ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

‘ஆத்தங்கரை ஓரம்’ புதினம் காட்டும் பழங்குடியின மக்களின் அழகும், அவலமும்

முனைவர் ரா.பிரபா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. அக்ஸிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,  ரெகுநாதபுதம்,  புதுக்கோட்டை. 15 Aug 2022 Read Full PDF

‘ஆத்தங்கரை ஓரம்’ புதினம் காட்டும் பழங்குடியின மக்களின் அழகும், அவலமும்

(The beauty and misery of the aboriginal people shown in ‘Athangari Oram’) 

Dr.R.PRAPA., Asst.Prof., Department of Tamil, Auxilium College of Arts and Science for Woman, Regunathapuram, Pudukkottai.

முனைவர் ரா.பிரபா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை. அக்ஸிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,  ரெகுநாதபுதம்,  புதுக்கோட்டை.

Abstract

          The way of life of people of one race, region, or group. Family, marriage, and the search for and sharing of food, emotional gatherings, mental beliefs, life, and political order, and social order are structured the result of a series of texts that have root in contemporary literature. These interpretations are man – centered with multifaceted theories that to gain a holistic understanding of the life ideas and culture of the people who are part of the community in the works anthropological perspective Athangarai Oram takes us on a journey as a naval set in a fictional form by giving the seeds of culture used in this world at the higher of civilized technology, despite the vicious art of justifying the wrongs we are committing, nature and its inherently frozen normative biology are still alive and well and the ethical beauty of ethnic people this article sets out to explore the ways of the noval ‘Athangarai Oram’ about the tragedies that result from a struggle that oscillates with consciousness.

Keywords:

          Noval, Athangarai Oram, Anthropoly, Belieft, Habits, Beauty, Shame, Culture, & indoor people, Biology.

 

ஆய்வுச் சுருக்கம்

ஓர் இனம் சார்ந்த, ஒரு பகுதி சார்ந்த அல்லது ஓர் குழு சார்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, குடும்பம், திருமணம், உறவுமுறை ஆகியவற்றோடு உணவு தேடுதலும், உணர்வுக் கூட்டங்களும், மன நம்பிக்கைகளும், வாழ்வியலும், அரசியல் ஒழுங்கும், சமூக ஒழுங்கும் ஆகியவற்றைக் கட்டமைப்பாகக் கொண்டிருந்த நூல்களின் தொடர்ச்சியின் விளைவே தற்கால இலக்கியங்களின் கால்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விலக்கியங்கள் பலமுனைச் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டு மனிதனை மையமிட்டு படைக்கப்பட்டுள்ளது. இப்படைப்புகளில் சமுதாயத்தின் அங்கமாக விளங்கக்கூடிய மக்களின் வாழ்வியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும் பற்றிய முழுமையான புரிதலை அறிய மானிடவியல் நோக்கு பயன்படும். அப்பண்பாடு சார்ந்த விடயங்களைப் பண்பட்ட சொற்கோத்து புனைந்த வடிவில் அமையப்பெற்ற புதினமாக ‘ஆத்தங்கரை ஓரம்’ நம்மை பயணிக்க வைக்கிறது.

நாகரீகமான  தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் இவ்வுலகத்தில் நாம் நிகழ்த்துகின்ற தவறுக்கு நியாயம் உரைக்கும் வீரியத்தில் செயல்பட்டாலும், இயற்கையையும் அதன் இயல்பினையோடு உறைந்த நெறிசார்ந்த வாழ்வியலையும் வாழ்கின்ற மக்களும் இப்புவியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வினம் சார்ந்த மக்களின் நெறியோடிய அழகையும், உணர்வோடு ஊசலாடும் போராட்டத்தின் விளைவான அவலங்களையும் குறித்து ‘ஆத்தங்கரை ஓரம்’ என்னும்  புதினத்தின் வழி ஆய்வதாகக் இக்கட்டுரை அமைகிறது.

 

முக்கியச் சொற்கள் :

புதினம்,  ஆத்தங்கரை ஓரம், மானிடவியல் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அழகு, அவலம், பண்பாடு, சாத்தூர் மக்கள், வாழ்வியல்.

