ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அதியமான் பேரரசனா ? குறுநில மன்னனா? - தொல்லியல் பார்வை

முனைவர் பிரியா கிருஷ்ணன் 09 Feb 2022 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்:

கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு மற்றும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டு அதியமான் குறுநில மன்னனா? அல்லது  பேரரசனா ? என்ற வினாவிற்கான விடையினைத் தகுந்த வரலாற்று சான்றுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் கொண்டு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்:

அதியமான், வள்ளல், கடையெழு வள்ளல், தகடூர்,  ஜம்பை ,அசோகர் கல்வெட்டு.

Abstract:

With the historical and archaeological evidence of Adiyaman Nedumaan Anji, one of the Kadayehu Valals, was Adiyaman the short-lived king? Or the emperor? The purpose of this article is to examine the answer to the question with relevant historical and archaeological evidence.

Keywords: adiyaman, kadayezhu vallalgal, thagadur, jambai, Ashoka inscription

          seven philanthropists, dharamapuri, anji, ezhini

முன்னுரை:

பண்டைய சமுதாயத்தை அறிந்து கொள்ள நமக்கு உதவும் தரவுகளில் முதன்மையானது இலக்கியங்கள். இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளின் முழுமையான உண்மைத் தன்மையினை அறிவதில் பல சிக்கல்கள் உள்ளது. ஏனெனில் இலக்கியங்களில் உண்மைத் தன்மையினைக் காட்டிலும் மிகுதியான கற்பனை  இருக்கும் என்ற கருத்து இருப்பதால் ஆய்வாளர்கள் இலக்கியங்களை முதன்மைச் சான்றாக எடுத்துக் கொள்ளுவதில்லை. ஆனால் இலக்கியங்களில் சொல்லப்படும் பல தரவுகள் தமிழக மற்றும் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வுகள் செய்யப்பட்டு அதில் கிடைக்கும் தரவுகளோடு ஒப்பீடு செய்யப்பட்டு பார்க்கும்போது அந்த தரவுகள்  தமிழகத்தின் மிக முக்கிய வரலாறாக மாறுகின்றது . இன்று பல்வேறு துறை சார்ந்த ஆய்வாளர்களால் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு தமிழருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பல அரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.   அதிலும் ஆதிச்ச நல்லூர், கொடுமணல், பொருந்தல், கீழடி போன்ற ஆய்வுகள் தமிழுக்கும் தமிழருக்கும் பல வகைகளில் பெருமை சேர்த்துள்ளது. அந்த வகையில் தமிழ்கத்தின் கீழடி ஆய்வுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அதிசயமும் நடந்தேறியது. அதனால் இலக்கியத் தரவுகள் முதன்மை சான்றாக எடுத்தாலும் அது சார்ந்து வரலாறு மற்றும் தொல்லியல் சான்றுகளையும் ஒப்பீட்டு ஆய்வு செய்வதே சிறந்த ஆய்வாகும்.

அதியமான் நெடுமான் அஞ்சி :

கடையெழு வள்ளல்களில் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்ற வரிசையிலும் , பேகன், பாரி, காரி, ஆய், எழினி , நள்ளி, ஓரி என்ற வரிசையும் சொல்லப்படுவதுண்டு. இங்கு அதிகனா? எழினியா ? என்ற சிக்கல் ஏற்படுகின்றது. அதிகனின் மரபினர் தங்கள் பெயருக்கு முன்னால் அதிகன் என்றும் பின்னால் எழினி என்றும் வைத்துக் கொள்வர். அந்த வகையில் அதிகனும் ,எழினியும் ஒன்றே என்று கொள்ளுதல் வேண்டும்.அதிகன் என்றாலும் எழினி என்றாலும் அதியமான் நெடுமான் அஞ்சியினைத்தான் வள்ளல் வரிசையில் குறிக்கும் என்பதில் ஐயமில்லை.

இலக்கியத்தில் கடையேழு வள்ளல்கள்:

சங்கப் புலவர்  இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறுநில மன்னன் ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனுக்காக பாடியது சிறுபாணாற்றுப்படை . நல்லியக் கோடனுக்கு முன் வாழ்ந்து மறைந்த கடையெழு வள்ளல்களுக்கு இவன் நிகரானவன் சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும் சிறந்தவன்  என்று புகழ்கின்ரார். இந்தப் பாட்டில் சேர நாட்டின் வளம், சோழ நாட்டின் வளம், பாண்டிய நாட்டின் பெருமை, கடையெழு வள்ளல்களின் சிறப்பு யாவும் கூறப்பட்டுள்ளன.  பரிசில் பெற்றுத் திரும்பிய சிறுபாணன், மற்றொரு பாணனுக்கு ஆற்றுப்படுத்தும் பாடல்களாக மன்னனை நோக்கிச் செல்லும் வழியில் , அவனுடைய நாட்டில் வெவ்வேறு நிலங்களில் வாழ்பவர்கள் பாணர்க்குச் செய்யும் விருந்தோம்பல் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளன. முதலில் சிறுபாணாற்றுப்படையில் ஒய்மான் நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்ற சிறு பாணன் மற்றொரு வறிய பாணனிடம் கடையெழு வள்ளல்களைக் காட்டிலும் சிறந்தவனாக நல்லியக் கோடனைக் குறிப்பிடுகிறான். அவ்வாறு குறிப்பிடுகையில் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்னும் எழுவரைக் கடையெழு வள்ளல்களாக வரிசைப் படுத்தி பாடுகின்றார் .இது  இலக்கியத்தில்  எழுவரைப் பற்றி  குறிப்பிடும் ஒரு முக்கிய பதிவாகும். இதேபோல் , புறநானூற்றில் பெருஞ்சித்தனார் குமண வள்ளலைப் பாடும்பொழுது கடையெழு வள்ளல்களாக பாரி,  ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். ஆக இரண்டு சங்க இலக்கியங்களும் கடையெழு வள்ளல்கள் எழுவரையும்  குறித்து பதிவு செய்திருக்கின்றன.

சங்கப் பாடல்களில் ஒளவையார் மொத்தம் 59 பாடல்கள் பாடியவர் . அவற்றில் அதியன் குறித்து பாடியப் பாடல்களே அதிகம் . சங்க புலவர்களில் அதியன் விண்ணத்தார் , அஞ்சியத்தை மகள் நாகையார்  என்ற புலவர்கள் அதியர் மரபில் வந்தவர்களாவர். இவர்களில் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சியின் அத்தை மகள் ஆவார். அறிஞர்களிடையே இவர் அஞ்சியின் மனைவி என்ற கருத்தும் உண்டு .

