ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

புறநானூறு நவிலும் மறமகளிர் வாழ்வியல்

முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி 09 Nov 2021 Read Full PDF

In ancient times, Heroic women were confined to their homes doing household works yet , they showed enormous Physical and mental strength. The verse mentioned by Tholkappiyar in “Kanji Thinaai” reveals Women’s bravery. Only those who exhibited their Valiance were eligible to get married. As the saying, ‘Behind every successful man there stands a Woman’, proves right. Women were instrumental in helping men attain triumph. During the war, women who lost their husband, laid a tombstone and worshipped him and hated those who left the Warfield halfway. Tholkappiyar failed to notice the qualities of these women. The Courageousness of the women were evident as men constantly fought in the war came back wounded and women assisted them in recovery. This act of women enhanced men to become a Warrior. When the women lost their husband, the society denied the chance of remarriage, instead put forth two options. One is ‘co-climbing’ and the other fasting. The fasting got its special place in Tholkappiyar’s ‘Thapatha nilai’. Even in “Purananoru”, the act of women’s strict fasting has been described in the part of ‘Thapatha nilai’. Also ‘Aanantha Paiul’ recorded the events of co-climbing. Fasting dated back to sangam era, while co-climbing was a rare thing. Though the fasting was severe and hard, Women sincerely adhered to the principles which revealed the love they have for their husbands.

 

Key words : Tholkappiam, Purananooru, War hero, Heroic women

முன்னுரை

          பண்டைய காலத்தில் மகளிர் குடும்ப வேலைகளைக் கவனித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தனர் என்றாலும் மறவுணர்வு நிறைந்தவர்களாகவும் வீரம் மிக்கவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். கணவன் போர் வினையாற்றச் சென்றிருக்கும் போது மகளிர் பூச்சூடாதவர்களாய், போரில் கணவனை இழந்த மகளிர் நடுகல்லை வழிபட்டு வாழ்ந்துள்ளனர். போரில் புறப்புண்பட்டவர்களைக் கண்டு நாணக் கூடியவர்களாய், கணவன் போரில் விழுப்புண் பெற்று வரும் போது அப்புண்ணைக் காக்கக் கூடியவர்களாய், கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு நோற்றல் அல்லது உடன்கட்டை ஏறக் கூடியவர்களாய் வாழ்ந்துள்ளனர். இவற்றைப் புறநானூற்றுப் பாடல்களின் துணையுடன் ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

மகளிரின் மறவுணர்வு

            தொல்காப்பியர் புறத்திணையியலில் மகளிரின் மறவுணர்வினைப் பதிவுச் செய்துள்ளார். புறத்திணைகளில் ஒன்றாகிய காஞ்சித்திணைக்குரிய துறைகளில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள மகளிரின் வீரவுணர்வு பற்றிய செய்திகள், மறப்பணி ஆற்றுவோரே தம் மணவாளராக இருக்க வேண்டும் என்ற மகளிரின் சிந்தனையை, அவர்தம் மணம் மறத்தோடு தொடர்புபட்டிருந்தமையை வெளிப்படுத்துகின்றது.

          போர்வீரனை ஈன்ற தாய் தன் வயிற்றைப் புலிசேர்ந்து போகிய கல்லளை 1 என்கிறாள். எதிர்த்து வருகின்ற பகைவர் படை கண்டு அஞ்சாமல் விழுப்புண்பட்டுச் சிதைந்து வேறாகிய மகனுடல் கண்டு ஒரு தாய் ஈன்ற பொழுதினும் பெரிது 2 உவக்கின்றாள்.

          முதல் நாள் போரில் தன்னுடைய தந்தையையும் கணவனையும் இழந்த பெண்ணானவள், எந்தவித மனக்கலக்கமும் அச்சமுமின்றி பருவம் வராத தன் ஒரே மகனையும் மறுநாள் போருக்கு அனுப்பி வைக்கின்றாள் 3.

