ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

“பாரதியாரின் கற்பனையில் பாரததேசம்”

சு. பால் மோகன், உதவி பேராசிரியர்  தமிழ்த்துறை, தி. தெ. மா. நா. ச. கல்லூரி, தெ. கள்ளிகுளம்                     11 May 2022 Read Full PDF


 Abstract

     Bharathiar dreamed of Bharadesam where there is no separation based on community. Also he wished that his dream land to be the first among all the countries in the world. He wanted that everyone in his nation to have equal rights and women education should be made compulsory. So that  in the society, life of women will be enlightened and the prosperity of country will be improved. The poverty of India will change and economy will grow. This article is aimed to analyse the above mentioned aspects of the great poet.

Key words:

Bharathiyar,  Bharatadesam,  India community, Women education, poverty.
 

ஆய்வுச் சுருக்கம்:

      பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் என்பது பிரிவினையில்லாத பாரத தேசமாகவும், சாதி வெறியில்லாத பாரத தேசமாகவும் இருக்க வேண்டும். உலக அரங்கில் முதன்மையான நாடாக பாரத தேசம் உயர்வு பெற வேண்டும். இந்நாட்டில் பிறந்த மக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படல் வேண்டும். பெண்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும.; அதன் மூலம் சமூகத்தில் பெண்களின் நிலை உயரும். அதன் மூலம் அனைவருக்கும் கல்வி என்ற நிலை உருவாகும். அதன் மூலம் நாட்டில் உள்ள வறுமை நிலை மாறி உலகத்தை வழி நடத்தும் பாரதமாக நம் நாட்டின் நிலை உயர வேண்டும் என்று பாரதியார் ஆசைப்படுகிறார். இதனை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு அமைகிறது.

திறவுச் சொற்கள்: பாரதியார், பெண்ணியம், பெண் கல்வி, வறுமை, புதுக் கவிதை

முன்னுரை

      காலத்தால் அழியாத கவிதைகளை படைத்தவர் நம் முன்னோடிக் கவிஞர் பாரதியார். அவர் வாழ்ந்த காலத்தில் (1882-1921) பாரத தேசம் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு இருந்தது. ஆனால் பாரதியார் பாரத தேசத்தை ஒரு நாளும் அடிமையாக நினைத்தது கிடையாது அதோடு பாரதத்தின் சிறப்புகளை பாமர மக்களும் புரியும் வண்ணம் பல கவிதைகளை படைத்தார். தாய் நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக பாரதநாட்டை பாரதத் தாயாக போற்றியவர். பாரத மக்களால் பாசமாக மகாகவி, தேசியக்கவி, முண்டாசுக்கவிஞன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாரதி தன்னுடைய கவிதைகள் மூலம் மக்களிடையே சமூக புரட்சியை உருவாக்கியவர். பாரதியார் வளமான பாரதம் உருவாக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தமிழகத்தில் உள்ள சில நய வஞ்சகர்கள் பாரத தேசத்தில் இருந்து தமிழகத்தை தனியாக பிரிக்க நினைக்கிறார்கள் ஆனால் பாரதியின் தேசிய உணர்வு மக்களிடையே இருக்கும் வரை பாரதம் ஒற்றுமையாக இருக்கும் என்றும் பாரதியார் கற்பனையில் கண்ட பாரத தேசத்தைப் பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

சேதமில்லாத ஹிந்துஸ்தானம்

      பாரதியின் தேசப்பற்று உணர்வுப்பூர்வமானது அவரின் மனதோடு தொடர்புடையது. தன்னுடைய தாய் திருநாட்டை உயிருக்கும் மேலாக போற்றியவர். தாய்மொழியையும் தாய்நாட்டையும் தன்னுடைய இரண்டு கண்ணாக போற்றி வளர்த்தவர். பாரத நாட்டை விவேகானந்தர் போன்று புண்ணிய பூமியாக பார்த்தவர் பாரதி இன்று பாரதநாட்டில் வாழும் சில விஷமிகள் பாரத நாட்டை துண்டு துண்டாக பிரிக்க நினைக்கிறார்கள் ஆனால் பாரதியார் நான் போற்றும் பாரத தேசம் சேதமில்லாத ஹிந்துஸ்தானமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்,

            “வேத முடையதிந்த நாடு – நல்ல

             வீரர் பிறந்த திந்த நாடு

             சேதமில்லாத ஹிந்து ஸ்தானம் - இதைத்

             தெய்வாமன்று கும்பிடடி பாப்பா”

                              (பாரதியார் கவிதைகள் மகேஸ்வரி ப-459)

பாரதியார் கண்ட தேச ஒற்றுமையை பாரதிதாசனும் தம்முடைய கவிதைகளில் வலியுறுத்தியுள்ளார் என்பதை கீழ்காணும் கவிதை வரிகள் மூலம் அறியலாம்.