அதிகன் நீண்டநாள்  உயிர் காக்கும் தன்மை கொண்ட அரியவகை நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கியதை ஒளவையாரே பதிவு செய்துள்ளதைப் பார்க்கும்போது அதியனின் தமிழ்ப்பற்றும் நட்புக்கு அவன் தரும் உயர்ந்த மதிப்பையும் அறிய முடிகின்றது. அதியனும் ஒளவையாரும் கொண்ட நட்பால சங்க காலத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான  நட்பு மதிப்பிற்குரியதாக  அனைவரும் அறியும் வண்ணம் உயர்வாக இருந்திருக்கின்றது என்பதை காட்டுவதாக அமைகின்றது.  அதியன் சேலத்திலிருக்கும் கஞ்ச மலையிலிருந்து ஒரு முனிவர் தந்த அரியவகை நெல்லிக்கனியைத்தாம் ஒளவையாருக்கு கொடுத்தான் என்ற குறிப்பை சேலத்து இரும்பு என்ற நூல் தருகின்றது.  ஒளவையார் புறநானூறில் ,வெற்றியைப் பொருந்திய தப்பாத வாளை ஏந்திப் பகைவர் போர்களத்தில் அழியுமாறு சென்றவனும் கழலுமாறு அமைந்த வீரவாளை பொருந்திய பெரிய கைகளையுடையவனும் மிக்க ஆரவாரம் செய்யும் மதுவினையுடையவனுமான அதியர் கோமானே !நீ தொன்மையான பெரிய மலையின் பிளவிடத்தில் அரிதான உச்சியில் சிறிய இலைகளையுடைய நெல்லியின் இனிய கனியைக் கொண்டாய். அதனைப் பெறுவதற்கு அரியது என்று கருதாமல் அக்கனியின் அரும்பயனாக அமைந்த தன்மையை எனக்குக் கூறாமல் நின் மனத்து அடக்கினாய். அவ்வரிய கனியை இறப்பு என்னை விட்டு அகலுமாறு எனக்கு அளித்தாய். பகைவரைப் போரில் வெல்லும் வீரமாகிய செல்வமும் செய்த மாலையும் உடைய அஞ்சியே! பெரும! நீ பால் போன்று பிறையணிந்த நெற்றியுடன் பொலிவுற்ற திருமுடியையும் நீலமணி போலும் கரிய கழுத்தினையும் உடைய ஒருவனாகிய சிவபெருமான் போல நிலை பெறுவாயாக என்று போற்றுகின்றார். அத்தகைய சிறப்பு வாய்ந்தவனைத்தான் உலகம் வள்ளல் என்று மனதார வாழ்த்துகின்றது.

காரி சேர,சோழ ,பாண்டிய அரசுகளின் உயர்வு தாழ்வு நிலைக்களை ஒட்டித் தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவுபவன். அவனின் மரபினரும் இந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டனர். ஆய் பாண்டியர்களுக்குக் கடைசிவரை உதவியவன். பாரி யாருடனும் சமரசமின்றி தனிப்போக்கை வகுத்துக் கொண்டவன். பேகன் மரபினர் சேரர்களுடன் மண உறவு கொண்டிருந்ததால், அவர்களுக்கு உதவியாக இருந்திருக்ககூடும். ஓரி அதியர் சார்பானவன். நள்ளியின் அரசியல் நிலைப்பாடு பற்றி சங்க இலக்கியம் எந்த குறிப்பையும் தரவில்லை. ஆனால் அவனது கண்டீரம் தகடூர் நாட்டுகுள்ளேயே இருந்ததால் அவன் அதியருக்கு உதவியாகவே இருந்திருக்ககூடும் என்று எண்ண இடமுண்டு. இவை அல்லாமல் நாம் சங்க இலக்கியத்தில் 20 சேர அரசர்களையும், 18 சோழ அரசர்களையும் , 14 பாண்டிய அரசர்களையும் ,17 அதிய மன்னர்களையும் காண்கின்றோம். சங்க இலக்கியம் சார்ந்த காலத்தையும் ,அக்காலத்திய அரசுகளையும் காலமுறைப்படுத்துவது எளிதாக இல்லை என்பதும், அவை குறைவான அகச்சான்றுகளையே கொண்டுள்ளன என்பதுமே உண்மை நிலை. இருப்பினும் இன்றைய நிலையில் தொல்லியல் சான்றுகளும் அகழ்வாய்வுகளும், ஒப்பாய்வுகளும் சங்க இலக்கியத்தைக் காலமுறைப்படுத்தவும் பல வாய்ப்புகளை தந்துள்ளன என்பதும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அதியமான் பேரரசனா? சிற்றரசனா?

கடையேழு வள்ளல்கள் அனைவரும் குறுநில மன்னர்கள் என்பதே பல ஆய்வுகள் தரும் செய்தி. ஆனால் அதியமான் குறுநில மன்னன் அல்ல என்பதை சில ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்ப்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் அதியமான் பேரரசனா அல்லது குறுநில மன்னனா என்ற ஆய்வும் அவசியமாகின்றது.  சங்க காலத்தில் குறுநில அரசர்களிலேயே அதியமான் மூவேந்தருக்கு இணையாக மதிக்கப்பட்டான்.  அவனது ஆளுமையை பலப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.  அது குறித்து பல அறிஞர்கள் தங்கள் கருத்துக்களையும்  பதிவு செய்துள்ளனர். இவ்வாய்வில்    அதியமான் குறுநில மன்னனாக இல்லாமல் வேந்தனாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பதை இவ்வாய்வு முன் வைக்கின்றது. கொங்கு நாடு  பல குறுநில மன்னர்களால் ஆளப் பட்டிருந்தாலும் அவர்களுள் பேரரசனாகத்  திகழ்ந்தவன்  அதியன் மட்டுமே என்பது யாவரும் அறிந்த செய்தி.  கடையெழு வள்ளல்களூள் பேரரசனாகவே  திகழ்ந்திருக்கின்றான் என்பதற்கு சில தொல்லியல் சான்றுகளோடு  பின்வரும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள்வழி  முன்வைக்கலாம்.

