ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலம்பக்கலை ஆசான்கள் அளிக்கும் கை மருத்துவம்

பேரா.மு.காமராஜ் M.A., M.Phil., B.Ed., DGT., PGDSF.,  Ph.D, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடுமலைப்பேட்டை 15 Aug 2022 Read Full PDF

சிலம்பக்கலை ஆசான்கள் அளிக்கும் கை மருத்துவம்

பேரா.மு.காமராஜ் M.A., M.Phil., B.Ed., DGT., PGDSF.,  Ph.D, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம்.

 

ஆய்வுச்சுருக்கம்

     உலகக் கலைகளில் உயிர்கலையானதும் தாய்க்கலையானதுமான கலை சிலம்பாட்டக்கலை என்பது கலையுலகம் நன்கறியும். அத்தகைய கலையினைப் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்ற சிலம்பாட்டக்கலை ஆசான்கள் சிலர் கைமருத்துவம் மற்றும் மந்திர மருத்துவம் போன்ற மருத்துவத்தைச் செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்புமிகு பணியினை எவ்வௌ;வகையில் கையாண்டுப் போற்றி வருகிறார்கள் என்பதனை அறிந்திட உதவுகிறது இக்கட்டுரை.

     சிலம்பாட்டம் தென்னிந்திய இலக்கியங்களில் சிலம்பாட்டம் தென்னிந்திய இலக்கியங்களில் மருத்துவம் சிலம்பாட்டக் கலையும் மருத்துவமும் ஆசான்கள் அளிக்கும் கை மருத்துவச் சிறப்புகள் எனும் உட்தலைப்புகளைக் கொண்டு ஆராய்ந்ததின் அடிப்படையில் எத்தகைய நோய்களுக்கெல்லாம் தீர்வுகள் கிடைத்துள்ளன என்பதனை நன்கறிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. தென்னிந்திய இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகளும் கலைக்குரிய குறிப்புகளும் ஏராளமாகவுள்ளன என்பதனை ஆதாரத்தோடு எடுத்துரைக்கின்றது.

     சிலம்பாட்டக் கலை ஆசான்கள் கலையிலும் கைமருத்துவத்திலும் கைதேர்ந்தவர்களாக வருவது அற்புதமான நிகழ்வாகும். இத்தகைய அனுபவசாலிகளை மானுட உலகம் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. ஆய்வாளன் என்ற முறையில் சிலம்பாட்ட மற்றும் கைமருத்துவம் ஆகிய இரண்டு திறன்கள் பெற்றவர்களைக் கள ஆய்வின் போது கண்டறிப்பட்டது. அறியப்பட்டத கலைவாழ்வை அரும்பேறாக கையாளுகிறவர்களுக்கு எடுத்துக்காட்டுவது தலையாய கடமை என்பதை உணர்ந்து இந்த ஆய்வுக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது.

HOME REMEDIES BY SILAMBAM MAESTROS

ABSTRACT

            The world of arts is quite familiar that silambam is the predominant and roots of all the other martial art forms. Some of the practitioners of silambam, in addition to being stalwarts in that art form, also practice home remedies and thandra medicines. This article is an aid to explore how do they handle and extend these kinds of treatments.

            Comprising the subtopics such as Silambam, Silambam in South Indian Litrature, Silambam and Medicine, The Specialty of Home Remedies Offered by Silambam Maestros focuses on deciphering the remedies obtained maladies. This article serves with evidence that there are umpteen medicinal values coupled with article values have been represented in the reservoir of South Indian Literature.

            This is a great occurrence and quite noteworthy that the silambam maestros have started emerging as and are keenly interested in becoming the professional home remedies. Most other people may not develop their interest in this connection. This human sphere has overlooked and failed to recognize many such paragons before. As a researcher, it become possible through field work to have identified the people are equally good at silambam and home remedies. Elucidating the known and the unraveled is the bound duty of any researcher, having deeply felt that this article has been composed.