முன்னுரை

சமுதாயத்தில் நடக்கும், நடந்துகொண்டிருக்கும் அவலங்களைக் கதைக்களமாகக் கொண்டு விளம்புநிலை மக்களின் வாழ்வியல் போராட்டங்களையும், அவர்களால் உரைக்கப்படும் கருத்துக்கள் உயராத நிலைமையினையும் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அனுபவ உணர்வோடு, வார்த்தைகளின் வலிமையோடும் வலுவூட்டி வடிவமைத்து கற்போர்க்கு காட்சியாக கண்முன் நிகழ்த்திக் காட்டிய பாங்கு ஆசிரியரின் அறிவுத் திறத்தோடு ஆளுமைப் பண்பையும் பெற்று நிமிர்கிறது என்பது இப்புதினத்தில் உண்மை. இம்மண்ணின், மனிதனின், மானிடத்தின் வேரினை தன் இலக்கியத்தின் பொருளாக பொதுவுடைமை நோக்கோடு பெயரிடப்படாத நற்பண்போடும், தனியுரிமையல்லாத பொதுமை நோக்கோடும் படைக்கப்பட்ட சங்க இலக்கியத்தின் நோக்கத்தினையும், போக்கையும் கடந்து செல்லாது, இப்புதினமும் பொதுப்பண்போடு சித்தரிக்கப்பட்டுள்ளது. மனிதமும், மனித உரிமையும், வாழ்வியலின் அடிச்சுவடாக அமையும், கலாச்சாரமும், பண்பாடும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் சமுதாயமாக இம்பூமியானது நகரும், நகர்த்த வேண்டும். அது நிகழாவிடில் சில சமூகங்கள் அவலநிலைக்கு ஆட்பட்டு இந்நாகரீக தார்பரியத்துக்கு தாக்குபிடிக்காது அழிந்துவிடும் என்பதனை  எச்சரிக்கையுணர்வு கலந்த மானுடம் சார்ந்த உளவியலோடு அணுகி எழுப்பப்பட்டுள்ள இப்புதினத்தில் முரணான அழகும், அவலமும் என்ற இருக்கருத்தோடு இக்கட்டுரைப் பயனிக்கிறது.

மானிடவியல்

          தொடக்கக்காலத் தத்துவியலார் மனிதனையும், அவனது சமுதாய அமைப்புகளையும், பண்பாட்டுக் கோலங்களையும் கண்ணுற்று அவற்றை உய்த்துணரும் போக்கில் பலவாறு சிந்தனைச் செய்தனர். அச்சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய சமுதாய அறிவியல்களின் வளர்ச்சியாகும். அவ்வளர்ச்சியினை நாம் பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றிய இலக்கியங்கள் எடுத்துரைத்தன. அவ் வெடுத்துறைப்பின் நீட்சியாக தற்கால இலக்கியங்களும், புதினங்களும், சிறுகதைகளும், கவிதைகளும் தோற்றம் பெற்று சமூக பிரதிபலிப்பின் கண்ணாடியாக அறிவியல் சார்ந்த கூறுகளை உட்கொண்டும், மானிடவியல் தத்துவங்களை அகனமைத்தும் எழுந்துள்ளன. மனிதனைச் சமூகம், பண்பாடு, காலம் என அனைத்து நிலைகளில் உடல், மனம், ஆகியவற்றைத் தாண்டி மனித இனம் என்ற நிலையில் ஆராயும் துறையே மானிடவியல். ‘மனிதனைப் பற்றிய அறிவியல்’ என்று மானிடவியல் பற்றிப் பக்தவத்சல பாரதி நம்முடைய பண்பாட்டு மானிடவியல் என்னும் நூலில் கூறுகிறார். (பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல்) இந்நோக்கில் இப்புதினத்தில் இடம்பெற்றுள்ள சித்தூர் வாழ்கின்ற மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் பண்பாட்டு சூழல்களையும் ஆய்வதால் இக்கட்டுரை மானிடவியல் தொடர்போடு அமைகிறது.

