ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

நாட்டுப்புற நடனங்களில் தேவராட்டம்

கலாநிதி (திருமதி) துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ், சிரேஷ்ட விரிவுரையாளர் (நடன, நாடகத்துறை), சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 15 Aug 2022 Read Full PDF

நாட்டுப்புற நடனங்களில் தேவராட்டம்

கலாநிதி (திருமதி) துஷ்யந்தி யூலியன் ஜெயப்பிரகாஷ், சிரேஷ்ட விரிவுரையாளர் (நடன, நாடகத்துறை), சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 

ஆய்வுச் சுருக்கம்

நாட்டுப்புறக் கலைகள் என்பது நாட்டுப்புறக் கலாச்சாரத்தின் சூழலில் உருவாக்கப்பட்ட அனைத்து வகையான காட்சிக் கலைகளையும் உள்ளடக்கியது. ஆனால், வரையறைகள் வேறுபடுகின்றன. பொதுவாக பொருள்கள் பிரத்தியேகமாக அலங்காரமாக இருப்பதை விட ஒருவித நடைமுறை பயன்பாட்டைக் கொண்டுள்ளன. நாட்டுப்புறக் கலையை உருவாக்குபவர்கள் பொதுவாக கலாச்சாரத்தின் நுண்கலை பாரம்பரியத்தை விட பிரபலமான பாரம்பரியத்திற்குள் பயிற்சி பெறுகிறார்கள். நாட்டுப்புறக் கலைகள் ஒரு சமூகத்தின் கலாச்சார வாழ்க்கையை வேருன்றி பிரதிபலிக்கின்றன. அவை நாட்டுப்புற மற்றும் கலாச்சார பாரம்பரியத் துறைகளுடன் தொடர்புடைய வெளிப்பாட்டு கலாச்சாரத்தின் கூறுகளை உள்ளடக்கியது. பொருள்சார் பண்பாட்டுக் கலையில் வரலாற்று ரீதியாக வடிவமைக்கப்பட்ட மற்றும் ஒரு பாரம்பரிய சமூகத்திற்குள் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கும். அருவமான நாட்டுப்புற கலைகளில் இசை, நடனம் மற்றும் கதை கட்டமைப்புகள் போன்ற வடிவங்கள் அடங்கும். நாட்டுப்புறக் கலைகளே தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்கவழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன. ஆனால் தற்காலத்தில் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் தகவல் தொடர்பிற்கும் பொழுதுபோக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகியுள்ளது. இதனால் எமது நாட்டுப்புறக் கலைகள் இன்னும் வெளியே தெரியாமலும் நலிவடைந்து போகும் நிலையும் காணப்படுகிறது

அந்த வகையில் இவ் ஆய்வுக் கட்டுரையானது தென்னிந்தியாவில் வழங்கும் நாட்டார் ஆடல் வடிவமான தேவராட்டம் பற்றியும் அதன் தோற்றுவாய், ஆடல்முறை மற்றும் அதன் தற்கால நிலை பற்றியும் இவ் ஆய்வுக் கட்டுரை ஆராய்ந்து அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திறவுச் சொற்கள் - : நாட்டுப்புறம், பாரம்பரியம், பண்பாடு, கலை கலாச்சாரம், நாகரிகம், உணர்ச்சி, சடங்கு

முன்னுரை

நாட்டுப்புற நடனம் அல்லது கிராமிய நடனம் (குழடம னுயnஉந) என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் கலையாகும். ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும் கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாடகக் கலைகள் நமது மண்ணோடும், நம்மோடும் தொடர்புடையவை. அவை நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறிய முடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்கவழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன. ஆனால் தற்காலத்தில் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் தகவல் தொடர்பிற்கும் பொழுதுபோக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகியுள்ளது. இதனால் எமது நாட்டுப்புறக் கலைகள் இன்னும் வெளியே தெரியாமலும் நலிவடைந்து போகும் நிலையும் காணப்படுகிறது.

நாட்டுப்புறக் கலைகள் என்பவை நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைகின்றன. இவ்வுணர்ச்சிகள் பாடலாகவும் ஆடலாகவும் மக்களிடையே வெளிப்படுகிறது. அந்த வகையில் நாட்டுப்புறக் கலைகளாக கும்மியாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கழியலாட்டம், பகல் வேஷம், கணியான் ஆட்டம், கூத்து, வர்மம். களரி, உறியடி விளையாட்டு, தப்பாட்டம், உக்கடிப்பாட்டு, குறவன் குறத்தியாட்டம், துடும்பாட்டம், தோற்பாவைக்கூத்து, காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கரடி ஆட்டம், புலியாட்டம், பேய் ஆட்டம், தெருக்கூத்து, பாவைக் கூத்து, கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவை அமைகின்றன.

