ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியத்தில் சுருதிநூல் முறையின் வகிபாகம்.

திருமதி மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை 08 Sep 2022 Read Full PDF

இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியத்தில் சுருதிநூல் முறையின் வகிபாகம்.

The role of adopting “Shruthynoolmurai” in Tradition of Vedanta in Sri Lanka.

திருமதி மேகலா சிவகுமாரன், விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை.

 Mrs. Mekala Sivakumaran, Lecturer, Eastern University, Sri Lanka.

ஆய்வுச் சுருக்கம்

இலங்கையின் இந்து தத்துவப் பாரம்பரியத்தில் சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய இருபெரும் கோட்பாடுகள் கவனத்திற்குரியவை. இவற்றுள் சைவசித்தாந்தம் பெரும் தத்துவமரபாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியம் குறித்த சான்றுகளாக  வடபகுதியில் சிவகுருநாதபீட வேதாந்த மடத்தின் ஸ்தாபனம் அமைந்துவிட, கிழக்குப் பகுதியில் சுவாமி விபுலாநந்தரின் வேதாந்தப்படைப்புக்களும், இராமகிருஷ்ணமிஷனது செயற்பாடுகளும் அடையாளப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தேசத்தில் இருதசாப்தங்களுக்கு முன்பு ஏட்டுருவில் இருந்து எழுத்துருப் பெற்ற சுருதி நூல் முறை எனும் பனுவல் தூய அத்வைதப்பனுவலாகவும், வேதாந்தப்பாரம்பரியத்திற்குரிய முதன்நிலைப் பனுவலாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையின் வேதாந்த இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் வெளிவராத நிலையில் சுருதி நூல் முறையின் அத்வைதப் பொருள் மரபினை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியம் பற்றிய இவ்வாய்வில் விபரணமுறையியலே அதிகம் கையாளப்படுகின்றது. அவசியமான இடங்களில் தரவுகள் ஒப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. இலங்கையின் வேதாந்தப் பாரம்பரியத்தின் நிலைக்களனாக விளங்கும் மட்டக்களப்பு தேசத்திற்குரிய சுருதி நூல் முறையானது அத்வைத தத்துவச் செழுமைகளை வெளிப்படுத்தும் பனுவலாகத் திகழ்கின்றது.

திறவுச் சொற்கள்: அத்வைதம், சுருதிநூல்முறை, வேதாந்தம், பிரம்மம், ஆன்மா

Abstract

Saiva-Siththanda and Vedanta are the crucial parts in Hindus’ philosophy and have been taken more into the consideration of the traditional philosophy of Hindus in Sri Lanka. Here, Saiva-Siththanda got a significant role and recognized as vital one than Siththanda. However, tradition of Vedanta in Sri Lanka still prevails and featured in Northern Region as the establishment of Sivagurunahdha Vedanta  and in Eastern Region as the activities of both Rama-Krishna mission and Swami-Vipulanandha, etc. At this scenario, “Shruthynoolmurai” was indicated as the pure Adhvaidha Manual and also as the first and foremost manual for the Vedanta tradition in Batticaloa District of Sri Lanka and it was modified from the version of tradition and towards the version of written lingual mode while two decades ago. Further, the current research mainly focused on expressing the theme of Adhvaidha tradition in “Shruthynoolmurai” during the silence era where no any research findings were obtained regarding the Vedanta Language in Sri Lanka. And also, the present research carried many explanations and findings regarding the Vedanta Tradition in Sri Lanka. Moreover, comparisons were continued at the needed places and study revealed the significancy of “Shruthynoolmurai” in Tradition of Vedanta in Sri Lanka and the important features of its thematic concepts as well.

Keywords: Adhvaidha tradition, Shruthynoolmurai, Vedanta, Bharahman, Spirit

 

அறிமுகம்

வேதம் சிறந்த அறிவு நூலாகக் கருதப்பெற்றதால் அறிஞர் காணும் பலவகைக் கொள்கை முடிவுகளும்; வேதமாகிய  அளவுகோலால் அளக்கப்பெற்று அதனோடு இயைக்கப் பெறுகின்றன.  வேதாந்தம் என்பதும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த  மெய்ப்பொருள் கொள்கைகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். அதாவது கேவலாத்துவிதம்,  விசிட்டாத்துவிதம், சுத்தாத்துவிதம், துவைதம் இவையனைத்தும் வேதாந்தமே. ஆயினும் கௌடபாதரும் சங்கரரும் கண்ட கொள்கையாகிய  கேவலாத்துவிதமே வேதாந்தம் என்ற பெயரைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டது.

ஆதிசங்கரர் பிரஸ்தான திரயங்களில் இழையோடிய தத்துவார்த்த சிந்தனைகளை வரையறையாக்கி அத்வைதமாக நிறுவினார். அவரைத் தொடர்ந்து அவரது சீடர்களான பத்மபாதர், சுரேஸ்வரர், மண்டனமிசிரர், வாசஸ்பதி மிஸ்ரா என்போர்களால் மேலும் வளம்பெற்றது எனலாம். இவர்களுள் பத்மபாதர், வாசஸ்பதிமிஸ்ரா எனும் சீடர்களின் நூல்களை அடியொற்றி விபரணச் சிந்தனைப் பள்ளி, பாமதிச் சிந்தனைப் பள்ளி என இரு சிந்தனைப்பள்ளிகள் தோற்றம் பெற்றன.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில்; விபரணச் சிந்தனைப் பள்ளியே முனைப்புப் பெற்றிருந்தது. விஜயநகரின்  தோற்றத்திற்குக் காரணமான வித்தியாரணியரின் விவரணப்பிரமேய  சங்கிரகம் என்ற வேதாந்த நூலே  தென்னகத்தில் எழுந்த வேதாந்த நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும்  மூலமாகவும்  கொள்ளப்படுகின்றன.  இதனைத் தொடர்ந்து கி.பி 14ஆம் நூற்றாண்டிற்குப்  பின் தத்துவராயரின் வேதாந்த அடங்கன்  முறை எனப்படும்  பதினெட்டு நூல்களும்  தாண்டவராயரின் கைவல்ய நவநீதமும் வீரைஆளவந்தாரின் ஞானவசிட்டம், ரமணமகரிஷியின் ஏகான்மவாத பஞ்சகம், உபதேசஉந்தியார்,  ஆத்மபோதம் போன்ற நூல்களும் தமிழில் எழுந்த வேதாந்த நூல்களுக்கு மேற்கோளாகக் காட்டும் சிறப்பிற்குரியவை.

இக்காலகட்டத்தில் வேதாந்தம் புத்தெழுச்சி பெறுவதில் வீரசைவர்களின் பங்களிப்பும் சிறப்பானது. திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், குமாரதேவர், சிவப்பிரகாச சுவாமிகள் போன்றோரின் நூல்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஈழத்தைப் பொறுத்தவரையில் வேதாந்தப் பாரம்பரியம் குறித்த வெளிப்படையான சான்றுகள் வடபகுதியில் 1875ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ சிவகுருநாத பீட வேதாந்த மடத்துடன் தொடர்புபட்டவையாகவே உள்ளன. (முகுந்தன்.ச.,2022:224) மட்டக்களப்பு தேசமே வேதாந்த தத்துவத்திற்கான தளமாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில் இத்தேசத்திற்குரிய சுருதிநூல்முறை எனும் ஏட்டுச்சுவடியே பதிப்பிக்கப்பட்டு அத்வைத வேதாந்த நூலாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

சுருதிநூல் முறை

ஈழத்தில் அத்வைத வேதாந்;தத்தை அடையாளப்படுத்தக்கூடிய பிரதான மூலமாக சுருதி நூல் முறை எனும் பனுவல் விளங்குகின்றது. இந்நூல் ஏட்டு வடிவில் வழங்கி அண்மைக்காலத்தில் நூலுருப் பெற்றது. இதன் ஆசிரியர் பெயரோ,  காலமோ  அறியக்கிடைக்கவில்லை. மறைந்து  போன  உறவினரின்  ஞாபகார்த்தமாக ஒரு நூலைப்  பிரதிபண்ணும் நல்வழக்கம் இப்பிரதேசத்ததில் வழக்கிலிருந்தது. இதன்  நிமித்தம் வேலாயுதர்  வீரபத்திரர் என்பவர்  அவர் தாய் கண்ணம்ம(கண்ணம்மை)  பொருட்டு ஞாபகார்த்தமாக பிரதி பண்ணியதே சுருதி நூல் முறையாகும். இந்நூல்  பிரதிபண்ண  தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு  அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு தேசத்தில் வேதாந்தம் செல்வாக்குற்றிருந்தமை காரணமாக இருந்திருக்கலாம் என  ஊகிக்க  இடமுண்டு.

நூலின் காலம் பற்றி துணிய முடியவில்லையாயினும் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டுப்பிரதி இறந்தவர் ஒருவரின் ஞாபகார்த்தமாக பிரதிபண்ணப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னரே மட்டக்களப்பு தமிழகத்தில் இந்நூல் உயரிய  நிலையில் இருந்தமை  தெளிவு.