Keywords :

            Stalwart, Malady, Umpteen, Paragon, Elucidate.

முன்னுரை

     தமிழக நாட்டுப்புற இலக்கியங்களில் மகத்தான இடத்தைப் பெற்று நிற்பது நாட்டுப்புறக் கலைகள். பல்வேறு வகைகளை உள்ளடக்கிவரும் நாட்டுப்புறக் கலைகளில் முதன்மையான கலையாகவும் தொன்மைவாய்ந்த கலையாகவும் உருவெடுத்து நிற்பது நமது பாரம்பரியக் கலையாக விளங்கும் சிலம்பக்கலையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையைப் பயிற்றுவிக்கும் ஆசான்கள் கலையோடு அவர்கள் அறிந்து வைத்துள்ள சில கை மருத்துவங்களும் உண்டு. பெரும்பாலான ஆசான்கள் கை மருத்துவத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிலரே இந்த கை மருத்துவத்தில் அனுபவரீதியாகவும் கையாண்டுள்ள பயிற்சியின் ரீதியாகவும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கையாளும் கலை உணர்வோடு கை மருத்துவம் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிலம்பாட்டம் :

     சிலம்புதல்’ எனும் சொல்லிற்கு ஒலித்தல்’ எனும் பெயருண்டு. அதாவது கம்பைக் கொண்டு ஒலி எழும்பும்போது ஒரு வகை ஓசை உண்டாகும். அவ்வோசை சிலிர்ப்புப் போன்று காற்றினூடே கலந்துவரும். இதனடிப்படையிலேயே தான் சிலம்பாட்டம்’ என்றழைத்தனர். சிலம்பாட்டக்கலை குறித்து பல்வேறு வல்லுநர்கள் சிலம்பம் - சிலம்பாட்டம்’ எனும் சொற்கள் ஒன்றெனில் சிற்;சிறு காரணங்களையும் எடுத்துரைக்கின்றனர். சிலம்பம்’ என்பதே முதன்மை என்றும் சிலம்பாட்டம்’ என்பது பின்னர் உருவானது என்றும் விளக்கம் தருகிறார்கள். தமிழக வீரவிளையாட்டுக்களுள் முதல் விளையாட்டு என்ற சிறப்பிற்குரியது. துவக்கக் காலத்தில் மனிதன் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் போர்க்களத்தில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியும் இக்கலையை உருவாக்கினான். நாட்டுப்புற இயல் ஆய்வு’ எனும் நூலின் ஆசிரியர் டாக்டர்.சு.சக்திவேல் அவர்கள் நடசாரி எனும் ஓலைப் பட்டயத்தில் சிலம்பாட்டத்தின் தோற்ற வளர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது”.1 என்று குறிப்பிடுகின்றார். இன்றளவும் நாட்டுப்புறங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சிலம்பாட்டக்கலை ஆசான்கள் உள்ளனர். சிலம்பாட்டத்தில் கால்வைப்புமுறை சுற்றுமுறை வீச்சுமுறை அடிமுறை எதிர்ப்பாட முறை தீப்பந்த முறை வாள் பயிற்சி போன்ற முறைகள் கையாளப்படுகின்றன.

தென்னிந்திய இலக்கியங்களில் சிலம்பாட்டம் :

     உலகத் தாய்மொழிகளில் முதன்மைமொழி தமிழ்மொழி என்பது உலகமே நன்கறியும். அதுபோல் உலக இலக்கியங்களுக்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்வதும் நம்மொழியே. அவைகளுள் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது தென்னிந்திய இலக்கியங்கள.; சங்க காலந்தொட்டு இன்றுவரை எல்லாத் துறைகளுக்குமான பங்கினை மிகச்சிறப்பாகச் செய்து வருகிறது நம்மொழி. இத்தகைய சிறப்பிற்குரிய தமிழ் இலக்கியங்களில் சிலம்பக்கலை’ குறித்த தகவல்களும் மேற்கோள்களும் நிரம்பவுள்ளன. அவைகளுக்குள் சில.

