ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

பாவேந்தர்தம் அழகியல் புனைவுகள்

முனைவர் க. முருகேசன் உதவிப்பேராசிரியர் & ஆய்வுநெறியாளர், தமிழ்த்துறை, தேசியக்கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி – 01 தமிழ்நாடு, இந்தியா 09 Nov 2021 Read Full PDF

ஆய்வுச்சுருக்கம்

            தமிழ், இலக்கிய இலக்கண வளமும் பழமைச் சிறப்பும் கொண்டு விளங்கும் மொழியாகும். தமிழில் காணக்கிடைக்கும் பழம்பாடல்களில் அக்கால இயற்கை அழகின் இனிமையும், மக்கள் வாழ்க்கை நெறியின் செம்மையும் புலப்படுகின்றன. மொழியே மக்களின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து மொழி வழியே மக்களின் மனத்தில் மண்டிக்கிடந்த அறியாமையைப் போக்க தம் கவிதை என்ற ஒளியினைப் பாய்ச்சி அகஇருளை அகற்றிய எழுஞாயிறு பாவேந்தர் பாரதிதாசனாhர். தம் கவிதையால் புரட்சி வித்துக்களை விதைத்து மொழிப்பற்று, நாட்டுவிடுதலை, பெண்விடுதலை, மூடநம்பிக்கை முதலியனவற்றை வேரறுக்கின்றார். இயற்கையை நேசிப்பதில் கூட தம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரவவிட்டு பாப்புனையும் பாவேந்தரின் இயற்கையின் மீதுகொண்ட காதலை வெளிக்காட்டுவதற்கு இக்கட்டுரை ஆய்வுச் சுருக்கம், கலைச்சொற்கள், முன்னுரை, அழகு, கடல், தென்றல், குன்றம், ஆறு, ஆல், புறாக்கள், சிற்றூர், பட்டணம், தொகுப்புரை, முடிவுரை, துணைநூற்பட்டியல், அடிக்குறிப்புகள் முதலான கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கலைச்சொற்கள்

கன்மாடம்                            -           புறா

பரத்துவாசன்                      -           வலியன்

சகோரம்                               -           செம்போத்து

புனஎலுமிச்சை                   -           குருத்து

பொய்கை                            -           நீர்நிலை

கங்குல்                                  -           இரவு

இரவி                                     -           சூரியன்

பரிதி                                      -           சூரியன்

வஞ்சி                                    -           பெண்

முன்னுரை

            பகுத்தறிவுக் கோயிலைக்காட்டி நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் தமிழ்ப்பற்றுக்கு எல்லையில்லை. அவர்தம் பாடல்களைப் படிக்கும் அந்நியமொழியாளர் கூட தமிழ்மொழிப்பற்றாளராக மாறிவிடுவார். எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும். பாரதிதாசன் பாட்டும் இனிக்கும் என்ற கல்கியின் கூற்றால் அறியமுடிகிறது. பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி இருக்கிறார். ‘உலகெங்கும் உள்ள நவயுகக் கவிஞர்களிலே பாரதிதாசனும் ஒருவர் என்று தி.ஜ.ரவின் கருத்தும் அணிசேர்க்கும் இயல்புடையது. பாவேந்தரின் கவிதையில் வேகமுண்டு. விடுதலைத் தாகம் உண்டு. பண்பும் உண்டு, பயனும் உண்டு. பாரதியார் சொல்லும் வீரத் தமிழ்ச்சொல் இன்பத்தைப் பாவேந்தரின் பாடல்களில் காணலாம், இதனை,

                        “விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்

                        விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்”

என்ற நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூற்றால் அறியமுடிகிறது. இயற்கையின் மீது கொண்ட காதலைத் தம் பாடல்களில் நனி சிறந்தனவாக அமைத்துள்ளார். இயற்கையை ரசனைக்குரியதாக்கி ரசிப்புத்தன்மையைக் கூட்டி அழகியலோடு தம் “அழகின் சிரிப்பில்” வெளிப்படுத்தும் இயற்கையழகியலை எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