கழகக் காலத்தில் சேர நாடு ,சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு ,துளு நாடு, தொண்டை நாடு (அருவா நாடு ) என்று தமிழகம் பல பகுதிகளாக அறியப்பட்டாலும் சேர நாட்டிலும் , கொங்கு நாட்டிலும் சேர வேந்தர் மாறிமாறியும் , ஒரே சமயத்திலும் ஆண்டதைப் போலவே பிற முடியுடைவேந்தர்களும் துளு நாட்டிலும் ,தொண்டை நாட்டிலும் ஆண்டுள்ளனர். ஆகவே ,யார்யார் எந்தெந்த நாடுகளை எவ்வெப்பொழுது ஆண்டனரென்பதை வரையறுத்துக் கூறமுடியாது. ஆயினும் , சேரரைப் பற்றியறியும்போது நாம் சேரநாட்டையாண்டவர் ,கொங்கு நாட்டையாண்டவரெனப் படித்தறிய ஏதுவாக அவ்வாறு பிரித்துக் கொண்டோம். உண்மையில் அஃதொரு சரியான முறையேயன்று. குறுநில மன்னர்களின் நாடுகளும் ,நாட்டின் எல்லைகளுங்கூட வரையறுத்துக் கூறமுடியாதவையே   என்று அறிஞர்கள் கூறுவதிலிருந்து  இதுதான் ஆட்சிப்பரப்பு  என்று உறுதியாக சொல்வதற்கான சான்றுகள் அன்று முதல் இன்று வரை கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

”பழங்கொங்கு நாட்டைச் சிற்றரசர்கள் அரசாண்டார்கள் என்றும் அக்காலத்தில் அந்நாட்டில் பேரரசர்கள் இல்லை என்றும் அறிந்தோம். கொங்கு நாட்டின் சுற்றுப் புறங்களில் இருந்த சேர சோழ பாண்டியர் கொங்குச் சிற்றரசர்களை வென்று அந்நாட்டைத் தங்கள் இராச்சியத்துடன் சேர்த்துக் கொள்ளக் கருதி அவர்கள் தனித்தனியாகப் படையெடுத்து வந்து கொங்கு நாட்டில் போர் செய்தார்கள். கொங்கு நாட்டரசர் தங்கள் நாட்டை எளிதில் விட்டுவிடவில்லை. படையெடுத்து வந்த அரசர்களோடு அவர்கள் கடுமையாகப் போர் செய்து எதிர்த்தார்கள்” என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி  முன்வைக்கும் இந்த ஆய்வுக் கருத்திலிருந்து ஒன்றை நாம் இங்கு நினைவு கூர்வது அவசியமாகும். அதாவது அசோகர் கல்வெட்டில் உள்ள சத்தியபுத்திரர்கள் அதியமான்தான்  என்பது பின்னாளில் கிடைத்த ஜம்பை கல்வெட்டு மூலம் அறிகிறோம். ஆக மேற்குறித்த மேற்கோள் படி கொங்கு நாட்டில் சேர,சோழ,பாண்டியர்கள் ஆதிக்கத்தின் முன்பே அங்கு கொங்கு சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்பதும் அவர்களில் அதியமான் மிக பெரிய ஆளுமை என்பதும் புலனாகிறது. சேரர்களுக்கு முன்பே ,கொங்கு நாடு என தனி நாடாக பிரிவதற்கு முன்பே அந்நாட்டுப் பகுதியினை அதியர் பரம்பரையினர் ஆட்சி செய்துள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றது. இக்கருத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் மற்றொரு சான்று பின்வருமாறு,

”பிந்துசாரன் மகனான அசோகன் கி மு 273-232 வரையில் அரசாண்டான் .அவனது ஆட்சியில் கலிங்க நாடு சேர்ந்தது. அவன் தமிழகம் நீங்கலாக இந்தியா முழுமையும் அரசாண்டான்………………………பெளத்த சமயக் கொள்கைகளைக் கற்றூண்களிலும் பாறைகளிலும் குறிக்கும்படி செய்தான். அக்கவெட்டுகள் வடக்கே இமயமலை முதல் தெற்கே மைசூர் வரையிலும் பரவியிருந்தன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகளில் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சேர ,சோழ ,பாண்டிய நாடுகளில் பெளத்த சமயப் பிரசாரகரை அனுப்பியதாகவும், மருத்துவ வசதியளிக்க உதவி செய்ததாகவும் அக்கல்வெட்டுகளில் குறித்துள்ளான்………….அசோகன் குறித்த சத்தியபுத்திரர் கொங்கு நாட்டை ஆண்டவராவர்.”

என்றும்,

”அசோகன் (கிமு 278-232) கல்வெட்டில் சோழர், பாண்டியர், கேரளர்,  சத்தியபுத்திரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சத்திய புத்திரர் என்போர் கொங்கு நாட்டு மன்னரே என்பார் வரலாற்று அறிஞர் டாக்டர் மா,இராசமாணிக்கனார் (சத்தியமங்கலம்) அத்தி, மத்தி போல சத்தி என்பவன் ஆண்டான், அவன் பெயரால் அமைந்த ஊர்..” என்று  பேரா. இராசமாணிக்கனார் கூறியுள்ளது போல்  சத்தி என்று அழைக்கக்கூடிய பகுதியை ஆண்டவர்கள் அல்லது சத்தி என்று அழைக்கப்படுவர்களான சத்தியபுத்திரர்களான அதியர்தான் என்பதில் தெளிவு கிடைக்கின்றது.  ஏனெனில் கோவையிலிருந்து தகடூர்  செல்லும் வழியில் சத்தியமங்கலம் என்னும் ஊர் இன்றளவும் அதே பெயரோடு விளங்குகிறது. இது கொங்குப் பகுதி என்பதும் தெளிவாக அறியலாம். இங்கு சத்தியப் புத்திரர்கள் என்பவர்கள் அதியர்கள்தான் என்ற யூகம் பிற்காலத்தில் உறுதியான முடிவாக அறிஞர்களால் வெளியிடப்பட்டது.

நாளடைவில் நிலங்களுக்கான போர்கள் அதிகரிக்கவே படை, படைக்கருவிகள் , போர்க்கான விதிமுறைகள் , போர் நுணுக்கங்கள் போன்றவை வடிவம் பெற்று வளம் பெற்றுள்ளன. பல்வேறு அரசுக் குழுக்களாகப் பிரிந்து கிடந்த மக்கள் ஓயாது போரில் ஈடுபட்டனர். அதனால் பல சிற்றரசர்கள் அழிந்து பேரரசுகள் உருவாயின. ஒரு காலத்தில் சிற்றரசர்களாக இருந்தவர்களே தம் வலிமையால் பேரரசர்களாக மாறினர் என்ற உண்மையை, அரசு செலுத்திய பேரரசரும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருக்க வேண்டும் என்று                              க. கைலாசபதி கூறுவதிலிருந்து  இக்கருத்தும் அதியமான் பேரரசன் என்னும் கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகின்றது.