     அகத்திய சித்தர் எழுதிய கம்பு சூத்திரம்” எனுங் காவியத்தில் தான் முதலில் சிலம்பம் கற்றதாகவும் அதன்பின்பே தவவாழ்வில் ஈடுபட்டதாகவும் அவரே குறிப்பிடுகின்றார். அவரைத் தொடர்ந்து வந்த அவரது மாணவரான தொல்காப்பியரோ தொல்காப்பிய மரபியலில் - 1583 நூற்பாவில்

“வில்லும் வேலும் கழலும் கண்ணியும்

தாரும் மாலையும் தேரும் வாளும்

மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய” 2

என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சங்க கால ஆதாரங்களாக கி.மு.200ல் வாழ்ந்த சங்க காலத்து ஓளவையார் பாடல்களில் சிலம்பக்கலை ஆயுதங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன என்பதனை புறநானூற்றுப் பாடல் எண் - 91யின் வழியாக

“வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

களப்படக் கலந்த கழல்தொடி தடக்கை” 3  என்றும்

பாடல் எண் 95-யின் வாயிலாக

“பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில் மாதோ - என்றும்

அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே” 4  என்றும்

குறிப்பில் உள்ளதை அறியலாம்.

     குறட்பாக்களின் வழியாக வாழ்வியல் நெறி வகுந்த வள்ளுவனோ

“வேலோடு நின்றான் இடு என்றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு” 5

(குறள் - 552 செங்கோன்மை அதிகாரம்)

என்னும் குறள்வழியே சிலம்பக்கலைக் குறித்த தகவலைத் தந்திருக்கின்றார். திருவிளையாடற்புராணம் பாடியருளிய பரஞ்சோதி முனிவரோ

“மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயி;ற்றி வாழ்வான்” 6

(பாடல் எண் - 1576)

என்ற அடியின் மூலமாக வாள்’ பயிற்சி பயிற்றுவித்ததை நன்கு அறியநேரிடுகிறது.

‘சிலம்பாட்டக்கலை’ எனும் நூலின் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ அவர்கள் சிலம்பம் ஆடுவதற்கான மூங்கில் கம்பு கத்தி போன்ற ஒரு கடையில் விற்கப்பட்டன என்றும் அதனை வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் என்றும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலிங்கத்துப்பரணியில் வீசு தண்டிடை கூர்மிகு ஒக்குமே’ என்ற வரிகள் மூலம் தண்டு’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சிலம்பக்கலையை நன்கு வளர்த்தனர். திருவிளையாடற்புராணத்தில் கூடற்காண்டத்து அங்கம் வெட்டிய படலத்தில் வாட்சிலம்பம் பற்றி பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ளார். மேலும் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம் பித்தம் கபம் போன்ற நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது” 7 என்று  தம்நூலில் சிலம்ப வரலாற்றின் இலக்கிய மேற்கோள்களைப் பற்றி விவரித்து எழுதியுள்ளார். இத்தோடு நில்லாமல் முக்கூடற்பள்ளு தேம்பாவணி போன்ற அரும்பெரும் நூற்களில் குறிப்புகள் உள்ளன.

தென்னிந்திய இலக்கியங்களில் மருத்துவம் :

     தென்னிந்திய மட்டுமின்றி உலகநாடுகளே புகழ்ந்துரைக்கும் பாங்குடையது தென்னிந்திய இலக்கியங்கள். அத்தகைய இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகளும் பயன்பாடுகளும் சிறப்புகளும் ஏராளமாகவுள்ளன. சித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் மந்திர மருத்துவம் கை மருத்துவம் குழந்தை மருத்துவம் பொது மருத்துவம் எனப் பல்வகை மருத்துவப் பிரிவுகளைக் கொண்டு மக்கள் நலன் சார்ந்து நோயற்ற வாழ்வை மானுட உலகிற்குத் தந்துநிற்கின்றது நம் இலக்கியங்கள்.