தொழில்

          ஒரு நதியை தனது வாழ்வாதாரமாக வைத்து கதைமாந்தர்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இம்மக்களுக்குள் எந்தவித பாகுபாடுமின்றி தனது தொழில்களை தானேச் செய்து வரும் முறையின் இப்புதினத்தில் பல இடங்களில் காணமுடிகின்றது. நதியின் நீர் மூலாதாரமாகக் கொண்டு “விதையைத் தூவினால் போதும் விளைவித்து தருகின்றேன் என்னும்படியான செழுமையான பூமி, அங்கங்கே பூமிக்குள்ளிருந்து பொங்கிப் பிரவாகித்து ஓடும் ‘நாளாக்கள்’ சுற்றிலும்” (வெ.இறையன்பு ஆத்தங்கரை ஓரம் ப.02) என்று உழவுத்தொழில் செய்வதற்குரிய நிலத்தின் பண்படு தன்மையை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். தங்களுக்குள் எவ்வித சேதமின்றி, ஆதாரங்களுமின்றி வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு, முன்னோர்களின் நெறியில் இருந்து பிறழாது விவசாயம் செய்து இயற்கையோடு இயைந்த வாழ்வினை அந்நில மக்கள் வாழ்ந்தனர் என்பதனை ஆசிரியர் பதிவு செய்கிறார். இன்னாருக்கு இன்ன நிலம் என்று எந்தப் பத்திரமும் கிடையாது. காலங்காலமாய் பரம்பரை பரம்பரையாய் உழுது வருகின்ற நிலத்தில் அந்தந்தக் குடும்பம் விவசாயம் செய்து கொள்ளும். இதில் அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் வந்தது கிடையாது. (வெ.இறையன்பு ஆத்தங்கரை ஓரம் ப.03) என்ற பொதுவுடைமையை கடைபிடித்து தொழில் முறை நிகழ்த்துதலை கூறியுள்ளார். அத்தொழில் செய்து அதிலிருந்து வரக்கூடிய வருமானத்தில் தன்னிடம் விளைவிக்க முடியாத அல்லது இல்லாதவற்றையும் வாங்கிக்கொண்டு வருவதன் மூலமே வெளியுலகத் தொடர்பினைப் பெற்ற மக்களாக சித்தூர் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் தங்களிடம் உபரியாய் இருக்கும் தானியங்களையும், காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொண்டுபோய் விற்றுத் தங்களிடமில்லாதவற்றை வாங்கி வருவதில்தான் வெளியுலக இணைப்பு அவர்களுக்கு தொப்புள் கொடியாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும் ஆத்தங்கரை ஓரம் புதினம் புலப்படுத்துகிறது.

          சித்தூருக்கே அடையாளமாகவும், அதிசயமாகவும் இருக்கின்ற இந்த நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆசிரியர், ராதாபடங்கர் என்ற கதைமாந்தரின் வாயிலாக புலப்படுத்துகிறார் சகலமும் பேதமின்றி முரணின்றி. இது மழைத்துளி நதியில் விழுகிற மாதிரி எதிர்ப்பின்றி நடக்கின்ற சங்கமாகத் தோன்றியது (ஆத்தங்கரை ஓரம் ப.34) என்று நதியின் உணர்வையும் விவசாயம் செய்து வாழ்கின்ற பழங்குடி மக்களின் வாழ்வியலையும் தொடர்புப்படுத்தி கூறுகின்ற போக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நதியெனும் இயற்கை வரம்

          பழங்குடியின மக்கள் தங்களோடு வாழும் உயர்திணை, அஃறிணை அனைத்து மானவற்றுக்கு ஒரே மாதிரியான வாழ்வியலை கடைபிடிக்கின்றார். இப்பூமியில் தோன்றிய உயிருள்ள, உயிரற்ற அனைத்திற்கும் அவற்றின் உள்ளக்கிடக்கையும், உணர்வுயெழுச்சியும் கொண்டு வாழ்கின்றது என்ற சிந்தனையோடு சித்தூர் மக்களின் வாழ்வியல் அமைந்துள்ளது. அதனை மிகவும் தன்சொல் வன்மையின்  திறத்தால் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். சுற்றிலும் அழகை அள்ளித் தெளித்த மாதிரி கண்களைக் குளுமையாக்கிடும் பசுமை, துளியும் அழுக்கு கலக்காத தூயகாற்று, சுகந்த மனத்தைப் பரப்பி மகிழும் மகிழம் பூக்கள் என எல்லாவற்றிலும் தன் பிரதிபலிப்பை கண்டார். வாழ்க்கை என்பது தேடுதல், சதா சர்வகாலமும் முடிவில்லாததை, ஆரம்பமென்று அறியமுடியாததைத் தேடுதல், தேடுதலில் பலனில்லை என்றாலும் தேடுகிற சுகத்துக்காகவே தேடுதல். இந்த நதி உறக்கமின்றி ஓய்வின்றி ஓடிக்கொண்டிருப்பதும் ஒரு தேடுதல் நிமித்தமாகத்தானே நதி என்பது வெறும் நீர் ஓட்டம் தானா, இல்லை நேற்று ஓடிய நீரும் ஓடுவதும் முற்றிலும் வேறாய் இருக்க இதற்கென்று ஒரு பொருத்தம்தானோ, இது ஒரு இயக்கசக்தி என்று எழுதப்பட்டுள்ளது. (ஆத்தங்கரை ஓரம் ப.34)