நீPண்டகாலமாக ஏட்டுருவிலிருந்த இப்பனுவல் 1999ஆம் ஆண்டு சிவசுப்பிரமணியம் என்பவர்களால் விளக்கவுரை எழுதப்;பெற்று அச்சேற்றப்பட்டது. பனுவலின் முதலாம் ஓலைச்சுவடி  சிதைந்து போனமையால் இதன் ஆசிரியர் பெயரோ, ஊரோ அறியக்கிடைக்கவில்லை. சிதைவில் சுவாமி எனும் சொல் மட்டுமே அறியக்கிடந்தது. இந்நூலாசிரியர் வேதாந்த தத்துவத்தைப் போதிப்பதற்கு மட்டக்களப்பு தேசத்தினை தேர்ந்தெடுக்கத் தூண்டிய காரணங்கள் யாவை? இப்பிரதேத்தில் இந்நூல் எழுந்த காலப்பகுதியில் நிலவிய சமய கலாசாரப் பண்புகள்  எவை? போன்ற வினாக்களும் எழுந்து நிற்கின்றன.

மேலும் இந்நூல் குருசிஷ்ய சம்வாதமாகவே அமைகின்றது. சிஷ்யன் எப்படி அப்படி? என வினவுவதும் குரு சொல்கிறேன் ‘கேள்’ என ஆரம்பித்து ‘அறி’ என முடிப்பதுமாக அமைகிறது. அதாவது பொய்யன்றறி, பிரகாரமென்றறி, கெடுமென்றறி என்றவாறாக குரு அத்வைத மெய்யியலை சிஷ்யனுக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இப்பனுவலானது வேதாந்த பரிபாஷைச் சொற்களையும், வேறு சமஸ்கிருதப் பதங்களையும் பேச்சு தமிழையும் இணைத்து எட்டு வர்ணகங்களாக அழகிய மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. பிராமணர் பேச்சு தமிழும், மட்டக்களப்பு பேச்சு தமிழும் கையாளப்பட்டுள்ளன. பேச்சுவழக்கில் வேதாந்த மரபு தவறாமல் ஒரு அத்வைத நூல் தோற்றுவிக்கப்பட்டிருப்பது இந்நூலாசிரியரின் புரட்சிகர  மாற்றத்தினைப் பிரதிபலிக்கின்றது. ஆயினும் வேதாந்த பரிபாஷைச் சொற்களை ஆசிரியர் மொழிபெயர்க்கத் துணியவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தத்துவ மரபு - அத்வைதம்

கீழைத்தேச தத்துவங்கள் அனைத்தும் உலகு, உயிர், இறைவன் எனும் மூன்று பொருட்களை ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை உடையவை. இம்மூன்றில் இறைவனும் ஆன்மாவும் கண்ணுக்குப் புலப்படாதவை. உலகானது பொதுவில் பிரத்தியட்சமானது. அந்தவகையில் அத்வைத வேதாந்தமும் இம்மூன்றினையே ஆய்வுக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

பிரம்மம்

சங்கரர் தத்துவார்த்த ரீதியாக இரண்டற்றது(அத்வைதம்) எனும் கோட்பாட்டினை விளக்கியவராக விளங்கினார். இரண்டற்றது என்பதே அடிப்படையான உண்மைப்பொருளாகும். இது ஒன்றானதும் மாறாததும் குணங்களற்றதும் விபரிக்க முடியாததுமான பிரம்மம் என எடுத்தாண்டார். எல்லையற்றது, எங்கும் வியாபகமானது சக்தி மூலமானது, எல்லாவற்றுக்கும் அடிப்படையானது, பிறவாதது, அத்தியாவசியமான உண்மை, புலன்களுக்கு அப்பாற்பட்டது, பூரணமானது, வரையறைகளுக்கு அப்பாற்பட்டது, ஆன்மிகமானது எனப் பலவாறாக பிரம்மம் பற்றி எடுத்தாளப்பட்டது.

பிரமம் ஒன்றே ஒரேயொரு உண்மைப் பொருளாகையால் பார்வைக்கு உட்படுகின்ற புறவுலகிலுள்ள பன்மைத்துவமான எல்லாப் பொருட்களும் உண்மையல்லாதவையாக இருக்க வேண்டுமென எடுத்துரைத்தார். சங்கரரைப் பொறுத்தவரை உலகு, ஆத்மன், ஈஸ்வரன் ஆகிய அனைத்தும் பிரம்மத்தின் வேறுபட்ட தோற்றகங்களாகும். இவையணைத்தும் முடிவான உண்மைப்பொருளல்ல, பிரம்மமே முடிவான உண்மைப் பொருளாகும்.

சங்கரர் பிரம்மம் பற்றிய எண்ணக்கருத்தினை விளக்க முனைகையில் முதலில் உண்மை பற்றி தெளிவுபடுத்துகிறார்.

உண்மை என்ற பதம் - மாற்றமற்றது, தனித்துவமானது, நிலையானது, எல்லையற்றது, என்றுமுள்ளது என பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டதாக விளங்குகிறது. மாறுவதெல்லாம் உண்மையல்ல. உ-ம் - கண்ணாடிக்குவளை - இதற்கு ஒரு நாமமும் ரூபமும் உண்டு. ஆனால் கண்ணாடிக்குவளை உடையும் பட்சத்தில் அப்பொருளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாகின்றது. குவளையானது நாம ரூபத்தில் மாற்றமுற்று கண்ணாடிச் சிதறல்களாக மாறுவதைக்காணலாம்.

சங்கரர் உண்மையினை உள்பொருளியல் உண்மை, வியவஹாரிக உண்மை என இரண்டாக விளக்குவார்.

உள்பொருளியல் உண்மை – பரவித்யா(உயர்வான ஞானமாகும்)

வியவஹாரிக உண்மை – அபரவித்யா (குறைவான ஞானநிலையது)

இதனை விளக்கு வகையில் அத்வைதிகள் உண்மைத்துவம் பற்றிய மூன்று நிலைகளினை எடுத்தாராய்ந்தனர்.

1.பிரதிபாஷிகசத்து – கனவு நிலை அல்லது திரிபு நிலையாகும். கனவைக் காண்பவன் கனவு காண்கையில் கனவின் உண்மைத் தன்மையில் சந்தேகம் கொள்ளாமல் அது உண்மையென்றே நம்புகின்றனர். கனவு கலையும் போது உண்மையல்ல என்ற நனவு நிலைக்கு வருகின்றபோது கனவின் உண்மைத்தன்மை மாற்றமுற்று உண்மையல்லாததாகின்றது. இதுபோன்று கயிற்றைப் பாம்பாகக் காணுகின்றவன் ஒரு சில வினாடிகளாவது கயிற்றைப் பாம்பாகக் காணுகின்றான். கயிற்றைப் பாம்பாகக் கண்ணுற்ற போதிலும் பின் அறிபவன் தெளிவில் கயிற்றைக் கயிறாக உணர்ந்து கொள்கின்றான். கயிற்றைக் கயிறாக உணரும் மட்டும் பாம்பே காட்சிக்குரியதாக உள்ளது. இத்தன்மையே பிரிதிபாஷிக சத்துக்குரியதாகும்.(முகுந்தன்.ச.,2022:122)

வியவஹாரிக நிலையினை நோக்கின் இது அநுபவநிலை அல்லது நனவு நிலை ஆகும். கனவிலிருந்து மீண்டவன் சாதாரண உலகினை உள்ளவாறு காணுகிறான். இந்நிலையில் புறவுலகப் பொருட்கள் யாவும் உண்மையானதாகவே தோன்றும். இந்நிலையில் பிரதிபாஷிக நிலையானது உண்மை அல்லாததாகின்றது.

வியவஹாரிக நிலையில் பிரதிபாஷிக நிலையானது உண்மை அல்லாததாகின்றது போல பாரமார்த்திக நிலையில் வியவஹாரிக நிலை இல்லாததாகின்றது என சங்கரர் கையாளுகின்றார்.

பன்மைத்துவமும் உறவும் கொண்ட உலக அனுபவம் பிரம்ம அனுபவத்தில் முரண்படுகிறது. பிரம்ம அனுபவம் எந்த அனுபவத்தாலும் முரண்படுவதில்லை. பாரமார்த்திக நிலையே உயர்வான நிலை. பாரமார்த்திக அனுபவத்தில் பிரம்ம அனுபவமானது முரண்படுவதில்லை. முரண்பாடின்மையே இறுதியான உண்மையின் சாரம்சமாகும். பிரம்மமே ஒரேயொரு உண்மையாகும்.

அத்வைதத்தில் பரப்பிரம்மம் பூரணத்துவமான உண்மைப்பொருளாக எடுத்தாளப்படுகின்ற வேளை நான்கு சைதன்யங்களாக கையாளப்படுகின்றது. அவை நிர்க்குண பிரம்மம், கூடஸ்தபிரம்மம், சகுணப்பிரம்மம், ஜீவப்பிரம்மம் என்பனவாகும்.

நிர்க்குண பிரம்மம் எவ்வித மாயைக் கலப்பற்ற தூயதானதாகும். இதனையே மறுவார்த்தையில் பரப்பிரம்மம் என எடுத்தாளப்படும். சகுணப் பிரம்மமானது மாயைக் கலப்பினைக் கொண்டதாகச் சுட்டப்படினும் முக்குணங்களில் ஒன்றான சத்வகுணம் மேலோங்கப்பட்ட மாயைக் கலப்பினைக் கொண்டதாகும். இந்நிலையில் சகுணப்பிரம்மம் ஈஸ்வரனாக எடுத்தாளப்படும்.