     தொல்காப்பியர் செய்யுளியியலில் பெரியோர்கள் வாழ்த்தும் முறைபற்றி ஒரு நூற்பாவில் பாடியுள்ளார். அதற்கு ‘வாயுறை வாழ்த்து’ என்று பெயர்.

“வாயுறை வாழ்த்தே வியங்க நாடின்

வேம்பும் கடுகும் போல வெஞ்சொல்” 8

(தொல் : செய்யுளியியல் : 1369)

என்ற அடிகளின் வாயிலாக மருத்துவப்பொருட்கள்’ குறித்து விளக்கியுள்ளார்.

கம்பர் இயற்றிய இராமயணத்தில் கும்பகர்ணன் வதைப்படலம் பாடல் எண் 146-யின் மூலமாக

“உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததின் உதிரம் மூற்றி

சுடறுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” 9

(கம்ப : கும்பகர்ணன் வதை :146)

எனும் அடிகளின் மூலமாக உடலில் தோன்றிய கழலைக் கட்டி புண்ணை அதன் விஷநீர் உடலில் பரவாதபடி அறுத்து அதிலுள்ள அசுத்தமான உதிரத்தை வெளியேற்றி காரத்தைப் பொருந்த வைத்துச் சுட்டி உலர்த்தி அதற்குரிய வேறொரு மருந்தினால் துயரம் நீங்கிப் பெறுவார்கள் என்று கூறியதாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

     நல்லாதனார் சுக்கு மிளகு திப்பிலி இம்மூன்றும் சேர்ந்த மருந்துக்குத் திரிகடுகம் பெயர் என்றும் அது உடல் நலன் காக்க உதவும் என்று கூறுகிறார். காரியாசானும் சிறுபஞ்ச மூலத்தின் வாயிலாக கண்டங்கத்திரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல்நோயைப் போக்கும் என்று கூறியுள்ளார். கணிமேதாவியார் ஏலாதியின் வாயிலாக ஏலம் இலவங்கம் சிறுநாவற்பூ மிளகு திப்பிலி சுக்கு என்னும் ஆறு மருந்துகளால் உடல்நோய் நீங்கி நலம் பெறும் என்று விளக்கியுள்ளார்.

     பதார்த்த குண சிந்தாமணி; எனும் நூலின் மூலமாக உடல் உறுதி இன்மை தசை வளர்ச்சி இன்மை நாவறட்சி வாத குறைபாடு சிறுவாதம் சரும நோய் கண்களின் நலனின்மை மேக நோய் பித்த தளர்ச்சி உட்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்குத் தீர்வுண்டு என்று கணித்துள்ளனர். மேலும் பதிணென் சித்தர்களும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பல்வேறு வியாதிகளுக்கு இயற்கைநெறியினின்று வழிமுறைத் தந்துள்ளனர்.

சிலம்பக்கலையும் மருத்துவமும் :

     உலகக் கலைகளில் உயிர்கலையானதும் தாய்க்கலையானதுமான கலை சிலம்பாட்டக் கலை என்பது மானுட உலகம் நன்கறியும். அத்தகைய கலையினைப் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்ற சிலம்பாட்டக் கலை ஆசான்கள் சிலர் கை மருத்துவம் மற்றும் மந்திர மருத்துவம் போன்ற மருத்துவத்தை செய்து வருகிறார்கள். அவர்கள் தந்துதவிய தகவல்கள் அடிப்படையிலும் சிலம்ப வரலாறுகள் குறித்த நூலசிரியர்கள் சிலர் தந்துதவிய தகவல்கள் அடிப்படையிலும் முனைவர் ஜே.டேவிட் மேனியல் ராஜ் ஏற்காடு இளங்கோ எஸ்.ஸ்ரீநிவாசன் அ.அருணாச்சலம் போன்றோர்கள் தங்களின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும் சித்த மருத்துவம் எனும் தொகுப்பு நூலின் அடிப்படையிலும் சதுரகிரி சித்தர் நாகானந்தா சுவாமிகளின் நூலின் அடிப்படையிலும் மருத்துவம்’ சார்ந்த பயனள்ள தகவல்களைப் பெற்று இங்கே தரப்பட்டுள்ளது என்பது நினைவுக்கூறக் தக்கது.