அழகு

            இயற்கையை வர்ணிப்பதிலே பாவேந்தர் இணையற்ற கவிஞர் அழகின்சிரிப்பில் இயற்கையோடு நகைச்சுவையையும் இணைத்துப்பாடி மகிழ்கிறார். அழகென்ற நங்கையை காலையிளம் பரிதியிலும், கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டு மகிழ்வதோடு சோலை, மலர், தளிர் எனப் பலவிடங்களில் தட்டுப்பட்டு என்னை வசீகரிக்கின்றாள் எனப்பாடுகிறார். மாலையில் மறைகின்ற மாணிக்கச்சுடரிலும் இருந்தாள். ஆலமரத்தின் கிளைகளிலும் கிளிக்கூட்டந்தனிலும் அழகென்ற நங்கை கவிதை தருவதாக பாடுகிறார். சிறுகுழந்தையின் விழியினிலும், திருவிளக்கின் ஒளியினிலும், நறுமலரைத் தொடுப்பவளின் விரலசைவிலும் நாடகத்தை இயற்றிடும் நங்கையாக வர்ணிக்கிறார். உழைப்பவரின் தோளை வர்ணிக்குமிடத்தில்,

                                    “அடடே செந்தோள்

                                    புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்

                                    புதுநடையில் பூரித்தாள் விளைந்த நன்செய்

                                    நிலத்தினிலே என் விழியை நிறுத்தினாள்”1

            உழவனின் புது நடையில் பூரிப்படைவதோடு விளைந்த நன்செய் நிலத்தின் மகசூலால் மனம் மகிழ்ந்து விழியை வேறிடம் நோக்காது மகிழ்ச்சியடைகிறார்.

            பசையுள்ள  பொருள்களிளெல்லாம் பசையாக  விளங்கும் இயல்பும் பழமையினால் சாகாத சீரியமைத் திறமும் விருப்புமுற்ற நோக்கினால் நல்லழகு வசப்பட்டவர்களுக்குத் துன்பந்தராத சீர்மையும் உடையவளே அழகென்று அகம் மகிழ்கிறார்.

கடல்

            1944 இல் தாம் இயற்றிய ‘அழகின்சிரிப்பில்’ மணல் மற்றும் அலைகளை வாஞ்சையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். ஊருக்குக் கிழக்குத்திசையில் பெருங்கடலின் ஓரத்தில் கிடக்கும் மணல் வெளியை,

                                    “கீரியின் உடல் வண் ணம்போல்

                                    மணல் மெத்தை”2

என்று பாடியுள்ளார். கல்வி நிலையத்தில் கசடறக் கல்வி கற்கும் இளையோரின் மனவோட்டமானது புதியன கற்பதில் ஏற்படும் பூரிப்பாள் மனமகிழ்வானது ஏறும் தாழும் இயல்புடையது என்கிறார். அஃதை  கடல் அலைகளோடு ஒப்பிட்டு உருவகப்படுத்தியுள்ளார்.

            மணற்கரையில் நண்டுகள் விளையாடுவதை,

                                    “வெள்ளிய அன்னக் கூட்டம்

                                    விளையாடி வீழ்வதைக் போல.” 3

அலையின் வேகத்தால் கரையில் கழன்று வீழும், வெள்ளலைக் கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுகள் ஓடிஆடும் இயல்பை உவமிக்கின்றார். மேலும் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டில், “உலருக்கு நற்பாட்டு உரைக்க எனக்காசை”4 என்ற பாடல் வரியால் அவரின் உள்ளக்கிடக்கையை நன்கறியலாம்.

            கடலழகை மனக்கண் முன் நிறுத்தும் பாவேந்தர். காலையில் எழும் இளங்கதிரானது கடல்மீதுபட்டு விழுந்தபோது தங்கத் தூற்றலால் கடல்வெளியெங்கும் கதிரவனின் ஒளிவெள்ளத்தில் மிதப்பதாகக் கூறுகிறார். எழும் இளங்கதிரானது கண்டு மகிழும் கடல்வாழ் பறவைகளின் மனநிலையைக்,