ஜம்பைக் கல்வெட்டு கிடைப்பதற்கு முன்பாக வரலாற்று அறிஞர்களால் சத்தியபுத்திரர்கள் கொங்கு நாட்டை சேர்ந்த அரசர்தான்  என்பதில் ஒரு தெளிவு இருந்துள்ளதையும்  பார்க்கமுடிகிறது.  ஜம்பை கல்வெட்டு வாயிலாக சத்தியபுத்திரை அதியர்கள் தான் என்பதில் வந்த புரிதல் வரலாற்றுக்கு மிக முக்கிய மீள் பதிவாக அமைந்ததுள்ளதைப் பார்க்க முடிகின்றது. அதியர்கள் கொங்கு பகுதியின் பெரும்பகுதியை ஆண்டவர்கள். ஏன்னெனில் தமிழகத்தின் எல்லைகளாகக் கூறவந்த தொல்காப்பியர் முதல் பவணந்தி வரை அனைவரும் தமிழகத்தின் வடக்கெல்லையாக வேங்கடம் என்பதையே சுட்டுகின்றனர். அது வடக்கில் மேல் எல்லையைக் குறிக்கிறது. அவ்வெல்லைப்புறத்தில் தான் அதியமானின் தகடூர்ப் பகுதி கொங்கிலிருந்து  வட வேங்கடம் வரை இருந்துள்ளது என்பது தெளிவான செய்தி. ஆக அதியமான் பெரும் நிலப்பரப்பை ஆண்டவன் என்பதில் ஐயமில்லை . அது மட்டுமல்லாமல் தகடூர் பகுதி தொல்பழங்காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் ஒரு நகரம் என்பதற்கு பல தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன . அதியர் குடி சங்க காலத்திலிருந்து பிற்கால சோழர்கள் வீழ்ச்சியுறும் காலம் வரை தொடர்ந்து ஆட்சி செய்து வந்திருக்கிறது . அதியர்கள் தொல்குடியினர் என்பதைத் தகடூர்  கல்வெட்டுகள் என்னும் நூல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அதியமான்கள் ஆண்டது போல் வேறு குறு நில மன்னர்கள் பெருநிலப் பரப்பை ஆண்டதாகக் கூறமுடியாது. ஆகவே அதியமான் மரபினர் முடியுடைவேந்தராக இல்லாவிடினும் பேரரசர் என்றே நாம் குறிப்பிட வேண்டும்” 11  என்று தெரிவிக்கின்றது..”  சமூகத்தில் புதிதாக எழுந்து கொண்டிருந்த வர்க்கப் பிரிவினையை நிரந்தரமாக்குவது மட்டுமன்றி உடைமையில்லாத வர்க்கத்தை உடைமை வர்க்கம் சுரண்டுவதற்குள்ள உரிமைகளையும் முந்தியதன் மீது பிந்தியது செலுத்தும் ஆதிக்கத்தையும் நிரந்தரமாக்கக்கூடிய ஒரு ஸ்தாபனம் வந்து சேர்ந்தது. குல அமைப்புக் காலங்கடந்தாகிவிட்டது. அரசு உருவாக்கப்பட்டது ”(ஏங்கெல்ஸ் :1884:177-78) என்ற கருத்தின்படி காலந்தோறும் மாற்றங்கள் உண்டாவது இயல்பேயாகும் என்பதை உணரமுடிகின்றது.  அந்த வகையில் பேரரசர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு நிகராக அதியன் என்ற பேராண்மையும் உருவாகியது என்பது கண்கூடு.

புலவர்க்கு யாது காரணத்தாலோ பரிசில் நீட்டிப்பது பெரு வேந்தர்களிடையே உள்ள செயலை சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஊரில் இல்லாதக் காரணத்தாலோ அல்லது புலவர்கள் இன்னும்  தம்மோடு இருக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்தினாலோ இது நிகழும். சான்றாக கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் அதுரைக் குமரனார் ,சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப் பாடியப் (புறம்197) பாடலை குறிப்பிடலாம். அதே போல் ஒளவையாரும் அதியன் பரிசில் நீட்டியதற்கு ஒரு பாடல் பாடியுள்ளார். இதன்வழி வேந்தர்களைப் போல் தொடர்ந்து அவன் பணிநிமித்தமாக  போரில் ஈடுப்பட்டு வந்தான் என்பதை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களில் அதியனை தவிர்த்து குறுநில மன்னர்களான கடையெழு வள்ளல்கள்  பாரி, பேகன், ஆய், காரி, ஓரி, நள்ளி ஆகியோர் காலம் நீட்டித்தைமை எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் இங்கு உற்று நோக்கத்தக்கது.

அசோகனின் கல்வெட்டில் இடம்பெறும் அதியமான் மரபினர் பேரரசர் ஆக இருக்கக்கூடும் என தொல்லியலறிஞர்  திரு. ச. செல்வராசு கருதுகின்றார். சங்க இலக்கியமும் , பிற்கால உரைநூல்களும் , வரலற்றாசிரியர்களும் அதியமான்களைக் குறுநில மன்னர்களாகவே கருதுகின்றனர்.  ஆனால் ,அசோகப் பேரராசின் கல்வெட்டானது சேர ,சோழ,பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடும்போது சத்தியபுத்திரர்களாகிய அதியமான்களையும் குறிப்பிடுவத்தாலும் ,வேறு எந்த தமிழக  குறுநில மன்னனையும் குறிப்பிடாத்தாலும் அதியமான்கள் பேரரசர் என்றே துணியலாம் என்று திரு.ச.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகின்றார். அதியமான்கள் ஆண்டது போல வேறு குறுநில மன்னர்கள் பெருநிலப்பரப்பை  ஆண்டதிலலை என்பதும் இன்னொரு காராணமாகும். அசோக கல்வெட்டினை ஆதாரமாகக் கொண்டு “முடியுடைய மன்னர்களுக்கு இணையாக  அதியமான்கள் அக்காலத்தில் இருந்தனர் என தொல்லியறிஞர் திரு.தி.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக தலைமையரசர் வலிகுன்றும்போது , அதிகாரமிக்க சிற்றரசர்களும், துணையினரும் தனியரசராகி விடுவது  அக்கால வழக்கத்தினுள் ஒன்று. இவ்வகையில் சேர நாட்டினின்று கொங்கு நாடும் ,சோழ நாட்டினின்று தொண்டை நாடும் பிரிந்து போயின என்பது அறிஞர்களின் கருத்து. இக்கூற்றின்படி ஆராய்ந்து நோக்கின் அதியன் தனியரசு அமைத்திருக்கலாம் என்பதும், அவன் முன்பு சேர நாட்டோடு இருந்ததால்  கிளை மரபினர் என்ற நோக்கோடு அவர்களது மாலையினையே சூடி இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு என்ற கருத்தும் உண்டு.

