும் உற்பத்தியில் இருந்தும், விலகி, கொள்ளை இலாபம் அடிக்கும் வணிகத் தொழிலோடு தொடர்புபடுத்தல் பிழையாகும்.

துறவறக்கோட்பாடு:

     சங்க காலத்தில் நிலையாமை பற்றிய கருத்துகள் குறைவாகவே பேசப்பட்டுள்ளன. காஞ்சித்திணையிலும் குறிப்பாக மதுரைக் காஞ்சியிலும் இக்கருத்து உரத்துப்பேசப்படுகிறது. துறவு பற்றி விரிவான பேச்சே இல்லை, அதிலும் குறிப்பாக பெண் துறவு நோற்பது பற்றிய குறிப்பே இல்லை, தமிழரைப் பொறுத்தவரை அகவாழ்வுக்கே முதன்மை தந்தனர். எனவே, அவர்களிடையே துறவு பற்றிய கருத்துப் பரவவில்லை. தமிழகத்தில் ஜைனமும், பௌத்தமும் பரவி, காலூன்றிய பிறகே துறவுக் கருத்து ஊடுருவியிருத்தல் வேண்டும். இதனையே சிலப்பதிகாரம் காட்டுகிறது.

  • திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்ட கவுந்தியடிகள்,
  • காதலர், கோவலன் அவல முடிவு தாளாமல் பௌத்தப் பிக்குணியான   மாதவி,
  • காதலுக்கு உடன்படாமல் தாய் சொல்லைக் கேட்டுப் பௌத்தப் பிக்குணியாகும் மணிமேகலை.
  • மூன்று பெண்களும் துறவியானது சங்க மக்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிற பொது இயல்பான நிகழ்வு அன்று.

   “எந்தவிதக் கட்டுப்பாடுமின்றித் தத்தம் விருப்பப்படி ஆடவரும், பெண்டிரும் சேர்ந்தும், பிரிந்தும் மாறியும் வாழ்ந்த பழைய சமூக அமைப்பில், ஒருவர் ஒருத்தரைத் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற சமுதாயச் சடங்கு வந்ததின் விளைவாகச் சமூகத்தில் பரத்தமை தோன்றியது என்பார் ஏங்கல்ஸ்.”1 தமக்குரிய கணவரையும், மனைவியையும் தாமே தேர்ந்தெடுத்து வாழும் களவு வாழ்க்கையும், அதனைத் தொடர்ந்து அவர்களே திருமணம் செய்து வாழும் கற்பு வாழ்க்கையும் பழைய தமிழ் சமூகத்தில் இருந்தன. காதல் நெறியைத் தடையில்லாமல் அனுமதித்த சமுதாயத்தில் திருமணம் என்ற கட்டுத்திட்டம் வருகிற போது, தோன்றும் ஒரு விளைவுதான் துறவறம் என்று கருத வேண்டி உள்ளது. இக்கருத்தின் விளைவை மணிமேகலையில் சோழ அரசனின் மகன் உதயகுமரன் காதலிக்கிறான். மணிமேகலையும் காதலிக்கிறாள் ஆனால், தாய் மாதவி குறுக்கிடுகிறாள். மகளுக்கு அறிவுறுத்துகிறாள். இதன் விளைவாக, மணிமேகலை காதலில் வெற்றி பெற முடியாத சூழலில் துறவியாகிறாள்.

     இல்லறத்தில் பெற்றோரால் இணைத்து வைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வெற்றி பெறுவதும் நிகழ்கிறது. சேர்ந்து வாழ முடியாமல் தோற்பதும் நிகழ்கிறது. இவ்வாறு குடும்பத்தில் தோல்வி கண்டோர் குடும்பத்தை விட்டு வெளியேறித் துறவியாகின்றனர். இக்கருத்தை வலியுறுத்தும் அவ்வையார் பாடல் (56). (அவ்வையார் அன்று முதல் இன்று வரை.ப. 292)

             பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்

             எத்தாலுங் கூடி இருக்கலாம் - கற்றேனும்

             ஏறுமாறாக இருப்பாளே யாமாயிற்

             கூறாமல் சந்நியாசங் கொள்.