          தன் மகன் விழுப்புண்பட்டு இறந்த நிகழ்வைப் பார்த்த முதியவள் வற்றிப்போன தன் மார்பில் பால் சுரந்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றாள்.

“இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய    

 

          சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி

 

          வாடுமுலை ஊறிச் சுரந்தன

          ஓடாப் புட்கை விடலை தாய்க்கே ”                                                         (புறம். 295 : 5 - 8)

ஒரு பெண் குழந்தைப்பேறு அடைந்த பருவக்காலத்தில் கூட குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்ற உள்ளான மகிழ்ச்சி உணர்வு தோன்றும் போது மட்டுமே அதிகமான பால் சுரக்கும் என்பர். இந்நிலையில் வயது முதிர்ந்த காலத்திலும் தன் மகனின் வீரமரணம் பற்றிய செய்தியானது வற்றிப் போன மார்பில் பால் சுரக்கும் படியான மகிழ்ச்சியைக் கொடுத்தது என்பதன் மூலம் ஒரு தாயின் மறவுணர்வை நன்கு வெளிப்படுகின்றது.

          இவ்வாறாக மகன் போர்க்களம் செல்ல வேண்டும் எனவும் களத்தில் விழுப்புண் பெற்று இறந்துபட வேண்டுமெனவும் ஒரு பெண் விரும்புகிறாள் என்றால் அப்பெண்ணின் மறவுணர்வு இன்னும் ஒரு படி மேலே சென்று நிற்கின்றது. இதனைப் புறநானூற்றில் ‘முதுபாலை’ துறையில் அமைந்துள்ள பாடல்கள் விளக்கி நிற்கின்றன.

          வீரனின் மனைவியானவள் தாம் போர் செய்யவில்லையானாலும் போர் செய்யும் தம் கணவனுக்கு உறுதுணையாகவும் ஊன்றுகோலாகவும் செயல்பட்டிருக்கின்றாள். கை, கால், தலை என வேறுவேறாக காட்சியளிக்கும் இரத்த வெள்ளம் மிகுந்த போர்க்களம் அச்சவுணர்வைத் தோற்றுவிக்கக் கூடும். இந்நிலையில் போருக்குச் சென்ற கணவன் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எண்ணிய தலைவி போர்க்களம் சென்று விழுப்புண் பெற்று இறந்து கிடந்த கணவனைக் காண்கின்றாள்.

          ஐயோ! என்று அலறினால் புலி வந்து கணவன் உடலைப் பற்றிக் கொள்ளுமோ என நினைத்து அவனைத் தூக்கவும் முடியாமல் அப்பெண் படும் துன்பத்தை,

         “          ஐயோ!எனில் யான் புலி அஞ்சுவலே

          அணைத்தனன் கொளினே அகன் மார்பு எடுக்கவல்லேன் ” (புறம். 255 : 1 - 2)

என வன்பரணர் வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு போர்க்களத்திற்குச் சென்று இறந்த தன் கணவனின் உடலைப் பாதுகாப்பாக மலைப்புறத்து நிழலுக்கு எடுத்துச் செல்லும் பெண்ணின் துணிச்சல் மிக்க வீரம் போற்றத்தக்கதாகும்.

          தன் முன்னோரின் நடுகல்லை வழிபடும் பெண்ணொருத்தி, போருக்குச் சென்ற தலைவன் விழுப்பகை எய்துக 4 என்று வேண்டுவதன் மூலம் அம்மறக்குலப் பெண்ணின் வீரவுணர்வு வெளிப்படுகின்றது.