கல்வி நிலை

பழங்குடியினருக்கான பள்ளிக்கூடங்கள் என்பது எட்டாக் கணியாக அங்கொன்றும், இங்கொன்று ஆரம்பித்த ஆரம்பப் பள்ளிக் கூடங்கள் மட்டும்தான் இருத்தது. அதிலும் பணிபுரியும் ஆசிரியர் நகரத்தில் இருந்து வருவதால் அவரது வசதிகேற்ப வந்து போவதால் கற்றுக்கொள்வதும் மறந்துபோகும், தன் பெயரை பலமுறை உச்சரிப்பதன் விளைவாக அதுமட்டும் மனதில் நிற்கும். அச்சிந்தூர் மக்களைப் பொறுத்தவரை கல்வி, விஞ்ஞானம், நாகரீகமான சூழல் எல்லாமே மனிதனை மேன்புறச் செய்து அவனை மேன்மையானவனாகக் காட்டுவதற்காகவே அவையில்லாமலும் ஒரு மனிதன் குறைபாடுகளின்றி மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்றும் இவை எல்லாம் வெற்று ஆடம்பரங்கள்தான் என்று எண்ணம் கொள்ளும் மக்களாக வாழ்ந்து வந்தார்கள், சிந்தூர் நதியின் கரையை தோனியின் வழியாக கடந்துபோய் படிப்பதற்கு வழியின்றி கல்வியை தவிர்த்து வாழ்ந்தவர்களாயும் அவர்களால்  இருந்து மீண்டுபோய் அக்கரையை கடந்து படிக்கும் சூழல்  கொண்ட ஒருவனையே கதையின் தலைவனாகக் காட்டப்பட்டுள்ளது. அப்போது தலைவனுக்கென்று தனிப்பண்பு நலன்கள் கண்டு அதைப்போன்று இப்புதினத்தில் இடம்பெறும் தலைவனின் தனிப்பண்புக்கு கல்வியும் ஒன்றாக படம்பிடித்து காட்டப்படுகிறது. அவன் ஒருவன் மட்டும் கல்வியைக் கற்றதனால் தனது சமூகத்திற்கு, தன்னைச் சார்ந்தோர்க்கும் இழைக்கப்படும் அநீதிகளைப் பொறுக்கமுடியாதவனாக அரசையும், அதிகாரிகளையும் எதிர்த்து நின்று குரல் எழுப்பக்கூடிய தன்மையினையும் இப்புதினம் நமக்கு எடுத்துரைக்கிறது. அதனால் தான் கோவிந்தமாயிக்கு மகன் மீது கொண்ட பாசத்தால் ஆரம்ப கல்வியோடு நிறுத்திவிடாமல் மேலே படிக்க வேண்டும் என்று அக்கரைக்குக் கொண்டுபோய் படிக்க வைத்தார். இதனை உருவறிய நம் திருக்குறள் நினைவுப்படுத்தும்.

செவிக்குண வில்லாத போது சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.  

உணவு முறை  

          சிந்தூரில் விளைவிக்கக்கூடிய உணவாக கம்பை அரைத்து அதனை கூழாகக் தயாரித்து, தயிரை வழியவிட்டு கரைத்து, அதற்கு வெண்டைக்காய் வற்றலைக் கொண்டு சாப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது. தீயில் சுட்ட வைத்த இளங்கதிர்களும், கம்பங்கூழும், காய்கனிகளையும் தனது அன்றாட வாழ்வில் உணவு முறையாக உட்கொண்டு வாழ்ந்தனர் என்பதனை இப்புதினம் நமக்கு இனம் காட்டுகிறது. ஆகவே அம்மக்கள் சாப்பிடக்கூடிய அனைத்தும் உணவும் இன்று நாம் செயற்கையாக தேடித்தேடி அலைந்து உருவாக்கக்கூடியவற்றை சுலபமான முறையில் சாப்பிட்டு அதைப் பக்குவப்படுத்தி உட்கொண்டு வந்தனர்.