     பண்பற்ற மனைவியோடு வாழ்வதை விடத் துறவியாக வெளியேறுவது நல்லது என அவ்வையார் கணவருக்குச் சொன்ன அறிவுரையாக இப்பாடல் அமைந்துள்ளது. 

     மாதவி துறவு நோற்றதை இப்பின்னணியிலேயே வகைப்படுத்தித் தரும். மாதவி பேரன்புப் பெட்டகமாகத் திகழ்கிறாள். அப்பெட்டகத்தைத் தன் ஐயப் புத்தியால் கோவலன் இழக்கிறான். விடுதல் அறியா விருப்பினராக வாழ்ந்த மாதவி, கோவலன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. விளைவு, மாதவி பௌத்தப் பிக்குணியாகிறாள்.

அரசியல்: 

     “சங்க காலத்தில், மருதநில வாழ்க்கை பிறநிலை வாழ்க்கையிலிருந்து செழிப்படையதாயிருந்தது. இங்குக் குழு வாழ்க்கை அழிந்து, அரசு தோன்றியது. பிற மக்களையும் அரசியலில் இணைத்துக் கொள்ளப் பல போர்கள் நிகழ்ந்தன”2 என்று நா.வானமாமலை குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் நீதி வலியுறுத்தல்:

     மனித சமூகத்தைப் பேணிக் காக்க வேண்டிய இன்றியமையாமை அந்நாட்டு ஆளுவோருக்குரிய கடமை. ஆளப்படுவோர், செங்கோல் ஆட்சியின் கீழ் வாழ்வாரெனில் அவர்களுக்கு எவ்விதமான குறைபாடுகளும் நேராமல் தம் விருப்பப்படி, சுதந்திரப் கோப்புடன் வாழத் தலைப்படுவர். அதனை இழந்து அரசியல் நெறிகளை மீறிய கொடுங்கோன்மையுடைய அரசின் ஆட்சியில் வாழ்வார்களானால் மனிதப் பிறவியே மதிப்பற்ற நிலையடையும்.

     அற்றைக் கால கட்டத்தில் நீதி மன்றங்கள் இருந்திருக்கின்றன. தலை நகரங்களில் அவற்றை ‘அவை’ என்றனர். கிராமங்களில் நீதி எளிதில் வழங்கப்பட்ட இடம் ‘மன்றம்’ என அழைக்கப்பட்டது.

    அரசானது அரண்மனை முன்றிலே நீதிமன்றமாகச் செயல்பட்டதைக் கூறலாம். (பழ.மொ.நா.319) சீர்மையும் கல்வியும், பண்பும் அமைந்த அறிஞர்குழு, பழமொழி நானூறுக் கால நீதிமன்றங்களில் செயற்பட்டது. இதனைக்,

          கல்விக் கலமும்; கட்டுரை வாய்ப்படும் 

          சொல்சில் வேந்தன் அவை காட்டும். (செய்.259) 

எனும் வரிகளின் வாயிலாக அறியலாம்.

    “களப்பிரர்களின் ஆளுமைக்குட்பட்ட அதிகார வரம்பானதால் நிலைகுலைந்த ஆட்சியமைப்பைக் கண்டு விரக்தி மேலிட்ட நிலையில் புலவர் பாடினார் என்று எதிர்வாத புரிதல் பொருந்துவதன்று, ஏனெனில் முன்றுயரையரையனார் ஓர் அரசர் என்று போற்றப்படுவதால் அவர் களப்பிரர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட நில அமைப்பிலே குறு நில மன்னராக இருத்திருக்க கூடும். ஆகையால், எதிர்நிலையாகப் பிரச்சாரத்தைத் தொடர வாய்ப்பில்லாமல் போகவே, ஆதரிக்கும் மனநிலை உடையவராய் பாடல்கள் பாடியிருக்கலாம், இக்கருத்திற்கு அரண் செய்யும் விதத்தில் களப்பிரரின் முன்னூறு ஆண்டுகால ஆட்சியைப் பற்றி உண்மை தரும் சான்றுகளில் முதன்மையான வேள்விக்குடிச்செப்பேட்டு (அடி,11.12) வரிகளால் அறியலாம்.”3