                                    ”களித்தன கடலின் புட்கள்

                                    எழுந்தன கைகள் கொட்டி”5

என்று படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

தென்றல்

            தென்றலை இரண்டு நிலைகளாகப் பகுப்பதோடு அவற்றிற்கு மென்காற்று எனப்பெயரிட்டும் அழைக்கின்றார். அண்டங்கள் கோடி கோடியாக அனைத்தையும் தன்னிடத்தில் கொண்டு கூத்திடும் இயல்புடையகாற்றின் வலிமையை வலிமையான குன்றினைக்கூட தூள் தூளாகச் செய்யும் இயல்புடைய வன்காற்றினியல்புரைத்த பாவேந்தர்,

                                    “…………. நீ ஓர்

                                    துண்துளி அனிச்சம் பூவும்

                                    நோகாது நுழைந்தும் செல்வாய்”6

என்று மென்காற்றின் சுகந்தத்தையும் ஒப்பிட்டு மகிழ்கிறார்.

தென்றலின் குறும்பினை உணர்த்த விளையும் பாவேந்தர் உலைத்தீயை ஊதி மேலும் அத்தீயில் உருகும் கொல்லனின் மலைத்தோளில் உனது தோளினையும், மார்பினில் உன் பூ மார்பும் சலிப்படையாமல் தழுவத்தந்து குளிர்ச்சியைத் தருமென்கிறார்.

            தென்றலின் குறும்பினை,

                                    “---------- பெண்கள்

                                    விலக்காத உடையை நீ போய்

                                    விலக்கினும். விலக்கார் உன்னை”7

என்று குறிப்பிடுகின்றார்.

காடு

            மாந்தர்களின் வாழிடமாக விளங்கிய காட்டிற்கு முதற்பொருள் வழங்கிய சீர்மையுடையது தொல்காப்பியம். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கின்றது. காட்டின் வழி மலைப்புடையது என்றும் வழியடையாளமும் காண்கின்ற கவினழுகும் பாவேந்தரின் கவித்துவத்திற்கு நற்சான்றெனக் கொள்ளலாம். “கன்மாடம்” என்னும் புறாக்கள் கற்களைப் பொறுக்குவதையும் மயிலின் வரவேற்பையும் கண்டு களிகொள்கிறார். மேலும், வேடனொருவனின் தமிழார்வத்தைக் கண்டு அகம் மகிழ்கின்றார். அதனை,

                                    “ ---------------------- வேடன்

                                    வகைப்பட்ட பரத்து வாசந்

                                    என்பதை வலியன் என்றான்

                                    சகோரத்தைச் செம்போத் தென்றான்”8 என்ற பாடல் வரியால் அறியலாம்.

குன்றம்

            மாலை வானமும் மலையும் காட்சிப்படுத்தி விளக்குமிடத்தில் அருவிகளெல்லாம் வைரத்தின் தொங்கலாகவும், அடர்செடிகள் பச்சை வண்ணப் பட்டாடையாகவும், குருவிகள் தங்கக்கட்டியாகவும், குளிர்ந்த மலர் மணியின் குப்பையாகவும், எருதின் மேல்பாயும் வேங்கையும், நிலவு மேல் எழுந்த மின்னலும், சருகுகளெல்லாம் ஒளிபொருந்திய தங்கத் தகடுகளாக மிளிரும் இயல்புகளை உவமிக்கிறார். மேலும், நிறைந்த தினைக் கதிர்கள் முற்றி நெடுந்தாளும் பழுத்திருக்கும் தினைப்புவனத்தின் நடுவில் தேர்போல் நீண்டதோர் பரணமைத்து மேலே குறத்தியர் கவண் எடுத்துக்குறிபார்க்கும் விழியானது நீலப்பூவாகவும், எறியும் கையானது செங்காந்தள் பூவாகவும் உடுக்கையை எழில் இடுப்பாகவும் உவமித்துக் கூறுமிடத்தில்,

                                    “ --------------- நீலப்பூ!

                                    எறியும் கை, செங்காந் தட்பூ!

                                    உடுக்கைதான் எழில்இ டுப்பே!”9

என்கிறார்.