கூடஸ்த பிரம்மமானது சகுணப்பிரம்மத்திற்கும் நிர்க்குண பிரம்மத்திற்கும் இடைப்பட்டதான நிலையைக் குறிக்கும். அதாவது சத்துவகுணமாயைக் கலப்பிலிருந்து விடுபட்டதாயினும் நிர்க்குணநிலைக்கு எட்டாத சாட்சி மாத்திரனாய் விளங்குவது. ஜீவப்பிரம்மம் - இராசதம், தாமசம் ஆகிய மாயைக் கலப்பினைக் கொண்டதான நிலைக்குரியதாகும். இவ்வாறு பிரம்ம சைதன்யமானது மாயையின் செல்வாக்கிற்கு அமைய நான்கு நிலைக்குரியதாக அத்வைதிகள் எடுத்துரைப்பர்.

சங்கரர் பரமாத்மாவிற்கும் பன்மைத்தன்மை கொண்ட ஜீவாத்மாவிற்குமான தொடர்பினை பிரதிவிம்பவாதம் மூலம் விளக்குகிறார். பிரகாசிக்கும் சந்திரனது விம்பமானது குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற பல நீர்நிலைகளில் பிரதிபலிக்கின்றது. உண்மையில் சந்திரன் ஒன்றே. ஆனால் சந்திர ஒளியின் பரம்பலால் பலவாக நீர்நிலைகளில் விம்பமாகத் தோன்றுகின்றது. உண்மை ஒன்றே என்கின்ற போதிலும் சந்திரனின் விம்பங்கள் உண்மையல்லாதது என்றே வெறும் திரிபு என்றோ கூறமுடியாது. அவை உண்மையான சந்திரனின் விம்பமே.

அதேவேளை இவ்விம்பங்களை உண்மையான சந்திரனாகக் கொள்ள முடியாதென்பதும் தெளிவிற்குரியதே. இவை ஒருவகை தோற்றங்களே. இது போல ஜீவாத்மனும் பிரம்மனின் ஒருவகைத் தோற்றங்களே அன்றி வேறல்ல.  உண்மையான சந்திரனின்றி எவ்வாறு சந்திர விம்பங்கள் சாத்தியமில்லையோ அது போல பிரம்மமின்றி பன்மைத்துவமான ஜீவன்களின் பிரதிபலிப்பானது சாத்தியமிலலை என எடுத்தாளுவர். இதனை “அரமாவொன்றே காரியரூபமாய் மாச்சுது. அரமா ஒன்றே அநேகாத்ம சாரியோபாதியினாலே அநேக சீவளாயும் அநேக ஈசுவரராயும் தோன்றுகின்றாரென்றறி”.(சுருதிநூல்முறை.,1999:8)

ஆத்மன் ஒன்றே என்பதற்கு அவச்சேதவாதத்தினையும் முன்வைக்கிறார். மாயையுடன் பிரம்மம் இணைவுறுகின்ற போதில் பிரம்மமானது ஈஸ்வரனாக அதாவது சகுணப் பிரம்மமாக வடிவெடுக்கின்றது. ச – குணம் என்ற சொல்லாட்சியில் ச என்பது குணங்களுடன் கூடியது. மாயையானது சத்துவம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணக் கலப்பினைக் கொண்டுள்ளது. அதில் சந்த குண இயல்புடைய சத்வ குணம் மேலொங்கப் பெற்ற மாயைக் கலப்பினைக் கொண்டதாக ஈஸ்வரன் எடுத்தாளப்படுகின்றது. எங்கும் வியாபகமானதும் எல்லாம் வல்லதும் வரையறைக்கப்பாற்பட்டது போன்ற தன்மைகளுடன் உலக உற்பத்தியாளர் பாதுகாவலர், ஒடுக்குபவர் என விபரிக்கப்படுபவர். ஈஸ்வரன் கடவுளாக வியவஹாரிகவாழ்வின் உயர் கடவுளாக விளங்குபவர்.

அநேக கூடஸ்தபிரம்மமானது சகுணப் பிரம்மத்திலும் பார்க்க உயர்ந்ததும் பரப்பிரம்மத்திலும் பார்க்க குறைந்த நிலைக்குரியதுமாகும். பரப்பிரம்மமானது நிர்க்குணப் பிரம்மமாக மாயையின் எந்தக்கலப்பும் இல்லாமல் விளங்குவதாகும்.

கூடஸ்த பிரம்மம் சாட்ஷி நிலையில் மாயையின் செல்வாக்கினைக் கொண்டதாக விளங்கும். உ-ம்: மழை விட்ட பிறகு சிறுபொழுது தூவாணம் இருப்பது போன்றது. சத்துவகுணமாயை கலப்பு நீங்கிய பின்னரும் அதன் தாக்கம் சிறிது பொழுது விளங்குவது. நிர்க்குண பிரம்மமானது குணப்பண்புகளை தன்னகத்தே கொண்டிராததாகும். இப்பரப்பிரம்மமானது வேதாந்தத்தின் உயர்வெண்ணக்கருத்தாகும். பிரம்மத்தை தவிர்ந்த உள்பொருளியல் உண்மையானது எதுவுமில்லை. இவ்வுண்மையை அறியும் போது வியவஹாரிக அனுபவத் தோற்றங்கள் எல்லாமே அற்றுப் போய்விடும்.

எவன் ஒருவன் பிரம்ம ஞானத்தை உணருகிறானோ அவன் பிரம்மமாகின்றான். அத்வைதம் உண்மைப்பொருள் பிரம்மம் ஒன்றே எனத் தெளிவுறுத்துகின்றது. அந்நிலையில் ஆன்மாவின் இருப்பு நிலை பற்றியும் அதன் செயன்நிலை பற்றியும் நோக்கினால் ஆத்மன் என்பதும் பிரம்மம் என்பதும் ஒன்றே என்கிறார் சங்கரர்.

மாறாக ஜீவனானது தனியான்மா அல்லது வியவஹாரிக ஆன்மாவாகும். உடல், புலனுறுப்புக்கள், மனம், புத்தி போன்றவற்றால் மட்டுப்படுத்தப்படும் போது தனியான்மாவாக அமைவுறுகின்றது. உபாதிகளுக்கு மட்டுப் படுத்தப்படும் போது போகிப்பவராக அமைகின்றார்.  அவித்தையின் காரணமாக வியவஹாரிக ஆன்மாக்கள் பலவாகத் தோன்றுகின்றன.

சங்கரர் பரமாத்மாவிற்கும் பன்மைத் தன்மை கொண்ட ஜீவாத்மாவிற்கும் இடையில் அமையும் தொடர்பினை பிரதிவிம்பவாதம் மூலம் விளக்குகிறார்.

சந்திரனது ஒளியானது குளம், ஏரி , கிணறு,குட்டை போன்ற நீர் நிலைகளில் சந்திரனது விம்பங்களாக பிரதிபலிப்பது காணலாம். உண்மையில் சந்திரன் ஒன்றே ஆனால் ஒளியின் பரம்பலால் பலவாக நீர் நிலைகளில் தோன்றுகின்றன.

அவை உண்மையான சந்திரனின் விம்பங்களே. ஆனால் விம்பங்களை உண்மையான சந்திரனாகக் கொள்ள முடியாது. இவை ஒருவகைத் தோற்றங்களே இவை உண்மையல்லாவிடினும் உள்ளவை என்பது உறுதி. இதுபோல் ஜீவாத்மனும் பிரம்மத்தின் ஒருவகைத் தோற்றங்களே அன்றி வேறல்ல. “பெரிய ஏரி சிறிய கடம் என்ற உபாதியை விட்டுவிட்டால் சைத்திய திருவ மதுரச் சோபாவ சலமாகிறது எப்படியோ அப்படியும், பெரிய நிலாத்திரி விளக்குத்திரி என்ற உபாதியை விட்டுவிட்டால் லோகஇத உட்னப் பிரகாச வன்னி ஏகமாகிறது எப்படியோ அப்படியும் மாயா வித்தியோபாதியை விட்டு விட்டால் சச்சிதானந்த சோபாவ சத்து ஏகமென்றே அறி. அகம் விறுமாஸ்மி.”(சுருதிநூல்முறை: ப.40) என  ஜீவாத்மா என்பது அறியாமையினால் தோன்றும் அறிவாற்றலின்; பிரதிவிம்பமாகும். அத்வைதிகள் ஜீவாத்மாவை காரணசரீரம், தூலசரீரம், சூக்குமசரீரம் என 3 வகையான சரீரங்களை கருவியாகக் கொண்டுள்ளது.  ஆத்மனானது உபாதிகளினால் ஜீவனாக அமைகிறது. உடல, புலன், உள  உறுப்புக்களின் இணைவிவினால் மட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது.