அந்த வகையில் இவ் ஆய்வுக் கட்டுரையானது தென்னிந்தியாவில் வழங்கும் நாட்டார் ஆடல் வடிவமான தேவராட்டம் பற்றியும் அதன் தோற்றுவாய், ஆடல்முறை மற்றும் அதன் தற்கால நிலை பற்றியும் ஆராய்ந்து அறிவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.

தேவராட்டம்

தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் தேவராட்டமாகும். இது குறிப்பாக தமிழ்நாட்டில் வேட்டைத் தொழில் செய்து வந்த கம்பளத்து நாயக்கர் சமூகத்தவர்களின் முக்கியத்துவம் பெற்ற சடங்காகக் காணப்பட்டது. இச்சமூகத்தினர் அவர்களது விழாக்களிலும், வீட்டு  விழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும் போது பாவனையாகவும், மழை, திருமணம் மற்ற விசேஷங்களில் சடங்காட்டமாகவும் இந் நடனம் நிகழ்த்தப்படுகிறது. கம்பளத்து நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பூப்புச் சடங்கில் 16-ம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்து விட்டு வீட்டுக்கு வரும் போதும், திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போதும் தேவராட்டம் ஆடப்படுகிறது. பிறப்பு, இறப்பு என எல்லா சடங்கிலும் தேவதுந்துபி இசைக்கப்படுகிறது. ஆடி மற்றும் புரட்டாதி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சக்கம்மா வழிபாட்டின் போதும்; தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவார்கள்.

சங்க இலக்கியத்தில் தேவராட்டம் முன்தேர்க் குரவை பின் தேர்க் குரவை என்று காணப்படுகிறது. மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும்போது மன்னரை வரவேற்க ரதத்திற்கு முன்னாலும் பின்னாலும் வீரத்தன்மையோடு ஆடும் ஆட்டம் இதுவாகும். சிவ பார்வதியின் திருமணத்தின் போது நந்திதேவன் இசைக்க அதற்கேற்ப தேவர்கள் நடனம் ஆடினர் என்று புராணம் கூறுகிறது. மேலும் சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தின் போது அவரை அமைதிப்படுத்த தேவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடினர் என்பர். தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் இதற்கு தேவராட்டம் என்றழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் வாழும் கம்பளத்து நாயகர் என்ற இனத்தவரால் ஆடப்பட்டு வரும் ஆட்டம் தேவராட்டம் ஆகும். தேவலோகத்தில் உள்ள தேவர்கள் மகிழ்ந்து ஆடிய ஆட்டம் என்பதால் தேவராட்டம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கலைக்கோட்டு மாமுனிவரின் மகள், ஆண் உறவின்றி புத்திரப்பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர் அவருக்கு எலுமிச்சைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சைப்பழத்தை ‘கண் பழம்’ என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அந்தக் குழந்தையின் மரபினர் கண்பழத்தார் - கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது என்று ஒரு கதையும், ஏழு உலகங்களையும் படைத்த பிறகு சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக்கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது.

ஆனால், ஊடுக்கையை விட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை’ தேவதுந்துபி’ என்று அழைத்தனர். தேவர்கள் அந்த இசைக்கருவியை இயக்க முயன்றனர், முடியவில்லை. அதை இயக்க யாரும் முன்வராத நிலையில், சிவனுக்கு மாலை கட்டுபவர் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்துக்கேற்ப தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் ‘தேவராட்டம்’ எனப் பெயர் பெற்றது என்று ஒரு கதையும் உண்டு என தேவராட்டம் தொடர்பாக இரண்டு நாட்டார் கதைகள் உள்ளன.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக்கலை அதிகமாகக் காணப்படுகிறது. தேவராட்டத்தினை ஆந்திராவில் ‘தேவுடு ஆட்டம்’ என்கிறார்கள்.