உறவு முறை

சிந்தூர் கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவரையும் தனது உறவாக அல்லது குடும்பமாக நினைத்து கூட்டமாக வாழக்ககூடிய மக்கள். அவர்களை ஆங்காங்கே வெவ்வேறு இடங்களுக்கு அரசு ஆணையின்படி அதிகாரிகள் குடிபெயர்க்க முயலும்போது ஒரே இடத்தில் ஒரே கிராமத்தில் இடம்பெயர்வு செய்வதில்லை. ஆதலால் அவ்வுறவு முறையில் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி நடுங்குவதாக உறவு முறையில் பல்வேறு மாற்றங்கள் பாதிப்பு உள்ளாகும் என்று கிராம மக்கள் கருதுகின்றனர். இதனை அந்த நானூறு குடும்பங்களும் இருபது கிராமங்களில் தங்கியிருக்கிற மாதிரி நிலத்தை செஞ்சிருக்கோம் சார் என்று கதைமாந்தர் படேலின் கூற்றாக நில ஒதுக்கீட்டு முறைபற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதன் மூலம் கூடி வாழும் மக்கள் வெவ்வேறு இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் உறவுமுறை பாதிப்பு நிலைக்கு உள்ளாகி வெறுப்புணர்வு மேலோங்கிய வாழ்வியலை நுழைப்பதாக உணர்த்தப்படுகிறது.

          இக்குடி வாழும் மக்களின் உறவுமுறையில் காதல், காமம் அற்ற அன்பு, தன்மானமிக்க பெண்ணின் உறவு நிலை சிதைதல் போன்றவை உள்ளீடாகக் கொண்டு கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதனை வறுமையிலும் செம்மையாக சமன், மிருதுளாவின் காதல் இப்புதினத்தில் இழையோடியுள்ளது. பொறுப்பற்ற ஆளுகையினால் இவையனைத்தும் சிதைவுறும் நிலைமையினையும் அறிய முடிகிறது.

தொழில் முறை

          பழங்குடியின மக்கள் தங்கள் தேவையானவற்றை தானே உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலைச் செய்து கொண்டு வாழ்பவர்கள். இவற்றிற்கு மூலமாக இருக்கக்கூடியது பெயரிடப்படாத அந்த நதியாகும். அந்த நதியினை தடுத்து அணைக்கட்டுவது என்பது உற்பத்தியின் பெருக்கத்தையோ, வாழ்க்கை தரத்தையோ உயர்த்தும் என்பதில்லை பெரிய அணைகளாக கட்டப்பட்டு நிலங்களை உவர்நிலமாக  மாற்றுகிறது என்கிற தகவலையும் இங்கு பதிவ செய்கின்றார். இப்புதினத்தில் அணைக்கட்டின் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு வழங்கப்படும் நிலங்கள் எதற்கும் பயன்படாத விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் இல்லை என்பதனை, ஏற்கனவே குடிபெயர்ந்து அமைக்கப்பட்டிருக்கின்ற மக்களின் நிலங்களைப் பற்றி அறிந்திருந்த அதிகாரி கதிரின் மனவோட்டமாக ஆசிரியர் பதிவு செய்கிறார்.

          நதிநீர் பாசனத்தால் தனது உணவுக்கு தேவையான தன்னுடைய நிலங்களில் தொழில் செய்தும், எஞ்சியவற்றை வியாபாரம் செய்தும் தேவையான பொருட்களை வாங்கி உண்டும் வாழ்ந்து  மகிழ்ந்தனர். ஆனால் அவற்றிற்கு எல்லாம் அவர்களை வெளியேற்றும் விதமாக அரசின் அணைக்கட்டு முயற்சி தொழில்முறை சிதைத்தலை ஏற்படுத்தும்.

பண்பாட்டு மாற்றம்

மரபுவழி சார்ந்த  விபரங்களை தன் முன்னோர் வழியொற்றி கொண்டுபோவது தான் பண்பாடாகும். மனிதனின் தேடல் திறன் செயல்வடிவம் பெற்ற நிலையே பண்பாடு (பண்பாட்டு மானிடவியல் முன்னுரை) இவ்வகையில் இப்புதினத்தில் நகரமயமாதல் கிராம மக்கள் வெறுக்கின்ற ஒரு சூழலைக் காணமுடிகிறது. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியினை நோக்கி பீடுநடைபோடும் தருணத்தில் ஒரு தோணி மட்டும் பயணிப்பதற்கு போதுமானது அதற்கு மேல் பயன்படுத்தினால் நகரமயமாதல் பண்பாட்டுக் கூறுகள் நம்மை சீரழித்துவிட்டு, நம் மரபுசார்ந்த பண்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அப்பழங்குடியின மக்கள் அதனை விரும்பவில்லை.