    இவ்வரலாற்று உண்மையால் களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் புலவர்களும், மன்னர்களும் புகழ்ந்து பாடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

பொருளாதாரப் புரட்சி:

      பசியைப் போக்குவதற்காகவே ஒரு காப்பியம் படைக்கப்பட்ட பொருளாதாரப் புரட்சி நிகழ்ந்த காலம் களப்பிரர் காலம் ஆகும். பசியின் கொடுமையைப் பௌத்த நூலான மணிமேகலைக் காப்பியம் எடுத்துக் காட்டுவது போன்று வேறு இலக்கியம் எதுவும் எடுத்துக்காட்டி இருக்க முடியாது.

     குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

     பிடித்த கல்விப் பெரும் பனை விடுஉம்

    நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் 

    பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

    பசிப்பிணி என்னும் பாவி. (மணிமேகலை: பாத்திரம் பெற்ற காதை., 76-80)

   முறையில் அரசு முறைகேடான  அரசை எதிர்த்துக்குரல் எழும்பும் என்பதைத் திருக்குறளில் இடம்பெற்றுள்ள கொடுங்கோன்மை என்ற அதிகாரமும்,  அற இலக்கியம் பலவற்றிலும் இடம்பெற்றுள்ள கொடுங்கோல் அரசர் பற்றிய எதிர்கருத்துகளும் காட்டும்,

    ‘முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று’ என்பது முதுமொழிக்காஞ்சி மதுரை கூடலூர்கிழார்; கூற்றாகும்.

காமம், அறம், இடமாற்றம் :

    திருவள்ளுவர் இன்பத்துப்பாலை அறத்துப்பாலுக்கும், பொருட்பாலிற்கும் பின்னே இறுதியில் வைத்துள்ளார். அதிகாரப் பகுப்பு, இயல் பகுப்பு வள்ளுவரால் செய்யப்படாமல் உரையாசிரியர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உண்டு. ஆனால் பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்தார் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. எனவே, அறம், பொருள், இன்பம் என்ற வரிசையை மேதாவியாகிய திருவள்ளுவரே தீர்மானித்திருக்க வேண்டும் எனினும், அறிஞர்கள் சிலர்; இன்பமும், பொருளும், அறனும் என்றாங்கு (தொல் - களவியல்) எனும் தொல்காப்பியர் களவியல் நூற்பா அடியைக்கொண்டு, திருக்குறள் பால் பகுப்பை இன்பம் - பொருள் - அறன் என்று மாற்ற வேண்டுமென திரு.வி.க கூறியது உண்டு. அறிஞர் மு.வ வும்  திரு.வி.க கருத்தை உட்கொண்டு திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் தம் நூலில் இன்பம் - பொருள் - அறம் என்ற வைப்பு முறையையே பின்பற்றினர். இவ்வைப்பு முறை திருவள்ளுவர் வைப்பு முறையாக இராது என்பது பல்வேறு ஆய்வால் புலனாகிறது.

    சங்க இலக்கியங்கள் காட்டும் சமுதாய அமைப்பும், அறமுறைகளும், சங்கம் மருவிய காலத்தில் அரசியல், பொருளியல், சமுதாயக் காரணங்களால் மாறுதலுக்கு உள்ளாகின்றன. இம்மாற்றம் இயல்பான பரிணாமம் என்பதை விட அயல்நாட்டார் தம் பண்பாட்டுப் படையெடுப்பே காரணம் எனலாம்.

