ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

காலமும் - வெளியும் - காரைக்காலம்மையார் பிரபந்தங்கள் மற்றும் மணிவாசகரின் திருவாசகத்தை முன்னிறுத்திய உரையாடல்

Dr.S. Muhunthan, Senior Lecturer, Dept of Hindu Civilization, University of Jaffna 08 Sep 2022 Read Full PDF

காலமும் - வெளியும் - காரைக்காலம்மையார் பிரபந்தங்கள் மற்றும் மணிவாசகரின் திருவாசகத்தை முன்னிறுத்திய உரையாடல்

Time and space - a dialogue presented by Karaikalammaiyar's Prabandhams and Manivasaka's Thiruvasakam

Dr.S. Muhunthan, Senior Lecturer, Dept of Hindu Civilization, University of Jaffna

 

Abstract

The dual entities like time and space play an important role in the development of theories related to physical and Meta physical Dogmas. The same applies to the fields of science, philosophy, and spirituality. In the Hindu tradition, Prabhanda’s of Karaikalammaiyar contain more ideas related to space. New ideas have been revealed in these especially about Liminal Space' and Muppal. In Manivasaka's Thiruvasaka, the concepts of 'Time' are more elaborated than the concept of space. The Dimensional Theory of time, the Block Universe Theory of time and the Circular theory of Time are oriented in this way.

Key words: Time, Space, Karaikalammaiyar, Meta physical, Thiruvasaka

ஆய்வுச் சுருக்கம்

பௌதிக மற்றும் பௌதிக அதீதம் தொடர்புடைய கோட்பாடுகளின் வளர்ச்சியில் காலம் - வெளி ஆகிய இருமைகள் முக்கிய இடத்தை வகித்து வந்துள்ளன. அறிவியல், மெய்யியல், ஆன்மிகம் ஆகிய தளங்களுக்கும் இது பொருந்தும். இந்துசமய மரபில் காரைக்காலம்மையாரின் பிரபந்தங்களில் வெளி தொடர்பான கருத்துக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'மீவியல் வெளி" பற்றியும், முப்பாழ் பற்றியும் இவற்றில் புதிய சிந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மணிவாசகரின் திருவாசகத்தில் 'காலம்" பற்றிய கருத்தமைவுகள் வெளியைக் காட்டிலும் அதிகம் விவரிக்கப்பட்டுள்ளன. காலப்பரிமாணக்கொள்கை, காலம் பற்றிய கட்ட அமைவுக்கொள்கை, காலச்சக்கரக்கொள்கை ஆகியன இவ்வகையில் நோக்கற்பாலன.

திறவுச் சொற்கள்: காலம், வெளி, காரைக்காலம்மையார், திருவாசகம், பௌதிக அதீதம்.

 

அறிமுகம்

பிரபஞ்ச இயற்கையின் செயற்பாடுகள் அனைத்தும் இரண்டு அச்சுக்களில் நடந்தேறுகின்றது. அவையே காலம் - வெளி ஆகிய இருபெரும் தத்துவங்களாகும். காலம்இ வெளி ஆகிய இவ்விருமைகள் இல்லாவிடில் பௌதிக விதிகள் அனைத்துமே பொய்ப்பித்துப் போய்விடும் என்பதனை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.சேதனம் அசேதனம் ஆகியவற்றின் கலவையாக அமையப்பெற்ற இந்த இயற்கைப் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் காலத்தையும் வெளியையும் நான்காம் பரிமாணமாகக் கொண்டு நிகழ்பவையாகும்.

 “பௌதீகப் பிரபஞ்சத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிற்கும் காலம்இ வெளி ஆகிய

இருமைகளே கொள்கலனாக விளங்குகின்றன. இவை இரண்டும் முடிவிலிகள். இம்முடிவிலிக் கொள்கலனானது நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவோ கொள்ளாததாகவோ காணப்படலாம். காலமும் வெளியும் பருப்பொருட்களால் ஆனவையன்று. ஆயினும் பிரபஞ்சத்தின் அனைத்துப் பருப்பொருட்களையும் தம்முள் தாங்கியவை கடவுளைத்தவிர வேறென்றினாலும் தாங்கப்படாதவை” எனக் காலம் வெளி ஆகியவை பற்றி சேர் ஐசாக் நியூட்டன் தனது ‘‘Absolute theory of Speace and time’ என்ற கோட்பாட்டில் விவரித்துள்ளார்.

(“Newton argued very specifically that time and space are infinitely large container that exists with or without not material substances but is like substances out depending on anything else except God.”     -The Internet Encyclopedia of Philosophy)

மெய்யியலாளர்கள் பிரபஞ்ச இயற்கையின் பண்புகளுடன் மனித மனத்தின்

தன்மைகளையும் இணைத்துக்கொண்டே காலம் - வெளி பற்றி ஆராய்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் ஹியூம் என்பவரின் கருத்து இவ்வாறாக அமைகின்றது.“எண்ணங்களைப் பிணைக்கின்ற ஒரு தன்மையினால் மனமானது இயற்கையில் தான் பெற்றுக்கொள்கின்ற அனுபவங்களினைக்காலம் வெளி ஆகியவற்றோடு தொடர்புபடுத்திப் பிணைக்கிறது”என அவர் குறிப்பிடுகின்றார். (Barbet, Harrison Antony: 2001:27)

“கான்ற்” என்ற மெய்யியலறிஞரின் கருத்துப்படி புலன்சார்பற்ற வடிவங்களான காலம்- வெளி ஆகியவற்றின் உதவியின்றி மனத்தினால் புலன்களால் பெறப்பட்ட பிரபஞ்ச இயற்கையின் தரவுகளை உணரவும்  அதன்வழி கிடைக்கும் அனுபவங்களை அனுபவிக்கவும் இயலாது.