ஆனால் கிராம மக்களை குடிப்பெயர்த்தப்படும் போது அவர்களுக்கு வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்லி அதனை அரசாங்கம் செய்துதராத நிலையில் அவர்களது பண்பாட்டு கூறுகள் மாற்றத்தை நோக்கி நகருகின்றன. இவ்வுலகில் எவ்வகையான இயற்கைச் சார்ந்த சூழல் மாற்றமடைந்து செயற்கையான கருவூலங்களை செயல்முறை மாற்றம் செய்யும்போது பாதிக்கப்படுபவர்களும், அழிக்கப்படுகின்ற பண்பாடும் பழங்குடி மக்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் ஆளுகையில் தன் இனத்தினரை இடம்பெறாதவர்களுமே ஆகும். கல்வியில்லாத, தொழில்நுட்ப வசதியற்ற, ஆடம்பர வாழ்வியலை விரும்பக் கொள்ளாத மக்களை வஞ்சிப்பதே அரசும், அதிகாரிகளும் செய்கின்ற தான்தோன்றித் தனமான சிந்தையாகும். இச்சிந்தைக்கும், இப்போக்கும் ஆட்படுகின்ற மக்களாக பழங்குடியினத்தின் பண்பாட்டினையும், அவர்களின் இயல்பான பழக்க வழக்கங்களையும், சடங்கு முறைகளும் சிதைகின்ற மாற்றத்தினைப் பெறுகின்ற சூழலை ஆசிரியர்கள் கதைப்போக்கில் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.

காதலும், திருமணமும்

சிமன் என்னும் இளைஞனுக்கும் எல்லோரையும் போல காதலும் அவன் மனதில் இழையோடியது. படிப்பறிவு இல்லாத பழங்குடியின பெண்ணின் மீது பாறையில் பசும்புல் முளைத்ததுபோல, அணை எதிர்ப்பு போராட்டம், ஊர்வலம், பழங்குடியினரின் ஒருமித்த அமைப்பு ஆகியவற்றில் ஓய்வின்றி உழைத்தாலும், இதயத்தில் ஒரு மூலையில் மிகுந்த கனத்துடன் மிருதுளாவின் நினைவுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்தவனை கரம்பற்ற முடியாமல் போனதற்கு அரசின் கோரத் தாண்டவமும் காரணமாக இருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் சிமனின் மனம் இவ்வளது கனத்துத் தொங்குவதற்கு காரணமாக, முதல் நாள் நடந்த அர்ஜீனுடைய திருமணம் அமைந்தது. தனக்கு மிகவும் இளையவனான நண்பனுக்கு வைபோகங்கள் நடந்தேறியும் அத்திருமணத்தில் வரதட்சினை கொடுத்தும், பெண்ணைக் கொடுக்கும் நாகரீகமான கலாச்சாரம் இல்லாது பெண்ணைக் கொடுப்பதற்கு பதிலாக பெண்ணுக்கு இருபது வெள்ளாடுகளையும் பத்து மூட்டை மக்காச் சோளத்தையும் கொடுத்துவிட்டு பெண் எடுத்துக் கொண்டான் (ஆத்தங்கரை ஓரம் ப.125) என்ற மரபு பழங்குடியின மக்களிடம் இருந்தது. வரதட்சினைக் கொடுமை தலைவிரித்து கோலபடுகின்ற இக்காலத்தில் அக்கால பழங்குடியினரின் பண்பாட்டு நிலை போற்றத்தக்கதாக இருக்கிறது.