    பொருளை அகப்பொருள், புறப்பொருள் என்று பகுத்தவர்கள், புறத்தே பேசும் புறப்பொருளை முன்வைக்காமல் அகப்பொருளை முன் வைத்ததும் எண்ணத்தக்கது. திருவள்ளுவர் பார்வையில்  தமிழ்ச் சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கிய சூழலில் தமிழரை காதல் மோகத்தில் இருந்தும், பரத்தமைப் பழக்கத்தில் இருந்தும், புலால் போற்றும் போக்கில் இருந்தும், போர் வெறியில் இருந்தும் மீட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருத்தல் இயல்பானதே. இச்சூழலிலேயே காமத்துப்பால் திருவள்ளுவரால் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு இருத்தல் வேண்டும்.

    இக்கருதுகோளைத் திருவள்ளுவருக்கு முற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளும், சமய மரபுகளும், மதக் கோட்பாட்டு நிகழ்வுகளும் உறுதி செய்கின்றன.

    பெண்ணைக் காமப் பொருளாகவும், வாழ்க்கையே காம வாழ்வாகவும், வாழ்க்கையின் முதற்பொருள் அகமாகவும் இருந்திருந்த முன்னைய நிலை, களப்பிரர் காலத்தில் பெரும் மாற்றம் பெற்றதை இக்காலச் சமுதாய வரலாறு எடுத்துரைக்கிறது. சான்றாக, பண்டைய இலக்கணத்திலும், இலக்கியத்திலும் காதல் என்னும் பெயர், காலத்தில் பெறும் அகம் என்பதே முதலிடம் பெற்றிருந்தது. இம் முதலிடத்தைக் களப்பிரர் காலத்தில் அறம் பற்றிக்கொண்டது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வரிசையில் முதலாவது இருந்த இன்பம் கடைசி இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.  

    நாலடியார் எனும் சமண அற இலக்கியத் தொகுப்பு, துறவற இயலை முதலியலாகக் கொண்டு அறத்துப்பாலை முதல் நிறுத்தி, பொருட்பாலை இரண்டாவதாக்கி, காமத்துப்பாலை மூன்றாவதாக அமைத்து, அத்துடன் காமத்துப்பால் முதலியலுக்கு இன்பவியல் என்றே பெயரிட்டது. அன்றியும் அறத்துப்பால் 14 இயல்கள், 140 வெண்பாக்கள் என்றும் அமைய, காமத்துப்பாலில் மூன்றே இயல்களில், 30 வெண்பாக்களில், சுருங்கி விட்டது. காமத்துப்பாலில் இடம் பெற்றுள்ள மூன்று அதிகாரங்களிலும் முதல் அதிகாரம் பரத்தையர் உறவு கூடாது எனக் கூறும் அதிகாரமாகவும், இரண்டாவது அதிகாரம் கற்புடைய மகளிரைப் பாராட்டும் அதிகாரமாகவும் அமைந்துள்ளன. அவை இரண்டும் மெய்யான அகம் பற்றிய இயல்களாக அமையவில்லை. ஏனைய சைன பௌத்த அற நூல்கள் காமத்திற்கு முதலிடமோ, தனியிடமோ கொடுக்கவில்லை.

    இதுவோ அன்னாய் காமத்து இயற்கை எனப் புலம்பிய மணிமேகலை தன்னைச் சுற்றிச் சுற்றி வந்த உதயகுமாரனை ஒதுக்கித் தள்ளி ஏழை மக்களை எடுத்து நிறுத்தும் பொது வாழ்விற்கு வந்து விட்டதை மணிமேகலைக் காப்பியம் மிக அழகாக எடுத்துரைக்கிறது.

சமூகத்தரப் பிரிவில் - சாதிமுறை

    இந்திய - தமிழக வரலாற்றில் சாதியின் ஆதிக்கம் இறுக்கமானது. மனித வர்க்கத்தின் கூட்டுணர்வினைப் பிரிக்க - கூறுபடுத்த உபயோகிக்கப்பட்ட ஆயுதமாகச் சாதியினைக் கருதலாம். “சாதி என்பதைக் குறிக்கிற, காஸ்ட் (CASTE) என்ற ஆங்கிலச் சொல் காஸ்டா (CASTA) என்ற ஸ்பானிஷ் சொல்லிலிருந்து வருகிறது. ‘இனம் குலத்தூய்மை, போன்ற பாரம்பரியப் பண்புகளின் தொகுதி’ என்ற அச்சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம்”.4 சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கும் சொல்லாக ஆரியர்களின் வருகைக்குப் பிற்பட்டதாகவே காணப்படுகிறது.