            “இமையச் சாரலில் ஒருவன் இருமினான்

             குமரி வாழ்வான் மருந்து கொண்டோ டினான்

             ஒருவர்க்கு வந்தது அனைவருக்கும் என்ற

             மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்”

                                          (நாட்டியல் நாட்டுவோம் ப-4)

உலக நாடுகள் பல சிறிய நாடுகள் மீது படையெடுத்து தங்களது வலிமையை பறைசாற்றியுள்ளன. ஆனால் 130 கோடிக்கு மேல் மக்கள் வாழும் இப்பாரத நாடு உலகிலே அடுத்த நாட்டின் மீது படையெடுக்காத ஒரே நாடு என்ற சிறப்படையது. இவ்வுலகத்தில் சகிப்புத்தன்மையின் அடையாளம் பாரதம். நம்முடைய பாரதநாட்டை பல நாடுகள் பங்குப் போட நினைக்கின்றனர் அவர்களுக்கு எல்லாம் எங்கள் தேசியக் கவி தனது கவிதை மூலம் சரியான பதிலடி தருகிறார். அதோடு பாரதத்தின் சிறப்பை பாரதத்தாயின் தவப்புதல்வர்களான நாம் உணரவேண்டும் என்று பாரதி விரும்புகிறார்.

            “மன்னும் இமயமலை யெங்கள் மலையே

             மாநில மீதது போல் பிறிதில்லையே!

             இன்நறு நீர்க்கங்கை ஆறு எங்கள் ஆறே

             இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏதுவேறே?

             பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே

             பார்மிசை ஏதொரு நூலிது போலே?

             பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

             போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே?”

                              (பாரதியார் கவிதைகள்,எங்கள் நாடு, ப-60)

என்ற கவிதை வரிகள் மூலம் உலகில் பாரத நாட்டுக்கு இணையான நாடு இல்லை என்று நம் மக்களுக்கு உணர்த்துகிறார்.

சுதந்திர பாரதம்

      “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை  அடைந்தே தீருவேன்” என்று கூறிய திலகரின் கொள்கை போன்று பாரதியாரும் பாரத நாடு அடிமை என்று அவர் ஒரு நாளும் எண்ணியதில்லை. நம் நாடு அடிமைப்பட்டு கிடப்பதற்கு நாம் தான் காரணம் என்று பாரதியார் கூறுகிறார். மேலும் பாரத மக்களிடம் என்னுடைய தாய்நாடு எனது உயிரை விட மேலானது என்ற உணர்வு இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

            “நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் - இது

             நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்

             பூமியி லெவர்க்கு இனி அடிமை செய்யோம் - பரி

             பூரணுனுக்கே அடிமை செய்து வாழ்வோம்”

                              (பாரதியார் கவிதைகள், உஷாராணி, ப-129)

பாரதநாடு இன்னொருவரிடம் அடிமைப்பட்டு இருப்பதை விரும்பாத பாரதி தீர்க்கத் தரிசியாக தான் காண விரும்பிய பாரதம் சுதந்திர பாரதம் என்பதை தனது கவிதை மூலம் அறிவுறுத்துகிறார்.

            “ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே

            ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று”

(மேலது 127)

பாரத தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னே எல்லோரும் ஒன்றாக வாழவேண்டும் என்று விரும்பினார். ஆனால் பாரத நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் பாரதியார் கண்ட கனவு நிறைவேறுமா

            “எல்லோரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

             எல்லாரும் இந்திய மக்கள்

             எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை

             எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்

             எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்

             எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க”

                                                (மேலது ப-95)

என்று பாரதியார் பாடிய காலத்தில் நம்நாட்டு மக்கள் எல்லோரும் இந்தியர் என்ற உணர்வுடன் இல்லை ஆனால் பாரதியார் கண்ட கனவு இன்று உண்மையாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

சாதியில்லாத பாரதம்

            “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொல்லா

             செய்தொழில் வேற்றுமை யான்”

