ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சமூகமயமாதல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு - ஒரு சமூகவியல் நோக்கு.

செல்வி. ராஜேந்திரன் கிரு~pகா, தற்காலிக உதவி விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 15 Aug 2022 Read Full PDF

சமூகமயமாதல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு - ஒரு சமூகவியல் நோக்கு.

செல்வி. ராஜேந்திரன் கிரு~pகா, தற்காலிக உதவி விரிவுரையாளர், சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 

ஆய்வுச்சுருக்கம்

சமூகம் என்பது தனிநபர்களையும், குழுக்களையும், நிறுவனங்களையும் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பாகும். அவு;வகையிலே சமூகவியலும் சமூக விஞ்ஞானங்களுள் ஒன்றாக தனிநபர்களையும் சமூகத்தையும், அவர்களது நடத்தை, பண்பாடு என்பவற்றை விஞ்ஞான நோக்கில் ஆராய்கின்ற துறையாகும். இவ் சமூவியலின் செயற்பாடுகளுள் ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தோடு இணைத்து சமூகமயப்படுத்தும் செயற்பாடு இன்றியமையாததாக காணப்படுகின்றது. இவ்வாறான சமூகமயப்படுத்தும் செயற்பாட்டை சமூகத்தில் ஆற்றும் முகவர்களாக சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றன. சமூக நிறுவனங்கள் என்பது சஒரு சமூகத்தின் பொதுவான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளின் தொகுப்பைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக அமையும் அமைப்புக்களாகும். ஒரு சமூகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு பொதுவான விதிமுறைகள், மரபுகள், குறியீடுகள் மற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இவை கடத்துகின்றன. சமூகமயமாக்கல் என்பது பிறப்பு, இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து, அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புகள் மற்றும் பாத்திரங்களை கற்பிக்கின்றது. சமூகமொன்றில் ஒரு மனிதன் தானும் ஒரு அங்கத்தவனாக இணைந்து வாழ எடுக்கின்ற முயற்சி அல்லது அவ்வாறு இணைந்து வாழ அவனுக்குச் சமூகம் வழங்குகின்ற பயிற்சியும் ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்குத் தேவையான சமூக, சமய, கலாச்சார, பண்பாட்டு, ஒழுக்க சேவைகள் மற்றும் சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களைக் கற்றுத் தானும் ஒரு சமூக அங்கத்தவனாக வாழ்வதற்கு முயலும் செயல்முறை எனவும் வரையறுக்கப்படுகின்றது. சமூகமயமாக்கல் என்பது தனி மனிதன் மிருகமாக இருக்கும் நிலையிலிருந்து ஆளுமை உடைய மனிதனாக வாழக் கற்றுக் கொள்கின்ற செயற்பாடு என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக  குடும்பம், பொருளாதாரம், திருமணம், கல்வி, சமயம், ஊடகங்கள், அரசாங்கம் என்பன போன்ற சமூக நிறுவனங்கள் சமூகமயமாதலை சமூகத்தில் ஏற்படுத்தி வருகின்ற நிறுவனங்களாகும். இவ்வாறான சமூக நிறுவனங்கள் சமூகமயமாதலில் எவ்வகையில் பங்களிப்புச் செய்கின்றன என்பதை விபரிப்பதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

சுருக்கக் குறியீட்டுச் சொற்கள்: சமூக நிறுவனங்கள், சமூகமயமாதல், திருமணம், குடும்பம், கல்வி, பொருளாதாரம், சமயம், ஊடகங்கள்.

அறிமுகம்

இன்றைய நவீன யுகத்தில் நாளுக்குநாள் அனைத்து விடயங்களும் மாற்றமடைந்து வருகின்ற அதேவேளை மனிதனை சமூகத்தில் ஒருவனாக அங்கம்வகித்து இடைவினை புரியவைப்பதில் சமூகமயமாதல் எனும் எண்ணக்கரு முக்கியமானதாக காணப்படுகின்றது. அவ்வகையிலே ஆரம்பகாலத்தில் வேட்டையாடுதல், மந்தைமேய்த்தல் யுகத்தில் மனிதனை சமூகமயப்படுத்தும் செயற்பாடு குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இன்று சமூகமயமாக்கும் செயற்பாடு பல்வேறு துறைகளிலும் ஊடுருவியுள்ளது. அவ்வகையிலே சமூகவியலிலும் சமூகமயமாக்கல் செயற்பாடு இன்றியமையாததாக காணப்படுகின்றது. இவ்வாய்வுக்கட்டுரையானது சமூகமயமாக்கல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களில் பங்களிப்பு எவ்வகையில் காணப்படுகின்றது என்பதை எடுத்துரைக்கின்றது. அவற்றுள் சமூக நிறுவனங்களான குடும்பம், கல்வி, பொருளாதாரம், சமயம், திருமணம், ஊடகங்கள் என்பவற்றின் பங்களிப்பை விபரிப்பதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

சமூகமயமாதல்

சமூகவியலில் மிக அடிப்படையான எண்ணக்கருவே சமூகமயமாக்கமாகும். ஏனெனில் சமூகப் பிராணியாக மாற்றும் செயற்பாடு இதுவாகும். ஒரு மனிதன் சமூகத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொள்ள அவன் எடுக்கின்ற முயற்சி அல்லது அவனுக்கு தரப்படுகின்ற பயிற்சி சமூகமயமாதல் ஆகும். மனிதனையும் அவனது பண்பாட்டினையும் இணைக்கின்ற செயற்பாடாக இது விளங்குகின்றது. சமூகத்தில் உள்ள விழுமியங்கள்(Values), வழக்காறுகள் (Tradition),  நாட்டார் வழக்காறுகள் (Folkways) போன்றவற்றை அறிந்து மனத்தின் ஒரு பகுதியாக இது மாறுகிறது. மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு சரியான இணக்கத்தை உருவாக்குவதே சமூகமயமாதலின் நோக்கமாகும்.