ஹென்றிபேர்கிஸன் என்பவரும் வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் உயிர்ப்பரிணாம வளர்ச்சியைக் காலம் வெளியுடன். தொடர்புபடுத்தியுள்ளனர். காலம் என்பதும் மாற்றம் என்பதும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை என்றும் மாற்றம் நிகழ்கின்றது எனின் அது காலத்தின் அடிப்படையிலேயே நிகழ வேண்டும் என்றும் இவர்கள் கருதுகின்றனர். உயிர்ப்பரிணாம வளர்ச்சியும் காலத்தின் தொடர்ச்சியான இயக்கத்தால் நிகழ்கிறது என்றே இவர்கள் கருதுகின்றனர். இதனையே ஹென்றிபேர்கிஸன் ““Creative Evolution”” என்கிறார். (வாழ்வியற்களஞ்சியம் -தொகுதி7:252-254.)

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த எமது மூதாதையர் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். அவர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்த பழந்தமிழ் இலக்கியங்கள் காலத்தையும் வெளியையும் முதற்பொருளாகக் கண்டன. வெளியை நிலமென்றும் காலத்தைப் பொழுதென்றும் சங்க இலக்கியமரபு இவ்விருமைகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அடையாளப்படுத்தின.

பௌதிக இயற்கை பக்தி இயற்கையாகப் பரிணமித்த சந்தர்ப்பங்களிலும்இ பக்தி இயற்கை தத்துவாதீதமாகத் தலைப்பட்டு பர இயற்கையாக முகிழ்ப்புற்ற மடைமாற்றங்களின் போதும் காலம் - வெளி ஆகிய இயற்கையின் அச்சுக்களும் தம்மை அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு தமிழ் இலக்கிய மரபோடும் சமய தத்துவ மரபோடும் பயணித்தன.  காலம் - வெளி பற்றிய ஆய்வுகள் அறிவியல் நோக்கிலும்இ மெய்யியல் நோக்கிலும் சமயவியல் நோக்கிலும் மானுடவியல் நோக்கிலுமெனப் பற்பல பரிமாணங்களில் நடைபெற்று வந்துள்ளன.

அந்தவகையில் குறித்த இந்த ஆய்வானது சமய – தத்துவ நோக்குநிலையில் காலம் - வெளி ஆகிய இருமைகளை அணுகுகிறது. சைவத்திருமுறைகளை ஆய்வுப்பரப்பாகக் கொண்டிருப்பினும்ஆய்வுப்பரப்பின் விசாலம் கருதியும் எண்ணக்கருவீச்சின் செறிவுநிலையைக் கருத்திற்கொண்டும் பொருத்தமான பனுவல் தேர்வு அவசியமாயிற்று.அந்தவகையில் காரைக்காலம்மையாரின் பனுவல்கள் மற்றும் மணிவாசகரின் திருவாசகம் ஆகியவற்றைத் தேர்ந்த பனுவல்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் நியாயப்பாடு :

சமயக் கதையாடலில் மீவியல் வெளியாக சுட்டப்படும் மயானம் - இடுகாடு -சுடுகாடு பற்றிய அதீத பிரக்ஞையினைக் காரைக்காலம்மையார் தனது பனுவல்களில் வெளிப்படுத்தியுள்ளமை. (குறிப்பாகத் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்)•மணிவாகரின் வாழ்வில் காலதத்துவம் (ஆவணி மாதம் மூலநாள்) ஏற்படுத்திய மடைமாற்றம்.இவையே காலம் - வெளி ஆகிய இரண்டு கருத்தியல்களையும் ஆய்ந்து பர்ர்ப்பதற்குப் பொருத்தமான வசதிமாதிரிகளாக இவ்விரு அருளாளர்களின் பனுவல்களைத் தேர்வுசெய்வதற்கான நியாயப்பாடாக அமைந்துள்ளன.

ஆய்வு முறையியல் :

விவரண ஆய்வு முறையியலைப் பெரிதும் பின்பற்றிச் செல்லும் இவ்வாய்வுக்கட்டுரையில் அவசியமான சந்தர்ப்பங்களில் ஒப்பீட்டாய்வு அணுகுமுறையும் பின்பற்றப்படும். பொருத்தமான சந்தர்ப்பங்களில் தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

ஆய்வின் முதன்மை மூலங்கள் :

பன்னிரு திருமுறைகளில் குறிப்பாக எட்டாம் திருமறையாய் அமைகின்ற திருவாசகத்தையும்இ பதினொராம் திருமுறையில் இரண்டாம் பனுவலாய் அமைந்த காரைக்கால் அம்மையாரின் நான்கு பனுவல்களையும் இவற்றுக்கான உரைகளையும்இ இந்த ஆய்வுக்கான முதன்மை மூலங்களாகச் சுட்டலாம்.

காரைக்காலம்மையாரின் கருத்துநிலையில் வெளி

சைவத்திருமுறைகள் பன்னிரண்டுள் பதினொராம் திருமறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்கள் காரைக்காலம்மையாருடையனவாகும்.

1) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2) மூத்த திருப்பதிகம் 3) திருவிரட்டை மணிமாலை 4) அற்புதத் திருவந்தாதி ஆகிய நான்குமே அவையாகும்.