                                                (குறள் 972)

என்ற வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்ப நம்முடைய தேச ஒற்றுமைக்கு தடைக்கல்லாக இருப்பது சாதிதான் என்பதை உணர்ந்த பாரதியார் இன்று மனிதனை ஆட்டிப் படைக்கும் கொடிய நஞ்சு சாதி என்ற வேண்டாத இவ்வேறு பாடினால் மனிதன் ஒற்றுமையிழந்து தவிக்கிறார். அதோடு மனித வாழ்விற்கு தேவையில்லாத ஜாதியினால் இவ்வுலகில் தன்னுடைய வாழ்வைத் தொலைக்கிறான் என்பதை உணர்ந்த பாரதியார் இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி இல்லாத உலகம் வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

            “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

             தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”

                                                (ஓடிவிளையாடு பாப்பா)

மேலும் இந்நாட்டில் ஆயிரம் சாதி பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரிடமும் இந்தியன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

            “ஆயிரமுண்டிங்கு ஜாதி – எனில்

             அன்னியர் வந்து புகலென்ன நீதி – ஓர்

             தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்மூள்

             சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ”

                              (பாரதியார் கவிதைகள், உஷாராணி ப-50)

பாரதநாட்டு மக்களிடம் வேற்றுமைகள் பெருகி வளர்ந்து வருவதைக் கண்ட பாரதி நாட்டு மக்களிடம் வேண்டாத சாதி வேற்றுமைகள் மறக்கப்படுதல் வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று பாரதி அறைக்கூவல் விடுக்கிறார்.

            “சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்

            தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்

            நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு

            நித்தமும் சண்டைகள் செய்வார்”

            சாதிக்கொடுமைகள் வேண்டாம் - அன்பு

            தன்னில் செழித்திடும் வையம்

(மேலது ப-439)

நம் நாட்டில் சாதி வேற்றுமைகள் அதிகரித்தால் வேற்று நாட்டவர் புகுந்து விடுவார்கள் என்றும் அதனால் நம்முள் இருக்கும் வேற்றுமையை மறந்து நாம் எல்லோரும் இந்தியர் என்று ஒன்றுப்பட்டால் தான் நம் நாட்டில் நாம் மகிழ்ச்சியாக வாழமுடியும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பாரதத்தை காண விரும்புகிறார் என்பதை கீழ்க்காணும் கவிதை வரிகள் மூலம் அறியலாம்.

            “ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

             ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்

             வேதிய ராயிறும் ஒன்றே – அன்றி

             வேறு குலத்தின ராயினும் ஒன்றே

             ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

             அன்னியர் வந்து புகலென்ன நீதி”

                              (பாரதியார் கவிதைகள், மகேஷ்வரி ப-139)

பாரதியார் கண்ட சாதியில்லாத பாரதத்தை பறைசாற்றும் விதமாக சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்க பலர் வலியுறுத்திய போதும் நம்முடைய நீதிமன்ற நீதிபதிகள் பாரதியாரின் கனவை நிறைவேற்றும் விதமாக “சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளது பாரதியார் கண்ட கனவு நிறைவேறும் நிலையில் உள்ளது என்பதை அறிய முடிகிறது.

பெண்அடிமை இல்லாத பாரதம்:

      பெண்விடுதலையை மூச்சாக கொண்டவர். பாரதியார் கண்ட பாரத தேசத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். பெண்ணுரிமைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதி. இச்சமூகத்தில் ஆணாதிக்கம் மிகுந்து இருப்பதால் துணிந்து கூறியவர். பொருளாதார சுதந்திரமே பெண் விடுதலைக்கான உந்து சக்தி என முழங்கியவர். பெண்ணடிமைத் தனத்தில் இருந்த சமூகத்தில் விடிவெள்ளியாக தோன்றியவர் பாரதி. அதனால் தான் பெண்களுக்கு பாதகம் செய்வோரைக கண்டால் துணிந்து போராடு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்!

“பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம்

             பயங் கொள்ளலாகாது பாப்பா

             மோதி மிதித்து விடு பாப்பா

             அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”

                              (பாரதியின் கவிதைகள் மகேஸ்வரி, ப-458)

உலக அரங்கில் பாரத நாடு உயர்வு பெற வேண்டுமெனில் பாரதநாட்டில் உள்ள பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும். அதற்கு பெண்களுக்கு தங்களுடைய நிலை பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என பாரதியார் விரும்புகிறார் அதோடு ஆண்களை விட அறிவில் சிறந்தவர்கள் என்று பெண்களை உயர்வாகவும் பெண் கல்வி கற்றால் தாழ்வு நிலையில் உள்ள குடும்பத்தின் நிலை உயரும் என்று பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

            “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

             பேணி வளர்த்திடும் ஈசன்

             மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல

             மாதர் அழிவைக் கெடுத்தார்

       கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி

       காட்சி கெடுத்திடலாமோ?

 பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்

       பேதமை யற்றிடும் காணீர்”

                        (பாரதியார் கவிதைகள், உஷாராணி, ப-434)

நாட்டில் நிலவிய பெண் அடிமைக்கு காரணம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான் அதனால் தான் “அறியாமை என்ற இருளை அகற்ற வந்த கலங்கரை விளக்கு கல்வி” என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சங்க இலக்கியமான புறநானூற்றில்

            “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

             பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே”

(ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அ.கயஉநடிழழம.உழஅ புறம் - 183)

இதைப்போன்று அதிவீரராம பாண்டியரும் இச்சமூகத்தில் உள்ள பெண்ணடிமைத்தனத்தை அகற்றுவதற்கு கல்வியை விட சக்தி வாய்ந்த ஆயுதம் ஏதும் இல்லை அப்படிப்பட்ட கல்வியை பிறரிடம் பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்கிறார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே

 பிச்சை புகினும் கற்கை நன்றே”

(ச.மெய்யப்பன், நீதிநூல் தெளிவுரை ப-38)

பாரதிக்கு முன் வாழ்ந்த அதிவீரராமபாண்டியர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார் ஆனால் அந்த கல்வியை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறவில்லை. பண்டைக் காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்டது. அதனால் தான் உலக அரங்கில் பாரதத்தின் மதிப்பும் குறைந்து போனது பெண்களுக்கு கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் பெண்களுக்கு வழங்கக் கூடிய கல்வியால் பாரதம் பெருமை மிகு பாரதமாக உயர்வு பெறும் என்று பெண்கல்வியின் தேவையை வலியுறுத்துகின்றார்.

      “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று

       எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்

       வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

       விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

       பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

       பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்”

                        (பாரதியார் கவிதைகள், மகேஸ்வரி ப-379)

பெண்களுக்கு வெறும் கல்வி உரிமையும் எழுத்துரிமையும் மட்டும் கொடுத்து விட்டால் போதாது. அரசியலில் பெண்களுக்கு உரிமை வேண்டும். சொத்தில் சம உரிமை வேண்டும். திருமணமின்றி வாழும் உரிமை வேண்டும். பெண்களுக்கு திருமணவயது வந்தப்பிறகு திருமணம் நடைபெற வேண்டும் என்று போராடியவர் அவருடைய போராட்டத்தின் பயனாக “நம்முடைய பாரத பிரதமர் நரேந்திரமோடிஜீ, அவர்கள் பெண்களுக்கு எல்லா வித உரிமையும் வேண்டும் என்று பெண்ணின் திருமணவயது 21 ஆக நிர்ணயம் செய்து பெண்களின் வாழ்விற்கு புதிய இலக்கணம் தந்துள்ளார்.” மேலும் பாரதியார் பெண்களை இழிவுப்படுத்தும் ஆண்களை பார்த்தால் வாழ்வில் எல்லையில்லா ஆவேசத்தைக் காட்டுகிறார்,

 “மாதர் தம்மை இழிவு செய்யும்

        மடமையைக் கொளுத்துவோம்

        வையவாழ்வு தன்னிலெந்த

        வகையிலும் நமக்குள்ளே

        தாதரென்ற நிலைமை மாறி

        ஆண்களோடு பெண்களும்

        சரிநிகர் சமானமாக

        வாழ்வமிந்த நாட்டிலே”

                        (பாரதியார் கவிதைகள், உஷாராணி ப-127)

என்று ஆண்களோடு பெண்கள் சமஉரிமை பெற்று வாழும் புண்ணிய பாரத பூமி வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் பாரதநாட்டு மக்களிடம் சுதந்திர உணர்வுகளை தட்டி எழுப்ப முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார். அதோடு பாரத மக்களின் அச்சத்தை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக,