ஆறு

            நீரின்றி அமையாத உலகியல் வாழ்க்கையை பாவேந்தர் கூறவிழைகின்றார். ஆற்றின் நீர்நடையால் உழவர்களுக்கு ஏற்படும் நல்லனவற்றைப் பட்டியலிடுகின்றார். நோய் தீர்ந்து, வறுமை என்னும் பசிப்பிணி நீங்கி ஊரிலுள்ள அனைவரும் ஓய்வுறக்கமில்லாமல் கலப்பயைத்;தூக்கி சேய்களெல்லாம் உழவுப் பண் பாடுவதனால் மகிழ்ந்த தாயாகிய ஆறானது சிலம்படி குலுங்க நடக்கும் இயல்பினை,

                                    “தாய்நடக் கின்றாள் வையம்

                                    தழைகவே தழைக என்றே!” 10

என முழக்கமிட்டு மகிழ்வு எய்துகின்றார்.

ஆல்

            ஆலமரத்தின் அடி, கிளை, காய், இலை, நிழல் விழுதும்வேரும், பச்சிலை, இளவிழுது, அடிமரச்சார்பு, வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து. கிளிகள், சிட்டுக்கள் எனப்பல தலைப்புகளில் ஆலமரத்தினது அழகினை வர்ணித்த பாவேந்தர் குரங்கின் அச்சத்தை வெளிப்படுத்துமிடத்தில் ஆலமரத்தின் கிளையினில் விழுதினைப் போலப் பாம்பானது தொங்கிக் கொண்டிருப்பதை அறியாத குரங்கானது, விழுதென்று அவற்றைத் தொட்டதனால் ஏற்பட்ட அச்ச உணர்வை,

                                    “விளக்கினைத் தொட்ட பிள்ளை

                                    வெடுக்கெனக் குதித்த தைப்போல்”11

 என்ற உவமையால் சுட்டிக்காட்டுமிடத்தில் அஃறிணை உயிரின் பகுத்தறியும் தன்மையை ஆராய்ச்சிக்குறியதாக்குகிறார்.

புறாக்கள்

            பண்டைய காலத்தில் தகவல் தொடர்புக்குப் பயன் நல்கிய புறாக்களின் இயல்பினை மனிதர்கள், மதத்தால், மொழியால் சாதியயுணர்வால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் இழிநிலையைப் புறாக்களின் ஒற்றுமையால் வெளிப்படுத்த முயலும் பாவேந்தர் தம் பாடலில்,

                                    “இட்டதோர் தாமரைப்பூ!

                                    இதழ்விரிந் திருத்தல் போலே

                                    -------------------------------------------

                                    கட்டில்லை, கீழ்மேல் என்னும்

                                    கண்மூடி வழக்கமில்லை.”12

மனிதர்களிடமிருக்கும் இழிகுணங்கள் ஏதும் அஃறிணை ஐந்தறிவுடைய புறாக்களிடம் காணப்படாததையும் மனிதர்கள் கற்கவேண்டிய பாடமாக நயந்துரைக்கின்றார்.

            மனிதர்களிடம் இல்லாத ஒழுக்கக்கூறுகள் புறாக்களிடம் மிகுந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கூடாநட்பினால் இன்று பல குடும்பங்கள் அழிந்து வருவதையும் கணவன் மனைவியைக் கொலை செய்வதும் மனைவி கணவனைக் கொலை செய்வதும், தான் ஈன்ற குழவியைக் கள்ளக்காதலுக்கு இடையூறாகக் கருதி கருவறையில் இடம் கொடுத்து ஈன்ற குழந்தையைக் கொன்று மகிழும்  அவலம் அரங்கேறும் இந்நாளில் புறாக்களின் ஒழுக்கம் மாந்தர்களுக்கு நற்பாடமாக விளங்கும் இயல்புடையதாகிறது. இதனை,

                                    “ஒருபெட்டை தன் ஆண் அன்றி

                                    வேறொன்றுக் குடன் படாதாம்

                                    -------------------------------------தம்மில்

                                    ஒருபுறா இறந்திட்டால் தான்

ஒன்றுமற் றொன்றை நாடும்”13

என்கிறார். பணமீட்டும் வேட்கையால் உறவுகளைப் பேணிக்காக்கும் திறனற்றவர்களாகத் தான் ஈன்ற குழந்தைகளோடு நேரம் செலவிடாமல் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழலும் இயந்திர வாழ்க்கை வாழும் நம்மவர்கள் புறாக்களிடம் கற்பதற்கு ஏராளமான கூறுகள் மிகுந்திருப்பதைப் பட்டியலிடுகின்றார். புறாக்களின் தாயன்பினையும் தந்தையன்பினையும் நமக்குப் பாடமாக முனைந்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். மனிதரின் பணத்தாசையால் தாம் இழக்கும் சுகதுக்கங்களையும் எடுத்தியம்புகின்றார். இதனை,

