ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணத்தில் இரு மனப்பெண்டிர் உவமைக் குறித்தப் பதிவுகள்

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை 15 Aug 2022 Read Full PDF

Abstract:

The Greatest Epic of Kamban  highlights   the Men’s   most admirable  cultural attitude of togetherness  with their  Life Partners through their noble quality  of upkeepting the  Virtue of  Chastitiy  with  sublime attributions  of  oneness to one another as Better Halfs. King Dasaratha lived with so many Wives. But whereas his son Rama lived with one wife till his Life because of his Chastity. On the day of their Wedlock itself, Rama promised Seetha that he will never opt to think off  another Woman in this Birth. On the contrary, opponent character  and a Renowned King Ravana had two wives namely Mandodhari  &  Dhaniyamaali apart from women in ownership who can also be termed as Stepnies  in the other sense and he also had an admiration to Seetha. 

Another Great Warrior Vaali also tried to have a illicit affair with his Brother Sugreevan’s wife Rumai despite the fact that his own wife Tharai was ver much with him.  So it is construed that Men folk are the ultimate root cause for some of  the  Womenfolk  for their  transformation of this type with a Price tag attached to their Beauty thereby branding them as  Price ladies. The same  has been illustrated in this  Great Epic of  Kambaramayan in order to make us realize that concept.

Keywords:   Men folk,  Womenfolk, Women of Chastity, Price Ladies, Physical         Structure & Beauty,  Preference out of Desire.

கம்பராமாயணத்தில் இரு மனப்பெண்டிர் உவமைக் குறித்தப் பதிவுகள்

முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.

ஆய்வுச்சுருக்கம்:

கம்பன் காவியம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய பண்பாட்டையும், ஆண்களுக்கும் கற்பு என்ற விழுமியப் பண்பு உண்டு என்பதையும், எடுத்துக் கூறுகிறது. ஏகப்பட்ட பத்தினிகளோடு வாழ்ந்தவன் தசரதன். ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவன் இராமன். இராமன் திருமணத்தன்றே சீதையிடம் இந்த இப்பிறவியில் வேறொரு மாதரை சிந்தனையிலும் தீண்டேன் என்கிறார். எதிர் நிலை பாத்திரமான இராவணனுக்கு மண்டோதரி, தானியமாலி என்ற இரு மனைவியர் மற்றும் பல உரிமை மகளிரும் இருந்தனர். வாலி தன் மனைவி தாரை தவிர தம்பி சுக்ரீவன் மனைவி ருமையையும் சேர்த்துக் கொண்டான். பெண்கள் விலைமகளிராக மாற்றப் பட்டதற்கு ஆண்களே காரணம்.

முக்கியச் சொற்கள்: ஆண்கள், பெண்கள், கற்புடையவள், விலைமகளிர், உடல்அழகு, விருப்பம்.

முன்னுரை:

          கம்பர் கம்பராமாயணத்தில் கற்பின் பெருமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதேப்போல்    விலைமகளிர் இயல்பையும் பல இடங்களில் கூறியிருக்கிறார். 'பூரியர் புணர்மாதர்' என்பார் கம்பரும். நீதி நூல்கள் செய்த ஆசிரியர்கள் அனைவரும் அப் பெண்டிரின் மன இயல்புகளை வகை சித்திரித்துக் காட்டி உள்ளனர். வகையாகச் கம்பரும் தம் காவியப் போக்கில் இயற்கை வருணனை கூறும் போதும், பாத்திரச் சித்திரிப்புகளிலும் பல சூழ்நிலைச் சம்ப வங்கள் சொல்லும் போதும் வேசையரின் உள்ளத்தை விவரிக்கிறார்; . எந்தெந்த  இடங்களில் எல்லாம் கம்பர் விலைமகளிர் குறித்து குறிப்பிட்டுச் செல்கிறார் என்பதையும், அப்போது அவர்தம் பண்பு, இயல்பு, குணம், நடவடிக்கை, பொருளை மட்டுமே பெறும் எண்ணம் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

 விலைமகளிர் :                                                                

            காமத்தின் மிகுதியால் சிற்றின்பத்தை அனுபவிக்கக் கருதியோர்க்கு பெண்கள் தங்களையே விலைபொருட்களாகக் கொடுத்துள்ளனர். அத்தகைய விலைமகளிரும் பொன், பொருளுக்குத் தங்களுடைய உடம்பையே பண்டமாற்று முறையில் அனுபவிக்கக் கொடுத்து வாணிபம் செய்தமையும்  குறிக்கப் பெற்றுள்ளது.

விபச்சாரி, விலைமாது , வேசி என்று பேச்சு வழக்கிலும், ஆங்கிலத்தில் Harlot , Prostitute ,Whore, Strumpet ,Courtesan என்று அழைக்கப்படுகிறார்கள். தன் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களை இலக்கியங்களில் கணிகை, சலதி, பரத்தை, விபச்சாரி, பொதுமகளிர்,விலைமகள்,  வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி,   தாசி ,  கற்பற்றீர் எனப் பல சொற்களால்  குறிக்கப் பெற்றுள்ளனர்.