சமூகமயமாதல் என்பது ஒரு மனிதன் தன்னை சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டு ஒதுங்கி விடாமல், தனது கலாச்சாரச் சமூகத்தின் பழக்க வழக்கங்களையும் நடை, உடை பாவனைகளையும் உணர்ந்து, அறிந்து ஏற்று வாழ்தலே சமூகமயமாகலாகும். மக்கள் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் உறுப்பினர்களாகச் செயற்படுகின்ற வகையில் செயல் நோக்கம், அறிவு, மொழி, பல்வேறு திறன்கள், விழுமியங்கள், விதிமுறைகள், வாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைப் பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாகலாகும் என எமில் டேர்க்கேம் (Emile Durkheim) குறிப்பிடுகின்றார். ஒரு தனியாளை, ஒரு உயிரியினை சமூகத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது சமூகமயமாகலாகும். ஒரு குழந்தையானது கருவில் இருந்து தோற்றம் பெறும் போது அது தானாகச் செயற்பட முடியாத நிலையில இன்னொரு உயிரின் உதவியுடன் அவனை வளர்த்துச் சமூகத்திற்கு ஏற்ற விதத்தில் உருவாக்குதல் சமூகமயமாகலாகும். இவ்வாறான வரையறைகளுக்கு அப்பால் இச் சமூகமயமாதல் இரு வகைப்படும்.

1. நுண்நிலைச் சமூகமயமாக்கல்

2. பருநிலைச் சமூகமயமாக்கல்

நுண்நிலைச் சமூகமயமாக்கல் (micro) என்பது சமூக இடைவினை, சமூகக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாக சமூகமயமாக்கப்படுதலாகும். பருநிலை சமூகமயமாதல் (macro) என்பது குறித்த சமூகத்தின் பண்பாடு, சமூகக் கட்டமைப்பு, குழுக்கள், நிறுவனங்கள் போன்ற மையங்களின் ஊடாக சமூகமயமாக்கப்படுதலாகும். சமூகமயமாக்கலில் ஈடுபடும் நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, தொழில் நிறுவனங்கள், ஆலயங்கள், இளைளோர் கூடங்கள், வயது குழுக்கள் (Peer Groups) , இரகசிய சங்கங்கள், குழுக்கள் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். ஒரு தனிநபர் சமூகமயமாக்கப்படும் போது அவற்றைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவையாவன ஆரம்ப சமூகமயமாக்கல் (Primary Socialization), இரண்டாம் நிலைச் சமூகமயமாக்கல் (Secondary Socialization), அபிவிருத்தி சமூகமயமாக்கல் (Development Socialization), மீள் சமூகமயமாக்கல் (Re- Socialization), பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கல் (Victim Socialization) என்பவையாகும். இவ்வாறான சமூகமயமாக்கல் செயன்முறையானது சமூக நிறுவனங்களுக்கூடாக சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றது.

சமூக நிறுவனங்கள்

சமூகவியல் துறையில் மிக முக்கியமான பாத்திரத்தை சமூக நிறுவனம் வகிக்கின்றது. சமூகத்தை விளக்குவதற்கு சமூக நிறுவனம் என்ற எண்ணக்கருவை விளங்கிக் கொள்ள வேண்டும் என சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். மக்களின் முக்கிய நோக்கங்களை செயல்களை அடைவதற்காக பல்வேறு நெறிகளைக் கொண்ட நிலையமைப்புக்களாக சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றன. சமூகவியலாளரான எமில் டுர்கைம் (Emile Durkheim) சமூகவியலை சமூக நிறுவனங்கள் பற்றிய விஞ்ஞானம் என வரையறை செய்தார். எப். ஏச.கிட்டின்ஸ் (F.H.Giddings) என்பவர் சமூக நிறுவனங்கள் என்பது கடந்தகால மனிதனுடைய செயன்முறைகளை பாதுகாக்கின்ற உறுப்புக்களாக காணப்படுகின்றன என்றார். எண்ணக்கரு (concept), கட்டமைப்பு (Structure) ஆகிய இரண்டு அம்ச்களையும் கொண்டிருப்பதுதான் சமூக நிறுவனங்கள் என சம்மர் (Sumner) என்ற அறிஞர்சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அமையப்பெறுகின்ற சமூக நிறுவனங்கள் மனிதனை தனியாகவும், குடும்பமாகவும் சமூகத்தில் இயங்க வைப்பதற்கான முறைமைகளை (System) கற்றுக்கொடுக்கின்றன. பொதுவாக சமூக நிறுவனங்கள் மனிதர்களின் கூட்டுச்செயற்பாடுகளைச் சார்ந்து இயங்குகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முயற்சியும் செய்கின்றன. ஒரு மனிதனை சமூகமயமாக்கலின் மூலமாக சமூகத்துக்கு பொருத்தமானவனாக வளர்த்தெடுக்கும் பணிகளை செய்வதுடன், தனிமனிதர்களை கட்டுப்படுத்துகின்ற அமைப்பாகவும் இவை தொழிற்படுகின்றன.