வரலாற்றாசிரியர்களும் சங்க நூல்களும் பிற்கால  உரை ஆசிரியர்களும் அதியமான்களைக் குறுநில மன்னர்களாகவே குறிப்பிடினும் உண்மையில் அதியமான்கள்  மூவேந்தர்களுக்கு  இணையான வேந்தனாகவே  அதியமான் திகழ்ந்தான் என்பதற்கு அசோகனது கல்வேட்டே போதுமானது. மாமன்னன் அசோகன் சேர சோழ பாண்டியரைக் குறிப்பிடும் போது சத்தியபுத்திரரையும் குறிப்பிட்டுள்ளான். அசோகனது கல்வெட்டில் சோழர், பாண்டியர், கேரளர், சத்தியபுத்திரர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது . வேறு எந்தத் தமிழ் நாட்டுக் குறுநில மன்னனையும் அல்லது அரசயோ குறிப்பிடவில்லை என்பதை இங்கு உற்று நோக்குதல் அவசியமாகின்றது. எனவே, அசோகர் சத்தியபுத்திரர்கள் என்று கூறுமளவிற்கு அதியமான் பரம்பரையின் ஆதிக்கமே கொங்கு நாட்டில் இருந்திருக்க அதிக வாய்ப்பு இருந்திருப்பாதாக அறிய முடிகிறது. அதியனின் மறைவிற்கு பிறகு அவனது பரம்பரையினரின்  தொடர்ச்சி , ஆங்காங்கே சிதைவுற்றதால் தொடர்ந்து தனிப் பேரரசாக முன்னேறாமல் அதியனின் வழித்தோன்றல்கள்  சிற்றரசராக மட்டுமே  தொடர்ந்து பயணித்துள்ளனர்  என்பதும் கிடைக்கும் பிற்காலச் சில கல்வெட்டு சான்றுகளால்  அறிய முடிகிறது. தகடூர் போருக்குப் பின் பல காரணங்களால் அதியன் பரம்பரையினர் நாமக்கல் பகுதிக்கு குடிப்பெயர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

அதியனின் ஆட்சிபரப்பு - தகடூர் என்கின்ற தருமபுரி:

சங்க காலத்திலிருந்து கி பி 17 ஆம் நூற்றாண்டுவரை தருமபுரி தகடூர் என்றே அழைக்கப்பட்டு வந்தது.  சங்க காலத்திற்குப் பின்னர் தகடூர் குறித்துப் பல கல்வெட்டுகளில் பார்க்கிறோம். தகடூர் என்பது நாட்டின் பெயராகவும் அதே சமயம் ஊர் பெயராகவும் இருந்துள்ளது,  கல்வெட்டுகளில் தகடூர் நாட்டுத் தகடூர் என்ற அடிகளைக் காணமுடியும். நாட்டின் பெயரும் தலைநகரத்தின் பெயரும் தகடூர் என்றே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தகடூர் என்ற சொல்லுக்கு பூவிதழ் என்ற சொல் பொருத்தமானதாகும்.  தகடூர் நாட்டின் எல்லை காலத்திற்குக் காலம் மாறி வந்துள்ளதை அறியமுடிகிறது. பொதுவாக  கொங்கு நாட்டின் வடக்கிலும் தொண்டை நாட்டின் மேற்கிலும் வடுகர் நாட்டின் தெற்கிலும் எருமை நாட்டின் கிழக்கிலும் சங்க காலத்தில் இருந்தது எனலாம். தகடூர் ஊரில் அதியமான் கோட்டை , அதகப்பாடி போன்ற ஊர்கள் அடங்கியிருந்தன. பிற்காலத்தில் தகடூர் ஊரின் எல்லையும் மாறுகின்றன.

தருமபுரியின் பெரும்பகுதியும் வட ஆர்க்காடு மாவட்டத்தின்  ஒரு பகுதியும் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியும் ஆந்திர மாநிலத்தின் மிகச் சிறிய பகுதியும் கொண்டதாக மாறுகிறது. தகடூர் ஊரின் எல்லையும் சுருங்குகிறது. அதியமான் கோட்டை,அதிகப்பாடி போன்ற ஊர்கள் தனி ஊர்களாக மாறுகின்றன. இன்று நாம் வழங்கும் தருமபுரியே அக்காலத்தில் தகடூராக விளங்கியது எனலாம். எனினும் தகடூர் எல்லையை சரியாக வரையறுக்க இயலவில்லை.மீண்டும் நொளம்பர் காலத்தில் நொளம்பபாடியின் ஒரு பகுதியாகத் தகடூர் மாறுகிறது. பின்னர் சோழர் காலத்தில் நிகரிலிச் சோழ மண்டலத்தில் ஒரு பகுதியாக மாறுகிறது. சங்க காலத்திற்கு பின்னர் தகடூரைக் கங்கர் ஆண்டதால் தகடூர் நாடு கங்க நாடு என்றும் அழைக்கப்பட்டது. கங்கர்கள் முத்தரையர் என்றும் அழைக்கப்பட்டவர்கள்  .இதன் காரணமாக்  கி பி 5 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு நொளம்பர் காலம் வரை அதாவது கி பி 10 ஆம் நூற்றாண்டு வரை தகடூர் என்ற பெயருடன் கங்க நாடு அழைக்கப்பட்டது.

பிற்காலச் சோழர் காலத்தில் நிகரிலிச் சோழ மண்டலத்து தகடூர் நாட்டுத் தகடூர் என்று அழைக்கப்பட்டமை பார்கிறோம். நிகரிலி சோழமண்டலமும் முடிகொண்ட சோழ மண்டலமாக மாறுகிறது. இறுதியாக விஜயநகரப் பேரரசர் காலத்தில் சந்திரகிரி ராஜ்யத்தில் தகடூர் நாடு வருகிறது. இக்காலத்திலும் தகடூர் நாட்டுத் தகடூர் என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கி பி 17 ஆம் நூற்றாண்டளவில் தகடூர் தருமபுரி எனப் பெயர் மாற்றம் பெறுகிறது. பின்னர் தகடூர் மறைந்து போய் தருமபுரியே நிலைத்துவிட்டது.