காரைக்காலம்மையாரின்  பிரபந்தங்களில் வெளித்தத்துவத்தோடும்இ கால-தத்துவத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்படுவது “மயானம்” என்கிற குறியீடாகும்.குறிப்பாக அவருடைய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் இடம்பெறும் “மயானத்”துடன் தொடர்புடைய வர்ணனைகள் சமயமானிடவியல் ரீதியிலும்இ சித்தர் மெய்யியல் நோக்கிலும் கட்டவிழ்ப்புச் செய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த அய்வு உணர்த்தியுள்ளது.இங்கே “வெளி” பற்றிய சமயமானிடவியற் கோட்பாட்டில் “மயானம்” என்பதனை மீவியல் வெளி (liminal space) என்பர். மீவியல் வெளி என்ற கருத்தியலுக்கு ஏகாந்தம்இ அந்தகாரம், வெறுமை முக்கியமானதொரு முடிவை எதிர்பார்த்திருக்கும் தருணம் என்றெல்லாம் விளக்கங்கள்; தரப்பட்டுள்ளன.இதையே மயானம் என்ற குறியீடும் புலப்படுத்தியுள்ளது.

பௌதீகவெளிக்கும் பௌதீக அதீதவெளிக்கும் இடையிலான காத்திருப்புப் பிரதேசமே  மீவியல் வெளியாகும்.இவ்வெளியின் கிடை அச்சானது மயானம்-காடு எனவும் நிலைக்குத்தச்சு அந்தரவெளிஃசூனியவெளி என்றும் விளக்கமுறும். இயற்கை நெறிக்காலத்தில்  ஐவகை வெளிகளுக்கும்;(5 நிலங்கள்) ஐவகை வெளித் தெய்வங்கள் (நிலத்தெய்வங்கள்) இருந்தன. “முல்லையும் குறிஞ்சியும் முறைபடத்திரிந்து” தோன்றும் பாலை தமிழகத்தில் நிரந்தர நிலவகையீட்டிலொன்றாகக் கருதப்படவில்லை.இதுவே மீவியல் வெளியின் கிடை அச்சாகச் சங்ககாலத்தில் திகழ்ந்தது. மயானம்- காடு-யுத்தசூனியப்பிரதேசம், காடுகிழாள், பேய்கள் இபேய்மகளிர் என மிகுதிச்சங்கதிகள் யாவும் இங்கே அமைவுற்று விளங்குவதனைச் சங்கஇலக்கியங்கள் எமக்குச் சான்று பகர்கின்றன.

கி.பி.6-7ஆம் ஆண்டிற்கு முன்னர் பாசுபதம்இ காபாலிகம் முதலிய சைவப்பிரிவுகள் பற்றிய எத்தகைய இலக்கியச் சான்றும் தமிழ்நாட்டில் இனங்காணப்படவில்லை. மயானம் சிவனுடன் தொடர்புபடுத்தப்படவில்லை.  ஆனால் காரைக்காலம்மையாரோ சிவனைப் பௌதிக வெளியிலிருந்து மீவியல் வெளியை நோக்கி இழுத்து வருகிறார். சங்கஇலக்கியங்கள் நகரில் வைத்துப் போற்றிய சிவன்(“முக்கட்செல்வர் நகர்வலம் செயற்கே” புறநானூறு-இங்கே நகர் என்பது கோயிலைச்சுட்டும்.) காரைக்காலம்மையாரால் மயான வெளியினை நோக்கி நகர்த்தப்படுகிறார்.

 “புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவரைப்

 புறங்காட்டில் இட்டு

 .......................

 அந்தியில் மாநடம் ஆடும் எங்கள்

 அப்பன் இடம் திரு ஆலங்காடே”                               (தி.ஆலங். மூத்த.திருப். 10)

 

“அண்டம் உற நிமிர்ந்தாடும் எங்கள்

அப்பன் இடம் திரு ஆலங்காடே”                 (தி.ஆலங். மூத்த.திருப். 4)

 

விதம் விதமான பேய்கள், பிணம் தின்னுதல், ஈமத்தீ, நள்ளிரவில் சிவன் ஆடும் தாண்டவம், காரை, சூரை பற்றைகள் இவற்றுடன் காட்சிப்படுத்தப்பட்ட திருஆலங்காடு குறியீட்டுத்தன்மை வாய்ந்தது.

சங்க இலக்கியங்களில்  பௌதீகவெளி முதன்நிலைப்படுத்தப்பட்டிருந்தது. லௌகீகப் பயன்களுக்காக ஐந்து வகை வெளித்தெய்வங்கள் வணங்கப்பட்டன. இந்தத்  தளத்திலிருந்து பௌதீக அதீதவெளிக்கு  இட்டுசெல்வதற்கான மீவியல் வெளியாகக் காரைக்காலம்மையார் மயானமாக அடையாளப்படுத்தியிருத்தல் பொருத்தமானதேயாகும்.ஏனைனில் முன்பே குறிப்பிட்டுள்ளமை போன்று பௌதிகவெளிக்கும் பௌதிக அதீதவெளிக்கும் இடையிலான காத்திருப்புப் பிரதேசமே  மீவியல் வெளியாகும்.எனவே நகரில் குடிகொண்டிருந்த பிறவாயாக்கைப் பெரியோனை “மயானம்”  என்கிற மீவியல் வெளியில் வைத்துப் போற்றுதல் யதார்த்தபூர்வமானதேயாகும். 

தத்துவார்த்த மரபில் வெளி:

சித்தர் தத்துவார்த்த மரபில் வெளி மூன்று வகையாக எடுத்தாளப்படும்.