     மேற்கண்ட தகவலாளிகளும் நூலாசிரியர்களும் சித்தர்களும் தந்துதவிய தகவல்களின் வாயிலாக சிலம்பாட்டக் கலைப் பயிலுவதாலும் அந்தக் கலையால் பெறக்கூடிய பயன்களாலும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த பாதிப்புகளிலிருந்து நீங்கி வாழ்வதற்கான வழிமுறைகளும் கூறுகிறார்கள். இதயம் சுவாசக்கோளாறு கண்கள் செவித்திறன் அட்ரீனல் சுரப்பி இரைப்பை தைராய்டு பாரா-தைராய்டு நரம்புகள் கை கால் மூட்டுவலி பிரச்சனைகள் முதுகுத்தண்டு போன்ற நோய்களுக்கு இக்கலையால் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். மேலும் தகவலாளிகளாக விளங்கும் ஆசான்கள் சிலர் கைமருத்துவம் மந்திர மருந்துவம் செய்து கலையையொற்றிய கைதேர்ந்த மருத்துவம் செய்து வருகிறார்கள்.

ஆசான்கள் அளிக்கும் கை மருத்துவம் :

     சிலம்பக்கலையால் செழித்;து விளங்கும் ஆசான்கள் திண்டுக்கல் வெ.ராஜகோபாலன் சித்தய்யன்கோட்டை சாமி திண்டுக்கல் அ.ஜோசப் செந்தில் போளியம்மனூர் எ.சின்னான் தருமத்துப்பட்டி பொ.முருகையன் மடத்துக்குளம் க.வீரமணி பாலசமுத்திரம் ராமு கூத்தம்பட்டி க.நடராஜ் போன்றோர்கள் கலையை முதன்மைத் தொழிலாகவும் பகுதிநேர தொழிலாகவும் ஓய்வு நேரங்களில் பயிற்றுநர்களாகவும் கலையை விடுத்து மருத்துவத்தில் மட்டும் ஈடுபடுபவராகவும் விளங்கி வருகின்றனர்.

தலைவலி கண்வலி நீங்கிட :

     ஆசானும் கை வைத்தியருமான வெ.ராஜகோபால் அவர்கள் சிலம்பம் மற்றும் யோகா கலையின் ஆசானாக விளங்குகிறார். இவர் கடுமையான காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி கண்வலி தீர்த்திட தும்பைப்பூ கொஞ்சமாக எடுத்து தாய்ப்பாலில் ஊறவைத்து நெற்றி மற்றும் கன்னப் பொட்டில் துணியில் நனைத்துப் போட வேண்டும் என்றும் கண்களிலும் இரண்டு துளிகள் விடலாம் என்றும் தலைநீர்க்கோவை போன்ற கோளாறுகளுக்கும் இதே பக்குவம் செய்தால் சரியாகிவிடும் என்றும்”10 கூறுகிறார்.

இருதயம் பலவீனம் - ரத்த ஓட்டக் கோளாறு :

     மேற்கண்ட ஆசான் அவர்கள் இருதயம் பலவீனமாகச் செயற்பாட்டால் ரத்த ஓட்டம் தொடர்பான குறைபாடுகள் தோன்றினால் சீமை அத்திப்பழங்களில் ஒன்றினை எடுத்து துண்டாக நறுக்கிப் பசுவின் பாலில் போட்டுக் குடிக்கவேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்துவரும்போது இருதயம் வலிவு பெறும். இரத்த ஓட்;டம் சிறப்பாக அமையும்”11 என்கிறார்.