குதிரை மலை:

தகடூர் என்ற அதியர் நாடு ,தகடூரைச் சுற்றிய அன்றையப் பகுதிகளான கரூர்,கொடுமணம்,படியூர், ஈந்தூர்,முதிரமலை,மற்றும் பாரியின் பறம்பு மலை, எருமை நாடு, புன்னாடு,அவரை நாடு ,துவரை நாடு, கோலார், குதிரை மலை,கண்டீரம், கஞ்ச மலை,கொல்லி மலை,விச்சி மலை,செங்கம்,காஞ்சி ,மயிலை, மோதூர் பகுதிகளும் இன்னும் மேற்கே வேங்கட மலைப் பகுதிகளும் கொண்டது .

அதியனின் குதிரை மலை எது என்பதில் பல கருத்து முரண்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றது. பரணரின் அகநானூற்றுப் பாடல் குறிஞ்சித் திணைக்குரியது. இங்குத் தலைவன் பாழிமலை ( கொங்கனம்) நன்னன் (பாழி)யையும் இக்குதிரை மலையினையும் ஒருங்கே வைத்துப் போற்றுகின்றான். நிலவியல் அடிப்படையிலும் இவ்விருப்பகுதிகளும் ஒன்றை அடுத்து ஒன்று அமைந்துள்ளது. இக்காரணத்தால் இன்றைய கர்நாடகப் பகுதியான இரும்புவளம் மிகுந்த குதிரை மூக்கு மலையே அதியனின் குதிரை மலை எனலாம்.( ப:139,த .பார்தீபன்)

அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒரு போர்களத்தில் சேரன், சோழன், பாண்டியன் ,திதியன், எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற ஏழு அரசர்களை வென்றான் என்று (புறம் 99 -7-11 )புறநானூற்றுப் பாடலால் அறிய முடிகின்றது. இதனை வரலாற்றாசிரியர்கள் முரசினை உடைய எழுவரை எதிர்த்து அதியன் வெற்றி வாகை சூடினான் என்றும், ஏழு குலமரபுத் தலைவர்களை வென்றான் என்றும் பொருள் கொள்வர்.

அசோகர் பாறைக் கல்வெட்டுகள்:

ஒளவையாரின் பாடல்கள் முழுமையும் அதிகனை பற்றி அறிந்து கொள்ளும் ஒரு வரலாற்றுக் கருவூலமாக திகழ்கின்றது என்றால் மிகையில்லை. இவன் காலத்தில் கம்பை நல்லூர் என்று என்றழைக்கப்படும் நாகையம்பள்ளி சிறப்புற்று விளங்கியது. அதியமான் நெடுமான் அஞ்சியின் மனைவியின் பெயர் நாகையார் என்ற கருத்து பல அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றது.  அவள் புறநானூற்றில் அஞ்சி அத்தை மகள் நாகையார் என்று குறிக்கப்பெற்றுள்ளாள். அதியன் தன் மனைவியின் பேரில் கொண்ட அன்பால் அவளது பெயரில் இவ்வூரை நிறுவினன் போலும். சங்க காலாத்தில் 13 ம் நூற்றாண்டு வரை நாகையாம்பள்ளி  என்ற பெயரே இதற்கு வழங்கி வந்திருக்கிறது. 15 ம் நூற்றாண்டிற்குப்பின் தான் கம்பைய நல்லூர் ,கம்பை நல்லூர் என்றெல்லாம் மாறாலாயிற்று என்று புலவர் மா கணேசன் கூறுகின்றார்.

ஜம்பைக்கும் அதியனுக்கும் உள்ள தொடர்பு:

சேரலிரும்பொறை மலையமான் திருமுடிக்காரியுடன் இணைந்து கொல்லி  மலைப்பகுதியைத் தாக்கி வென்றான். இதனை அறிந்த அதியமான் ,மலையமான் மீது மிகுந்த கோபம் கொண்டான். அதனால் திருக்கோவிலூரை நோக்கி படையெடுத்து வர , மலையமானின் படைகள் சிதைவுற்று , மலையமானும் கொல்லப்படுகின்றான். சங்க காலத்தில் மலையமானின் தலைநகரான திருக்கோயிலூருக்கும் , அதியனின் தலைநகரான தருமபுரிக்குமிடையே இருந்த பெருவழியில் ஜம்பை அமைந்திருந்தது. பண்டைய கல்வெட்டுகள் ஜம்பையை ஒரு வணிக நகரமாகவே பதிவு செய்திருக்கின்றன. அதியன் இத்தகைய மாபெரும் வெற்றியைப்  பெற்று  திரும்பும் வழியில் திருக்கோவிலூரில் உள்ள  ஜம்பை என்னும் இடத்தில் இயற்கைக் குகைத்தளத்தில் வசித்துவந்த சமண முனிவர்களுக்குப் படுக்கை(பாளி) அமைத்துக் கொடுத்தான் என்ற செய்தி  ஜம்பைக் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகின்றது. இந்த வெற்றியை ஒளவையாரும் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கின்றார்.(அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,.. (  புறம்:99))

ஜம்பை ஊர் பெயராய்வு:

ஜம்பை என்பது தாள வகைகளில் ஒன்று. ஆனால் சண்பை என்பது திரிந்து ஜம்பை ஆயிற்று . சண்பு அல்லது சம்பு என்பதை  கோரைப்புல் எனப் பொருள் தருகின்றது தமிழ் அகராதி. அவ்வூரில் அவ்வகைப் புற்கள் அதிகம் வளர்தலால் இப்பெயர் இடம்பெற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் . ஜம்பை என்று தற்போது வழங்கும் இவ்வூரின் மிகத் தொன்மையான பெயர் வாளையூர் நகரம் என்பதாகும் .இங்குள்ள மிகப் பழமையான விஜயாலயச் சோழனுடைய கல்வெட்டில் இவ்வூர் வாளையூர் நகரம் என்று குறிக்கப்படப்பட்டிருக்கின்றது.  . பராந்தகன் காலத்திலும் (க,ஆ,அ 117/1906), இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்திலும் (க.ஆ.அ97/1906). இவ்வூர் வாளையூர் நகரம் என்றே அழைக்கப்பட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர் வாளையூராகிய நித்தவிநோதபுரம் (க.ஆ.அ.71/1906) என அழைக்கப்பட்டது. நித்திவிநோதன் என்பது இராசரசனின் சிறப்பு பெயர்களுள் ஒன்று. அவன் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது. வீரராசேந்திரனின் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் நித்த விநோதபுரமாகிய வீரரசேந்திரசோழபுரம் என அழைக்கப்பட்டது. (க.ஆ.அ.83,100,1906) முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில்தான் இவ்வூர் சண்பை என்றும், சண்பையான வீரராசேந்திர சோழபுரம் என்றும்  அழைக்கப்பட்டது. (க.ஆ.அ.67,68,78/1906. 429.430/1938) இரண்டாம் இராசராசன் காலத்தில் இவ்வூர் சம்பை என அழைக்கப்பட்டது .(க.ஆ.அ .448/1938) . இதற்குப் பின்னால்  ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் காலம், இரண்டாம் இராசாதிராசன் , மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் , மூன்றாம் இராசேந்திரன் ஆகியோர் காலங்களிலும் சண்பையான வீரராசேந்திரபுரம் என்றே வழங்கி வந்துள்ளது.  கோப்பெருஞ்சிங்கன் காலத்திலும் , பாண்டியர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால்த்திலும்  சண்பையான வீரராசேந்திரபுரம் என்றே வழங்கி வந்துள்ளன என்று கா.செல்வராஜ், கூறுகின்றார். 