1)             அண்டவெளி      - மகா ஆகாசம் /மாயப்பாழ்)

2)           அகவெளி / சிதாகாசம்        - சீவப்பாழ்

3)           பரவெளி / ஒளிவெளி           -சித்தாகாசம் , வியோமப்பாழ்)

        “புறத்துள ஆகாசம் புவனம் உலகம்

          ஆகத்துள ஆகாசம் எம்ஆதி அறிவு

          சிவத்துள ஆகாசம் செழுஞ் சோதி”                (தி.மந். 2812)

பெருவெளியைப் புறங்கண்டு (மாயப்பாழை)அகவெளியின் ஸ்தானமாகிய சிரசின் உச்சியில் (இதுவே சீவப்பாழ் ஃ சிதாகாசம்)  மனோலயத்தை நிறுத்தி (சித்த விருத்தியை நிறுத்தி) வியோமப்பாழாகிய பரவெளியில் லயித்திருக்க முனைவதே சித்தர்கள் கூறும் யோகசமாதியாகும்.இதுவே சீவன் முக்தர் நிலையாகும்.கா

“உட்க விழிக்க ஊமன் வெருட்ட

ஓரி கதிக்கும் ஒண் பெருவெளியில்

பிட்க நட்டம் பேணும் இறைவன்”  (தி.ஆலங்.மூத்த.திருப். 10)

 

“ஒப்பினையில்லவன் பேய்கள் கூடி

ஓன்றினை ஒன்றடித் தொக்கலித்து

புப்பினையிட்டகப் பாழ்வெளியை” (தி.ஆலங். மூத்த.திருப்.11)

 

“பித்தர் வேடங் கொண்டு நட்டம்

 பெருமானாடும்; பரவெளியில்”

 

காரைக்காலம்மையார் மேற்சுட்டப்பட்ட மூன்று பாடல்களிலும் சித்தர் இலக்கியங்கள் பிற்காலத்தில் பிரபல்யப்படுத்திய மூன்று வகை வெளிகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளமை நோக்கற்பாலது.

பேய்கள்:

சித்தர் இலக்கியத்தின் கண்கொண்டு பார்த்தல் பூத உடல் என்பது பிரகிருதிமாயையாகிய பருஉடலாகும். பேய் என்றது நுண்உடலாகிய ஞானஉடலாகும்.

                                (மீப. சோமசுந்தரம், 3.2004:105).

மாயப்பாழை சாராமல் வியோமபாழை ஃ பரவெளியைச் சாருவதால் வரும் அறிவினைக் குறித்ததே பேயறிவு ஆகும்.

                              “தன்னை அறியவேணும் அகப்பேய்

              சாராமற் சாரவேணும் அகப்பேய்

              பின்னை அறிவதெல்லாம் அகப்பேய்

              பேயறிவாகுமடி” (அகப்பேய்ச்சித்தர் பாடல்)

 

காரைக்காலம்மையார் தன்னைத் தானே அடிக்கடி பேய் என்றே தனது பிரபந்தங்களில் சுட்டியுள்ளார்.மேலும் திருத்தொண்டர் தொகையிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளால் “பேயார்” என வாஞ்சையோடு காரைக்காலம்மையார் சுட்டியழைக்கப்படுகிறார்.

                     “பெருமிழலைக் குறும்பர்க்கும்

           பேயார்க்கும் அடியேன்”(திருத்தொண்டர் புராணம.4;)

 

 எனவே தத்துவார்த்த நிலையில் நின்று நோக்கினாலும் அம்மையார்  சஞ்சரிக்கும்  வெளியை அவ்வளவு சாதாரணமாக விரக்தியுற்ற மனோநிலையின் குறியீடாகக் கருதிக் கடந்து போய்விட முடியாது.

மணிவாசகர் திருவாசகத்தில் காலதத்துவம்:

பொதுவாகக் காலதத்துவம் பற்றி ஆராய்ந்தவர்கள் பல்வேறு சிந்தனைகளை

வெளிப்படுத்தி இருந்தாலும் பிரபஞ்ச இயற்கையுடன் காலம் தொடர்புறுகின்ற வகையில் அமைந்த மூன்று கோட்பாடுகள் பிரபல்யமானவை. காலம் என்ற தத்துவத்தை இயற்கையோடும் மனித வாழ்வோடும் இணைத்து ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் “Cosmo - Biology”” என்ற பிரபஞ்ச உயிரியல் நோக்கில் பின்வரும் மூன்று அடிப்படைச் கோட்பாடுகளை காலதத்துவம் தொடர்பாக முன்வைத்துள்ளனர். அவை பின்வருமாறு :

1)           காலப்பரிமாணக் கொள்கை (The dimensional Theory)

2)           காலக் கட்ட அமைவுக் கொள்கை The Block universe view of time)

3)           காலச்சக்கரக்கொள்கை (The Circular theory of time)

இவை மேலைத்தேச மெய்யியற் சிந்தனாகூடங்களில் மட்டுமன்றி இந்திய மெய்யியற்புலத்திலும் (குறிப்பாகச் சித்தர் மெய்யியலில்)பயின்றுவரப்பட்ட கருத்தியல்களே எனலாம். (Helaine,                            

                                                                      (S., Narashima, R., (ed): 2007: 293)

  மணிவாசகரின் திருவாசகம் ஐம்பத்தொரு பகுதிகளையும் அறுநூற்று ஐம்பத்தெட்டுப்பாடல்களையும் கொண்டது.அடிகளாருடைய மாபெரும் கல்விப் பெருக்கமும்    மெய்ஞ்ஞானத்தோடு சேர்ந்த விஞ்ஞான அறிவும் மணிவாசகரை ஓர் ஆன்மீக வாதியாக மட்டுமல்லாமல் தத்துவ ஆராய்ச்சியாளனாயும் சிறந்த விஞ்ஞான  முடிவுகளைப் பதிவு செய்துள்ள  அறிவியல் நிபுணராயும் எண்ணவைப்பதாக பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் குறிப்பிடுவதும் இங்கே சுட்டிக்காட்டதக்கது.