சமூக நிறுவனங்கள் இயற்கையான அமைப்பில் இயல்பாகவே சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன. சில சமூக நிறுவனங்கள் சமூகத் தேவைகளையும், மக்களையும், சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சமூக நிறுவனங்களைப் பொதுவாக இரண்டு வகையாக பிரித்து நோக்க முடியும்.

1.                முதலாம் நிலை சமூக நிறுவனங்கள் (Primary Social Institutions)

2.                இரண்டாம் நிலை சமூக நிறுவனங்கள (Secondary Social Institutions)

முதலாம் நிலை சமூக நிறுவனங்கள் எனும் போது சமூகத்தில் இயல்பாகவே தோற்றம் பெறுவதனைக் குறிக்கும். மனிதன் எப்போது தனியாகவும், குழுவாகவும் சேர்ந்து வாழப் பழகிக்கொண்டானோ அப்போதிருந்தே இவ்வாறான சமூக நிறுவனங்கள் உருவாகி விட்டன. முதலாம் நிலை சமூக நிறுவனங்களாக திருமணம், குடும்பம், மதம், உறவுமுறை என்பவற்றைக் குறிப்பிடலாம்.

சமூகம் வளர்ச்சியடைகின்ற ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தில் சிக்கல்கள் அதிகரித்தன. தேவைகளும் அதிகரித்தன. எனவே மனிதனின் இரண்டாம் நிலைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தோற்றம் பெற்ற சமூக நிறுவனங்கள் இரண்டாம் நிலை சமூக நிறுவனங்கள் எனப்படுகின்றன. இரண்டாம் நிலை சமூக நிறுவனங்களாக கல்வி, ஆயுதக்குழு, அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம் என்பன காணப்படுகின்றன.

இவ்வாறாக சமூக நிறுவனங்கள் தொடர்பாக பல்வேறு வகைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சமூகமயமாக்கல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களின் பங்களிப்பை விரிவாக நோக்குவோம்.

சமூகமயமாதல் செயற்பாட்டில் திருமணத்தின் பங்களிப்பு

திருமணம் உலகளாவிய சமூக நிறுவனங்களில் ஒன்றாகும். மனிதனின் பாலியல் உணர்வை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கு மானிட சமூகம் கண்டு பிடித்த அற்புதக் கருவி திருமணமாகும். குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. திருமணமானது குடும்பத்தை உருவாக்குவதற்கான சமூகத்தால் ஏற்கப்பட்ட சிறந்த முறை ஆகும். மனிதனின் உயிரியல் தேவைகளில் ஒன்றான பாலியல் ஆசை சட்டரீதியாகவும், சமூகத்தால் ஏற்கப்பட்ட வடிவிலும் திருமணத்தின் மூலமே நிறைவு செய்யப்படுகின்றது.

பெற்றோராதல் என்றடிப்படையில் ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் தேவைகளை நிறைவு செய்வதற்காக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் ஒரு உறுதியான இணைப்பு வைத்துக் கொள்வது திருமணம் எனப்படும். இது குடும்ப வாழ்க்கையில் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் நிறுவனமாகும். Gillan என்பவரின் கருத்துப்படி சந்ததியினரை பெருக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைமையே திருமணம்' என்கிறார். Malinowski குறிப்பிடும் போது 'பிள்ளைகளை பெறுவதற்கும் அவர்களை பராமரிப்பதற்கும் ஒப்பந்தம் அல்லது நிகழ்வு திருமணமாகும்.' என்கிறார்.

திருமணத்தின் முக்கிய தொழிற்பாடுகளை நோக்கும் போது மனிதனின் பாலியல் தேவைகளை ஒழுங்கமைத்தல், குடும்பம் என்ற அமைப்பினை உருவாக்குதல், பொருளாதார தேவையை நிறைவேற்றுதல், உள்மன ஆறுதலை ஏற்படுத்துதல், சமூக ஒற்றுமையை ஏற்படுத்துதல், சந்ததியை பெருக்குதல், சமூகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல், உறவு முறையினை விருத்தி செய்தல் போன்ற தொழிற்பாடுகளுக்கூடாக சமூகமயமாதலை ஏற்படு;த்துகின்றது.

குறிப்பாக குடும்பம் எனும் சமூக நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு அடிப்படையே திருமணமாகும். இத்திருமணம் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலான உறவு நிலைநிறுத்தப்படுகின்றது. நீடித்த பிணைப்பு ஏற்படுத்தப்படுகின்றது. பரஸ்பர கடப்பாடு (Mutul obligations) ஏற்படுகின்றது. கணவன்-மனைவி இருவரிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கடப்பாடு போன்றவற்றை திருமணம் ஏற்படுத்துகின்றது. சமயச்சடங்குகளுடன் தொடர்புபட்டது. இதனால் சமூக  ஒற்றுமை பலப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக திருமணம் ஆண், பெண் இருசாராரது வீட்டினரும் ஒன்றுபட்டு கலந்தாலோசித்து திருமணத்தை நிகழ்த்தி வைப்பர். இதன் மூலம் இரு வீட்டினருக்குமிடையில் சமூகமயமாதல் ஏற்படுகின்றது. அத்துட்ன மணமகன், மணமகள் இருவரும் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டிய நிலைமையை கற்றுக்கொடுக்கின்றது. இது திருமணம் எனும் சமூக நிறுவனத்தின் மூலம் ஏற்படுகின்றது. அத்துடன் திருமணமானவுடன் தாங்கள் ஒரு புதுக்குடும்பம் எனும் அமைப்பிற்குள் புகுவதால் சமூகத்தில் நிகழும் ஏனைய நிகழ்வுகளுடனும், சடங்குகளுடனும், சமூகத்திலுள்ளவர்களுடனும் இணைய முயல்கின்றனர். இது தனியாக இருந்த இரு நபர்களையும் இணைத்து சமூகமயமாதலை ஏற்படுத்துகின்றது.