பெண்மையின் அணிகள்

கற்பும், நீங்காத அன்பும் தான் பெண்மையின் அணிகள். சோலையை வர்ணிக்கும்போதுகூட கற்புடைய பெண்ணின் மனம் எவ்வளவு தூய்மையாக இருக்குமோ அவ்விதம் தூய்மையானது அச்சோலை என்கிறார். கற்பைவிட திண்மையானது இந்த உலகில் ஒன்றும் கிடையாது என்றும் சீதை மூலம் இராவணனிடம் பேச வைக்கிறார் கம்பர்.

நாட்டுவளத்தை வர்ணிக்கும்போது பெண்களின் கற்பினால் பருவமழை நிலைமாறாமல் பொழிந்தது என்கிறார்.மன்னனின் பெருமிதத்தை வடிக்கும்போது, பெண்கள் தன் கற்பினைக் கட்டிக் காப்பதுபோல், தன் தேசத்தைக் கட்டிக் காத்ததாகக் குறிப்பிடுகிறார்.

 வானரத்திற்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு நிலையை பிரம்மன் தங்களுக்கு வகுக்கவில்லை என்று அறநெறி அனைத்தும் தெரிந்த வாலிதன் இழிந்த ஒழுக்கத்திற்குக் காரணம்காட்டி, தான் தப்பிக்க முயலும்போது, இராமன் அறநெறி என்பது பிறப்பால் வருவதல்ல. அறிவால் வருவது. வானரமாயினும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்புநிலையில் தான் வாழவேண்டும். என்று கூறுவதாகக் கம்பர்  தம் நூலில் குறிப்பிடுகிறார்.

 எந்தக் காப்பியமும் ஒழுக்கத்தின் விழுப்பத்தைதான் பாடுமே தவிர, தீ ஒழுக்கத்தைப் போற்றாது.நல்லொழுக்கத்தின் உயர்வைக் காட்ட, அதனை தெளிவாக்க தீயொழுக்கத்தின் சிறுமையைச் சொல்லிக் காட்டலாம் .

 கம்பர் காலத்தில் தமிழகத்தில் பலதாரமணமும், பரத்தையர் மோகமும் குறையவேயில்லை. கூடியேயிருந்தது. கம்பர் இந்த நூலை எழுத வகுத்துக் கொண்ட நோக்கமே குறள் வழி விளக்கி மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்புநிலையை எடுத்துக்காட்டவேதான். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் என்பதை விளக்கவே இக்காப்பியத்தைக் கம்பர் எழுதினார்

 பெண் தவறுகிறாள், கற்பிழந்தாள் என்றே கூறி வந்து கொண்டிருக்கும் இந்தச் சமுதாயச் சூழலுக்கு ஆண்களின் மனப்போக்கு தான் காரணம் ஆண்கள் தங்கள் கற்பு தவறாமல் இருந்தால், பெண்களுக்கு இந்த நிலை  ஏற்படாது.

மனச்செம்மை

மனச்செம்மை  இரு மாதருக்கு இனங்கொடாத செவ்வரம் ஆண்களுக்கு வேண்டும்.விலைமகளிர் குறித்த பதிவுகளை உவமை மூலம் அவர்தம் பண்பு, குணங்களை கூறிச் செல்கின்றார். ஆண்கள் தம் கற்பு தவறாவிட்டால் பல்லாண்டுகாலம் ஒரு பெண் கல்லால் கிடக்க வேண்டியதில்லை.( அகலிகை).

பரத்தையர் குறித்து தொல்காப்பியர்:

பரத்தையர் குறித்தும் அவர்தம் இயல்பு குறித்தும் தொல்காப்பியர்"                   பரத்தையராவார் யாரெனில்,

                                 “ஆடலும் பாடலும் வல்லாராகி

                                  அழகும் இளமையும் காட்டி

                                  இன்பமும் பொருளும் வெஃகி

                                  ஒருவர் மாட்டும் தங்காதவர்"

                                                 (தொல்காப்பியர்-கற்பியல்நூ10 இளம்பூரணர்உரை)      

பரத்தையர்கள் ஆடல், பாடல் முதலிய கலைகளில் வல்லவராகவும்,அழகுடனும்,இளமையுடனும் இருந்து இன்பத்தைத் தந்து, பொருளைப் பெற்று ஒருவர்மாட்டும் தங்காதவராக இருப்பர் என்று கூறுவார்.

                       " எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது"    

                          தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.

(பொருளியல் நூ 29)

இன்பம் என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தி வரும் விருப்பமுடைமை ஆகும். 

                தலைவன் விருப்பப்படி செயல்படும் பரத்தையிடத்தும்  (விலைமகள்) அவனுக்கு இன்பம் தோன்றும். அவன் விருப்பப்படி செயல்படாத தலைவியிடத்தும் அவனுக்கு இன்பம் வரும்  என்பது இளம்பூரணர் விளக்கமாகும். "இன்பம் தோன்றுவதற்குக் காரணம் இன்பத்துக் குரிய பொருளன்று. தான் விரும்பியவாறு தன் விழைவு நிறைவேறலே ஆகும்" என்பர் சிக்மண்ட் ஃபிராய்டு.