                                 (ஞானசம்பந்தன். அ.ச.1: 2007:05)

எனவே காலதத்துவம் பற்றிய மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளை திருவாசகத்தில் தேடவிழைவதன் நியாயப்பாட்டையும்  யாரும் புறத்தொதுக்கவியலாது.

காலப்பரிமாணக் கொள்கை (The Dimensional Theory of time)

இயற்கை முகாமைத்துவ சிந்தனை மரபில் காலப்பரிமாணம் பற்றிய கோட்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மெய்யியலாளர்கள் மட்டுமின்றி நவீன பௌதீகவியலாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையப்பெற்ற இக்கோட்பாடானது இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பௌதீக விஞ்ஞானியான சேர்அல்பேட் ஐன்ஸ்டீனின் சார்புத் தேற்றத்தில் தெளிவுபடுத்தப்பட்ட ஒன்றாக அமையப் பெற்றுள்ளது.( ர்ழனெநசiஉhஇ வுநனஇ:2005:919)

நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் எனும் மூன்று அளவைகளோடு காலம் என்பது நான்காவது அளவையாகும். அந்த வகையில் உயிர்ப்பு - சடம் ஆகியவற்றின் கலவையாக அமையப்பெற்ற இந்த இயற்கைப் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் காலத்தையும் வெளியையும் நான்காம் பரிமாணமாகக் கொண்டு நிகழ்பவையாகும்.

ஆகாயம் முதலான பஞ்சபூதங்களும் அவற்றின் சேர்க்கையால் உருவான இந்தப்பிரபஞ்சமும்இ இயற்கையால் நடைபெறுகின்ற எல்லாவிதமான (போக்கு – வரவு) மாற்றங்களும் காலவறையறைக்குட்பட்டவை என்பதனையும் காலப்பரிமாணத்தில் நிலைபெற்றுள்ளவை என்பதனையும் திருவாசககம் தெளிவாக இனங்காட்டியுள்ளது. பிரபஞ்சத்தின் தோற்றம் நிலைபேறு ஒடுக்கம் ஆகியவற்றில் காலதத்துவத்தின் வகிபங்கைக் கருத்திற்கொண்டே கடவுள் தத்துவத்தினைக் காலதத்துவமாகப் பின்வரும்திருவாசகப்பாடலடிகள் வர்ணித்துள்ளன.

                                        “ஞாலமே விசும்பே இவை வந்துபோங்

                   காலமே யுனை என்று கொல் காண்பதே”

                                (;திருவாசகம்இதிருச்சதகம்.பா.47.)     

கடவுட்தத்துவத்தினைக் காலதத்துவமாகக் குறிப்பிட்டது மட்டுமின்றிக் கால தத்துவத்தினைக் கடவுட் தத்துவமாகச் சித்திரிக்கின்ற போக்கினையும் திருவாசகத்தில்அவதானிக்க முடிகிறது.

                                   “முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

                 மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்”;

                             (திருவாசகம்இதிருப்பள்ளியெழுச்சி பா.8.)   

மேற்கூறிய திருவாசக அடிகளுக்கு அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் அளிக்கும் பின்வரும் விளக்கமானது இக்கருத்தினைத் தெளிவுபடுத்துவதாக அமையப்பெற்றுள்ளது.

“           முக்கூட்டுப் பரிமாணமுடைய இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் வெறும் காலதத்துவம் ஒன்று மட்டுமே இருந்தது என்பதை அடிகளார் ஞாலமே விசும்பே இவை வந்து போகும் காலமே உனை என்று கொல் காண்பதே என்று பாடியுள்ளார். எனவே பிரபஞ்சத் தோற்றம் இல்லாமல் வெறும் காலமாக இருக்கும்போது அக்காலதத்துவத்திற்கு தோற்றம் இருப்பு மறைவு என்ற நிலைகள் இல்லை எனவே அடிகளார் “முதல் நடு இறுதியும் ஆனாய்” என்று குறிப்பிடுவது இப்பிரபஞ்சத்தையும் அதனை ஊடுருவி நிற்கும் இறைவனையுமேயாகும். முதல்இ நடுஇ இறுதி என்ற மூன்று நிலைகளையும் உடைய பிரபஞ்சம் கண்ணாலும் மனத்தாலும் காணப்பதற்கும்இ கற்பனை செய்வதற்கும் உரிய ஒன்றாகும். ஆனால் இந்த மூன்றிற்கு முற்பட்டு முந்தியதாய் நிற்கும் அல்லது அநாதியாய் நிற்கும் காலதத்துவத்தை மும்மூர்த்திகளும் அறிந்திலர் என்ற இக்கருத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மூவரும் முதல் தெய்வங்கள் எனினும் காலதத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்கள்”  

                                                                        (ஞானசம்பந்தன், அ.ச.:3: 2000:257-262)

பிரபஞ்சத்திலுள்ள பொருட்கள் யாவும் முப்பரிமாணங்களுடன் மட்டுமின்றி இந்த முப்பரிமாணங்களுக்கும் அடிப்படையாக விளங்கும் காலம் என்கிற நான்காவது -பரிமாணத்தையும் சார்ந்தே நிலைபெற்றுள்ளன. என்பதனையே

                                    “ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”

                                                                (திருவாசகம்.சிவபுராணம்.அடி.35.)