பிரம்மம் பிரபஞ்ச ஆன்மாவாக விளங்க ஜீவனானவன் தனியான்மாவாக  அமைகிறது. அது ஒரு வகைத் தோற்றமாகும். நீர்க் குமிளி உடைகிறன் போது அது சமுத்திரத்துடன் இணைந்து  விடுகின்றதே அதேபோல பிரம் ஞானம் அடைகின்ற போது ஜீவன் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகின்றது. இதனை “அகம் விறுமாஸ்மி விறுமைவாகம் என்கிற சுவானுபவம் எந்ந மகானுபவனுக்கு வருகிறதோ அவனே முத்தன், அவனே கிருத்தியன், அவனே பிரமன், அவனே வித்துவான்.”(சுருதிநூல்முறை:ப40) என எடுத்துரைக்கின்றது.

ஜீவாத்மாக்கள் பல அவை நேரடியாக பரமாத்மா ஆவதில்லை. ஆத்மாக்கள் மூன்றுவகை. அவை ஜீவாத்மா நிலையிலிருந்து ஈஸ்வரவாத்மாக அடுத்து கூடஸ்தனாகி(பாரமார்திகன்) பிரம்மமாகும்.  இதனை “அநித்தியமான சீவாத்மாவும் சத்தியமான பரமாத்மாவும் ஏகமென்றால் எப்படிக்கூடும். கூடாது என்றால் சீவாத்மா திரிவிதம். எப்படியென்றால் பாரமாத்திகன் வியாவகாரிகன் பிரதிபாசிகன் என்று பேர்கள். சுழுத்தி சொப்பனம் ஜாக்கிரம் என்ற பேதத்தினாலே சீவத்திரைய பேதமென்றறி. திட்டாந்தம் சலதரங்க புற்புதங்களாலறி. இதிலே பிரதிபாசிகன் வியாபகாரிகன் ஆவான். வியாவகாரிகன் பாரமார்த்தினாவான். அந்தப் பாரமார்த்திக சீவனான கூடஸ்தருக்கும் விறுமத்துக்கும் அய்க்கியம் கூடுமென்று சித்தாந்தம்.”(சுருதிநூல்முறை:1999:ப6)

சங்கரர் கர்மத்தினை ஏற்கிறார்.  ஆன்மாவின் தனித்துவமானது கர்மாவினால் அமைவது. இது அவித்தையினால் உருவாக்கப்படுவது. ஆன்மாவானது தன்னிலை உணர்தலே இறுதி இலக்கின் அடிப்படையாகும். எப்போது தனியானம்மாவானது பொய்யான அறிவிலிருந்து விலகி உண்மையை உணர்ந்து கொள்கின்றதோ அவ்வேளை தனது உன்மையான இயல்பினை இனங்கண்டு பிரம்மமாhதல் சாத்தியம்.

அத்தியாரோபமும் உலகும்.

பிரம்மம் உண்மைப் பொருள். உலகம் தோற்றம். ஒவ்வோர் ஆன்மாவும் பிரம்மம்  தான். பிரம்மத்தின் இருமையற்ற நிலை. உலகத்தின் உண்மையற்ற நிலை. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடா நிலை எனும் முடிவினை வேதாந்த நூல்கள் அத்தியாரோபம், அபவாதம் எனும் முறையியலினூடாக எடுத்தியம்புகின்றன. பிழையான காண்டலே உலகையும், ஆன்மாக்களையும் தோற்றுவிக்கின்றது. இவ்வத்தியாசத்திற்கு மாயையே காரணம். எனவே வேதாந்த உபதேசங்கள் சுருதி நூல் முறையில் அத்தியாசம் பற்றிய ஆராய்வுடனே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வத்தியாசம் பற்றிய ஆய்வுடனே சங்கரர் பிரம்மசூத்திரத்திற்கு இயற்றிய உரையும் ஆரம்பமாகிறது.(ஞானகுமாரன்.நா., 2012:75)

 சுருதி நூல் முறையும் “அத்தியாரோபம், அபவாதம் எனும் இவ்விரண்டினாலே வயித்துவை அறிய வேணும். அத்தியாரோபம் எதென்றால், சுத்திகை - ரசதம்; ரச்சு - சர்ப்பம்: தாணு - புருசன்: ஆகாசம் - நிலாதிரூபம் எப்படி அப்படி”(சுருதிநூல்முறை.,1999:01) என வேதாந்த தத்துவத்தினை விளக்க வருமாற்றினை எடுத்தியம்புகின்றது. அத்தியாரோபம் என்பது பிழையான காண்டலே. கயிற்றினை பாம்பாகத் திரிபுறக் காணும் போது கயிற்றின் மேல் உண்மையில்லாத பாம்பினை வைத்துக் காண்கிறோம். இதனை அத்தியாசம் எனவும் அழைப்பர். அதாவது இல்லாத ஒரு பொருளின் தோற்றமே அத்தியாரோபமாகும். ஒரே உள்பொருளாகிய பிரம்மத்தில் ஆன்மாக்கள், பிரபஞ்சம் எனப் பல பொருட்களை நமது அஞ்ஞானம் தோற்றுவிக்கிறது. இருளில் கயிறு, பாம்பு போலவும், ஒளியில் சிப்பி வெள்ளி போலவும், தொலைவில் மரக்குற்றி மனிதன் போலவும், ஆகாசம் என்பது நிலா, நட்சத்திரம் என்பவற்றின் இருப்பிடம் போலவும் தோன்றுவது அத்தியாரோபத்திற்கான வேதாந்த எடுத்துக்காட்டுகளாகும்.

அபவாதமென்பது வேத விசாரணையாலும், குரு உபதேசத்தினாலும் அத்தியாரோபத்தினை நிராகரித்து ஏகாத்மம் பிரம்மம், நானும் பிரம்மம் தான் என உணர்தலாகும். வேதாந்த நூல்களில் அத்தியாரோபத்தினால் பந்தமும், அபவாதத்தால் வீடுபேறும் கிடைக்குமென வேதாந்த நூல்கள் உரைக்கின்றன. இதனை கைவல்ய நவநீதத்திலும் காணமுடியும்.

இதனை கைவல்லிய நவநீதம்;

“அத்யா ரோபமென்று மபவாதமென்றுஞ் சொல்லும்

உத்தியாற் பந்தம் வீடென்றுரைக்கும் வேதாந்தமெல்லாம்” (கைவல்யநவநீதம்:பாடல் 26)  எனக் குறிப்பிடுகின்றது.

பிரபஞ்ச சிருஷ்டி

வேதாந்த தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்ச வஸ்துக்களின் தோற்றத்திற்கும், அவ்வஸ்துக்களை அனுபவிப்பது போன்ற உணர்வு ஆன்மாவிற்கு ஏற்படுவதற்கும் அஞ்ஞானமே நிலைக்களனாகிறது. பிரபஞ்ச வஸ்துக்களை சுருதிநூல்முறை ஷட்பாவம், ஷட்கோசம், ஷடூமி என மூவகைப்படுத்துகின்றது. ஷட்பாவம் என்பது பிரபஞ்ச வஸ்துக்களின் பிறப்பு(ஜயதே), இருப்பு(அஸ்தி), வளர்தல்(வர்த்ததே), மாறுபாடு(பரினமிதே), குறைவடைதல்(சஷ்யதே), அழிவு(நச்யதே) எனும் ஆறுவகைத் தோற்றங்களாக சுட்டப்படுகின்றன. அடுத்து ஷட்கோசம் என்பது உடலினைத் தோற்றுவித்தலாகும். அதாவது சர்மம், மாங்கிசம்(மாமிசம்), உதிரம், மேதை(விந்து), அத்தி(எலும்பு)யாகிய ஆறு உறைகளைக் குறிக்கும். இவ்வாறு உறைகளே உடலாக அமைகிறது. பிரபஞ்ச வஸ்துக்களுக்கு ஏற்படும் ஜெனனம், மரணம், சோகம், மோகம், பசி, தாகம் எனும் விகாரங்களை ஷடூர்மி என்கிறது. இவை மூன்றும் ஆன்மா அனுபவிப்தற்குரிய வஸ்துகளாக அமையும்.