 

          போர்க்களத்தில் இறந்துபட்ட தன் கணவனைக் கண்டு தனிமையில் வருந்தும் பெண்ணொருத்தி,

 

          “முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்       

          புள்ஆர் யாணர்த் தற்றே, என்மகன்                            

          வளனும் செம்மலும் எமக்கு, எனநாளும்

          ஆனாது புகழும் அன்னை

          யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! ”          

                                                  (புறம். 254 : 7 - 11)

என தன் நிலைக்காக வருந்துவதோடு, ஒரு தாயின் நிலையில் இருந்து கொண்டு தன் கணவன் தாய்க்காகவும் வருந்தும் தன்மை போற்றுவதற்குரியதாகும்.

 

          இவ்வாறு பெண்கள் போர் மீது அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை விட மறவுணர்வு மிகுதியாகக் கொண்டிருந்தனர். பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையின் கையில் போர்க்கருவி கொடுத்து போருக்கு அனுப்பும் தன்மை, பயங்கரமான அச்சவுணர்வைத் தரும் போர்க்களத்திற்குச் செல்லும் பெண்ணின் துணிச்சல் ஆகிய இவை போன்ற பெண்ணின் மறவுணர்வு மிக ஆபத்தானது எனக் கண்ட புலவர், 

 

           “கெடுக, சிந்தை; கடிதுஇவள் துணிவே”                                       (புறம். 279 : 1) 

எனக் கூறிக் கண்டித்துள்ளார். என்றாலும் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கு ஏற்ப பழந்தமிழகத்தில் ஒரு ஆணின் போர் வெறிக்கும் வெற்றிக்கும் என்றும் அழியாத புகழ் வேட்கை ஒரு காரணமாக இருக்க, மறுகாரணம் வீட்டிலிருக்கும் பெண்ணின் ஊக்குவிப்பு என்றால் அது மிகையாகாது.

மகளிர் பூச்சூடா நிலை

          தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி எந்தவித ஒப்பனையும் செய்து கொள்ளாதவளாகவே அக இலக்கியங்கள் காட்டுகின்றன. அதே போல போர் காரணமாக கணவன் வினையாற்ற சென்றிருக்கும் போது மறக்குடி மகளிர் பூச்சூடிக் கொள்ளாத மரபினை,

              “எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்

               பிறர்மனை புகுவள் கொல்லோ?

               அளியள் தானே, பூவிலைப் பெண்டே! ”        (புறம். 293 : 4 - 6)

என புறநானூறு பதிவு செய்துள்ளது. கணவன் போருக்காகச் சென்றிருக்கும் போது இல்லத்தில் தனித்து இருக்கக் கூடிய பெண்கள் பூ அணியார் என்று கூறி, பூவிற்கும் பெண் பிற மகளிர் வாழும் வீடுகளுக்குச் சென்றதாகக் கூறும் இப்பாடலில் மறக்குடி மகளிரின் அக வாழ்வியல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடுகல்லை வழிபடுதல்

 

          போரில் கணவனை இழந்த மகளிர் தம் கணவனுக்காக நடப்பட்ட நடுகல்லையே கணவனாக, கடவுளாக நினைத்து வாழ்ந்துள்ளமையைப் புறநானூறு பதிவு செய்துள்ளது.

 

              “கல்லே பரவின் அல்லது                                      

              நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே ”                                                              (புறம். 335 : 11 - 12)

அதாவது கணவனை இழந்த மகளிருக்குத் தம் கணவன் பெயரால் அமைந்த நடுகல்லைத் தொழுதலை விட வேறு தெய்வமில்லை என்பதாகும். இவ்வாறாக, போரில் இறந்த தம் கணவனுக்கு நடப்பட்ட நடுகல்லையே பற்றுக்கோடாக நினைத்து மகளிர் வாழ்ந்துள்ளனர்.