          இம்மையில் மட்டுமின்றி, மறுமையிலும் தலைவன் தன்னைப் பிரியாதிருப்பதையே தலைவி விரும்பினாள் என்பதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. சிலர் தம் மனைவியிடம் மட்டுமின்றி பிற பெண்களிடத்தும் இன்பம் துய்த்தனர். இவர்களின் உறவை சங்க கால சமூகம் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகக் கருதவில்லை என்றாலும், இழிவாகக் கருதினர்  என்பதை அறியமுடிகிறது.  நலங்கிள்ளி “தன்னை எதிர்த்து வரும் எதிரியின் படையை வென்று வெற்றி பெறுவேன். அவ்வாறு நான் செய்யேனாயின் பொதுமகளிர் மார்பில் என் மாலை துவள்வதாக" என்று வஞ்சினம் கூறுகிறான். இதிலிருந்து பொது மகளிரைச் சேர்தல் இழிவானதாகக் கருதப்பட்டது என்பது தெரிகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான பதினொரு நீதிநூல்களிலும் விலைமகளிர் உறவு கண்டிக்கத்தக்கது என்றும், அவர்கள் வீடு இருக்கும் பகுதிகளுக்கு அருகில் கூட வசிக்கக்கூடாது என்றும் கூறுகின்றன. காப்பியகாலத்திலும் விலைமகளிர் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. கற்புக்கு உயர்வு கொடுத்துப் பேசப்படுகின்ற  கம்பராமாயணத்தில் இத்தனைப் பாடல்களில் விலைமகளிர் குறித்துப் பேசப்பட்டுள்ளது. அப்படியானால்  கம்பர் காலத்திலும் விலைமகளிர் அதிக அளவில் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.பெண்களின் இந்த   இழிநிலைக்குக் காரணம் ஆண்களின் மனநிலையே என்பதும் தெரியவருகிறது.

கௌதம முனிவரின் மனைவியான அகலிகையின் அழகில் மயங்கிய தேவேந்திரன் அவள்மேல் ஆசைப்பட, அவளும் சம்மதித்தாள் என்பதைப் பார்க்கும் பொழுது தேவர்களின் தலைவனே தன்னை விரும்புகிறானே என்று எண்ணிய பெண்ணின் மன எண்ணமும், ஒழுக்கம் தவறி நடக்க ஒரு காரணமாகிறது.

விலைமகளிர் மனம்:

             பாலை நிலத்தின் தன்மையைக் குறிப்பிடும் போது, துன்பத்துக்குக் காரணமான நல்வினை,தீவினைகளை ஒழித்து நீக்குவதற்கு அரிய காமம்,வெகுளி, மயக்கம் என்னும் மூவகைப் பகைகளாகிய மதில்களைக் கடந்து, வீட்டிலகில் செல்பவர்களாகிய ஞானிகளின் மனமும், தாம் தரும் இன்பத்துக்குப் பொன்னை விலையாகப் பெறும் விலைமகளிரின் மனம் போல அப்பால் நிலம் ஈரமற்றதாய் இருந்தது என்பதை,

                                "போவது புரிபவர்மனமும் பொன் விலைப்

                                 பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே"

                                                                                             (தாடகை வதைப் படலம்354)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

             விலைமகளிர் மனம் ஈரமற்றதாய் இருந்தது என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

பொருளையே லட்சியமாகக் கொண்டவர்:

             சடாயுவுக்கும், இராவணனுக்கும் போர் நடைபெற்றபோது, பொருளையே  லட்சியமாகக் கொண்ட விலைமகளிருடைய ஐம்புல இன்பத்தை அனுபவிக்க விரும்பிய வறுமையாளர்களும், இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கும் மகளிர் இல்லாத வீட்டுக்குச் சென்ற  நல்ல விருந்தினர்களும், தமது ஆத்ம சொரூபத்தையே கருதி யாகம் மேற்கொண்ட முனிவர்களை அடைந்த மென்மையானப் பார்வையை உடைய அழகிய மகளிரின் ஆசை நோக்கமும் ஒப்பாகும் என்று சொல்லும்படி, இராவணன் எறிந்த சூலம் தன் குறிக்கோளில் வெற்றிபெறாமல் சடாயுவின் மார்பில் பட்டு பாயமுடியாமல் பயனற்றுத் திரும்பியது என்பதை,

                           "பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்

                            இன் நோக்கியர் இல் வழி எய்திய நல்விருந்தும்”

                                                                                           (சடாயு உயிர் நீத்த படலம் 919)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

          பொருள் இல்லாத வறுமையாளரை விலைமகளிர் விரும்பமாட்டார்கள் என்பதைக் கம்பர் குறிப்பிடுகிறார்.