உடலினை பெற்ற ஆன்மா அனுபவிப்தற்குரிய உலகினை தோற்றுவித்தலையும் அத்யாரோபத்தாலே அத்வைதம் எடுத்துரைக்கும். அத்யாரோபம் பிரம்மத்தை அறியாத அஞ்ஞானத்தினால் ஏற்படுகின்றது. இவ்வஞ்ஞானம் அவித்தை, மாயை, தமசு, மோகம், பிரகிருதி எனும் பெயர்களால் சுட்டப்பெறுகின்றது. இவற்றுள் பிரகிருதி சத்துவ, ராஜச,தாமச குணங்களின் கலவையாகும். அத்தியாரோபம் பிரமத்தை ஈஸ்வரனாகத் தோற்றுவிக்கும். இவ்வீஸ்வரனே பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பவன். “இப்படி வெகு காலம் மலினமாயிருக்கிற சீவாளுடையஅதிட்டங்கள் பரிபக்குவமாகிற போது அந்தப் பிரகிருதி தானே சத்துவரசதமோ குணங்களாய் விச்ரம்பிக்கும். அதிலே சத்துவகுணமே மாயை, ரசோகுணமே அவித்தை, தமோகுணமே மோகம். இத்திரிகுணத்திலும் பரிபூரண சைதன்யம் பிரதிவிம்பிக்கும். அதிலே மாயாபிரதிவிம்ப சைதன்யமே ஈசுவரன், அவ்வியாகிருதியன், அந்தர்யாமி என்றும் பெயர். அவரே செகசிருட்டன் என்றறி” (சுருதிநூல்முறை,.1999:01)

இங்கு பிரபஞ்சத்தோற்றத்திற்கு ஈஸ்வரனே உபாதனகாரணமும், நிமித்த காரணமும். அத்வைதப்படி உள்பொருள் ஒன்று என்பதால் உபாதன, நிமித்த காரணம் என இரு காரணங்கள் இருக்கமுடியாது. சங்கரர் சத்காரணவாதத்தை முன்வைப்பார். வேதாந்த நூல்கள் இதற்கு சிலந்தியை எடுத்துக்காட்டாக முன்வைக்கும். சிலந்தி தனது உடலிலிருந்து தோன்றும் நூலினால் வலை பின்னுவது போல் ஈஸ்வரன் நிமித்தகாரணமும் உபாதன காரணமுமாக இருக்கிறார். ஈஸ்வரன் தான் என்ற நிலையில் நிமித்த காரணனாவான்(சோப்பிரதானம்). உபாதிகளோடு கூடிய நிலையில் உபாதன காரணனாகவும் விளங்குகிறான்(சோபாதிகப்பிரதானம்) என்கிறது அத்வைதம். இதனை இந்நூலும் “அதெப்படியென்றால் ஊர்ணநாபியாகிய செந்துவுக்கு சரீரம் உபாதனமும் தான் நிமித்தமும் எப்படி அப்படி. சோபாதிக பிரதானத்தினாலே உபாதனமும் சோபப்பிரதானத்தினாலே நிமித்தமும் ஈசுவரனுக்கு கூடுமென்றறி” (சுருதிநூல்முறை.,1999:02) இங்கு மாயை ஈசுவரனின் உபாதி.

ஈஸ்வரனால் கூடுகின்ற சிருஷ்டியை காரணசிருஷ்டி, சூக்கும சிருஷ்டி, தூலசிருஷ்டி என மூன்றாக முன்வைப்பர். இவற்றில் காரண, சூக்கும சிருஷ்டி கண்ணுக்குப் புலப்படாதவை. எமக்குப் புலப்படுபவை தூல சிருஷ்டியே. அவித்தையில் சைதன்யம் பிரதிவிம்பமாகி சீவேசுவரர் ஆகின்றன. அத்தியாரோபத்தால் சைதன்யமும் அதன் விம்பங்களும் வேறுவேறானவை என்று கருதப்படுகின்றது. இந்த சீவேசுவரருக்கு அவித்தையும், மாயையும் காரண சரீரங்கள். இந்நிலையில் சீவேசுவரர் சுழுத்தியாவத்தையில் ஆனந்தமய கோசத்தோடு கூடியிருப்பார். இதுவே காரண சிருஷ்டி.

தமோகுணமானது ஆவரண, விட்சேப சக்திகளாகப் பிரிந்து, தமோ குணம் மிகுதியாகவுள்ள விட்சேப சக்தியிலிருந்து தனு, கரண, புவன, போகங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆகாயம் தோன்றி அதனிடத்திலிருந்து வாயு அதன்வழி அக்கினி, நீர், நிலம் என முறையே கருமசிருஷ்டி தோன்றியது. இவை முதலில் சூட்சுமமான நிலையிலிருந்து சூட்சுமபூதங்களாகின. இப்பூதங்கள் சத்துவகுணம் மேலோங்கிய நிலையில் ஞானேந்திரியங்கள், அந்தக்கரணங்கள் தோன்றின. மேலும் பஞ்சபூதங்களின் ராஜச குணத்திலிருந்து கர்மேந்திரியங்களும், பிராண வாயுவும் தோன்றுகின்றன. இப்பிராண வாயுவையும் செயல்வேறுபாட்டால் பஞ்ச, தச வாயுக்களாகக் காட்டுவர். இவ்வாறு ஞானேந்திரியங்கள் (5), கர்மேந்திரயங்கள்(5), பிராணன்(5), மனம், புத்தி(2) ஆக பதினேழும் கூடி சூட்சும சரீரம் சிருஷ்டியாகும்.  “இப்படி ஞானேந்திரியங்கள் அஞ்சு, கர்மேந்திரியங்கள் அஞ்சு, பிராணன் அஞ்சு,. மனம், புத்தி இரண்டுமாகக் கூடி சூட்சும சரீரமாச்சுது”.(சுருதிநூல்முறை.,1999:44) இந்த சூக்கும உடலில் ஐவகைக் கோசங்களில் பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசங்கள் மட்டுமே காணப்படும்.

காரணசரீரம், சூக்கும சரீரம் எமது கண்களுக்குப் புலப்படாதவை. எமக்கு புலப்படாதவை தூல சிருஷ்டியே. தூல சிருஷ்டியை தமிழ் வேதாந்த நூல்கள் குறிப்பிடுவது போல் சுருதிநூல் முறையும் “பஞ்சீகிருதம்” முறையில் குறிப்பிடுகின்றது.

விட்சேப சக்தியிலிருந்து தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றும். இதனை “விச்சேப சக்திதானே சூட்சும ஆகாசமாச்சுது. அந்த ஆகாசத்திலே வாயு, வாயுவிலே அக்கினி, அக்கினியில் அப்பு, அப்புவில் பிருதுவி இப்;படி கிரமத்திலே உண்டாச்சுது. இதுகளுக்கு சூட்சும பூதமென்றும் அபஞ்ச  தன்மாத்திரை என்றும் காரண பூதமென்றும் பேர்.....இந்த சூட்சும பூதங்களிலும் சத்துவரசதமோ  குணங்களுண்;டு. காரணத்திலுள்ளது காரியத்திலும் உண்டென்றறி(சுருதிநூல்முறை.,1999:44) என எடுத்துரைக்கின்றார் சுருதிநூலாசிரியர். இங்கு தமோ குணத்தில் பொருந்தியிருக்கும் முக்குணங்களும் அத்தன்மாத்திரையின் காரியத்தில் பொருந்தியிருக்கும் என்பதும் குறிப்பிடப்படுகின்றது.

சத்துவ குணத்தின் வியட்டி பாகங்;கள் ஞானேந்திரியங்கள் ஐந்தினையும் (மெய்,  வாய், கண், மூக்கு, செவி) சமட்டி பாகங்கள் உள்ளம், புத்தி எனும் அகக்;கருவிகளுமாக ஏழு அறிகருவிகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறே இராசத குணத்தில் சமட்டி பாகங்கள் ஐவகைப் பிராண வாயுக்களையும் (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) அதன் வியட்டி பாகங்கள் ஐவகை கன்மேந்திரியங்களையும் தோற்றுவிக்கும். இந்த பதினேழுவகை தத்துவங்;களுக்கும் இலிங்க சரீரம் என்பது வேதாந்த வழக்கு.  இதனை “இப்படி ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரங்கள் ஐந்து, பிராணன் ஐந்து, மனசு, புத்தி இரண்டுமாக பதினேழும் கூடி சூட்சும சரீரமாச்சுது. இப்படி சூட்சும சிருஷ்டி பிரபஞ்சம் உண்டானபடி யென்றறி” என்கிறார்.(சுருதிநூல்முறை.,1999:43)

ஆன்மாக்கள் போகம் துய்ப்பதற்கு உடலைக் கொடுக்கும் பொருட்டு தமோகுணமயமாண தன்மாத்திரைகள் ஐந்திலிருந்து பஞ்சீகரண முறைப்படி உலகை படைத்தான் என்பது வேதாந்தக் கோட்பாடு. இதன்படி ஒவ்வொரு பூதமும் வேறுவேறு விகிதத்தில் ஐவகைத் தன்மாத்திரைகளின் கலவையினைப் பெற்றுள்ளது. உலகத்தோற்றமாக புலப்படும் மகாபூதங்கள் ஐந்தினையும் தோற்றுவிக்கும் பொருட்டு ஐவகைத் தன்மாத்திரைகளும் தன்னுள் கலந்திருக்கும் முறைமையினையே  பஞ்சீகரணம் என்பர்.