சீறுநீரகக் குறை நீங்கிட :

     கட்டிடத் தொழில் செய்துவரும் ஆசான் சாமி அவர்கள் கை வைத்தியத்தில் ஆலோசனைகளைத் தந்துவருகின்றார். தற்போதைய நிலையில் சிலம்பக் கலையை யாரும் தன்னிடம் கற்றுக்கொள்ள வருவதில்லை என்று வருந்துகிறார். அவர் முள்ளங்கிக் கிழங்கை நன்கு கழுவிச் சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுக்க வேண்டும் இந்தச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவில் குடித்துவர சிறுநீரகம் தொடர்பான நோய் நீங்கும் நீரிழிவு நோய்க்கும் இதுவே நல்ல தீர்வு”12 என்கிறார்.

விஷ முறிவு நீங்கிட :

     மேற்கண்ட ஆசான் அவர்கள் பேய்ச்சுரையின் வேரை அரைத்து பாக்களவு திரட்டிக் கடிவாயில் இதன் இலையைக் கட்ட உடனே விஷம் நீங்கி நலம் பெறும். பாம்புக் கடி விஷத்தையும் இது முறிக்கும். பொதுவாக எல்லா விஷக் கடிக்களுக்கும் பொருந்தும்” 13  என்கிறார்.

அசீரண வயிற்றுவலி மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்கிட :

     ஆசானும் கை மருத்துவ ஆலோசகருமான அ.ஜோசப் செந்தில் அவர்கள் மெக்கானிக்கல் கடையில் வேலை செய்துவருகிறார். ஓய்வு நேரங்களில் சிலம்பக் கலையைப் பயிற்றுவித்துப் போட்டிகளும் நடத்தி வருகின்றார். அவர் அசீரணத்தால் வயிற்றுவலி ஏற்பட்டுத் தொல்லையுறும் நேரங்களில் நூறுகிராம் அளவுள்ள ஓமத்தை ஒரு சட்டியில் போட்டு லேசாக வறுத்தெடுத்து அதை தேய்த்துப் புடைத்தபின் இரண்டு ஸ்பூன்கள் அளவில் சாப்பிட்டு வந்தால் அசீரணம் சரியாகிவிடும் என்றும் மேலும் இவர் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அன்றாடம் வெள்ளை வெங்காயம் அதாவது பூண்டை நெய்விட்டு வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்” 14 என்கிறார்.

மந்திரம் மற்றும் மாந்தக் கோளாறுகள் நீங்கிட :

     ஆசானும் மந்திர மற்றும் கை வைத்தியரான எ.சின்னான் அவர்கள் கயிற்றுக்கட்டில் பின்னும் வேலையில் ஈடுபடுகிறார். குழந்தைகள் மற்றும் பெண்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு துண்டால் மந்திரிக்கும் கலை பெற்றிருக்கின்றார். சிலம்பக் கலையை தற்போது பயிற்றுவிப்பதில்லை என்கிறார். பயந்தக் கோளாறு தூக்கமின்மை கண்ணடிப்பு பில்லிச்சூனியம் போன்றவைகளுக்கு மந்திரமருத்துவத்தின் மூலமாக விடையளிக்கின்றார். இவர்” மாந்தக் கோளாறு உள்ளவர்களுக்கு மயில் இறகைப் பொசுக்கி மிளகு சேர்த்து அரைத்து தேனில் கலந்து குடித்தால் இந்நோய் குணமாகும்” 15 என்கிறார்.     