வன்முறை

மனிதகுலத்தின் அடிப்படைச் சிக்கல்களை உருவாக்கும்போது இனத்தின்மீது அடித்தல், இன அழிப்பு, அடிமை முறை, தன்னின உயர்வு வாதம், உயர்வு தாழ்வு எண்ணமே அடக்குமுறை. உரிமைப் போராட்டம், அதிகாரக் குவிப்பு போன்ற எண்ணற்ற முரண்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வகையில் இப்புதினத்தில் தன்னுரிமை தடுக்கப்படும்போது வன்முறை தழைத்தோங்குகிறது. தனது உரிமைகளையும் பறித்து, தனது இனத்தின் அழிப்புக்கு ஏற்படும்போது ஏதோ ஒரு மூலையில் வன்முறை ஜெயித்து விபரீதமான சூழலுக்கு ஆட்படுகிறது பழங்குடியின சமூகம் என்பதை நிதின் என்ற துடிப்பான கதாப்பாத்திரத்தின் வழியாகச் சுட்டிகாட்டுகிறார் ஆசிரியர் வன்முறை ஆரம்பம் அழிவு என்ற முடிவையே அப்பணிக்கிறது என்பதனை நிதின் என்பவனது மரணம் நமக்கு உணர்த்துகிறது இதுவே இழப்புகளால் பழங்குடியின மக்களின் இரத்த நாளங்கள் சுண்டப்படுவது போல ஒவ்வொரு இழப்பும் அவர்களை மனநிலையில் தாழ்வுப்படுத்துகிறது.

மழை எனும் மகா அரக்கண்

          இவ்வுலகில் நிகழும் அனைத்து வாழ்வியல் விழுமியங்களிலும் இரண்டுவிதமான பக்கங்கள் உள்ளது என்பது சத்தியமான உண்மை. இவ்வுண்மை இயற்கையும் கடந்து செல்வதில்லை அதற்கு வினைபட்டே விடுகிறது.

          இயற்கையே இயற்கையும், செயற்கையும் இரைத்து கொள்கிற நிமித்தம் சில நேரங்களில் அபாயமளிக்கிறது. மரங்கள் பறவை சரணாலயமாகவும், பாத சாரிகைகளுக்கு பாதுகைகளாகவும், பயணிகளுக்கு நிழற்குடையாகவும், பனித்துளிகளுக்கு பஞ்சு மெத்தையாகவும், வண்டுகளுக்கு வாசக சாலையாகவும், பூக்களுக்கு பிரசவ விடுதியாகவும் ஒவ்வொரு மரமும் தென்றலை வருடி, மேகத்தைத் தாலாட்டி எப்படியெல்லாம் பரிமளிக்கிறது (ஆத்தங்கரை ஓரம் ப.175) என்று ஆசிரியர் கூறும்போது எண்ணற்ற பயன்பாட்டைக் கொண்ட மரங்களை ஒரு நிமிடங்களை கடந்து செல்லுகின்ற மின்னல்போல கட்டழித்து விடுகிறது மழை என்பது வன்முறையை நிகழ்த்தும்போது அசாதாரண சூழ்நிலையும் உண்டாகிறது.

          மழைதான் மனிதர்களுக்கு வரம் என்று உணரும்போதும் கூட இம்மழையால் அழிவும் உண்டு என்பதனை சிந்தூர் என்னும் பழங்குடியின மக்களின் கிராமங்கள் அழிந்து தடம் தெரியாத சூழ்நிலையில் உணர முடிகிறது. இதனை ஆசிரியர் அழகான கவிதை வரியை நினைவுப்படுத்தி விளக்குகிறார்.

          மழைதான் மனிதர்களுக்கு வானம் வழங்குகிற தாய்ப்பால் என்றெல்லாம் கவிதை வரிகளை நினைவுப்படுத்தி மகிழ்ந்தாலும் மழை சகஜ வாழ்க்கையை நசுக்கி விடுகிறது என்பது உண்மைதானே. (ஆத்தங்கரை ஓரம் ப.181)