    ஆரிய இன வருகைக்கு முன்னர், சாதியைப் பற்றிய கருத்து தமிழக மக்களிடையே நால்வருண முறையிலே இருந்தது. 

    சமூத்தில் சாதியமைப்பு ஆழமாக வேரூன்றியவுடன் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலே வாழும் இடங்களும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு தொழிலினை மேற்கொண்டவர்கள் தனித்தனியாக வசிப்பதனையும் அவ்விடங்களைச் ‘சேரி’ என்று அழைத்ததனையும் காண இயலும்.

    இச்சேரி எனும் அமைப்பு தாழ்ந்த குடியினர்கள் வசிக்கும் இடமாக இல்லாமல் இன்ன சாதியினர் வசிக்கும் பகுதி என்று அடையாளம் காட்டும் முகமாக அமைக்கப்பட்டிருந்தது. கொற்சேரி (சொல். 74) என்பது இரும்பு வேலை பார்க்கும் கொல்லர்கள் வாழும் பகுதியைக் குறிக்கிறது. பாண்சேரி (சொல்.22) என்ற சொல் பாணர்கள் வசிக்கும் பகுதியைச் சுட்டும். சங்க இலக்கியத்தில் பார்ப்பனச்சேரி, யவனச்சேரி என்ற சொல்லாட்சிகள் மேற்குறிப்பிட்ட பகுதியை அரண் செய்யும்.

    பார்ப்பனர்கள் பிற சாதியினரிடம் உணவுப் பழக்க வழக்கத்தில் வேறுபட்டு நின்றது போலவே அவர்கள் வசிக்கும் இடங்களும் தனித்து இருக்கின்றன. பார்ப்பனர்கள் தனித்தப் பகுதிகளில் வசித்ததற்குத் தண்ணீர் போன்ற பொருள்களைப் பிறர் பயன்படுத்தாமை கருதியும் தீண்டாமை கருதியும் இருக்கலாமென்று கருதலாம். அத்துடன் பிற சாதியினருடன் உறவு ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டாகவும் இருக்கலாம்.

    சாதிகள் தொழில் அடிப்படையில் மட்டுமின்றி பொருளாதார அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு வேறுபட்டது போன்று பண்பாட்டு நிலையில் தனித்தனி வசிப்பிடங்களை ஏற்படுத்தி மக்கள் சமூகத்தினைப் பிரித்தனர். இத்தகு செயல்கள் ஆளும் வர்க்கமும் அதனுடன் ஒட்டி உறவாடும் மேல்சாதி எனும் நிலையில் அமைந்த ஆரிய இனமும் காரணமாக அமைந்தது. சாதி வழியாக உருவாகும் பண்பாடும் மேல்தட்டு வர்க்கத்தின் சிந்தனையின் விளைவாக உருவான கருத்து விளைச்சலே என்று கொள்வது பொருத்தமாகவே இருக்கும்.

    பழமொழி நானூற்றில் நான்கு வர்ணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் நான்காவது வருணம் என்ன என்பது பற்றிய தெளிவான செய்தி இல்லை. ஆனாலும், மூன்று வர்ணத்தவர்களைத் தவிர்த்து மற்றவர்களைச் சூத்திரர்கள் என்ற வரையறைக்குள் அடங்கியிருக்கலாம் என்று கருதலாம்.