என்கின்ற திருவாசகப்பாடல் அடிகள் சூசகமாக  வெளிப்படுத்தியுள்ளன. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் இச்சிந்தனையைத் தனது திருவாசக விரிவுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

“மாணிவாசகர் ஓர் விஞ்ஞானி ஆதலால் மனித மனத்தின் எல்லைக்குள் அகப்படுகின்ற நான்கு பரிமாணங்களையும் ஒரு சேரப் பேசுகின்றார். “ஓங்கி ஆழ்ந்து அகன்று” எனக் கூறும் போது முப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. அடுத்து வருகின்ற சொல் (நுண்ணியன்) இங்கே பருமைக்கு எதிர்ச்சொல்லாகப் பயன்படவில்லை. நுண்ணியனே என்று அடிகளார் சொல்லுவது இந்த மூன்று பரிமாணங்களும் தோன்றி மறைவதற்குக் காரணமாயுள்ள நான்காவது பரிமாணமாகிய காலதத்துவத்தையே ஆகும்”.

                         (ஞானசம்பந்தன்,அ.ச.1.:2007:72)

                     

காலம் - கட்ட அமைவுக் கொள்கை (The Block universe view of time)

 “காலப் பரிமாணம்” பற்றிய சிந்தனையுடன் அடியொற்றியதாகவே மெய்யியலாளர்கள் விவரிக்கின்ற பிறிதொரு பிரபல்யமான கோட்பாடும் அமையப்பெற்றுள்ளது. இந்தப் பௌதீகப்பிரபஞ்சமானது காலமென்கின்ற தளத்திலே கட்டங்கள் கட்டங்கள் ஆகப் பொருத்தியமைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் அமைந்தே “கட்ட அமைவுக்கொள்கை” ஆகும். இதனை இன்னொரு விதத்தில் குறிப்பிடுவதெனில் காலம் என்கின்ற பாதையிலே இயற்கை வழிநடத்தப்பட்டுச் செல்கின்றது. இயற்கை நிகழ்வுகள் திடீரென்று புதிதாக உருவாகுவதில்லை. ஏற்கனவே காலமாகிய பாதையில் ஆங்காங்கே இந்த நிகழ்வுகள் ஒத்திகை செய்யப்பட்டுக் காத்துக்கிடக்கின்றன. அவை எம்மை நோக்கி வருவதில்லை. நாமே நடந்து சென்று அவற்றைச் சந்திக்கின்றோம் என்பதே இக்கொள்கையின் சாரமாகும்.

“Physics prefer to think of time as laid out in its entirety – a timescape, analogous to a landscape –with all past and future events located there together”

                                                                                             (Cheryl,Chen:2003)

இக்கருத்து சித்தர் மெய்யியல் மரபிலும் இடம்பெற்றுள்ளது.

“பிரபஞ்ச இயற்கை காலப்பரிமாணமுடையதாதலால் அதில் நிகழ்கின்ற நன்மை தீமைகள் யாவும் காலம் என்கின்ற பாதையில் காத்திருப்பவையாகும்.” (சோமசுந்தரம்மீ.ப.2:2004:8)

 இதனையே திருவாசகத்தின் திருப்படையாட்சிப் பதிகப் பாடல் ஒன்றில் மாணிக்கவாசகர் பின்வருமாறு புலப்படுத்தியுள்ளார்.

                    “கண்ணிலி காலம் அனைத்திலும் வந்த கலக்கறுமாகாதே”

                                  (திருவாசகம்.திருப்படையாட்சி.பா.5.)

முற்கூறியவாறு காலம் ஆகிய பாதையில் ஒத்திகை செய்யப்பட்டுக்காத்திருக்கின்ற இயற்கை நிகழ்வுகளை சந்திக்காது தப்புதல் என்பது அசாத்தியமானது. என்கின்ற சிந்தனையே இங்கே வலியுறுத்தப்படுகின்றது. “கண்ணிலி” என்ற அடைமொழியானது காலத்தின் அரூபபரிமாணத்தை விளக்குவது மட்டுமின்றி இயற்கையின் போக்கினைத் தீர்மானிக்கும் காய்தல் உவத்தலற்ற அறக்கடவுளாகிய காலனும் இதுவே என்கிற பிறிதொரு பொருட்தொனிப்பையும் கொண்டுள்ளது.

காலச்சக்கரக் கொள்கை (The Circular theory of Time)

காலம் அரூபமானது மட்டுமின்றித் தொடக்கமும் முடிவும் அற்ற ஒன்றாகும். எனவே காலத்திற்கு வரையறை கிடையாது. அதாவது காலம் அநாதிப் பிரவாகமுடையது (Continous flow)என்கின்ற கருத்தை வலியுறுத்துவதே காலச் சக்கரக்கொள்கையாகும். (சோமசுந்தரம்மீ.ப.2:2004:8)

இதனை சில மேலைத்தேச மெய்யியலாளர்களும் எடுத்துரைத்துள்ளனர்.