      “நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த

       நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

       அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்

       அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

                                                (மேலது ப-86)

பாரதப் பெண்கள் இப்புவியிலே யாருக்கும் அஞ்சாமல் தங்களுடைய முன்னேற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதோடு உலக அரங்கில் பாரதத்தை தலை நிமிரச் செய்ய வேண்டும் தான் சுட்டிக் காட்டிய புதுமைப்பெண் தான் விரும்பிய புதுமையான பாரதத்தை படைப்பாள் என்றும், அதற்கு அவளுக்கு துணிவு இருந்தால் போதும் என்று தன் கவிதையில் வலியுறுத்துகிறார்,

      “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

       நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்

       நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

       செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”

                                                (மேலது ப-443)

வறுமையில்லாத பாரதம்

      வறுமையில்லாத பாரதம் பாரதியின் லட்சியம் ஆனால் இன்று வரை இவ்வுலகில் வறுமையால் பல மக்கள் தங்கள் உயிரை விடுகின்றனர். உலகின் கொடுமையான விஷயம் ஒருவருடைய பட்டினிச்சாவு. மனிதர்களின் அத்தனை வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருப்பது வறுமைதான் அதனால் தான் வறுமையை ஒழிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 17ம்தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் அதிகமாக வறுமையில் வாழும் மக்கள் ஆப்ரிக்கா நாடுகளில் உள்ளனர். வறுமை என்பது வெறுமனே மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை மட்டுமே இல்லை வறுமை காரணமாக மக்கள் உணவு, குடிநீர், உடை, சுகாதாரம், வாழ்விடம், கல்வி போன்ற எதுவுமே கிடைக்காத சூழலில் வாழ்கின்றனர். எனவே வறுமை ஒழிப்பு என்பது மனித இனத்தின் பரிபூரண விடுதலையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் பாரத நாட்டின் வறுமைக்கான காரணம் என்ன என ஆராய்ந்து இந்நாட்டில் சுரண்டலும் பசியும் இருக்கும் வரை பாரதம் உலகில் சிறப்பு பெறாது என்று பாரத நாட்டில் எல்லா மக்களும் பசியார உண்ண வேண்டும் என்ற வேட்கையில் நாட்டு மக்கள் பசியுடன் இருப்பதைக் கண்டு சினந்து துடிக்கும் பாரதக் கவிஞர்,

            “இனியொரு விதி செய்வோம் - அதை

             எந்த நாளும் காப்போம்

             தனியொருவனுக்கு உணவிலை யெனில்

             ஜகத்தினை யழித்திடுவோம்”

                                                      (மேலது ப-95)

பாரதியார் கண்ட தேசியத்தை வலியுறுத்தும் விதமாக பாரதத்தாயின் புதல்வர்கள் பட்டினியால் வாடுவதை பார்த்து இராமலிங்கஅடிகளாரும் மனதளவில் துடிக்கிறார் என்பதை கீழ்க்காணும் கவிதை மூலம் அறியலாம்.

            “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

            வாடினேன் பசியினால் இளைத்தே

            விடுதோ றீரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேடுறக் கண்டுளந் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

(பகுதிஐ தமிழ், ப-73)

வறுமையின் கொடுமையை உணர்ந்த பாரதி வறுமையில்லாத பாரதம் வேண்டும் என விரும்பினார் வறுமையை ஒழிப்பதற்கு விவசாயம் செம்மையாக நடைபெற வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையால் நடைபெற வேண்டிய விவசாயம் தடைப்பட்டு போனது விவசாயம் செம்மையாக நடைபெற மக்கள் வறுமையின்றி செம்மையாக வாழ வட இந்திய நதிகளை நாடு முழுவதும் இணைக்க வேண்டும் என்று கனவு கண்டவர் அவருடைய கனவு நிறைவேறினால் வறுமையில்லா பாரதம் நினைவாகும்”.

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

       சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

       வங்கத்தில் ஓடிவரும் நீரின்; மிகையால்

       மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்”

                        (பாரதியார் கவிதைகள், உஷாராணி ப-56)

என்ற பாடல்வரிகள் மூலம் நதிகளை இணைத்தால் வளமான பாரதம் என்பது பாரதியார் கண்ட பாரத தேசமாகும்.