மூடநம்பிக்கை அழிப்பு

    சங்க காலத்தை ஒட்டித் தமிழரிடையே பரவி இருந்த பல வகையான மூட நம்பிக்கைகளைச் சமணர் கடுமையாக எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். அம் மூடநம்பிக்கைகளைச் சமணர் உலக மூடம், தேவ மூடம், பாசண்டி மூடம் என்று சுட்டிக்காட்டி, அவற்றைத் தவிர்க்குமாறு பணித்தனர்.

    மலை ஏறிக் குதித்து இறத்தலும், உடன்கட்டை ஏறுதலும், ஆழமான நீர்நிலைகளில் பாய்ந்து இறத்தலும் மூடங்கள் என்று அவர்கள் குதித்தனர். கணவனை இழந்த பெண் குரங்கு மலையேறிக் குதித்துப் பாய்வதைக் குறுந்தொகையும் (பா . 69) பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு தீ வளர்த்து இறந்ததைப் புறநானூறும் (பா .246 ) கணவனை இழந்த பெண்டிர் நீரில் பாய்ந்து இறப்பதை மணிமேகலையும்  சுட்டிக்காட்டுகின்றன. ஆடு, எருமை ஆகியவற்றை வேண்டுதலுக்காக அறுத்துப் பலி கொடுத்தலும் மூடம் என்று குறித்து ஒதுக்கப் பெற்றது.    

ஆண் - பெண்  உறவில்  சமய ஆதிக்கம் :

    ஆண் பெண் உறவு அமைப்பில் மாற்றம்  இக்காலத்தில் நிகழ்ந்தது. சங்க காலத்துத் தலைவனைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதில் தலைவிக்கு மிகுந்த அளவு உரிமை இருந்தது. களவு வாழ்க்கையில் பகல்குறி, இரவுக்குறிச் சந்திப்புகளும், உடன்போக்கு அமைப்பும், அறத்தொடு நிலைக் கோட்பாடும் பெண்ணுக்குக் காதலில் இருந்த உண்மையைக் காட்டுகின்றன. எனினும், அக்காலத்திலேயே இந்த உரிமை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையால் திருமணச் சடங்கு முதலாயின அறிமுகப்படுத்தப் பெற்றதைத் தொல்காப்பியமும், பண்டைய இலக்கியங்களும்  படம் பிடித்துக் காட்டுகின்றன.