வேசிகள் மயக்குபவர்:

            மாரீசன், மாயமானாக வந்ததைக் கூறும் போது, எவரிடமும் நிலைத்து நிற்கும் மனமும், வஞ்சனை என்னும் குணமும் பெற்றுள்ள,  உண்மையான அன்பில்லாத வேசிகளிடமும், காமுகர்களாகிய ஆடவர் அனைவரும் மயங்கிவிடுவதைப் போல, மாரீசனது மாயவடிவமான பொன்மானைக்கண்ட  அந்த வனத்திலிருந்த கலைமான் முதலிய மான்கள் யாவும் ஆசையுடன் அப்பெண் மானின் பின்னே ஓடின என்பதை,

                       " நிலையா மன வஞ்சனை நேயம் இலா

                        விலைமாதர்கண் யாரும் விழுந்தெனவே"

(மாரீசன் வதைப் படலம் 765)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

வேசியர்கள், காமுகர்களை மயக்கும் இயல்புடையவர் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

மாரீச மாயமான் குன்றுகளின் மீது ஏறும். வான் முகில்களிடைச் சென்று பாயும். அருகில் சென்றால் விலகி ஓடும். எட்டவே நின்று தாமதித்தால், தன்னைத் தொடவிட அண்மையில் வரும். கிட்டே நெருங்கி நின்றால் தொலைவில் விலகி நிற்கும். கொடுத்த பொருளுக்கு ஏற்றபடி மட்டும் அன்பைப் பகிர்ந்து தருகின்ற மலர்மாலை சூடிய விலைமகளிரின் ஒருவழி நில்லாத மனத்தைப் போல் போயிற்று அம்மா!

                         குன்றிடை இவரும்; மேகக்குழுவிடைக் குதிக்கும் கூடச்

                        சென்றிடின், அகலும், தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்;

                         நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும்

                         மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று அம்மா!

(மாரீசன் வதைப் படலம் 793)

விலைமகளிரின்  மனம்   ஒருவழி நில்லாதது என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

கீழ்மக்கள் புணரும் விலைமகள்:

            இராமன், சீதை, இலக்குவன் மூவரும் காட்டு வழியில் செல்கின்றனர். கீழ் மக்கள் புணரும் விலைமகளிரின்  மனம் போல் ஈரம் உண்டோ இல்லையோ  என அறிதற்கும் அரிய இளவேனில் பருவத்தில் , இராமன் காட்டு வழியில் வந்தபோது வானம் நீருடன் கூடிய குளிர்ந்த கார்மேகம் பொருந்திய மழைக் குறியை எங்கும் கூட்டியது என்பதை, 

                   " பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும்

                    ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில்

                                                                                                 (வனம்புகுபடலம் 681)

என்ற பாடலில் கம்பர் குறிப்பிடுகிறார்.

           விலைமகளைச் சென்று சேர்பவர், கீழ்மக்கள் என்றும் கம்பர் குறிப்பிடுகிறார்.

ஒழுக்கத்தில் விலைமகள்:

            அகலிகை இந்திரன் விரும்பியபடி அவனுடன் சேர, விபரம் அறிந்த கெளதமமுனிவர் அகலிகையைப் பார்த்து, “ஒழுக்கத்தால் விலைமகள் போன்றவளான நீ கருங்கல் வடிவம் பெறுக” என்று சபித்தார் என்பதை,

                   " மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

                     கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள்"

    (அகலிகைப்படலம் 479)

 என்ற பாடலில் கூறப்பட்டுள்ளது.

  கணவனைத்தவிர வேறு ஓர் ஆண்மகனுடன்  உறவு கொண்டதால் ஒழுக்கத்தில் விலைமகளை ஒத்தாள் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

தவறான முன்னுதாரணமாகக் காட்டப்படுதல் :

 இராவணன் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி சீதையிடம் வேண்டி நிற்கும் போது, “அமுதம் போன்ற சொற்களை உடையவளே, நடுவு நிலையான ஆராய்ந்து பார்த்தால், முன்னொரு காலத்தில் அகலிகை என்பவள், ஒரு முனிவரின் மனைவியாக இருந்தும்,  இந்திரன் தனது காதலை வெளியிட, அதற்குச் சம்மதித்து அவனை அடைந்தாள். அதனால் அவள் குற்றம் எய்தினாளோ? எனது காதல் நோய்க்கு அழகிய அமுதம் போன்ற உனது சிவந்த வாயிலிருந்து வரும் அமுதம்அல்லாமல்,  வேறு ஒரு மருந்து இல்லை. இந்நோயை நீக்கும் மந்திரமும் இல்லை என்று கூறியதை,

               " அந்தரம் உணரின் மேல் நாள் அகலிகை என்பாள் காதல்

                  இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ?”

                                                                                                  (மாயா சனகப்படலம்1589)

 என்ற  பாடலடி மூலம் அறியமுடிகிறது.    

அகலிகை தன் கணவரான  கௌதம முனிவர்  இல்லை,  வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தும் அவனுடன் சேர்ந்தாள் என்பது தவறு ஆயினும் இராவணன் அது தவறில்லை என்று கூறுவதற்கும், அதுவே முன்னுதாரணமாகக் கட்ட வழிவகுத்துவிட்டது என்பதும் பெறப்படுகிறது.