மந்திர மருத்துவம் மற்றும் குதிகால் வாதநோய் நீங்கிட :

ஆசானும் மந்திர மற்றும் கை வைத்தியரான பொ.முருகையன் அவர்கள் கயிறுவேலை அதாவது ஆடு மாடு நாய் குதிரைக்;களுக்கான கம்பளிக் கயிறு திரித்தலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கம்பளிக் கயிறு திரித்தலும் வெள்ளெருக்கனால் பல்வகை கயிறு திரித்தல் தொழிலில் ஈடுபட்டு வருபவர். இவரது பூர்வீகத் தொழில் இவையென்றாலும் மந்திர மருத்துவத்திலும் ஈடுபட்டுவருகிறார்;. எல்லாவிதப் பிரச்சனைகளுக்கு மந்திரித்துக் கயிறு கட்டி விடுதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். உடல்நிலை ஒத்துழைப்பு தராததால் சிலம்பக்கலையைப் பயிற்றுவிக்க முடியவில்லை என்கிறார். இவர் குதிகால் வாதநோய்க்காக எருக்கன் இலையை நன்கு சுட்டு செங்கல் மீது பரப்பி வைத்து அதன்மீது குதிகால் வைத்து எடுக்க வலி நீங்கும் என்றும் மேலும் காலில் கட்டி ஏற்பட்டு நீண்ட நாளகியும் பழுக்காமல் தொல்லைத் தந்தால் எருக்கன் இலையை வதக்கிக் கட்டி வந்தால் சீக்கிரம் பழுத்து விடும்”16 என்கிறார்.

மூட்டுவலி மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நீங்கிட :

     சிலம்பக் கலை ஆசானும் கை வைத்தியருமான வீரமணி அவர்கள் முழுநேர சிலம்பக் கலையில் ஈடுபட்டுவருகிறார். சிலம்பம் களரி வர்மம் சித்த மருத்துவம் போன்ற பணிகளில் முழுநேரத்தையும் செலவிட்டு முதன்மைத் தொழிலாகவும் நடத்தி வருகிறார். தன் வீட்டையையே கலைக்கூடமாகவும் மருத்துவக் கூடமாகவும் மாற்றியுள்ளார். பல்வேறு வர்மப் பிரச்சனைகளுக்கு மூலிகை எண்ணெய்களின் மூலமாக நிவாரணம் செய்து வருகின்றார். குறிப்பாக மூட்டுவலி மற்றும் எலும்புகள் சம்பந்தமான அனைத்து வித நோய்களுக்கும் நிவாரணம் வழங்கி வருகின்றார். இவர் “கரு ஊமத்தை இலையை இடித்து முழங்காலில் கட்டினால் வலி நீங்கும் என்றும் மேலும் தழுதாலையுடன் பூண்டு வைத்து அரைத்து முழங்காலில் கட்டினால் மூட்டுவலி தீரும்” 17 என்கிறார்.

சர்க்கரை நோய் நீங்கிட :

     ஆசானும் கை வைத்தியருமான தி.ராமு அவர்கள் முழுநேர விவசாயி. ஓய்வு நேரங்களில் கலையைப் பயிற்றுவித்து வருகிறார். இவர் முருங்கைச் சாறு ஒரு சங்களவு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும் என்றும் மேலும் இவர் சிவப்பு நெருஞ்சியை எடுத்து இடித்து சாறு பிழிந்து ஒரு சங்களவு குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுபாட்டிற்குள் நிற்கும்”18 என்கிறார்.

வயிற்றுக் கடுப்பு நீங்கிட :

     சிலம்ப ஆசானும் கை வைத்திய ஆலோசகருமான க.நடராஜ் அவர்கள் பட்டுப்புழு உற்பத்தித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காலை மாலை இருவேளைகளில் சிலம்பக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார். இவர் கருவேப்பிலையை அரைத்து நெல்லிக் காயளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு நிற்கும் என்றும் மேலும் கவிழ்தும்பை இலையை பறித்து அதனுடன் சீரகம் சேர்த்து அரைத்து சிறுவெங்காயம் சேர்த்து பிசைந்து வடை போல் செய்து அதனை நல்லெண்ணெய்யில் பொறித்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு தீரும்” 19 என்கிறார்.