திருமணம் குடும்பத்தையும் சமூகத்தையும் உருவாக்குவதற்கான அடிப்படைகளை இடுகின்றது. திருமணத்தின் மூலம் இணைந்த ஆணும் பெண்ணும் ஒருவரில் ஒருவர் அமைதி காண்கின்றார்கள். ஒருவரது துன்பத்தை அடுத்தவர் துடைக்கின்றார். அன்பும் அரவணைப்பும் பரஸ்பரம் இங்கே பரிமாறப்படுகின்றது. திருமணத்தின் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் ஒன்றிணைவதில்லை. மாறாக அவர்களைச்சார்ந்த குடும்பங்களும் ஒண்றிணைந்து சமூக ஒற்றுமையை உருவாக்குகின்றார்கள். சில நண்பர்கள் தமது உறவை மேலும் நிலைநிறுத்த தமது பிள்ளைகளிடையே திருமணம் செய்து வைக்கின்றார்கள். திருமணமானது தனிமையை விரட்டி வாழ்வில் பிடிப்பையும் அர்த்தத்தையும் ஏற்படுத்துகின்றது. திருமணமானது குழுக்களுக்கிடையேயான சமூக தொலைவை  (Social distance) கட்டுப்படுத்துகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் படி திருமணமானது சமூகத்தையும், மனிதனையும் இணைத்து சமூகத்தோடும் பிறரோடும் ஒன்றித்து வாழக் கற்றுக்கொடுக்கின்ற ஆரம்ப சமூக நிறுவனமாகவும், மனிதனை சமூகப்பிராணியாக மாற்றி சமூகமயமாதலை ஏற்படுத்துகின்ற சமூக நிறுவனங்களில் முக்கியமானதாகவும் காணப்படுகின்றது.

சமூகமயமாதல் செயற்பாட்டில் குடும்பத்தின் பங்களிப்பு

மனித வரலாற்றில் அனைத்து சமூகத்திலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் குடும்பம் என்ற அமைப்பு காணப்படும். இது திருமணம் பாலுறவு, சந்ததியினரை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை செய்வதனாலும் குடும்பம் ஓர் சமூக நிறுவனம் எனப்படுகின்றது. தனிநபர்களை சமூகமயமாக்குவதில் கூட குடும்பத்தின் பங்களிப்பு அளப்பெரியது. மனிதன் பிறந்தது முதல் குடும்பத்தோடு உணர்வு ரீதியான பிணைப்பை வளர்த்துக் கொள்கின்றான். குடும்பமே சமூக கட்டமைப்பின் அடிநாதமாகவும் தொழிற்படுகின்றது. ஒரு பரந்த பார்வையில் நோக்கின் பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட குழுவே குடும்பமாகும். இவற்றோடு உறவினர்கள், சார்ந்தவர்கள் போன்றோரையும் குடும்பம் உள்ளடக்குகின்றது. குடும்பமே அடிப்படையான முதன்நிலைக் குழு என்பது மெக் மற்றும் யங் போன்றோரின் கருத்தாகும்.

பாலியல் உறவால் வரையறுக்கப்பட்ட குழுவே குடும்பமாகும் என்பது மெகில்வர் மற்றும் பேஜின் (Maclver and Page) கருத்தாகும். திருமணம், இரத்தஉறவு, தத்தெடுத்தல் போன்ற பிணைப்புக்களால் இணைக்கப்பட்ட நபர்களின் குழுவே குடும்பமாகும் என்பது புர்கஸ் மற்றும் லோக்கின் (Burgess and Locke) கருத்தாகும்.

குடும்பமானது சமூகமயமாதல் செயற்பாட்டை மேற்கொள்வதில் அதிகமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சமூகமயமாதலில் இது ஒரு முதன்மையான முகவராக விளங்குகின்றது. குடும்பத்தின் தாக்கமே ஒரு குழந்தைக்கு ஆளுமை வளர்ச்சியைக் கொடுக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்கள், செயல்கள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றை குடும்பமே கற்றுத்தருகின்றது. பழக்கவழக்கங்கள், மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் முறை போன்றவற்றைப் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. பெற்றோர்கள் தங்கள் நடத்தையின் மூலம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டக விளங்குகின்றனர்.

பெற்றோர்களிடமிருந்து பெறும் பயிற்சியே பிற்காலத்தில் குழந்தைகள் பள்ளி ஆசிரியர்கள், மத குருமார்கள், காவலர்கள் போன்ற பலரிடமிருந்து பெறுகின்ற பயிற்சிக்கு, அடிப்படையாக அமைகிறது. அத்தோடு குடும்பமே குழந்தைகளுக்கு மொழி, நடிபங்குகள், பால்நிலை வேறுபாடுகள்  (Gender Roles) , கல்வி, சமயம், நாட்டுப்பற்று போன்றவற்றின் முக்கியத்துவத்தினை குடும்பமே தொடர்ச்சியாக கற்பிக்கும் முதன்மை நிறுவனமாக காணப்படுகின்றது.

கிங்ஸ்லி டேவிட்ஸ் குடும்பத்தின் தொழிற்பாடுகளை நான்கு வகையாக பிரிக்கின்றார்.