ஜம்பை சங்க காலத்தில் ,மலையம்மான் திருமுடிக்காரி ஆட்சிக்குட்ப்பட்ட பகுதியாய் இருந்தது.  பின்னர் பல்லவர்களுக்கு அடங்கிய முற்கால சிற்றரசர்களாக வாணகோ அரசர்களால் ஆளப்பட்டது. வாணகோப்பாடி நாட்டில் ஆடை ஊர் நாடு, அண்ணா நாடு, செங்குன்ற நாடு, காந்தளூர் நாடு, கீழ்கொன்றை நாடு, மெய்குன்ற நாடு, நரிப்பள்ளி நாடு , உடைக்காடு நாடு, விளையூர் நாடு, வாளையூர் நாடு என உள்ளடக்கியது.

ஜம்பைக் கல்வெட்டும் அசோகனின் கல்வெட்டும் :

வரலாற்றை மாற்றி அமைத்த சிறந்த  கல்வெட்டு ஜம்பைக் கல்வெட்டு என்றே கூறலாம். வரலாற்று சிறப்பு வாய்ந்த அதியமானின் பெயரை தாங்கிய இந்தக் கல்வெட்டு ஜம்பையில் தாசிமடம் என்ற  இடத்தில் இயற்கையாக அமைந்த மலைக்குகையில் 4 அடி நீளமும் 3 அங்குலம் அகலமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது கி மு மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டாகும். இந்திய வரலாற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் புதிய செய்தியைத் தந்த கல்வெட்டாய் அமைந்த அன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்ட கல்வெட்டாகும்.

    ஸதிய புதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி

 

என்ற வரிகள் பொறித்த இக்கல்வெட்டு கா.செல்வகுமார் என்னும் ஆய்வு மாணவரால் 1981 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது.

அசோகனின் கல்வெட்டு:

அசோகரின் கிர்னார் (ஜூனகாட் மாவட்டம், குஜராத்) , கால்சி (டேராடூன் மாவட்டம்,உத்திர பிரதேசம்), ஜெளகாதா ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் சதியபுதோ என்றும் , சபார்ஸ்கி  என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் சதியபுத்ரர் என்றும் காணப்படுகின்றன. சோட, பாண்டிய, சதியபுதோ, கேரளபுதோ ,தாம்பபண்ணி, அந்தியேக நாம யோனாலஜா என்னும் இக்கல்வெட்டு அசோகனது நாட்டு எல்லையைப் பற்றிக் குறிப்பிடும்போது பல மன்னர்களையும் குறிக்கின்றது. குறிப்பாக தமிழ் மன்னர்களான சோழன், பாண்டியன், அதியன், சேரன் ஆகியோரைக் குறிப்பிடுகின்றது.  அசோகனின் நான்கு கல்வெட்டுகளில் சதியபுத என்ற பெயர் சுட்டப்பெறுகின்றது. சதியபுத என்பவர் யார் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன என்பதே முன்பே கண்டோம் . அவை ஒன்றுக்கொன்று  முரணாகவும் சரியான தீர்வாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லாமலும் குழப்பம் தரும் வகையிலேயே இருந்தன. சத்திய புத்திரர்கள் என்பவர்கள் வாய்மொழிக் கோசர் என்பராய் இருத்தல்கூடும் என்றும் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாக இருக்கக்கூடும் என்றும் , மகாராஷ்டிரத்தின் ஸத்புத்ரர் என்போராக இருக்கக்கூடும் என்றும் பல்வேறு கருத்துகள் பல்வேறு ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்பட்டன. ஆனால் திரு சேஷ அய்யர்  ’ஸதிய புதோ’ என்று அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பிடுவோர் அதியமான்களாக இருக்ககூடும் என மொழியியல் அடிப்படையில் கருதினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஜம்பை கல்வெட்டு இந்த மாறுபட்டக் கருத்துகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.

அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ் மன்னர் மரபுகளில் குறிப்பிடப்படும் ‘சதியபுதோ’ என்ற சொல்லுக்கு அதுவரை பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வந்தன. ஜம்பைக் கல்வெட்டு மூலம் அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சதியபுதோ என்பது ’அதியமான் ‘ என்ற சொல்லின் பிராகிருத வடிவமே என்பது உறுதி படுத்தப்பட்டது . எனவே மாங்குளம், புகழூர், எடக்கல், ஜம்பை  முதலிய இடங்களில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள்  தமிழக வரலாற்றை சங்க இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி ஒரு நிலையான கால எல்லைக்குள் வைக்க அடிப்படையாயின என்று கா.ராஜன் குறிப்பிடுகின்றார்.

வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அகழாய்வில் சா, த என்று தமிழ் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட மட்பாண்ட ஓடு ஒன்று கிடைத்தது. தருமபுரி மாவட்டத்திலேயே முதன்முறையாக இவ்வகழாய்வில்தான் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கிடைத்துள்ளது. இதைத் தவிர அசோகன் பிராமியில் காணப்படும் ம போன்ற வரிவடிவத்துடன்(கீறல்) கூடிய மட்பாணடத் துண்டு ஒன்றும் கிடைத்துள்ளது. 5 இதன் மூலமாக அசோகர் காலத்திய  தமிழ் பிராமி கிடைத்துள்ளது மிக முக்கிய சான்றாக அமைகின்றது.

ஜம்பைக் கல்வெட்டின் காலம்:

  • இரா.நாகசாமி , எழுத்தமைதி அடிப்படையில் கி இ முதல் நூற்றாண்டுக்குரியது என்கின்றார்.
  • எழுத்து மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டு கி மு 3 ஆம் நூற்றாண்டு என்கின்றார் புலவர் செ இராசு அவர்கள்
  • பிரகிருதச் சொல் இருப்பதைக் கொண்டு கி பி 8 ஆம் நூற்றாண்டு என்பர் பேரா.மதிவாணன்.
  • பலர் இக்கல்வெட்டு கி மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 1 ஆம் நூற்றாண்டு வரை என வரையறுத்துள்ளனர்.