அறிவியலை உணர்ந்த ஆத்தங்கரை வாழ் மனிதன்

          நாம் குடியிருக்கும் ஊருக்கு ஆபத்து வரப்போகுது என்று உணர்ந்த பழங்குடியின மனிதன் கோவிந்தபாய் இந்த மாதத்தில் மழை கொட்டோ கொட்டுண்ணு கொட்டும். என்ன ஆகுமோ இந்த வருஷம்னு தான் பயமாயிருக்கு என்று கூறுகிறார் கோவிந்தபாயி, சந்தீப்புடன் கவலையாய் பேசுகிறார். தூரத்தில் இருந்து வீசுற காற்றை வச்சி அதில் இருக்கிற ஈரப்பதத்தை தெரிஞ்சிக்கிட்டு மழை வருமா, வராதா, இந்த வருஷம் எவ்வளவு மழை வரும், விட்டுவிட்டு பெய்யுமா, தொடர்ந்து பெய்யுமா, செடி கொடியில் பூச்சி விழுமா என்று எங்களால் சொல்ல முடியும் தம்பி எங்களுக்கு படிப்பு கிடையாது. ஆனால் இயற்கையோட சத்தங்களுக்கும் சுழற்சிக்கும் உட்படுத்திக்கிட்டு வாழ்ந்ததால இதெல்லாம் எங்களுக்கு அத்துபடி என்று கோவிந்தபாயி (ஆத்தங்கரை ஓரம் ப.178) கூறுவதிலிருந்து மண்ணியலும் விண்ணியலும் அறிந்த விஞ்ஞானியாக அவ்வின மக்களின் மானுடத் தத்துவத்தை உணர முடிகிறது. இவ்வறியலோடு சேர்ந்த அவருடைய தனிமனித ஒழுக்கமும் இக்கதைமாந்தரின் வழியாகப் புலப்படுகிறது.

முடிவுரை

          வாழ்வியலின் விழுமியங்களை குறிப்பிடுகின்ற பகுதியாக மானிடவியல் காணப்படும் போது, அவ்வாய்வின் வழி பழங்குடியின மக்கள் குழுவின் வாழ்வியல் கூறுகளையும் இப்புதினம் குறிக்கிறது. இவ்வகையில் இப்புதினத்தின் வாயிலாக அம்மக்களின் குடியிருப்பு, சடங்குகள், பழக்கவழக்கங்கள், உணவு முறை, உறவுமுறை, தொழில்முறை, வன்முறை, காதல், திருமணம், இயற்கை அழிவு, அன்றாட வாழ்வியல் போராட்டம் ஆகியவையும் அறிந்து கொள்ளமுடிகிறது. இப்புதினத்தில் ஆசிரியரின் சொல்வன்மையும், எழுத்தாழுமையும் பழங்குடியின மக்களின் வலியை உணர்ந்து வலிமைப் பெற்ற வாக்கியங்களாக இடம் பெற்றுள்ளன. எந்த ஒரு சிந்தனையும் இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்கின்ற இயல்பில் இருந்து மாறுபட்டு இப்புதினத்தில் புனைவதற்கு ஆளாக்கப்பட்டுள்ள சொற்களின் ஆழம் பொதிந்த நிலை. ஆசிரியரின் சான்றாண்மைக்கு மற்றொரு இடமளிக்கிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழக்கூடிய மக்களின் காலங்களை உணர்த்துமாறு தானும் ஒரு அவ்வின மனிதனாக உட்படுத்திக் கொள்கிற சிந்தையை தூண்டுகிற அளவில் இப்புதினம் அமைந்துள்ளது.

          ஆத்தங்கரை ஓரம் புதினத்தில் வாயிலாக பழங்குடியின மக்கள் எவ்வித வசதியும், மேம்பாடும் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும், தானும் தன்னின மக்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையே நடத்துகின்றனர். நாகரீகம் என்ற நாட்டிய கலாச்சாரம் பீடிக்காத வரையில் அனைத்துமே சுகமானதுதான் என்று உணர்த்துகிறது. இவ்விதமான நெருடலுக்குள்ளான சூழ்நிலையிலும், அவர்களின் அன்பும், இயற்கையோடு கொண்ட காதலும், தனிமனித ஒழுக்கமும், வீரமும், போராட்ட மனம்கொண்ட ஆளுமையும், இனக்கூட்டு வாழ்க்கையும் இப்புதினத்தின் வழி அறியும்போது உணர்ச்சி மேலிட்ட அழகாகவும், அவர்களின் மறுபக்கவாழ்வான யாதொன்றும் சென்றடையாமல் அழிவுகளின் விளைவுகளை உணரும்போது அம்மக்களின் அவல நிலைகளையும் உணர முடிகிறது.

துணைநூற்பட்டியல்

  1. இறையன்பு.வெ, (2004) ஆத்தங்கரை ஓரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை.
  2. சண்முகசுந்தரம் (1991) தமில் வட்டார நாவல்கள், காவ்யா பதிப்பகம், பெங்களூர்.
  3. பக்தவத்சல பாரதி (1990) பண்பாட்டு மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.