1. இனப்பெருக்கம் (Re-production)

2. பராமரித்தல் (Maintenance)

3. வேலைவாய்ப்பு (Placement)

4. சமூகமயமாக்கல் (Socialization)

குடும்ப அங்கத்தவர்களை வளர்த்து அவர்களை பௌதீக விருத்தி, ஒழுக்க விருத்தி,  உணர்வு விருத்தி, அறிவு விருத்தி, சமூக விருத்தி போன்ற பகுதிகளில் விருத்தியடைய வைப்பதே குடும்பத்தின் பொதுவான தொழிற்பாடாகும்.

குறித்த சமுதாயத்தில் பின்பற்றப்படுகின்ற கலாசார பண்பாட்டு நடைமுறைகள், மொழி, சமய நம்பிக்கைகள், ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல விடயங்களை குடும்பமே கற்றுக்கொடுக்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் பின்பற்றுகின்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் பிறக்கின்ற குழந்தை கற்று பின்னர் அது குறித்த சமுதாயத்தில் இணைந்து செயற்படுகின்றது. அத்துடன் பாசத்தோடு தொடர்பான தொழிற்பாடுகள் (Affectional function), பொருளாதார தொழிற்பாடுகள், பொழுதுபோக்கு தொழிற்பாடுகள் , பாதுகாப்புடன் தொடர்பான தொழிற்பாடுகள், சமயம்சார் தொழிற்பாடுகள், கல்விசார் தொழிற்பாடுகள், இளைஞர்களை பாதுகாத்தலும் பராமரித்தலும், பாலியல் ஊக்கத்தை ஒழங்குபடுத்தலும் முறையாக கட்டுப்படுத்தலும், சமூக பாரம்பரியங்களை பாதுகாத்தலும் பரிமாறுதலும், மிக நெருங்கியவர்களுக்கு சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.

எனவே ஒரு மனிதன் முதலில் ஒரு குடும்பத்தினுள்ளே பிறக்கின்றான் அங்கிருந்து தன்னுடைய சமூக வாழ்வை தொடங்குகின்றான். அங்கிருந்து அன்பு, பாசம், ஆளுமை, தனது  தேவைகளை நிறைவேற்றி சமூகத்திற்குள் நுழைகின்றான். இதுவே சமூகமயமாதலை மேற்கொள்வதில் முக்கியமான சமூக நிறுவனம் என கொள்ளப்படுகின்றது.

சமூகமயமாதல் செயற்பாட்டில் கல்வியின் பங்களிப்பு

சமூகமயமாதல் செயற்பாட்டை மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக காணப்படுகின்றது. கல்வியை வழங்கும் நிலையங்கள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் என்பன இப்பணியினை புரிகின்றன. குறிப்பாக ஆரம்ப சமூகமயமாக்கல் முகவர் அமைப்புக்களுள் பாடசாலை காத்திரமான பங்களிப்பை மேற்கொள்கின்றது. பாடசாலைகள் மூலமே குழந்தைகள் சமூக வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை கற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக பாடசாலைகள், கல்Âரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அமைப்புக்கள் போன்ற கல்வி நிறுவனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகமயமாக்கலை கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனங்களாகும்.

உதாரணமாக ஒரு குழந்தை தான் வசிக்கும் இடத்தில் இருந்து கல்வியை பெறும் இடத்திற்கு செல்லும் போது எவ்வாறு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும், அப்பாடசாலை, சமுதாயத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும், கற்றல் கற்பித்தல் செயற்பாடு இடம்பெறும் போது எவ்வாறு ஒழுக்க விழுமியத்துடன் செயற்பட வேண்டும், போன்ற இன்னோரன்ன விடயங்களை குறிப்பிடலாம்.

மேலும் ஒரு மாணவர் கிராமப்புற பாடசாலையில் கற்கும் காலத்தில் ஆங்கில அறிவு குறைந்தவராக காணப்படலாம். ஆனால் தன்னுடைய உயர்கல்வியை தொடரும் முகமாக ஆங்கில மொழி கற்கைநெறியினை தொடரும் போது வேறொரு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது அச்சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் விதம் அனைத்தும் கல்வியிÇடான சமூகமயமாக்கலின் மூலமே இடம்பெறுகின்றது.

பொதுவாக கல்விக்கூடாக மேற்கொள்ளப்படும் சமூகமயமாதல் குழந்தைப் பருவத்திலிருந்து அறிவு, திறன், மனப்பாங்கு, மற்றும் விழுமிய நடைமுறைகள் போன்றவற்றை வளர்க்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றது.

கல்வி நிறுவனங்கள் அறியாமையிலிருந்து அறிவும், இருளிலிருந்து ஒளியும் அளிக்கின்றன. பள்ளிகளிலும் கல்Âரிகளிலும் பயிலுபவர்கள் பல்வேறுபட்ட பின்னணியிலிருந்து வருகின்ற மாணவர்களுடன் தொடர்பு கொண்டு பழகுவதால் பலவகையான நடத்தைகளைக் கற்கின்றனர். அவர்களுடன் இணக்கமாகப் பழகத் தொடங்குகின்றனர். இந்நிறுவனங்களின் மூலம் பல Áல்களைப் படிப்பதால் , சமூக அமைப்பு, பிற நாடுகளின் நிலை, பொது அறிவு போன்றவற்றை வளர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் அந்நாடுகளின் சமூக பண்பாட்டு நிலைகளுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இந்த அறிவு மனிதனின் நாகரீகு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் ஆசிரியர்களின் ஆளுமையும், உயர்வான பண்புகளும் குழந்தைகளின் சமூகமயமாதல் செயற்பாங்கிற்கு அதிகம் உதவுகின்றன.