முடிவுரை :

     சிலம்பாட்டக்கலை ஆசான்கள் கை மருத்துவத்தில் ஈடுபட்டு வருவது அபூர்வமான செயலாகும். எல்லோர்க்கும் அந்தக் கலை அமைவதில்லை. நவநாகரிக உலகில் இத்தகைய அனுபவசாலிகளை மானுட உலகம் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. சிலம்பம் மற்றும் கை மருத்துவம் ஆகிய இரண்டிலும் கைதேர்ந்தவர்கள் ஒருசிலரே. அந்தச் சிலரையும் கண்டு கேட்டு அறிந்த தகவல்களை இந்தத் தலைப்பின் மூலம் உலகிற்குத் தரப்பட்டுள்ளது. எதிர்வருங்காலங்களில் இதுபோன்ற உன்னதப் பணிகளில் செயல்பட்டு பழமை சார்ந்த அற்புதங்களைப் புதுமையாக்கி மானுட உலகிற்குத் தந்து வளம் சேர்த்திட அனைவரும் முன்நிற்போமாக. மலரட்டும் சிலம்பக் கலை! மகிழ் ஊட்டட்டும் கை மருத்துவம்!

 

அடிக்குறிப்புகள்

1.    டாக்டர் சு.சக்திவேல் - நாட்டுப்புற இயல் ஆய்வு பக் – 172-173.

2.    முனைவர்.ச.வே.சுப்பிரமணியன் - தொல்காப்பியம் தெளிவுரை பக் - 606

3.    புலவர் அ.மாணிக்கனார்  புறநானூறு மூலமும் உரையும் பக் - 191

4.    மேலது பக் - 197

5.    பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு பக் - 319

6.    திருவிளையாடற்புராணம் மூலமும் உரையும் - ப.எ  1576

7.    ஏற்காடு இளங்கோ  சிலம்பாட்டக்கலை பக் - 71

8.    முனைவர் ச.வே.சுப்பிரமணியன் - தொல்காப்பியம் தெளிவுரை  பக் - 538

9.    பேரா.அ.ச.ஞானசம்பந்தன் - கம்பராமாயணம் பக் - 305

10.   வெ.இராஜகோபால் ஆண் 58 ஆ.யு இந்து கௌராநாயுடு சிலம்பம் ரூ யோகா பயிற்சியாளர் திண்டுக்கல் 7.5.2019

11.   மேலது

12.   சாமி ஆண் 68 இரண்டாம்வகுப்பு இந்து தெலுங்குச்செட்டி கட்டிடத் தொழிலாளர் சித்தையன்கோட்டை.

13.   மேலது

14.   அ.ஜோசப் செந்தில் ஆண் 49 டிப்ளமோ கிறித்துவ வன்னியர் மெக்கானிக்கல் பாலகிருஷ்ணாபுரம்.

15.   எ.சின்னான் ஆண் 79 படிப்பு இல்லை இந்து டொம்பன் கட்டில் பின்னுதல் போலியம்மானூர்.

16.   பொ.முருகையன் ஆண்; 64 ஏழாம் வகுப்பு இந்து டொம்பன் கயிறு திரித்தல் தருமத்துப்பட்டி.

17.   க.வீரமணி ஆண் 46 எட்டாம் வகுப்பு இந்து குடும்பன் சிலம்பம் ரூ மருத்துவப் பயிற்சியாளர் மடத்துக்குளம். 6.4.2019

18.   தி.ராமன் ஆண் 76 படிப்பு இல்லை இந்து தேவர் விவசாயி பாலசமுத்திரம். 12.10.2018.

19.   க.நடராஜ் ஆண் 65 பத்தாம் வகுப்பு இந்து சேர்வை ஓய்வு பெற்றவர் கூத்தம்பட்டி. 12.10.2018.