ஒற்றுமையான பாரதம்

      நம் பாரதம் பல ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து விட:டு சென்றுவிட்டனர். அதோடு நம்மளிடையே பிரிவினையும் ஏற்படுத்தி சென்று விட்டனர். நம் தலைவர்களின் கனவில் அகண்ட பாரதம் என்பது உயிர்மூச்சு என்பதை பாரதியாரின் கவிதைகள் மூலம் அறியலாம். ஆனால் பிரிவில்லாத பாரதம் (அகண்டபாரதம்) என்றால் இவ்வுலகமே பாரதத்தின் கையில் போய்விடும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் நம்மளிடையே இந்து, முஸ்லீம் என்ற பாகுபாட்டையும் ஏற்படுத்தி அதன் மூலம் தன்னுடைய மதச்சடங்கு முறைகளையும் புகுத்தி விட்டனர். அதோடு பாரத தேசம் பல துண்டுகளாக பிளவுப்பட்டு இருந்தது அதை பாரதியாரின் வழிவந்த இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேல் மொழிவாரி மாநிலமாக பிரித்து நாம் எல்லோரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். பாரதியாரும் ஒன்றும் அறியாத பாமர மக்களிடம் தன்னுடைய கவிதைகள் மூலம் ஒற்றுமை உணர்வை வளர்த்துள்ளார் என்பதைக் கீழ்காணும் கவிதைகள் மூலம் அறியலாம்.

            “ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே – நம்மில்

             ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே

             ஒன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

             ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்”

                              (பாரதியார் கவிதைகள், மகேஸ்வரி ப-139)

மேலும் பாரதியார் தன்னுடைய தாய் தந்தையர் வாழ்ந்த திருநாடாகவும் தன்னுடைய வாழ்வின் அடையாளமாகவும் தன் தாய் நாட்டை தன்னுடைய உயிரை விட மேலாக போற்றுகிறார் அதோடு தன்னுடைய தாய்நாட்டை தினமும் போற்றி தொழுவேன் என்று தன்னுடைய கவிதையில் கூறியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

  “எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி

             யிருந்தது மிந்நாடே – அதன்

             முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து

             முடிந்தது மிந்நாடே – அவர்

             சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து

             சிறந்தது மிந்நாடே - இதை

             வந்தனை கூறி மனதிலிருந்தியென்

             வாயற வாழ்த்தேனே?

                        (பாரதியார் கவிதைகள், நாட்டு வணக்கம் ப-52)

இன்று பாரதநாட்டின் ஒற்றுமையை குழைக்கும் மிகவும் முக்கியமான ஒன்று மதம். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த வேண்டும் ஆனால் மதங்கள் மனிதனிடைய வேற்றுமையை விதைக்கின்றன. இவ்வுலகில் இறைவன் ஒருவன் என்ற தத்துவத்தை உணர்ந்து அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவனும்

       நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

       சென்றே புகும் கதி இல்லை சித்தத்து

       நின்றே நிலைபெற நீர்; நினைந்து உய்மினே”

                                                (திருமந்திரம்)

சாதியினாலும் மதத்தினாலும் தீண்டாமை மலிந்து இருந்த காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கடினமான காரியம் இப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பாரதியார் மதங்கள் மனிதனை செம்மைப்படுத்த வேண்டும் அதைவிட்டு விட்டு மனிதனை பிரிக்கும் சக்தியாக மாறிவிடக்கூடாது என்று விரும்பினார் அதனால் தான் பாரதியார் சமயங்கள் பல இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை மக்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறார்,

            “ஆத்திசூடி யிளம்பிறை யணிந்து

             மோனத் திருக்கு முழுவெண் மேனியான்

             கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்

             முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்

             ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்

             உருவகத் தாலே உணர்ந்துண ராது

             பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

             ஒன்றே அதனிலை ஒளியுறும் அறிவாம்”

(புதிய ஆத்திசூடி, பரம்பொருள் வாழ்த்து, பாரதியார் கவிதைகள் ப-147)

            பாரதியார் இவ்வுலகில் பரம்பொருள் ஒன்றுதான் என்று அறிவுறுத்துகிறார். ஆனால் இன்றைய மதவாதிகள் தன்னுடைய மதமே சிறந்தது என்று மக்களிடம் விஷத்தை பரப்பி மக்களின் ஒற்றுமையை பிரிக்கின்றனர். அதோடு சிலர் அப்பாவி மக்களை கொள்ளவும் செய்கின்றனர். “சமீபத்தில் ஊடகங்களில் ஓர் செய்தி வந்தது. நமது இராணுவ தளபதி பிவின்ராவத் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி இந்தியாவில் மக்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு ஆனால் ஒரு சிலர் கொண்டாடுகிறார்கள்” இப்படிப்பட்ட மதவெறி தன்னை அழித்துவிடும் என்று பாரதியார் எச்சரிக்கை விடுக்கிறார்.