“During history, a variety of answers have been given to the question of whether the time is like a line or, instead, like a circle…………………. Plato and most other Greeks and Romans believed time to be motion and believed cosmic motion was cyclical……….”(Internet Encyclopedia of Philosophy,

https://www.widernet.org/pocketlibrary/mep/eGLibrary/www.iep.utm.edu/time/index.html)

ஒரு நிகழ்ச்சியானது பல்லாயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு மறுபடியும் திரும்பமுன்போன்று அவ்வாறே நடக்கின்றது. எதிர்காலத்திலும் அவ்வாறே நடக்கும் என்பது காலச்சக்கரக் கொள்கையிலிருந்து பெறப்படும் இன்னுமொரு விளக்கமாகும். இந்த இடத்தில் இப்பொழுது சந்திக்கின்றோம் எனில் இதே போல நாம்இருவரும் என்றோ இதே இடத்தில் சந்தித்தோம். மறுபடியும் இதே இடத்தில் சந்திப்போம் என்பது காலச்சக்கரக் கொள்கையுடன் தொடர்புடையது ஒரு வகையான இயற்கை விதியாகும். இது பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகட்கு மட்டுமின்றி இயற்கை நிகழ்வுகள், கோள்கள், வால்வெள்ளிகள் போன்ற விண்ணியற் பொருட்களிற்கும் பொருத்தமுடையதாகும்.

பிரபஞ்சத்தின் தோற்றம் என்பது காலமாகிய சக்கரத்தினை இடமாகவும் நாதவிந்து தத்துவங்களை மூலக்கூறுகளாகவும் கொண்டு பிரவாக அநாதியாய் (சுழற்சி முடிவற்ற சுழற்சி) நடைபெறுகிறது என்ற சிந்தனையை

                                   “ஞாலமதாக விரிந்தது சக்கரம்(திருமந்திரம்.1259)

              

                                   “பந்தச் சக்கர பாலது ஆகுமே” (திருமந்திரம்.2144)

                                  “வழிகின்ற காலத்து வட்டக் கழல்”  

                                                                                                     (திருமந்திரம்.819)

ஆகிய திருமந்திர அடிகளிலும் காலச்சக்கரக் கொள்கையினை அடையாளங்காண முடிகிறது.

            “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே

              பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனே”

                               (திருவாசகம்.திருவெம்பாவை.பா.9.)

என்ற திருவாசக அடிகளும் காலச்சக்கரக் கொள்கையினை வெளிப்படுத்தும் வகையில்அமையப்பெற்றுள்ளன. இப்பாடல் அடிகளுக்கு ஆசான் ஞானசம்பந்தன் கொடுக்கின்ற விளக்கமானது இக் கருத்தை நன்கு தெளிவுபடுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

“……காலம் என்ற ஒன்று இடையீடின்றிச் செல்வதாகும். காலத்திற்குத் தோற்றமோ முடிவோ இல்லை.இந்தக் கால ஓட்டத்தில் நேற்றுத் தோன்றியவை இன்று பழமையாகவும் இன்று தோன்றியவை அடுத்த வினாடியே பழமையாகவும் பேசப்படுகின்றன. வேறு வகையாகக் கூறினால் பழமையை இறந்த காலம் என்றும் புதுமையை எதிர்காலம் என்றும் கூறுவதில் தவறில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில் எந்த ஒன்றும் இந்த வினாடி தோன்றுகிறது என்றால் அது தோன்றி விட்ட நிலையில் இறந்த காலமாயும் தோன்றுவதற்கு முன்னர் எதிர்காலமாகவும் இருத்தலின் பழமை, புதுமை என்பன காலம் பற்றிய கருத்தியலில் அடங்கிய நுட்பங்களேயாகும்”  (ஞானசம்பந்தன்இஅ.ச.2.:1999:217)

மேலும்

                            “அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே”

                                   (திருவாசகம்.பிடித்தபத்து.பா.8.)

என்ற திருவாசகப் பாடல் அடியும் காலச்சக்கரக்கொள்கையினைப் புலப்படுத்தும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது.இதனை உரையாசிரியர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

“இந்த அண்டம் மகாப் பிரளய காலத்தில் துகள்துகளாக மாறி மீண்டும் படைப்புக்காலத்தில் அண்டமாக விரிகின்றது. காலம் என்ற தத்துவத்தில் இந்த அண்;டம் பலமுறை தோன்றி மறைந்து மறுபடியும் தோன்றியுள்ளது ஆதலின் அண்டரண்டம் என்ற சொல்லாலும் அதனைக் குறிக்கலாம்”.  

                                                   (ஞானசம்பந்தன்இஅ.ச.4.:2000:287)

 

இவ்வாறாகத் திருவாசகத்தில்; காலதத்துவமானது பௌதிக இயற்கைஇ உயிர் இயற்கை ஆகியவற்றின் தோற்றம் இருப்பு என்பவற்றுடன் சம்பந்தமுறுவது மட்டுமின்றி பௌதிக அதீதமாகிய ஆத்மஈடேற்றம்இ பரம்பொருள்நிலை ஆகியவற்றுடனும் தொடர்புற்றுள்ளது.ஆயினும்  விடயப்பரப்பைக் கருத்திற்கொண்டு பௌதீக அதீதம் பற்றிய விடயங்கள் இங்கே கவனத்திற்கொள்ளப்படவில்லை.