       இராவணனின் இக்கூற்றிற்கு சீதை, வானளாவியது போன்ற கொடுமையுடன் காணப்படும் உன் சொல்லின்படி  வாழுமாறு இம்மண்ணுலகில் உள்ள,  மாமிசத்தாலான உடலைப் பெற்று உயிர்கள் உள்ளன. அவற்றுக்கு உணர்ச்சியும் உள்ளது  பொருந்தாத சொற்களைப் பேசுகின்ற  பிளவு  பட்ட பத்து வாய்கள் உனக்கு உள்ளன.அவற்றாக  நீ கூறும் அறமற்றவற்றைக் கேட்பதற்கு நான் ஒருத்தி உயிரோடு இருக்கிறேன் என்றால் நீ என்னதான் சொல்லமாட்டாய்,  எதைத்தான் செய்யமாட்டாய் என்று கூறியதை,                 

  "வான்உள மறத்தின் தோன்றும் சொல்வழி வாழும் மண்ணின்               

   ஊன்உள உடம்புக்கு எல்லாம் உயிர்உள உணர்வும்உண்டால்”

                                                                                                   (மாயாசனகப்படலம் 1593)

 என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

கணவனைத் தவிர பிற ஆண்களுடன் சேர்பவர் மனிதப் பிறவி அல்ல  ஏதோ உயிர், உணர்வு   பெற்ற ஒன்று அவ்வளவே என்று சீதை, இராவணனுக்குப் பதிலடி கொடுக்கின்றாள் என்பது பெறப்படுகிறது.

‘பிருகு’ என்னும் முனிவனின் மனைவி ‘கியாதி’ என்பவள் அரக்கர்களிடம், உள்ளம் உருகும் காதல் கொண்டு உறவு கொண்டாள், அதனால் திருமால் அவள் உயிரை வாங்கினார் என்பதை,

                               "பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை

                                 வரு கயல் கண் கியாதி வல் ஆசுரர்க்கு

                                 உருகு காதலுற உறவாதலே

                                 கருதி ஆவி கவர்ந்தனன் நேமியோன்"

                                                                                               (தாடகை வதைப் படலம் 381)

 என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

முனிவனின் மனைவியே அரக்கருடன் இருந்தாள் என்று தாடகை வதைப்படலத்தில் விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறும் பகுதியில் அமைந்துள்ளது.

அழகிய தோற்றம் உடையவர்:

                திருஅவதாரப்படலத்தில் “கலைக்கோட்டு முனிவனை அங்க நாட்டுக்கு அழைத்து   வரும் வழி என்ன” என்று அரசன்கேட்டான்.அப்போது ஒளி மிகுந்த நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், சிவந்த இதழை உடைய வாயையும், முத்துப் போன்ற பற்களையும், மென்மையான இரண்டு கொங்கைகளையும் உடைய விலைமகளிர் சிலர் எழுந்து " நாங்கள் சென்று கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகிறோம்” என்று கூறி வணங்கினர்  என்பதை,

                            "சோதி நுதல் கரு நெடுங் கண் துவர் இதழ் வாய்

                              தரள நகைதுணை மென் கொங்கை"

          (திருஅவதாரப்படலம் 217)

 என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது..  

              விலைமகளிர் அழகுமிகுந்த தோற்றத்துடன் ஆண்மகனைக் கவரும் இயல்புடையவராக இருப்பர் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

வேசிகளின் மனம்:

             இராமன், இலக்குவன்,இருவரும் விஸ்வாமித்திரருடன் மிதிலை நகர வீதிகளில் வரும் போது, உடம்பின் சேர்க்கையால் உண்டாகும் காம   இன்பத்தை ஆடவர்களுக்குச் சமமாகத் தாமும் அனுபவித்து, அவ்வின்பத்துக்காக விலையும்   பெறுகின்ற பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய வேசிகளின் மனத்தையும், பளிங்கையும் பல மைத்தீட்டப்பட்ட செவ்வரிபடர்ந்த தம் கண்பார்வைப் படுகிறபோது,  கருமை நிறம் பெற்று தமது கையை அடைந்ததால் செந்நிறம் பெற்று தோன்றுகின்ற பந்துகள் பலவற்றை அவர்கள் பார்த்தார்கள்.வேசிகளின் மனம், பளிங்கு, பளிங்கு போன்ற பந்து இம்மூன்றும் தமக்கென ஒரு  பண்பு இன்றி, தம்மைச் சார்ந்தவரின் பண்பைப் பொய்யாகப் பிரதிபலிக்கும் என்பதை,

                     "மெய் வரும் போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்

                        பை அரவு அல்குலார்தம் உள்ளமும் பளிங்குபோல்"

                                                                   (மிதிலைக் காட்சிப்படலம் 501)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது. 

             குலமுறை கிளத்துப்படலத்தில்  விலைமகளிர்  பிறர்க்குக் கொடுக்கின்ற பெரிய அல்குல் மின்னலைப் போல துவளும் இடை ஆகியவற்றைப் பெற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பதை,       

           " சிலைக்கேட்டு நுதல்குதலைச் செங்கனி வாய்க்கரு நெடுங்கண்

            விலைக்கு ஒட்டும்பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை"

                                                               (குலமுறைக் கிளத்துப்படலம் 600)     

என்ற பாடல் வழி தெரியமுடிகிறது.