“தெய்வம் பல பல சொல்லிப் பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்

ஊய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும் ஓர் பொருளானது தெய்வம்

தீயினைக் கும்பிடும் பார்ப்பர் நித்தம் திக்கை வணக்கும் துருக்கர்

கோயிற் சிலுவையிற் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார்

யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாயினும் நின்றிடும் தெய்வம்

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்”

(பல்வகைப்பாடல்கள் -நீதி பாரதியார் கவிதைகள் ப-434-435)

            மதம் என்ற பேய் மனிதனை பிடித்துவிட்டால் நாட்டில் உள்ள ஒற்றுமையை குலைத்துவிடும் என்று நாட்டுமக்களுக்கு பாரதியாரைப போன்று இராமலிங்க அடிகளாரும் கடவுள் ஒருவன் தான் என்பதை மக்கள் உணர வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

            நம் நாட்டில் பல மதங்கள் இருப்பதால் மதங்கள் அனைத்தும் மக்களை செம்மைப்படுத்தி பாரதத்தில் வாழும் அனைவரும் இது என் நாடு என்ற உணர்வுடன் வாழவேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார் என்பதை கீழ்காணும் கவிதைகள் மூலம் அறியலாம்.

            “நாமிருக்கும் நாடுநம தென்பதறிந்தோம் - இது

             நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்

            பூமியி லெவர்க்கு மினி அடிமை செய்வோம் - பரி

            பூரணுனுக் கேயடிமை செய்து வாழ்வோம்”

                        (சுதந்திர பள்ளு, பாரதியார் கவிதைகள் ப-129)

முடிவுரை

            “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும்  கூன், குருடு, செவிடு, பேடு இவை நீங்கிப் பிறத்தல் அரிது” (பாரதியார் கவிதைகள், மகேஸ்வரி ப-17) என்ற ஒளவை பாட்டியின் அமுத மொழிக்கு ஏற்ப ஞானியா வாழ்ந்து தன்னுடைய வாழ்வை இன்றைய இளைஞர்களுக்கு அடையாளமாக விட்டு சென்றுள்ளார் என்றால் மிகையாகாது. இக்கட்டுரை மூலம் பாரதியார் கண்ட பாரத தேசம் வறுமையில்லாத சாதியில்லாத வேற்றுமையில்லாத ஒற்றுமையான அதாவது சேதமில்லாத ஹிந்துஸ்தானம் என்பது பாரதியார் கண்ட பாரததேசம் என்பது இக்கட்டுரை மூலம் புலப்படுகிறது.

“ஜெய்ஹிந்த்”

துணைநூல் பட்டியல்

1.     திரு.அருட்பிரகாச வள்ளலார்- திருஅருட்பா ஆறாம் திருமுறை

                                    இராமலிங்கர் பணி மன்றம்

                                    சென்னை – 600086.

                                    முதற்பதிப்பு – 1972

                                    இரண்டாம் பதிப்பு – 1981.

2.     மனோன்மணியம் சுந்தரனார்-பகுதி ஐ பொதுத்தமிழ்

பல்கலைக்கழகம்  முதற்பதிப்பு – 2021

                                    அனுசித்ரா பப்ளிகேஷன்

                                    சென்னை – 600033.

3.     ச. மெய்யப்பன் -     நீதிநூல் தெளிவுரை

                                    மணிவாசகர் பதிப்பகம்

                                    சென்னை – 600108.

4.     முனைவர்.உஷாராணி -     பாரதியார் கவிதைகள் 2019

                                    வர்த்தமானன் பதிப்பகம்

                                    சென்னை – 600017.

5.     மகேஸ்வரி -     பாரதியார் கவிதைகள்

                                    கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்

                                    சென்னை 600108.

6.     மனோன்மணியம் சுந்தரனார் -     செய்யுள் பாடப்பகுதிகள்

பல்கலைக்கழகம்  கலை அறிவியல் பல்கலைக் கழக

            வெளியீடு முதற்பதிப்பு – 2016.