பஞ்சீகரணப்படி தூல ஆரோபணத்தை சுருதி நூல் முறை மேல்வருமாறு கூறுகின்றது. “சத்துவசசோ குணங்கள் குறைந்து தமம் பிரதானமாயிருக்கின்ற அபஞ்சீகிருத பூதங்களை பஞ்சீசிருதமாக்கினார். அதெப்பெடியென்றால் ஒவ்வொன்றையும் ஒன்று இரண்டாக்கி பத்தாக்கி, அதிலே ஒவ்வொருபாதி அஞ்சையும் நன்னாலாக்கித் தன்பாதி தவிர அந்நிய பூதங்களிலே கொடுக்கிறது பஞ்சீகரணம். இப்படி பஞ்சீகிருதமான தூல பூதங்களிலே நிண்டும் அண்டங்கள், புவனங்கள், போக்கியங்கள், சதுர்வித தூல சரீரங்கள் உண்டாச்சுது. இந்த தூல சரீரத்திலே சீவிசுராள் கூடுகின்ற அவத்தை சாக்கிர அவத்தை என்றறி.......” (சுருதிநூல்முறை.,1999:3) இதனை விளக்கமாக நோக்குமிடத்து, ஒவ்வொரு பஞ்சீகிருத பூதமும் சமஅளவுள்ள இரு பாகமாகப் பிரிக்கப்படும். அவற்றுள் ஒருபாகம் அப்படியே இருக்க மற்றொரு பாகம் சம அளவுள்ள நான்கு பாகங்களாக வகுக்கப்படும். இவ்வாறு பகுத்த பின்னர் ஒவ்வொரு பஞ்சீகிருத பூதத்தின் முதல் அரைப்பாகத்துடன் எஞ்சிய நான்கு பூதங்களின் பாதி கால் பாகங்கள் கலப்பதன் வாயிலாக தூலபூதங்கள் தோன்றின என்பர். இதனை தாண்டவராயரும் முன்வைத்திருப்பது நோக்கற்பாலது.

“ஐந்து பூதமும் பத்தாக்கி

 அவைபாதி நந்நான் காக்கி

நந்துதன் பாதி விட்டு

 நாலொடு நாலுங் கூட்ட

           வந்தன தூல பூதம்

 மகாபூதம் அவற்றினின்றும்

தந்தன நான்காம் தூல

 தனு அண்ட புவன போகம்”( கைவல்யநவநீதம்:பாடல் 41)

பஞ்சீகரணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஐம்பூதங்களில் ஆகாய பூதத்தை எடுத்துக்கொண்டால் அதன் தோற்றத்தில் ஆகாயம் சரிபாதி அடங்கியிருக்க எஞ்சிய பாதி ஏனைய நான்கு பூதங்களான வளி, தீ, நீர், நிலம் என சமமாகப் பிரிக்கப்பட்ட ஒரு பாதியின் கால் பங்கினால் நிறைவு பெறுகின்றது(1/8). அதாவது ஆகாய பூதத்தில் அதற்குரிய பொருள் ஒரு பாதியாக இருக்க (4/8ஸ்ர=1/2) எஞ்சிய ஒரு பாதியில் வளிக்கூறு 1/8, தீக்கூறு 1/8, நீர்க்கூறு 1/8, நிலக்கூறு 1/8 என்று எஞ்சிய பாதியமைந்து முழுமையான ஆகாய பூதம் தோற்றம் கொள்கின்றதென்பர். இவ்வாறு ஏனைய பூதங்களுக்கும் அதன் பகுதி சரிபாதியாக  அமைய ஏனைய நான்கு கூறுகளும் அமையும். இதுவே  பஞ்சீகரண முறைப்படி  ஐம்பூதங்களும் தோற்றமாகும் முறைமையாகும். இது வேதாந்த தத்துவத்துக்கு மட்டுமே உரிய  சிறப்பான கோட்பாடாகும். எனினும் ஆதிசங்கரர்  நூல்களில் பஞ்சீககரணக் கோட்பாடு காணப்படவில்லை என்றும் பிற்காலதத்தில் தோன்றிய குறிப்பாக சதானந்தரின் வேதாந்த சூத்திரத்தில் பேசப்படுகின்றது என்று டாக்டர் ச.இராதாகிருஷ்ணன் கூறியுள்ள கூற்று சுட்டிக்காட்டத்தக்கது.

சூக்கும சரீரத்தில் பிராணமயகோசம், விஞ்ஞானமயகோசம்,  மனோமயகோசம் என்பவற்றோடு விளங்கி தூல சரீரத்தைப் பெற்றதோடு அன்னமய கோசம் உண்டாயிற்று. மூலஆரோபம், சூக்கும ஆரோபம், தூலஆரோபம் என்பவற்றால் வரும் நுண்ணுடலும் பருவுடலும் ஈசனுக்கும் சீவனுக்கும் பொதுவேவாயினும் உபாதிகள் வேறுபாட்டால் அவர்களிடையே வேறுபாடு உண்டு. ஈசனுக்கு உபாதியாகிய மாயை காரண உபாதி என்றும் சமட்டி ரூபம் என்றும், சீவனுக்கு உபாதியாகிய அவித்தை காரிய உபாதி என்றும் வியட்டி ரூபம் என்றும் கொள்வர். வனத்தினை சமட்டியாகக் கருதின் அவ்வனத்திலுள்ள தனித்த விருட்சம் வியட்டியாகும். காரண, சூக்கும தூல சரீரங்களில் தனித்தனிப் பெயர்கள் சிவ ஈஸ்வரனுக்குச் சொல்லப்படுகின்றன. அவை

காரணசமட்டி - ஈஸ்வரன்

காரணவியட்டி - பிரக்ஞன்

சூக்குமசமட்டி - இரணியகருப்பன்

சூக்குமவியட்டி - தைச்சனன்

தூலசமட்டி - விராட்புருடன்

தூலவியட்டி - விசுவன் எனும் நாமங்களாகும்.

இதுவரை விட்சேப சக்தியின் சூக்கும, தூல ஆரோபங்கள் நோக்கப்பட்டது. இனி மற்றொரு ஆற்றலான மூடல் ஆற்றலான ஆபரணசக்தியை எடுத்துக்கொண்டால், ஆவரணசக்கி சீவர்களின் உள்ளுணர்வினை மறைத்து அறிவுக்குருடர்களாக ஆக்கவல்லது. பொருட்களின் உண்மை இயல்பினை அறிய ஒட்டாமல் மயக்கத்தையும் மறைப்பையும் செய்வது ஆவரணமேயாகும். காரிருள் விண், வெளி, பார், திசைகள் அனைத்தையும் மறைத்தலை தாண்டவராயர் ஆவரணசக்திக்கு உவமை கூறுகின்றார்.

“ஊனிடை உயிர்கள் உள்ளத்துணர்விழி குருடாம் வண்ணம்

வான்நிலம் திசைகள் மூடும் மழைநிசி இருள்போல் மூடும்” (கைவல்யநவநீதம்:பாடல்49)  எனும் பாடலாகும்.

ஆவரணசக்தியினால் பிரம்மத்தினையும் மாயையின் விருத்தியாகிய புறஉலகினையும் வேறுபடுத்திக்காண முடியாது. அத்தோடு அகவிருத்திகளாகிய அகங்காரம், புத்தி, மனம் என்பனவற்றிற்கும்; இடையேயான வேறுபாடுகளையும் காணமுடியாது. இம்மூடிமறைக்குமாற்றலின் விளைவால் பிறவிச் சுழற்சி ஏற்படுகின்;றது.

மாயையின் விட்சேப சக்தி பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணமாக அமைவதோடு முத்திக்கும் வித்திடுகிறகிறது விட்சேப சக்தி மூலமான தேகம், பிரபஞ்சம் என்பவற்றின் துணையினால் வீடுபேற்றை அடையலாம்;;;;;;;;;;. ஆபரணசக்தி நாஸ்தி, நபாதி என இரண்டு விதமாகும். வஸ்து நாஸ்தி – பிரம்மம் இல்லை என்பதை தோற்றுவித்தல். வஸ்துநபாதி என்பது பிரமம் இருந்தால் அதனைக் காணமுடியவில்லை. அதாவது  அது எனக்கு விளங்கவில்லை என்கிற நிலையைத் தருவது. இந்நிலையே ஆன்மாவிற்கு பிறப்பு, இறப்பு பந்தத்தை ஏற்படுத்துவது. அதுவே பிரபஞ்சத்திற்கு வித்தாகிவிடுகிறது.

ஆவரணசக்திக்கு சீவர்களுக்கு  புலப்படாதபடி ஆதாரத்தின் விசேடஉருவத்தினை மறைக்கமுடிகிறதே தவிர சாமானிய ஆதாரத்தை மறைக்க இயலாது. சான்றாக கயிற்றினை ‘இது ஒரு அரவு’என விவர்த்தமாக எண்ணும் போது கயிறு மறைந்து விடுகிறது. எனினும் இது என்னும் சொல்லினால் சுட்டப்பெற்ற சாமானிய உருவம் மறைக்கப்படுவதில்லை. இங்கு மயக்கநிலையில் அரவினை உணர்த்துவதும், அறிவுற்ற நிலையில் கயிற்றை உணர்த்துவதும் ‘இது’ என்பதாகும். இவ்வாறே, ‘நான் இருக்கிறேன்’ என்பதில் இருப்பது என்பது ஆவரணத்தால் மறைக்கப்படுவதில்லை. ‘நான் பிரமம்’ என்கிற விசேட உருவம் மறைக்கப்படுகின்றது.

ஆவரண விட்சேப வேறுபாடு

அவித்தையின் இருவகை சக்திகளுக்கும் வேறுபாடு உண்டு. விட்சேபம் சீவர்களுக்கு பஞ்சகோசங்கள், புறஉலகு என பிறவிகளுக்கு ஏதுவாக இருப்பினும் அதே சக்தி சாத்திரஞானம், சிந்தித்தல், தியானம் முதலிய பாவனைகளுக்கும் ஏதுவாகி விடுதலைக்கு வழிகோலும். இதனை சுருதி நூல்முறை ‘இந்த ஆவரணசக்திகாரியமே சம்சாரத் துக்கத்துக்கு மூலம். இதுவே பெந்தம், இதுவே பிரபஞ்சவிருட்சத்திற்கு வீசம் அல்லாமல் விட்சேப சக்திகாரியமே அனர்த்தத்திற்கு ஏது என்றும் அதுகொண்டு மோட்சம் சித்திக்கும் சாதனமாயிருக்கும் என்றும் அறி.’(சுருதிநூல்முறை.,1999:04) எனக் குறிப்பிடுகின்றது.