    சமய வாழ்க்கையில் தாய்த் தெய்வ வழிபாடு பொதுமக்களிடம் பரந்த அளவில் இருந்திருத்தல் வேண்டும். தமிழகத்தில் புதியனவாக அறிமுகமான சைன, பௌத்த மதங்கள் இரண்டும் ஆடவரைத் தலைவராகக் கொண்ட சமயங்களாக விளங்கின. பெண்டிர் பெண்ணாக இருந்து கொண்டே ஞானத்தை அடைய முடியாது. மறுபிறப்பில் ஆடவராகப் பிறந்துதான் கேவல ஞானத்தை அடைய முடியும் எனும் கருத்து சைனத்தில் வெளிப்படையாகப் பேசப் பெற்றது. பெண்டிர் வெறுக்கத்தக்கவர் பெண்களின் சொல்கேட்டு வாழ்தல் விரும்பத்தக்கதன்று முதலான பெண் எதிர்ப்புக் குரல் இக்கால இலக்கியத்தில் இடம் பெற்றிருந்தது உண்மையே. எனினும், காரைக்கால் அம்மையார் வாழ்க்கை, பெண் உரிமையையும், ஆடவர் ஆதிக்கத்தையும் ஒரு சேர எடுத்துக்காட்டுவதாக உள்ளது. புனிதவதி, கணவன் பரமதத்தன் பிரிந்து சென்ற போதிலும், அதற்காகச் செத்து விடவில்லை. சைவ சமயப் பெரும் புலவராகிப் பல இலக்கியங்களின் படைப்பாசிரியராக விளங்குகிறார். கண்ணகியின் வாழ்க்கையும், மாதவியின் வாழ்க்கையும் பெண்களின் உரிமை புத்துயிர்ப்புப் பெறுவதைக் காட்டுவனவாக உள்ளன. சமணக் குரத்தியர் கல்வி அறிவு பெற்று மிகச் செல்வாக்கில் இருந்ததைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சைனர் தம் நூல்களை நாலடியிலும், பழமொழியிலும் பெண்களை விளித்துப் பாடும் மகடூஉ முன்னிலைப் பாக்கள் நிறைய உள்ளன. சைனத்திலும், பௌத்தத்திலும் புகழ்பெற்ற நீலகேசி நூல்கள் உள்ளன. நீலகேசி, குண்டலகேசி ஆகிய இந்நூல்களில் கதைத் தலைவியாக இடம் பெற்றுள்ளோர் பெண்டிர் என்பது சுட்டிக் காட்டத்தக்கது. தத்தம் மனிதக் கருத்துக்களை வேறு மதவாதிகளிடம் எடுத்துச் சொல்லிச் செல்லும் ஆற்றலைப் பெண்டிர் பெற்றிருந்தனர் என்பதை நீலகேசி வரலாறும், குண்டலகேசி வரலாறும் தெரிவிக்கின்றன. புத்த மதப் பெண்ணான குண்டலகேசி தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் புரட்சி செய்தவர் என்பதும் கருதத்தக்கது. தவறுகள் செய்து விட்டுத் தன்னையே கொல்ல முனையும் கணவனை மலையில் இருந்து திடும் என உருட்டிக் கொன்று விடுகின்றாள் குண்டலகேசி. எனவே, களப்பிரர் காலம் முழுவதையும் பெண்டிர் ஒடுக்கப் பெற்ற காலம் என்று ஒட்டு மொத்தமாகக் கூறுதற்கு இல்லை. சைன, பௌத்த மதத் தத்துவங்களில் பெண் நிலை பின்னிலையில் இருந்தது என்றாலும், தமிழ்நாட்டின் நட்புகளை ஆழமாக ஆராய்கிறபோது, பெண்டிர் முற்றும் அடிமையாக இருந்தனர் என்று கொள்வதற்கு இல்லை.

முடிவுரை  

    ஓர் இலக்கியத்தை மேலோட்டமாகத் தெரிந்து கொள்வது வேறு, ஆழமாகத் தெரிந்து கொள்வது வேறு, ஆழமாகப் புரிந்து கொள்வது வேறு, தமிழ் இலக்கியத்தைப் பலரும் தெரிந்து கொண்டுள்ளோம். புரிந்து செயல்படவில்லை. தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ளத் தமிழ்ச் சமூத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ளத் தொடக்கம் முதல் இன்று வரை தமிழரிடையே நிலவிய, நிலவுகின்ற உறவுமுறைகளை, திருமண முறைகளை ஏற்றத் தாழ்வுகளை, சமுதாயப் பிரிவுகளை, சமுதாய   நிர்வாகத்தை, பொருளாதார நிலைகள் முதலிய பல கூறுகளைப் புரிந்து கொண்டால் தான் தமிழ் இலக்கித்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தைத் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்கான மிகச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தவும் செய்யலாம். 

சான்றெண் விளக்கம் :

1. க.ப.அறவாணன் ., அறஇலக்கியக் களஞ்சியம்., ப.34

2. நா. வானமாமலை  கலைகளின் தோற்றம். ஆராய்ச்சி, ஜுலை.1971.பக்.285   

3. கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் ,ப.113

4. பாஸ்கல்கிஸ்பர்ட், சமூகவியலின் அடிப்படைக்கோட்பாடுகள், ப.455

துணை புரிந்த நூல்கள் :

1. கோமதி சங்கர், சமூகவியல் நோக்கில் நீதி இலக்கியம், சரயூ பப்ளிகேஷன்ஸ், தென்காசி.

2. மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், தஞ்சை.

3. தாயம்மாள் அறவாணன், அவ்வையார் அன்று முதல் இன்று வரை, தமிழ்க்கோட்டம், சென்னை.

4. முத்து வீரப்பன்.பழ., (ப.ஆ), அற இலக்கியங்கள் I,II , தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 2007.