விலைமகளிர் துவளும் இடையைப்பெற்றவர்கள்  என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

விலைமகளிர் மனம்:

 இராமன், சீதை திருமணத்தைக் காண கூட்டம்கூட்டமாகச் சென்றனர் . குதிரைகளின் கூட்டம் வெளியே அன்புடையவர் போலவும், மனதுக்குள் அன்பில்லார் போலவும் உள்ள கச்சணிந்த கச்சிதமாய் அமைந்த  முலைகளையுடைய விலைமகளிர் மனம் போல கிண்கிணி  மாலைகள் ஒலிப்பத் தாவித் தாவிச்    செல்லும். ஆனால் பேய்களைப்போல இக்குதிரைகள் பூமியில் அடிவைத்து மிதிப்பது இல்லை என்பதை,

                          “சூருடை நிலை எனத் தோய்ந்தும் தோய்கிலா

                            வாருடை வனமுலை மகளிர் சிந்தைபோல்”

                                                                                           (எழுச்சிப் படலம் 700)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

வெளியே மிகுந்த அன்புடையவர் போலவும், மனதின் உள்ளே அன்பில்லாதவர்கள் விலைமகளிர் என்றும், எடுப்பான முலைகளைப் பெற்ற வர் என்றும் கம்பர் குறிப்பிடுகிறார்.

மேகலை அணிந்த அல்குல்

            கரிய நிறமும், மதமும் உடைய யானைகள் சில தகுந்தபடி தம் மேல் அமர்ந்து செல்லும் பாகர்கள் தமக்குக் கூறும் கட்டளைச் சொற்களை ஏற்றுக் கொள்ளாமல், தம் இரு பக்கங்களிலும் தம் இனத்தைச் சேர்ந்த வேறு யானைகள் அப்பாகரைப் போல அவற்றை வெளியேற்றுவதற்காக வருத்த, அதையும் பொருட்படுத்தாதனவாகி விலைமகளிரின் மேகலை அணிந்த அல்குலிலே மோகம் கொண்டு ஈடுபட்ட     காமுகர்களைப் போன்றனவாகி, நீர்நிலைகளிலிருந்து கரை ஏறாதனவாக இருந்தன என்பதை,           

                     “மைக்கரி மதத்த விலைமாதர் கலை அல்குல்

                      புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் எறா"

 (சந்திரசயிலப்படலம் 787)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

            விலைமகளிர்  அல்குலில் மேகலை அணிந்திருப்பர் என்பது பெறப்படுகிறது.

தன் அல்குலை விலைக்கு விற்கும், பொன் வளையல் அணிந்த வேசிகள், இருந்த பொருளைப் பறித்துக் கொண்ட பின், மேலும் பணமில்லை என்பதை அறிந்து கொண்டு, வெறுப்புற்றுக் கைவிட்ட ஆடவர்களைப்போல, வனப்புள்ள வதனம் கொண்ட வனிதையரின் சிவந்த இதழைப் பெற்ற பவளம் போன்ற வாயும், கணக்கற்ற சுரும்புகள் - வண்டுகள் - மிஞிறுகள் முதலியனவும் உள்ளே இருந்த மதுவை உண்டுவிட்டுப் பின் கைவிட்ட இனிமையான மதுக்கோப்பைகள் பலவற்றையும் அவர்கள் பார்த்தார்கள்.,

               "அந்தம் இல் சுரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும்

                 பைந்தொடி மகளிர் கைத்து      ஓர் பசை இல்லை என்ன விட்ட

                 மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார்"

                                                                                           (வரைக்காட்சிப்படலம் 812)

மலையிலிருந்து புதிதாகப் பிடித்த யானைகளைக் கட்டிப் போடுபவர்கள் தாமே சொந்தமாகக் கட்டிய பாடலைப் பாடுகின்ற ஓசை, -கள் குடித்த ஆடவர், பெண்களிடம் காமக் குறிப்பிட்ட குழறிப் பேசும் ஓசை - வேசிகள் தம் அல்குலில் அணிந்து கொண்ட மேகலாபரணம் காமப் போரில் எழுப்பும் ஓசை,- மதவெறி கொண்ட யானைகள் மதக்களிப்பினால் வீறிட்டுப் பிளிறும் ஓசை ஆகியன அப்படி நகரில் எழுந்ததை,

             " பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை             

                கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை"

                                                                                     (வரைக்காட்சிப்படலம் 837)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

விலை பொருளுக்கே தம் வளர்முலைகள்:

அனுமனைப் பற்றிக் கொண்டுவருமாறு இராவணன்  சம்புமாலிக்கு ஆணையிட, சம்புமாலி அதனை ஏற்று,அரக்க வீரர்களுடன் சென்று அனுமனுடன் போருடற்றுகிறான். அனுமன் அரக்க வீரர்களுடன்  கடும் போர்   புரிந்து கொண்டிருக்கிறான்.   

             இந்நிகழ்வைக் கம்பர், இன்னார்,இனியார் என்று பாராமல் யாவர்க்கும் அவர்கள்  கொடுக்கும் விலை பொருளுக்கே தம் வளர்முலைகளைக் கொடுக்கத் தீர்மானித்தவர்களாய்ப் பொருளுக்குத்தக்கபடி, தம்மை அளிக்கும் விலை மகளிரின் மனத்தைப்போல,அனுமன் திரிந்தான் என்பதை,

                     “..................................................அறிவு என எவர்க்கும்

                      வருமுலை விலைக்கு என மதித்தனர் வழங்கும்

                      தெரிவையர் மனம் எனக் கறங்கு எனத் திரிந்தான்"

                      (கம்பராமாயணம்- சுந்தரகாண்டம்- சம்புமாலி வதைப் படலம் 849)

என்னும் வரிகள் மூலம்  அறியமுடிகிறது.