நேரக்கட்டுப்பாடு (Time Management), ஆளுமை (Personality), தலைமைத்துவம் (Leadership), கூட்டுப்பொறுப்பு(Cooperation),  சட்டத்தை மதித்தல் ((Respect the rules/ Laws) போன்ற நல்ல பண்புகளையும் குழந்தைகள் பள்ளிப்பருவத்திலேயே கற்றுக்கொள்கின்றன. தனிநபர் அடையாளத்தை சுட்டி எழுப்புவதிலும், சிந்தனா சக்தியை வளர்ப்பதிலும் சமூகமயமாக்கலில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

சமூகமயமாதல் செயற்பாட்டில் பொருளாதாரத்தின் பங்களிப்பு

சமூகமயமாதற் செயற்பாட்டில் பொருளாதாரத்தின் பங்களிப்பும் முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒரு சமூகத்தின் தொடரான இருப்புக்கு பொருளாதார நிறுவனங்களின் வினைத்திறன்மிக்க செயற்பாடு இன்றியமையாதவை. உற்பத்தியும் அதனைப் பங்கிடுதலும் செவ்வனே ஒரு சமூகத்தில் நடைபெற வேண்டும். இவை இரண்டும் தடைப்பட்டுப்போனால் சமூகம் தேக்கநிலையை அடைந்துவிடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். பாரம்பரிய சமூகங்களில் குடும்பங்கள் தமது தேவைகளை ஓரளவு தாமே நிறைவேற்றிக் கொள்கின்றன. எனினும் சிக்கலடைந்த நவீன சமூகத்தில் பொருளாதார நிறுவனங்களின் தேவை இன்றிமையாதவை. பொருட்கள், வேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்தல், பகிர்தல், பயன்படுத்துதல் ஆகியவை பொருளாதார நிறுவனங்களின் முக்கிய செயல்களாகும்.

கால்மாக்ஸின் கருத்துப்படி பொருளாதாரமே சமூகத்தின் தொழிற்பாட்டை தீர்மானிக்கின்ற கருவி. இவர் சமூகத்தை இரு அடுக்குகளாக பிரிக்கின்றார். அடிக்கட்டுமானமான பொருளாதாரமே மேற்கட்டுமானமான சமயம், கல்வி, குடும்பம், திருமணம் போன்ற ஏனைய சமூக நிறுவனங்களின் தொழிற்பாட்டிற்கு அடித்தளம் என்கின்றார். இவ்வகையில் அடிக்கட்டுமானமான பொருளாதாரம் என்பது ஏனைய சமூக நிறுவனங்களை நிர்ணயிக்கின்றது.

இவ்வகையில் நோக்கின் எந்தவொரு தனிமனிதனுக்கும் தனது வாழ்க்கையை நடாத்துவதற்கு பொருளாதாரம் அடிப்படையாக அமைகின்றது. இதன் மூலம் ஒரு மனிதன் சமூகத்திலுள்ள ஏனையவர்களுடன் தாமும் ஒருவன் என்ற நிலையை அடைகின்றான். சமூக, கலாச்சார நிகழ்வுகளின் பங்கேற்க பொருளாதாரம் துணைபுரிகின்றது. சமூக அடுக்கமைப்பை தீர்மானித்து சமூகமயமாதலை கட்டியெழுப்ப பொருளாதாரம் என்பது உந்துசக்தியாக அமைகின்றது.

சமூகத்திற்கு தேவையான பௌதீக வாழ்வாதாரங்களை பொருளாதாரம் வழங்குகின்றது. சமூகத்தின் தொடரான இருப்பிற்குத் தேவையான சமூக மாற்றங்களை உருவாக்குவதோடு இணைந்தும் செயற்படுகின்றது. பொருளாதாரம் ஏனைய சமூக அமைப்புக்களோடும், தமது துணை அமைப்புகளான உற்பத்தி, வினியோகம், நுகர்வு போன்றவற்றோடும் சமநிலையைப் பேணுவதற்கு உதவுகின்றது. சமூகத்தில் காணப்படும் சமூக அடுக்கமைவின் தன்மையை பொருளாதார நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கீழ்வர்க்கங்கள் அதிக பொருளாதாரத்தை செல்வமும் பொருளாதார வளங்களும் (Wealth and economic resources) வலுவையும் அதிகாரத்தையும் சமூகத்தில் கொடுக்கின்றது. சமூகத்தின் பல்வேறு முகவர்களைக் கட்டுப்படுத்த பொருளாதாரம் உதவுகின்றது. நவீன உலகில் அடிப்படைத் தேவைகள் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றன. இத்தேவைகளைப் பூர்த்தியாக்க பொருளாதார நிறுவனங்கள் உதவுகின்றன. பொருளாதார நிறுவனங்கள் வேலைவாய்ப்பையும் வருமானத்தை தொழிற்பகுப்பை ஏற்படுத்துவதன் மூலம் திறமைவாய்ந்த, ஆற்றல் உள்ள ஊழியர்களுக்கான வேலை செய்யும் சந்தர்ப்பங்களையும் தமது திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்புக்களையும் பொருளாதார நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. ஏனைய சமூக நிறுவனங்கள் இயங்குவதற்கு தேவையான ஆதரவை பொருளாதார நிறுவனங்கள் வழங்குகின்றன. சமய நிறுவனங்கள், பாடசாலைகள், சமூக அமைப்புகள் இயங்குவதற்கு சில வர்த்தக அமைப்புக்கள் உதவுகின்றன. வரி (Tex) வடிவில் அரசாங்கத்திற்கும் சம்பள வடிவில் குடும்பத்துக்கும் ஆதரவை வழங்குகின்றது.