கனவினில் புலி துரத்துவதாகக் கனாக்கண்டவன் விழித்தெழுந்ததும் கனவுப்புலி பொய்யாயினும் அவ்வச்சக்கனவே விழிப்புலகிற்குக் கொண்டுவந்தது. அவ்வாறே சாதனங்கள் மாயைக்குரிய விட்சேப ஆற்றலின் படைப்பெனினும் உண்மையான வீடுபேற்றை நல்கும். வீடுபேற்றின் பின்னர் சாதனங்களால் பயனில்லை. மாயையை அழித்தற்கு மாயையே உதவுகின்றது.

பிரபஞ்ச உற்பத்தி முதல் வீடுபேறுவரைக்கும் சீவனுக்கு மாயையின் விளைவாக ஏழுவகை அவத்தைகளை வேதாந்தம் கூறுகின்றது. அவை அஞ்ஞானம், ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்சஞானம், துக்கநிவர்த்தி, ஆனந்தவாபத்தி என்பவையாகும். அதாவது தானே பிரம்மம் என்பதை சீவன் மறந்தமை அஞ்ஞானம். மறைப்பாற்றலால் பிரமம் இல்லை என்பது ஆவரணம். நான் மானிடன் வினை செய்கிறேன் என்றும் அனுபவிக்கிறேன் என்றும் கருதுவதால் சீவன் என்ற நிலை உருவாதல் விட்சேபம். ஞானகுருவின் உபதேசத்தினால் தன்னை பரமாத்மா என்றுணர்தல் பரோட்சஞானம். தத்துவவிசாரத்தினால் பிரமமும் தானும் ஐக்கியசொரூபம் என்றுணர்தல் அபரோட்சஞானம். சீவனின் தன்மைகள் நீங்கி வீடுபேறு ஆனந்தமாகும். இவ்வேழு அவத்தைகளையும் சுருதி நூலாசிரியரும் “தீர்வை என்ன சொல்லப்படுகின்றதென்றால் சீவனுக்குச் சத்தாவத்தை எண்டு சொல்லப்பட்டது. அதுதானென்றால் அஞ்ஞானம், ஆவரணம். விட்சேபம், பசோச்ச ஞானம், அபரச்சோ ஞானம், அநர்ததநிவிர்த்தி, ஆனந்தவாபத்தி யென்றறி.” (சுருதிநூல்முறை.,1999:04)  எனச் சுட்டுகிறார்.

ஞானவிசாரம் பெறுவதற்கான தகுதி

ஞானவிசாரத்தைப் பெறுவதற்கு தகுதியான அதிகாரி யார் என்பதை மேல்வருமாறு அடையாளப்படுத்துகிறது சுருதிநூல்முறை “சகல சாத்திரங்களுக்கும் விசயம், பிரயோசனம், சம்பந்தம், அதிகாரி என்ற நாலும் அநுபந்த சதுஷ்டயம் என்றறி. ஆனால் இந்த வேதாந்த சாத்திரத்துக்கு அநுபந்த சதுஷ்டயம் எதென்றால், விறுமமே விசயம், சம்பந்தம், பொத்தி போதகபாவம் எனலுமாம், சாதன சதுட்டய சம்பன்னனே அதிகாரியென்றறி….”(சுருதிநூல்முறை.,1999: பக்7)

முதலில் சத்தியஞானத்தை அறிவதற்குள்ள நான்கு இணைப்புகள் குறிப்பிடப்படுகின்றது. அவையாவன விஷயம், அறிவதால் ஏற்படும் பிரயோசனம், அதன்பயன், சாதனசதுட்டயங்கள் ஆகும். இவை அமையப்பெற்றவன் அதிகாரியாக அமைகிறான். தமிழ் வேதாந்திகள் குருவின் போதனைகளையும் அதனால் சீடன் அடைகின்ற விழிப்பை பொத்திபோதகபாவம் எனக் குறிப்பிடுவர்.

மேலும் ஞானவிசாரம் பெறுவதற்கான அதிகாரிக்கான தகுதிகளாக நான்கு விடயங்கள் சொல்லப்படுகின்றன. அவை நித்திய அநித்திய பொருட்கள் எவையென அறிந்திருத்தல், இகபரசுகங்களை வெறுத்து ஒதுக்குதல், ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தல், விடுதலைபெற வேண்டுமென்ற தீவிர விருப்பு. இவற்றை உடையவனையே தகுதிவாய்ந்தவனாக சுட்டுகிறது.

“சாதனசதுஷ்டயம் எதென்றால் நித்தியாநித்திய வஸ்து விவேகம் என்றும் இகாமுத்ரார்த்த பல போகவிராஜம் என்றும் சமாதிசட்க சம்பத்தென்றும் முமுட்சுத்துவம் என்றுமறி” (சுருதிநூல்முறை.,1999:ப.7)

வேதாந்த சாத்திரங்கள் உய்தி பெறுவதற்குரிய உபாயங்களாக சாதன சதுட்டயம் எனும் நான்கு வழிமுறைகளை முன்வைக்கின்றன. அவை நித்திய அநித்திய விவேகம். நிராசை, சமாதி சட்கம், முமுட்சுத்துவம் என்பனவாகும்.

நித்திய அநித்திய விவேகம் என்பது தத்துவஞானத்திற்கு நிலைபேறுடையது எது, நிலைபேறல்லாதது எது என்பதை பகுத்தறியும் விவேகமாகும். அதாவது பிரமம் மட்டுமே நித்தியம், ஆன்மா பிரமத்தின் வேறன்று, உலகம் மித்தை என்றும் பகுத்தறிவதாகும். இதனை சுருதிநூலாசிரியர் “சுருதிமிருதி இதிகாச புராணங்களிலே பல நாளுங்கேட்டு விறுமமே நித்தியமென்றும் பிரபஞ்சமெல்லாம் அநித்தியமென்றும் தன்மனசிலே தான் எண்ணியிருப்பது நித்தியாநித்திய வஸ்து விவேகமென்றறி” (சுருதிநூல்முறை.,1999:22)  என்று  தெளிவுறுத்துகிறார்.

மெய்யுணர்விற்கு அடிப்படையாவது இகபரங்களினால் வருகின்ற போகங்களில் ஏற்படும் நிராசையேயாகும். இதனை வேதாந்த நூல்கள் ‘இகாமுத்ரார்த்த பலபோக விகாரம்’ என்கிறது. அதாவது உய்தி பெறுவதற்;கு இம்மை இன்பம், மறுமை இன்பம், போகசுகம் தவிர்த்தல் தகுதியாகக் கூறப்படுகின்றன.

மூன்றாவது சமாதிசட்க சம்பத்தாகும். சமம், தமம், உபரதி(விடல்), திதிட்சை(சகித்தல்), சமாதானம், சிரத்தை எனும் ஆறுமே சட்கமாகும். அந்தக்கரணங்களை அடக்கியாளுதல் சமமாகும். அறிகருவிகள், புறக்கருவிகள் என்பவற்றை தடுத்துநிறுத்தல் தமம். நன்மை, தீமை, இரண்டின் கலவை ஆகியவைகளை நீக்குதல் உபரதியாகும். துன்பத்துக்கு துவளாமல் தாங்கி கொள்வது சகித்தல், சமாதானமென்பது நித்தியாசனமாகும். முத்தியை விரும்பும் இச்சையே முமுட்சுத்துவமாகும்.

முமுட்சுத்துவம் எனப்படுகின்ற விடுதலை வேண்டுமென்கின்ற பேரவா எப்படி இருக்க வேண்டுமென்றால் வீடு தீப்பற்றி எரிகின்றபோது பாதுகாப்பான, குளிர்ந்த இடம் தேடி ஓடுவது போல் இருக்க வேண்டும் என்கின்றார். அதாவது உலகியல் வாழ்விலிருந்தவனானாயிலும் தாபத்திரயங்களிலிருந்து விடுதலை பெற தீவிரமாக முயலுதல் வேண்டும். “எப்படியென்றால் அக்கினியானது பற்றி எரிகிற கிருகத்திலே அகப்பட்ட புருள்சன் அந்தப்புகையும் சூடும் சகிக்கப்படாமல் தான், அபிமான புத்திர மித்திர களத்திரதானியத்தையெல்லாம் விட்டுவிட்டு வெளியே புறப்பட்டு குளமெங்கே நல்ல தண்ணீரெங்கே குளிந்த காரெங்கே என்று திரும்பியும் பாராமல் ஓடுகிறாப்போல…..”(சுருதிநூல்முறை.,1999:07)

இவ்வாறு விடுதலைக்குரிய வழிமுறைகளை பரிந்துரை செய்கின்ற போது ஆன்மாவிற்கு ஆத்மவிசாரம் பெறுவதற்கான தகுதி வேண்டும், தகுதி பெற்றவன் இன்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் பரிந்துரை செய்தாலும் அதற்கப்பால் இறையருள் கிட்ட வேண்டுமென்கிறார். அத்தோடு தத்துவஞானத்தை தருவதே ஈஸ்வரன் தான் என்கிறார். “நித்தியாநித்திய வத்துவிவேகம் ஈசுவரானுக்கிரகத்தினாலல்லாமல் எளிதாய் வந்த பலமல்ல என்றறி. தத்துவஞான பிரதாயகனும் அந்த ஈசுவரனேயில்லாமல் சீவனல்ல என்றறி…..”(சுருதிநூல்முறை.,1999:08)

இந்நான்கு சாதனங்ளையும் நிறைவேற்றுவோர் மெய்ஞ்ஞானம் கைவரப்பெறுவர். தாமே பிரமம் என்று உணருமிடத்து சீவித்திருக்கும் போதே முத்தி பெறுவர். சீவன் முத்தர்களின் இயல்பினையும் சுருதிநூல் முறை எடுத்துரைத்துள்ளது.