புறப்புண் கண்டு வெட்கப்படல்

          வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு பார்க்கும் தன்மையைப் பண்டைத் தமிழ்ச்சமூகம் போரில் வெற்றி, தோல்வி என்று பார்த்துள்ளது. அதே போல இறப்பிலும் வீரன், கோழை என்று அடையாளப்படுத்தியதால் அனைவரும் வீரனாகவே வாழத் தலைப்பட்டனர். அவர்கள் சாவதற்குத் தயாராகிப் போரில் ஈடுபட்டு இறக்கும் போது அவர்கள் பட்ட காயங்களை வைத்து விழுப்புண் பெற்றவன், புறப்புண் பெற்றவன் என்று வகைப்படுத்தினர்.

          அந்த வகையில்  மார்பிலே விழுப்புண் பட்டவன் வீரன் என்றும் அவன் வீரசுவர்க்கம் அடைவான் என்றும் கருதினர். முதுகிலே புறப்புண்பட்டவனைக் கோழை, தோற்றவன் என்றும் சமூகத்தார் தூற்றியுள்ளனர். பழந்தமிழர் உயிரை விட மானத்தை மேன்மையாகக் கருதினர். பகை மன்னர்களுடன் போரிடும் போது மார்பிலே விழுப்புண் பெறுவதையே விரும்பினர். ஒரு வேளை வீரன் ஒருவன் புறப்புண் பெறுவான் என்றால் அவன் நாணி வடக்கிருப்பதோடு அவர்தம் மனைவியரும் நாணி வெட்கியுள்ளனர்.

         “          புல்லென் கண்ணர் புறத்தில் பெயர

          ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்

          மாண்இழை மகளிர் நாணினர் கழியத் ”               (புறம். 78 : 8 - 10)

 

          இவ்வாறு மனைவியர் வெட்கப்படுவதோடு, வீரனைப் பெற்றத் தாய் தன் மகன் புறமுதுகிட்டு ஓடினான் என்ற செய்திக் கேட்டு நெஞ்சு பதறுகிறாள். தன் மகன் புறங்கொடுத்து ஓடமாட்டான். அப்படி ஒருவேளை அவன் புறங்கொண்டு மடிந்தானானால் என் மகன் வாய் வைத்து பால் அருந்திய மார்பை அறுத்து எறிவேன் என சபதமிடுகின்றாள்.

 

       “முதியோள் சிறுவன்                                                                              

      படைஅழித்து மாறினன் என்று பலர்கூற                        

      மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்

      முலை அறுத்திடுவென் யான்எனச் சினைஇக்”       (புறம். 278 : 2 - 5)

என்ற பாடலடிகள் பெண்ணின் வீரவுணர்வை வெளிப்படுத்துகின்றன.

          இவ்வாறாக இயல்பாகவே மறவுணர்வு மிக்க மகளிர், மானம் மிக்கவர்களாக வாழ வேண்டும்; போரிலே களச்சாவு எய்த வேண்டும் என்று விரும்பியுள்ளனர். புறப்புண் கண்டு வெட்கப்படும் மகளிரின் இப்பண்பினைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

விழுப்புண் காத்த விதம்

          போருக்குச் சென்ற கணவன் தன் மார்பிலே விழுப்புண் பெற்றவனாய் வீடு திரும்ப வேண்டும் என விரும்பினர். அதனைப் பெருமையாகவும் கருதினர்.

 

          மறக்குடியில் பிறந்த பெண்ணொருத்தி போரில் விழுப்புண் பெற்ற தன் கணவனின் புண்ணைக் கிருமிகள் அணுகாமல் இருக்கவும், பேய்கள் அவற்றைத் தீண்டாமல் இருக்கவும் (புறம்.281:1-7) பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றாள்.                                                                               

 

“வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்    

          நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

          எல்லா மனையும் கல்லென் றவ்வே ”         (புறம். 296 : 1 - 3)

என வெண்சிறு கடுகு தூவி, ஆம்பல் குழல் ஊதி, யாழொடு பல்வேறு இசைக்கருவிகளை இசைத்து காஞ்சிப்பண்ணைப் பாடிப் பாதுகாத்துள்ளனர்.