இதன் மூலம் தனிமனிதர் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும், அதÇடான சமூக வாழ்வோட்டத்திற்கும், ஒவ்வொரு சமூகத்தையும் சமூகமயப்படுத்துவதற்கும் பொருளாதார நிறுவனங்கள் முக்கிய முகவர்களாக செயற்படுகின்றன.

சமூகமயமாதல் செயற்பாட்டில் சமயத்தின் பங்களிப்பு

சமயம் தொடர்பான பொதுவான வரையறையை நோக்கும் போது மனித வாழ்க்கைக்கு அர்த்தம் வழங்கத்தக்கதுமான அதீத நம்பிக்கை சார்ந்த சில புனித கூறுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கைகள், குறியீடுகள் ஆகியவற்றின் கூட்டிணைப்பு என வரையறுக்கப்படுகின்றது. சமூகவியல் சார்ந்து சமயம் எனப்படுவது மனித வாழ்க்கையோடு தொடர்புபட்ட அனுபவங்கள் அவதானிப்புக்களிலிருந்து பொதுமையாக்கம் செய்து தொகுத்தெடுத்து சாராம்சப்படுத்தி மனித பகுத்தறிவு, உலகம் பற்றிய புரிந்து கொள்ளலையும், கண்டறிவதற்கான மனித உந்துதலின் விளைபேறுதான் சமயம் என சமூகவியல் கூறுகின்றது.

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் மீதான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சமயம் செயற்படுகின்றது. சமயம் சமூக ஒழுங்கை பௌதீக அதீத சக்திகளின் மீதான நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே பேணுகின்றது. சமூக கட்டொருமைப்;பாடு, ஒற்றுமை, ஒழுக்கம் போன்றவற்றை சமயம் வழங்குகின்றது. மனிதர்கள் எதிர்மறையான தீய செயல்களையும், எண்ணங்களையும் தடுப்பதில் இயற்கை கடந்த சக்திகளின் மீதான பயத்தின் மூலமாக தடுக்கின்றது. சடயங்குகள், நம்பிக்கைகள், ஐதீகங்கள் போன்றவற்றின் ஊடாக சமூகத்தில் ஒருமைப்பாடும், ஒழுங்கும் பேணப்படுகின்றது.

எமைல்டுர்கைமின் (Emile Durkheim) இன் கருத்துப்படி சமயம் என்பது 'புனிதமான ஒன்றைப் (Sacred thing) பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்;கமைந்த முறை என்கிறார். சமயமானது சமூகத்திற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றது. இந்த வகையில் நான்கு பிரதான தொழிற்பாடுகளாக நல்வழிப்படுத்தல், ஒருங்கிணைத்தல், ஊக்குவித்தல், சாந்தப்படுத்துதல் என்ற தொழிற்பாடுகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றார். எனவே சமூகத்தின் நிலைப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமூகமயப்படுத்தலுக்கும் சமயம் என்பது முக்கிய கருவியாக நோக்கப்படுகின்றது.

உதாரணமாக சமய ரீதியிலான சடங்குகள், நிகழ்வுகளில் பங்கேற்கும் போது சமூகத்திலுள்ள ஏனைய மக்களோடு தொடர்பினை பேணக்கூடிண சந்தர்ப்பம் உருவாகின்றது. இதனை குலக்குறிய வழிபாட்டிÇடாக தெளிவுபடுத்துகின்றார். இதன் மூலம் தம் சார்ந்த குடி, இன, சமூக மக்களோடு இரண்டறக்கலக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

அதுமட்டுமின்றி சமயம் சார் நிறுவனங்களான ஆலயங்கள், பள்ளிவாசல், தேவாலயம், விகாரை, மதரசாக்கள் என்பன இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஒழுக்க அறநெறிசார் விடயங்களை போதிக்கின்றன. இது அவர்களது நடத்தையை தீர்மானிப்பதோடு ஆளுமை வளர்;ச்சிக்கும் முக்கியமானதாக காணப்படுகின்றது. சமய ரீதியான தத்துவார்ந்த கருத்துக்கள் மக்களை சமூகமயமப்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றன. எனவே சமய நிறுவனங்கள் சமூகமயமாக்கலில் முக்கிய பங்குதாரர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகமயமாதல் செயற்பாட்டில் ஊடகத்தின் பங்களிப்பு

சமூகமயமாதல் செயற்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது. தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றுமோர் இடத்துக்கு அனுப்ப உதவியான இருக்கின்ற சாதனங்களே ஊடகமாகும். ஊடகங்களை பொதுவாக அச்சு ஊடகம் (Print media) உதாரணமாக பத்திரிகைகள், புத்தகங்கள் எனவும், இலத்திரனியல் ஊடகங்கள் (Electronic media) உதாரணமாக வானொலி, தொலைக்காட்சி, கையடக்க தொலைபேசி எனவும் பிரிக்கலாம். உலகில் நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து பொதுமக்களுக்கு செய்தியையும் தகவல்களையும் வழங்குவதே ஊடகங்களின் பணியாகும். நெருக்கடி மிக்க காலங்களில் (உதாரணமாக போர், இயற்கை அனர்த்தங்கள், நெருக்கடிநிலைகள்) எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் சமூக ஸ்த்திரதன்மையை பாதுகாக்கின்றது.