                                    “தாய் இரை தின்ற பின்பு

                                    தன் குஞ்சைக் கூட்டிற் கண்டு

                                    வாயினைத் திறக்கும், குஞ்சு

                                    தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கைத்

                                    தாய் அருந் தியதைக் கக்கித்

                                    தன் குஞ்சின் குடல்நி ரப்பும்

                                    ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்

                                    அன்புக்கோர் எடுத்துக்காட்டாம்!”14 என்று எடுத்தாள்கின்றார்.

            சிற்றூரின் எழிலினை எடுத்துரைக்கும் பாவேந்தர், பழஞ்சேரிகளில் வாழும் மாந்தர்களின் வாழிடச்சூழலைப் படம்பிடித்துக் காட்டுவதோடு அவர்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பகரமானது என்பதையும் நயமுடன் நவில்கின்றார். சேரியில் வாழும் பெண்கள் தான் வளர்த்துவரும் கோழி முட்டையின் சுவைறியதவர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

                                    “என்றேனும் முட்டை உண்ட

                                    துண்டோநீ என்று கேட்டேன்

                                    ஒன்றேனும் உண்ட தில்லை

                                    ஒரு நாளும் உண்ட தில்லை

                                    ----------------------------------------------

                                    ஒன்றரைக் காசுக் கென்றன்

                                    உயிர்விற்றால் ஒப்பார் என்றாள்”15

வறுமையின் கொடிய நிலையை எதார்த்த வரிகளால் எடுத்தியம்புவதோடு அவ்வார்த்தையின் வலியினையும் உணரச் செய்கின்றார். ஒரு கவிஞன் என்பவன் மக்களை  மகிழ்விப்பது மட்டுமின்றி அறிவுறுத்தவும் செய்யவேண்டும் என்ற கருத்துக்கு இலக்கணமாகத் திகழ்கின்றார்.

            கதிரவனின் வரவைக் கண்டு கழனி செல்லும் உழவர்களினால் பசிப்போக்கும் அறச்செயல் தொய்வின்றி நடப்பதாகவும் ஆனாலும் அவனுக்குக் கிடைக்கும் உணவோ எளியோரின் உணவாகயிருந்தாலும் உடலுக்குறுதியைத்தரும் அமிர்தமாகவே கருதும் உழவர்களின் மனநிலையை,

                                    “பொழுதெல்லாம் ;உழவு செய்தேன்

                                    என்செய்தாய் என்ற பாட்டை

                                    எடுத்திட்டான் எதிரில் வஞ்சி

                                    முன்செய்த கூழுக் கத்தான்

                                    முடக்கத்தான் துவையல் என்றாள்”16 என்ற கூற்றால்  அறியமுடிகின்றது.

பட்டணம்

            படிப்பறிவு பெற்றோரின் இடப்பெயர்ச்சியால்; பட்டணம் பொலிவு பெற்று விளங்குவதையும் அவர்களின் வசிப்பிடங்கள் விண்ணை முட்டும் எழில்கூடமாக விளங்குவதை அறியமுடிகிறது. புகையின் வண்டி ஓடும் பாதையும் இடைவிடாதோடும் ஊர்திகளின் அணிவகுப்பும் கடலோரம் வந்த கப்பலில் கணக்கற்ற பொருட்கள் வந்து குவிவதையும், வணிக சாலைகளும், அங்காடிகளும், புதுமைகளால் விளைந்த கொள்கை ஒன்றிருக்க வேறு கொள்கைக்கு அடிமையாகும் வெள்ளாடை அணிந்த எழுத்தாளர்களின் வெறுப்புறும் செயல்களையும் கண்டு விம்முகின்றார். மேலும் வழக்கறிஞர்களின் வாழ்வை,

                                    “உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும்

                                    உயர்வழக் கறிஞர் நம்மை

                                    விண்வரை வளர்ந்த நீதி

                                    மன்றத்தில் விளங்கக் கண்டேன்”17

என்ற எதார்த்தத்தை விளக்கமுற்படுகின்றார்.