ஞானம்

ஆபரணசக்தியின் மறைப்பாற்றலை ஞானமே போக்கும். ஞானமானது பரோட்ச ஞானம், அபரோட்சஞானம் என இருவகைப்படும். குரு மூலமாக பிரமம் உண்டு என அறிதலே பரோட்ச ஞானமாகும். இது ஆபரணசக்தியின் வஸ்து நபாதியைப் போக்கும். குருவிடம் கேட்ட சிரவனத்தை சிந்தித்து தெளிகின்றபோது வஸ்து நபாதி எனும் உணர்வும் சந்தேகமும் நீங்கி தானே ஆத்ம சொரூபம் என்ற அறிவு பிறக்கும். இதுவே அபரோட்ச ஞானம்.

ரச்சு சர்ப்பமாக பிரத்தியட்சமாவதில் சர்ப்பம் அசத்தியம் என்பதையும் ரச்சு தான் சத்தியம் என்பதையும் அறிவது போல அபவாதத்தில் காரணத்துக்கு வேறான காரியமில்லை. பிரம்மசத்தியம் என்பது அறியப்படும். தூல காரியங்களுக்கு சூக்குமம் காரணமெனவும் சூக்கும காரியங்களுக்கு மாயப்பிரகிருதியே காரணமென்றும் பிரகிருதிக்கு ரிவாதிட்டமாகிய பிரமமே காரணம் என ஞானவிசாரணையால் அறிவர். இதுவே அபவாதம். பிரபஞ்சம் தோற்றம் என்ற மெய்ஞானம் ஏற்பட்டதும் மாயையும் மறைந்து விடுகிறது. மாயை அநிர்வசனீயம். இந்நிலையில்  நானே சைதன்யம் என உணர்பவன், அறிபவன் முக்தன்.

முக்தி என்பது சரீரத்தை விடுவதால் அல்லது நீக்குவதால் மட்டும் ஏற்படுவது என்பது தவறான கற்பிதம் என்கிறது அத்வைதம். கனவு நிலையில் சுகத்தை அனுபவிக்கும் போது சீவனுக்கு சரீரத்தொடர்பு இல்லை. இந்த சுழுத்தி நிலை அஞ்ஞானத்தோடு கூடிய ஒரு அவஸ்தையே. எனவே சுழுத்தி சுகமும் முத்தி சுகமும் ஒன்றல்ல. சரீரத்தொடர்பை விட்டுவிட்டால் முத்தியடையலாம் என்பது தவறு. பிரளய காலத்தில் எல்லா சீவன்களது சரீரமும் அழிந்து மீண்டும் சிருஷ்டியில் அவை பிறக்கின்றன. எனவே சரீரம் மட்டும் அழிவதால் முத்தி உண்டாகாது. அஞ்ஞானம் அழிந்தால் முத்தி உண்டாகிறது. “சுழுத்திசுகம் சகலருக்கும் எப்படியோ, அப்படியே. அந்த முத்திசுகம் பிரத்தியட்சமென்றறி. எப்படியென்றால் சுழுத்தி சுகமும் முத்தி சுகமும் அசரீரசுகமானபடியினாலே இதுபோல அதுவும் அவனுக்கு தெரியும். எல்லாருஞ் சொல்லி ஒப்புவிக்கப்படாதென்றறி. ஆனால் சுழுத்தியும் முத்தியும் சமமானால் சுழுத்தி, முத்தியாகாமற் போவானேன் என்றால் அஞ்ஞான நிருவிருத்தியில்லாமல் முத்தி கூடாது…” (சுருதிநூல்முறை.,1999:14)

சீவன் முத்தர்கள்

சீவித்திருக்கும் போதே முத்தி பெற்ற இவர்;களின் பிராரத்த கன்மத்தின் தாரதம்மியம், அருஞ்சாதனைகள், போக்குகள் என்பவற்றின் அடிப்படையில் நால்வகையினராகப் பாகுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் பிரமவித்து, பிரமவரன், பிரமவரியான், பிரமவரிட்டன் என்பவராவர். இவர்களுக்கிடையில் சிறிது பேதங்கள் இருந்தபோதிலும் நான்கு வகையினரும் முத்தர்களே.

பிரமவித்து விருத்தி சூனியன். இவருக்கென்று எந்தக் கன்மங்களுமில்லை. பிறருடைய கன்மங்களும் இவரைப் பாதிக்காது. தேகத்தை வீழ்த்திவிட்டு பூரணராகக் கூடியவரானாலும் உலகநன்மைக்காக சிலகாலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏனைய மூவரும் தமக்கெனக் கருமமற்றவர்கள் எனினும் உலக நன்மைக்காக சில காரியங்கள் செய்பவராகவும், பிராரத்துவ கன்மத்தை அனுபவித்துத் தீர்ப்பவர்களாகவுமிருப்பர். இந்நால்வகையினரின் வகைப்பாடு மேல்வருமாறு சுருதிநூல்முறையில் விளக்கப்பட்டுள்ளது. “விறுமவித்து, விறுமவான், விறுமவாரியான், விறுமவரிட்டன் என்று தத்துவஞானி நாலு பிரகாரமாயிருப்பான். அதிலே விறுமவித்து விதேக முத்தன். மற்ற மூவரும் சீவன் முத்தர் என்றறி. இந்தநாலு பேருக்குள் விறுமவித்து மாத்திரமே விருத்தி சூனியன். அவன் எப்படியிருந்தாலும் அவனுக்கு விதி நிஷேதனமில்லை.” (சுருதிநூல்முறை.,1999:22)

விதேகமுத்தி தேகம் நீங்கிய பின் பெறுவது. காரண சரீரம் தத்துவ ஞானத்தால் வெந்து விட, தூல சரீரம் பிணமாகி விழும். சூக்கும சரீரம் பிரமசொரூபத்தில் இலயித்துவிடும். தத்துவமஸி என்ற மகா வாக்கிய விளக்கமான அத்வைத அனுபவம் நிலைபெறும்.

நிறைவாக

சங்கரரால் வரையறைப்படுத்தப்பட்ட அத்வைத வேதாந்த மெய்யியலானது அவரது சீடர்கள் வழி நீட்சி பெற்று காலத்திற்குக் காலம் பல வேதாந்த இலக்கியங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. அந்தவகையில் விஜயநகர நாயக்கர் காலத்தில் தோற்றம் பெற்ற தமிழ் வேதாந்த நூல்களைத் தொடர்ந்து இலங்கையிலும் தமிழ் அத்வைதப் பனுவல்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அம்மரபில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள முதன்நிலை அத்வைதப்பனுவலான சுருதிநூல் முறை தமிழ் அத்வைத வேதாந்த மரபிற்கமைவான பொருளமைவைக் கொண்டமைந்துள்ளதோடு அத்வைத வேதாந்தத்தின் அடிப்படைகளைத் தெளிவாக முன்வைக்கின்ற பனுவலாகவும் திகழ்கின்றது.

உசாத்துணை நூல்கள்

1.கந்தசாமி.சோ.ந.,(2003),இந்தியத் தத்துவக்களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், ப.215.

2.சிவசுப்பிரமணியம்.வ.,(பதி),(1999), சுருதிநூல்முறை, சென் ஜோசப் கத்தோலிக்கப்பதிப்பகம், மட்டக்களப்பு.

3.தாண்டவராயசுவாமிகள், (1974), கைவல்யநவநீதம் மூலமும் தெளிவுரையும்,ஆனந்தபோதினி, இந்தியா,

4.ஞானகுமாரன்.நா.,(2012), வேதாந்த மெய்யியல், சேமமடு பதிப்பகம், கொழும்பு, ப.75

5.முகுந்தன்.ச.,(2022), வேதாந்த மெய்யியலின் நீட்சியும் நெகிழ்ச்சியும், ஸ்ரீ சிவகுருநாதபீடம் வேதாந்த மடம், யாழ்ப்பாணம், ப. 224.

6.முகுந்தன்.ச.,(2022), இந்துநாகரிகம் ஓர் அறிமுகம், குமரன் புத்தகஇல்லம், கொழும்பு, ப.122.