சுற்றுச் சூழல் கண்காணிப்பு (Surveillance of the environment), சமூகத்தின் அங்கங்களுடன் தொடர்பு (Correlation of parts of society), பண்பாட்டு பரிமாற்றம் (Culture transmission), பொழுது போக்கு (Entertainment), ஒருங்கிணைப்பு (Coordination) போன்ற பணிகளை ஊடகங்கள் மக்களுக்கும், சமூகத்திற்கும் வழங்குகின்றது. சமூகமயமாக்கல், சமூகக்கட்டுப்பாடு போன்றவற்றை சமூகத்தில் ஏற்படுத்தி சமூகத்தின் ஸ்திரதன்மைக்கு ஊடகங்கள் உதவுகின்றது.

பொது மக்களுக்கு தகவல்களை வழங்குதல், பொழுது போக்கு சாதனமாக அமைதல், கல்வியை கற்பதற்கும், அறிவைப் பெறுவதற்கும் உதவுதல், பொது மக்கள் கருத்தை வடிவமைத்தல், அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்து அரசியல் தகவல்களை பொது மக்களுக்கு கொண்டு சேர்த்தல், சமூகமயமாக்கல் செயன்முறைகளுக்கு உதவுதலும் பண்பாட்டைக் கற்பித்தலும், ஆளுமை விருத்திற்கு உதவுதல், ஆண், பெண் பாத்திரங்கள் குறித்து காட்சிப்படுத்துவதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு பால்நிலைப் பாத்திரங்கள் குறித்து விளக்குதல், சமூகப் பிரச்சனைகள், நோய், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குதல், அரசாங்கத்தின் கட்டளைகளை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இடைத்தரகராக தொழிற்படல் அனர்த்தங்களின் போது நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை வழங்குதல், ஊழல், இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை வெளியே கொண்டுவந்து மக்களுக்கு அவற்றை வெளிப்படுத்துவதும் அவற்றுக்கெதிராக போராடுவதும் ஊடகங்களின் பணியாக அமைகின்றது.

இவ்வாறான நிலைமை மக்களை விழிப்படையச் செய்து சமூகத்தோடு இரண்டறக்கலக்கும் தன்மையை ஏற்படுத்துகின்றது. இது சமூகமயமாதலுக்கு இட்டுச்செல்கின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களில் அண்மைக்காலங்களில் ஒளிபரப்பப்படும் மக்களோடு கலந்துரையாடும் நிகழ்வுகள் அவர்களை சமூகமயப்படுத்துகின்றன. எனவே சமூகமயமாதல் செயற்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

முடிவுரை

இவ்வாய்வுக்கட்டுரையானது சமூகமயமாதல் செயற்பாட்டில் சமூக நிறுவனங்களின் பங்களிப்பு எவ்வகையில் காணப்படுகின்றது என்பதை எடுத்தியம்புகின்றது. சமூகவியல் என்பது சமூக உறவுகள், சமூக இடைவினை, கலாசாரம் என்பவை உள்ளடங்கலாக சமூகத்தை விஞ்ஞான ரீதியாக கற்கின்ற துறையாகும். இவ்வாறான சமூகவியல் துறையினுள் சமூகமயமாதல் எனும் எண்ணக்கரு முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக சமூகமயமாக்கம் எனும் போது 'ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்தோடு சேர்ந்து வாழ எடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் முயற்சிகளும் சமூகமயமாக்கம் என அழைக்கப்படுகின்றது இவ்வாறான சமூகமயமாக்கல் செயற்பாட்டை மேற்கொள்வதில் முக்கிய பங்குதாரர்களான சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக திருமணம், குடும்பம், கல்வி, பொருளாதாரம், சமயம், ஊடகங்கள் போன்ற சமூக நிறுவனங்கள் சமூகமயமாதல் செயற்பாட்டிற்கு எவ்வகையில் பங்காற்றுகின்றது என்பதை இவ்வாய்வுக்கட்டுரையானது விபரிக்கின்றது. குறிப்பாக ஓர் உயிரியல் பிராணியாக இருக்கும் மனிதனை ஒரு சமூக பிராணியாக மாற்றுவதற்கும், ஆளுமை விருத்திக்கும், மனிதனை ஒழுக்க சீலனாக மாற்றுவதற்கும், மனிதனுக்கு அறிவை புகட்டுவதற்கும், மனித வாழ்க்கையில் சரியான அபிலாசைகளை வளர்ப்பதற்கும், மனிதனுக்கு சமூக ஒழுங்கை பேணுவதற்கு அல்லது நிலை நிறுத்துவதற்கும், மனிதனுடைய பண்பாட்டு மாற்றத்திற்கும், ஒரு மனிதனுக்கு காத்திரமான எதிர்காலத்தை வழிகாட்டுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக சமூக நிறுவனங்களுக்கூடாக சமூகமயமாதல் செயற்பாடு இடம்பெறுகின்றது என்பதை இவ்வாய்வுக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

உசாத்துணைகள்

  1. Zerihun Doda, M.A. (2005), “Introduction to Sociology”, Debub University, pages (99-124).
  2. Introduction to Sociology (2016), (BA Sociology, Semester First), Rajiv Gandhi University, pages (55-74, 75-92).

Available at:  https://rgu.ac.in/wp-content/uploads/2021/02/Download_636.pdf,  accessed on  15 June 2022, at: 08.30pm.

  1. கிஸ்பர்ட்.பி, நாராயணன்.ஜே. (1964), 'சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள்', தமிழ்   வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கள், பக் (96-117).
  2. பக்தவத்சல பாரதி (1990), 'பண்பாட்டு மானிடவியல்', மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக் (377-400).
  3. மோசஸ்.எஸ் (2007), 'வெகுஜன ஊடகம் - மக்கள் திரள் நிலை ஊடகங்கள் பற்றிய அறிமுக விளக்கம்', கிருஷp வெளியீடு, பக் (01-45).