          இவ்வாறாக விழுப்புண்களைப் பாதுகாப்பதற்கும் ஆற்றுவதற்கும் தயாராக இருக்கும் பெண்களின் மனத்துணிச்சல் ஆண்களைத் தொடர்ச்சியாகப் போருக்கு அனுப்பி வைத்துள்ளது எனலாம். மகளிரின் இத்தகைய கவனிப்பு முறை ஆண்களைச் சிறிது சிறிதாக மெருகேற்றி முழுமையான வீரனாக பரிணமிக்கத் துணை செய்துள்ளன.

கைம்மை நோன்பு

          இல்லற வாழ்க்கை என்பது கணவனும் மனைவியுமாக இணைந்து வாழ்வது. இல்வாழ்க்கையில் பெண் தன் கணவனை இழக்கும்பொழுது அவள் இன்னொரு ஆடவனைக் கைப்பிடிப்பதைப் பழந்தமிழ்ச் சமூகம் ஏற்காமல், இரண்டு வழிமுறைகளை அவள் முன் வைத்தது. அவைகளில் ஒன்று உடன்கட்டை ஏறுதல். மற்றொன்று கைம்மை நோன்பு என்பன.

          கைம்மை நோன்பு என்பது கணவனைத் தவிர வேறு எந்த ஆடவனையும் மனதளவிலும் நினையாதிருத்தலாகும். இவை தவிர மொட்டையடித்தல், அணிகலன்களைக்  களைதல், உணவு சுருக்குதல் போன்ற கடினமான விதிமுறைகளையும் விதித்துள்ளது. இதனைத் தொல்காப்பியர்  ‘தாபதநிலை’ என்ற துறையில் குறிப்பிட்டுள்ளார்.

          புறநானூற்றில் கைம்மை நோன்பு ஏற்ற பெண்களின் நிலை, ‘தாபதநிலை’ துறை சார்ந்த பாடல்களிலும் உடன்கட்டை ஏறும் செயல் ‘ஆனந்தப் பையுள்’ துறை சார்ந்த பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவனை இழந்த பெண் மொட்டை அடிக்கப்பட்டு, அணிகலன்கள் களையப்பட்டு, உணவு சுருக்கி, படுக்கை விரிப்பு அற்ற வெறும் தரையில் உறங்கும் தன்மை ஆகியவற்றைப் புறநானூற்றுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

          வேங்கைமரம் தம் பூக்களை உதிர்த்ததைப் போல கரிகாலன் இறந்த பொழுது அவன் மனைவி அணிகலன் களைந்ததை,

              “பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்           

               கொய்துகட்டு அழித்த வேங்கையின்

               மெல்இயல் மகளிரும் இழைகளைந் தனரே ”  (புறம். 224 : 15 - 17)

என்பதன் மூலம் அறியலாம்.

          கணவனை இழந்த பெண் அவனோடு சேர்ந்து வாழ்ந்த நாட்களை நினைத்து நினைத்து மனம் நொந்து வேதனை அடைவதால் சரியான நேரத்திற்கு உண்பதில்லை; அப்படி உண்ணும் போது சுவை மிக்க உணவையும் புசிப்பதில்லை. இதனை,

 

“பெருவளக் கொழுநன் மாய்ந்தென பொழுது மறுத்து

 

          இன்னா வைகல் உண்ணும்                                 

          அல்லிப் படூஉம் புல்லா யினவே ”       

                                                   (புறம். 248 : 3 - 5)

என ஓக்கூர் மாசாத்தியார் பதிவு செய்துள்ளார். பொருந்தாப் பொழுதில் உண்ணக்கூடிய அப்பெண் புல் அரிசி உணவையே உண்டுள்ளாள்.  இவ்வாறாக பண்டைய காலங்களில் இது போன்று கணவனை இழந்த பெண்கள் மிகக் கடுமையான கட்டுக்கோப்புடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

உடன்கட்டை ஏறுதல்

          அன்பான கணவனுடன் வாழ்ந்த வாழ்வை நினைத்து ஒவ்வொரு நாளும் துன்பப்படுவதை விட கணவன் இறந்த பின்பு தாமும் இறந்து விடுவதே சிறந்தது என்ற சிந்தனையின் செயல்பாடே உடன்கட்டை ஏறுவதாகும்.