இவ்வாய்வில் பிராமி எழுத்தமைதியில் இரண்டாம் நிலை வளர்ச்சியைக் கொண்டு இருப்பதாக  எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

 இவை அல்லாமல் சங்ககாலத்தில் சமகாலத்திய மெளரியப் பேரரசன் அசோகனின் சிறுப்பாறைச்சாசனங்கள் இன்றைய கர்னாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் மாஸ்கி ,கவிமாத,பால்கி குண்டு  முதலிய இடங்களிலும் பெல்லாரி மாவட்டத்தில் நிட்டூர் ,உடேகொளம் பகுதிகளிலும், சித்திர துர்க்கா மாவட்டத்தில் பிரம்மகி ,சித்தாபுரம், ஐடிங்க ராமேஸ்வரம் பகுதிகளிலும், ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் ஏர்ரகுடி ,ராஜூலா -மண்டரி ஆகிய பகுதிகளிலும் கிடைத்துள்ளன.இவைபெரும்பாறையின்றி சாசனங்களாக  ஆந்திர கர்நூல் மாவட்டத்தில் எர்ரகுடியிலும் ,குண்டூர் மாவட்டத்தில் அமராவதியில்  சிறிய தூண் கல்வெட்டும் காணப்படுகின்றது.

சாபாஸ்கார்கி, கால்சி, கிர்நார், ஜெளகதா ஆகிய இடங்களிலும் அசோகர் சாசனங்கள் தெரிவிக்கும் சேர,சோழ,பாண்டிய ,அதியர் ஆட்சிகள் இந்த எல்லைக்குக்கீழ்  பரவியிருந்ததை உறுதி செய்து கொள்ளலாம். இதை உறுதி செய்யும் வகையில் சங்க இலக்கியங்களும் சில பதிவுகளை நமக்குத் தருகின்றன. அகநானூறு (69,251,281), புறநானூறு (175) ஆகிய பாடல்களில் மெளரியப் படையெடுப்பின் போது அவர்கள் மலையைக் குடைந்து பாதையை அமைத்தல் போன்ற முன்னேற்பாடுகளையும் அந்த எல்லையில் அமைக்கப்பட்டிருந்த அறச்சாலை ஒன்றைப் பற்றியும் அறிய முடிகின்றது.

மேற்குறிப்பிட்ட சாசனங்கள் குறிப்பிடும் கடையேழு வள்ளல்களில் இரண்டு வள்ளல்கள் குறித்து நாம் அறிகின்றோம். முதலில் அசோகர் சாசனம் சேர,சோழ ,பாண்டிய ,அதியர்களை குறிப்பிடுவதை அறிவோம்.அசோக கல்வெட்டுகளில் எண் 2 மற்றும் 13 இல் HIDA RAJA அதாவது ஹிட ராஜா என்ற தனியாட்சி செய்த ஒரு மன்னரையும் குறிப்பிடிகின்றது. HIDA என்பது   IDA என்பதன் திரிபு எனக்கொண்டு  IDIYA  என்பதன் குறுக்கம் எனக் கொண்டும் அசோகர் சாசனங்கள் தெரிவிப்பது IDIYA என்னும் ஆயர் (AYAR)அரசு எனக் கொள்வர்.ஆயர் என்பதை ஆய் என்பதன் பன்மை எனக் கொண்டு அசோகர் சாசனம் தெரிவிப்பது பொதிகையை ஆண்ட ஆய் அரசர்களையேக் குறிக்கும். இதை மறுத்து வேறு நிலைப்பாடாக  IDA RAJA என்பது பல ஆயர் மன்னர் களைக் குறிக்கும்; அதில் ஒருவனே ஆய் மன்னன் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்று த .பார்த்தீபன் குறிப்பிடுகின்றார்.

அதியர்களின் வீழ்ச்சி தமிழக மூவர் நிலையை உருவாக்கியிருக்ககூடும். அதியர்மரபினர் சேரனுக்கு அடங்கிய சிற்றரசராகவும் குறுநில மன்னனாகவும் பார்க்கும் நிலையைத் தகடூர் பெரும் போர் உருவாக்கியது என்பதை வரலாறு தெளிவாகக் காட்டுகின்றது. பிற்காலத்தில் வாழ்ந்த அதியன்கள் குறுநில அரசராக ஆட்சி செய்து வந்துள்ளதைக் கொண்டும் , மற்ற வள்ளல்கள் அனைவரும் குறுநில மன்னராக இருப்பதாலும்  அறிஞர்களிடையே அதியனும் குறுமன்னன் என்ற   புரிதல் உருவாகியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. நிலப்பரப்பைக் கொண்டு ஒரு அரசனை சிற்றரசன், பேரரரசன் என்று கணித்து விட முடியாது. கொங்கு நாட்டில் பல சிற்றரசர்கள் இருந்திருந்தாலும் அதியமான் பரம்பரையின் ஆட்சிக்கு உட்பட்டு அல்லது தனித்து இயங்கி வந்திருக்கலாம். அதன்பின் சேரர்களின் வருகையால் பல பிளவுகள் ஏற்பட்டிருக்ககூடும் என யூகிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடந்துவண்ணமே இருந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட சான்றுகள் வழி அதியமான் வேந்தனாகவே  இருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது . பல அறிஞர்களின் கருத்துக்களின் படியும் ,அசோகனின் கல்வெட்டுப்படியும், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலும் இவ்வாய்வு  அதியமான் நெடுமான் அஞ்சியாகிய வள்ளல் அதிகனைப்  பேரரசனாகவே   முன் வைக்கின்றது.

துணை நின்ற நூல்கள்:

1. புறநானூறு

2. அகநானூறு

3.  கா.சுப்பிரமணியன் ,   சங்க கால சமுதாயம்(கட்டுரைகள்)

4.  மயிலை சீனி வேங்கடசாமி .கொங்கு நாட்டு வரலாறு(பழங்காலம் -கிபி 250 வரையில்)

5.  க.கைலாசபதி ,பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்

6.  மா .இராசமாணிக்கனார் ,பத்துப்பாட்டு ஆராய்ச்சி

7.  டாக்டர் .ப.சரவணன் ,சேலத்து இரும்பு

8. த.பார்த்தீபன், சங்க கால்த் தமிழகமும் அதியர் மரபினரும்.

9.  ஜம்பை , தமிழகத் தொல்லியல் துறை

10. தகடூர் கல்வெட்டுக்கள்,தமிழ்கத் தொல்லியல் துறை