 தங்களை நாடி வருவோர்க்கு அளிக்கும் மனத்தை உடையவர் பரத்தையர்  என்று குறிப்பிடுகிறார். தம்மிடம் வருவோரின் தலை, மார்பு, பாதம்  முதலியவற்றைத் தழுவி, அவர்களிடம் உள்ள  பொருட்களை எல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களைவிட்டு நீங்குவர் என்றும் கம்பர் குறிப்பிடுகிறார்.

நகரப்படலத்தில்  அகழியின் ஆழத்தை வருணிக்கும்போது,

                    "பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய்

                      புன் கவி எனத் தெளிவு இன்றி"

                                                 (கம்பராமாயணம்-பாலகாண்டம்.- நகரப்படலம் 107)

 என்று மிகுந்த பொருள் ஆசையுடைய     விலைமகளிர் மனம் எவ்வளவு பொன் பெறினும் தூராமல் மேலும் ஆழமாதல் போல, அகழியும் அளவு காணமுடியாத ஆழமுடையதாக இருந்தது என்று கூறுகிறார். இதன்மூலம் தம்மிடம் வருவோரிடம் அன்பு கொண்டோர் போலத் தம்மைக்காட்டிக் கொண்டு அவர்களிடம் உள்ளப் பொருளையெல்லாம்  பறித்துக் கொண்டு, அவர்களிடம் தங்கியிருக்காமல் அவர்களைவிட்டு  விரைவில் நீங்குவர் என  விலைமகளின் இயல்புகளைக் கூறுகிறார்.

சரயு நதியை வருணிக்கப் புகுந்த கம்பர் அந் நதியில் பொங்கிப் புரளும் வெள்ளம் விலைமாதரை ஒத்தது என்று குறிப்பிடுகின்றார்.

                               “தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன்

                                நிலை நிலாது, இறை நின்றது போலவே,

                               மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,

                               விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே”

(ஆற்றுப்படலம் 18)

வேசையரின் மனமும், பொருள் புரியாத புன் கவியும் ஒன்றே என்றதும் கவனிக்கத்தக்கது. வேசையர் உள்ளம் பற்றிய செய்திக்கு வேறு ஒரு பாடல்

                           “வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்

                            உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன்;

                            தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்

                           வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே”

                                                                                                       அரசியல் படலம் (174)

 

தனது செங்கோல் ஆட்சியால் அறம் தவறாது ஆண்டவன் தயரதன். அவன் ஆட்சியில் மழை மிகுதியும் பெய்யாது; குறைவாகவும் பெய்யாது; அளவோடு பெய்வதால் வெள்ளமும் கரை கடவாது சென்றது. பறவைகளும் விலங்குகளும் பகையின்றித் தமக்குரிய வாழ்விலே நின்றன.பலரை நாடிச் செல்லும் விலைமாதர் மனமும் ஒருவனையே அடைந்து விரும்பி இருந்தது.இது தயரதனது அறம் கடவாத ஆட்சியில் நிகழ்ந்த அதிசயம் ஆகும்..

விலைமாதர் மனமும் ஒருவனையே அடைந்து விரும்பி இருந்தது என  விலைமகளின் இயல்புகளைக் கூறுகிறார்.

விலைமகளிர் வடிவம்:

  பம்பையில், அந்த நீர் நிலையில், யானைகள் இறங்கிக் கலக்குகின்ற காரணத்தினால், இரவில் ஆடவர் சந்தித்துச் செய்யும் புணர்ச்சியால் உடல் வருந்தி சோர்ந்த   விலைமகளிரின் வடிவத்தைப் போலக் கலங்கி காணப்படும் உருவத்தை உடையதாய் காணப்பட்டது என்பதை,

                   “கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலில்                                                                                                                                     

                    அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய்வளை”                      

                                (பம்பைப்படலம் 11)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

            இவ்வாறு விலைமகளிர்  வடிவம் குறித்து கம்பர் குறிப்பிடுகிறார்.

அடிக்கடி சுழன்று மாறும் மனம் :

 கார்காலப்படலத்தில் மழைக்காற்று உயர்ந்த இடம்,  தாழ்ந்த இடம் என்று கருதி நீங்காமல் மலைகளிலும், மரங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும், பொருள் தருபவரின் உயர்வு தாழ்வுகளைப் பார்க்காமல்  தன் இன்பத்துக்கு விலையாகத் தரக் கூடிய பொருள் ஒன்றையே எண்ணி மிகுதியாகத் தருகின்றவரிடம் செல்லும் விலைமாதரின் அடிக்கடி சுழன்று மாறும் மனம் போல வீசியது என்பதை,

                        “விலை நினைந்துள வழி விலங்கும் வேசையர்

                          உலைவுறும் மனமென உலாய வூதையே"

          (கார்காலப்படலம் 451)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.  