புறுநானூற்றில் வீரன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறியதற்கான சான்று எதுவுமில்லை. ஆனால் மன்னர்கள் மரபில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தமையைப் பூதப்பாண்டியன் இறந்த போது அவன் தேவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறத் துணியும் போது சான்றோர்களும் மற்றப் புலவர்களும் தடுத்ததாகப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

“அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட   

          காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது                

 

          அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

 

          வெண்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

          வேளை வெந்தை வல்சி ஆகப்

          பரற்பெய் பள்ளிப் பாய்இன்று வதியும்

          உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ ”           (புறம். 246 : 4 - 10)

என்கிறாள். அதாவது வெள்ளரிக்காய் விதை போன்ற சோற்றை இலையிடை வைத்து பிழிந்து, சக்கையை மட்டுமே எடுத்து, வெள்ளை எள்ளுடன் புளி வைத்து அரைத்து, வேளைக்கீரையை வேக வைத்து உப்பில்லாமல் உணவாகக் கொண்டு பரற்கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் மொட்டை தலையுடன் படுத்துறங்கும் கைம்மை நோன்புடன் தனித்து வாழும் ளதனிமை வாழ்வைக் காட்டிலும், கணவனுடன் சென்று சேர்வதையே சரியென்று எண்ணுகிறாள்.

          ஒரு நாட்டின் அரசியாக அனைத்து வசதிகளோடு ஆடம்பரமாக வாழ்ந்தவள், கணவன் இறந்த பின்பு அனைத்தையும் இழந்து கைம்மை பூண்டு வாழ்வது கடினமானதாகவும் கொடூரமானதாகவும் கருதியவளாய் சான்றோர்களை எதிர்த்து தீர்ப்பாய்கின்றாள்.        

          இவ்வாறாக கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு ஏற்பதே சங்ககாலப் பண்பாடாக இருந்துள்ளது. உடன்கட்டை ஏறுவது அரிதாகவே இருந்துள்ளது. கைம்மை நோன்பு கடுமையான கட்டுப்பாடாக இருந்தாலும் தம் கணவர் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக அதனை அன்போடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முடிவுரை

          சங்ககால மகளிர் தம் கணவனைப் போருக்கு அனுப்பி வைக்கும் துணிச்சல் மிக்கவளாகவும் மறவுணர்வுமிக்கவர்களாகவும் வாழ்ந்துள்ளனர். கணவன் போருக்குச் சென்ற காலங்களில் மகளிர் பூச்சூடுவதில்லை. போரில் புறப்புண்படுபவர்களைக் கண்டு நகைப்பவர்களாக, விழுப்புண்படுவர்களைக் காப்பவர்களாக விளங்கியுள்ளனர். போரில் கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு ஏற்று வாழ்ந்துள்ளனர். கைம்மை நோன்பு கொடுமையானது என எண்ணும்பொழுது உடன்கட்டை ஏறியும் வாழ்ந்துள்ளனர் என்பதனைப் புறப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

அடிக்குறிப்புகள்

1. புறம். 86

2. புறம். 278

3. புறம். 279

4. புறம். 306:7

துணைநூற்பட்டியல்

1. இளம்பூரணர் உரை            -         தொல்காப்பியம்,

கழக வெளியீடு, சென்னை,1976.

2. சாமிநாதையர், உ.வே.,                -         புறநானூறு மூலமும் பழைய உரையும்,

         (ப.ஆ.).,                                      உ.வே.சா. நூல் நிலையம்,

திருவான்மியூர், சென்னை, 1971.