தொகுப்புரை

  • ஆய்வுச் சுருக்கத்தில் தமிழிலக்கியத்தின் சிறப்பும், கவிதையின் தோற்றுவாயும், பாவேந்தரின் கவிச்சிறப்புக் கூறுகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
  • இயற்கையை அழகியலோடு வர்ணிப்பதில் வல்லவரான பாவேந்தரின் பாடல் திறத்தின் வழி நகைச்சுவையுணர்வோடு, அழகின் பல படிநிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
  • கடலலைகள் எவ்வாறு இயற்கையோடு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இத்தலைப்பு விவரிக்கின்றது
  • மென்காற்று, வன்காற்றின் சுகம் அனிச்சத்தினும் மென்மையான காற்றின் நடையினையும் அழகியலோடு இத்தலைப்பில் அறிய முடிகின்றது.
  • அருவிகள்  வைரத்தொங்கலாக விளங்கும் கவினழகினை உவமை நயத்தால் ;விளக்கமுனைந்திருப்பதை உணரமுடிகிறது.
  • ஆலமரத்தின் அழகும் அதிலுள்ள விழுதில் தொங்கிக் கொண்டிருக்கும் பாம்பைத் தொட்ட குரங்கின் அச்ச உணர்வு படம்பிடித்துக்காட்டபட்டுள்ளது.
  • புறாக்களின் வாழ்வின் வழி மானுடர்களுக்கு உணர்த்த விரும்பும் செய்தி இத்தலைப்பில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.
  • சிற்றூரின் இயல்பும் பழஞ்சேரிகளில் வாழும் எளியோரின் உணவின்மையையும் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.
  • பட்டணத்தின் இயல்பு  வாழ்க்கையும் அங்கு வாழும் மக்களின்  பகட்டு வாழ்வும்  நயமுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

            பாரதிதாசனைப் புரட்சிக்கவிஞராக ஆக்கியது அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு புஷ்கினையும், ஆங்கிலநாடு ஒரு ஷெல்லியையும், பிரான்சு ஒரு ஹீகோவையும் அமெரிக்கா ஒரு வால்ட்விட்மனையும் கண்டதுபோல் தமிழகமும் ஒரு பாரதிதாசனைக் கண்டெடுத்தது. மொழியுணர்வூட்டும் கருத்துகளால் தனித்த அடையாளம் கண்டவர். பெண்விடுதலையின் நாற்றாங்காலாகத் திகழ்ந்தவர். புரட்சிக் கருத்துகளால் அறியாமையில் சிக்கித் தத்தளித்த மக்களுக்குப் பயன் கருதா பாடல்திறத்தால் பாலித்திடச் செய்தவர். புரட்சிக்கருத்துக்கு மட்டுமல்லாமல் இயற்கையின் எழிலை எதார்த்த நடையில் எடுத்தாளும் திறன்பெற்று தனித்த அடையாளத்தோடு தரணியெங்கும் அறியப்படும்  பாவேந்தரின் இயற்கை வர்ணனை வேர்ட்ஸ் வொர்த்தின் இயற்கைப்புனைவுக்கு நிகரானதாகக் கருத இடமுண்டு.

அடிக்குறிப்புகள்

  1. பாவேந்தர் பாரதிதாசன், அழகின்சிரிப்பு, மணிவாசகர் பதிப்பகம், மறுபதிப்பு, செப்டம்பர் 1995, ப.1
  2. மேலது, ப.1
  3. மேலது, ப.1
  4. முனைவர் சோம. இளவரசு, பாவேந்தரின் உலகநோக்கு, பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு – 2002, ப. 36.
  5. பாவேந்தர் பாரதிதாசன், அழகின்சிரிப்பு, மணிவாசகர் பதிப்பகம், மறுபதிப்பு, செப்டம்பர் .1995, ப.3
  6. மேலது, ப.4.
  7. மேலது, ப.5.
  8. மேலது, ப.8.
  9. மேலது, ப.11.
  10. மேலது, ப.15.
  11. மேலது, ப.26.
  12. மேலது, ப.28.
  13. மேலது, ப.28.
  14. மேலது, ப.29.
  15. மேலது, ப.37.
  16. மேலது, ப.38.
  17. மேலது, ப.39.