உயர்வு, தாழ்வு பார்க்காமல் தன் இன்பத்துக்குத் தரக்கூடிய விலையை மட்டுமே, பார்ப்பவர்களாக இருப்பர் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

கவிஞரைப் போன்ற தேனீ என்று குறிப்பிடும் இடத்தில், சிற்றின்பம் பற்றி கூறும் நூல்களைக் கற்ற காமுகர்கள்,  பல மகளிரிடத்தும் போய் இன்பம் கொள்வது போல (தேனீக்கள்) தேனுடன் அன்றலர்ந்த மலர்களையெல்லாம் துளைத்து முழுவதும் தடவி, அவற்றிலிருந்து தேனைக் கொண்டு சேர்க்கின்ற தேனீக்கள்  பரதநூலில் கூறியபடி நாடகத்தைக் காண்பவர் இனிமை என்ற பயன்மிகப் பாகுபாடுகள் உண்டாகுமாறு பல சுவைகளைச் சேர்க்கின்ற கவிஞர்களை ஒத்தன

                             “சரத நாள் மலர் யாவையும் குடைந்தன தடவிச்

                              சுரத நூல்தெரி விடர் எனத் தேன் கொண்டு தொகுப்ப"

                                                                                       (கார்காலப்படலத்தில் 477)

 என்ற  பாடலின் மூலம் அறியமுடிகிறது.

"சுரதநூல் தெரிவிடர்" என்றால் காமஇயல் நூல் தெரிந்த காமுகர். இவர்கள் மாதரிடம் பல வகையில் இன்பம் துய்ப்பர். இதுபோல் காட்டு வண்டுகள் தேன்நிறைந்த புது மலர்களைக் கோதி தேனைச் சேகரித்துக் கலைகின்றன.

 கடிமணப்படலத்தில் இராமன், சீதை திருமணம் காண விலைமாதர்கள் வந்து திரண்டார்கள் என்பதை,

                 “கணிகையர் தொகுவாரும் கலை பல பயில்வாரும்”

                                                                                                         (கடிமணப்படலம் 1138)

என்ற வரிகளின் மூலம் தெரியவருகிறது.

இந்திரசித்தை உடனே கொல்லுமாறு வீடணன்  உரைக்கும்போது, பொன்னாலான அழகிய அந்த வலிய தேர், ஒருவன் தவநிலையை அடைந்து ஐந்து புலன்களாலும் நுகரும் செயல்கள்யாவும் அழிவதற்கு நல்வழியில் செலுத்தும் ஓர் ஆசான் இறந்ததனால் வருந்தும் மாணவனின் அறிவையும் உடலின் செயலான காமத்தைப் பணத்தை விற்கும் உபாயத்தினை உடையவரான பொய்ச்செயல்  வேசி மகளிரின் கற்பையும் ஒத்திருந்தது.

        "மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்

         பொய்வினை மகளிர் கற்பும்  போன்றது அப்பொலம் பொன் திண்தேர்"

(இந்திரசித் வதைப் படலம் 3084)

முடிவுரை:

விலைமகளிர் அழகியத் தோற்றத்துடன், துவளும் இடையுடனும், எடுப்பான முலையுடனும், அல்குலில் மேகலை அணிந்தும்  மிகுதியாகத் தன்னை அலங்கரித்து அழகான மற்றும் கவர்ச்சியாக ஆண்களை மயக்கும் எண்ணத்துடனும் இருப்பர். அவர்களின் மனம் ஈரமற்றதாகவும் இருக்கும். பொருள் இல்லாத வறுமையாளனை விரும்பமாட்டார்கள். வெளியே மிகுந்த அன்புடையவர் போலவும், மனதின் உள்ளே அன்பில்லாதவர் போலவும், தன்னை நாடி வருவோரிடம் உள்ளப் பொருட்களையெல்லாம் பறித்துக் கொண்டு அவர்களைவிட்டு நீங்கும் இயல்புடையவர். இன்பத்துக்குத் தரக்கூடிய விலையை மட்டுமே பார்ப்பவர்களாகவே இருப்பர். அன்பில்லாத வேசிகளிடம் காமுகர்கள் மயங்கிவிடுவர்.விலைமகளைச் சென்று சேர்பவர்கள் கீழ்மக்கள் என்றும், கணவனைத்தவிர வேறு ஒரு ஆண்மகனுடன் உறவுகொண்டாலும் ஒழுக்கத்தில் விலைமகளை ஒத்தவளாகிறாள் என்று விலைமகளின் இயல்பை, பண்பை, குணங்களை,பொருள் மட்டுமே பெறும் எண்ணங்களை கம்பர் குறிப்பிடுகிறார்.

துணை நூற்பட்டியல்

1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், 

   சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, 

    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  

     புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்    

    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,

    கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி

    பதிப்பகம்,சென்னை,2019.

6.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா

    பதிப்பகம், சென்னை,2019.

7.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி         

   1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

8.ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ்         

   நிலையம், சென்னை, 2012.    

9.பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும்

   உரையும், நியூ செஞ்சுரி  புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை,

   2004.

10.ஸ்ரீ.சந்திரன். ஜெ.மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ்

     நிலையம், சென்னை, 2012.