ஆட்டமுறை

கம்பளத்து நாயகர்களுடைய வழிபாடு, திருமணம் போன்ற நிகழ்வுகளில் தேவராட்டம் தவறாமல் ஆடப்படுகிறது. தேவராட்டம் ஆடுவதற்கென்று தனித்த கலைஞர்கள் இல்லை. இதில் 8 முதல் 13 பேர்  ஆட வேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நூறு பேர்கள் கூடச் சேர்ந்து தேவராட்டம் ஆடுகின்றனர். வில், அம்பு பிடித்து தேவராட்டம் ஆடும் வழக்கமும் உண்டு. இதில் பாடல்கள் இடம்பெறுவதில்லை. மெதுவாகத் தொடங்கும் ஆட்டம் வேகமாகி உச்சக்கட்டத்தில் முடிவடையும். நேர்வரிசையில் ஆடப்படும் இவ்வாட்டத்தில் சுழன்றாடுதல், குதித்தல், திரும்புதல், முன்னோக்கிப் பாய்தல் போன்ற ஆட்ட முறைகள் இடம்பெறும். தேவராட்டத்திலுள்ள அடவுகள் மனிதனின் செயற்பாடுகளை வெளிப்படுத்தவும், தேவையான உடற்பயிற்சியாகவும் உள்ளது.

அந்த ஆட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடல் அசைவுகளைக் கவனித்து அவரைப் பின்பற்றி ஆடுவார்கள். நிலுடிஜம்பம், சிக்குஜம்பம் போன்ற பெயர்களில் 23 ஆட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுகள் மாற்றமடைகின்றன. ஆரம்பத்தில் பெண்கள், பார்வையாளராக மட்டுமே இருந்தனர். தற்போது சில ஊர்களில் பெண்களும் தேவராட்டம் ஆடுகின்றனர்.

தேவராட்டத்தில் 18 அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் எனக் கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன் மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த ஆறு இசை மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு

ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இந்தக் கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப்பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது. கம்பளத்து நாயகர்களின் இனக்குழு ஆட்டமாகத் தேவராட்டம் கருதப்படுவதனால் இந்த ஆட்டத்தை பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை.

இசைக்கருவிகள்

தேவதுந்துபி என்னும் தோலிசைக்கருவியின் இசைப்பு முறைக்கேற்ப காலில் சலங்கை கட்டி அடவு பிடித்து தேவராட்டம் ஆடப்படுகிறது. அத்தோடு உருமி மேளம், பறைமேளம் ஆகியனவும் தேவராட்டத்தின் போது பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளாகக் காணப்படுகின்றன. தேவதுந்துபியை ‘தொழுவநாயக்கர்’ என்னும் பிரிவினர் இசைக்கின்றனர்.

ஆடை

இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதில்லை. ஆண்கள் தங்கள் கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு இடுப்பில் வேட்டியும் துண்டும் கட்டி தலையில் தலைப்பாகையும் கட்டி தேவராட்டத்தினை ஆடுவார்கள். ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்கு காணப்படுகிறது.

முடிவுரை

இவ்வாறாக தேவராட்டமானது வெறுமனே ஒரு நிகழ்த்துக்கலையாக மட்டுமல்லாது அது ஒரு பெரிய பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கின்றது. எல்லா பெயர்களுக்குப் பின்னாலும் இப்படியான ஒரு பண்பாட்டுக் கூறு காணப்படுகிறது. அண்மைக்காலமாக இக்கலை மேடைகளில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் குடியேறும் அளவிற்கு நாகரிகம் முன்னேறிவிட்டாலும் வழி வழியாக நம் தமிழ் மக்களின் இரத்தத்தோடு கலந்துள்ள இந்த நாட்டுப்புற கலையம்சங்கள் மட்டுமே நம் உணர்வுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும். இத்தகைய சிறப்புப் பொருந்திய இக்கலைவடிவமானது அவற்றின் பாரம்பரியம் அழிந்துவிடாமல் பாதுகாப்பதும், அவற்றை இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்வதும் நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக உள்ளது.

 

உசாத்துணை நூல்கள்

1.         சக்திவேல்.சு, நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002

2.         முருகேசன்.கு, தமிழக நாட்டுப்புற ஆட்டக்கலைகள், தேவி பதிப்பகம், சென்னை, 1989

3.         சோமலெ, தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை, 1998

4.         இராமநாதன்.ஆறு, நாட்டுப்புற இயல் ஆய்வுகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1997

5.         இராமநாதன்.ஆறு, நாட்டுப்புறக் கலைகள், ( நிகழ்த்துக் கலைகள்)

6.         தேவநேயப் பாவாணர்.ஞா, பண்டைத்தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை, 1996

7.         பெருமாள்..ன், தமிழக நாட்டுப்புறக் கலைகள், சென்னை, 1980