 

நிறைவாக:

இந்துசமய மரபில் தோன்றிய அருளாளர்கள் பக்தி, ஆன்மிகம் ஆகியவற்றுக்கு அப்பால் மெய்யியல் மற்றும் அறிவியல் சார்ந்த கருத்தோட்டங்களுடன் பொருத்தமுறும் வகையில் காலம் - வெளி தொடர்பிலான சிந்தனைகளை முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில் சங்க இலக்கியங்களிலிருந்து வேறுபட்ட நிலையில் வெளியைப் புதிய பரிமாணத்தில் காரைக்காலம்மையார் நோக்கியுள்ளார். இவருடைய பிரபந்தங்களில் இடம்பெற்றுள்ள மயானம், பேய்கள் தொடர்பிலான வர்ணனைகள் வெளி தொடர்பிலான மெய்யியல் சார் அணுகுமுறையில் கட்டவிழ்ப்புச் செய்யப்பட வேண்டியவை. 'மீவியல் வெளி" என்று தற்கால மானிடவியலாளர்களும் உளவியலாளர்களும் பேசுகின்ற விடயத்தையும் அம்மையாரின் பிரபந்தங்கள் தொட்டுச் சென்றுள்ளன.மணிவாசகரும் தனது திருவாசகத்தில் காலம் பற்றிய மெய்யியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் சில முக்கிய பரிமாணங்களை அடையாளங்காட்டியுள்ளார். காலச்சக்கரக்கொள்கை, காலம் பற்றிய கட்ட அமைவுக்கொள்கை, காலப்பரிமாணக்கொள்கை ஆகியவற்றை இவ்வகையில் சுட்டிக்காட்ட இயலும்.

 

உசாத்துணை

தமிழ் நூல்கள்

அருளம்பலவனார்,சு.,(1993),திருவாசக ஆராய்ச்சியுரை ஐ, குமரன் வெளியீடு, சென்னை.

 

சிவபாதசுந்தரனார், நா.,(1987),         பரவெளித்தத்துவ நுண்மை விளக்கம், ஆறாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாடு, கோலாலம்பூர், மலேசியா.

 

சிவலிங்கனார்,ஆ.,(1992),எட்டாம் திருமுறை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.

 

சுப்பிரமணியபிள்ளை,கா.,(1968),மணிவாசகப்பெருமான்வரலாறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,திருநெல்வேலி.

 

சோமசுந்தரம், மீ.ப.இ(2004),சித்தர் இலக்கியம் முதல் பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை.

……………..       (2004),  சித்தர் இலக்கியம் இரண்டாம் பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை.

……………..       (2004),  சித்தர் இலக்கியம் மூன்றாம் பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை.

 

ஞானகுமாரன். நா.,(2003),மெய்யியல், செல்வம் பதிப்பகம், பருத்தித்துறை, இலங்கை.

 

ஞானசம்பந்தன், அ.ச. (பதிப்பு),(2007),          திருவாசகம் சில சிந்தனைகள் 1, கங்கை புத்தக நிலையம், சென்னை.

……………….   (1999),  திருவாசகம் சில சிந்தனைகள் 2, கங்கை புத்தக நிலையம், சென்னை.

……………….   (2000),  திருவாசகம் சில சிந்தனைகள் 3, கங்கை புத்தக நிலையம், சென்னை.

……………….   (2000),  திருவாசகம் சில சிந்தனைகள் 4, கங்கை புத்தக நிலையம், சென்னை.

 

நவநீதகிருஸ்ணபாரதியார் க.சு.,(1951),திருவாசக ஆராய்ச்சிப் பேருரை, பத்மா பதிப்பகம், யாழ்ப்பாணம்.

 

பக்தவத்சலபாரதி,(1999)இதமிழர் மானிடவியல்இ மணிவாசகர் பதிப்பகம்இ சென்னை.

 

மறைமலையடிகள்,(2003)இதிருவாசக விரிவரை நான்கு அகவல்கள்இ பூம்புகார் பதிப்பகம்இ சென்னை.

 

…………..           (1967),  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்இ சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்இ சென்னை.

 

வரதராசனார், மு.,(1964)இபழந் தமிழ் இலக்கியத்தில் இயற்கைஇ பாரிய நிலையம்இ சென்னை.

 

 

அகராதிகளும் கலைக்களஞ்சியங்களும்

அறிவியற்களஞ்சியம் தொகுதி 4,(1998),தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

இந்துக்கலைக்களஞ்சியம் IV,(2002),இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை.

 

வாழ்வியற் களஞ்சியம், தொகுதி -7             (1988),  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 

வாழ்வியற் களஞ்சியம்,  nதாகுதி -10,          (1988),  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

 

ஆங்கில நூல்கள்

Barbet, Harrison Antony, (2001), Mastering Philosophy, Palgrave, New York.

 

Cheryl Chen,(2003),A matter of time, Department of Philosophy, Bryn Mawr College.

 

Grant Edward,(2007),A History of Natural philosophy, Cambridge university press, U.K.

 

Helaine, S., Narashima, R., (ed),(2007),Encyclopedia of Classical Indian Science, University Press, Hyderabad, India.

 

Honderich, Ted,(2005),The Oxford Companion to Philosophy, Oxford University Press, New York,

 

Pope, G.V.,(2002),The Tiruvacagam or scared utterance of Tamil PoetSaint and sage Manikka – Vacaga ,Oxford at the Clarendon Press, Chennai.

 

Rosenberg, Alex,(2005),Philosophy of Science, Routledge Taylor and Francis Groaf, New York and London.

 

Web Sites & Web Pages

The Internet Encyclopedia of Philosophy, http://www.iep.utm.edu.

htt://www.hawking.org.uk/pdf/bot/.pdf.